சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/கற்கோயில்கள்
கடல்மல்லைத் தீவின் தென்பகுதியில் விஸ்தாரமான வெட்ட வௌிப் பிரதேசத்தில் வரிசையாக ஐந்து சிறு குன்றுகள் நின்றன. அவற்றில் மூன்று குன்றுகளில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குன்றையும் குடைந்து கோயில் வடிவமாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கோயிலில் முன் மண்டபத்தைத் தூண்கள் வேலையாகிக் கொண்டிருந்தன. இன்னொரு கோயிலில் மேல் விமான வேலை நடந்து கொண்டிருந்தது. மூன்றாவது குன்றை அப்போதுதான் குடைய ஆரம்பித்திருந்தார்கள். சிற்பிகளும் பணியாட்களும் தங்குவதற்கான சிறு கொட்டகைகள் நெடுகிலும் காணப்பட்டன.
ஆயனரின் அரணிய வீட்டைச் சுற்றி நாம் பார்த்தது போன்ற நெடிதுயர்ந்த மரங்களோ, அடர்ந்த செடி கொடிகளோ அந்தப் பிரதேசத்தில் காணப்படவில்லை. வடக்கே வெகுதூரம் மணற்பாங்காயிருந்தது. அதற்கப்பால் கடல் அலைகள் வெண்ணுரையுடன் அவ்வப்போது மேலெழும் காட்சி தோன்றியது. தெற்கிலும் மேற்கிலும் சிறுசிறு பாறைகளும் அவற்றை விடக் குட்டையான புதர்களும் வெகு தூரத்துக்குக் காணப்பட்டன. ஆனால், வடக்கேயும் வடமேற்கேயும் பார்த்தால் முற்றும் மாறான காட்சி தென்பட்டது. வானளாவிய பெரிய கட்டிடங்களும் அவற்றின் இடையிடையே நெடிய தென்னை மரங்களும் காட்சியளித்தன. இன்னும் அப்பால் நூற்றுக்கணக்கான கப்பல்களின் பாய்மரத்து உச்சிகளிலே வரிசை வரிசையாக ரிஷபக் கொடிகள் காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தன.
சிற்ப வேலை நடந்து கொண்டிருந்த குன்றுகளுக்கு மத்தியில் ஒரு கல்யானை கம்பீரமாக நின்றது. அதன் பின்னால் இன்னும் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்ட பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை நின்றது. யானை மீது வந்த சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் கீழே இறங்கிக் கல்யானையின் அருகில் நின்றார்கள். அவர்கள் மீது வெயில்படாமல் ஒரு விசாலமான வெண்குடையைப் பணியாட்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
இதே இடத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் வந்து இதே விதமாக நின்றதுண்டு. ஆனால், அங்கு நின்ற குன்றுகளும் பாறைகளும் அப்போது மொட்டைக் குன்றுகளாகவும், மொட்டைப் பாறைகளாகவும் இருந்தன. "அப்பா! அந்தப் பாறையின் நிழலைப் பாருங்கள்! அது யானையைப் போல் இல்லையா?" என்றான் பல்லவ குலந்தழைக்க வந்த நரசிம்மவர்மன். அவன் சுட்டிக் காட்டிய நிழலைச் சக்கரவர்த்தி பார்த்தார். "ஆஹா!" என்று அவர் வாயிலிருந்து புறப்பட்ட வியப்பொலியில் விவரிக்க முடியாத பல உணர்ச்சிகள் தொனித்தன.
சற்றுநேரம் மகேந்திரர் சிந்தனையில் ஆழ்ந்து வௌி உலகப் பிரக்ஞையே இல்லாதவராய் நின்றார். பிறகு நரசிம்மனைத் தழுவிக் கொண்டு, "குழந்தாய்! எப்பேர்ப்பட்ட அதிசயமான உண்மையை நீ கண்டுபிடித்துக் கூறினாய்! நீ கூறிய வார்த்தையின் மகிமை முழுவதும் உனக்கே தெரிந்திராது!" என்றார். பன்னிரண்டு பிராயத்துச் சிறுவனான நரசிம்மன் மேலும் உற்சாகத்துடன், "அப்பா! அதோ, அந்தக் குன்றின் நிழலைப் பாருங்கள்! கோயில் மாதிரி இல்லையா?" என்றான்.
"ஆமாம், நரசிம்மா! ஆமாம்! அந்தக் குன்றின் நிழல் கோயில் மாதிரிதான் இருக்கிறது. அதை கோயிலாகவே செய்து விடுவோம். இந்த ஐந்து குன்றுகளையும் ஐந்து கோயில்களாக்குவோம். இன்னும் இங்குள்ள சிறு பாறைகளை யானையாகவும் சிங்கமாகவும் நந்தியாகவும் ஆக்குவோம். இந்தத் துறைமுகத்தைச் சொப்பன லோகமாக்குவோம். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் துறைமுகத்துக்கு வருகிறவர்கள் எல்லாரும் பார்த்துப் பிரமிக்கும்படியாகச் செய்வோம்!" என்றார்.
சீக்கிரத்திலேயே அந்தப் பிரதேசத்துக்குச் சிற்பிகள் பலர் சிற்றுளிகளுடன் வந்து சேர்ந்தார்கள். குன்றுகளிலும் பாறைகளிலும் வேலை செய்யத் தொடங்கினார்கள். நேற்று வரை அமைதி குடிகொண்டிருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான சிற்றுளிகளின் சப்தம் 'கல்கல்' என்று கேட்க ஆரம்பித்தது. புதர்களில் வாழ்ந்திருந்த சிறு முயல்கள் திடீரென்று எழுந்த 'கல்கல்' சப்தத்தைக் கேட்டு வௌியே வந்தன. காதுகளைத் தூக்கிக் கொண்டு ஒரு நிமிஷம் வியப்புடன் கவனித்தன. பின்னர் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தன.
அன்று தொடங்கிய சிற்பப்பணி இன்றைக்கும் அங்கே தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சக்கரவர்த்தியும் மாமல்லரும் அன்றைக்கு நின்ற அதே இடத்தில் இப்போது யானையாகவும் சிங்கமாகவும் ரிஷபமாகவும் உருவெடுத்த பாறைகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார்கள். "நரசிம்மா! இந்த யுத்தம் இப்போது வந்ததில் எனக்குப் பலவகையில் சந்தோஷந்தான். ஆனால், இந்தக் கற்கோயில்களின் வேலை ஒருவேளை தடைப்பட்டுவிடுமோ, என் காலத்தில் இந்தத் திருப்பணி பூர்த்தியாகாமற் போகுமோ என்று மட்டும் கவலையாக இருக்கிறது. வடக்கே கன்யாகுப்ஜத்தில் ஹர்ஷவர்த்தனர் வருஷந்தோறும் நடத்தும் உற்சவத்தைப் பற்றித் தெரியுமல்லவா நரசிம்மா?" "தெரியும் அப்பா! சிவபெருமானுக்கும், சூரியநாராயண மூர்த்திக்கும், புத்தர் பெருமானுக்கும், அவர் மூன்று கோயில்கள் எடுத்திருக்கிறார். அந்த மூன்று கோயில்களிலும் வருஷந்தோறும் உற்சவம் நடத்துகிறார்; மூன்று மதத்தைச் சேர்ந்த பிரஜைகளும் வந்து ஒரே சமயத்தில் உற்சவம் கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
"மாமல்லா! ஹர்ஷவர்த்தனர் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ பெரிய சாம்ராஜ்யத்தை ஆளுகிறார். அவருடைய செல்வமோ நம்முடையதைவிட பன்மடங்கு அதிகமானது. அவருடைய புகழ் இன்றைக்கு உலகமெல்லாம் பரவியிருக்கிறது. ஆனால், என்னுடைய உத்தேசம் மட்டும் நிறைவேறுமானால், ஹர்ஷர் மட்டுமல்ல; இந்தப் பாரதவர்ஷத்தில் இதுவரையில் எந்த அரசரும் சக்கரவர்த்தியும் அடையாத கீர்த்தியைப் பல்லவ குலம் அடையும். ஹர்ஷர் நிர்மாணித்திருக்கும் கோயில்கள் செங்கல்லினாலும் மரத்தினாலும் ஆனவை. நூறு வருஷத்தில் அவை சிதைந்து மறைந்துபோய்விடும். ஆனால் இந்தக் கற்கோயில்களுக்கு அழிவென்பதே கிடையாதல்லவா...?"
"இக்கோயில்களில் எந்த தெய்வங்களை எழுந்தருளச் செய்யப்போகிறீர்கள் அப்பா? சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குத்தான் இந்த ஐந்து கோயில்களும் அல்லவா?" "இல்லை நரசிம்மா! ஹர்ஷவர்த்தனரைக் காட்டிலும் அதிகமாக ஒரு காரியம் செய்யப்போகிறேன். இந்தத் தமிழகத்தில் பரவியுள்ள நாலு பெரிய சமயங்களுக்கும் நாலு கோயில்களை அர்ப்பணம் செய்யப்போகிறேன். ஒரு கோயிலில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருப்பார்கள். இரண்டாவது கோயிலில் திருமாலும் திருமகளும் குடிகொள்ளுவார்கள். மூன்றாவது கோயிலைப் புத்தர் பெருமானின் பெரிய விக்கிரகம் அலங்கரிக்கும். நாலாவது கோயிலில் சமண சமயத்தை ஸ்தாபித்த வர்த்தமான மகாவீரர் எழுந்தருளுவார்...!" "ஹா!" என்று பெருவியப்புடனும் பெருமிதத்துடனும் மாமல்லர் கூறினார்.
"ஆம்; நரசிம்மா! உண்மையில் நான் சமண சமயத்திலிருந்து விலகிச் சைவத்தைத் தழுவியதே நமது ராஜ்யத்தில் இத்தகைய சமய சமரசத்தை, நிலைநாட்டுவதற்காகத்தான். சைவ சமயமானது மற்றச் சமயங்களையும் சம உணர்வுடன் கருதிப் போற்ற இடந்தருகிறது. மற்றச் சமயங்களோ அவ்விதம் இடம் கொடுப்பதில்லை. இதை முன்னிட்டே சைவத்தை மேற்கொண்டேன். நமது சாம்ராஜ்யத்திலுள்ள நாலு பெரிய சமயங்களுக்கும் சமமான கௌரவம் கொடுத்துப் போற்ற எண்ணினேன். இதையெல்லாம், வௌியிடுவதற்கு என்மேல் புத்தர்களும் சமணர்களும் கொண்டுள்ள கோபம் தணியும் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள்ளே சமண முனிவர்கள் அவசரப்பட்டு எல்லாக் காரியத்தையும் கெடுத்து விட்டார்கள்.." "சமண முனிவர்கள் கெடுத்துவிட்டார்களா!"
"ஆமாம் அவர்களால் வந்ததுதான் இந்த யுத்தம். சமண காஞ்சியிலிருந்து நாற்புறங்களுக்கும் புறப்பட்டுச் சென்ற சமண முனிவர்கள் சும்மா இருந்து விடவில்லை. நம் நெடுநாளைய சிநேகிதர்களைக்கூட நம் விரோதிகளாக்கி விட்டார்கள். இந்தக் கங்கை பாடித் துர்விநீதனுடைய தந்தைக்கு முடிசூட்டியது யார் தெரியுமா? உன் பாட்டனார் சிம்மவிஷ்ணு மகாராஜாதான். அந்தத் துர்விநீதன் இப்போது தமது பரம்பரை விரோதியான சளுக்க மன்னனுடன் சேர்ந்து கொண்டிருக்கிறான். புலிகேசியின் படைவீட்டில் ஜைன மகாகவி ரவிகீர்த்தியும், துர்விநீதனுடைய குரு பூஜ்யபாதரும் இருக்கிறார்களாம், சைனியத்துடன் சேர்ந்து அவர்களும் வந்து கொண்டிருக்கிறார்களாம். உலகப் பற்றற்ற முனிவர்கள் அதிலும் கொல்லாமை விரதங்கொண்ட சமண குருக்கள், போர்க்களத்துக்கு வருவது என்றால், ஆகா! அவர்களுக்கு என்மேல் எவ்வளவு துவேஷம் ஏற்பட்டிருக்க வேண்டும்?"
"அதைப்பற்றி என்ன கவலை! அப்பா? சமண முனிவர்கள், புத்த பிக்ஷுக்கள் எல்லோரும் நம் விரோதிகளுடன் சேரட்டும். திரிநேத்திரதாரியான சிவபெருமான் அருளாலும்; சக்கராயுதத்தை ஏந்திய திருமாலின் கிருபையினாலும் நம் வெற்றி கொள்ளுவோம்." "வெற்றி தோல்வியைப்பற்றி நான் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. என்னுடைய நோக்கத்துக்கு இடையூறு நேர்ந்துவிட்டதே என்றுதான் வருத்தப்படுகிறேன்" என்று சக்கரவர்த்தி கூறியபோது, அவருடைய குரலில் துயரம் தொனித்தது.
"மாமல்லர் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "ஐந்தாவது கோயில் எந்தத் தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்ய எண்ணியிருந்தீர்கள், அப்பா?" என்று கேட்டார். "மேலை நாடுகளில் சிலகாலமாகப் புதிதாக ஒரு மதம் ஸ்தாபனமாகியிருக்கிறதாம். அதை ஸ்தாபித்த அவதார புருஷரின் பெயர் ஏசுகிறிஸ்து என்று சொல்கிறார்கள். அந்தப் புதிய மதத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவுடனே அந்தப் புதிய மதத்தின் தெய்வம் எதுவோ அதை அந்த ஐந்தாவது கோயிலில் எழுந்தருளச் செய்ய எண்ணியிருந்தேன். ஆனால், அதெல்லாம் பகற்கனவாகப் போய்விடும் போலிருக்கிறதே?" மகேந்திரரின் யோசனைகளைக் கேட்டுப் பிரமித்த மாமல்லர், "ஏன் பகற்கனவாகப் போகவேண்டும்? யுத்தத்தினால் இந்தச் சிற்பப்பணி ஏன் தடைபடவேண்டும்?" என்று கேட்டார்.
"தடைபடாமலிருக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. யுத்தம் முடிவதற்குள்ளே இந்த ஐந்து கோயில்களும் பூர்த்தியாக வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்காகவே ஆயனரை இன்றைக்கு இங்கே வரச் சொல்லியிருக்கிறேன். அவர் நடுக்காட்டில் போய் உட்கார்ந்திருப்பதால் வேலை நிதானமாக நடக்கிறது. அவரை இங்கேயே தங்கி வேலையைத் துரிதமாக முடிக்கும்படிச் சொல்லப்போகிறேன்...அதோ, ஆயனரும் வந்துவிட்டார்!".. நரசிம்மர் ஆவலுடன் திரும்பிப் பார்த்தார். அவருடைய ஆவல் பூர்த்தியாயிற்று. சற்றுத்தூரத்தில் வந்து கொண்டிருந்த சிவிகையில் ஒரு பக்கத்தில் ஆயனர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம், பட்டப் பகலில் பூரணச் சந்திரன் பிரகாசிப்பதுபோல் ஒரு காட்சி தென்பட்டது. அந்தப் பூரண சந்திரன் சிவகாமியின் வதன சந்திரன்தான் என்று சொல்லவும் வேண்டுமோ?