சிறுவர்க்குச் சுதந்திரம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
சிறுவர்க்குச் சுதந்திரம்
(சிறுவர்க்கான சிந்தனை நூல்)
ஆசிரியர் :
மணவை முஸ்தபா
விலை ரூ. 3/
மீரா பப்ளிகேஷன்
AE-103, அண்ணா நகர்
சென்னை-600 040.
SIRUVARKKU SUDHANTIRAM
(INDEPENDENCE FOR CHILDREN)
Author :
ΜΑΝΑΝΑΙ ΜUSΤΑΡΑ
Price Rs. 3/-
MEERAA PUBLICATION
AE - 1O3, ANNA NAGAR
MADRAS - 600 O4O.
Title of the Book — Siruvarkku Sudhantiram Author — Manavai Mustafa Language — Tamil Date of Publication — January 1989 Copyright holder - Manavai Mustafa Paper used – 16 kg. White Cream Wove Size of the book — Crown Octane Printing points used — 12 points No. of Pages – 28 pages LASER TYPE'S SETTING Meeraa Press AE-103 Anna nagar, Madras-600 040. Printed: FINE OFFSET PRINTS 15 Seven wells Street, Madras - 600 001 Binding – Paper back Price — Rs. 3/ Publishing Place - Meeraa Publication, AE-103. Anna nagar, Madras-600 040.
இன்றைய இளைய தலைமுறையின் வலுவான மன வளர்சசியே நாளைய நாட்டின் வலுவான சக்தி.
இளம் உள்ளங்களில் நாட்டுப் பற்று கடமை உணர்வு ஆகியவற்றை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் தேசீய உணர்வு மிக்கவர்களாக விளங்க முடியும். தேசீய ஒருமைப்பாட்டுடன் ஒற்றுமையாக வாழ முனைவார்கள்.
சுதந்திரத்தின் உண்மைப் பொருளை இளம் வயதிலேயே உணர்த்த வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் தாங்கள் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதோடு மற்றவர்களின் சுதந்திரத்தையும் மதித்து நடப்பார்கள் இதனால் நாட்டு நலன் மட்டும் அல்லாது சர்வதேச நலனே பாதுகாக்கப்படும். இந்த உண்மையை இளம் உள்ளங்கள் ஏற்கும் வண்ணம் எழுதப்பட்டதே இந்நூல்.
அனைத்திந்திய வானொலி சென்னை நிலைய சிறுவர் நிகழச்சியில் ஒலிபரப்பபபடடதே இன்று நூலுருப் பெற்றுள்ளது.
எனது பிற நூல்களை ஏற்றது போன்றே இந்நூலையும் வாசகர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.
அன்பர்
மணவை முஸ்தபா
ஆசிரியர்
கோமதிக்கு ஒருபுறம் குதூகலம்; மறுபுறம் ஒரே பரபரப்பு. அன்று சுதந்திரநாள். பள்ளியில் தேசியக் கொடியேற்று விழா நடைபெற விருந்தது. சற்று முன்னதாகவே செல்ல விரும்பினாள். அதற்காக விரைந்து குளித்தாள். புத்தாடை அணிந்தாள். தன்னை முழுமையாக அழகுபடுத்திக் கொண்டாள். விழாவுக்குப் புறப்பட்டாள். அவள் தம்பி ரகுவும் புறப்படத் தயாரானான். ஆனால் மற்றொரு தம்பி மணி? இன்னும் தயாரானதாகத் தெரியவில்லை. அவனையும் அங்கே காணோம்.
கோமதி வீடெங்கும் மணியைத் தேடினாள். எங்கும் காணோம். வீட்டின் பின்கட்டுக்குச் சென்றாள். அங்கே அவன் இருந்தான். சாவதானமாக விளையாடிக் கொண்டிருந்தான். இன்னும் குளிக்கவில்லை. புது உடை உடுத்த வில்லை. கொடியேற்று விழாவுக்குப் புறப்படுபவன்போல் தோன்றவில்லை.
இவர்களைத் தேடிக்கொண்டு ரகு அங்கே வந்தான். அவன் அலங்காரம் ‘அவன் தயார்’ என்பதைக் காட்டியது. மணியை நெருங்கினாள் கோமதி. “என்னடா, மணி! இன்னும் நீ புறப்படவில்லையா? இன்றைக்குச் சுதந்திர தினம் என்பதுகூட மறந்துவிட்டதா? கொடியேற்று விழாவுக்கு நாம் போக வேண்டாமா? இதோ, ரகுகூட தயாராகி விட்டான் பார்!”
கோமதி கூறியது எதையும் கேட்க விரும்பாதவன் போல் விளையாடிக் கொண்டிருந்தான். தான் பேசியதை ரகு சட்டை செய்ததாகத் தெரியவில்லை. இதைக் காண கோமதிக்குக் கோபம் வந்தது.
இதற்குள் அங்கு வந்தான் ரகு.
“என்ன, மணி! பள்ளிக்கு இன்னும் புறப்படலையா? ஏழு மணிக்கே மாணவர்கள் எல்லோரும் பள்ளி வரணும்’னு தலைமையாசிரியர் சொல்லியிருக்காரே. இப்போ, மணி ஆறு ஆகுது. இன்னும் நீ குளிச்சு, டிரஸ் செய்யாமல் நிக்கிறே! என்னிக்கும்போல இன்னிக்கும் நீ ‘தாமதத் திலகம்’ தானா?” கூறிச் சிரித்தான் ரகு.
ரகு சிரித்தது மணிக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது. அதற்கேற்ப முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டிருந்தான் மணி. கோமதி மீண்டும் கேட்டாள்:
“எப்பவுமே வகுப்புக்குப் பிந்தியே வருவே. இன்னிக்கு சுதந்திர தின விழா. இதற்காவது கொஞ்சம் முந்திப் போகக் கூடாதா? இன்னும் குளிக்காம கூட விளையாடிட்டிருக்கியே?”
கோமதியை நோக்கி நிமிர்ந்து பார்த்தான். தன் குரலைச் சற்று உயர்த்திப் பேசினான்:
“ஆமாம். இன்னிக்குக் குளிக்கப் போவதில்லை. சுதந்திர தின விழாவுக்கும் வரப் போவதில்லை.”
மணி தன் முடிவை உறுதியாகக் கூறினான்.
இவன் கூறிய பதில் ரகுவுக்கு வியப்பாக இருந்தது. காரணம் தெரிந்து கொள்ள விரும்பினான்.
“என்னடா, மணி! ஏன் இந்த சத்தியாக்கிரகம்?”
"இன்னிக்குச் சுதந்திர தினம் தானே?” அசட்டையாகக் கேட்டான், மணி.
“அதில் என்னடா உனக்குச் சந்தேகம்? இன்று ‘சுதந்திர தினம்’ தான்.” வேகமாகப் பதில் கூறினாள் கோமதி. “அவங்கவங்க சுதந்திரமா இருப்பதுதானே சுதந்திரம்! தினசரி தவறாம பள்ளிக்கூடம் போறோம். பள்ளிக்குப் போகும் வரைக்கும் வீட்டில் ஒரே கெடுபிடி. குளி! சாப்பிடு!’ன்னு அம்மாவின் ஒரே அதட்டல். ‘வீட்டுப் பாடத்தைப் படி, கணக்கைப் போடு’ன்னு அப்பாவின் மிரட்டல். ஒரு நிமிடம்கூட சும்மா இருக்கவிடாம உயிரை வாங்குறாங்க.”
“பள்ளிக்கூடம் போனால் அங்கே ஆசிரியரின் கெடுபிடி. ‘அதைப் படி, இதை எழுது’ன்னு பிழிஞ்சு எடுக்கிறார். சுருக்கமா சொன்னால் வீட்டிலேயும் விடுதலை இல்லை; பள்ளிக்கூடத்திலும் சுதந்திரம் இல்லை. இரண்டு இடத்திலும் ஆட்டிப் படைக்கிறாங்க. அடிமையாய் நடத்தறாங்க. நம்ம இஷ்டத்துக்கு நடக்க முடியலே. விருப்பத்துக்கு வெளியே போக முடியலே. வெளியிலே சுற்றவோ, விளையாடவோ விடறதில்லே. சுதந்திர தினமான இன்னிக்காவது வழக்கமான வேலை எதுவும் நான் செய்யப் போறதில்லை. என் இஷ்டப்படி திரிந்து விளையாடப் போறேன்!”
தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டினான் மணி. சுதந்திரத்துக்கு அவன் கொண்டிருந்த பொருள் வேறாக இருந்தது, அவன் விழாவுக்கு வராமல் அடம்பிடிப்பது கோமதிக்குச் சங்கடமாக இருந்தது. “அப்போ, நீ இன்னிக்கு விழாவுக்கு வரப் போவதில்லையா, மணி?”
சற்று அதட்டலாகவே கேட்டாள் அக்காள் கோமதி.
“என்ன பெரிய விழா? கொடியேத்தறதும் பேசறதும்தானே! தேசிய கீதம் முடியறவரைக்கும் இருந்தால் ஒரு சாக்லேட் கிடைக்கும்! சாக்லேட் வாங்கித் தின்ன, நீங்க வேண்டுமானால் போங்க. நான் வரலே.”
அவன் பிடிவாதமாகவும் கிண்டலாகவும் கூறினான். இது ரகுவுக்கும் கோமதிக்கும் வேதனையாக இருந்தது. என்ன சமாதானம் கூறி அழைத்துச் செல்வது என்றும் அவர்கட்குப் புலப்படவில்லை.
இந்தச் சமயத்தில் அவர்கள் மாமா அங்கே வந்தார். வயதானவர். நன்கு படித்தவர். வரும் போதெல்லாம் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவார். வேடிக்கையாகப் பேசுவார். கதைகளெல்லாம் சொல்லுவார். அதனால் மணி உட்பட, அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.
கோமதி, ரகு, மணி மூவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்தார். வந்து கொண்டே கேட்டார்: “எல்லோரும் எங்கே புறப்பட்டுட்டிருக்கீங்க?”
மாமாவின் கேள்விக்கு கோமதி பதில் சொன்னாள்:
“இன்னிக்கு எங்க பள்ளிக்கூடத்திலே சுதந்திர தின விழா. அதுக்காக நானும் ரகுவும் போய்க் கொண்டிருக்கோம். மணியைக் கூப்பிட்டா வரமாட்டேன்’ங்கிறான். அதுக்கு வேறே ஏதேதோ காரணங்கள் சொல்றான். நீங்களாவது சொல்லி விழாவுக்கு வரச் சொல்லுங்க, மாமா.”
கோமதியைத் தொடர்ந்து ரகு பேசினான்:
“ஒரு சாக்லேட்டுக்காக நீங்க வேணும்னா விழாவுக்குப் போங்க'ன்னு கேலி பேசுறான், மாமா."
மணியின் மறுப்பு மாமாவுக்கும் விந்தையாக இருந்தது.
“ஏன்'டா, மணி! சுதந்திர தின விழா மதிப்பே ஒரு சாக்லேட் தான்’னு நினைச்சுட்டியா?”
மாமா சிரித்துக்கொண்டே கேட்டார்.
“சுதந்திர தின விழாவிலே மிட்டாய் தானே மாமா தர்றாங்க. அதைத்தான் சொன்னேன்.” மணியின் பதில் மாமாவுக்கு வேடிக்கையாக இருந்தது.
“உண்மைதான், மணி,. ஆனால் மிட்டாய் எப்போ கொடுக்கிறாங்க?”
மாமா வினயமாய் மணியைக் கேட்டார்.
“விழா முடியறப்போ, கொடுப்பாங்க!”
மணி உடனே பதில் சொன்னான்.
“அதுக்கு முன்னாலே என்ன என்ன நிகழ்ச்சிகள் நடக்கும்?” மாமா கேட்டார்.
இதற்குப் பதில் சொல்ல கோமதி முந்திக் கொண்டாள்.
“முதல்’லே கொடி ஏற்றுவாங்க. அப்புறம் சுதந்திர தினவிழா நோக்கம் பற்றி பேசுவாங்க, அதன்பிறகு தேசியகீதம் பாடப்படும். கடைசியாக எல்லோருக்கும் இனிப்புத் தருவாங்க.”
கோமதியின் பதில் மாமாவுக்குத் திருப்தியாக இருந்தது. தொடர்ந்து அவர் கேள்வி கேட்டார்:
“சுதந்திர தினம், குடியரசு நாட்களில் கொடி ஏற்றி விழா கொண்டாடறோம். அப்போ, கொடி வணக்கம் செய்யறோம். அவ் வணக்கம் ஏன் செய்யறோம்’னு தெரியுமா?”
ரகு பதில் சொல்ல முன்வந்தான்.
“நம் நாட்டு தேசியக் கொடியை ஏற்றி வணங்கினால் அது நம் நாட்டையே, பாரதத் தாயையே வணங்கியது போலாகும்.”
சரியாகப் பதில் கூறிய ரகுவின் முதுகில் செல்லமாகத் தட்டிப் பாராட்டினர், மாமா. எதையோ நினைத்துக் கொண்டவன்போல் தொடர்ந்து சொன்னான் :
“பாரதியார் ‘கொடி வணக்கப் பாடல்’ எழுதியிருக்கார். அதிலேகூட “தாயின் மணிக்கொடி பாரீர்!” என்றுதான் எழுதியிருக்கிறார், மாமா.”
“உண்மைதான், ரகு. நம் பாரத மாதாவே கொடி உருவத்தில் இருக்கிறதாக நம்புறோம். அதனாலே தேசியக் கொடியைப் போற்றி வணங்குகிறோம். நம் தேசியக் கொடியை வணங்கினா, அது அன்னை பாரத மாதாவையும் நாட்டையும் வணங்கியதாக ஆகும்.” மாமா விளக்கமாகக் கூறிமுடித்தார்.
“அப்படியானால், நம் நாட்டின் மிக உயர்ந்த சின்னம் தேசியக் கொடிதானா மாமா?” தெளிவாக அறிந்து கொள்ள கோமதி கேள்வி எழுப்பினாள்.
“அதிலென்ன சந்தேகம், கோமதி? அதனாலேதான் தேசியக் கொடியை நம் நாட்டின் சின்னமாகவே வச்சிருக்காங்க. அதை பயபக்தியுடனும் மரியாதையுடனும் கையாள வேண்டும். இதற்கென தனி ஒழுங்கு முறை உண்டு. அதன் படிதான் தேசியக் கொடியைக் கையாளவேண்டும்.
மாமாவைத் தொடர்ந்து ரகு பேசினான்:
“எங்க பள்ளிக்கூடத்தில் கூட இதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க, மாமா. காலையில் கொடியை, எப்படி ஏத்தனும், மாலையில் எப்படி இறக்கணும்’னு சொல்லிக் கொடுத் திருக்காங்க.”
ரகு கூறி முடித்ததும் கோமதி சொன்னாள்:
“அதோட, எந்த எந்த சமயங்கள்’லே தேசியக் கொடியைப் பயன்படுத்தலாம்’னும் சொல்லியிருக்காங்க.”
இருவர் கூறியதையும் ஆமோதித்த மாமா மேலும் சொன்னார்.
“நம் தேசியக் கொடி நம் நாட்டின் மிக உயர்ந்த சின்னம். அதற்கு நாம் எல்லோரும்
சிறந்த மரியாதை காட்ட வேண்டும். அது நம் அனைவரின் இன்றியமையாக் கடமை. மேலும், நம் தேசியக் கொடி நம் மக்களின் ஒற்றுமை, தூய்மை, அகிம்சை ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்கிறது...”
மாமா முடிக்கும்முன் ரகு பேசினான்:
“சென்ற ஆண்டு சுதந்திர தின விழாவின் போது கொடியேற்றி வைத்த தலைமையாசிரியர் கூட இதையேதான் சொன்னார், மாமா.”
மாமா தொடர்ந்து விளக்கினார்:
“கொடியேற்று விழாவின் நோக்கமும் இது தான். அப்போது தேசியக் கொடியின் சிறப்பு விளக்கப்பட வேண்டும். இக் கொடியைப் பெற, நாட்டுக்கு உழைத்தவர்கள் போற்றப்பட வேண்டும். நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள், பொருளை இழந்தவர்கள், சுக வாழ்வைத் துறந்து சிறை சென்ற தியாகிகள் அனைவரும் நினைவுகூரப்பட வேண்டும். தேசியக் கொடியைக் காக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நாட்டின் சுதந்திரச் சின்னமே நம் தேசியக் கொடிதான்” என்று விரிவாக விளக்கிச் சொன்னார் மாமா.
“தேசிய கீதமும் அப்படித்தானே, மாமா?” கோமதி தன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள முயன்றாள்.
“ஆமாம், கோமதி தேசியக் கொடியை ஏற்றும்போது நாம் எழுந்து நின்று வணக்கம் செலுத்த வேண்டும். அதைப் போல தேசிய கீதம் இசைக்கப்படும்போது எல்லோரும் எழுந்து நிற்கவேண்டும். தக்கபடி வணங்கி மரியாதை செலுத்த வேண்டும். தேசிய கீதம் பாடுகிறவரோடு சேர்ந்து நாமும் பாட வேண்டும். இப்படிச் செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை யாகும்.”
“அப்படீன்னா, நம்ம மணிக்கு அந்தக் கடமையுணர்ச்சி இல்லை என்று சொல்றீங்களா மாமா?”
குத்தலாகக் கேட்டான் ரகு.
மாமா சொல்வதற்கு முன்பு கோமதி பேசினாள்:
“அவனுக்கு நாட்டுப் பற்றுமில்லை; கடமை உணர்ச்சியுமில்லை. இவை இரண்டும் அவனுக்கு இருந்திருந்தா சுதந்திர தின விழாவுக்கு வர மாட்டேன் என்று சொல்வானா? சுதந்திரமா ஊர் சுற்றி விளையாடப் போறேன்’னு அடம் பிடிப்பானா?”
கோமதியின் பேச்சு மணியை சீண்டுவது போல் இருந்தது. அவன் கோமதியை வெறுப்போடு பார்த்தான். அவன் முகத்தில் வருத்தமும் ஏக்கமும் மாறி மாறி தோன்றின. நிலைமையை ஒரளவு புரிந்து கொண்ட மாமா மேலும் விளக்க முயன்றார்.
“சுதந்திரம்’னா’ எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தான்தோன்றித் தனமாக அலைவது’ என்று தவறாக நினைத்திருக்கிறான், மணி. இந்த நாளை நாம் ஏன் சுதந்திர தினம்’னு சொல்றோம்?”
மாமாவின் கேள்விக்கு ரகு பதில் கூற முற்பட்டான்.
“இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே, மாமா! நம் நாட்டை வெள்ளையர் அடிமைப்படுத்தி ஆண்டாங்க. அவர்களிடமிருந்து விடுதலை பெற நீண்ட நாள் போராடி, சுதந்திரம் வாங்கினோம். நம்மை நாமே ஆள உரிமை பெற்ற அந்த நாளைத்தான் ஆண்டுதோறும் கொடியேற்றிக் கொண்டாடுகிறோம்.”
விடுதலை வரலாற்றை சுருக்கமாகக் கூறி முடித்தான் ரகு.
“சரியாகச் சொன்னாய் ரகு. பெற்ற இந்த உரிமையைப் பேணிக் காக்கணும். இதற்காக அவரவர் கடமையைத் தெரிந்து கொள்ளவேண்டும். அந்தக் கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் சுதந்திரம் நிலைக்கும்.”
மாமா கூறியது கோமதிக்குச் சரியாகப் புரியவில்லை. அவள் தலையைச் சொறிந்தபடி “கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்க, மாமா” என்று கேட்டுக் கொண்டாள். அவரும் தொடர்ந்து விளக்கிச் சொல்லலானார்.
“அதாவது, நம்மை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளைக்காரர்களிடமிருந்து போராடினோம். அதன் விளைவாக நம்மை நாமே ஆண்டு கொள்ள உரிமை பெற்றோம், இல்லையா? இந்த உரிமை மீண்டும் பறிபோகாமல் இருக்கவேண்டும். அதற்காக நமக்குள்ள கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்ம உரிமை நிலைக்கும். நாமும் என்றென்றும் சுதந்திர மக்களாக இருக்க முடியும். அப்போது தான் நம் நாடும் முன்னேற முடியும்.”
இன்னும் ரகுவுக்குச் சந்தேகம் முழுக்கத் தீர்ந்தபாடில்லை.
“நமக்குள்ள கடமைகளைச் செய்தால் நாம் மட்டும் தானே, மாமா, முன்னேற முடியும்? அது எப்படி நாட்டு முன்னேற்றமாகும்.”
ரகுவின் கேள்வி மாமாவுக்கு மேலும் உற்சாகம் தந்தது. ஆர்வத்தோடு அவர் பதில் சொல்லலானார்.
“ரகு! நாமெல்லாம் சேர்ந்ததுதானே, நாடு. நாம ஒவ்வொருவருடைய முன்னேற்றமும் ஒன்று சேரும்போது, அது நாட்டு முன்னேற்றமாகி விடுகிறது.”
"அப்போ, நாம கடமை தவறினா அது நமக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே தீங்காயிடும், இல்லே, மாமா?”
தான் தெளிவாகப் புரிந்து கொண்டதைச் சரிபார்த்தாள் கோமதி.
“சரியாகச் சொன்னாய், கோமதி. உங்களைப் போன்ற படிக்கிற மாணவர்க்கென்று பல கடமைகள் இருக்கு. அதுபோல பெரியவர்களுக்கென்று பல கடமைகள் உண்டு. அவரவர் செய்யும் தொழிலைப் பொருத்து கடமையின் தன்மை வேறுபடும். “இந்தக் கடமைகளைச் செய்யும்போது அவர்களின் சுதந்திரம் பலவகையான கட்டுப் பாடுகளால் கட்டுப்படுத்தப்படுது. மூக்கணாம் கயிறு போடப்பட்ட மாடு முறையாக வேலை செய்யும். மூக்கணாம் கயிறு இல்லாத மாடு மக்கள் கூட்டத்துக்குள் ஓடினால் பலருக்கும் காயம் ஏற்படும். ஏன், உயிருக்குக் கூட ஆபத்து விளையும்.”
“தெருவிலே கைத்தடியைச் சுழற்றிச் செல்ல எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால், அதை மற்றவர்களின் மேல் படாமல் சுழற்றத் தான் உரிமையுண்டு.”
“எனவே, ஒவ்வொருவரும் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள கட்டுப்பாட்டோடு கூடிய கடமையைச் செய்ய வேண்டும்.”
“இப்போ, மணியை எடுத்துக் கொள்வோம். அவன் தன் கடமைகளை மறந்து விட்டான். வீட்டிலும் பள்ளியிலும் உள்ள கட்டுப்பாடுகளை வெறுக்கிறான். தனக்குள்ள சுதந்திரத்தைத் தவறான வழியிலே ஊர் சுற்றி விளையாடப் பயன்படுத்த விரும்புகிறான். இதற்காக அவன் வீட்டிலும் பள்ளியிலும் கண்டிக்கப்படுவான். ஏன், தண்டிக்கவும் படலாம் இல்லையா?” மாமா இவ்வாறு கூறியபோது மணி தன் தவறை உணர்ந்தவன்போல் காணப்பட்டான்.
“மன்னிக்கனும் மாமா. சுதந்திரம்’னா விருப்பப்படி நடக்கிறதுன்னு தப்பா நெனச்சுட்டேன். அதனாலே கடமை தவறி நடக்கப் போனேன். கடமையும் கட்டுப்பாடும்தான் நம் சுதந்திரத்தைக் காக்கும் கேடயங்கள். அதை இப்போ நன்றாக உணர்ந்துட்டேன். இனி ஒரு போதும் கடமை தவறி நடக்கமாட்டேன். இது உறுதி!”
மணி மன உறுதியோடு கூறிய வார்த்தைகள் மாமாவுக்கு மகிழ்ச்சியளித்தன. கோமதியும் ரகுவும் பூரிப்படைந்தனர்.
“நம் சுதந்திரத்தைக் காப்பது முக்கியம். அதைவிட பிறர் சுதந்திரத்தை மதித்துப் போற்றுவது மிகவும் அவசியம். பிறர் சுதந்திரத்தை நாம் பறித்தால், நம் சுதந்திரம் பறிபோய்விடும், இதை ஒரு கதையின் மூலம் சொல்றேன், கேளுங்கள்.”
மாமா கதை சொல்வதாகச் சொன்னதும் மூவரும் பேருவகை அடைந்தனர். மாமா சொல்லப் போகும் கதையைக் கேட்க மூவரும் தயாராயினர். ஆவலோடு அவர் முகத்தைப் பார்த்த னர். மாமா கனைத்துக் கொண்டு கதை சொல்லத் தொடங்கினார்.
“முன்பு ஒரு சமயம் காட்டுக் குதிரை ஒன்று இருந்தது. அது தான் மேய்வதற்கான பகமையான புல்தரையைத் தேடி அலைந்தது. காடு, மலை, வனாந்தரம் எங்கும் திரிந்தது. எங்கு சென்றும் பசுமையான புல்வெளியைக் காண முடியவில்லை.
இறுதியாக ஒரு பரந்த புல்வெளிப் பகுதிக்கு வந்தது. அது இரண்டு மலைகளுக்கிடையே அமைந்திருந்தது. அங்கே குதிரை எதிர்பார்த்த பசுமையான புற்கள் நிறைய இருந்தன. காண்பதற்குப் பச்சைப் பசேல் எனக் காட்சியளித்தது. அப்புல்வெளியைச் சுற்றிலும் காடுகள் இருந்தன. அங்கு மனித நடமாட்டம் எதுவும் இல்லை.
யாருமே இல்லாத பரந்த புல்வெளி. தன்னந்தனியாக அக் காட்டுக் குதிரை மேயும். நல்ல வெயில் நேரமாக இருந்தால் தூரத்தில் இருந்த மரத்தடியில் இளைப்பாறும். அருகே ஆற்று ஒடை ஒடிக்கொண்டிருந்தது. தாகம் எடுத்த போதெல்லாம் அதில் சென்று தண்ணிர் குடித்துத் தாகத்தைப் போக்கிக் கொள்ளும். மீண்டும் புல்வெளியில் வந்து மேய்ந்து கொண்டிருக்கும்.
மனிதர்கள் மட்டும் அல்ல. வேறு எந்த மிருகமும் அங்கு வருவதே இல்லை. இது குதிரைக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. முழுச் சுதந்திரத்துடன் அப்புல்வெளியை அனுபவித்து வந்தது. தனக்காக என்றே கடவுள் படைத்த இடம் அது என எண்ணியது. அந்த இடத்தைத் தனது நிரந்தர இடமாக ஆக்கிக் கொண்டது. அந்த இடம் தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிப் பெருமைப்பட்டது. அந்த மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் ஒடும். துள்ளிக் குதித்து விளையாடும். அதற்கு எப்பவும் ஒரே மகிழ்ச்சி தான்.
ஒருநாள் அந்தக் குதிரைக்குத் தாகமாக இருந்தது. தூரத்தில் இருந்த ஓடைக்குத் தண்ணிர் குடிக்கச் சென்றது.
அந்தச் சமயத்தில் அவ்வழியாக ஒரு புள்ளி மான் ஓடி வந்தது. பசுமையான புல்வெளியைக் கண்டதும் மகிழ்ச்சியால் துள்ளியது. அதற்கு அப்போது மிகவும் பசியாக இருந்தது. பச்சைப் பசேல் எனக் காணப்பட்ட புற்களைக் கண்டபோது நாவில் நீர் ஊறியது. பசும்புல் என்றால் மான் விரும்பி உண்ணும். அதன் பசிக்கேற்ற சுவையான உணவு. மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.
ஒடையில் தண்ணிர் குடித்துவிட்டு காட்டுக் குதிரை திரும்பியது. புல்வெளியில் மான் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டது. குதிரைக்குப் ‘பகீர்’ என்றது. தனக்குச் சொந்தமான புல் வெளியில் மான் மேய்வதா? குதிரைக்குக் கோபம் கோபமாய் வந்தது. தனது சுதந்திர வாழ்வுக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி வெகுண்டது.
மகிழ்ச்சியாக மேய்ந்து கொண்டிருந்த மானை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது. பயங்கரமாகக் கனைத்தபடி மானிடம் சென்றது. கடுமையான குரலில் மானைப் பார்த்து “நீ யார்?” என்றது. "என் அனுமதி இல்லாமல் என் புல்வெளியில் எப்படி நீ நுழைய லாம்?” என்று கேட்டது. "எனக்குச் சொந்த மான புல்வெளியில் உன் இஷ்டப்படி மேய்வதா? உடனே புல்வெளியை விட்டு வெளியேறி ஓடி விடு” என்று மானைப் பார்த்து கோபமாகக் கூறி விரட்டியது.
காட்டுக் குதிரை ஆத்திரமாகப் பேசியதைக் கேட்ட மானுக்குக் கோபம் வந்தது. என்றாலும், கோபத்தை அடக்கிக் கொண்டது. குதிரையைப் பார்த்து “இந்தப் புல்வெளி உனக்குச் சொந்தமா? எப்போதிருந்து? இது காட்டிலுள்ள புல்வெளி. இது உனக்குச் சொந்தம் என்றால் இது எனக்கும் சொந்தம்தான். உன்னைப் போல
நானும் காட்டில் வசிக்கிறேன். அதனால், இங்கு புல் மேய எனக்கும் உரிமை உண்டு,” என அஞ்சாமல் பதில் கூறியது.
மகிழ்ச்சியால் அங்கும் இங்கும் ஓடியது. கொழுந்தாக இருந்த பசும் புற்களை ஆர்வத்தோடு மேய்ந்தது.
மானின் வார்த்தைகள் குதிரைக்கு அறவே பிடிக்கவில்லை. அவை ஈட்டியாக அதன் மனதில் குத்தியது. இவ்வளவு பெரிய உடலைக் கொண்ட தன்னை, சின்னஞ்சிறு புள்ளிமான் எதிர்த்துப் பேசுவதா? இதை எண்ணியபோது அதன் மனம் குமுறியது. தனக்கு மாபெரும் அவமானமே ஏற்பட்டுவிட்டதாகக் கருதியது. மிகுந்த கோபத்தோடு மானை நெருங்கியது. மானைப் பார்த்து “ஏ! அற்ப மானே! எனக்குச் சொந்தமான புல்வெளியில் நுழைந்துள்ளாய். அத்துமீறி புல்லை மேய்ந்ததும் இல்லாமல், என்னையே எதிர்த்தா பேசுகிறாய்? உனக்குப் பாடம் புகட்டுகிறேன். பார்! உன்னை இங்கிருந்து விரட்டாமல் நான் விடப் போவதில்லை. இது உறுதி!” என ஆத்திரமாகச் சபதம் செய்தது. பின்னர் புல்வெளியைவிட்டு வேகமாக வெளியே எங்கோ ஒடியது.
குதிரை எங்கெங்கோ ஒடிக் களைத்தது. கடைசியாக மலையடிவாரம் வந்து நின்றது. அங்கே ஒரு சிறிய வீடு இருந்தது. அந்த வீட் டில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப் பார்த்த போது குதிரைக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த மனிதரின் உதவியைக் கொண்டு புல்வெளி யிலிருந்து புள்ளிமானை விரட்ட எண்ணியது.
காட்டுக் குதிரை வீட்டை நெருங்கியது. அந்த வீட்டுக்காரனை கவலையோடு பார்த்தது. பின், தனக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை விபரமாக விளக்கிக் கூறியது. எப்படியும் தனக்குச் சொந்தமான புல்வெளியில் புகுந்து மேயும் புள்ளி மானை அங்கிருந்து விரட்டியடிக்கும்படி கேட்டுக் கொண்டது.
அந்த மனிதன் குதிரையின் துன்பத்தைப் போக்க எண்ணினான். அத்துமீறி நுழைந்து புல் வெளியில் மேயும் புள்ளிமானை விரட்டியடிக்க அந்த மனிதன் சம்மதித்தான்.
அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அவன் காட்டுக் குதிரையைப் பார்த்துக் கேட்டான்:
‘'நீ விரும்பியபடியே மானை விரட்டி விடலாம். ஆனால், மான் மிகவும் வேகமாக ஓடக் கூடியது. என்னால் அவ்வளவு வேகத்தில் ஒடி அதை விரட்ட முடியாது. ஆனால், உன்னால் மானைவிட வேகமாக ஓட முடியும். எனவே,
உன் முதுகில் ஒரு துணித் தலையணையைக் கட்டி, அதன்மேல் ஏறி அமர்ந்து கொள்கிறேன். நான் கீழே விழாமல் இருக்க உனக்குக் கடி வாளம் போட்டு அதைக் கையில் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். நீ மானைப் பின் தொடர்ந்து வேகமாக ஒடு. அப்போது அதை நான் ஈட்டியால் குத்திக் கொன்று விடுவேன். மான் இறந்து போகும். பிறகு உனக்குப் போட் டியே இருக்காது. எப்போதும் நீயே அந்தப் பரந்த வெளியில் தங்கிக் கொள்ளலாம். அங் கிருக்கும் புல்லை மேய்ந்து கொண்டிருக்கலாம். என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டான்.
அந்த மனிதன் கூறிய யோசனை குதிரைக்குப் பிடித்திருந்தது. எப்படியாவது மானை விரட்டியடிக்க எண்ணியது. எனவே, சிறிதும் யோசிக்காது அதற்கு உடனடியாகச் சம்மதித்து விட்டது.
அந்த மனிதன் குதிரையின் முதுகில் தலையணை ஒன்றை வைத்து இறுகக் கட்டினான். கயிற்றால் அதற்குக் கடிவாளம் போட்டான் அதனை ஒரு கையில் கெட்டியாகப் பிடித்தபடி குதிரை மீது ஏறி அமர்ந்தான். மற்றொரு கையில் ஈட்டியைப் பிடித்துக் கொண்டான். மானை விரட்டப் புறப்பட்டான்.
மனிதன் முதுகில் அமர்ந்திருப்பது குதிரைக்குப் பாரமாக இருந்தது. இருந்தபோதிலும்
மானைப் புல்வெளியிலிருந்து விரட்டியடித்தே தீரவேண்டும் என உறுதி கொண்டது. பாரத்தால் ஏற்பட்ட முதுகு வலியையும் பொறுத்துக் கொண்டு ஓடியது. அந்த மனிதனும் ஈட்டியைச் சுழற்றியபடி குதிரைமேல் சவாரி செய்தான். அப்படிச் சவாரி செய்வது அவனுக்குச் சுகமாக இருந்தது.
ஈட்டியைச் சுழற்றியபடி மனிதன் வேகமாகக் குதிரைமேல் வந்தான். இதைக் கண்ட மான் பயத்தால் நடுங்கி வேகமாக எங்கோ ஓடி மறைந்துவிட்டது. புல்வெளியை விட்டே மானை விரட்டியடித்த மகிழ்ச்சி குதிரைக்கு ஏற்பட்டது. அளவு கடந்த சந்தோஷத்தால் துள்ளி ஓடியது.
இறுதியாகக் காட்டுக் குதிரை ஓரிடத்தில் நின்றது. காரியம் முடிந்த பின்னும் அந்த மனிதன் குதிரையைவிட்டு இறங்கவில்லை. குதிரை மேல் சவாரி செய்வது அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. நடந்து கஷ்டப்படாமல் எங்கும் விரைந்து செல்ல குதிரையை தகுந்த வாகனம் என்று எண்ணினான். எனவே, அவன் அக் குதிரையின் கடிவாளத்தையோ முதுகுமேல் உட்காருவதற்காக கட்டிய தலையணையையோ நீக்கவில்லை. மாறாகத் தன் வீட்டிற்குக் குதிரையை விரட்டியபடியே சவாரி செய்தான். தன் வீட்டின் முன்னால் இருந்த மரத்தில் குதிரையைக் கட்டிப் போட்டான்.
சுதந்திரமாக மேயவந்த புள்ளிமானை விரட்ட முற்பட்ட காட்டுக் குதிரை தனது சுதந்திரத்தையே இழந்து நின்றது. மனிதனுக்கு அடிமையாக உழைக்கும் ‘வீட்டுக் குதிரை’ ஆகி விட்டது. அன்று முதல் இன்று வரை வழிவழியாகக் குதிரைகள் மனிதர்களைச் சுமந்து திரிகின்றன. அவர்கள் ஏறிச் செல்லும் வண்டிகளை இழுத்துச் செல்லும் பிராணிகளாகவும் உழைத்து வருகின்றன.
பிறர் சுதந்திரத்தைப் பறிக்க முயன்றால் நம் சுதந்திரம் பறிபோய்விடும். பிறருக்குத் துன்பம் செய்ய முற்பட்டால் தங்களுக்கும் தங்கள் சந்ததிகளுக்கும் கூட அத்துன்பம் தொடரும். இந்த உண்மையையே ‘காட்டுக் குதிரை’ `வீட்டுக் குதிரை’யான செயல் உலகுக்கு இன்று வரை எடுத்துக்காட்டி வருகிறது.
மாமா கூறிய குதிரை-மான் கதையைக் கேட்ட சகோதரர்கள் மூவரும் மிகவும் மகிழ்ந்தனர். சுதந்திரத்தின் சிறப்பை உணர்ந்தனர். அதைக் காப்பதில் ஆர்வம் கொண்டனர். தங்கள் சுதந்திரத்தைப் போன்றே பிறர் சுதந்திரத்தையும் மதிக்கக் கற்றுக் கொண்டனர்.
புத்தாடை உடுத்தி, சுதந்திரம் பற்றிய புதிய சிந்தனையுடன் விடுதலை நாள் விழாவில் பங்கு கொள்ள, பள்ளி நோக்கி விரைந்து நடந்தனர். அதைக் காண மாமாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.