சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/கும்பகர்ணன்

32. கும்பகர்ணன்


பிரயாணிகள் இருவரும் விடுதியை நெருங்கியபோது, அங்கே ஆயத்தமாகக் காத்திருந்த வீரர்கள் நால்வர் கையில் உருவிய கத்திகளுடன் பளிச்சென்று முன்னால் வந்து "நில்!" என்றார்கள். விடுதியின் வாசலில் நின்ற இன்னொரு வீரன் கையில் பிரகாசமான தீவர்த்தியைப் பிடித்துக் கொண்டிருந்தான். அதன் ஒளியில் மற்ற நால்வருடைய கையிலும் இருந்த கத்திகள் மின்னித் திகழ்ந்தன.

அப்போது அந்தக் குதிரை வீரன் தன் அங்கியினுள்ளிருந்து ஏதோ ஓர் அடையாளத்தை எடுத்துக் காட்டவே, அந்த வீரர்கள் நால்வரும் சிறிது மரியாதையுடன் ஒதுங்கி நின்று அவனுக்கு வழி விட்டுப் பின்னால் வந்த பரஞ்சோதியை அணுகினார்கள். குதிரை வீரன் திரும்பிப் பார்த்து, "அவனும் என்னுடன் வருகிறான்!" என்று சொல்லவே, பரஞ்சோதிக்கும் அவர்கள் வழி விட்டார்கள். மூத்த பிரயாணி, விடுதித் தலைவனிடமும் மேற்சொன்ன அடையாளத்தைக் காட்டி, "நாங்கள் இருவரும் இன்று இரவு விடுதியில் தங்க வேண்டும்; குதிரைகளுக்கும் தீனி வேண்டும்" என்றான்.

விடுதி தலைவன் மற்ற வீரர்களைப் போலவே மரியாதையுடன் "அப்படியே ஐயா!" என்று மறுமொழி கூறினான். இதெல்லாம் பரஞ்சோதிக்கு மிக்க வியப்பை அளித்தது. அந்த வீரன் ஏதோ பெரிய இராசாங்க காரியமாகப் போகிறான் என்றும் பரஞ்சோதி ஊகித்துக் கொண்டான். ஒருவேளை பல்லவ சைனியத்தைச் சேர்ந்த பெரிய தளபதியாகக் கூட அவன் இருக்கலாம் என்றும் சந்தேகித்தான். தான் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கும் காரியம் ஒருவிதமாக முடிந்த பிறகு, இந்த வீரன் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து இவனுடைய சிநேகிதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பரஞ்சோதிக்கு உண்டாயிற்று.

இருவரும் உணவு அருந்தியபோது, அவ்வீரன் பரஞ்சோதியைப் பார்த்து, "தம்பி வைஜயந்தி யுத்தத்தைப் பற்றி உனக்குச் சொன்னேனல்லவா? அந்தக் காலத்தில் எனக்குக் கிட்டத்தட்ட உன் வயதுதான் இருக்கும். அப்போது ஒரு தடவை நான் இந்த விடுதியில் தங்கியிருக்கிறேன். அன்றிரவு எனக்கு ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது!" என்றான். "அது என்ன?" என்று பரஞ்சோதி ஆவலுடன் கேட்டான்.

"தம்பி! இத்தனை நேரமும் நாம் ஒருவர் பெயரை ஒருவர் தெரிந்து கொள்ளாமலே பேசிக் கொண்டிருக்கிறோம். என் பெயரைத் தெரிவிப்பதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. எனக்கு என் தாய் தந்தையர்கள் இட்ட பெயர் வஜ்ரபாஹூ. ஆனால், என் சினேகிதர்கள் என்னைக் கும்பகர்ணன் என்று அழைப்பார்கள். தூங்கினால் அப்படித் தூங்குவேன். இன்று போலவே அன்றைக்கும் நாளெல்லாம் பிரயாணம் செய்திருந்தபடியால் அசந்து தூங்கி விட்டேன் அப்போது என்ன நடந்தது தெரியுமா?" "ஏதாவது பிசாசு சொப்பனம் கண்டு உளறியடித்துக் கொண்டு எழுந்தீர்களாக்கும்!" என்று பரஞ்சோதி குறும்பாகக் கூறினான்.

அதைக் கேட்ட வஜ்ரபாஹூ நகைத்து விட்டு, "இல்லை இல்லை! அதைவிட ஆபத்தான விஷயம்! வீடு இடிந்து என் மேலே விழுந்துவிட்டது போல் சொப்பனம் கண்டு கண்ணை விழித்துப் பார்த்தபோது, ஐந்தாறு தடியர்கள் என்மேல் உட்கார்ந்து அமுக்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டுபேர் என் இடுப்பைத் தடவிக் கொண்டிருந்தார்கள் என்னத்திற்காகத் தெரியுமா?" "ஐயா! என்னை ஞானதிருஷ்டியுள்ளவன் என்று நினைத்துக் கொண்டீர்களா? தாங்கள் சொல்லாவிட்டால் எனக்கு எப்படித் தெரியும்?" என்றான் பரஞ்சோதி. "நல்லது, தம்பி! நான் சேனாதிபதி கலிப்பகையாருக்குக் கொண்டுபோன ஓலையைத் தஸ்கரம் செய்வதற்காகத்தான். என் இடுப்பில் அந்த ஓலை இருக்குமென்று அந்த முரடர்கள் எண்ணினார்கள்!" "ஆஹா!" என்றான் பரஞ்சோதி அவனை அறியாமல் அவனுடைய வலது கை இடுப்பைத் தொட்டுப் பார்த்தது. இது ஒரு கணந்தான் மறுகணம் கை பழைய நிலையை அடைந்தது. ஆனால், அந்த ஒரே கணநேரச் செய்கையை வீரன் வஜ்ரபாஹுவின் தீவிரமான கண்கள் கவனிக்காமல் போகவில்லை. "அப்புறம் என்ன ஆயிற்று, ஐயா! அந்த முரடர்களுக்குத் தாங்கள் கொண்டுபோன ஓலை கிடைத்ததா?" என்று பரஞ்சோதி கேட்டான். "ஓலை கிடைக்கவில்லை என்னுடைய கை முஷ்டியினால் தலைக்கு ஏழெட்டுக் குட்டுக்கள் கிடைத்தன! பெற்றுக்கொண்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென்று ஓட்டம் பிடித்தார்கள்!"

பரஞ்சோதி சிரித்துவிட்டு, "அந்த முட்டாள்களுக்கு நன்றாய் வேண்டும்! உங்களுடைய கும்பகர்ணத் தூக்கத்தைக் கலைத்தார்கள் அல்லவா? யாராவது ஒருவன் தனியாக வந்து இடுப்பைத் தடவியிருந்தால் ஒருவேளை ஓலை கிடைத்திருக்கும்" என்றான். "அப்போதும் கிடைத்திராது" என்றான் வஜ்ரபாஹு. "ஏன்? நீங்கள்தான் கும்பகர்ணன் மாதிரி தூங்குவேன் என்று சொன்னீர்களே?" "உண்மைதான், தம்பி! ஆனால், ஓலை இடுப்பில் இருந்தால் தானே கிடைக்கும்?" "பின் வேறு பத்திரமான இடத்தில் அதை வைத்துக் கொண்டிருந்தீர்களா?"

"ஆமாம், அக்கினி பகவானிடமே ஒப்படைத்து விட்டேன்." "இதென்ன? நல்ல தூதராயிருக்கிறீர்களே? ஓலையை நெருப்பிலே போட்டுவிட்டு எதற்காகப் பிரயாணம் செய்தீர்கள்?" "ஓலையை நெருப்பிலே போடுவதற்கு முன்னால் அதைப் படித்து விஷயத்தை மனத்தில் பதிய வைத்துக்கொண்டேன்." "ஓஹோ! இராஜாங்க தூதர்கள் அப்படிக் கூடச் செய்யலாமா என்ன?" "சமயோசிதமாகக் காரியம் செய்யத் தெரியாதவன் இராஜாங்க தூதுவனாக இருக்கவே அருகனில்லை, தம்பி! இம்மாதிரி அபாயம் ஏதாவது நேரலாமென்று நான் எதிர் பார்த்தேன். எனவே, முன் ஜாக்கிரதையாகக் காரியம் செய்தேன், அதற்காகச் சக்கரவர்த்தியிடமிருந்து எனக்கு வெகுமதியும் கிடைத்தது."

இதையெல்லாம் கேட்ட பரஞ்சோதியின் உள்ளம் பெரிதும் குழப்பத்துக்கு உள்ளாயிற்று. இரவில் விடுதிகளில் தங்க நேர்ந்தால், மற்றவர்கள் படுக்கும் அறையில் படுக்கக் கூடாது என்று புத்த பிக்ஷு எச்சரித்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. நல்லவேளையாக அன்றிரவு படுத்துக்கொள்வதற்கு அவனுக்குத் தனி அறையே கொடுத்தார்கள். வஜ்ரபாஹுவும், "தம்பி! இனி மேல் உன் வழி வேறு; என் வழி வேறு. நான் அதிகாலையில் எழுந்து போய்விடுவேன். உன்னை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. எப்போதாவது உதவி தேவையிருந்தால் என்னிடம் வரத் தயங்காதே!" என்று சொல்லி விடைபெற்றுப் படுக்கச் சென்றான்.

பரஞ்சோதி படுத்துக்கொள்ளும்போது, வஜ்ரபாஹு கூறிய அனுபவம் அவனுக்கு ஞாபகம் இருந்தபடியால், அயர்ந்து தூங்கி விடக்கூடாது என்றும், ஏதாவது சத்தம் கேட்டால் பளிச்சென்று எழுந்துவிட வேண்டுமென்றும் மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டான். ஆனால், வாலிபப் பருவமும், நாளெல்லாம் பிரயாணம் செய்த களைப்பும் சேர்ந்து, படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவனை நித்திரையில் ஆழ்த்திவிட்டன. எனினும் அவனுடைய தூக்கம் அமைதியான தூக்கமாக இருக்கவில்லை. பயங்கரமான கனவுகள் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன. செந்நிறப் புரசம் பூக்கள் நிறைந்த பிரதேசத்தில் ஆவி வடிவத்துக் குதிரை வீரர்களுக்கு மத்தியில் தானும் ஓர் ஆவி வடிவமாகி ஓயாது சுற்றி அலைந்து கொண்டிருந்ததாக அவனுக்குத் தோன்றியது. அலைந்து அலைந்து களைத்துப் போன பிறகு ஒரு மலைக்குகையில் அவன் போய்ப் படுத்துக் கொள்கிறான். கனவிற்குள் தூங்குவதாகக் கனவு காண்கிறான்! ஆனால், அந்தத் தூக்கத்திலும் நினைவு இருந்துகொண்டிருக்கிறது. கண்கள் மட்டும் மூடியிருக்கின்றன. பிசாசுகள் ஒன்று மாற்றி ஒன்று வந்து அவனுடைய இடுப்பைத் தடவுகின்றன. 'நல்ல வேளை ஓலை இடுப்பில் இல்லை! தலைக்கு அடியில் வைத்துக் கொண்டிருக்கிறோம்' என்று தோன்றுகிறது. கண்ணைத் திறந்து பார்த்தால் அந்தப் பிசாசுகள் ஓடிவிடுமென்று அவன் எண்ணுகிறான். ஆனால், எவ்வளவு முயன்றும் கண்களைத் திறக்கவே முடியவில்லை.

அப்புறம் எங்கேயோ வெகு தூரத்தில் ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு காணப்படுகிறது. அதை அழைத்துக் கொண்டு ஒரு கரும் பிசாசு அவனை நோக்கி வருகிறது. அருகே, அருகே, அவை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன! கொள்ளிவாய்ப் பிசாசின் வாயிலுள்ள தீயின் ஒளியினால் அவனுடைய மூடியுள்ள கண்கள் கூசுகின்றன. கடைசியில், அந்த ஒளியின் கடுமையைப் பொறுக்க முடியாமல் கண்ணிமைகள் திறந்து கொள்கின்றன.

ஆனால், எதிரில் வந்தவை கொள்ளிவாய்ப் பிசாசும் இல்லை; கரும் பிசாசும் இல்லை என்பதை அவனுடைய திறந்த கண்கள் தெரிவிக்கின்றன. வீரன் வஜ்ரபாஹுவும், அவனுக்குப் பின்னால் கையில் விளக்கு ஏந்திக் கொண்டு அந்த விடுதியின் தலைவனுந்தான் வந்து கொண்டிருந்தார்கள்! பரஞ்சோதி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அவனுடைய வலது கை அருகில் தரையில் கிடந்த வேலைப் பற்றியது.