சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/விழாவும் விபரீதமும்

28. விழாவும் விபரீதமும்


எத்தனையோ நூற்றாண்டு காலமாக நெடிது வளர்ந்து நீண்டு படர்ந்து ஓங்கித் தழைத்திருக்கும் ஆல விருக்ஷத்தின் காட்சி அற்புதமானது. அத்தகைய ஆலமரத்தின் விழுதுகள் காரணமாகத் தாய் மரத்தைச் சேர்ந்தாற்போல் கிளை மரங்கள் தோன்றித் தனித்த மரங்களைப் போலவே காட்சி தருவதும் உண்டு. ஸநாதன ஹிந்து மதமாகிய ஆலமரத்திலிருந்து அவ்விதம் விழுது இறங்கி வேர் விட்டுத் தனி மரங்களாகி நிற்கும் சமயங்கள் பௌத்தமும் சமணமும் ஆகும். அவ்விரு சமயங்களும் பழைய காலத்தில் பாரத நாட்டில் கலைச் செல்வம் பெருகியதற்குப் பெரிதும் காரணமாயிருந்தன.

அஜந்தா மலைப் பிராந்தியத்துக்குள்ளே மனிதர்கள் எளிதில் எட்ட முடியாத அந்தரங்கமான இடத்தில் மலையைப் பிளந்துகொண்டு பாதி மதியின் வடிவமாகப் பாய்ந்து சென்ற நதிக்கரையிலே இன்றைக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் புத்த பிக்ஷுக்கள் கருங்கற் பாறைகளைக் குடைந்து புத்த சைத்யங்களையும் விஹாரங்களையும் அமைக்கத் தொடங்கினார்கள். அது முதல் இரண்டாவது புலிகேசிச் சக்கரவர்த்தியின் காலம் வரையில், அதாவது ஏறக்குறைய அறுநூறு ஆண்டு காலம் அந்த அந்தரங்கப் பிரதேசத்தில் அற்புதமான சிற்ப சித்திரக் கலைகள் வளர்ந்து வந்தன. அழியாத கல்லில் அமைத்த சிலை வடிவங்களும், அமர வர்ணங்களில் தீட்டிய ஓவிய உருவங்களும் பல்கிவந்தன. பார்ப்போரின் கண்களின் மூலம் இருதயத்துக்குள்ளே பிரவேசித்து அளவளாவிப் பேசிக் குலாவும் தேவர்களும் தேவியர்களும் வீரர்களும் வீராங்கனைகளும் சௌந்தரிய புருஷர்களும் அழகே உருவமான நாரீமணிகளும் சைத்ரிக பிரம்மாக்களால் அங்கே சிருஷ்டிக்கப்பட்டு வந்தார்கள்.

அவ்வாறு அஜந்தாவிலே புதிய கலை சிருஷ்டி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அந்தப் பிரதேசம் கண்டிராத கோலாகலத் திருவிழா புலிகேசிச் சக்கரவர்த்தியின் ஆட்சி தொடங்கிய முப்பத்தாறாவது வருஷத்தில் அங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதுவே அந்தச் சளுக்கப் பேரரசன் ஆட்சியின் கடைசி ஆண்டுமாகும். பழைய பாரத நாட்டில் இராஜாங்கங்களும் இராஜ வம்சங்களும் மாறிய போது சமயங்களுடைய செல்வாக்கு மாறுவதும் சர்வசாதாரணமாயிருந்தது. இந்த நாளில் போலவே அந்தக் காலத்திலும் விசால நோக்கமின்றிக் குறுகிய சமயப் பற்றும் துவேஷ புத்தியும் கொண்ட மக்கள் இருக்கவே செய்தார்கள். சமரச புத்தியுடன் சகல மதங்களையும் ஒருங்கு நோக்கிக் கலைகளை வளர்த்து நாட்டிற்கே மேன்மையளித்த புரவலர்களும் அவ்வப்போது தோன்றினார்கள்.

நம்முடைய கதை நடந்த காலத்தில் வடக்கே ஹர்ஷவர்த்தனரும், தெற்கே மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் ஆகியவர்களும் அத்தகைய சமரச நோக்கம் கொண்ட பேரரசர் திலகங்களாகப் பாரத நாட்டில் விளங்கினார்கள். வாதாபிப் புலிகேசிச் சக்கரவர்த்தியும் காஞ்சிப் படையெடுப்பிலிருந்து திரும்பி வந்த பிறகு, நாளடைவில் அத்தகைய பெருந்தகையாரில் ஒருவரானார். அஜந்தா புத்த சங்கிராமத்துக்கு அவர் அளவில்லாத கொடைகளை அளித்துக் கலை வளர்ச்சியில் ஊக்கம் காட்டி வந்தார். இது காரணமாக, அஜந்தாவின் புத்த பிக்ஷுக்கள் அறுநூறு வருஷமாக அங்கு நடவாத காரியத்தைச் செய்யத் தீர்மானித்தார்கள். அதாவது புலிகேசிச் சக்கரவர்த்தியை அஜந்தாவுக்கு அழைத்து உபசரிக்கவும் அது சமயம் சிற்பக் கலை விழாக் கொண்டாடவும் ஏற்பாடு செய்தார்கள்.

சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களும் வந்து சேர்வதற்காகக் காடு மலைகளைச் செப்பனிட்டு இராஜபாட்டை போடப்பட்டது. அந்தப் பாதை வழியாக யானைகளிலும் குதிரைகளிலும் சிவிகைகளிலும் ஏறிச் சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களும் மந்திரி தந்திரிகளும் சேனாதிபதிகளும் மற்றும் சளுக்க சாம்ராஜ்யத்தின் பிரசித்த கவிஞர்களும் கலை நிபுணர்களும் அயல்நாடுகளிலிருந்து வந்திருந்த விசேஷ விருந்தாளிகளும் மேற்படி கலை விழாவுக்காக அஜந்தா வந்து சேர்ந்தார்கள். அவர்களனைவரும் அஜந்தா புத்த பிக்ஷுக்களால் இராஜோபசார மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்கள். வந்த விருந்தாளிகள் கும்பல் கும்பலாகப் பிரிந்து ஒவ்வொரு சைத்யத்துக்கும், விஹாரத்துக்கும் சென்று ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களையும் சித்திரங்களையும் பார்த்துக் களித்துக் கொண்டு வந்தார்கள். நல்ல வெயில் எரித்த உச்சி வேளையிலேதான் விஹாரங்களின் உட்சுவர்களில் தீட்டியிருந்த உயிரோவியங்களைப் பார்ப்பது சாத்தியமாகையால் விருந்தாளிகள் அனைவரும் அன்றிரவு அங்கேயே தங்கியிருந்து மறுநாளும் மேற்படி சித்திரக் காட்சிகளைப் பார்த்து விட்டுப் போவது என்று ஏற்பாடாகியிருந்தது. சக்கரவர்த்தியின் அன்றைய முக்கிய அலுவல்கள் எல்லாம் முடிந்த பிறகு பிற்பகலில் சிரமப் பரிகாரமும் செய்து கொண்டாயிற்று.

மாலைப் பொழுது வந்தது; மேற்கே உயரமான மலைச் சிகரங்களுக்குப் பின்னால் சூரியன் மறைந்து கீழே கீழே போய்க் கொண்டிருந்தது. அம்மலைச் சிகரங்களின் நிழல்கள் நேரமாக ஆகக் கிழக்கு நோக்கி நீண்டு கொண்டே வந்தன. கிழக்கேயிருந்த சில உயர்ந்த சிகரங்களில் படிந்த மாலைச் சூரியனின் பொன் கிரணங்கள் மேற் சொன்ன கரிய நிழல் பூதங்களால் துரத்தப்பட்டு அதிவேகமாகக் கீழ்த்திசையை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தன. மலையை அர்த்த சந்திர வடிவமாகப் பிளந்து கொண்டு சென்ற வாதோரா நதியின் வெள்ளமானது ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் ஆங்காங்கு துள்ளி விளையாடிக் கொண்டும் அந்த விளையாட்டிலே விழுந்து எழுந்து இரைந்து கொண்டும் அதிவிரைவாகச் சென்று கொண்டிருந்தது. சரிவான பாறைச் சுவர்களிலே கண்ணுக்கெட்டிய தூரம் பாரிஜாத மரங்கள் இலையும் பூவும் மொட்டுக்களுமாய்க் குலுங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் இடையிடையே சரக்கொன்றை மரங்கள் கண்ணைப் பறித்த பொன்னிறப் பூங்கொத்துக்களைச் சரம் சரமாகத் தொங்க விட்டுக் கொண்டு பரந்து நின்றன. நதி ஓரத்துப் பாறை ஒன்றில் இரண்டு கம்பீர ஆகிருதியுள்ள புருஷர்கள் அமர்ந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். சற்று அருகில் நெருங்கிப் பார்த்தோமானால் அவர்கள் புலிகேசிச் சக்கரவர்த்தியும் நாகநந்தி பிக்ஷுவுந்தான் என்பதை உடனே தெரிந்து கொள்வோம்.

முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு எந்த வாதோரா நதிக்கரையின் பாறையின் மேல் உட்கார்ந்து அண்ணனும் தம்பியும் தங்கள் வருங்காலப் பகற்கனவுகளைப் பற்றி சம்பாஷித்தார்களோ, வாதாபி சிம்மாசனத்தைக் கைப்பற்றிச் சளுக்க ராஜ்யத்தை மகோந்நத நிலைக்குக் கொண்டு வருவது பற்றிப் பற்பல திட்டங்களைப் போட்டார்களோ, அதே பாறையில் இன்று அவர்கள் உட்கார்ந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அன்றைக்கும் இன்றைக்கும் அவர்களுடைய தோற்றத்திலேயும் சம்பாஷணையின் போக்கிலேயும் மிக்க வித்தியாசம் இருந்தது. பிராயத்தின் முதிர்ச்சியோடு கூட அவர்களுடைய வெளி உலக அனுபவங்களும் அக உலக அனுபவங்களும் அவர்கள் ஈடுபட்ட கோரமான இருதயப் போராட்டங்களும் ஆசாபாசங்களும் கோபதாபங்களும் சேர்ந்து, முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அதே நதியில் பிரதிபலித்த பால்வடியும் இளம் முகங்களைக் கோடுகளும் சுருக்கங்களும் விழுந்த கொடூர முகங்களாகச் செய்திருந்தன.

முக்கியமாக, நாகநந்தி பிக்ஷுவின் முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. இரத்தம் கசிவது போல் சிவந்திருந்த கண்களில் அடிக்கடி கோபாக்னியின் ஜுவாலை மின்னலைப் போல் பிரகாசித்தது. அவர் கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் நெருப்பைக் கக்கிக் கொண்டு பாயும் அக்னி யாஸ்திரத்தைப் போல் புறப்பட்டுச் சீறிக் கொண்டு பாய்ந்தன. "ஆ! தம்பி! என்னுடைய விருப்பம் என்னவென்றா கேட்கிறாய்; சொல்லட்டுமா? இந்தக் கணத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு இந்த அஜந்தா மலையானது அப்படியே அதல பாதாளத்தில் அமிழ்ந்து விட வேண்டுமென்பது என் விருப்பம். ஆயிரம் இடிகள் சேர்ந்தாற்போல் விழுந்து இங்குள்ள சைத்யங்களையும் விஹாரங்களையும், இங்கே வசிக்கும் பிக்ஷுக்களையும், உன்னையும் உன் பரிவாரங்களையும் என்னையும் அடியோடு அழித்து நாசமாக்க வேண்டுமென்பது என் விருப்பம்!" என்றார் நாகநந்தி.

இதைக் கேட்ட புலிகேசி, சாவதானமாக, "அடிகளே! அஜந்தாவுக்கு வந்தது உண்மையிலேயே பலன் தந்து விட்டது. எனக்குச் சொல்ல முடியாத சந்தோஷாமாயிருக்கிறது. கொஞ்ச காலமாகத் தாங்கள் ரொம்பவும் பரம சாதுவாக மாறிக் கொண்டு வந்தீர்கள். இன்றுதான் பழைய நாகநந்தி பிக்ஷுவாகக் காட்சி அளிக்கிறீர்கள்!" என்று சொல்லிப் புன்னகை புரிந்தார். "ஆம், தம்பி, ஆம்! இன்று பழைய நாகநந்தி ஆகியிருக்கிறேன். அதன் பலனை நீயே அனுபவிக்கப் போகிறாய் ஜாக்கிரதை!" என்று பிக்ஷு நாக சர்ப்பத்தைப் போல் சீறினார்.

"அண்ணா! என்னை என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறாய்?" என்று புலிகேசி கேட்டார். "இன்று இராத்திரி நீ தூங்கும் போது இந்த விஷக் கத்தியை உன் மார்பிலே பாய்ச்சி உன்னைக் கொன்று விடப் போகிறேன்..." புலிகேசி "ஹா ஹா ஹா" என்று சிரித்தார். பிறகு, "அப்புறம் என்ன செய்வீர்கள்? அதாவது என் பிரேதத்தை என்ன செய்வதாக உத்தேசம்?" என்று பரிகாசக் குரலில் வினவினார். "இந்த நதியில் கொண்டு வந்து போட்டு விடுவேன்." "அப்புறம்? கேட்கிறவர்களுக்கு என்ன சொல்லுவீர்கள்?" "ஒருவரும் கேட்க மாட்டார்கள்!" "ஏன் கேட்க மாட்டார்கள்? அஜந்தாவுக்கு வந்த சக்கரவர்த்தி இரவுக்கிரவே எப்படி மறைந்தார் என்று சளுக்க ராஜ்யத்தின் பிரஜைகள் கேட்க மாட்டார்களா?" "கேட்கமாட்டார்கள்! சக்கரவர்த்தி மறைந்தது அவர்களுக்குத் தெரிந்தால் அல்லவா கேட்பார்கள்? ஒருவருக்கும் அது தெரியப் போவதில்லை." "அது எப்படி?"

"ஒரு சமயம் நான் உன் உடைகளைத் தரித்து அடிபட்டுச் சித்திரவதைக்குள்ளாகி உன் உயிரைக் காப்பாற்றினேன். இன்னொரு சமயம் நான் உன்னைப் போல் வேஷம் தரித்துப் போர்க்களத்தில் நின்று மகேந்திரனோடு போராடி அவன் மீது விஷக் கத்தியை எறிந்து கொன்றேன். அதே உருவப் பொருத்தம் இப்போதும் எனக்குத் துணை செய்யும். நீ மறைந்ததையே ஜனங்கள் அறிய மாட்டார்கள். நாகநந்தி பிக்ஷு மறைந்ததைப் பற்றி யாரும் கவனிக்க மாட்டார்கள். நியாயமாக இந்தச் சளுக்க ராஜ்யம் எனக்கு உரியது. நான் மனமார இஷ்டப்பட்டு உனக்கு இந்தச் சாம்ராஜ்யத்தைக் கொடுத்தேன். சென்ற முப்பத்தைந்து வருஷமாக உன்னுடைய க்ஷேமத்தையும் மேன்மையையும் தவிர வேறு எண்ணமே இல்லாமலிருந்தேன். ஆனால், நெஞ்சில் ஈவிரக்கமற்றவனும், சகோதர வாஞ்சையற்றவனும் நன்றியற்ற கிராதகனுமான நீ என்னை இன்று பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினாய்! ஆ! இந்தப் பூமி பிளந்து உன்னை இன்னும் விழுங்கவில்லையே என்பதை நினைத்துப் பார்த்தால் எனக்குப் பரம ஆச்சரியமாயிருக்கிறது!"

"அண்ணா! அண்ணா! நீ என்ன சொல்கிறாய்? என்னை இப்படியெல்லாம் சபிக்க உனக்கு எப்படி மனம் வருகிறது? உன்னை என்ன அவமானப்படுத்தி விட்டேன்?" "இன்னும் என்ன அவமானம் செய்ய வேண்டும்? சிவகாமி உன் காலில் விழுந்து மன்னிப்புக் கோரியதாக அழியாத வர்ணத்தில் சித்திரம் எழுதச் செய்ததைக் காட்டிலும் வேறு என்ன அவமானம் எனக்கு வேண்டும்? இதற்காகவா என்னை நீ இங்கே அழைத்து வந்தாய்? இதற்காகவா இந்தக் கலைவிழா நடத்தினாய்? ஆகா! துஷ்ட மிருகமே! ஒரு கலையைக் கொண்டு இன்னொரு கலையை அவமானப்படுத்திய உனக்காக எரிவாய் நகரம் காத்திருக்கிறது, பார்!"

"அண்ணா! உனக்கு என்ன வந்து விட்டது! அந்தப் பல்லவ நாட்டு நடனக்காரி உன்னை என்ன செய்து விட்டாள்? உடல் இரண்டும் உயிர் ஒன்றுமாக இருந்த சகோதரர்களை இப்படிப் பிரிப்பதற்கு அவளிடம் அப்படி என்ன சக்தி இருக்கிறது? அண்ணா! அண்ணா! என் முகத்தைப் பார்த்துச் சொல்லு! நமது முப்பத்தைந்து வருஷத்து அன்யோன்ய சிநேகத்தை நினைத்துக் கொண்டு சொல்லு! அன்றொரு நாள் இதே பாறை மீது உட்கார்ந்து நாம் கட்டிய ஆகாசக் கோட்டைகளையும், அவற்றையெல்லாம் பெரும்பாலும் காரியத்தில் நிறைவேற்றி வைத்ததையும் எண்ணிப் பார்த்துச் சொல்லு!.... இந்த தெய்வீக வாதோர நதியின் சாட்சியாக, இந்தப் பர்வத சிகரங்கள் சாட்சியாக, ஆகாசவாணி பூமிதேவி சாட்சியாகச் சொல்லு! என்னைக் காட்டிலும் உனக்கு அந்தக் காஞ்சி நகரத்துப் பெண் மேலாகப் போய் விட்டாளா? அவளுக்காகவா இப்படியெல்லாம் நீ எனக்குச் சாபம் கொடுக்கிறாய்?"

முன்னைக் காட்டிலும் கடினமான, குரோதம் நிறைந்த குரலிலே புத்த பிக்ஷு கூறினார்; "ஆமாம், ஆமாம்! புத்த பகவானுடைய பத்ம பாதங்கள் சாட்சியாகச் சொல்லுகிறேன். சங்கத்தின் மீதும் தர்மத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். உன்னைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு எனக்குச் சிவகாமி மேலானவள்தான்! நீயும் உன் சாம்ராஜ்யமும் உன் புத்திரமித்திரர்களும் அவளுடைய கால் தூசுக்குச் சமமாக மாட்டீர்கள். அவளை அவமானப்படுத்திய நீயும் உன் சந்ததிகளும் சர்வ நாசமடையப் போகிறீர்கள்! அந்தச் சரணாகதி சித்திரத்தை எழுதிய சித்திரக் கலைஞனின் கதி என்ன ஆயிற்று என்று உனக்குத் தெரியுமா?" "அடிகளே! அந்தத் துர்ப்பாக்கியனைத் தாங்கள் என்ன செய்து விட்டீர்கள்?" புத்த பிக்ஷு பயங்கரமான சிரிப்பு ஒன்று சிரித்தார். "பார்த்துக் கொண்டேயிரு! இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் யாராவது வந்து சொல்வார்கள்!"

"அண்ணா! ஒன்று நான் தெரிந்து கொண்டேன். இளம் பிராயத்திலிருந்தே பிரம்மசரியத்தையும் பிக்ஷு விரதத்தையும் மேற்கொள்வது ரொம்பத் தவறானது. இல்வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து விட்டுத் தொலைத்த பிறகுதான் சந்நியாசம் மேற்கொள்ள வேண்டும். வாலிபத்திலேயே வாழ்க்கை வைராக்கியம் கொள்கிறவர்கள் உன்னைப் போல்தான் பிற்காலத்தில் யாராவது ஒரு மாயக்காரியின் மோக வலையில் விழுந்து பைத்தியமாகி விடுகிறார்கள்!" "புலிகேசி! இத்தனை நேரம் பொறுத்திருந்தேன். இனிமேல் சிவகாமியைப் பற்றி நீ ஒரு வார்த்தை சொன்னாலும் என்னால் பொறுக்க முடியாது." "அடிகளே! சிவகாமி தேவியிடம் தாங்கள் இவ்வளவு பரிவு காட்டுகிறீர்களே? அவளுடைய கௌரவத்தை இவ்வளவு தூரம் காப்பாற்றுகிறீர்களே? தங்களிடம் சிவகாமி தேவிக்கு இவ்வளவு தூரம் பரிவு இருக்கிறதா? தாங்கள் அவளிடம் வைத்திருக்கும் அபிமானத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது அவளுக்கு உண்டா?..."

புலிகேசி சக்கரவர்த்தியின் மேற்படி கேள்வி புத்த பிக்ஷுவின் உள்ளத்தை வாள் கொண்டு அறுப்பது போல் அறுத்தது என்பதை அவருடைய முகக் குறி காட்டியது. அந்தச் சொல்ல முடியாத வேதனையை வெகு சீக்கிரத்திலேயே நாகநந்தி சமாளித்துக் கொண்டு திடமான குரலில், "அந்தக் கேள்வி கேட்க உனக்கு யாதொரு பாத்தியதையும் இல்லை, ஆனாலும் சொல்லுகிறேன். சிவகாமி உன்னைப் போல் அவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவள் அல்ல. அவளுக்கு என் பேரில் பிரியம் இருக்கத்தான் செய்கிறது" என்றார். "அண்ணா? நீ இப்படி ஏமாறக் கூடியவன் என்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை!" "தம்பி! நான் ஏமாறவில்லை; நாம் அஜந்தா யாத்திரை கிளம்பிய அன்று இரவு சிவகாமி என் உயிரைக் காப்பாற்றினாள்." "அது என்ன? உன் உயிருக்கு அப்படி என்ன ஆபத்து வந்தது, சிவகாமி காப்பாற்றுவதற்கு?" "இந்த விஷக் கத்தியால் என்னை நானே குத்திக் கொள்ளப் போனேன். சிவகாமி என் கையைப் பிடித்து என்னை காப்பாற்றினாள்" என்று புத்த பிக்ஷு கூறிய போது, அவரது அகக் கண்முன்னால் அந்தக் காட்சி அப்படியே தோன்றியது. அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பிற்று. புலிகேசி புன்னகை புரிந்து, "ஐயோ! மகா மேதாவியான உன்னுடைய புத்தியா இப்படி மாறிப் போய் விட்டது? சிவகாமி எதற்காக உன் உயிரைக் காப்பாற்றினாள், தெரியுமா? அவளுடைய காதலன் மாமல்லனுடைய கையினால் நீ சாக வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மூடப்பெண் இன்னமும் அப்படிக் கனவு கண்டு கொண்டிருக்கிறாள்!" என்றார்.

மேலே விவரித்த அண்ணன் தம்பி சம்பாஷணை நேயர்களுக்கு நன்கு விளங்கும் பொருட்டு அன்று மத்தியானம் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்க வேண்டும். புலிகேசிச் சக்கரவர்த்தியும் புத்த பிக்ஷுவும் சீன யாத்திரிகரும் மற்றும் சாம்ராஜ்யத்தின் பிரமுகர்களும் ஒரு கும்பலாக அஜந்தாவின் அதிசயச் சித்திரங்களைப் பார்வையிட்டுக் கொண்டு வந்தார்கள். சைத்தியங்கள், விஹாரங்கள் இவற்றின் உள்சுவர்களிலே புத்த பகவானுடைய தெய்வீக வாழ்க்கை வரலாறும், அவருடைய பூர்வ அவதாரங்களின் சம்பவங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன. வெளித் தாழ்வாரச் சுவர்களிலோ அந்தக் காலத்துச் சமூக வாழ்க்கைச் சித்திரங்கள் சில காணப்பட்டன. அப்படிப்பட்ட நவீன வாழ்க்கைச் சித்திரங்களில் புலிகேசி சக்கரவர்த்தியின் வாழ்க்கை சம்பந்தமான இரு முக்கிய சம்பவங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று, புலிகேசிச் சக்கரவர்த்தி இராஜ சபையில் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்க, பாரஸீக மன்னனிடமிருந்து வந்த தூதர்கள் சக்கரவர்த்திக்குக் காணிக்கைகள் சமர்ப்பித்த காட்சியாகும்.

மேற்படி காட்சி எல்லாருக்கும் மிக்க குதூகலத்தை அளித்ததில் வியப்பொன்றுமில்லை. ஆனால், மற்றொரு சித்திரம் அப்படிக் குதூகலத்தை உண்டாக்குவதற்குப் பதிலாக அனைவருக்கும் ஒருவித அசந்துஷ்டியை உண்டாக்கிப் பின்னால் பெரும் விபரீதம் நேர்வதற்கும் காரணமாயிற்று. அந்த விபரீதச் சித்திரம், புலிகேசிச் சக்கரவர்த்தியின் பாதங்களில் ஒரு நடனக் கலைவாணி தலையை வைத்து வணங்கி மன்னிப்புக் கோருவது போல் அமைந்த சித்திரந்தான். இதைத் தீட்டிய ஓவியக் கலைஞன் சிறந்த மேதாவி என்பதில் சந்தேகமில்லை. புலிகேசியின் முகத்தையும் தோற்றத்தையும் அமைப்பதில் அவன் கற்பனாசக்தியின் உதவியைப் பயன்படுத்தியிருந்தான். அந்தச் சித்திரத்தில் புலிகேசி துஷ்ட நிக்கிரஹம் செய்வதற்கு முனைந்திருக்கும் தேவேந்திரனையொத்துக் கோப சௌந்தரியம் பொருந்தி விளங்கினான். கீழே கிடந்த பெண்ணின் தோற்றத்தில் அளவில்லாத சோகத்தையும் மன்றாடி மன்னிப்புக் கோரும் பாவத்தையும் சித்திரக் கலைஞன் வெகு அற்புதமாக வரைந்திருந்தான். பக்கத்திலே நின்ற சேடிப் பெண்களின் பயந்த, இரக்கம் வாய்ந்த தோற்றத்தைக் கொண்டு அந்த நடனப் பெண்ணின் சரணாகதியைப் பன்மடங்கு பரிதாபமுள்ளதாகச் செய்திருந்தான்.

இவ்வளவுக்கும் பின்னால் சற்றுத் தூரத்திலிருந்து புத்த பிக்ஷு ஒருவர் கவலை ததும்பிய முகத் தோற்றத்துடனே விரைந்து வருவதையும் காட்டியிருந்தான். அந்தப் பிக்ஷுவைப் பார்த்தவுடனேயே, அவர் மேற்படி நடனப் பெண்ணை இராஜ தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே விரைந்து வருகிறார் என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் உதயமாகும்படி இருந்தது. சித்திரங்களை விளக்கிக் கூறி வந்தவர் மேற்படி சித்திரத்தின் தாத்பரியத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொன்னவுடனேயே அங்கிருந்தவர்கள் அனைவரும் ஏக காலத்தில் நாகநந்தி பிக்ஷுவை நோக்கினார்கள். ஒரு கணநேரம் நாகநந்தியின் முகம் படம் எடுத்த பாம்பைப் போல் காட்சி அளித்தது. அடுத்தகணம் நாகநந்தி தம்மை நூறு கண்கள் கூர்ந்து நோக்குகின்றன என்பதை உணர்ந்தார். உடனே அவருடைய முகபாவமும் முற்றிலும் மாறி அதில் புன்னகை தோன்றியது. "அற்புதம்! அற்புதம்! இந்தச் சித்திரத்துக்கு இணையான சித்திரம் உலகத்திலேயே இருக்க முடியாது! என்ன பாவம்? என்ன கற்பனை இதைத் தீட்டிய ஓவியப் பிரம்மா யார்? அவருக்குத் தக்க வெகுமதி அளிக்க வேண்டும்!" என்று நாகநந்தி கூறினார்.