சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/இளவரசனின் தியாக உள்ளம்
4
இளவரசனின் தியாக உள்ளம்
ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசன், திடீரென்று இறந்து விட்டான். அந்த அதிர்ச்சியில் ராணியும் இறந்து போனாள். அரசனின் ஒரே வாரிசான இளவரசனுக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.
தாய் தந்தையரை இழந்த துக்கம் இளவரசனை துயரத்தில் ஆழ்த்தியது. அரச குருவிடம் சென்று, “குருவே! துக்கம் எதனால் ஏற்படுகிறது? துக்கம் உண்டாகாமல் வாழ வழி என்ன?” என்று கேட்டான் இளவரசன்.
“இளவரசே! வழி வழியாக வருவது பாசம்! பாசத்தின் விளைவு துக்கம்; பாசத்தை நீக்கி விட்டால், துக்கம் உண்டாகாது” என்றார் அரச குரு. “பாசத்தை நீக்குவது எவ்வாறு?” என்று கேட்டான் இளவரசன்.
“வீடு, மனைவி, மக்கள், சுற்றம், செல்வம், ஆடை, ஆபரணம் போன்ற அனைத்தும் பாசமே! ஒன்றைத் தொடர்ந்து ஒன்று இழுத்துக் கொண்டே செல்லும்” என்றார் அரச குரு.
அவர் சொன்னது இளவரசனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.
உடனே இளவரசன் அரண்மனைக்குச் சென்று, அரச உடைகளையும், ஆபரணங்களையும் களைந்து விட்டான். நான்கு முழ வேட்டி ஒன்றை உடுத்தியபடி, அரண்மனையை விட்டு வெளியேறினான்.
அரண்மனையில் உள்ளவர்களும், நகர மக்களும் இளவரசனின் துறவுக் கோலத்தைக் கண்டு வருந்தினர். சிலர் வியப்புற்றனர்.
கையில் ஒரு பாத்திரத்தை ஏந்தியபடி, கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தான் இளவரசன், எந்த வீட்டின் முன்னேயும் நின்று பிச்சைகேட்பதில்லை, எவரேனும் வந்து பிச்சை இட்டால், ஏற்பான்.
தான் உண்டது போக, எஞ்சியதை காகங்களுக்கும் நாய்களுக்கும் போட்டு விடுவான்.
இரவு வேளையில் மரத்தடியிலோ, வீட்டுத் திண்ணையிலோ படுத்து உறங்குவான். காலையில் எழுந்து புறப்பட்டு விடுவான்.
இப்படியாக, ஒரு ஊரில் அவன் போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு வணிகனின் மனைவி அவனைக் கண்டு, உண்வு அருந்த அவனை வீட்டுக்குள் வருமாறு அழைத்தாள்.“எந்த வீட்டிற்குள்ளும் நுழைவது இல்லை” என்று சைகையால் காட்டி விட்டு, அவன் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அவனுடைய அழகான தோற்றத்திலும், தாமரை மலர் போன்ற கண்களிலும் மனதைப் பறி கொடுத்தாள் வணிகனின் மனைவி. அவள் உள்ளத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், அவன் பின்னே ஓடி, “இத்தகைய பேரழகு பொருந்திய நீ பிச்சை எடுப்பானேன்? எந்தப் பெண்தான் உன் தாமரைக் கண்களைக் கண்டு மயங்காமல் இருக்க முடியும்?” என்று மருகினாள்.
அவள் கூறியதைக் கேட்டதும், “தாயே! இந்தக் கண்கள் தானே உன்னை மயங்கச் செய்தன? இதோ பார்!” என்று கூறி, உடனே ஒரு கண்ணை தன் விரலால் தோண்டி எடுத்து, அவளிடம் காட்டி, “இப்போது நன்றாகப் பார்! இந்தச் சதை துண்டா உன்னை மயக்கிற்று?” என்று கேட்டான் துறவியான இளவரசன்.
வணிகனின் மனைவி, அழகு மயக்கத்திலிருந்து விடுபட்டு, “நீங்கள் ஒரு கண்ணை இழப்பதற்குப் பாவி நான் அல்லவா காரணமானேன்” என்று கதறி, அவன் காலில் விழுந்தாள்.
“தாயே! நீ எனக்குத் தீமை எதுவும் செய்யவில்லை. என் கண்ணைக் கெடுக்கவில்லை. மாறாக, எனக்குப் பொறுமையைப் போதித்து விட்டாய்” என்று கூறி துறவுக் கோலம் பூண்டிருந்த இளவரசன் புறப்பட்டான்.
துறவுக் கோலம் கொள்வதற்கு, மனவலிமை, உள்ளத் தூய்மை மிக அவசியமானதாகும்.