சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/ஏழைகளின் நெஞ்சக் குமுறல்

7
ஏழைகளின் நெஞ்சக் குமுறல்


ஒரு ஊரில், ஒரு விறகு வியாபாரி இருந்தான், ஏழை, எளியவர்கள் காட்டில் கஷ்டப்பட்டு, விறகுகளை வெட்டிக் கொண்டு தலையில் சமத்து வருவார்கள், அவர்களிடம் மிகவும் தறைவான விலைக்கு வாங்குவான். அதிகமான விலைக்கு பிற்பது விறகுக் கடைகாரனின் வழக்கம். இப்படியாக, அவன் பணக்காரனாகி விட்டான். வீடு கட்டி வசதியாக வாழ்ந்தான்.

அந்த ஊரில் அவனைத் தவிர வேறு வியாபாரி இல்லை, அதனால், அவன் கேட்கும் விலைக்கு விற்பார்கள், சொன்ன விலைக்கு வாங்குவார்கள். சில ஆண்டுகளாக, அந்த விறகுக் கடைக்காரனை அறிந்த பெரியவர் ஒரு நாள், “ஏழைகளை வஞ்சித்து, அவர்கள் வயிற்றில் அடிக்காதே; இப்பொழுது வசதியாக வாழ்கிறோமே என்று இறுமாப்புக் கொள்ளாதே. பிறரை வஞ்சிப்பவன், ஒரு நாள் வஞ்சிக்கப்படுவது உறுதி” என்று புத்திமதி கூறி எச்சரித்தார்.

பெரியவரைப் பார்த்து, “உம்முடைய புத்திமதி எனக்குத் தேவை இல்லை. விற்பவர்கள் விற்கிறார்கள் வாங்குகிறவர்கள் வாங்குகிறார்கள், நீர் ஏன் குறுக்கிட வேண்டும்? உம்முடைய வேலையை நீர் பார்த்துக் கொள்ளும், என் தொழிலில் தலையிட வேண்டாம்” என்று அலட்சியமாகப் பேசி, ஏசினான் விறகு வியாபாரி. தொடர்ந்து அவன் போக்கிலேயே தொழிலை நடத்திக் கொண்டிருந்தான். சில நாட்களுக்குப்பிறகு, விறகுக் கடைக்காரன் வீட்டின் அடுக்களையில் நெருப்புப் பற்றி, வீடு முழுவதும் தீ பரவி, அடுத்தாற்போல் இருந்த விறகுக் கிடங்கும் தீப்பற்றி எரிந்து எல்லாம் சாம்பல் ஆயின.

விறகுக் கடைக்காரன், உடுத்தியிருந்த உடையோடு நின்று “எப்படி தீப்பற்றியது என்பது தெரியவில்லையே” என்று புலம்பிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆறுதல் கூற எவருமே அவன் அருகில் செல்ல வில்லை.

அப்பொழுது, அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த பெரியவர், “ஏழை மக்களின் நெஞ்சத்திலிருந்து எழுந்த நெருப்பினால்தான் இப்படி பற்றி எரிந்து சாம்பலாயிற்று” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு சென்றார்.