சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/குளக்கரைப் பேச்சு
தை மாதத்தின் பிற்பகுதியில் ஒருநாள் காலை நேரத்தில் வானம் மப்பும் மந்தாரமுமாயிருந்தது. அந்த வருஷம் ஐப்பசி, கார்த்திகையில் நல்ல மழை பெய்திருந்தபடியால், தாமரைக் குளம் நிரம்பிக் கரையைத் தொட்டுக் கொண்டு தண்ணீர் ததும்பிற்று. காலைச் சூரியனை மேகங்கள் மூடியிருந்த போதிலும் குளத்தில் செந்தாமரைப் புஷ்பங்கள் நன்றாக மலர்ந்து இனிய நறுமணத்தை நானா திசைகளிலும் பரப்பிக் கொண்டிருந்தன. இறகுகளில் சிவப்பு வரியுடன் கூடிய நீல நிற வண்டுகள், மலர்ந்த செந்தாமரைப் பூக்களை வலம் வந்து இசைபாடி மகிழ்ந்தன. பளிங்கு போலத் தெளிந்திருந்த தடாகத்தின் தண்ணீரில் பெரிய பெரிய கயல் மீன்கள் மந்தை மந்தையாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன.
பச்சைப் பசுங் குடைகளைப் போலத் தண்ணீரிலிருந்து கம்பீரமாக எழுந்து தலை நிமிர்ந்து நின்ற தாமரை இலைகளில் முத்து நீர்த் துளிகள் அங்குமிங்கும் தவழ்ந்து விளையாடின. தாமரைக் குளதைச் சுற்றிலும் வானோங்கி வளர்ந்திருந்த விருட்சங்கள் கப்பும் கிளைகளும், இலைகளும், தளிர்களுமாய்த் தழைத்துப் படர்ந்து சில இடங்களில் குளத்தின் தண்ணீர் மீது கவிந்து கரு நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. பச்சைக் கிளிகளும் பல வர்ணக் குருவிகளும் இன்னிசைக் குயில்களும் இனிய கீதம் பாடும் மைனாக்களும் குளிர்ந்த தழைகளுக்கிடையில் உட்கார்ந்து இளந்தளிர்களைக் கோதிக் கொண்டும் மலர்களின் மகரந்தங்களை உதிர்த்துக் கொண்டும் ஆனந்தமாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டும் வசந்த காலத்துக்கு வரவேற்புக் கூறிக் கொண்டிருந்தன.
இவ்விதம் இயற்கைத் தேவி பூர்ண எழிலுடன் கொலுவீற்றிருந்த இடத்தில், ஜீவராசிகள் எல்லாம் ஆனந்தத் திருவிழாக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், மானிட ஜன்மம் எடுத்த அபலைப் பெண் ஒருத்தி மட்டும் அந்தக் குளக்கரையில் சோகமே உருக்கொண்டது போல் உட்கார்ந்திருந்தாள். அவள் ஆயனச் சிற்பியாரின் செல்வத்திருமகளும், வீராதி வீரரான மாமல்ல சக்கரவர்த்தியின் உள்ளம் கவர்ந்த காதலியும் நடனக் கலைத் தெய்வத்தின் பரிபூரண அருள் பெற்ற கலைராணியுமான சிவகாமி தேவிதான். அந்தத் தாமரைக் குளத்தின் காட்சியானது சிவகாமிக்கு எத்தனை எத்தனையோ பூர்வ ஞாபகங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது.
அந்தத் தடாகக் கரை ஓரத்தில் பத்து வருஷங்களுக்கு முன்னால் அவள் இதே மாதிரி எவ்வளவோ தடவை உட்கார்ந்து தெளிந்த தண்ணீரில் பிரதிபலித்த தன் அழகிய உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். சென்ற பத்து வருஷ காலத்தில் அவளுடைய உருவத் தோற்றத்தில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால், அவளுடைய உள்ளம் அந்தப் பத்து வருஷத்திலே எவ்வளவு மாறுதல் அடைந்து விட்டது! அழகிய தாமரை மலரையும் அதைச் சுற்றி வரும் நீலநிற வண்டுகளையும் பார்க்கும் போது முன்னாளில் அவள் உள்ளம் அடைந்த குதூகலம் இப்போது ஏன் அடையவில்லை?
தண்ணீரிலே பிரதிபலித்த அவளுடைய பொன் மேனியின் சௌந்தரியத்தையும் ஆடை ஆபரண அலங்காரத்தையும் பார்த்த போது அவள் அடைந்த பெருமிதமும் இன்பமும் இப்போது எங்கே போய் விட்டன? அந்தக் காலத்தில் அதே தாமரைக் குளக்கரையில் தன்னந்தனியாக உட்கார்ந்து மனோராஜ்யம் செய்து கொண்டிருப்பதில் சிவகாமி எவ்வளவோ இன்பத்தை அனுபவித்தாள். தனிமையிலே அவள் கண்ட அந்த இனிமை இப்போது எங்கே? சிவகாமிக்குச் சில சமயம் தனது சென்ற கால வாழ்க்கையெல்லாம் ஒரு நெடிய இந்திரஜாலக் கனவு போலத் தோன்றியது. தான் அத்தாமரைக் குளக்கரையில் உட்கார்ந்திருப்பதும் தன்னைச் சுற்றிலும் காணப்படும் அழகிய இயற்கைக் காட்சிகளும் உண்மைதானா அல்லது வாதாபி நகரத்துச் சிறை வீட்டில் உட்கார்ந்தபடி காணும் பகற்கனவா என்று அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டது.
இவ்விதம் நெடுநேரம் ஏதோ உருவமில்லாத சிந்தனைகளில் சிவகாமி ஆழ்ந்திருந்தாள். வானத்தை மூடியிருந்த மேகப் படலங்கள் சிறிது விலகி சூரியன் வெளித் தோன்றி அவள் மீது சுளீர் என்று வெயில் உறைத்த பிறகு எழுந்திருந்தாள். ஆயனரின் அரண்யச் சிற்ப வீட்டை நோக்கி நடந்தாள். குதிரைக் குளம்படியின் சப்தம் திடீரென்று கேட்டதும், அந்த அடி ஒவ்வொன்றும் தன் நெஞ்சின் மேல் படுவது போன்ற வேதனை அவளுக்கு உண்டாயிற்று. அந்தக் குளக்கரையைத் தேடி அவளுடைய காதலர் மாமல்லர் குதிரை மீது எத்தனையோ தடவை வந்திருப்பது சிவகாமிக்கு நினைவு வந்தது. இப்போது வருவது யார்? ஒருவேளை அவர்தானா? - ஆஹா! அவரை எப்படிச் சந்திப்பது? அவருடைய தீக்ஷண்யமான பார்வையை - 'அடி பாதகி! உன்னால் என்னென்ன வினைகள் எல்லாம் வந்தன? என்று குற்றம் சாட்டும் கண்களை எப்படித்தான் ஏறிட்டுப் பார்ப்பது?
ஒரு குதிரையல்ல - இரண்டு குதிரைகள் வருகின்றன. இரண்டு குதிரைகள் மீதும் இரண்டு பேர் வீற்றிருக்கிறார்கள். தனியாக அவரைச் சந்திப்பதே முடியாத காரியம் என்றால், இன்னொருவரின் முன்னால் அவரைப் பார்ப்பது பற்றிக் கேட்க வேண்டியதில்லை. குளக்கரையின் சமீபத்தில் அடர்த்தியாக மண்டி வளர்ந்திருந்த புதர் ஒன்றின் பின்னால் சிவகாமி மறைந்து கொண்டாள். குதிரைகள் இரண்டும் சமீபத்தில் வந்தன. முன்னால் வரும் குதிரையின் மீது மாமல்லர்த்தான் வந்தார். அம்மா! அவர் முகத்திலேதான் இப்போது என்ன கடூரம்? அன்பு கனிந்து ஆர்வம் ததும்பிக் கள்ளங்கபடமற்ற உள்ளத்தைக் காட்டிய பால்வடியும் முகத்துக்கும் இந்தக் கடுகடுத்த முகத்துக்கும் எத்தனை வித்தியாசம்? அவருக்குப் பின்னால் மற்றொரு குதிரையின் மேல் வந்தவர் பரஞ்சோதியாகத்தானிருக்க வேண்டுமென்று எண்ணிச் சிவகாமி பார்த்தாள். இல்லை; பரஞ்சோதி இல்லை! அந்த மனிதரை இதுவரையில் சிவகாமி பார்த்தது கிடையாது. ஆ! பத்து வருஷத்துக்குள் எத்தனையோ புதுச் சிநேகிதம் அவருக்கு ஏற்பட்டிருக்கும்!
குதிரைகள் இரண்டும் குளக்கரையில் வந்து நின்றன; இருவரும் இறங்கினார்கள். அந்தப் பழைய விருட்சத்தின் அடியில் மாமல்லரின் கவிதையழகு வாய்ந்த காதல் ஓலைகளை எந்த மரத்தின் பொந்திலே தான் ஒளித்து வைத்திருப்பது வழக்கமோ, அதே மரத்தினடியில் இருவரும் நின்றார்கள். மாமல்லரின் பேச்சு அவள் காதிலே விழுந்தது. ஆம்! தன்னைப் பற்றித்தான் அவர் பேசுகிறார். மாமல்லரின் குரலில் பின்வரும் வார்த்தைகள் வருவதைச் சிவகாமி கேட்டாள். "ஒரு காலத்தில் இந்தத் தாமரைக் குளத்தைப் பார்க்கும் போது எனக்கு எத்தனை குதூகலமாயிருந்தது! எத்தனை தடவை இந்தக் குளத்தைத் தேடி ஆர்வத்துடன் ஓடி வந்திருக்கிறேன்? என் அருமைத் தந்தையிடம் கூட என் உள்ளத்தை ஒளித்து இங்கே கள்ளத்தனமாக எத்தனை முறை வந்திருக்கிறேன்? இதன் அருகில் வரும் போது, சிவகாமி இங்கே இருப்பாளோ, மாட்டாளோ என்ற எண்ணத்தினால் எப்படி என் நெஞ்சம் துடித்துக் கொண்டிருக்கும்? அவள் இந்த மரத்தடியில் உள்ள பலகையில் தங்க விக்ரகத்தைப் போல் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் எப்படி என் உள்ளம் மகிழ்ச்சி ததும்பித் துள்ளிக் குதிக்கும்? அப்படிப்பட்ட சிவகாமியை இன்று ஏறிட்டுப் பார்க்கவே என் மனம் துணியவில்லை. வீட்டின் வாசல் வரைக்கும் வந்து விட்டு, உள்ளே போகத் தயங்கி ஒதுங்கி வந்து விட்டேன். இந்தத் தாமரைக் குளம் அந்தக் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் அதிக வனப்புடனேதான் இன்று விளங்குகிறது. ஆயினும் இதைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை - மானவன்மரே! இதோ இந்த மரத்தடிப் பலகையைப் பாருங்கள்! இந்தப் பலகையின் மேல் நாங்கள் கை கோர்த்துக் கொண்டு உட்கார்ந்து எத்தனையோ நாள் சொர்க்க இன்பத்தை அனுபவித்திருக்கிறோம். அந்தப் பலகை இன்று எப்படி வெயிலிலே உலர்ந்து மழையிலே நனைந்து துண்டு துண்டாய்ப் பிளந்து கிடக்கிறது! இளவரசே! என்னுடைய சிதைந்து போன வாழ்க்கைக்கு இந்தப் பலகையே சரியான சின்னமாக விளங்குகிறது...."
மானவன்மர் என்று அழைக்கப்பட்ட மனிதர் ஏதோ சொன்னார். அது சிவகாமியின் காதில் விழவில்லை. மாமல்லர் அவருக்குக் கூறிய மறுமொழி மட்டும் கேட்டது. "ஆ! மானவன்மரே! என்னால் அது நினைக்கவும் முடியாத காரியம். செடியிலிருந்து கீழே உதிர்ந்த பூ உதிர்ந்து போனது தான். மறுபடியும் அதைச் செடியிலே பொருத்த முடியுமா? என்னுடைய தந்தை மகேந்திர பல்லவர் ஒரு சமயம் கூறியது எனக்கு நினைவு வருகிறது. 'சிவகாமியும் அவளுடைய அற்புதக் கலையும் கடவுளுக்கு அர்ப்பணம் ஆக வேண்டியவை. கேவலம் மனிதர்களுக்கு உரியவை அல்ல' என்று அவர் கூறினார். மகேந்திர பல்லவரின் வாக்கு ஒருபோதும் வீண்போவதில்லை!" இவ்விதம் சொல்லிக் கொண்டே மாமல்லர் தம் சிநேகிதருடன் மெல்ல நடந்து தாமரைத் தடாகத்தின் நீர்க்கரை ஓரம் வரையில் இறங்கிச் சென்றார். இருவரும் சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து தத்தம் குதிரைகளின் மீது ஏறிச் சென்றார்கள்.
சிவகாமி தன்னுடைய வீட்டை நோக்கிக் காட்டு வழியே சென்ற போது அவளுடைய உள்ளத்தில் பெரும் கிளர்ச்சி குடிகொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சியில் இன்பமும் வேதனையும் சமமாகக் கலந்திருந்தன. மாமல்லர் தன்னை மறந்து போய் விடவில்லையென்பதையும் தன்னிடம் அவரது அன்பு குறைந்து விடவில்லையென்பதையும் அவளுடைய உள்ளம் நன்கு தெரிந்து கொண்டிருந்தது. ஆயினும் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு பெரிய தடை, - கடக்க முடியாத அகாதமான பள்ளம் இருப்பதாகவும் அவளுடைய உள்ளுணர்ச்சி கூறியது. அந்தத் தடை எத்தகையது, அந்தப் பள்ளம் எப்படி ஏற்பட்டது என்பதை அவள் எவ்வளவு யோசித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. எப்படியும் மாமல்லரைக் கூடிய சீக்கிரத்தில் ஒருநாள் பார்க்க வேணும். பார்த்துத் தனது உள்ளம் அவர் விஷயத்தில் முன்போலவேதான் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேணும் என்று தீர்மானித்துக் கொண்டாள். என்றென்றைக்கும் தான் அவருடைய அடியாள், அவர் நிராகரித்துத் தள்ளினாலும் அகன்று போக முடியாதவள் என்று உறுதி கூற எண்ணினாள்.
அன்று மத்தியானம் சிவகாமி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஆயனர், தயங்கித் தயங்கி அவளுடன் பேச்சுக் கொடுக்க முயன்றார். "குழந்தாய்! எனக்கென்னவோ இப்போது இந்த நடுக் காட்டிலே வசிப்பது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. காஞ்சியில் நமக்கு ஒரு வீடு இருக்கிறதல்லவா! அங்கேயே போய் விடலாம் என்று பார்க்கிறேன்; உன்னுடைய விருப்பம் என்ன?" என்று கேட்டார். "அப்பா! அதிசயமாயிருக்கிறதே? என் மனத்தில் இருப்பதையே நீங்களும் சொல்லுகிறீர்கள். எனக்கும் இந்தக் காட்டில் தனியாயிருக்க இப்போது அவ்வளவு பிரியமாயில்லை. நாலு பேரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்றிருக்கிறது. காஞ்சிக்குப் போனால் கமலி அக்காளுடனாவது பேசிப் பொழுது போக்கலாம்; நாளைக்குப் புறப்படலாமா, அப்பா?" என்றாள் சிவகாமி.
"நாளைக்குப் புறப்படலாம் என்று எண்ணித்தான் நானும் பல்லக்கு அனுப்பி வைக்கும்படி சொல்லியிருக்கிறேன். நாளைய தினம் காஞ்சி நகரில் பெரிய கோலாகலமாயிருக்கும்." "நாளைக்குக் காஞ்சி நகரில் என்ன விசேஷம், அப்பா?" என்று சிவகாமி கேட்டாள். "நாளைக்குச் சக்கரவர்த்தியின் பட்டணப் பிரவேச ஊர்வலம் நடக்கப் போகிறதாம்! சளுக்கர்களை முறியடித்து உலகம் காணாத மகத்தான வெற்றியுடன் மாமல்லர் திரும்பி வந்திருக்கிறார் அல்லவா?" "சக்கரவர்த்தி திரும்பி வந்து விட்டாரா?" என்று சிவகாமி கேட்ட போது, அவளுடைய வாழ்க்கையில் கடைசி முறையாகக் கபட வார்த்தையைக் கூறினாள்.
"ஆம் குழந்தாய்! முந்தா நாள் பல்லவ சைனியம் வந்து சேர்ந்தது; சக்கரவர்த்தியும் வந்து விட்டார். எல்லாரும் வடக்குக் கோட்டை வாசலுக்கு அருகில் தண்டு இறங்கியிருக்கிறார்களாம். பட்டணப் பிரவேசத்துக்கு நாளைய தினம் நல்ல நாள் குறிப்பிட்டிருக்கிறார்களாம்... ஒரு விஷயம் கேட்டாயா, சிவகாமி! எனக்கு வயதாகி விட்டதோடு, அறிவும் தளர்ந்து வருகிறது என்று தோன்றுகிறது. இல்லாத பிரமைகள் எல்லாம் ஏற்படுகின்றன. இன்று காலை ஏதோ குதிரை வரும் சப்தம் கேட்டது போலிருந்தது. சக்கரவர்த்திதான் அந்த நாளிலே வந்ததைப் போல் இந்த ஏழைச் சிற்பியின் வீட்டைத் தேடி வருகிறாரோ என்று நினைத்தேன். வாசலில் வந்து பார்த்தால் ஒருவரையும் காணவில்லை." சிவகாமியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. சக்கரவர்த்தி வந்தது உண்மைதான் என்பதைச் சொல்லலாமா என்று நினைத்தாள் அதற்குத் தைரியம் வரவில்லை.
சிவகாமி கண்களில் கண்ணீரைப் பார்த்த ஆயனர் சற்று நேரம் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தார். பிறகு சிவகாமியை நோக்கி கனிவு மிகுந்த குரலில், "அம்மா, குழந்தாய்! உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றிருக்கிறேன்" என்றார். "என்ன அப்பா, அது? சொல்லுங்களேன்!" என்றாள் சிவகாமி. "உலகத்திலே உள்ள எல்லாப் பெண்களையும் போல நீயும் யாராவது ஒரு நல்ல கணவனை மணந்து கொண்டு சந்தான பாக்கியத்தை அடைய வேண்டும். குழந்தாய்! இந்த வயதான காலத்தில் இத்தனை நாள் இல்லாத ஆசை எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாட வேண்டுமென்று விருப்பமாயிருக்கிறது..."
"அப்பா! நான் ஒருத்தி பெண் பிறந்து உங்கள் எல்லோருக்கும் கொடுத்த துன்பம் போதாதா, இன்னும் வேறு வேண்டுமா?" என்று நெஞ்சைப் பிளக்கும் குரலில் சிவகாமி கூறினாள். "சிவகாமி, இதென்ன வார்த்தை? நீ யாருக்கு என்ன துன்பம் செய்தாய், அம்மா?" என்றார் ஆயனர். "தங்களுடைய கால் ஊனமடைவதற்கு நான் காரணமாயிருந்தேன். கமலி அக்கா கணவனை இழப்பதற்குக் காரணமானேன்..." "விதியின் விளைவுக்கு நீ என்ன செய்வாய், சிவகாமி! கண்ணபிரான் தலையில் அவ்விதம் எழுதியிருந்தது. அவன் அகால மரணம் அடைந்தாலும், அவனுடைய குலம் விளங்குவதற்குச் சின்னக் கண்ணன் இருக்கிறான். என்னுடைய குலமும் அந்த மாதிரி விளங்க வேண்டாமா? உன்னைத் தவிர எனக்கு வேறு யார்?" "அப்பா! இராஜ குலத்தில் பிறந்தவர்கள் தங்களுக்குப் பிறகு சிம்மாசனம் ஏறவும் அரசாட்சி செய்யவும் சந்ததி வேண்டுமென்று கவலைப்பட வேண்டும். நம்மைப் போன்ற ஏழை எளியவர்களுக்குச் சந்ததியைப் பற்றி என்ன கவலை?" என்றாள் சிவகாமி.