சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/கிராம வாசியின் பெருந்தன்மை
33
கிராமவாசியின் பெருந்தன்மை
கிராமத்திலே படித்து, பட்டணத்தில் வேலையில் இருந்தான் ஒருவன். அவன் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்னே இறந்து விட்டனர். அவனுக்கு வீடும் கிடையாது. உறவு என்று சொல்ல ஒருவன் மட்டுமே இருந்தான். இருவரும் ஒத்த வயதினர்.
மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பின், கிராமத்துக்கு வந்து, உறவினன் வீட்டில் தங்கினான்.
அவர்கள் இருவரும் இளம் வயது முதல் சமீப காலம் வரை, பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, “கிராம வாசிகள் எளிதில் ஏமாந்து விடுவார்கள்” என்றான் பட்டணவாசி.
“ஏமாறுவார்கள் என்று சொல்ல இயலாது, கள்ளம், கபடம் இல்லாத பெருந்தன்மை வாய்ந்தவர்கள்” என்றான் கிராமவாசி.
ஊரைச் சுற்றிப் பார்த்து வருவதாக புறப்பட்டான் பட்டணவாசி.
வாரச் சந்தை நடக்கும் இடத்தில், நின்று, கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான் பட்டணவாசி.
ஒவ்வொருவராக அவனைச் சுற்றி கூட்டம் கூடி விட்டது.
“ஏதாவது தொலைந்து விட்டதா?” என்று அவர்கள் கேட்டனர்.
“ஆம், அரை பவுன் மோதிரம் விரலிலிருந்து விழுந்து விட்டது” என்றான் பட்டணவாசி.
அருகில் நின்றவர்கள் பலர் சுற்று முற்றும் தேடலானார்கள்.
அதற்குள் அவன் தங்கியிருந்த உறவினனுக்குத் தகவல் எட்டி, அவனும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். விசாரித்தான். இருவரும் வீட்டுக்குச் சென்றனர்.
“நியாயமாகச் சம்பாதித்திருந்தால் பொருள் கிடைக்கும்” என்றான் ஒருவன்.
“கீழே விழுந்த பொருள், எங்கேயாவது கிடைத்தது உண்டா?” என்றான் மற்றொருவன்.
“அவனுக்கு என்ன! பட்டணவாசி, அங்கே போய், வேறு மோதிரம் வாங்கிப் போட்டுக் கொள்வான்” என்றான் வேறொருவன்.
இப்படியாக பலர் பேசலானார்கள்.
“இரவு நான் புறப்படுகிறேன். எனக்கு ஐநூறு ரூபாய் கடனாகக் கொடு, போனதும் அனுப்புகிறேன்” என்றான் பட்டணவாசி.
ஐயோ பாவம்! அவன்தான் மோதிரத்தைத் தொலைத்து விட்டானே அவனுக்குக் கொடுக்காமல் இருக்கலாமா? பெருந்தன்மையோடு, “என்னிடம் நூறு ரூபாய்தான் இருக்கிறது” என்று கூறி, நூறு ரூபாயைக் கொடுத்தான் கிராமத்து உறவினன்.
பட்டணத்தானின் மோதிரம் தொலைந்தது உண்மையோ, பொய்யோ என்று பாராமல், கிராமத்து நண்பன் பெருந்தன்மையோடு நடந்து கொண்டான்.