சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/பிக்ஷுவின் சபதம்

31. பிக்ஷுவின் சபதம்


வாதாபிக் கோட்டைக்கு வெளியே சற்று தூரத்தில் காபாலிக மதத்தாரின் பலி பீடம் இருந்தது என்பதை நேயர்கள் அறிவார்கள். வாதாபிப் பெரும் போர் முடிவுற்றதற்கு மறுநாள் இரவு அந்த காபாலிகர் பலி பீடத்துக்குச் சமீபத்தில் ஒரு பயங்கர சோக நாடகம் நடைபெற்றது. கிழக்கே அப்போதுதான் உதயமாகிக் கொண்டிருந்த சந்திரனின் கிரணங்கள் மரங்களின் வழியாகப் புகுந்து வந்து மொட்டை மொட்டையாக நின்ற பாறைகள் மீது விழுந்த போது, அந்தக் கறுத்த பாறைகளும் அவற்றின் கறுத்த நிழல்களும் கரிய பெரிய பேய்களின் உருவங்களைக் கொண்டு அந்தப் பாறைப் பிரதேசத்தைப் பார்ப்பதற்கே பீதிகரமாகச் செய்து கொண்டிருந்தன.

பாறைகளின் ஓரமாகச் சில சமயம் நிழல்களில் மறைந்தும் சில சமயம் நிலா ஒளியில் வெளிப்பட்டும் ஒரு கோரமான பெண் உருவம் வந்து கொண்டிருந்தது. அந்த உருவம் தோளின் மீது இன்னொரு உடலைச் சுமந்து கொண்டு நடந்தது. அந்த உடல் விறைப்பாகக் கிடந்த விதத்திலிருந்து அது உயிரற்றது என்பதை எளிதில் ஊகிக்கலாம். அவ்விதம் தோளிலே பிரேதத்தைச் சுமந்து கொண்டு நடந்த பெண் உருவமானது நிலா வெளிச்சத்தில் தோன்றிய போது அதன் நிழல் பிரம்மாண்ட ராட்சஸ வடிவங்கொண்டு, ஒரு பெரும் பூதம் தான் உண்பதற்கு இரை தேடி எடுத்துக் கொண்டு வருவது போலத் தோன்றியது.

சற்று அருகில் நெருங்கிப் பார்த்தோமானால், அந்தப் பெண் உருவம் கற்பனையில் உருவகப்படுத்திக் கொள்ளும் பேயையும் பூதத்தையும் காட்டிலும் அதிகப் பயங்கரத் தோற்றம் அளித்தது என்பதை அறியலாம். கறுத்துத் தடித்த தோலும், குட்டையான செம்பட்டை மயிரும் அனலைக் கக்கும் கண்களுமாக அந்தப் பெண் உருவம் காவியங்களில் வர்ணிக்கப்படும் கோர ராட்சஸிகளைப் பெரிதும் ஒத்திருந்தது. ஆனால், அந்தப் பெண் பேய் தன் தோளில் போட்டுக் கொண்டு சுமந்து வந்த ஆண் உருவம் அத்தகைய கோரமான உருவமல்ல. இராஜ களை பொருந்திய கம்பீர முகத் தோற்றம் கொண்டது! அது யார்? ஒருவேளை?....

மேற்கூறிய கோர ராட்சஸி ஒரு பாறையின் முனையைத் திரும்பிய போது, எதிரில் யாரோ வருவது கண்டு திடுக்கிட்டுத் தயங்கி நின்றாள். அவள் திடுக்கிட்டதற்குக் காரணம் என்ன? பயமா? அவளுக்குக் கூடப் பயம் உண்டா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எதிரே வந்த உருவம் சிறிதும் தயங்காமல் மேலும் வந்து கொண்டிருந்தது. அருகில் நெருங்கி வந்ததும், "ரஞ்சனி, நீதானா?" என்று புத்த பிக்ஷுவின் குரல் கேட்டது. அந்தக் கோர ராட்சஸியின் பெயர் "ரஞ்சனி" என்று அறிந்து நமக்கு வியப்பு உண்டாகிறதல்லவா? ஆயினும், அந்தப் பெண் ஒரு காலத்தில் "ரஞ்சனி" என்னும் அழகிய பெயருக்கு உரியவளாய், பார்த்தவர் கண்களை ரஞ்சிக்கச் செய்பவளாய், அவர்கள் உள்ளத்தை மோகிக்கச் செய்பவளாய்த்தான் இருந்தாள். அவளை இம்மாதிரி கோர வடிவம் கொண்ட காபாலிகையாகச் செய்தவர் புத்த பிக்ஷு தான் என்பதை முன்னமே அவருடைய வாய்மொழியினால் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

பிக்ஷுவின் குரலைக் கேட்டதும், காபாலிகையின் திகைப்பு இன்னும் அதிகமானதாகத் தோன்றியது. கற்சிலை போல் ஸ்தம்பித்து நின்றவளைப் பார்த்து, புத்த பிக்ஷு மறுபடியும் "ரஞ்சனி! இது என்ன மௌனம்? எங்கே போய் வேட்டையாடிக் கொண்டு வருகிறாய்?" என்று கேட்டார். காபாலிகையின் திகைப்பு ஒருவாறு நீங்கியதாகத் தோன்றியது. "அடிகளே! நிஜமாக நீங்கள்தானா?" என்று கேட்டாள் அவளுடைய கடினமான குரலில் வியப்பும் சந்தேகமும் தொனித்தன. "இது என்ன கேள்வி? நான்தானா என்பதில் உனக்கு என்ன சந்தேகம் வந்தது? என்னைத் தவிர இந்த நள்ளிரவில் உன்னை யார் தேடி வருவார்கள்? உன் குகையில் உன்னைத் தேடிக் காணாமல் எங்கே போயிருக்கிறாய் என்று பார்க்கக் கிளம்பினேன்! அது என்ன? யார் உன் தோளில்? எந்தப் பாவியின் பிரேதத்தைச் சுமந்து வருகிறாய்? இப்போதெல்லாம் உனக்கு நல்ல வேட்டை போலிருக்கிறது!"

இவ்விதம் பிக்ஷு சொல்லிக் கொண்டு வந்த போது காபாலிகை தான் இத்தனை நேரமும் தோளில் சுமந்து கொண்டிருந்த உடலைத் தொப்பென்று கீழே போட்டாள். "நல்ல வேடிக்கை!" என்று சொல்லி விட்டுக் கோரமாகச் சிரித்தாள். "என்ன வேடிக்கை? அந்தச் சவத்தை எங்கே கண்டு எடுத்தாய்?" என்று பிக்ஷு கேட்டார். "அடிகளே! தங்களை நினைத்து இரண்டு காத தூரம் கண்ணீர் விட்டு அழுது கொண்டே நடந்து வந்தேன். அவ்வளவும் வீணாய்ப் போயிற்று!" என்றாள் காபாலிகை. "கண்ணீர் விட்டாயா? என்னை நினைத்து ஏன் கண்ணீர் விட வேண்டும்? இது என்ன வேடிக்கை!" என்றார் பிக்ஷு. "பெரிய வேடிக்கைத்தான்; அந்த வேடிக்கையை ஆரம்பத்திலிருந்து சொல்லுகிறேன், கேளுங்கள்!" என்று காபாலிகை ஆரம்பித்தாள்.

"யுத்த வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். போர்க்களத்துக்குக் கொஞ்ச தூரத்திலிருந்த ஒரு குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பப்பா! என்ன யுத்தம்! என்ன சாவு! எத்தனை நரபலி? காபாலிகர் இங்கே மாதம் ஒரு தடவை வந்து ஒரு நரபலி கொடுக்கிறார்களே! இது என்ன பிரமாதம்? அங்கே லட்சோபலட்சம் மனிதர்களையும் ஆயிரம் பதினாயிரம் யானைகளையும் குதிரைகளையும் பலிகொடுத்தார்கள். மூன்று நாள் இரவும் பகலும் பலி நடந்தது. கடைசியில் ஒரு கட்சியார் ஓடவும் இன்னொரு கட்சியார் துரத்தவும் ஆரம்பித்தார்கள். யாரை யார் துரத்துகிறார்கள் என்று கூட நான் கவனிக்கவில்லை. எங்கே என்னைப் பிடித்துக் கொள்வார்களோ என்று பயந்து ஓட்டம் பிடித்தேன். இன்று பகலெல்லாம் காட்டில் ஒளிந்து ஒளிந்து வந்தேன். சாயங்காலம் ஆன போது பின்னால் ஒரு குதிரை ஓடி வரும் சப்தம் கேட்டது. என்னைப் பிடிக்கத்தான் யாரோ வருகிறார்கள் என்று மேலும் வேகமாய் ஓடினேன். கொஞ்ச நேரம் குதிரையும் தொடர்ந்து ஓடி வந்தது. நன்றாக இருட்டியதும் யார்தான் என்னைப் பிடிக்க வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றேன். என்னைத் துரத்தி வந்த குதிரை திடீரென்று கீழே விழுந்தது. அதன் மேலிருந்த மனிதனும் அப்படியே கிடந்தான் எழுந்திருக்கவில்லை. அருகிலே சென்று பார்த்த போது குதிரை மரணாவஸ்தையில் இருந்தது. அதன் மேலிருந்த மனிதன் கிடந்த மாதிரியிலிருந்து அவன் இறந்து போய் வெகு நேரமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அவன் கால்கள் குதிரையின் கடிவாளத்தில் மாட்டிக் கொண்டிருந்தபடியால் கீழே விழாமல் தொங்கிக் கொண்டே வந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. குனிந்து அவன் முகத்தைப் பார்த்தேன், தங்களுடைய முகம் மாதிரி இருந்தது. நான் பைத்தியக்காரிதானே? தாங்கள்தான் என்று நினைத்துத் தோளில் போட்டுக் கொண்டு அழுது கொண்டே வந்தேன்!..."

அப்போது புத்த பிக்ஷுவுக்குத் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் தோன்றி இருக்க வேண்டும். சட்டென்று கீழே குனிந்து தரையில் கிடந்த உடலின் முகத்தை நிலா வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தார். "தம்பி! புலிகேசி!" என்று பிக்ஷு வீறிட்டு அலறியது அந்த விசாலமான பாறைப் பிரதேசம் முழுவதிலும் எதிரொலி செய்தது. "ரஞ்சனி! நீ போய் விடு! சற்று நேரம் என்னைத் தனியே விட்டு விட்டுப் போ! இங்கு நில்லாதே!" என்று பிக்ஷு விம்மலுடன் சொன்னதைக் கேட்டுக் காபாலிகை பயந்து போய் அங்கிருந்து விலகிச் சென்று பாறையின் மறைவில் நின்றாள்.

பிக்ஷு கீழே உட்கார்ந்து புலிகேசியின் உடலைத் தமது மடியின் மீது போட்டுக் கொண்டார். "தம்பி! உனக்கு இந்தக் கதியா? இப்படியா நீ மரணமடைந்தாய்? இந்தப் பாவியினால் அல்லவா நீ இந்தக் கதிக்கு உள்ளாக நேர்ந்தது?" என்று சொல்லி விட்டுப் பிக்ஷு தமது மார்பிலும் தலையிலும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார். "ஐயோ! தம்பி! உனக்கு நான் துரோகம் செய்து விட்டதாக எண்ணிக் கொண்டேயல்லவா நீ இறந்து போனாய்? என் உயிருக்கு உயிரான சகோதரனுக்கு - தாயின் கர்ப்பத்திலே என்னோடு பத்து மாதம் கூட இருந்து பிறந்தவனுக்கு, நான் துரோகம் செய்வேனா? மாமல்லனைப் பயங்கரமாகப் பழி வாங்குவதற்காகவல்லவா நான் சூழ்ச்சி செய்தேன்? அதை உன்னிடம் சொல்லுவதற்கு முடியாமல் இப்படி நடந்து விட்டதே!...."

மறுபடியும் பிக்ஷு தமது மார்பில் ஓங்கி அடித்துக் கொண்டு சொன்னார்; "பாழும் பிக்ஷுவே! உன் கோபத்தில் இடி விழ! உன் காதல் நாசமாய்ப் போக! உன் சிவகாமி...! ஆ! சிவகாமி என்ன செய்வாள்?.... தம்பி! உனக்கு நான் துரோகம் செய்யவில்லை. நம் தேசத்துக்கும் நான் துரோகம் செய்துவிடவில்லை. அன்றைக்கு அஜந்தாவில் நீயும் நானும் கொஞ்சம் பொறுமையாக மட்டும் இருந்திருந்தோமானால் இம்மாதிரி விபரீதம் நேர்ந்திராதே! இந்த யுத்தம் நடக்கவே நான் விட்டிருக்க மாட்டேனே! பல்லவ நாட்டார் அத்தனை பேரையும் பட்டினியால் சாகப் பண்ணியிருப்பேனே! மாமல்லனையும் உயிரோடு பலிகொடுத்திருப்பேனே! ஐயோ! இப்படியாகி விட்டதே...."

பிக்ஷு புலிகேசியின் உடலை மடியிலிருந்து மெதுவாக எடுத்துக் கீழே வைத்தார். எழுந்து நின்று இரு கைகளையும் வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டு, பாறை மறைவிலிருந்த காபாலிகைக்குக் கூட ரோமம் சிலிர்க்கும்படியான அலறுகின்ற குரலில் உரக்கக் கூவினார். "தம்பி! புலிகேசி! உன் மரணத்துக்குப் பழிவாங்குவேன்! புத்த பகவானின் பத்ம பாதங்களின் பேரில் சத்தியம் செய்கிறேன். கபாலம் ஏந்தும் சம்ஹார ருத்ரன் தலை மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இரத்த பலி கேட்கும் சக்தி பத்ரகாளியின் பேரில் சத்தியம் வைத்துச் சபதம் செய்கிறேன் உன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன்!"