சிலப்பதிகாரக் காட்சிகள்/கோவலன்–கண்ணகி திருமணம்

2. கோவலன்-கண்ணகி திருமணம்

வணிக அரசர்

பல வளங்களும் நிறைந்து விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர் அரசர்க்கு நிகரான பெருமதிப்புடன் வாழ்ந்து வந்தனர். அதற்குக் காரணம் அவர்கள் செய்துவந்த கடல் வாணிகமே ஆகும். இங்ங்னம் அரசபோகத்தில்: வாழ்ந்த வணிகருள் இருவர் பெயர் பெற்றவராக இருந்தனர். ஒருவன் மாசாத்துவான் என்பவன்; மற்றவன் மாநாய்கன் என்பவன் மாசாத்துவான் என்பவனுக்குக் கோவலன் என்பவன். தவமகனாக விளங்கினான். மாநாய்கன் என்பவனுக்குக் கண்ணகி என்பவள் தவமகளாக விளங்கினாள்.

கோவலன்

கோவலன் இளமைதொட்டே நற்குண நற்செயல்களிற் சிறந்து விளங்கினான். அவன் தன் காலத்துத் தமிழ் நூல்கள் பலவற்றைத் தக்க ஆசிரி. யரிடம் பயின்றான்! வாணிகத் துறைக்குரிய கல்வியையும் வளமுறக் கற்றான்; தந்தைக்கு உதவியாக இருந்து வாணிகத்தைப் பெருக்கி வந்தான். ஏழைகளைக் காக்கும் இயல்பு அவனிடம் இளமை முதலே குடி கொண்டிருந்தது. செல்வத்திலும், கல்வியிலும் ஒழுக்கத்திலும் ஒருங்கே குறப்புப் பெற்று இருந்த அவன், அறிஞரது பெருமதிப்புக்கு உரியவன் ஆனான்.

கண்ணகி

கண்ணகி இரதிதேவியும் பார்த்துப் பொறாமை படத்தக்க பேரழகி அவள் முகம் அன்று மலர்ந்த தாமரை மலர் போலப் பொலிவு பெற்று விளங்கியது. சிவந்த ரேகைகள் படர்ந்த அவள் கண்கள் அகன்று இருந்தன. அவள் புருவங்கள் வில்லைப் போல வளைந்து இருந்தன. அவள் பற்கள் ஒரே வகையும் ஒரே அளவும் உடைய முத்துக்களை ஒத்திருந்தன. அவளுடைய கரிய நீண்ட கூந்தல், கார் மேகத்தை ஒத்திருந்தது. அவள் பேச்சு கிளிப் பேச்சை ஒத்திருந்தது. அவளது நடை அன்ன நடையைப் போல இருந்தது. அப்பேரழகி அடக்கம், அன்பு முதலிய நல்ல இயல்புகளைப் பெற்றிருந்தாள். மாநாய்கன் தன் செல்வ மகளைப் பல கலைகளில் வல்லவளாக்க விரும்பினான். அவன் விருப்பப்படியே கண்ணகி தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைத் தக்க ஆசிரியரிடம் பயின்றாள்; குழல், யாழ் இவற்றைப் பயன்படுத்தக் கற்றாள்: நல்ல இசையுடன் பாடக்கற்றாள்; பெண் களுக்கு உரிய அம்மானை, பந்து, ஊசல் முதலிய விளையாட்டுக்களில் வல்லவள் ஆனாள். கண்ணகி, செல்வச் சீமான் செல்வமகள் ஆதலின், அவர்களுக்குத் தோழியர் பலர் இருந்தனர். அவள் அவர்களிடையில் இன்பமாகப் பொழுது போக்கி, வந்தாள் .

திருமண எண்ணம்

மாநாய்கனும் மாசாத்துவானும் நெருங்கிய உறவினர். அதனால் கோவலனை மாநாய்கன் நன்கு அறிவான்; எனவே, கண்ணகியும் நன்கு, அறிவாள். அங்ங்னமே கண்ணகியைக் கோவலன்: அறிவான். இருவரும் மணப்பருவம் அடைந்த பிறகு ஒருவரை ஒருவர் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும், கண்ணகியின் தோழியர் கோவலன் குண நலன்களைக் கண்ணகியிடத்துப் பலவாறு பாராட்டிப் பேசுதல் வழக்கம். அதனால், கண்ணகியின் உள்ளம் கோவலனைக் கணவனாகப் பெறவேண்டும் என்று நாடியது. அவ்வாறே கோவலனும் கண்ணகியின் பேரழகையும் உத்தம பெண்ணிற்கு இருக்க வேண்டிய நல்ல இயல்புகள் அவளிடம் பொருந்தி இருத்தலையும் தக்கவர் மூலமாகக் கேள்வியுற்றான்; அக்குனவதியையே தன் வாழ்க்கைத் துணைவியாகக் கொள்வது நல்லது என்று எண்ணினான்.

திருமணம்

பெற்றோர் இவ்விருவர் கருத்துக்களையும் குறிப்பாக உணர்ந்தனர்; அவர்கள் விருப்பப்படியே மணம் செய்ய முடிவு செய்தனர்; மணத்திற்கு உரிய நல்ல நாளைக் குறிப்பிட்டனர். காவிரிப்பூம் பட்டினத்து வணிகர் வழக்கப்படி, வணிக மகளிர் சிலர் யானைமீது அமர்ந்து சென்று வீடு வீடாகக் கண்டு மணச் செய்தியை ஊரெங்கும் பரப்பினர். மணநேரத்தில் முரச வாத்தியம் ஒலி செய்தது; மத்தளம் அதிர்ந்தது; பணிலம் முதலிய கருவிகள் ஒலித்தன; அரசனது சிறப்பு எழுவது போல வெண் குடைகள் எழுந்தன. மண் ஆர்ப்பு ஊரெங்கும் காணப்பட்டது. மணப்பந்தல் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வயிரம் பதித்த தூண்களையும் நீலப்பட்டுக் கட்டப்பட்ட கூரையையும் கொண்ட இடத்தில் முத்துப் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அப்பந்தலில் இருந்த ஆசனத்தில் மணமக்கள் வீற்றிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் உற்றாரும் உறவினரும் பெருமகிழ்ச்சியுடன் கூடியிருந்தனர்.

கண்ணகி மணப்பெண் கோலத்தில் விளங்கினாள். அவளது இயற்கை அழகும் ஆடை அணிகளால் பெற்ற செயற்கை அழகும் கலந்து கண் டோரைப் பரவசப்படுத்தின. கோவலன் இயற்கையில் வடிவழகன். அவன் கொண்டிருந்த செயற்கைக் கோலம் பின்னும் அழகு செய்தது. “ஏற்ற மண மக்கள்” என்று கண்டோர் கூறிக் களிப்புற்றனர்.

குறித்த நேரத்தில் சடங்குகள் தொடங்கப் பெற்றன. வயதிலும் ஒழுக்கத்திலும் சனத்திர அறிவிலும் மிகவும் முதிர்ச்சிப் பெற்ற பார்ப்பான் சடங்குகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்விக்கத் தொடங்கினான். மணமக்கள் இருவரும் தீ வலம் வந்தனர். மகளிர் பலர் மணச் சடங்குகட்கு வேண்டிய மலர்களையும் வாசனைப் பொருட்களையும் பலவகைச் சாந்துகளையும் புகைப் போருள் வகைகளையும் பல பொடி வகைகளையும் விளக்குகளையும் பாத்திரங்களையும் தனித்தனியே ஏந்திப் பந்தரண்டை நின்றிருந்தனர். பிள்ளை களைப் பெற்று, வாழ்க்கை அனுபவம் மிகுந்த பெண்மணிகள், “கணவனும் மனைவியும் நிறைந்த அன்புடன் நீடுழி வாழ்க!” என்று மலர்களைத் தூவி வாழ்த்தினர். அத்துடன் மணவினை மங்கல முடிவு பெற்றது. மணத்திற்கு வந்திருந்தவர் அனைவரும், “சோழர் பெருமானான கரிகாலன் இமயத்தில் இருத்திய புலி முத்திரை அவ்விடத்தில நிலைபெற்று இருப்பதாகுக! அவனது ஒப்பற்ற அரச ஆழி வாழ்வதாகுக!” என்று வாழ்த்தினர்.[1]

  1. இவ்வாறு குடிமக்கள் தங்கள் சடங்குகட்கு இறுதியில் தங்கள் நாட்டு அரசனை வாழ்த்துதல் பண்டை மரபு.