சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/வானமாதேவி

8. வானமாதேவி


அன்றைய இரவைக் காஞ்சி வாசிகள் பகலாகவே மாற்றிக் கொண்டிருந்தார்கள். காஞ்சி நகரில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஜனங்களில் கைக் குழந்தைகளைத் தவிர யாரும் அன்றிரவு உறங்கவில்லை. நகரமெங்கும் வீதி விளக்குகள் ஜகஜ்ஜோதியாய் பிரகாசித்துக் கொண்டிருந்தன. யானைப் படைகளும், குதிரைப் படைகளும், காலாட் படைகளும், வெண் புரவிகள் பூட்டிய ரதங்களும் வரிசை வரிசையாக நின்றன. பொழுது புலரும் சமயத்தில் அரண்மனை வாசலில் வந்து சேருவதற்கு ஆயத்தமாக அவை அணிவகுக்கப்பட்டு வந்தன. மறுநாள் காலையில் சக்கரவர்த்தி போருக்குப் புறப்படும் வைபவத்தை முன்னிட்டு நகர மாந்தர்கள் இரவெல்லாம் கண் விழித்து வீதிகளையும், வீட்டு வாசல்களையும் அலங்காரம் செய்தார்கள். முற்றிய தார்களையுடைய வாழை மரங்களையும், செவ்விளநீர்க் குலைகளையும், தோரணங்களையும், திரைச் சீலைகளையும், தென்னங் குருத்துக் கூந்தல்களையும், எங்கெங்கும் தொங்க விட்டார்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் ரிஷபக் கொடியைப் பறக்க விட்டார்கள்.

பெண்மணிகள் வீட்டுத் திண்ணைச் சுவர்களுக்கு வர்ணப் பட்டைகள் அடித்தார்கள். தெரு வாசல்களில் சித்திர விசித்திரமான கோலங்களைப் போட்டார்கள். பெரும்பாலும் போர்க்களக் காட்சிகளே அந்தக் கோலங்களில் அதிகமாகக் காணப்பட்டன. யானை வீரர்களும், குதிரை வீரர்களும் வாள்களும் வேல்களும் தரித்த காலாள் வீரர்களும் அக்கோலங்களில் காட்சியளித்தனர். ஒரு கோலத்தில் ஐந்து ரதங்களிலே பஞ்ச பாண்டவர்கள் தத்தம் கைகளில் வளைத்த வில்லும், பூட்டிய அம்புமாக காட்சி தந்தார்கள். இன்னொரு கோலத்தில் இராம லக்ஷ்மணர்கள் தசகண்ட ராவணனுடன் கோர யுத்தம் செய்யும் காட்சி தென்பட்டது. மற்றொரு கோலத்தில் மகாரதர்கள் பலருக்கு மத்தியில் அபிமன்யு தன்னந்தனியாக நின்று போராடும் காட்சி தோன்றியது. ஆஹா! காஞ்சி நகரத்துப் பெண்மணிகள் பாரத நாட்டு வீரர் கதைகளை நன்கு அறிந்திருந்ததோடு சித்திரக் கலையிலும் மிக வல்லவர்கள் என்பதிலே சந்தேகமில்லை.

சக்கரவர்த்தியின் அரண்மனையிலும் அன்றிரவெல்லாம் ஒரே கலகலப்பாயிருந்தது. அரண்மனை வாசலிலும் நிலா முற்றத்திலும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. வாழை மரங்களும் தோரணங்களும் கட்டினார்கள். செக்கச் சிவந்த மலர்க் கொத்துக்களோடு கூடிய தொண்டைக் கொடிகளைக் கட்டுக் கட்டாய்க் கொண்டு வந்து நெடுகிலும் கட்டித் தொங்கவிட்டார்கள். நிலா முற்றத்தில் வாள்களையும் வேல்களையும் நெய் தடவித் தேய்த்துத் தீட்டிக் கண்கள் கூசும்படி மின்னச் செய்தார்கள். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் பூட்ட வேண்டிய ஆபரணங்களுக்கு மெருகு கொடுத்துப் பளபளக்கச் செய்தார்கள்.

வீதிகளிலும் அரண்மனை வாசலிலும் இப்படியெல்லாம் அல்லோலகல்லோலமாயிருக்க, அரண்மனையின் அந்தப்புரத்துக்குள்ளே மட்டும் அமைதி குடிகொண்டு நிசப்தமாயிருந்தது. அங்குமிங்கும் முக்கிய காரியமாகச் சென்ற தாதிகள் அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசும் போது காதோடு வாய் வைத்து மிகவும் மெதுவாகப் பேசினார்கள். இதன் காரணம் அச்சமயம் சக்கரவர்த்தி அந்தப்புரத்துக்கு வந்து தமது பட்டமகிஷியிடம் விடைபெற்றுக் கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கெல்லாம் தெரிந்திருந்ததுதான்.

இதுவரையில் நாம் பிரவேசித்தறியாத பல்லவ சக்கரவர்த்தியின் படுக்கை அறைக்குள்ளே, சந்தர்ப்பத்தின் முக்கியத்தைக் கருதி நாமும் இப்போது போய்ப் பார்ப்போம். நீலப் பட்டு விதானத்தாலும் முத்துச் சரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தந்தணைக் கட்டிலில் பஞ்சணைமெத்தை மீது சக்கரவர்த்தி அமர்ந்திருக்கிறார். அவருக்கெதிரில் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷி பாண்டியராஜன் குமாரி, வானமாதேவி மிக்க மரியாதையுடன் நின்று கொண்டிருக்கிறாள். சற்றுத் தூரத்தில் திறந்திருந்த வாசற்படியின் வழியாகப் பார்த்தால், அடுத்த அறையிலே தங்கக் கட்டில்களில் விரித்த பட்டு மெத்தைகளிலே பல்லவ குமாரன் மகேந்திரனும், அவன் தங்கை குந்தவியும் நிம்மதியாகத் தூங்குவது தெரிகிறது.

ஒன்பது வருஷத்துக்கு முன்னால் மாமல்லரை மணந்து, பல்லவ சிம்மாசனத்துக்குரியவளான பாண்டிய குமாரி வானமாதேவியை முதன் முதல் இப்போதுதான் நாம் நெருங்கி நின்று பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, பாண்டிய நாட்டுப் பெண்ணின் அழகைப் பற்றிக் கவிகளிலும் காவியங்களிலும் நாம் படித்திருப்பதெல்லாம் நினைவிற்கு வருகிறது. அந்த அழகெல்லாம் திரண்டு ஓர் உருவம் பெற்று நம் முன்னால் நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. அவளுடைய திருமேனியின் நிறம் செந்தாமரை மலரின் கண்ணுக்கினிய செந்நிறத்தை ஒத்திருக்கிறது. அவளுடைய திருமுகத்திலுள்ள கருவிழிகளோ, அன்றலர்ந்த தாமரை மலரில் மொய்க்கும் அழகிய கருவண்டுகளை ஒத்திருக்கின்றன..... இதென்ன அறியாமை? வானமாதேவியின் சௌந்தரியத்தையாவது, நாம் வர்ணிக்கவாவது? தபஸிகளுக்குள்ளே மிகக் கடுந்தபஸியான சிவபெருமானுடைய தவம் கலைவதற்கு எந்தத் திவ்ய சுந்தராங்கி காரணமாயிருந்தாளோ எவளுடைய மோகன வடிவத்தைக் கண்டு அந்த ருத்ர மூர்த்தியின் கோபாக்னி தணிந்து உள்ளம் குளிர்ந்ததோ அத்தகைய உமாதேவி பூமியில் அவதரிக்கத் திருவுளங்கொண்ட போது, மதுரைப் பாண்டியராஜனுடைய குலத்தையல்லவா தேர்ந்தெடுத்தாள்? சுடுகாட்டில் பூத கணங்களுக்கு மத்தியில் சாம்பலைப் பூசிக் கொண்டு பீபத்ஸ நடனம் புரிந்த எம்பெருமான் மண்டை ஓடு முதலிய தன்னுடைய கோர ஆபரணங்களையெல்லாம் அகற்றிவிட்டுச் சுந்தரேசுவரராக உருக்கொண்டு எந்தச் சகல புவன சுந்தராங்கியைத் தேடி வந்து மணம் புரிந்தாரோ, அந்தப் பார்வதி தேவி பிறந்த குலமல்லவா பாண்டிய குலம்? அப்பேர்ப்பட்ட குலத்தில் உதித்த வானமாதேவியின் சௌந்தரியத்தை நம் போன்றவர்களால் வர்ணிக்க முடியுமா?

"தேவி! புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாளைச் சூரியன் உதயமாகும்போது நானும் போருக்குப் பிரயாணமாவேன்!" என்றார் சக்கரவர்த்தி. வானமாதேவி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய கண்களின் ஓரத்திலே இரு கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்று தீபச் சுடரின் ஒளியில் முத்துக்களைப் போல் பிரகாசித்தன. "திரும்பி வர எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. ஒருவேளை திரும்பி வருகிறேனோ, என்னவோ! அதுவும் சொல்வதற்கில்லை. தேவி! உனக்குப் பெரும் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போகிறேன். மகேந்திரனையும் குந்தவியையும் நீ கண்ணும் கருத்துமாய் வளர்த்து வர வேண்டும். இந்தப் பல்லவ ராஜ்யத்தைப் பாதுகாத்து, மகேந்திரனுக்கு வயது வந்ததும் அவனிடம் ஒப்புவிக்க வேண்டும்!" என்று மாமல்லர் கூறியபோது, அதுவரை தலைகுனிந்து நின்று கொண்டிருந்த வானமாதேவி சக்கரவர்த்தியின் காலடியில் அமர்ந்து, அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைத்தாள்.

"தேவி! இது என்ன? வீரபாண்டியன் குலத்தில் உதித்தவள் கணவனைப் போர்க்களத்துக்கு அனுப்பத் தயங்குகிறாயா?" என்று சக்கரவர்த்தி சிறிது பரபரப்புடன் கேட்டார். வானமாதேவி நிமிர்ந்து நோக்கிக் கூறினாள்; "பிரபு! அத்தகைய தயக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. இந்த இராஜ்யத்தைப் பாதுகாத்து மகேந்திரனிடம் ஒப்படைக்கும் பொறுப்பும் எனக்கு நிச்சயமாய் ஏற்படாது. நான் பிறந்த மதுரைமா நகரில் ஜோசியக் கலையில் தேர்ந்த நிபுணர்கள் பலர் உண்டு. அவர்கள் என்னுடைய மாங்கல்ய பலத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் சளுக்கரை வென்று, வாதாபியை அழித்துவிட்டு வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்கள், சந்தேகம் இல்லை!" "பின் எதற்காக உன்னுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின? உனக்கு என்ன துயர் யாரால் ஏற்பட்டது? மனத்தைத் திறந்து சொல்ல வேண்டும்" என்றார் மாமல்லர்.

"சுவாமி என்னுடைய மாங்கல்யத்தின் பலத்தைப் பற்றிச் சொன்ன அரண்மனை ஜோசியர்கள் இன்னொரு விஷயமும் சொல்லியிருக்கிறார்கள். என் கழுத்திலே மாங்கல்யத்தோடு என் நெற்றியிலே குங்குமத்தோடு, மீனாக்ஷியம்மனின் பாதமலரை நான் அடைவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை தாங்கள் திரும்பி வருவதற்குள் அவ்விதம் நேர்ந்துவிடுமோ என்று எண்ணினேன், அதனாலேதான் கண்ணீர் வந்தது. தாங்கள் வெற்றி மாலை சூடி இந்த மாநகருக்குத் திரும்பி வருவதைக் கண்ணாற் பாராமல் வானுலகத்துக்குப் போகக் கூட எனக்கு இஷ்டமில்லை!" என்று வானமாதேவி கூறியபோது, மீண்டும் அவளுடைய விசாலமான நயனங்களிலிருந்து கலகலவென்று கண்ணீர்த் துளிகள் சிந்தின. அப்போது மாமல்லர் அந்தப் பாண்டியர் குலவிளக்கைத் தமது இரு கரங்களினாலும் தூக்கிக் கட்டிலில் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். தமது வஸ்திரத்தின் தலைப்பினால் அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்தார்.

"தேவி! நானும் ஒரு ஜோசியம் சொல்லுகிறேன், கேள்! புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் அழித்துவிட்டு நான் வெற்றி மாலை சூடித் திரும்பி வருவேன். திக்விஜயம் செய்து விட்டுத் திரும்பி வரும் சக்கரவர்த்தியைக் காஞ்சிநகர் வாசிகள் கண்டு களிக்கும் பொருட்டு, வெண் புரவிகள் பூட்டிய தங்க ரதத்திலே நான் ஏறி நகர்வலம் வருவேன். அப்போது என் அருகில் நீ வீற்றிருப்பாய். உன்னுடைய மடியில் மகேந்திரனும் என்னுடைய மடியில் குந்தவியும் அமர்ந்திருப்பார்கள்..."

"பிரபு! அத்தகைய ஆசை எல்லாம் எனக்கில்லை. தாங்கள் திக்விஜயத்திலிருந்து திரும்பி வருவதைக் கண்ணால் பார்க்கும் பேறு பெற்றேனானால் அதுவே போதும். தாங்கள் திரும்பி வந்த பிறகும் நான் இந்தப் பூமியில் இருக்க நேர்ந்தால், நான் இத்தனை நாளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஸ்தானத்தை, தங்கள் அருகில் வீற்றிருக்கும் பாக்கியத்தை, அதற்கு நியாயமாக உரியவளிடம் உடனே ஒப்புவித்துவிட்டு அகன்று விடுவேன். இந்த அரண்மனையில் தாங்கள் மனம் உவந்து ஒரு சிறு இடம் கொடுத்தால் இங்கேயே இருப்பேன். தங்கள் சித்தம் வேறு விதமாயிருந்தால் என் பிறந்தகத்துக்குப் போய்விடுவேன்!" என்று வானமாதேவி கூறிய மொழிகள் மாமல்லரைத் தூக்கிவாரிப் போட்டன.

"தேவி! இது என்ன? இந்த ஒன்பது வருஷமாக ஒருநாளும் சொல்லாத வார்த்தைகளைக் கூறுகிறாய்? உன்னிடம் யார் என்ன சொன்னார்கள்? எதை எண்ணி இவ்வாறெல்லாம் பேசுகிறாய்?" என்று மாமல்லர் மனக் கிளர்ச்சியோடு வினவினார். "சுவாமி! இந்த அரண்மனையிலும் இந்த மாநகரிலும் இந்தப் பல்லவ ராஜ்யத்தில் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் எனக்கு மட்டும் தெரியாமலிருக்கும் என்றா நினைத்தீர்கள்!" "நீ எதைப்பற்றிச் சொல்லுகிறாய் என்பது இன்னமும் எனக்குத் தெரியவில்லை. அரண்மனையிலும் ராஜ்யத்திலும் எல்லாருக்கும் தெரிந்த அந்த மர்மமான விஷயந்தான் என்ன?" என்று சக்கரவர்த்தி ஆர்வத்துடன் கேட்டார்.

"மர்மம் ஒன்றுமில்லை பிரபு! தாங்கள் வாதாபிக்கு எதற்காகப் படையெடுத்துச் செல்கிறீர்கள் என்பதைப் பற்றித்தான்." "எதற்காகப் படையெடுத்துப் போகிறேன்? அதைப்பற்றி நீ என்ன கேள்விப்பட்டாய்?" என்று மாமல்லர் கேட்டார். "என் வாயினால் சொல்லத்தான் வேண்டுமா? ஆயனச் சிற்பியின் மகளைச் சிறை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் போகிறீர்கள்..." "ஆஹா! உனக்கும் அது தெரியுமா? எத்தனை காலமாகத் தெரியும்? எப்படித் தெரியும்?"

"எத்தனையோ காலமாகத் தெரியும், ஒன்பது வருஷத்துக்கு முன்னால் நான் இந்த அரண்மனையில் பிரவேசித்த புதிதில் தாய்மார்களும் தாதிகளும் என்னை அடிக்கடி பரிதாபமாகப் பார்த்தார்கள். என்னைப் பற்றி ஒருவருக்கொருவர் அனுதாபத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு பேசினார்கள். சிறிது சிறிதாக அவர்களுடைய பேச்சுக்களிலிருந்து நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். சுவாமி! நான் தங்களுடைய பட்ட மகிஷியாகி ஒரு வருஷத்துக்குள்ளேயே தங்களுடைய இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பட்டமகிஷி வேறொருத்தி உண்டு என்று அறிந்து கொண்டேன்....." "அப்படித் தெரிந்திருந்தும், நீ என்னை ஒரு முறையாவது அந்த விஷயமாகக் கேட்கவில்லை. ஒன்பது வருஷத்தில் ஒரு முறையாவது என் மீது குற்றங்கூறி நிந்திக்கவில்லை. தேவி! கதைகளிலும் காவியங்களிலும் எத்தனையோ கற்பரசிகளைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன், அவர்களில் யாரும் உனக்கு இணையாக மாட்டார்கள்" என்று மாமல்லர் பெருமிதத்துடன் கூறினார்.

"பிரபு! தங்களுடைய வார்த்தைகள் எனக்குப் புளகாங்கிதத்தை அளிக்கின்றன. ஆனால், அந்தப் புகழுரைகளுக்கு நான் அருகதையுடையவள் அல்ல!" என்றாள் பாண்டிய குமாரி. "நீ அருகதையுடையவள் அல்ல என்றால் வேறு யார்? உன்னை அக்கினி சாட்சியாக மணந்த புருஷன் இன்னொரு பெண்ணுக்குத் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தவன் என்று தெரிந்திருந்தும் நீ ஒரு தடவையாவது அதைப்பற்றி என்னைக் கேட்கவில்லை. என்பேரில் குற்றம் சொல்லவும் இல்லை. பெண் குலத்திலே இதைக் காட்டிலும் உயர்ந்த குணநலத்தை யார் கண்டிருக்கிறார்கள்?"

"சுவாமி! தங்கள் பேரில் எதற்காகக் குற்றம் சொல்லவேண்டும்? குற்றம் ஏதாவது இருந்தால் அது என் தந்தையையும் தமையனையுமே சாரும். அவர்கள்தானே என்னைத் தாங்கள் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள்? தாங்கள் அதை மறுத்ததற்காக என் தமையன் ஜயந்தவர்மன் கோபம் கொண்டு இந்தப் பல்லவ ராஜ்யத்தின் மேல் படையெடுத்துக்கூட வந்தானல்லவா? அவனைத் தாங்கள் கொள்ளிடக் கரையில் நடந்த போரில் வென்று புறங்காட்டி ஓடச் செய்யவில்லையா? என் தமையன் திரும்பிவந்து தங்களை ஜயித்துவிட்டதாகச் சொன்னபோது மதுரை அரண்மனையிலே நாங்கள் யாரும் அதை நம்பவில்லை. தற்பெருமை மிகுந்த என் தமையனுக்குத் தங்களால் நேர்ந்த கர்வபங்கத்தைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ்ந்தோம். அப்படியும் என் அண்ணன் தங்களை விடவில்லை. தன்னுடைய வார்த்தையை நிலை நாட்டுவதற்காக எப்படியாவது என்னைத் தங்கள் கழுத்தில் கட்டிவிடப் பிரயத்தனம் செய்தான்...."

"தேவி! ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காகவே நான் உன்னை மணந்ததாக இன்னமும் நீ நம்புகிறாயா?" என்று நரசிம்ம வர்மர் கேட்டபோது அவருடைய முகத்தில் புன்னகை தோன்றியது. "இல்லை, பிரபு! ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. பல்லவ ராஜ்யத்தின் நன்மைக்காக என்னை மணந்தீர்கள். வடக்கேயுள்ள ராட்சதப் பகைவனோடு சண்டை போடுவதற்காகத் தெற்கேயுள்ள மன்னர்களுடன் சிநேகமாயிருக்க வேண்டுமென்று என்னை மணந்தீர்கள். என் தமையனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. தங்கள் தந்தையின் உபதேசத்தைக் கேட்டு மணந்தீர்கள். இந்த அரண்மனைக்கு வந்த சில நாளைக்குள்ளேயே இதெல்லாம் நான் தெரிந்து கொண்டேன்..." "ஆயினும் ஒரு தடவையாவது இதையெல்லாம் பற்றி என்னிடம் நீ கேட்கவில்லை. ஆகா! பெண்களின் இருதயம் வெகு ஆழமானது என்று சொல்வது எவ்வளவு உண்மை?" என்று மனத்திற்குள் எண்ணிய வண்ணம் மாமல்லர் தன் பட்டமகிஷியின் முகத்தை உற்றுப் பார்த்தார். அந்தச் செந்தாமரை முகத்தில் கபடத்தின் அறிகுறியை அணுவளவும் அவர் காணவில்லை; எல்லையில்லாத நம்பிக்கையும் அளவு காணாத அன்பும் சாந்தமும் உறுதியும் காணப்பட்டன!

வானமாதேவி கூறினாள்: "சுவாமி! தாங்கள் எதற்காக என்னை மணந்து கொண்டீர்கள் என்பது பற்றி நான் என்றைக்கும் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் எதற்காகத் தங்களை மணந்தேன் என்பது என் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது. ஜயந்தவர்மன் கொள்ளிடக் கரையில் தங்களால் முறியடிக்கப்பட்டுத் திரும்பி வந்த செய்தியைக் கேட்டபோது, என் உள்ளம் தங்களைத் தேடி வந்து அடைந்தது. அடுத்த நிமிஷத்தில், மணந்தால் தங்களையே மணப்பது, இல்லாவிடில் கன்னிகையாயிருந்து காலம் கழிப்பது என்ற உறுதி கொண்டேன்; என் விருப்பம் நிறைவேறியது. தங்களை மணக்கும் பாக்கியத்தை அடைந்தேன். தங்கள் அரண்மனையின் ஒன்பது வருஷ காலம் எவ்வளவோ ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன். பிரபு! இந்த ஆனந்தம் என்றென்றைக்கும் நீடித்திருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படவில்லை. சில காலமாவது மற்றவர்களும் சந்தோஷமாயிருக்க வேண்டுமல்லவா, ஆயனர் மகளைச் சிறை மீட்டு அழைத்துக் கொண்டு தாங்கள் என்றைக்கு இந்த மாநகருக்கு திரும்பி வருகிறீர்களோ, அன்றைக்கே நான் இந்தப் புராதன பல்லவ சாம்ராஜ்யத்தின் தங்கச் சிம்மாசனத்திலிருந்தும், இந்தப் பூர்வீக அரண்மனையின் தந்தக் கட்டிலிலிருந்தும் கீழே இறங்கச் சித்தமாயிருப்பேன்" என்று தழுதழுத்த குரலில் கூறி வானமாதேவி கண்ணீர் ததும்பிய கரிய கண்களினால் மாமல்லரைப் பார்த்தாள். உணர்ச்சி ததும்பிய அந்த வார்த்தை ஒவ்வொன்றும் கள்ளம் இல்லாத உண்மை உள்ளத்திலேயிருந்து வந்தனவென்பதை மாமல்லர் தெளிந்து உவகை கொண்டார்.