சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/எல்லோருக்குமே ‘பேப்பே’தான்

36
எல்லோருக்குமே ‘பேப்பே’தான்!


செட்டியார் ஒருவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்தார்.

கரும்புகளையும், நெல்லையும் கொள்முதல் செய்தார். ஆலைகளுக்கு மாட்டு வண்டியில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார். அது கௌரவமாகத் தோன்றவில்லை. அதனால், இரண்டு லாரிகள் வாங்கி அதில் சரக்குகளை அனுப்பிக் கொண்டிருந்தார். நல்ல லாபமும் கிடைத்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, இரண்டு லாரிகளும் விபத்துக்குள்ளாகி, பெருத்த சேதம் ஆயின.

கரும்பு அனுப்புவதும் தடைப்பட்டது. நெல் விலையும் குறைந்தது. வியாபாரம் சரியாக நடைபெறவில்லை. பெருத்த நட்டம் உண்டாயிற்று. கடன்களை செலுத்த முடியவில்லை, செட்டியார் திணறினார். தன்னுடைய நண்பர் வழக்கறிஞரிடம் சென்று, நிலைமையைக் கூறி, அவரிடம் ஆலோசனை கேட்டார்.

அவர், “இந்தக் கடன் தொல்லையிலிருந்து மீள ஒரு வழி உண்டு;

உங்கள் குடும்பத்தை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு, நீங்கள் மட்டும் இருங்கள். யாரிடமும் எதுவும் பேசாமல், என்ன கேட்டாலும், ‘பேப்பே’ என்று மட்டும் சொல்லுங்கள்” என்று ஆலோசனை கூறினார்.

செட்டியாருக்கும் அது சரியான யோசனை என்று தோன்றியது.

கடன் கொடுத்தவர்கள் வந்து கேட்டார்கள்.

செட்டியார் கவலைப்பட்டு, முகத்தைச் சுளித்துக் கொண்டு, ‘பேப்பே’ என்று சொல்லலானார்.

“பாவம், செட்டியாருக்கு ஏற்பட்ட நஷ்டத்தினால், அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. அவரை தொந்தரவு படுத்தக் கூடாது” என்று எண்ணி கடன் கொடுத்தவர்கள் பிறகு வருவதே இல்லை.

செட்டியார் நிம்மதியானார். பல மாதங்களுக்குப் பிறகு, வழக்கறிஞர் வந்து, "இப்பொழுது எப்படி இருக்கிறீர்? எனக்கு ஆலோசனை கட்டணம் தாருங்கள்” என்று கேட்டார்.

அதற்கு செட்டியார் ‘பேப்பே’ என்றார். வேறு எதுவும் பேசவில்லை.

“எனக்குமா ‘பேப்பே’” என்று கேட்டார் வழக்கறிஞர்.

“உமக்கும் ‘பேப்பே’, உங்க அப்பனுக்கும் ‘பேப்பே’” என்றார் செட்டியார்.

வழக்கறிஞர் மிகுந்த வருத்தத்தோடு, “தீட்டின மரத்தையே பதம் பார்க்கிறான் செட்டி” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

மற்றவர்களை ஏமாற்றும்படி சொல்லிக் கொடுத்த யோசனைப்படி, அவரையும் ஏமாற்றினார்.