சிலம்பு பிறந்த கதை/பெரு வேள்வி
மாலைக் காலம் வந்தது. மகளிர் விளக்குகளை ஏற்றினர். செங்குட்டுவன் படையெடுத்துச் சென்ற போது அவனுடன் போய் வெற்றியுடன் மீண்ட வீரர்கள் தங்கள் காதலிமாருடன் அளவளாவி இன்புற்றனர். ஆடலைக் கண்டும் பாடலைக் கேட்டும் களித்தனர்.
அந்த மாலையில் மாசுமறுவற்ற வானத்தில் திங்கள் தண்ணிய நிலாவைப் பால்போல் பொழிந்து கொண்டிருந்தது. நிலா, மாளிகைகளின் மேலும் மண்டபங்களிலும் பரந்து அழகு செய்தது. வஞ்சிமாநகரின் நடுவில் மேருவைப்போல உயர்ந்து நின்றது அரசன் அரண்மனை. பொன்னும் மணியும் கொண்டு அலங்காரம் செய்த அரங்கம் ஒன்று அதில் உண்டு. நிலா மாடமும் இருந்தது. திங்களின் அழகைக் கண்டு மகிழ்வதற்காகச் சேரமானுடைய மாதேவி புறப்பட்டாள். அந்தப்புரத்திலுள்ளவர்கள் வரிசை வரிசையாக நின்று அவளை வாழ்த்தினர்.
அழகான மகளிர் தம் கைகளில் விளக்குகளை ஏந்திப் பல்லாண்டு பாடினர். முழவும் யாழும் இசைத்தன ஒருசார். ஒருபக்கம் இன்னிசைப் பாடல் பரந்தது. அந்தப்புரத்தில் ஏவல் செய்யும் கூனியரும் குட்டைப் பெண்களும் கத்துரியும் சந்தனமும் கையில் எடுத்து நின்றார்கள். பூசும் வண்ணமும் சுண்ணமும் மலர் மாலைகளும் பேடிகள் ஏந்தினார்கள். ஒருபக்கம் பூவும் வாசனைப் புகையும் நறுமணப் பொருள்களும் கொண்டு நின்றனர் சிலர். கண்ணாடி ஒரு பக்கம், ஆடைகளும் அணிகலன்களும் ஒரு பக்கம் சேடிமார் ஏந்தி நின்றனர்.
அப்போது சேரமான் அங்கே வந்து தன் பட்டத்தரசியுடன் அங்குள்ள அழகிய அரங்கத்தில் ஏறித் தனக்குரிய இருக்கையில் அமர்ந்தான். அந்தச் சமயத்தில் பறையூரிலிருந்து வந்த சாக்கையன் என்பவன் நடனமாடத் தொடங்கினான். மறையவனாகிய அவன் குலத்தினர் கூத்தாடுவதில் வல்லவர். கொடு கொட்டி என்ற கூத்தை அவன் ஆடிக் காட்டினான். அந்தக் கூத்து முன்பு சிவபெருமான் ஆடியது. அதனை மிகச் சிறந்த வகையில் கூத்தச் சாக்கையன் அபிநயம் பிடித்து ஆடினான். அரசியுடன் இருந்து அந்தக் கூத்தைக் கண்டு களித்த அரசன் அக்கூத்தனுக்குப் பரிசில் வழங்கி விடை கொடுத்தனுப்பினான்.
அப்பால், செங்குட்டுவன் அரசிருக்கை மண்டபத்தை அடைந்தான். கனகவிசயரைப் பாண்டியனுக்கும் சோழனுக்கும் காட்டிவிட்டு வரும்படி முன்பு அவன் அனுப்பியிருந்த பிரதானிகளும், மாடலனும் அப்போது அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் செங்குட்டுவனைத் தொழுது வாழ்த்தித் தாங்கள் சென்று வந்த செய்தியைச் சொல்லலானார்கள்.
“நாங்கள் முதலில் சோழ மன்னனுடைய புகார் நகரம் சென்றோம், சித்திர மண்டபத்தில் இருந்த வேந்தனை ஆரிய மன்னரோடு சென்று வணங்கினோம். அவன் வடநாட்டில் மன்னர் பிரான் செய்த போரை அறிந்து, ‘தோற்றவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுவருவது வெற்றியாகாது’ என்று தன் படைத்தலைவனிடம் சொன்னான். அதுகேட்டு மனம் வருந்தி, விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டோம். மதுரை மாநகரம் சென்று பாண்டிய மன்னனைக் கண்டோம். அவன், “தோற்று ஓடினவர்களின்மேல் சீற்றம் கொள்வது முறையன்று ; இது புதுமையாக இருக்கிறது.” என்றான். “இரண்டு மன்னர்களும் இந்த வெற்றிச் செயலைப் பாராட்டாமல் இருந்தது கிடக்கட்டும்; இழித்துக் கூறிவிட்டார்களே !” என்று சென்றவர்களில் தலைவனாகிய நீலன் கூறினான்.
செங்குட்டுவன் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கனகனும் விசயனும் பொதுவாகத் தமிழ் மன்னர் மூவரையுமே இகழ்ந்து பேசினார்கள். அவர்களை அடக்குவது இகழ்ச்சியைப் பெற்ற மூவருக்கும் உரிய கடமை. சேரமன்னன் தமிழ் மன்னர்களின் பிரதிநிதியாகச் சென்று போர்செய்து, இழித்துப் பேசியவர்களை வென்று சிறைப்பிடித்தான். இமயத்தில் கல் கொணர்வதற்காக அவன் போகவேண்டியது அவசியம் அன்று. இழித்துப்பேசிய மன்னர்களுக்கு அறிவூட்டவேண்டும் என்பதுதான் அவனுடைய தலைமையான நோக்கம். இப்படி இருக்க, இந்த அருமையை உணராமல் சோழ மன்னனும் பாண்டியனும் செங்குட்டுவன் செயலைத் தாழ்த்திப் பேசிவிட்டார்கள்.
இந்தச் செய்தியைக் கேட்ட செங்குட்டுவனுக்கு உள்ளம் கொதித்தது; சினம் பொங்கிவந்தது; கண்கள் சிவந்தன.
அப்போது அங்கே அமர்ந்திருந்த மாடலமறையோன் எழுந்திருந்தான்; “மாமன்னருக்கு ஒரு சிறு விண்ணப்பம் செய்துகொள்ள விழைகிறேன்” என்று நயமாகப் பேசினான்."என்ன அது? நன்றிகெட்ட அந்த இரண்டு மன்னர்களுக்கும் எப்படிப் புத்திபுகட்டுவது என்பதைச் சொல்லப் போகிறீர்களா? கனகவிசயர் இழித்துப் பேசியதற்காக இத்தனை தூரம் கடந்து போர் செய்யப் போனேனே! நம்மைச் சேர்ந்த இவர்களே நம் அருமை அறியாமல் இருக்கும்போது மற்றவர்களைச் சொல்வது என்ன முறை?” கோபத்தால் அவனுக்குச் சிரிப்பு உண்டாயிற்று.
"சற்றே சினம் ஆறி, நான் சொல்வதைச் செவியில் ஏற்கவேண்டும்” என்று மறுபடியும் மாடலன் மெல்லச் சொன்னான்.
செங்குட்டுவன் சற்று மெளனமாக இருந்தான்; பின்பு மாடலனை நோக்கி, “சொல்லுங்கள்” என்றான்.
“மன்னர்பிரானுடைய புகழ் வாழ்க! கொற்றம் வாழ்க! தாங்கள் பல போர் செய்து பகைவர்களை அழித்து வெற்றிபெற்றீர்கள். போன இடங்களிலெல்லாம் வெற்றியே அன்றித் தோல்வியே காணாதவர்கள் தாங்கள். தங்கள் வாழ்நாள் ஆற்றுமணலினும் பல மடங்காகப் பெருகட்டும்! நான் சொல்லும் சில வார்த்தைகளைப் புறக்கணிக்காமல் செவியில் ஏற்க வேண்டும். நான் பல நாடுகளும் சென்று பல பெரியோர்களோடு பழகியவன். உலகமெல்லாம் நன்றாக வாழவேண்டுமென்ற நோக்கம் உடையவன். இப்போது சொல்லப்போவது எல்லோருடைய நன்மையையும் மனத்திற் கொண்டுதான். முக்கியமாகத் தங்களுக்கும் இதனால் நன்மையே உண்டாகும்.”
“என்ன? சொல்லுங்கள். நான் உங்கள்மேற் கோபம் கொள்ளவில்லையே!”"யார்மேலானாலும் சரி, கோபம் கொள்ளாமல் சற்றே அமைதிபெற்றுக் கேட்கவேண்டும். இந்த நாட்டைக் காக்கும் பெரிய பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு ஐம்பது ஆண்டுகள் ஆயின. இது வரைக்கும் பல போர்க்களங்களைக் கண்டுவிட்டீர்கள். பலரை முதுகுகாட்டி ஓடச் செய்தீர்கள். போர்க் களத்தில் பகைவர் படையைக் கொன்று குவித்தீர்கள். வீரத்தைக் காட்டினீர்கள். ஈரத்தைக் காட்டி நல்ல காரியங்களைச் செய்யத் தங்களுக்கு ஒய்வு இல்லாமற் போயிற்று. இனிமேலாவது செய்ய வேண்டாமா?” என்று கூறிச் சற்றே நிறுத்தினான் மாடலன்.
“அரசகுலத்தில் பிறந்தவர்கள் வீரச்செயல்களைப் புரிந்து பகைவர்களை வெல்வது வழக்கந்தானே?” என்று செங்குட்டுவன் கேட்டான்.
“அது உண்மைதான். ஆனால் அதையன்றி வேறு காரியங்களும் அவர்கள் செய்வதுண்டு. நாம் எப்போதும் இப்படியே இருப்போம் என்று எண்ணுவது அறிவுடையோர்களுக்கு அழகுஅன்று. இதற்கு முன் தங்கள் மரபில் பல பெரிய வீரச் செயல்களைப் புரிந்த மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய திறலுடையவர்களாக இருந்தால் என்ன? எல்லாரும் மாய்ந்து ஒழிந்தனர்; ஒருவரேனும் இப்போது இல்லை. காரணம் என்ன? இந்த யாக்கை நிலையாதது. எப்போது பிறந்தோமோ, அப்போது இறப்பும் நிச்சயமாக நமக்கு உண்டு என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
“உடம்போடு வாழும்போது வளவாழுகிறோம். செல்வத்தை ஈட்டி வாழ்கிறோம். அந்தச் செல்வமாவது ஓரிடத்தில் நிலையாக நிற்கிறதா? வடவாரிய மன்னர்கள் நிறைந்த செல்வத்தோடுதான் வாழ்ந்தார்கள். இப்போது அவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்கள் செல்வம் நிலைக்கவில்லை. ஆகையால் செல்வமும் நில்லாதென்பதை உணர்ந்து கொள்வீர்களாக. இளமையும் நில்லாது என்பதை நான் தனியே எடுத்துச் சொல்லவேண்டுமா? தங்களுக்கே இப்போது இளமைபோய் நரை வந்துவிட்டதே!”
செங்குட்டுவன் பெருமூச்சுவிட்டான்; “நான் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்” என்றான்
“அதைத்தான் சொல்லவருகிறேன். இந்த உலகத்துப் பிறந்த உயிர்கள் இறந்தால் எல்லோரும் ஒரே விதமான கதியை அடைவதில்லை. அவரவர்கள் செய்யும் புண்ணிய பாவங்களுக்கு ஏற்றபடி வெவ்வேறு பிறவிகளை எடுப்பார்கள். மனிதப் பிறவியைப் பெற்றவர்கள் இனிமேல் தாழ்ந்த பிறவிகளைப் பெறமாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. தேவனாக இருந்தவன் மனிதனாகப் பிறக்கலாம். மனிதனாக இருந்தவன் விலங்காகப் பிறக்கலாம். நாடகத்தில் கோலம் புனையும் கூத்தர்கள் எப்படி மாறி மாறி வெவ்வேறு வேடத்தைப் போடுகிறார்களோ அப்படி இந்த உயிர் வெவ்வேறு பிறவியை எடுத்து வெவ்வேறு உடம்பை அடை கிறது. வினை செலுத்தும் வழியிலே உயிர் செல்லும். இவற்றையெல்லாம் தாங்கள் திருவுள்ளத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.”
செங்குட்டுவன் கண்ணில் இருந்த சிவப்பு மறைந்தது. மாடலன் வார்த்தைகள் மெல்ல அவ்ன் உள்ளத்தில் புகுந்து வேலை செய்யத் தொடங்கின. அவன் மாடலனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.
“எல்லோரும் உண்ணுகிறார்கள்; உறங்குகிறார்கள்; செத்துப்போகிறார்கள்; மறுபடியும் ஏதாவது ஒரு பிறவியை எடுக்கிறார்கள். அத்தகைய நிலை தங்களுக்கு வரக்கூடாதென்பது என் ஆவல். இனி, போர்க்களத்தில் வென்று வெற்றியைநிலைநாட்டும் கருத்தை மறந்து விட்டு அறநெறிக்குரிய வேள்விகளைச் செய்யவேண்டும். இராசசூய யாகம் செய்தல் நல்லது. அதை இப்போதே செய்யவேண்டும். நாளைக்குச் செய்யலாம் என்றால், நாம் எவ்வளவு நாள் உயிரோடு இருப்போம் என்ற உறுதி நமக்கு இல்லை. ஆகையால் தங்கள் வாழ்க்கைத் துணைவியாகிய அரசியாரோடு இருந்து பெருவேள்வி செய்து நீடுழி வாழவேண்டும்” என்று சொல்லித் தன் நல்லுரையை முடித்தான் மாடலன்.
அவனுடைய நயமான மொழிகள் செங்குட்டுவனுடைய உள்ளத்தில் மெல்ல மெல்லப் புகுந்தன. சேர அரசனும் அறிவுடையவனாதலால் அந்தணன் கூறியவை தனக்கு நலம் செய்வன என்பதை நன்கு உணர்ந்தான்.
பின்பு ஒரு நல்ல நாளில் வேள்விச் சாந்தி செய்வதற்கு ஏற்ற மறையவர்களையும் மற்றத் துணைவர்களையும் அழைத்துவரச் செய்தான். மாடலன் சொல்லிய முறையில் பெருவேள்வியை நடத்துவதற்கு ஆவன செய்யும்படி ஏவினான். சிறையில் வைத்திருந்த இரண்டு வடநாட்டரசர்களையும் பிறரையும் விடுதலை செய்து வஞ்சிமாநகர்ப்புறத்தில் தங்கியிருக்கச் செய்தான்.பெருவேள்வி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அடுத்தநாளே வடநாட்டு மன்னர்களை அவர்களுடைய ஊர்களுக்குப் போகும்படி அனுப்பினான். தன் அமைச்சனைக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வித்தான். “சிறைக் கோட்டங்களைத் திறந்து குற்றவாளிகளை விடுதலை செய்யுங்கள். வரிகளை வாங்காமல் விட்டுவிடுங்கள்” என்று ஏவினான்.
அப்பால் கண்ணகிக்குக் கோயில் கட்டுவிக்கத் தொடங்கினான். அதற்குரிய விதிகளை அறிந்த பெரியவர்களையும் கலைஞர்களையும் வருவித்தான். கோயிலை அழகாகச் சமைத்தான்.
கோயில் மிகச் சிறப்பான முறையில் கட்டி நிறைவேறியது. இனி அங்கே கண்ணகியின் படிமத்தை நிறுவிக் கடவுள் மங்கலம் செய்யவேண்டும். அதற்குரிய காரியங்களைக் குறைவறச் செய்யும்படி ஏவினான் மன்னன்.