சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/திரிமூர்த்தி கோயில்

46. திரிமூர்த்தி கோயில்

பாறைகளை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்த போது, மாமல்லரைப் பற்றியோ அவருக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றியோ சக்கரவர்த்தி ஒன்றும் பேசவில்லை. ஆயனரிடம் சிற்பக் கலையைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். இரண்டு பேரும் இந்த உலகத்தையே மறந்து பேசிக் கொண்டு போனார்கள்.

பாறைப் பிரதேசத்தை அடைந்த பிறகும் அப்படித்தான். இந்தப் பாறையை யானையாகச் செய்யலாம், இதைச் சிங்கமாகச் செய்யலாம். இதைத் தேராக அமைக்கலாம், இதை வஸந்த மண்டபமாக்கலாம் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஒரு பெரிய பாறையைக் குடைந்து கோயிலாக அமைப்பது என்றும் கோயில் வேலையையே முதன் முதலில் தொடங்கவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.

"இந்த ஒரே கோயிலில் மூன்று மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்யலாம், ஆயனரே! மூன்று கர்ப்பக் கிருஹங்களை அமைத்து விடுங்கள்!" என்றார் மகேந்திர பல்லவர்.

"சுவாமி, மூன்று மதத்தினருக்கும் தனித்தனியாக மூன்று கோயில்கள் அமைத்துவிட்டால் நல்லதல்லவா? சச்சரவுக்கு இடமில்லாமல் போகுமல்லவா?" என்று ஆயனர் கேட்டார்.

"மூன்று மதத்தினருக்கா? நான் அப்படிச் சொல்லவில்லையே? மும்மூர்த்திகள் என்று யாரைச் சொன்னதாக எண்ணினீர்கள்?"

"சிவபெருமான், புத்ததேவர், ரிஷபதேவர் இவர்களைத் தானே?"

"இல்லை, ஆயனரே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய திரிமூர்த்திகளைச் சொன்னேன்."

"அப்படியா?"

"ஆம், இன்னும் கொஞ்ச காலத்துக்குப் புத்தர், சமணர் என்று என்னிடம் சொல்லாதீர்! ஆயனரே! அவர்கள் விஷயத்தில் அப்படி என் மனம் கசந்து போயிருக்கிறது!"

"ஐயோ! அருள் நிறைந்த தங்கள் உள்ளம் கசந்து போகும்படி அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?"

"ஆஹா! சமணர்களுக்கும் புத்தர்களுக்கும் நான் எவ்வளவு கௌரவம் கொடுத்திருந்தேன்! அவர்களைத் திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்தேன்! ஒன்றும் பயன்படவில்லை. பாடலிபுரத்துச் சமணப் பள்ளியில் துர்விநீதன் ஒளிந்துகொள்ள அவர்கள் இடம் கொடுத்தார்கள். பல்லவ சைனியம் அந்தச் சமணப் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிப் பாதாள குகையில் ஒளிந்திருந்த துர்விநீதனைப் பிடிக்கவேண்டியிருந்தது. இப்போது அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், தெரியுமா? தேசமெல்லாம் போய்க் 'காஞ்சி மகேந்திர பல்லவன் சமணப் பள்ளியை இடித்துத் தள்ளினான்' என்ற பழியைப் பரப்பப் போகிறார்கள்! அது போகட்டும், ஆயனரே, எனக்கு அதிகமாகத் தாமதிக்க நேரமில்லை. போய் வருகிறேன். யுத்தம் முடிந்து நான் திரும்பி வந்து பார்க்கும்போது கோயில் வேலை முடிந்திருக்க வேண்டும். சத்ருக்னா! நம்முடைய தெப்பத்தை எங்கே விட்டுவிட்டு வந்தோம்! சீக்கிரம் போய்ப் பார்த்துக் கொண்டு வா!" என்று கூறிவிட்டு, "ஆயனரே! நீங்களும் கொஞ்சம் பார்க்கிறீர்களா? இந்த நதிக் கரையில் எங்கேயோ தெப்பத்தை விட்டிருக்கிறோம்? இரண்டு பேருமாய்ச் சென்று பார்த்தால் சீக்கிரம் கண்டுபிடிக்கலாம்!" என்றார்.

அவ்விதமே ஆயனரும் படைத் தலைவரும் தெப்பத்தைத் தேடிக்கொண்டு சென்றார்கள். இத்தனை நேரமும் சிவகாமி ஒரு பக்கத்தில் நின்று ரதியைத் தடவிக் கொடுத்துக் கொண்டும், மெல்லிய குரலில் ஏதோ ஒவ்வொரு வார்த்தை சொல்லிக் கொண்டும் இருந்தாள்.

ஆயனர், சத்ருக்னர் இருவரும் அங்கிருந்து சென்றதும், சக்கரவர்த்தி அவளருகில் வந்து, ஒரு பாறை மேல் உட்கார்ந்து கொண்டு, "சிவகாமி! உன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். சற்று இந்தப் பாறை மேல் உட்காருகிறாயா!" என்றார்.

ஏதோ சந்தோஷமற்ற விஷயந்தான் சக்கரவர்த்தி பேசப் போகிறார் என்று சிவகாமியின் உள்ளுணர்ச்சி கூறியது. எனவே, தலைகுனிந்தபடி நின்று கொண்டேயிருந்தாள்.

"சிவகாமி! சற்று தலை நிமிர்ந்து இதோ இந்தக் கத்தியைப் பார்!" என்றார் மகேந்திர பல்லவர். சிவகாமி பார்த்தாள்.

"சற்று முன்னால் இந்தக் கத்தியைப் பற்றி ஒரு விஷயம் சொன்னேனே, அது ஞாபகம் இருக்கிறதா சிவகாமி!"

"இருக்கிறது, பிரபு!" என்று சிவகாமியின் உதடுகள் முணு முணுத்தன.

அந்தக் கத்தியானது மாமல்லரின் முதுகிலே பாய்வதற்கு இருந்தது என்ற எண்ணம் அவளைத் துன்புறுத்தியது.

"நான் சொன்னது பொய், சிவகாமி!"

சிவகாமிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளுடைய உள்ளம் குழம்பிற்று. அந்தக் குழப்பத்தில் ஆறுதலும் மகிழ்ச்சியும் ஒருவகை ஏமாற்றமும் கலந்திருந்தன. சக்கரவர்த்தி முதலில் எதற்காக அம்மாதிரி பொய்யைச் சொன்னார். இப்போது எதற்காகத் தாம் பொய் சொன்னதாக ஒப்புக்கொள்கிறார் என்பதொன்றும் புரியாமல் சிவகாமி திகைத்தாள்.

"ஆம்! சிவகாமி! உனக்குத் திகைப்பாகத்தான் இருக்கும். உண்மை விவரத்தை உன் தந்தையிடம் சொல்வதற்குக்கூட நான் இஷ்டப்படவில்லை. அதற்காகத்தான் அவரைத் தெப்பத்தைத் தேடுவதற்கென்று அனுப்பினேன். ஆனால், உண்மையான விவரம் உனக்கு மட்டும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்..."

சிவகாமியின் மனக்குழப்பம் இன்னும் அதிகமாயிற்று. என்ன உண்மையைச் சொல்லப்போகிறார்? அது எதற்காகத் தனக்கு மட்டும் தெரிந்திருக்கவேண்டும் என்கிறார்!

"சிவகாமி! எஃகிலேயே நஞ்சைக் கலந்து செய்த இந்தக் கத்தி, என் ஒரே மகன், மாமல்லனுடைய முதுகிலே பாய்வதற்கு இருந்தது. இந்த அபாயம் யாரால் ஏற்பட்டது தெரியுமா?"

"பிரபு! அது பொய் என்று சொன்னீர்களே!" என்று சிவகாமி நாக்குழறக் கேட்டாள்.

"எது பொய் என்றேன்? மாமல்லன் முதுகில் கத்தி பாய்வதற்கு இருந்தது பொய் இல்லை, சிவகாமி! பல்லவ சாம்ராஜ்யத்துக்கு அந்தப் பெரும் விபத்து நிச்சயமாக வருவதற்கிருந்தது. அந்த விபத்து உன்னால் தடைப்பட்டது என்றேனே, அதுதான் பொய்! சிவகாமி! நீ கேவலம் சாதாரணப் பெண்களைப் போன்ற கோழை அல்ல! நெஞ்சுத்துணிவு உள்ளவள் ஆகையால்தான் உன்னிடம் உண்மையைச் சொல்லுகிறேன். மாமல்ல பல்லவன் நேற்று இந்த மண்டப்பட்டுக் கிராமத்திலே இந்த விஷக் கத்தியினால் பின்னாலிருந்து குத்தப்பட்டுச் செத்துப்போயிருக்கவேண்டும். இந்தப் பாறையடியில் இந்த மகிழ மரத்தினடியிலேயே அவனுடைய உடல் அனாதைப் பிரேதமாக விழுந்து கிடந்திருக்க வேண்டும். அவ்விதம் நேராமல், அன்றொரு நாள் ஆலகால விஷத்தை உண்டு சகல உலகங்களையும் காத்த பரமசிவன்தான் நேற்றைக்கு மாமல்லனையும் பல்லவ குலத்தையும் காத்து அருளினார்..."

நேற்று மாலை அதே பாறையடியில் மாமல்லர் உட்கார்ந்து தன் செவிகளில் இணையற்ற காதல் மொழிகளைப் பொழிந்து கொண்டிருந்தார் என்பதைச் சிவகாமி நினைவு கூர்ந்தபோது, அவளுடைய தலை சுழல்வதற்கு ஆரம்பித்தது.

"சிவகாமி, கேள்! வாழையடி வாழையாக வந்த பல்லவ குலத்தில் மாமல்லனைப் போன்ற ஒரு வீர மகன் இதுவரையில் தோன்றியதில்லை. இந்தப் பரந்த பல்லவ சாம்ராஜ்யம் இன்றைக்கு மாமல்லனை நம்பியிருப்பதுபோல் யாரையும் நம்பியிருந்ததும் இல்லை. அப்படிப்பட்டவன் நேற்றைக்கு இந்தப் பாறையடியில் வஞ்சகமாக நஞ்சு தோய்ந்த கத்தியினால் பின்னாலிருந்து குத்தப்பட்டுச் செத்து விழுந்திருப்பான். தவம் செய்து பெற்ற என் ஏக புதல்வனை நான் இழந்துவிட்டிருப்பேன். பல்லவ சாம்ராஜ்யமே நாதியற்ற இராஜ்யமாகப் போயிருக்கும். கவிகளிலும் காவியங்களிலும் புகழ் பெற்ற காஞ்சி சுந்தரி, வைதவ்யம் அடைந்திருப்பாள். இந்த விபத்துக்கள் எல்லாம் நேர்வதற்குக் காரணமாயிருந்தது யார் தெரியுமா?..." என்று சக்கரவர்த்தி நிறுத்தி ஒரு பெருமூச்சுவிட்டார். பிறகு கூறினார்: "நான் என் பிராணனுக்கு மேலாகக் கருதி யாரிடம் விசுவாசம் வைத்திருக்கிறேனோ, அந்த ஆயன மகா சிற்பியின் அருமை மகள் சிவகாமிதான்!"

இதைக் கேட்டவுடனே சிவகாமியின் உச்சந்தலையில் பளீரென ஒரு மின்னல் பாய்ந்தது. அந்த மின்னலிலிருந்து ஆயிரம் ஆயிரம் ஒளிக் கிரணங்கள் கிளம்பி நாற்புறமும் பாய்ந்தன!