சிலம்பு பிறந்த கதை/இளங்கோவின் பயணம்
பழைய காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவாகப் பிரிந்திருந்தது. அவற்றைச் சோழ நாடு, பாண்டி நாடு, சேரநாடு என்று சொன்னார்கள். சோழ நாட்டின் தலைநகராகிய உறையூரில் இருந்து சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள். பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையில் பாண்டிய மன்னர்கள் செங்கோல் செலுத்திவந்தார்கள். சேரநாட்டுக்குத் தலைநகர் வஞ்சிமாநகர். அதைத் தம்முடைய இடமாகக்கொண்டு சேரமன்னர்கள் அரசாட்சிபுரிந்தார்கள். இந்த மூன்று மன்னர்களின் பரம்பரையும் மிக மிகப் பழைய காலம் முதற்கொண்டே இந்த நாட்டில் இருந்துவருகின்றன.
சோழ நாட்டுக்குச் சிறப்புத் தருவது காவிரி ஆறு. பாண்டிநாட்டுக்குப் பெருமை தருபவை வையை, தாமிரபர்ணி என்னும் ஆறுகள். சேர நாட்டில் ஓடுவது பேராறு. ஒவ்வொரு நாட்டிலும் கடற்கரையைச் சேர்ந்த இடங்கள் இருந்தன. அதனால் மன்னர்கள் கடற்கரையிலும் சில நகரங்களை அமைத்துக் கொண்டார்கள். சோழநாட்டில் காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் இருப்பது காவிரிப்பூம்பட்டினம். அதைப் புகார் என்றும் சொல்வார்கள். அது பெரிய கடற்கரை நகரமாக விளங்கியது. பாண்டிநாட்டில் கொற்கை பெரிய கடற்கரைப் பட்டினம். சேரநாட்டின் தலைநகராகிய வஞ்சியே கடற்கரைப் பட்டினந்தான்; முசிறி என்ற பட்டினம் வேறு இருந்தது.
இந்த மூன்று நாடுகளில் சேரநாடு மேற்குக் கடற்கரை ஓரமாக இருப்பது; இன்று கேரளம் என்று வழங்கும் இடம் முழுவதும் முன்பு சேரநாடாக இருந்தது. சேரநாட்டில் மலைகள் மிகுதி. அதனால் அதை மலைநாடு என்றும் சொல்வது உண்டு. அக் காலத்தில் சேரநாட்டிலும் தமிழே வழங்கி வந்தது.
ஒவ்வோர் அரசருக்கும் தனித்தனியே மாலை, கொடி முதலிய அடையாளங்கள் உண்டு. சேரனுடைய அடையாள மாலை பனைமாலை. அவனுடைய கொடி விற்கொடி, அதாவது அவனுடைய கொடியில் வில்லின் உருவம் எழுதியிருக்கும்.
சேரமன்னர்களில் சிலர் இமயம்வரை சென்று தம் புகழை நிலைநாட்டினர்கள். தென்குமரி முதல் வடஇமயம் வரையில் தன் வீரத்தை நாட்டியவர்களில் ஒருவன் நெடுஞ்சேரலாதன் என்பவன். அவன் வீரத்தாலும் கொடையாலும் புகழ் பெற்றவன். அற நெறி திறம்பாதவன். தன் குடிகளைத் தாய்போலப் பாதுகாப்பவன். புலவர் பெருமக்களைப் பாராட்டிப் பலவகைப் பரிசில்களை வழங்குபவன். அவர்கள் அவனை அருமையான பாடல்களால் பாடிப் புகழ்ந்தார்கள்.
இந்த நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தார்கள். மூத்தவன் செங்குட்டுவன். அவனுடைய தம்பியின் பெயர் இன்னதென்று தெரியவில்லை. எல்லோரும் அவரை இளங்கோ என்று அழைத்தார்கள். இளங்கோ என்பதற்கு இளவரசன் என்பது பொருள்.
நெடுஞ்சேரலாதன் தன் புதல்வர் இருவருக்கும் தக்கபடி ஆசிரியர்களை அமைத்துக் கல்வி கற்பிக்கச் செய்தான். இருவரும் மனம் ஒன்றிப் பயின்று வந்தனர். உடல் வளர வளர அவர்களுடைய அறிவும் வளர்ந்து வந்தது.
சேரமன்னனாகிய நெடுஞ்சேரலாதனுக்கு முதுமைப் பருவம் வந்தது. ஆதலின் தன்னுடைய மூத்த புதல்வனாகிய செங்குட்டுவனை எப்போதும் தன் அருகிலேயே வைத்துக்கொண்டு அரசியல் முறைகளையெல்லாம் பழக்கி வைத்தான். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் தம் அநுபவத்தாலும் நூல்களாலும் அறிந்த பல கருத்துக்களை அவனுக்குக் கூறினர்கள்.
தனக்குப் பிறகு அரசாட்சி செய்வதற்குரிய செங்குட்டுவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டவேண்டுமென்ற விருப்பம் அரசனுக்கு உண்டாயிற்று. அதை அவன் தன் அவைக்களத்தில் இருந்த பெரியவர்களிடம் சொன்னான். அவர்கள் அப்படியே செய்யலாம் என்றார்கள். அமைச்சர்களும் அதைக் கேட்டு, நல்லது தான் என்று சொன்னார்கள். குடிமக்களும் அந்தச் செய்தியைக் கேட்டுக் களிப்படைந்தார்கள்.
ஒரு நல்ல நாளில் பலரும் சூழ மிகச் சிறப்பாகச் செங்குட்டுவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான் நெடுஞ்சேரலாதன். அதே சமயத்தில் அவனுடைய தம்பியாகிய இளங்கோவுக்குப் பெருநம்பி என்ற பட்டம் கொடுத்து, அதற்கு ஏற்ற அடையாளங்களாகிய, பொற்பூ முதலியவற்றை வழங்கினான். அரசியலில் மிகச் சிறந்த அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் நம்பி என்றும் பெருநம்பி என்றும் சிறப்புப் பெயர்களை வழங்குவது அக்கால அரசர்களின் வழக்கம். இளங்கோ அன்று முதல் பெருநம்பி இளங்கோ என்று, பட்டப் பெயருடன் யாவரும் அழைக்கும் நிலையைப் பெற்றார்.
இளங்கோவுக்குத் தமிழ் நாடு முழுவதும் சென்று அங்கங்கே உள்ள காட்சிகளைக் கண்டு களித்து வரவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. பெரிய நகரங்களையும் சிற்றூர்களையும் கண்டு மகிழ வேண்டும் என்று விரும்பினர். பாண்டிய மன்னனையும் சோழ மன்னனையும் கண்டு அவர்கள் நாட்டிலுள்ள ஆறுகளையும் மலைகளையும் வழிபாட்டிடங்களையும் காணும் விருப்பமும் அவருக்கு எழுந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு உண்டான பெரிய விருப்பம் ஒன்று உண்டு. மதுரைமா நகரத்தில் பாண்டிய மன்னன் தமிழ்ச் சங்கம் வைத்து நடத்தி வந்தான். அதில் பல பெரும் புலவர்கள் இருந்து நல்ல நூல்களை இயற்றி வந்தார்கள். கல்வியிற் சிறந்து நின்ற இளங்கோவுக்கு அந்தப் புலவர்களோடு பழகி இன்புற வேண்டுமென்று மிக்க ஆர்வம் உண்டாயிற்று.
தந்தையிடம் விடை பெற்றுத் துணைக்குச் சிலரை அழைத்துக் கொண்டு பயணம் புறப்பட்டார் இளங்கோ. ஆரவாரமாகப் பல பேரைக் கூட்டிக் கொண்டு போக அவர் விரும்பவில்லை. தனியே தம் மனம்போனபடி போய், ஏழை பணக்காரர் என்று பாராமல் எல்லாரோடும் பழகவேண்டும் என்பது அவருடைய நோக்கம். தம்முடன் யாராவது வந்தால், “ இவர் சேர அரசர் பிள்ளை பெருநம்பி இளங்கோ” என்று போன இடங்களிலெல்லாம் சொல்வார்கள். அதைக் கேட்பவர்கள் மிகவும் மரியாதை செய்யத் தொடங்குவார்கள்; விலகி நிற்பார்கள். அவர்களோடு மனம் கலந்து பழகினால் தெரியவரும் பல செய்திகளை, அப்போது தெரிந்துகொள்ள முடியாது.
தனியே போய் வருகிறேன் என்று தன் இளம் புதல்வன் சொன்னதை நெடுஞ்சேரலாதன் ஏற்றுக் கொள்ளவில்லை. “இரண்டு மூன்று பேராவது உன்னுடன் துணைக்கும் ஏவல் செய்வதற்கும் இருக்க வேண்டும். தனியே போய்விட்டு, போன இடத்தில் விழிக்கக் கூடாது” என்று சொன்னான். வேறு வழியின்றிச் சில பேரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார் இளங்கோ.
முதலில் சோழ நாடு முழுவதையும் பார்த்தார். அங்கே உள்ள நிலவளத்தையும் நீர்வளத்தையும் கண்டு வியந்தார். காவிரி, மணமான மங்கை மெல்ல, நடந்து போவதுபோல, வெள்ளம் நிரம்பிப் போவ தைப் பார்த்து உள்ளத்தைப் பறிகொடுத்தார். காவிரிப்பூம்பட்டினம் போனார். அந்த நகரத்தின் அமைப்பையும் அரண்மனையையும் மாளிகைகளையும் கண்டு மகிழ்ந்தார். ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்தார். அரசர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற மன்னர்களோடு போர் செய்து வென்றதற்கு அறிகுறியாகப் பல வெற்றிச் சின்னங்களை எழுப்பியிருப்பார்கள். கரிகால சோழன் அவ்வாறு பெற்ற வெற்றிகளுக்கு அடையாளமாகப் பல அமைப்புக்கள் அங்கே இருந்தன. அவற்றையெல்லாம் கண்டார். அவை அங்கே இருப்பதற்குக் காரணம் இன்னது என்று விசாரித்து அறிந்தார். இவ்வாறு கண்டும் கேட்டும் பல புதிய வரலாறுகளையும் உண்மைகளையும் அவர் தெரிந்துகொண்டார். பல இடங்களுக்குப் பயணம் செய்வதனால் கிடைக்கும் பெரும் பயனை அவர் நன்கு அறிந்துகொண்டார்.
காவிரிப்பூம்பட்டினத்தைப் பார்த்துவிட்டு, கழுமலம் (சீகாழி), உறையூர் முதலிய வேறு பல ஊர்களைப் பார்த்தார். திருவரங்கத்துக்குச் சென்று அங்குள்ள திருமாலையைத் தரிசித்துக் கொண்டார்.
பிறகு பாண்டி நாட்டுக்கு வந்தார். வரும் வழியில் பல காடுகள் இருந்தன. அந்தக் காடுகளில் வேடர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் கொற்றவை என்னும் துர்க்கைக்குப் பூசை போட்டு ஆடிப் பாடி வழிபட்டார்கள். அந்தக் காட்சிகளைக் கண்ட இளங்கோவுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. அப்படியே பாண்டி நாடு புகுந்து மதுரையை அடைந்தார். பாண்டியனைக் கண்டு அளவளாவினர். தமிழ்ச்சங்கம் சென்று, அதிலிருந்து தமிழ் ஆராய்ச்சி செய்து வந்த புலவர்களை யெல்லாம் கண்டு பேசினார். பல நாட்கள் மதுரையிலே தங்கிவிட்டார்.
அங்கே அவர் தங்கியதற்குத் தமிழ்ப் புலவர்ளோடு பல நாள் பழகி இன்புற வேண்டும் என்ற விருப்பமே அதன் காரணம். ஒரு நாள் திருமாலிருஞ் சோலை மலை போய்ப் பார்த்து வந்தார். சிலம்பாற்றையும் புண்ணிய சரவணமென்னும் பொய்கையையும் கண்டு வந்தார். தமிழ்ப் புலவர்களோடு பழகப் பழக, அவர்களோடே இருந்துவிடலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று ஆனால் அது நடக்கிற காரியமா? தன் புதல்வரை அயல் நாட்டில் வாழும்படி செய்ய அவருடைய தந்தைக்கு மனம் வருமா ?
சேர மன்னனின் இளங்குமரருடைய அறிவாற்றலையும் பண்பையும் கண்டு புலவர்கள் வியந்தனர். மன்னர் குலத்தில் பிறந்தோம் என்ற மிடுக்கே இல்லாமல் மிக்க பணிவாக நடந்து கொண்டார் இளங்கோ. தாம் மிகுதியாகப் பேசாமல் புலவர்கள் பேசுவதைக் கேட்பதில் ஆர்வம் காட்டினார். அப்படிப் பேசினாலும் சில சொற்களே சொன்னார். சில சொற்களேயானாலும் அவையே அவருடைய பண்பை எடுத்துக் காட்டின. பிற்காலத்தில் அவர் பலரும் போற்றும் பெரிய நிலையை அடைவார் என்று புலவர்கள் பாராட்டினார்கள்.
புலவர்களிடம் பழகிய முறையினால் அவர்களுடைய பேரன்பைப் பெற்றார் இளங்கோ. எல்லாப் புலவர்களிடமும் பழகிப் பயன் பெற்றாலும் சிலரிடம் நெருங்கிப் பழகினர். அவர்களுக்குள் சாத்தனார் என்பவருக்கும் இளங்கோவுக்கும் மிகநெருங்கிய நட்பு உண்டாயிற்று.
சாத்தனார் மதுரையில் தானியக்கடை வைத்திருந்தார். புலவர்களிற் பலர் தமக்குரிய தொழில்களைச் செய்துகொண்டே கவிகளைப் பாடி வந்தார்கள்; நூல்களை இயற்றி வந்தார்கள்; தமிழ்ச் சங்கத்தில் ஆராய்ச்சி செய்தார்கள். தானியக் கடை வைத்திருந்த சாத்தனாரைக் கூல வாணிகன் சாத்தனார் என்று அழைத்தார்கள். தானியத்துக்குக் கூலம் என்ற வேறு ஒரு பெயரும் உண்டு. கூல வாணிகன் என்பதற்குத் தானிய வியாபாரி என்று பொருள். ‘வாணிகத்தையும் நன்றாக நடத்திக்கொண்டு தமிழிலும் பெரிய புலவராக இருக்கிறாரே !’ என்று சாத்தனாரிடத்தில் வியப்பும் மதிப்பும் சேர அரசனின் புதல்வருக்கு உண்டாயிற்று. சாத்தனாருக்கோ, ‘பழைய அரச குலங்களில் ஒன்கிறாகிய சேர குலத்தில் தோன்றியவர் இவ்வளவு பணிவாகவும் அறிவாளியாகவும் இருக்கிறாரே!’ என்று வியப்பு எழுந்தது.
சாத்தனாரும் இளங்கோவும் நண்பர்களாயினர். “தாங்கள் வஞ்சிமா நகருக்கு வரவேண்டும். என் தந்தையார் தங்களைப் போன்ற புலவர்களைக் கண்டால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவார். என் தமையனர் என்னை விடப் பன்மடங்கு அறிவாளி. அவரும் தங்களைக் காண்பதால் உவகையும் பயனும் பெறுவார்” என்று இளங்கோ இயம்ப, “அப்படியே வருகிறேன்”. என்று ஒப்புக்கொண்டார் சாத்தனர். அவர் இளங்கோவைப் பாண்டி நாட்டிற் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டினார். மதுரைக் கோவிலையும் வையையையும் கண்டு இன்புற்றார் இளங்கோ.
பின்பு தென்பாண்டி நாடு சென்று பொருநையாறாகிய தாமிரபர்ணியைக் கண்டு களித்தார். பொதிய மலைக்குச் சென்று அதன் எழிலைப்பருகினார். பொதியத் தென்றலின் இன்பத்தை நுகர்ந்தார். திருக்குற்றால அருவியில் ஆடி இன்புற்றார்.
அவர் நகரை விட்டு வந்து பல நாட்களாகி விட்டன. தமிழ்நாட்டின் வடக்கே உள்ள தொண்டை நாட்டுக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. ஆகவே பாண்டி நாட்டைக் கண்டு களித்ததோடு நின்று நேரே வஞ்சிமா நகரை அடைந்தார்.
இடையிடையே தம்முடைய சேரநாட்டின் மலைவளங் கண்டு இன்புற்றார். பேராற்றங்கரை வழியே சென்று பார்த்தார். கடலையும் கழிகளையும், மலையையும் முகடுகளையும், காட்டையும் விலங்குகளையும் கண்டு அவற்றின் அழகைக் கண்ணால் பருகினார். செங்கோடு என்ற மலைமேல் ஏறி அங்குள்ள முருகனைத் தரிசித்தார். தாம் அதுகாறும் மலைநாட்டில் போகாத இடங்களுக்கெல்லாம் போய்வந்தார்.
இளவரசுப் பட்டம் பெற்ற தம் தமையனுருக்கு இத்தகைய பயணம் செய்யும் வாய்ப்பும் ஓய்வும் கிடைப்பது அருமை என்பதை எண்ணியபோது, ‘நல்ல வேளை! நாம் தலைமகனாய் பிறக்காமற் போனோம்!’ என்ற நினைவும் உடன் தோன்றியது. எத்தனை இடங்கள், எத்தனை காட்சிகள் அவற்றைப் பார்த்ததனால் எத்தனை புதிய உண்மைகளை உணர முடிந்தது!