சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/கடவுள் காப்பாற்றினார்
மின்னல் மின்னுகிற நேரத்தில் மதயானையின் மீது ஓர் இளம்பிள்ளை வேலை எறிந்ததையும் யானை திரும்பி அவனைத் துரத்திச் சென்றதையும், சிவிகையிலிருந்த பெரியவரும் இளம் பெண்ணும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாலிபனின் தீரமும் துணிச்சலும் அவர்களுக்குப் பெரும் வியப்பை உண்டு பண்ணின. அந்தப் பிள்ளைக்கு அபாயம் நேராமல் இருக்க வேண்டுமேயென்று அவர்களுடைய உள்ளங்கள் துடித்தன. அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆவலினால் சிவிகைக்குள்ளிருந்து பரபரப்புடன் வௌியே வந்தார்கள். அந்தச் சமயம் அவ்விசாலமான வீதி, ஜன சூனியமாகக் காணப்பட்டது ஓர் ஈ காக்கை அங்கே கிடையாது.
பல்லக்கிலிருந்து இறங்கிய மனிதர் அந்த இளம் பெண்ணின் முதுகில் கையை வைத்து அணைத்துக்கொண்டு அன்பு கனிந்த குரலில், "பயமாயிருக்கிறதா, சிவகாமி?" என்று கேட்டார். "இல்லவே இல்லை, அப்பா! பயமில்லை!" என்றாள் சிவகாமி. பிறகு அவள், "நல்ல சமயத்தில் அந்த வாலிபன் மட்டும் வந்து யானையைத் திருப்பியிராவிட்டால் நம்முடைய கதி என்னவாகியிருக்கும்?" என்றாள். "பல்லக்கு சுக்கு நூறாகியிருக்கும்!" என்றார் தந்தை. "ஐயோ!" என்றாள் அந்த இளம் பெண். "அதற்காகத்தான் சிவிகையை கீழே வைத்துவிட்டுச் சிவிகை தூக்கிகளை ஓட்டமெடுக்கச் சொன்னேன். நாமும் பக்கத்து வீட்டுக்குள் ஓடித் தப்பியிருக்கலாம். ஆனாலும் வந்த அபாயம் பெரிதுதான்!" என்றார் பெரியவர்.
நாலாபுறமும் சிதறி ஓடிய ஜனங்கள் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒவ்வொருவராகத் திரும்பி வர ஆரம்பித்தார்கள். வந்தவர்கள் எல்லாரும் அங்கு நிகழ்ந்தவைகளைப் பற்றி ஏக காலத்தில் பேச ஆரம்பிக்கவே, சற்றுமுன் நிசப்தம் குடிகொண்டிருந்த இடத்தில் 'கல கல' என்று பேச்சொலி எழுந்தது. "ஆகா! ஆயனரும் அவர் மகளும் அல்லவா! நல்ல வேளையாகப் போயிற்று! கடவுள்தான் காப்பாற்றினார்!" என்று ஜனங்கள் பலவாறாகப் பேசிக்கொண்டு நின்றார்கள். கடவுள் காப்பாற்றினார் என்றாலும், அவர் அந்த வீர வாலிபனுடைய உருவத்தில் வந்தல்லவா காப்பாற்றினார்! அந்தப் பிள்ளை யாராயிருக்கும்? அவனுடைய கதி என்னவாயிற்று? இதைப் பற்றித்தான் ஆயனரும் அவருடைய மகளும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த இளம்பிள்ளையைப் பற்றி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கக் கூடியவர்கள் யாருமில்லை.
ஆயனர், யானை கடைசியாக நின்ற இடத்தின் அருகே சென்றார். அங்கே யானையின் காலில் மிதிபட்டு முறிந்து கிடந்த வேலைக் கையில் எடுத்துக்கொண்டார். இன்னும் சற்றுத் தூரத்தில் அவிழ்ந்து கிடந்த மூட்டையை அவர் கட்டி எடுத்துக்கொண்டு திரும்பிச் சிவிகையண்டை வந்தார். சிவகாமி அந்த முறிந்த வேலை வாங்கி வியப்புடன் நோக்கினாள். ஆயனர், "சிவகாமி! இங்கே வீணாக நின்று கொண்டிருப்பதில் பயனில்லை. நாம் போகலாம்; எல்லா விவரங்களும் தானே நாளைக்குத் தெரிந்து விடுகிறது" என்றார். தந்தையும் மகளும் சிவிகைக்குள் ஏற உத்தேசித்த சமயத்தில் சற்றுத் தூரத்தில் குதிரைகள் அதிவேகமாக வரும் சப்தம் கேட்டுத் தயங்கி நின்றார்கள்.
நிலா வௌிச்சத்தில், முன்னால் இரண்டு வெண்புரவிகள் பாய்ந்து வருவதும், பின்னால் ஐந்தாறு குதிரைகள் தொடர்ந்து வருவதும் தெரிந்தன. முன்னால் வந்த குதிரைகளில் இரண்டு கம்பீர புருஷர்கள் ஏறி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து குதிரைகளின் மீது வேல் பிடித்த வீரர்கள் காணப்பட்டனர். குதிரைகள் சிவிகைக்குப் பக்கத்தில் வந்து நின்றதும் ஜனங்கள் பயபக்தியுடன் சிறிது விலகிக் கொண்டார்கள்.
"மகேந்திர மகா பல்லவர் வாழ்க!" "திரிபுவன சக்கரவர்த்தி வாழ்க!" குணபுர மகாராஜா வாழ்க!" "குமார சக்கரவர்த்தி மாமல்லர் வாழ்க!" என்ற கோஷங்கள் நாற்புறமும் எழுந்தன. வெண்புரவிகளில் முன்னால் வந்தவர்கள் மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய ஏக புதல்வர் நரசிம்ம பல்லவருந்தான் என்பதை ஆயனரும், சிவகாமியும் உணர்ந்ததும் அவர்களுக்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று. சிவகாமி ஆயனருக்குப் பின்னால் ஒதுங்கி நாணத்துடன் நின்றாள். அவளுடைய விசாலமான கரிய கண்கள் மகேந்திர சக்கரவர்த்திக்குப் பின்னால் குதிரைமீது வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியை நோக்கின.
மகேந்திர சக்கரவர்த்தி, "ஆயனரே! இது என்ன? நான் கேள்விப்பட்டது விபரீதமாக அல்லவா இருக்கிறது?" என்று சொல்லிக்கொண்டே குதிரை மீதிருந்து இறங்கினார். "ஏகாம்பரர் அருளால் அபாயம் ஒன்றும் நேரவில்லை, பிரபு!" என்றார் ஆயனர். "சிவகாமி ரொம்பவும் பயந்து போய்விட்டாளா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "சிவகாமி பயப்படவில்லை இதையெல்லாம் அவள் ஏதோ வேடிக்கையென்று எண்ணிக்கொண்டிருக்கிறாள்!" என்று ஆயனர் கூறி, அன்பு நிறைந்த கண்களால் தமக்குப் பின்னால் அடக்கத்துடன் நின்ற சிவகாமியைப் பார்த்தார்.
அப்போது சக்கரவர்த்தியும் அவளைப் பரிவுடன் நோக்கி, "சிவகாமி! ஏன் தலைகுனிந்துகொண்டிருக்கிறாய்? அரங்கேற்றத்தின்போது நடுவில் போய்விட்டேனே என்று என் பேரில் மனஸ்தாபமா?" என்றார். சிவகாமியின் முகத்தில் நாணத்துடன் கூடிய புன்னகை மலர்ந்தது அவள் மௌனமாயிருந்தாள். அப்போது ஆயனர், "பல்லவேந்திரா! சிவகாமிக்கு அவ்வளவு தெரியாதா? ஏதோ மிகவும் முக்கியமான காரியமாதலால்தான் தாங்கள் நடுவில் எழுந்து போயிருக்க வேண்டும்..." என்றார். "ஆமாம், ஆயனரே! ரொம்பவும் முக்கியமான காரியந்தான். எல்லாம் பிறகு விவரமாகச் சொல்லுகிறேன். மந்திராலோசனை முடிந்து வௌியில் வந்ததும் உங்களைப் பற்றி விசாரித்தேன். நீங்கள் புறப்பட்டு விட்டதாகத் தெரிந்தது. ஏன் இவ்வளவு அவசரமாகக் கிளம்பினீர்கள்?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.
"இராத்திரி வீடு போய்ச் சேர்ந்தால்தானே காலையில் என் வேலையைத் தொடங்கலாம்? ஒருநாள் என்றால், ஒருநாள் வீணாகப் போக வேண்டாமென்றுதான் இன்றே புறப்பட்டேன், பிரபு!" "ஆமாம்; உமது தெய்வீகச் சிற்பக் கலையை விட்டுவிட்டு உம்மால் ஒருநாள் கூட இருக்கமுடியாதுதான். இப்போதும் இராத்திரியே போவதாகத்தான் உத்தேசமா?" "ஆம், பல்லவேந்திரா! பட்டப் பகலைப்போல் நிலா எரிகிறது இரவு போய்விடுவதே சௌகரியம்." "இந்த வெண்ணிலாவைப் பார்த்தால் எனக்குக்கூட உம்முடன் வரவேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால், அது முடியாத காரியம். நாளை அல்லது மறுநாள் வருகிறேன்" என்று கூறிச் சக்கரவர்த்தி திரும்பிப் பார்த்தார்.
அப்போது சக்கரவர்த்திக்குப் பின்னால் இன்னொரு வெண்புரவியின் மேலிருந்த நரசிம்மவர்மர் வெகு லாகவத்துடன் குதிரை மேலிருந்து கீழே குதித்துச் சக்கரவர்த்தியின் பக்கத்தில் வந்து, "அப்பா! யானையின் மீது வேல் எறிந்த வாலிபனைப்பற்றி விசாரிக்கவில்லையே?" என்று கூறிவிட்டு ஆயனரைப் பார்த்து, "அந்த வாலிபன் யார்? அவன் எங்கே சென்றான்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார். "அதுதான் தெரியவில்லை வேலை எறிந்ததும் அவன் மின்னலைப் போல் மறைந்துவிட்டான். ஆனால், அப்படி மறைந்ததனாலேயே உயிர்தப்பிப் பிழைத்தான். தேசாந்தரம் வந்த பிள்ளையாகத் தோன்றியது" என்றார் ஆயனர்.
குமார சக்கரவர்த்தி, ஆயனருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் மட்டும் ஆயனருக்குப் பின்னால் இருந்த சிவகாமியின் மீது நின்றன. நரசிம்மவர்மர் சற்றுத் தூரத்தில் குதிரைமீதிருந்தபோது அவரை ஏறிட்டுத் தீவிர நோக்குடன் பார்த்த சிவகாமியோ இப்போது அவர் பக்கமே பார்க்காமல் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தரையில் அவள் அருகில், சற்று முன்னால் அவள் கையிலிருந்து நழுவிய முறிந்த வேல் கிடந்தது. அதைப் பார்த்த நரசிம்மவர்மர், "சிவகாமி! இது என்ன?" என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் சென்றார். சிவகாமி சிறிது பின்வாங்கி, முறிந்த வேலைத் தரையிலிருந்து எடுத்து அவர் பக்கம் நீட்டினாள். அதை நரசிம்மவர்மர் வாங்கிக் கொண்ட போது, அவருடைய கைவிரல்கள் சிவகாமியின் விரல்களைத் தீண்டியிருக்கவேண்டும். தேள் கொட்டியவர்களைப் போல் அவர்கள் அவசரமாக விலகிக் கொண்டதிலிருந்து இதை ஊகிக்கக்கூடியதாயிருந்தது.
நரசிம்மவர்மர் தம் தேகத்தில் ஏற்பட்ட படபடப்பை ஒருவாறு சமாளித்து அடக்கிக்கொண்டு, ஆயனரைப் பார்த்து, "உங்களை மத யானையின் கோபத்திலிருந்து காப்பாற்றியது இந்த வேல்தானா, ஆயனரே?" என்று கேட்டார். "ஆமாம், பல்லவ குமாரா!" என்று ஆயனர் மேலும் ஏதோ சொல்லுவதற்குள் மாமல்லர் தந்தையைப் பார்த்து, "அப்பா! இந்த வேலுக்கு உடையவனைக் கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும். அவன் நல்ல சமயத்தில் இத்தகைய வீரச் செயலைப் புரிந்திராவிட்டால், பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பியை அல்லவா இந்நேரம் இழந்திருப்போம்?" என்றார்.
அதற்குச் சக்கரவர்த்தி, "மகா சிற்பியை மட்டும்தானா? பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த கலைவாணியையும் இழந்திருப்போம்! அந்த வீரனைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியந்தான். இவர்கள் இப்போது புறப்பட்டுச் செல்லட்டும் ஏற்கனவே நேரம் அதிகமாகி விட்டது!" என்று சொல்லிவிட்டுச் சிவகாமியைப் பார்த்து, "குழந்தாய்! உன்னுடைய ஆட்டம் இன்று அற்புதமாயிருந்தது. முழுமையும் பார்க்கத் தான் முடியாமல் போயிற்று" என்றார். பின்னர் அவள் தந்தையை நோக்கி, "ஆயனரே! உம்முடன் பேசவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. சீக்கிரத்தில் மாமல்லபுரம் வருகிறேன் இப்போது ஜாக்கிரதையாய்ப் போய்ச் சேருங்கள்" என்று சொன்னார்.
அங்கே தாம் நிற்கும் வரையில் ஆயனரும் அவர் மகளும் பல்லக்கில் ஏறமாட்டார்கள் என்பதை அறிந்த சக்கரவர்த்தி விரைந்து சென்று குதிரையின் மேல் ஏறினார். நரசிம்மவர்மரும் தம் குதிரைமீது ஏறிக்கொண்டார். குதிரைகள் புறப்படுமுன் மகேந்திர பல்லவர் தமக்குப் பின்னால் நின்ற வீரர்களில் ஒருவனைச் சைகையினால் கூப்பிட்டு, "அயலூரிலிருந்து புதிதாக வந்த இளைஞன் யாராயிருந்தாலும் இன்றிரவு அவனைப் பிடித்து வைத்திருந்து நாளைக்கு அரண்மனைக்கு அழைத்து வரவேண்டும்; நகர்க்காப்புத் தலைவனுக்கு இந்தக் கட்டளையை உடனே தெரியப்படுத்து!" என்று ஆக்ஞாபித்தார். சக்கரவர்த்தியும் குமாரரும் அங்கிருந்து போனதும், ஆயனரும் சிவகாமியும் தங்கள் சிவிகையில் அமர்ந்தார்கள். காவலர் புடைசூழ, சிவிகை காஞ்சிக் கோட்டையின் கீழ் வாசலை நோக்கிச் சென்றது.