சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/புரட்சிப் பெண்
45
புரட்சிப் பெண்
ஒரு கிராமத்தில் ஓலைக் குடிசை ஒன்றில், ஏழு வயதான சிறுமி பாடம் படித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கிராம அதிகாரி வந்து “உன் அம்மா, அப்பா எங்கே?'” என்று கேட்டார்.
“அம்மா பசுவைத் தேடிச் சென்றிருக்கிறாள். அப்பா முதலாளி வீட்டுத் தோட்டத்துக்குப் போயிருக்கிறார்” என்றாள் சிறுமி.
“வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள், வரிப் பணத்தைக் கொண்டு வந்து தரவில்லையானால், பசுவைப் பிடித்துக் கொண்டு போய் விடுவேன்.” என்று கடுமையாகக் கூறினார் கிராம அதிகாரி.
“எங்கள் வீட்டுப் பசுவைப் பிடித்துக் கொண்டு போவதற்கு நீங்கள் திருடரா?” என்று கேட்டாள் சிறுமி.
சிரித்துக் கொண்டே, “மக்குப் பெண்ணே! நான் திருடன் அல்ல! திருடன் சொல்லி விட்டுத் திருட மாட்டான்” என்றார் கிராம அதிகாரி.
“பிறகு, ஏன் எங்கள் பசுவைக் கொண்டு போக வேண்டும்?” என்று கேட்டாள் சிறுமி.
“அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி செலுத்தாதனால், உங்கள் பசுவைக் கொண்டு போவேன்” என்றார் அதிகாரி.
“வரி என்றால் என்ன? அரசாங்கம் ஏன் வரி போடுகிறது? அரசாங்கத்திடம் பணம் கிடையாதா? அது எங்களைப் போல் ஏழையா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள் சிறுமி.
“வரி போடுவது பொதுமக்கள் நன்மைக்காகவே. மருத்துவ உதவி, கல்வி வசதி, போக்குவரத்துக்காக சாலை போடுதல், பாலம் அமைப்பது, கலவரம், திருட்டு நடக்காமல் பாதுகாப்பது, ஊழியர்களுக்குச் சம்பளம், இப்படியாக பல தேவைகளுக்கு அரசாங்கத்துக்கும் பணம் தேவைப்படுகிறது. அதற்காகவே வரி போடப்படுகிறது” என்றார் அதிகாரி.
“எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். அரசாங்கம் எதுவும் எங்களுக்குச் செய்ய வேண்டாம், அதனால் நாங்கள் வரி செலுத்த மாட்டோம்” என்றாள் சிறுமி.
“வயதான பின்னர், நீ எல்லாவற்றையும் தெரிந்து கொள்வாய், இப்பொழுது விளக்கிச் சொல்ல இயலாது. உன் அம்மா வந்ததும், கிராம அதிகாரி வந்தார் என்று சொல்” என்று கூறி புறப்பட்டார்.
“இந்தப் பெண், பெரியவளான பின், ஒரு புரட்சிக்காரியாக ஆனாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று நினைத்துக் கொண்டார்.
உலகில் அரசியல், கல்வி, சமூகம் ஆகியவற்றில் பல புரட்சிப் பெண்கள் தோன்றியுள்ளனர்.