சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/தந்திரவாணன் செய்த தந்திரம்
17
தந்திரவாணன் செய்த தந்திரம்
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
அமைச்சர்கள், அதிகாரிகள், சேனாதிபதி முதலானோர் இருந்தனர்.
அந்த நாட்டில் தந்திரவாணன் என்பவன் ஒருவன் இருந்தான்.
குறுக்கு வழியில் திடீரென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. ஆனால், மோசடி, கலப்படம், கடத்தல் முதலான வழிகளில் ஈடுபட அவன் விரும்பவில்லை. எதையுமே தந்திரமான வழிகளிலேயே செய்ய வேண்டும் என்பது அவன் நோக்கம்.
ஒரு நாள், மிகுந்த ஆடம்பரமான உடைகளை அணிந்து கொண்டான் தந்திரவாணன். நேராக, அரண்மனைக்குச் சென்று அரசனை தனிமையில் கண்டு, தான் ஒரு இரத்தின வியாபாரி என்றும், பல நாட்டு அரசர்களைக் கண்டு வந்திருக்கிறேன் என்றும் கூறினான். “இப்பொழுது இந்த நகரத்தில் தங்க உத்தேசித்திருக்கிறேன். தினமும் அரச சபை கூடும் முன் சில நிமிடங்கள் தங்களிடம் பேசுவதற்கு அனுமதி தரவேண்டும். அதற்காக ஐநூறு பவுன்கள் தங்களுக்குத் தந்து விடுகிறேன்" என்று வேண்டிக் கொண்டான் தந்திரவாணன்.
அவனுடைய உடை, பேச்சு ஆகியவற்றைப் பார்த்து, அவன் ஒரு பெரிய இரத்தின வியாபாரிதான் என்று நம்பினான் அரசன். அதோடு தினம் ஐநூறு பவுன் கிடைக்கும்போது, அவனுக்குப் பேட்டி அளிப்பதில் தவறு ஏதும் இல்லை என்று சம்மதித்து விட்டான் அரசன்.
மறுநாள் தந்திரவாணன் ஆடம்பர உடையில், சபை கூடுமுன் வந்து, அரசனிடம் ரகசியமாக சில வார்த்தைகள் கூறி விட்டுப் போய் விட்டான் அவன் கூறியது அரசனுக்குப் புரியவில்லை. ஆனால், தந்திரவாணன் சிரித்துக் கொள்வான்.
சபை கூடியது அமைச்சர்கள், பிரதானிகள், உயர் அதிகாரிகள் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
மூன்றாம் நாள், தந்திரவாணன் வந்து, அரசனுடன் கிசுகிசு என்று பேசுகையில், ஒரு அமைச்சனை கூர்ந்து பார்த்துப் பேசினான் பிறகு, சிரித்தபடியே சென்றான், தந்திரவாணன் யார்? அரசனிடம் தினம் வந்து என்ன பேசி விட்டுப் போகிறான் என்பது எவருக்குமே புரியவில்லை. ஆனால் அவன் ஒரு செல்வாக்குள்ள பெரிய மனிதன் என்று அனைவரும் நம்பினார்கள்.
நகரத்துக்கு வெகு தொலைவில் இருந்தான் தந்திரவாணன்.
ஊழலில் ஈடுபட்ட அமைச்சன் ஒருவன் தந்திரவாணன் வீட்டைத் தேடிச் சென்று, “அரசருடன் பேசும் பொழுது, என்னைப் பார்த்து சிரித்தீர்களே, என் ஊழல் தெரிந்து விட்டதா” என தயங்கியபடியே கேட்டான்.
“அரசர் மிக கோபமாக இருக்கிறார், உமக்காக நான் பரிந்து பேசிப் பார்க்கிறேன். எதற்கும் கவலை வேண்டாம்” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் தந்திரவாணன்.
அமைச்சன், உடனே மூவாயிரம் பவுனை அவனிடம் கொடுத்து, “எப்படியாவது என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று அவனை வணங்கி, வேண்டிக் கொண்டு சென்றான்.
இப்படியாக, தினமும் அரசனிடம் சென்று, அரச சபையில் இருந்த ஒவ்வொருவரையும் பார்த்துச் சிரித்து, அரசனிடமும் ஏதாவது பேசி விட்டுச் சென்றான் தந்திரவாணன்.
பிறகு, அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும், தனித்தனியாக தந்திரவாணனைத் தேடிச் சென்று, நிறைய பவுன்களைக் கொடுத்து, தங்களைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டனர்.
பல நாட்கள் கழிந்தன. அரண்மனையிலிருந்து பெரும்பாலானவர்கள், தந்திரவாணனிடம் வந்து நிறையப் பவுன்களைக் கொடுத்து, வேண்டிக் கொண்டனர்.
தந்திரவாணன் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே, பொருள் சேர்ந்து விட்டது. ஆகையால், தான் செய்த தந்திரம் ஒரு சமயம் அரசனுக்குத் தெரிந்து விட்டால், தனக்கு ஆபத்தாகி விடுமே என்று யோசித்து முன் எச்சரிக்கையாக நடக்க எண்ணினான்.
அரசனை தனிமையில் சந்தித்து, தான் செய்த தந்திரத்தை விவரமாகச் கூறி, கிடைத்தவற்றில் பாதியை அரசனிடம் சேர்ப்பித்து, தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். தந்திரவாணன்.
அரசன் “நடந்தவற்றைப் பார்த்தால், ஊழல் செய்யாதவர்கள் மிகவும் குறைவு என்று தெரிகிறது”. என்றான். மேலும், தந்திரவாணனின் துணிவையும், சாமர்த்தியத்தையும் பாராட்டி மகிழ்ந்தான். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்று கூறுவார்கள்