சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/பௌர்ணமி சந்திரன்
இந்த மண்ணுலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து மாதம் ஒரு தடவை பூரண சந்திரன் உதயமாகி நீல வானத்தில் ஜொலிக்கும் வைர நக்ஷத்திரங்களிடையே பவனி சென்று வருகிறது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் வான வீதியில் பவனி வரும் பூரண சந்திரன் கடந்த ஒரு மாதத்துக்குள்ளேயே பூவுலகில் எத்தனையோ அதிசயமான மாறுதல்கள் நிகழ்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டு வருகிறது. எனவே, மண்ணுலகில் அடிக்கடி நிகழும் மாறுதல்கள் பூரண சந்திரனுக்கு, அதிகமான ஆச்சரியத்தை அளிக்க முடியாது தான். என்ற போதிலும், (1946இல் சிவகாமியின் சபதம் எழுதப்பட்டது) இன்றைக்குச் சுமார் ஆயிரத்து முந்நூற்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னால்(கி.பி.642-ல்)மார்கழி மாதத்தில் உதித்த பூரண சந்திரன் வாதாபி நகரம் இருந்த இடத்துக்கு மேலாக வந்த போது சிறிது நேரம் ஆச்சரியத்தினால் ஸ்தம்பித்து நின்று விட்டு ஒரு பெருமூச்சுடனேதான் அப்பால் நகர்ந்திருக்க வேண்டும்.
சென்ற பௌர்ணமியன்று அந்த வாதாபி நகரத்தின் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் சந்திரனையே தொட்டு விட முயல்வதைப் போல் கம்பீரமாக எழுந்து நின்றன. வானத்து நக்ஷத்திரங்களோடு போட்டியிடுவன போல் நகரெங்கும் தீபங்கள் ஜொலித்தன. ஐசுவரியத்தில் பிறந்து ஐசுவரியத்தில் வளர்ந்த ஆடவரும் பெண்டிரும் சகலாபரண பூஷிதர்களாக அந்தப் பெருநகரின் விசாலமான வீதிகளில் மதோன்மத்தங் கொண்டு உலாவினார்கள். அலங்கரித்த யானைகளும் அழகிய குதிரைகளும் தந்தச் சிவிகைகளும் தங்க ரதங்களும் மோகன வெண்ணிலவிலே ஒளிவீசித் திகழ்ந்தன. விண்ணை எட்டும் மாளிகைகளின் உப்பரிகைகளில் வெண்ணிலாவுக்கு இன்னும் வெண்மையை அளித்த தவள மாடங்களில் மன்மதனையும் ரதியையும் ஒத்த காளைகளும் கன்னியர்களும் காதல் புரிந்து களித்தார்கள். தேவாலயங்களில் ஆலாசிய மணிகள் ஒலித்தன. அரண்மனையில் கீதவாத்தியங்களின் இன்னிசை கிளம்பிற்று. நடன மண்டபங்களில் சதங்கைகள் சப்தித்தன. கடை வீதிகளில் பொது ஜனங்களின் கலகலத்தொனி எழுந்தது. அகில் புகையின் மணமும் சந்தனத்தின் வாசனையும் நறுமலர்களின் சுகந்தமும் எங்கெங்கும் பரவியிருந்தன.
ஒரு மாதத்துக்கு முன்பு மேற்கண்டவாறு கந்தர்வபுரியாகக் காட்சியளித்த வாதாபி நகரம் இருந்த இடத்தில் இன்றைக்குச் சிற்சில குட்டிச் சுவர்கள் நின்றன. மற்ற இடத்திலேயெல்லாம் கரியும் சாம்பலும் புகையேறிய கல்லும் மண்ணும் காணப்பட்டன. சில இடங்களில் அவை கும்பல் கும்பலாகக் கிடந்தன; சில இடங்களில் அவை பரவிக் கிடந்தன. இடிந்து விழாமல் புகையினாலும் தீயினாலும் கறுத்துப் போய் நின்ற குட்டிச் சுவர்களின் ஓரமாகச் சிற்சில மனிதர்கள், உயிர் பெற்று எழுந்த பிரேதங்களையும் பேய் பிசாசுகளையும் ஒத்த மனிதர்கள், ஆங்காங்கே திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் எங்கே போகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பிரமை கொண்டவர்களைப் போல் நடந்தார்கள். வேறு சிலர் ஆங்காங்கே உட்கார்ந்து கரியையும் மண்ணையும் கிளறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரைத் தேடினார்களோ அல்லது எதைத் தேடினார்களோ, யாருக்குத் தெரியும்?
வாதாபி நகரம் இருந்த இடத்துக்குச் சற்று தூரத்தில் இடிந்தும் தகர்ந்தும் கிடந்த கோட்டை மதிலுக்கு அப்புறத்தில் அந்த மார்கழிப் பௌர்ணமி சந்திரன் முற்றிலும் வேறுவிதமான மற்றொரு காட்சியைப் பார்த்தது. லட்சக்கணக்கான பல்லவ பாண்டிய வீரர்கள் வெற்றிக் கோலாகலத்திலும் களியாட்ட ஆரவாரங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் படையெடுத்து வந்த காரியம் யாரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சுலபமாக நிறைவேறி மகத்தான வெற்றி கிடைத்த காரணத்தினால் அவர்களுக்கேற்பட்ட மதோன்மத்தம் ஒரு பக்கம்; வாதாபி நகரத்தின் கொள்ளையில் அவரவருக்குக் கிடைத்த பங்கினால் ஏற்பட்ட உற்சாகம் ஒரு பக்கம்; இவற்றோடு கூட இந்தப் பாழாய்ப் போன மயான பூமியில் - அவர்களாலேயே மயானமாக்கப்பட்ட பிரதேசத்தில் - இன்னும் ஒரு தினந்தான் இருக்க வேண்டும்; அதற்கு அடுத்த தினம் சொந்த நாட்டுக்குப் புறப்படப் போகிறோம் என்ற எண்ணமானது அவர்களுக்கு அளவில்லாத எக்களிப்பை உண்டுபண்ணி இரவெல்லாம் தூக்கமின்றிக் களியாட்டங்களில் ஈடுபடும்படி செய்திருந்தது. அந்த வெற்றி வீரர்களில் சிலர் ஆடிப்பாடினார்கள்; சிலர் இசைக்கருவிகளிலிருந்து பல வகை அபஸ்வரங்களைக் கிளப்பினார்கள். சிலர் கும்பலாக உட்கார்ந்து கதை கேட்டார்கள். சிலர் வாதாபி யுத்தத்தில் தாங்கள் செய்த வீர பராக்கிரமச் செயல்களைப் பரஸ்பரம் சொல்லிப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சிலர் மார்கழி மாதத்துக் குளிரைப் போக்கிக் கொள்வதற்காக எரிகிற வீடுகளிலிருந்து பிடுங்கிக் கொண்டு வந்த கட்டைகளைப் போட்டுக் கொளுத்திக் கொண்டும் தீயைச் சுற்றி உட்கார்ந்து கொண்டும் குளிர் காய்ந்தார்கள்.
அநேகர் வாதாபியிலிருந்து அவரவரும் கொள்ளையடித்துக் கொண்டு வந்திருந்த செல்வங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு பூதம் காப்பது போல் காத்து வந்தார்கள். இப்படிக் கொள்ளை கொண்ட பொருளை அதி ஜாக்கிரதையாகப் பாதுகாத்தவர்களுக்குள்ளே, சற்று கவனித்துப் பார்த்தோமானால் - நமக்கு தெரிந்த வயோதிக வீரர் ஒருவரைக் காணலாம். சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த செம்பியன் வளவன் - மங்கையர்க்கரசியின் அருமைத் தந்தை தான் அவர். தாம் காஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்த பிறகு தமது மகளுக்கு நேர்ந்த அரும்பெரும் பாக்கியத்தை அறியாதவராய் அவளுடைய திருமணத்தின் போது ஸ்திரீ தனம் கொடுப்பதற்கென்று எரிந்துகொண்டிருந்த வாதாபி நகரிலிருந்து மிக்க பரபரப்புடனும் சுறுசுறுப்புடனும் ஏராளமான முத்துக்கள், மணிகள், ரத்தினங்கள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வந்து சேர்த்திருந்தார்.
இவ்விதம் கிழவர் அரும்பாடுபட்டுச் சேகரித்திருந்த பொருள்களுக்கு ஒரு நாள் ஆபத்து வரும்போலிருந்தது. இரவு நேரங்களில் சில சமயம் மாமல்லர், தமது சேனா வீரர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு, சமயோசிதமான பாராட்டு மொழிகள் கூறி உற்சாகப்படுத்தி விட்டுப் போவது வழக்கம். ஊருக்குப் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கி விட்டபடியால் சென்ற நாலு தினங்களாகச் சக்கரவர்த்தி தினந்தோறும் இரவு வெகு நேரம் வரையில் வீரர்கள் தங்கியிருந்த இடங்களுக்குச் சென்று அவர்களைப் பார்த்தும் பேசியும் சந்தோஷப்படுத்தி வந்தார். அந்த வெற்றி வீரர்களைத் தம்முடன் நிரந்தரமாகப் பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட, போர்க்களத்திலும் கோட்டைத் தாக்குதலிலும் அரும் பெரும் வீரச் செயல்கள் புரிந்தவர்களை நேரில் தெரிந்து கொண்டு அவர்களுக்கு விசேஷ சன்மானம் அளிக்க வேண்டுமென்னும் விருப்பமும் மாமல்லரின் மனத்திலே இருந்தது.
மேற்சொன்ன நோக்கங்களுடன், மானவன்மன், ஆதித்தவர்மன், சத்ருக்னன் ஆகியவர்கள் பின்தொடர, படை வீரர்களைப் பார்த்துக் கொண்டு வந்த நரசிம்ம சக்கரவர்த்தி நமது சோழ வம்சத்து வீரக் கிழவரின் அருகில் வந்ததும் சிறிது நின்று அவரை உற்றுப் பார்த்தார். "ஆ! இந்தப் பெரியவரை நாம் மறந்தே போய் விட்டோ மே?" என்று மெல்லச் சொல்லி விட்டு, வெளிப்படையாக, "இது என்ன, ஐயா, இவ்வளவு பொருள்களை நீர் எப்படிச் சேர்த்து வைத்துக் கொள்ளத் துணிந்தீர்? ஒவ்வொருவரும் தம்மால் தூக்கிக் கொண்டு போகக்கூடிய அளவுதானே வைத்துக் கொள்ளலாம் என்பது நமது கட்டளை!" என்று கேட்டார். "சக்கரவர்த்தி! நூறு வீரர்களுடன் வந்தேன்! என்னைத் தவிர அவ்வளவு பேரும் வாதாபிப் போரில் உயிர் துறந்தார்கள்."
"ஆகா! சோழ நாட்டு வீரந்தான் வீரம்!...ஆனால் இதைக் கேட்பதற்கு நமது சேனாதிபதி இங்கில்லையே?" என்று சக்கரவர்த்தி அருகிலிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, "இருக்கட்டும், ஐயா, நூறு வீரர்களும் போரில் இறந்திருந்தால் வீர சொர்க்கத்துக்குப் போய்ச் சேர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்தப் பொருளினால் ஒரு பயனுமில்லையே?" என்றார். "பல்லவேந்திரா! எனது ஏக புதல்விக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். புராதன சோழ வம்சத்தின் பெருமைக்கு உகந்த முறையில் ஸ்திரீதனம் கொடுக்க வேண்டுமென்று விரும்பி..." என்று கிழவர் தயங்கினார். மாமல்லர் புன்னகையுடன் மானவன்மரைப் பார்த்து, "இவருக்கு விஷயமே தெரியாது போலிருக்கிறது; சொல்லட்டுமா?" என்று கேட்க, "வேண்டாம், பிரபு! இப்போது திடீரென்று சொன்னால் சந்தோஷ மிகுதியால் கிழவரின் பிராணன் போனாலும் போய் விடும்!" என்றார் மானவன்மர். உடனே மாமல்லர், "மானவன்மரே! இந்த பெரியாருடைய பெண்ணின் ஸ்திரீதனத்துக்காக நூறு யானையும், அந்த நூறு யானை சுமக்கக்கூடிய திரவியங்களும் கொடுங்கள்!" என்று சொல்லி விட்டு மேலே நடந்தார். செம்பியன் வளவன் தமது செவிகளையே நம்ப முடியாதவராய்ப் பிரமித்துப் போய் நின்றார். இதையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொண்டு அக்கம் பக்கத்தில் நின்ற வீரர்கள், "வள்ளல் மாமல்லர் வாழ்க! வாழ்க!" என்ற கோஷங்களைக் கிளப்பினார்கள்.
சக்கரவர்த்தியும் அவருடைய கோஷ்டியும் அப்பால் சென்று வெகு நேரம் ஆனவரையில் அந்த வீரர்களில் பலர் மாமல்லரின் வீர பராக்கிரமங்களைப் பற்றியும் அவருடைய அரும்பெருங் குணாதிசயங்களைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். எனினும், இடையிடையே உற்சாகக் குறைவை உண்டுபண்ணிய பேச்சு ஒன்றும் எழுந்தது. அது என்னவெனில், முன்னெல்லாம் போல் சக்கரவர்த்தியுடன் ஏன் சேனாதிபதி பரஞ்சோதி தொடர்ந்து வரவில்லை என்பதுதான். வீரமாமல்லரும் வீரர் பரஞ்சோதியும் நகமும் சதையும் போலவும் பூவும் மணமும் போலவும் பிரிக்க முடியாத நண்பர்கள் என்பதாக இத்தனை நாளும் அவர்களை அறிந்தவர்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இது விஷயம் தமிழகத்து வீரர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்து வந்தது. இராஜகுலம் எதிலும் பிறவாதவரும், இராஜ வம்சத்தோடு உறவு பூணாதவருமான ஒருவர், தமது வீரம், ஒழுக்கம், ஆற்றல் இவை காரணமாகவே சேனாதிபதிப் பதவியையடைந்திருந்ததும், அவருக்கும் சக்கரவர்த்திக்கும் அத்தகைய நெருங்கிய நட்பு ஏற்பட்டிருந்ததும் மற்ற வீரர்களுக்கெல்லாம் மிக்க பெருமையை அளித்து வந்தது.
ஆனால், அப்பேர்ப்பட்ட என்றும் அழியாத சிரஞ்சீவி சிநேகம் என்று எல்லோரும் நினைத்திருந்த சேர்க்கைக்கு, இப்போது ஊறு நேர்ந்து விட்டதாகத் தோன்றியது. மாமல்லருக்கும் பரஞ்சோதிக்கும் மனவேற்றுமை ஏற்பட்டு விட்டதாகக் காணப்பட்டது. வாதாபிக் கோட்டையைத் தாக்கலாமா வேண்டாமா என்ற விவாதத்திலிருந்து அந்த வேற்றுமை உண்டானதாகச் சிலர் சொன்னார்கள். சிவகாமி தேவி விஷயத்தில் மாமல்லர் மிகக் கடுமையாக நடந்து கொண்டதே சேனாதிபதிக்கு ஆறாத மனப்புண்ணை உண்டாக்கி விட்டதாகச் சிலர் ஊகித்தார்கள். இலங்கை இளவரசரும் ஆதித்தவர்மனும் சேர்ந்து போதனை செய்து மாமல்லருடைய மனத்தில் களங்கம் உண்டுபண்ணி விட்டதாகச் சிலர் கூறினார்கள். "அதெல்லாம் ஒன்றுமில்லை! எல்லோரும் வீண் வம்பு வளர்க்கிறீர்கள்! சேனாதிபதிக்கு இடைவிடாத உழைப்பினால் தேக சுகம் கெட்டு விட்டது. அதனால் சக்கரவர்த்தி அவரை வெளியே வராமல் கூடாரத்துக்குள்ளே இருந்து இளைப்பாறும்படி கட்டளையிட்டிருக்கிறார்" என்று ஒரு சிலர் நல்ல காரணத்தைக் கற்பித்தார்கள். "நாளைக் காலையில் கொடியேற்றத்துக்குச் சேனாதிபதி வருகிறாரா, இல்லையா என்று பார்க்கலாம். கொடியேற்றத்துக்குச் சேனாதிபதி வந்தால் எல்லாச் சந்தேகமும் தீர்ந்து விடும்!" என்று சிலர் மத்தியஸ்தமாய்ப் பேசினார்கள்.