சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/மனம் இருந்தால் இடம் உண்டு

24
மனம் இருந்தால் இடம் உண்டு


பெரியவர் ஒருவர், ஒரு ஊரிலிருந்து, அடுத்த ஊரில் இருந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டுத் திரும்பினார். களைப்பு மேலிட்டது. நடக்க முடியவில்லை . அருகில் ஒரு குடிசை காலியாக இருந்தது. அங்கே சென்று படுத்தார்.

சிறிது நேரத்தில், மற்றொரு பெரியவர் வந்தார். “இந்த ஊரில் ஒருவர் பணம் தர வேண்டும். அவர் வீட்டில் இல்லை. வீடு பூட்டிக் கிடக்கிறது. காலையில், அவரைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இரவு இங்கே தங்குவதற்கு இடம் கிடைக்குமா?” என்றார்.

“நிச்சயம் இடம் உண்டு. இங்கே ஒருவர் படுக்கலாம்; இருவர் உட்கார்ந்து கொள்ளலாம்; வருக” என்று அவரை வரவேற்றார்.

இருவரும் தரையில் இருந்து, பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது, மற்றொரு பெரியவர் வந்தார். “ஐயா, மழை பெய்கிறது. இரவு இங்கே தங்கிக் கொள்ள இடம் கிடைக்குமா?” என்றார்.

“தாராளமாக இடம் உண்டு. ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம். அவ்வளவுதான் இங்கே இடம் உள்ளது.” என்று அவரை வரவேற்றனர் இருவரும்.

மூவரும் இரவு முழுவதும் பேசிக் கொண்டே நின்றனர்.

விடிந்தது, மழையும் நின்றது

மூவரும் விடைபெற்று, அவரவர் ஊருக்குத் திரும்பிச் சென்றனர்.

எத்தகைய பரந்த உள்ளம். அதை நினைக்கும் போது மனம் நெகிழ்கிறது.