சிறு கதைகள்/சுடுமூஞ்சி!

சுடுமூஞ்சி!


னியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே!” –

கணக்கப்பிள்ளை.

“சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டிமுடியம்மா மாலையை, மணி ஆறாகப்போகிறது. அந்த உருத்திராட்சப் பூனை வருகிற நேரமாகுது”

மாலை விற்பவன்.

“ஒருநாள் கூடத் தவறமாட்டார், பெரிய பக்திமானல்லவோ அவர். மணி இன்னும் ஆறு ஆகவில்லையே, வந்து விடுவார்”

குருக்கள்.

“நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் தாளம் சரியாக வருகிறதான்னு, மணி ஆறு ஆகப்போகுது. அந்தக் கிழக்குரங்கு வருகிற நேரமாகுது”

வேதம்.

“மணி ஆறா? சரிதான், இப்பதான் பைத்தியம், கோயிலுக்குக் கிளம்பி இருக்கும்”

இராமி.

சனியன், உருத்திராட்சப் பூனை, பக்திமான், கிழக்குரங்கு,

பைத்தியம்! இந்தப் “பஞ்சாட்சர” அர்ச்சனை, ஒரே நேரத்தில் ஒரே ஆசாமிக்கு, ஐந்து வேறு வேறு ஆசாமிகள் மூலம் நடந்தது. இன்னமும் எங்கெங்கு அவரைப்பற்றி என்னென்ன விதமான அர்ச்சனை நடந்தது என்று விசாரித்தால் சஹஸ்ர நாமத்துக்குப் போகும். அவர் பெயர் ஆறுமுக முதலியார்.

இந்த அர்ச்சனையைப் பெற்றுக் கொண்டு, ஆறுமுக முதலியார், சும்மா இருந்தாரா? இருப்பாரா? அவர் கையில் என்னமோ, கணக்குப் புத்தகந்தான் இருந்தது. மனம்?

“சனியன் இன்னும் போய்த்தொலையவில்லையே” என்று மௌன பூஜை செய்துகொண்டிருந்த கணக்கெழுதுபவனை, ஆறுமுக முதலியார், “ஏண்டா தின்னுகூலி”, என்று திட்டினார். “அந்த சோம்பேறி இன்னும் மாலையைக் கட்டினானோ இல்லையோ” என்று, அதே நேரத்தில் எந்த மாலை விற்பவன் தன் தாயாரிடம் முதலியாரை “உருத்திராட்ச பூனை” என்று அர்ச்சித்துக் கொண்டிருந்தானோ, அந்த மாலை விற்பவனைப் பற்றிச் சொன்னார்; ஒரு வினாடி ஓய்வெடுத்துக் கொண்டார். “போய் ஆகணும், போகலைன்னா விடப்போறானா அந்தப் பணம்பிடுங்கி” என்று முணுமுணுத்தார். கோயிலிலே அதே நேரத்தில்தான் குருக்கள் வேறோர் ‘பக்தரிடம்’, முதலியாரை “பெரிய பக்திமான்” என்று அர்ச்சித்தது. அழகான ‘பதத்தை’ ஆனந்தமாகப் பாடிக் காட்டிய ‘வித்வானை’ விட்டுப் பிரிய மனமில்லாத வேதம், முதலியார் வருகிற வேளையாகிறது என்று கூறின நேரமும் அதுதான். அவள் தந்த அர்ச்சனை, அந்தக் “கிழக்குரங்கு” என்பது. அவளுக்கு முதலியார் அர்ச்சனை செய்யாமல் விட்டாரா? நாலைந்து பத்து ரூபாய் நோட்டுக்களை மணிபர்சில் எடுத்துத் திணித்துக்கொண்டே, ‘மானசீக பூஜை’ செய்தார். “இன்று தராவிட்டா, அந்த அல்லி தர்பார் பெரிசா இருக்கும்” என்று. “பைத்தியம்” கோயிலுக்குப் போகிற நேரமாகுது என்று, முதலியாரின் இரண்டாந்தாரம் இராமி சொல்லிக்கொண்டிருந்தது போலவே, முதலியாரும் மனதுக்குள் தன் மனைவியைப்பற்றி, “அந்தச் ‘சுடுமூஞ்சி’ கஷாயம் போட்டு வைக்குதோ, இல்லைனா சினிமாவுக்குக் கிளம்பிவிட்டதோ?” என்று சொல்லிக் கொண்டார். இவ்வளவு அர்ச்சனைகளும், அன்று மாலை 6 மணிக்கு நடந்தேறிய பிறகு, “தின்னுக்கூலி”யைக் கடையைப் பூட்டிக்கொண்டு போகச்சொல்லிவிட்டுச் “சோம்பேறி” கட்டிவைத்திருந்த மாலையை வாங்கிக் கொண்டு, “பணம் பிடுங்கி” நின்று கொண்டிருந்த கோயிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு, “அல்லி”க்குச் செலுத்த வேண்டிய காணிக்கையைக் கொடுத்துவிட்டு, அவள் அடிவயிறு வலி என்று அலறியது கேட்டு, அதற்கு வைத்ய முறை கூறிவிட்டு, வீட்டுக்குள் புகுந்து “சுடுமூஞ்சி” தந்த கஷாயத்தைக் குடித்துவிட்டு, “அப்பனே! முருகா” என்று கொட்டாவி கலந்த குரலால் பஜித்துக்கொண்டே படுக்கையில் புரண்டுக்கொண்டிருந்தார், அரிசி மண்டி ஆறுமுக முதலியார்.

ஒவ்வொரு நாளும் அவர் கடையில், ‘அரிசி’ வாங்கிக் கொண்டு போகிறவர்கள் தரும் ‘அர்ச்சனை’யையும், அவர்களுக்கு இவர் தரும் ‘அர்ச்சனை’யையும், தொகுத்துக் கூறினால், அகராதி ஆகிவிடும்.

“இது எந்தப் பாவி கடை அரிசி? கல்லுமாதிரி இருக்கே, வேகவே மாட்டேனெங்குதே” என்பது அடுப்பறை அர்ச்சனை. “அந்த மஞ்சக் கடுதாசிக்குக் கடன் கொடுத்தா பணம் எப்பவரும்?” இது பணத்திலே குறியாக முதலியார், வாடிக்கைக்காரனுக்குத் தரும் அர்ச்சனை. இவ்விதம், விதவிதமான அர்ச்சனைகளைப் பெற்றுக்கொண்டும், வழங்கிக் கொண்டும் காலையிலே எட்டுமணிக்குக் கடைக்கு வருவதும், மாலை ஆறு மணிக்குக் கிளம்பி பூமாலை வாங்கிக்கொண்டு புவனேஸ்வரி கோயிலுக்குப்போய் அங்கு வைத்தீஸ்வர ஐயரிடம் விபூதிப் பிரசாதம் வாங்கிக்கொண்டு தாசி வேதம் வீட்டுக்குப் போய் அங்கு எட்டு, ஒன்பது மணி வரையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்துவிட்டுப் பிறகு வீட்டுக்குப் போவார், இரண்டாந்தாரம் இராமியின் கோபத்தைப் பெற்றுக்கொள்ள.

இராமி, தாய் வீட்டிலே “கோபக்காரி” என்று பெயரெடுத்ததே இல்லை. ஒரு சமயம், இராமியின் தகப்பனார், கோபால முதலியார், சொல்லத்தகாத வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டினார்; தாயார், “பவிஷு கெட்டவளே!” “குலத்தைக் கெடுத்தவளே!” என்றெல்லாம் ஏசினாள். இராமி “மரம்போல” நிற்பாள் அல்லது ‘மலமல’ வென்று கண்ணீர் வடிப்பாள், எதிர்த்து ஒரு பேச்சுப் பேசினதில்லை. பேசுவது நியாயமல்ல என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வாள். அவ்வளவுக்கும் காரணம், அந்த “எதிர் வீட்டுப் பிள்ளையாண்டான்” தான். அவனிடம் இராமி உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டாள்! பெற்றோர்களுக்குக் கொஞ்சம் ‘வாடை’ அடித்தது; பெண்ணைத் திட்டி அடக்கினார்கள். அந்தச் சமயத்திலே திட்டும்போதெல்லாம், இராமி கோபித்துக் கொண்டதே இல்லை. புருஷன் வீட்டுக்கு வந்த பிறகு தான், அவளுக்கு அந்தக் “கோபம்” ஏற்பட்டது.

தாய் வீட்டிலே, எவ்வளவோ ‘திட்டுக்கள்’ கேட்டாலும், இராமிக்கு ஒரு நம்பிக்கை, அந்த நம்பிக்கையால் ஒரு சந்தோஷம் எப்போதும் அவள் உள்ளத்திலே இருந்து வந்தது. “உன் வீட்டிலே என்ன தடை விதித்தாலும் நீ பயப்படாதே இராமி! நான் எப்படியும் உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன், எங்க பட்டணத்து மாமன் வரட்டும், அவரைக் கொண்டு உங்க அப்பாவுக்குச் சொல்லச்சொல்லிக் கலியாணத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்கிறேன். இல்லைன்னா என் பேரு, ஏகாம்பரமா, பாரு” என்று அவன் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தான். அதனால் இராமிக்கு நம்பிக்கை, சந்தோஷம். ஏகாம்பரத்தை எப்படியும் பெறமுடியும் என்று எண்ணிக் கொண்டாள்.

இப்போதும் அவனுக்குப் பெயர் ஏகாம்பரமாகத்தான் இருந்தது. இராமியோ அரிசி மண்டி ஆறுமுக முதலியாருக்கு இரண்டாந் தாரமாகி விட்டாள். அன்று மண அறையிலே துக்கம் மட்டுந்தான் இருந்தது. புருஷன் வீடு புகுந்ததும், கோபமும் அவள் மனதிலே புகுந்தது. ஏன்? சாந்தி முகூர்த்தத்தன்று கூறினார் ஆறுமுக முதலியார் ஒரு இரகசியத்தை, தன் சாமர்த்தியத்தை விளக்க.

“இராமி! இதோ, இப்படிப் பாரு, அடடா! இவ்வளவு வெட்கமா? நான் என்ன வாலிபனாடியம்மா? உன்னைப்போல, பிகுவு தளுக்குச் செய்ய” என்று ஆரம்பித்தார், சரசப் பேச்சு.

இராமி ஒன்றும் பேசவில்லை. எந்த இராமிதான் பேச முடியும்!

“முதலியாரே! இந்த அரிசி நல்லா இல்லையே, வேறே கொடுங்களேன்” என்று வாடிக்கைக்காரர் மல்லாடி நிற்பார். ஆறுமுக முதலியார் ‘சரி’ என்று கூறுவாரா, எவ்வளவோ சமாதானம் கூறுவார், அரிசியைத் துடைத்துக் காட்டுவார், வாயிலே கொஞ்சம் போட்டுக் காட்டுவார், வாங்கின விலைப்பட்டியைக் காட்டுவார், ஆணை இடுவார், எதை எதையோ செய்து, வேண்டாமென்றவன் தலையிலே அதே அரிசியைக் கட்டி அனுப்புவார். அனுபவசாலி! வாதாடும் ஆண்களிடமே வெற்றிபெற்ற அனுபவசாலி, விழியால் பேசும் அந்தப் பெண்ணிடமா வெற்றிபெறாமல் போவார். உஹும்! ஐய்யோ! என்ற வார்த்தைகளை எல்லாம் அவர், “இதோ இலை போட்டாகி விட்டது, நெய் கிண்ணம் எடுத்து வருகிறேன்” என்று விருந்திடுபவர், விருந்தாளிக்கு விருந்து நேரத்தில் கூறும் வார்த்தைகள் என்று கொண்டார். இராமிக்கு முன்பு கண்ணம்மா இதே போலத்தான்! இருபது வயது இருக்கும்போதே தனக்குச் சிநேகமான வேதம் கூடத்தான் முதலிலே, எவ்வளவோ ‘பிகுவு’ செய்தாள். ஆறுமுக முதலியார், கடைசியில் வெற்றி பெற்றார்! தொட்டுத்தாலி கட்டினவளாயிற்றே, விட்டுவிடுவாரா!! ஆறுமுக முதலியார் செய்த தவறு அது அல்ல. தன் சாமர்த்தியத்தைக் காட்டுவதற்காக ஒரு இரகசியத்தைக் கூறினார் இராமியிடம்.

“ஏகாம்பரம் தட்டிக்கொண்டுபோக இருந்தானே” என்று துவக்கினார். வேறுபக்கம் திரும்பிக் கொண்டிருந்த இராமி, அவர் பக்கம் திரும்பினாள், தன்னையும் அறியாமல்.

“பட்டணத்து மாமனை விட்டு, உங்க அப்பனைக்கூட மயக்கிவிட்டான்” என்றார் முதலியார், முகம் சிவந்தது இராமிக்கு.

முதலியார் கொஞ்சநேரம் அந்தப் பேச்சை விட்டுவிட்டு, மெல்லிய குரலால் பாடலானார். உரத்த குரல், காலை வேளையிலே, விநாயகர் அகவல் படிக்க! இப்போது அவர், பாடியது, “மானே! மருக்கொழுந்து!“ என்ற பாட்டு. அரைகுறையாகத்தான் பாடினார். வேதத்தைப் “பாடு பாடு” என்று கேட்டு, அவள் அரை மனதுடன் பாடிய பாட்டுத்தானே அது.

ஏகாம்பரத்தைப் பற்றி மேற்கொண்ட ஏதாவது தகவல் கிடைக்காதா என்று ஏங்கினாள் இராமி. எப்படி கேட்க முடியும்! ஏன், தன்னைக் காதலித்தவன், பட்டணத்து மாமனை தூது அனுப்பி, தன் தகப்பனாரின் மனதைக்கூட மாற்றிவிட்டு, ஜாதகத்தையும் வாங்கிக் குருக்களிடம் காட்டியவன் திடீரென்று, அந்தப் பெண் எனக்கு வேண்டாம் என்று கூறினான் என்பது இராமிக்கு அன்றுவரை விளங்கவேயில்லை. அந்த இரகசியத்தை அறிந்தவரோ, பாடுகிறார், அதுபற்றி பேசாமல். அவருக்கு அது இன்ப இரவு! அவளுக்கு அப்படியா?

பாடி முடித்தார். அவரால் தன் வெற்றிப் பிரதாபத்தைக் கூறாமலிருக்க முடியவில்லை. ‘இராமி! ஒரு கதை சொல்லேன்’ என்றார்; ‘தெரியாது’ என்று ஜாடை காட்டினாள் இராமி. ‘நான் சொல்லட்டுமா ஒரு கதை?’ என்று கேட்டார். அவள் சொல்லச் சொல்லவில்லை; அவரே சொல்ல ஆரம்பித்தார்.

ஒரே ஒரு ஊரிலே ஒரு பெண். உன்னைப் போலத்தான் நல்ல அழகு, அவ சிரிச்சா, கன்னத்திலே குழி விழும், என்று கூறிக்கொண்டே, கன்னத்துக்குழியைத் தேடினார், இல்லை! அவள் சந்தோஷத்தில் இருந்தால்தானே! அந்தக் கன்னத்திலே ஏகாம்பரம் தன் உயிரையே வைத்திருந்தான் என்ற நினைப்பிலே அவள் சித்தம் சென்றுவிட்டது. கதையைத் தொடர்ந்து கூறலானார் மாப்பிள்ளை.

“அந்தப் பெண்ணையே தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று, ஒரு பையன், தலைகீழாக நின்றான். என்னென்னமோ தந்திரமெல்லாம் செய்தான். அவனுடைய மாமன் ஒருவன், அவன் பட்டணம். அவனை விட்டுப் பெண்ணுடைய தகப்பனாருக்குப் போதனை செய்யச் சொன்னான். பெண்ணின் தகப்பனும் ஒப்புக்கொண்டான். ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்தார்கள்.”

அதுவரையில் அவளுக்குத் தெரியும். அதற்கு மேலே என்ன நடந்தது? அதுதானே தெரிய வேண்டும்! கனைத்துவிட்டு முதலியார், மேலே கூறலானார்.

“ஜாதகம் பார்த்தாச்சா, திடீருன்னு அந்தப் பையன் நான் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாதுன்னு சொல்லிவிட்டான். யார் என்ன சொன்னாலும் கேட்கவில்லை” என்று கூறிவிட்டு எழுந்துபோய், மேஜை மேல் வைத்திருந்த பால் செம்பை எடுத்தார். குடிக்க அதிலே ஒரு வாழைப்பழத் துண்டு கிடப்பதைக் கண்டார், சிரித்தார். சிரித்துக்கொண்டே, அந்தத் துண்டை எடுத்து வாயிலே போட்டு மென்றுகொண்டே “அந்தப் பெண் வேண்டாமென்று அந்தப் பயல் சொல்லிவிடவே, அந்தப் பெண்ணை கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று நெடுநாளாக ஆசையாய் இருந்த ஆறுமுகத்துக்குப் பழம் நழுவிப் பாலிலே விழுந்தது போலாச்சு, பக்கத்துக்கு ஒரு ரதி வந்தாச்சு” என்று கதையும் முடித்தார், பாலையும் குடித்தார். பரமானந்தத்துடன் பாவையின் பக்கமும் சேர்ந்தார் உரிமையோடு.

இதுவும் தெரிந்த கதைதானே! ஏகாம்பரம் ஏன் கலியாணம் செய்துகொள்ள முடியாது என்று சொல்லிவிட்டான். அதுதானே தெரியவேண்டும் என்று துடித்தாள் இராமி. எப்படிக் கேட்பது என்று பயந்தாள், கொஞ்ச நேரம். கேட்டால் என்ன என்று தைரியம் பிறந்தது. ‘நல்ல கதை’ என்று கேலி செய்தாள் மெள்ள.

“நல்லாயில்லை? சரி, நீ சொல்லு நல்ல கதையாக” என்று ஆறுமுக முதலியார் கொஞ்சத் தொடங்கினார். அது போன்ற கொஞ்சுதலைக் கண்டு வேதம் அவருக்குத் தந்த அர்ச்சனைதான் ‘கிழக்குரங்கு’ என்பது. இராமி! பேசவேயில்லை. ‘இராமி! உண்மையைச் சொல்லட்டுமா? நான் தான் அந்தக் கலியாணம் நடக்க முடியாதபடி தடுத்தேன். அவனுக்கு இஷ்டந்தான். ஆனா நான் கண்வைச்சா வேறே ஆசாமியிடம் சிக்குமா எதுவும், மண்டித் தெருவிலே போய்க் கேட்டுப் பாரு. அடேயப்பா! ஆறுமுக முதலி, விலை பேசி விட்டாரு நமக்கு வேண்டாம் அவனிடம் போட்டின்னு இலட்சாதிகாரி எல்லாம் ஓடி விடுவாங்க. எதற்கும் தைரிய இலட்சுமி வேணும். பட்டணத்தான் பேச்சைக் கேட்டுவிட்டு உங்க அப்பன் பல்லை இளிச்சிட்டான். பார்த்தேன், தைரியத்தைக் கைவிட்டேனா? ஆறுமுகமா தைரியத்தைக் கைவிடுகிறவன். ஒரு யோசனை வந்தது. நேரே ஐயர் வீட்டுக்குப் போனேன். ‘சாமி!’ன்னு சொல்லி ஒரு கும்பிடு. ஐந்து நோட்டு பத்து ரூபா நோட்டு; என்ன முதலியார் என்று கேட்டார். ‘உங்க தயவாலே இராமியை இரண்டாந்தாரமாக அடையணும்’ என்று சொன்னேன். "அட பாவமே! நேத்துத்தானே பொண்ணு ஜாதகத்தை ஏகாம்பரம் மாமன் கொண்டு வந்து கொடுத்திருக்கான்" என்றார். ‘தெரிஞ்சுதான் சாமி! நீங்க மனசு வைச்சா எதுவும் ஆகும்’ என்றேன். கொஞ்ச நேரம் யோசிச்சார். "பொருத்தம் இல்லைன்னு சொல்லலாமோ?“ என்று என்னையே கேட்டார். “சொல்லலாம்! ஆனா வேறே ஜோதிடர்களைக் கலந்தாளான்னா’? என்று நான் கேட்டேன். ‘அதைத் தானே நானும் யோசிச்சிண்டு இருக்கேன்“ என்று ஐயர் இழுத்தார். உடனே ஒரு யோசனையை வீசினேன். ‘பெண் ஜாதகத்தைக் கொஞ்சம் மாற்றிவிடுங்க. எவனிடம் கொடுத்தாலும் பொருத்தமில்லைன்னு சொல்லறமாதிரியா மாத்தல் இருக்கணும், பொண்ணு மூல நட்சத்திரமுன்னு மாத்திவிட்டா போதும். மூல நட்சத்திரத்திலே பெண் கட்டினா, மாமியாரை மூலையிலே உட்கார வைச்சுடும்னு சாஸ்திரம் இருக்கே, அதுபோதும், பட்டணத்தான் கிட்டச் சொல்லிவிடுங்க. பக்குவமா ஜாதகத்தை மாத்திவிடுங்க’ என்றேன். ஐயர் தயவாலே, உன் நட்சத்திரம் மூலமாக மாறிவிட்டது. பட்டணத்தான் விழுந்தடிச்சு ஓடினான். ஏகாம்பரத்தின் காலிலே விழுந்து, ‘தம்பி என் பேச்சைக் கேளு. அந்தப் பெண்ணை மறந்துவிடு, அந்தச் சனியன் மூல நட்சத்திரமாம். உங்க அம்மா மூணே மாசத்திலே சாவாளாம்’ என்று சொல்ல, ஏகாம்பரத்தின் தாயார் என்னைச் சாகடிக்கத்தானா அந்தச் சண்டாளியைக் கட்டிக்கப் போறேன்னு கேட்க, வீடு ஒரே அமர்க்களமாயிடுத்து, ஒண்ணும் பேச முடியலை. அந்தப் பெண் வேண்டாம் என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டான் ஏகாம்பரம். வேறே ஜோதிடன் கிட்டக் கூடக் கேட்டுப் பார்த்தானாம். எல்லோரும் மூல நட்சத்திரம் ஆகாது என்றே சொன்னார்கள், வேறே என்ன சொல்வார்கள்? புத்தகத்திலே அப்படித்தானே எழுதியிருக்கு. ஆனா அவனுங்க கண்டாங்களா பிரம்மா உன்னைப் பூச நட்சத்திரத்திலே பிறக்க வைச்சாரு. உன் புருஷன் அதை மூல நட்சத்திரமா மாத்தினாருன்னு!” என்று கதையைக் கூறி முடித்தார் முதலியார். அந்த விநாடி அவள் உள்ளத்திலே குடிபுகுந்த கோபம் நாளுக்கு நாள் வளர்ந்ததேயொழிய துளியும் குறையவில்லை. ஆறுமுக முதலி வேதத்திடம் போய் விளையாடுகிற நேரமாகப் பார்த்து வேலைக்காரியின் தயவால் ஏகாம்பரத்தை வரவழைத்து அவனிடம் நடந்த “சூதை“ச் சொன்ன பிறகு கூட அவளுடைய கோபம் அடங்கவில்லை. ஏகாம்பரம் “அயோக்யன்! இப்படியா சூது செய்தான். என் கண்ணைப் பறித்துக் கொண்டானே“ என்று ஆத்திரத்தோடு கூவினான். “நான் ஒரு முட்டாள் ஏமாந்தேன்“ என்று அழுதான். “அழாதே கண்ணு. அதனதன் தலைவிதிப்படி நடக்குது; நாமென்ன செய்வது“ என்று இராமி தேறுதல் கூறினாள். தேறுதல் கூறும் கட்டத்தோடு முடிந்துவிடுமா, முந்தானையால் அவன் கண்ணீரைத் துடைத்தாள். “உன்னை இழந்தேனே“ என்று கூறியபடி அவளை அவன் அணைத்துக் கொண்டான். “போதும் கண்ணே! நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்“ என்று அவள் புலம்பினாள். அவள் கண்ணீரை அவன் துடைத்தான். அதரத்தின் துடிப்பை முத்தமிட்டு அடக்கப்பார்த்தான். முடியுமா? அவர்கள் இன்பக் கேணியில் இடறி விழுந்தார்கள். பிறகு வருத்தமடையவுமில்லை. முதலியார் புவனேஸ்வரி பூஜையில் இருக்கும் சமயமெல்லாம் ஏகாம்பரம் இராமியுடன் சல்லாபித்துக் கொண்டிருப்பான்! பூஜைக்குப் பிறகு வேதம் படித்துவிட்டு வீடு திரும்புவார், சாமர்த்தியசாலியான ஆறுமுகம். அவர் வீட்டுக்குள் வந்ததும் இராமி “சுடுமூஞ்சிக்“காரியாவாள்!


"https://ta.wikisource.org/w/index.php?title=சிறு_கதைகள்/சுடுமூஞ்சி!&oldid=1526417" இலிருந்து மீள்விக்கப்பட்டது