சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/மூடர்கள் உயிரை இழந்தனர்

41
மூடர்கள் உயிரை இழந்தனர்


சிறிய நகரம் ஒன்றின் அருகில் அண்ணன், தம்பி இருவர் இருந்தனர். அவர்களுக்குச் சொந்தமான ஒரு சிறு குடிசையில் தங்கினர்.

பெற்றோர், உறவினர் யாருமே அவர்களுக்கு இல்லை.

படிப்பும் இல்லை, வேலை எதுவும் இல்லை. இருவரும் நன்றாக கொழுகொழு என்று காணப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் கண்டால், அந்த வட்டாரத்தில் இருப்பவர்கள் எவரும் பேசுவதில்லை, அவர்களைக் கண்டால், ஒதுங்கிப் போய் விடுவார்கள்.

சிற்றுண்டி விடுதிக்குச் சென்று சாப்பிட்டு விட்டுப் போவார்கள். காசு கொடுப்பதில்லை, சிற்றுண்டி விடுதிக்காரர் கேட்பதும் இல்லை.

அவர்களின் குடிசைக்கு எதிரில், ஒரு பெண் இருந்தாள். அவள் ஒரு அனாதை. அவள் சில வீடுகளில் வேலை பார்த்தாள். அவர்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டு விட்டு, குடிசையில் படுத்துக் கொள்வாள்.

அந்தப் பெண் மீது அண்ணன், தம்பி இருவருக்கும் ஆசை உண்டாயிற்று. ஒருவனுக்குத் தெரியாமல், இன்னொருவன் அவளிடம் நெருங்கி, ஏதாவது பேசுவான். அவளோ சாமர்த்தியமாக நடந்து கொள்வாள்.

அந்தப் பெண்ணுக்கு, பூ, இனிப்பு, பலகாரம் முதலியவற்றை கொண்டு வந்து கொடுப்பார்கள்.

இவர்கள் இருவரையும் எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தாள்.

அதே சமயம், அவர்களுக்கு வேலையும் இல்லை, வருமானமும் இல்லை. அவர்கள் இருவரையுமே அவள் விரும்பவில்லை.

ஒரு நாள் அண்ணன், தம்பி இருவரிடமும், “நீங்கள் இருவரும் என்னிடம் ஆசை கொண்டு, என்னை அடைய விரும்புகிறீர்கள், ஆனால், உங்களில் யாரை ஏற்றுக் கொள்வது? என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. என் தாய் மரணத் தறுவாயில், 'பலசாலியான ஒருவனைப் பார்த்து திருமணம் செய்து கொள்” என்று சொன்னாள். ஆகையால், நீங்கள் இருவரும், குத்துச் சண்டை போட்டு, யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவரை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றாள் அவள்

மறு நாள் இரவு பத்து மணிக்குப் பிறகு, அந்த வட்டாரத்தில் இருந்த பூங்காவில், அண்ணனும், தம்பி குத்துச் சண்டையில் இறங்கினார்கள். மிகவும் கடுமையாக இருவரும் மோதிக் கொண்டனர். ஒரு மணி நேரம் குத்துச் சண்டை தொடர்ந்தது. கடைசியில், இருவருமே தரையில் மூர்ச்சையாகி வீழ்ந்தனர். அவர்கள் உயிர் பிரிந்தது.

அந்தப் பெண்ணின் பிரச்சினையும் தீர்ந்தது.

மூடத்தனத்தால் உயிரை இழந்தனர் முரடர்கள்.