சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/சீன யாத்திரீகர்
வாதாபி நகரத்தின் வீதிகளில் தன்னை நடனம் ஆடச் சொன்னதனால் ஏற்பட்ட அவமான உணர்ச்சியின் வேகம் நாளாக ஆகச் சிவகாமியின் உள்ளத்தில் குறைந்து மங்கி வந்தது. தமிழகத்திலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர் எல்லாரும் அவரவருக்கு ஏற்ற ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டுக் குடியும் குடித்தனமுமாய் வாழத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர் சில சமயம் சிவகாமியைப் பார்க்க வருவதுண்டு. அப்படி வருகிறவர்களுடைய மனத்திலே கோபமோ, வன்மமோ ஒன்றுமில்லையென்பதைச் சிவகாமி கண்டாள். இதையெல்லாம் எண்ணிப் பார்த்த போது, தான் ஆத்திரப்பட்டுச் சபதம் செய்ததன் அறியாமையையும், மாமல்லருடன் போகாமல் அவரைத் திருப்பியடித்ததன் மௌடீகமும் அவளுக்கு மேலும் மேலும் நன்கு புலனாயின.
ஆயினும் பெண்களின் இயல்புக்கு ஒத்தபடி தான் செய்த தவறுக்கும் மாமல்லர் மீதே சிவகாமி பழியைப் போட்டாள். 'என்ன இருந்தாலும் நான் அறியாப் பெண் தானே! ஏதோ அவமானத்தினாலும் ஆத்திரத்தினாலும் தூண்டப்பட்டு இந்த மாதிரி சபதம் செய்தேன். ஆண் பிள்ளையும் அறிவாளியுமான அவரல்லவா என்னைப் பலவந்தப்படுத்திப் பிடிவாதமாக அழைத்துப் போயிருக்க வேண்டும்? சேனாதிபதி பரஞ்சோதி சொன்னாரே, அந்தப்படி ஏன் அவர் செய்திருக்கக் கூடாது?' என்று அடிக்கடி எண்ணமிட்டாள்.
வருஷங்கள் செல்லச் செல்ல, மாமல்லர் மறுபடியும் வந்து தன்னுடைய சபதத்தை நிறைவேற்றித் தன்னை அழைத்துப் போவார் என்ற நம்பிக்கை சிவகாமிக்குக் குறைந்து கொண்டே வந்தது. அது எவ்வளவு பிரம்மப் பிரயத்தனமான காரியம், எவ்வளவு அசாத்தியமான விஷயம் என்பதையும் உணரலானாள். 'நான் செய்த சபதம் பிசகானது, அறியாமையினால் அத்தகைய அசாத்தியமான காரியத்தைச் சொல்லி விட்டேன். அதைத் தாங்கள் பொருட்படுத்த வேண்டாம். என்னை எப்படியாவது திரும்ப அழைத்துக் கொண்டு போனால் போதும்!' என்று மாமல்லருக்குச் செய்தி சொல்லி அனுப்பலாமா என்பதாகச் சில சமயம் அவளுக்குத் தோன்றியது. ஆனால், அந்த யோசனையைக் காரியத்தில் அவள் நிறைவேற்றாதபடி நாகநந்தியின் ஏளன வார்த்தைகள் செய்து வந்தன.
சிவகாமி கத்தியை வீசி எறிந்து நாகநந்தியை முதுகில் காயப்படுத்தியபோது, அந்த நயவஞ்சக வேஷதாரி, 'அடடா! என்ன காரியம் செய்தாய்? உன்னை அவர்களோடு கூட்டி அனுப்பவல்லவா எண்ணினேன்?' என்று சொல்லியது நேயர்களுக்கு நினைவிருக்கலாம். அதனால் சிவகாமிக்கு நாகநந்தியின் மீதிருந்த கோபமெல்லாம் மாறித் தன் செயலைப் பற்றிப் பச்சாத்தாபமும் பிக்ஷுவின் மீது ஓரளவு அனுதாபமும் உண்டாயின. நாகநந்தி தம்முடைய பாசாங்கு உத்தேசித்த பலனை அளித்து விட்டது குறித்து மனத்திற்குள் மகிழ்ந்தார். சிவகாமிக்குத் தம்மிடம் ஏற்பட்ட அனுதாபத்தைப் பூரணமாகப் பயன்படுத்திக் கொண்டார். சில நாளைக்கெல்லாம் சிவகாமியைத் தாமே அழைத்துக் கொண்டு போய்க் காஞ்சியில் விட்டு விடுவதாக நாகநந்தி சொன்னார். சிவகாமி அதை மறுதலித்ததுடன் தான் செய்த சபதத்தையும் அவருக்குத் தெரியப்படுத்தினாள். அதைக் கேட்ட நாகநந்தி ஏளனப் புன்னகை புரிந்து, "இப்படி ஒருநாளும் நடைபெற முடியாத சபதத்தை யாராவது செய்வார்களா!" என்று கேட்டார். "நிறைவேறுகிறதா, இல்லையா என்று பார்த்துக் கொண்டிருங்கள்!" என்று சிவகாமி வீறாப்பாய்ப் பேசினாள்.
அறிமுகமானவர்கள் யாருமே இல்லாத அந்தத் தூர தேசத்து நகரில், தானாக ஏற்படுத்திக் கொண்ட சிறையில் இருந்த சிவகாமிக்கு நாகநந்தியடிகளோடு அவ்வப்போது சம்பாஷிப்பது பெரிதும் ஆறுதல் தருவதாயிருந்தது. தேசமெல்லாம் பிரயாணம் செய்தவரும், பல கலைகள் அறிந்தவருமான பிக்ஷுவுடன் பேசுவது உற்சாகமான பொழுதுபோக்காயும் இருந்து வந்தது. "காஞ்சிக்குத் திரும்பிப் போக உனக்கு இஷ்டமில்லாவிட்டால், வேண்டாம். அஜந்தாவுக்கு அழைத்துப் போகிறேன், வா! எந்த வர்ண இரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக உன்னுடைய தந்தை துடிதுடித்தாரோ, அதை நீயே நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்!" என்று நாகநந்தி சில சமயம் ஆசை காட்டினார். அதற்கும் சிவகாமி, "என் சபதம் நிறைவேறாமல் இந்த நகரை விட்டு நான் கிளம்பேன்!" என்றே மறுமொழி சொல்லி வந்தாள்.
மூன்று வருஷத்துக்கு முன்னால் பல்லவ சைனியம் வாதாபியின் மேல் படையெடுத்து வரப் போகிறது என்ற வதந்தி உலாவிய போது சிவகாமி எக்களிப்படைந்தாள். அது பொய்யாய்ப் போனதோடு, நாகநந்தி அதைக் குறித்து மீண்டும் அவளை ஏளனம் செய்தது அவள் மனத்தைப் பெரிதும் புண்படுத்தியது. ஆயினும், தன் மனநிலையை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "பொறுத்திருங்கள்! அடிகளே, பொறுத்திருங்கள்! இந்த வருஷம் இல்லாவிட்டால், அடுத்த வருஷம்! கொஞ்சம் பொறுத்திருங்கள்!" என்று சொல்லி மாமல்லரின் கௌரவத்தை நிலைநாட்ட முயன்றாள். அவ்விதம் கர்வமாகப் பேசி இப்போது வருஷம் மூன்று ஆகி விட்டது. சிவகாமி வாதாபிக்கு வந்து ஒன்பது வருஷம் பூர்த்தியாகி விட்டது. இனியும் நம்பிக்கை வைப்பதில் ஏதேனும் பயன் உண்டா? நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இன்னும் எத்தனை காலம் இந்தத் துயர வாழ்க்கையைச் சுமந்திருப்பது? போதும், போதும்! ஒன்பது வருஷம் காத்திருந்தது போதும். வீட்டு முற்றத்தில், பவளமல்லி மரத்தின் பக்கத்திலே இருந்த கிணறு தன் வாயை அகலமாக விரித்து, 'வா! வா! என்னிடம் அடைக்கலம் புகுவதற்கு வா!' என்று சிவகாமியை அழைத்துக் கொண்டிருந்தது.
இத்தகைய நிலைமையில்தான் ஒரு நாள் நாகநந்தியடிகள் சீன யாத்திரீகர் ஒருவரை அழைத்துக் கொண்டு சிவகாமியைப் பார்க்க வந்தார். ஹியூன் சங் என்னும் அந்தச் சீனர் உலகில் பல தேசங்களையும் பல இராஜ்யங்களையும் பார்த்து விட்டு வந்தவர். பல கலைகளைக் கற்றுப் பாண்டித்யம் பெற்றவர். அந்தக் காலத்தில் பரத கண்டத்தில் புகழ்பெற்று விளங்கிய மூன்று சாம்ராஜ்யங்களில் ஹர்ஷ சாம்ராஜ்யத்தைப் பார்த்து விட்டு, அடுத்தபடி வாதாபிக்கு அவர் வந்திருந்தார். சளுக்க சாம்ராஜ்யத்தில் அஜந்தா முதலிய இடங்களையும் வேங்கி நாட்டில் நாகார்ஜுன பர்வதத்தையும் பார்த்து விட்டு, அவர் பல்லவ ராஜ்யத்துக்குப் போக எண்ணியிருந்தார். இதையறிந்த நாகநந்தி, 'இங்கே பல்லவ நாட்டின் புகழ்பெற்ற மகா சிற்பியின் மகள் இருக்கிறாள். பரத நாட்டியக் கலையில் கரைகண்டவள், அவளைப் பார்த்து விட்டுப் போகலாம்' என்று சொல்லி அழைத்து வந்தார்.
சீன யாத்திரீகரின் சம்பாஷணை சிவகாமிக்குப் பழைய கனவு லோகத்தை நினைவூட்டி மெய்ம்மறக்கும்படிச் செய்தது. ஹியூன்சங் தம்முடைய யாத்திரையில் தாம் கண்டு வந்த தேசங்களைப் பற்றியும் ஆங்காங்குள்ள இயற்கை அழகுகள், கலை அதிசயங்களைப் பற்றியும் விவரித்தார். இடையிடையே தமிழகத்துச் சிற்பக் கலையைப் பற்றிச் சிவகாமியைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். சிவகாமியின் நாட்டியத் தோற்றங்களை அவருடைய தந்தை ஆயனர் அழியாத சிலை வடிவங்களாகச் செய்திருக்கிறார் என்று நாகநந்தி சொன்னபோது, ஹியூன்சங்கின் அதிசயம் அளவு கடந்து பொங்கிற்று. அந்த நடனத் தோற்றங்களில் சிலவற்றை தாம் பார்க்க வேண்டுமென்று விரும்பிச் சிவகாமியை ரொம்பவும் கேட்டுக் கொண்டார். ஒன்பது வருஷத்துக்குப் பிறகு சிவகாமிக்கு உண்மையிலேயே அவள் கற்றிருந்த கலையில் மீண்டும் உற்சாகம் உண்டாயிற்று. சில நடனத் தோற்றங்களையும் அபிநய பாவங்களையும் சீனக் கலைஞருக்கு அவள் ஆடிக் காட்டினாள். ஹியூன்சங் அவற்றைக் கண்டு அதிசயித்து மகிழ்ந்தார். நாகநந்தியோ மெய்ம்மறந்து பரவசம் அடைந்தார்.
ஹியூன்சங் சிவகாமியைப் பற்றி மேலும் விசாரித்த போது சிவகாமி சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்ட வரலாற்றையும், அவள் செய்த சபதத்தையும் பற்றி நாகநந்தி கூறினார். "சக்கரவர்த்தியின் அனுமதி பெற்று இந்தப் பெண்ணைத் திருப்பிக் கொண்டு விட்டு விடுவதாக எவ்வளவோ நான் சொல்லிப் பார்த்தேன், இவள் கேட்கவில்லை. இப்பேர்ப்பட்ட அற்புதக் கலை இந்த வீட்டுக்குள் கிடந்து வீணாவதை நினைத்தால் எனக்கு எவ்வளவோ கஷ்டமாயிருக்கிறது. இவளுக்கு விடுதலை தருவதற்காக இந்த வாதாபி நகரத்தை நாமே கொளுத்தி அழித்து விடலாமா என்று கூடச் சில சமயம் எனக்குத் தோன்றுகிறது!" என்றார் நாகநந்தி.
ஹுயூன்சங் தம் செவிகளைப் பொத்திக் கொண்டு, "புத்த பகவான் அப்படியொன்றும் நேராமல் தடுத்து அருளட்டும்!" என்றார். பிறகு, அந்தப் பெரியார் ஜீவகாருண்யத்தின் சிறப்பையும், யுத்தங்களினால் நேரும் கேட்டையும் எடுத்துக் கூறித் தர்மோபதேசம் செய்தார். புத்த பகவான் ஆட்டைக் காப்பதற்காக யாகத்தை நிறுத்திய வரலாற்றை விவரித்தார். அசோகரின் தர்ம ராஜ்யத்தைப் பற்றி எடுத்துரைத்தார்; தற்சமயம் ஹர்ஷ சக்கரவர்த்தி அதே விதமாகத் தர்ம ராஜ்யம் நடத்துவதையும், பிராணி ஹிம்சையைக் கூடத் தமது இராஜ்யத்தில் அவர் தடுத்து விட்டிருப்பதையும் குறிப்பிட்டார். சிவகாமி இடையிலே குறுக்கிட்டு, "ஆனால் சுவாமிகளே! இந்த வாதாபி சக்கரவர்த்தியின் வீரர்கள் தமிழகத்தில் செய்த அக்கிரமங்களைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது. அதனாலேதான் இப்படியெல்லம் தர்மோபதேசம் செய்கிறீர்கள்!" என்று கூறிய போது, அந்தச் சீன பிக்ஷு கூறியதாவது:
"தாயே! யுத்தம் என்று வரும் போது மனிதர்கள் மிருகங்களாகி விடுவதை நான் அறியாதவனல்ல! நீ பார்த்திருக்கக் கூடியவைகளை விடப் பன்மடங்கு அக்கிரமங்கள் நடந்திருக்கலாம். ஆனால், பழிக்குப் பழி வாங்கிக் கொண்டே போனால், அதற்கு முடிவு என்பதே கிடையாது. சளுக்கச் சக்கரவர்த்தி படையெடுத்ததற்குப் பழி வாங்குவதற்காக இப்போது காஞ்சிச் சக்கரவர்த்தி படையெடுக்கிறார். மறுபடியும் காஞ்சியின் மேல் பழிவாங்குவதற்காகச் சளுக்க வம்சத்தினர் படையெடுப்பார்கள். இப்படி வித்திலிருந்து மரமும், மரத்திலிருந்து வித்துமாக உலகில் தீமை வளர்ந்து கொண்டே போகும். யாராவது ஒருவர் மறந்து மன்னித்துத்தான் தீர வேண்டும். அப்போதுதான் உலகம் க்ஷேமம் அடையும். தாயே, எது எப்படியானாலும் உன்னுடைய பயங்கரமான சபதம் நிறைவேற வேண்டும் என்று மட்டும் நீ ஆசைப்படாதே! அதனால் யாருக்கு நன்மை உண்டாகாது. ஆகா! இந்தப் பெரிய நகரத்தில் எத்தனை ஆயிரம் வீடுகள் இருக்கின்றன. எத்தனை லட்சம் ஜனங்கள் வசிக்கிறார்கள்? அவர்களில் வயோதிகர்களும் குழந்தைகளும் உன்னைப் போன்ற அபலை ஸ்திரீகளும் எத்தனை பேர்? இந்த நகரத்தைத் தீ வைத்து எரித்தால், இவ்வளவு குற்றமற்ற ஜனங்களும் எத்தனை கஷ்டமடைய நேரிடும்? யோசித்துப் பார்!"
இதையெல்லாம் கேட்ட சிவகாமியின் உள்ளம் பெரும் குழப்பம் அடைந்தது. அந்தச் சமயம் பார்த்து நாகநந்தி அடிகள், "சிவகாமி, இந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டாயல்லவா? நடந்து போனதையே நினைத்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? பழிவாங்கும் எண்ணத்தினால்தான் பிரயோஜனம் என்ன? ஒன்பது வருஷம் நீ விரதம் காத்தது போதாதா? இன்னும் இரண்டு நாளில் இந்த சீனத்துப் பெரியவரும் வாதாபிச் சக்கரவர்த்தியும் அஜந்தாவுக்குப் போகிறார்கள்; அவர்களுடன் நானும் போகிறேன். அங்கே பெரிய கலைத் திருவிழ நடக்கப் போகிறது. நீயும் எங்களுடன் வா, போகலாம்! உலகத்திலே எங்கும் காண முடியாத அதிசயங்களையெல்லாம் அங்கே நீ காண்பாய்!" என்றார்.
ஒருகணம் சிவகாமியின் கலை உள்ளம் சலனம் அடைந்து விட்டது. 'ஆகட்டும், சுவாமி! வருகிறேன்!' என்று சொல்ல அவள் மனம் ஆசைப்பட்டது. ஆனால், அவளுடைய உதடுகள் அந்த வார்த்தைகளை வெளிப்படுத்த மறுதலித்து விட்டன. அவளுடைய உள்ளத்தின் அந்தரங்கத்திலே ஒரு மெல்லிய குரல், 'சிவகாமி! இது என்ன துரோகம் நீ எண்ணுகிறாய்? மாமல்லர் அழைத்த போது அவருடன் போக மறுத்து விட்டு, இப்போது இந்தப் புத்த பிக்ஷுக்களுடனே புறப்படுவாயா? நீ அஜந்தா போயிருக்கும் சமயம் ஒருவேளை மாமல்லர் இங்கு வந்து பார்த்து உன்னைக் காணாவிட்டால் அவர் மனம் என்ன பாடுபடும்?' என்று கூறியது.
சிவகாமி சலனமற்ற தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, "பிக்ஷுக்களே! இந்த அனாதைப் பெண் விஷயத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டதன் பொருட்டு மிக்க வந்தனம். ஆனால், அஜந்தா மலையில் அதிசயங்களைப் பார்க்க அடியாள் கொடுத்து வைத்தவள் அல்ல. இந்தச் சீன தேசத்துப் பெரியார் சொன்ன ஒரு விஷயத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். என் சபதம் நிறைவேற வேண்டுமென்று இனி நான் ஆசைப்பட மாட்டேன். இந்த வாதாபி நகரமும் இதில் வாழும் ஜனங்களும் ஒரு துன்பமும் இன்றிச் செழித்து வாழட்டும்! அவர்களுக்கு என்னால் எந்தவிதமான கெடுதலும் நேர வேண்டாம். ஆனால், அடியாள் என் வாழ்நாளை இந்த வீட்டிலேயேதான் கழிப்பேன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த நகரை விட்டு வெளியேறுவதற்கு உடன்பட மாட்டேன்!" என்றாள்.