சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/மடாலயம்
பரஞ்சோதிக்கு, முன் அத்தியாயங்களில் கூறிய ஆச்சரியமான அனுபவங்கள் நேர்ந்து கொண்டிருந்த அதே தினம் மாலை நேரத்தில், காஞ்சி மாநகரில் அவனைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. பல்லவ குலம் தழைக்க வந்த குமார சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மரும் சைவந் தழைக்க வந்த திருநாவுக்கரசு சுவாமிகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். மாமல்லபுரத்திலிருந்து திரும்பிவந்த அன்றிரவு மகேந்திர சக்கரவர்த்தி தம் செல்வப் புதல்வரை அழைத்துக் கொண்டு மாறுவேடத்துடன் கோட்டைக்கு வௌியே சென்றார். குதிரைகளை ஒரு மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் மதிலைச் சூழ்ந்திருந்த அகழியின் கரையோரமாக அவர்கள் நடந்து சென்றார்கள்.
திடீரென்று அகழியில் படகு செலுத்தும் சத்தம் கேட்டு நரசிம்மர் அளவிறந்த வியப்புக்கு உள்ளானார். அவரைச் சத்தம் செய்யவேண்டாமென்று சமிக்ஞை காட்டினார் மகேந்திரர். இருவரும் அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டார்கள். "ஆம்; படகு ஒன்று அகழியில் சென்று கொண்டிருந்தது. அதை ஓட்டியவன் சத்தம் அதிகமாகக் கேளாதபடி சர்வ ஜாக்கிரதையாகத் துடுப்புகளைப் போட்டுக் கொண்டிருந்தான். படகு அக்கரையில், அதாவது, மதில் ஓரத்தில் போய் நின்றது. அதிலிருந்து இருவர் இறங்கினார்கள். அந்தச் சிறு படகை அவ்விருவருமாக இழுத்துக் கரையேற்றினார்கள். மதிலின் பக்கத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த ஒரு புதரின் மறைவில் அதைத் தள்ளினார்கள்.
மதிலண்டை சென்று அவர்கள் நின்றது ஒரு கணம்! அடுத்த கணத்தில் இருவரும் மாயமாய் மறைந்தார்கள். ஒரு பிரம்மாண்டமான சிலந்திப் பூச்சியானது தன் அருகில் வந்த இரண்டு கொசுக்களை ஒரு நொடியில் நாக்கை நீட்டி விழுங்கி விட்டு பழையபடி சலனமற்றிருப்பது போல், அந்தக் காஞ்சிக் கோட்டையானது தன்னை நெருங்கிய இருவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுங்கிவிட்டு மறுபடியும் அசைவற்றிருப்பது போலத் தோற்றமளித்தது. இதையெல்லாம் பார்த்ததனால் குமார சக்கரவர்த்திக்கு உண்டான பிரமிப்பு நீங்குவதற்கு முன்னால், அங்கு இன்னொரு வியப்பான சம்பவம் ஏற்பட்டது. பக்கத்திலிருந்த வேறொரு புதரிலிருந்து ஓர் ஆள் திடீரென்று கிளம்பி வந்தான். அவன் சக்கரவர்த்திக்குத் தண்டம் சமர்ப்பித்து விட்டுப் பணிவுடன் நின்றான். அவனைப் பார்த்துச் சிறிதும் வியப்புறாத மகேந்திரர், "சத்ருக்னா! இந்தச் சுவரிலுள்ள கதவு எங்கே திறக்கிறதென்று ஊகிக்கிறாய்?" என்று கேட்டார். "இராஜ விஹாரத்தில் புத்தர் சிலைக்குப் பின்னால் திறக்கலாம், சுவாமி!" என்றான் சத்ருக்னன்.
"சுவரில் கதவு வைத்தவன் மிகவும் கெட்டிக்காரனாக இருக்கவேண்டும்; இல்லையா?" "கதவு வைத்தவனைக் காட்டிலும் மேலே வர்ணம் பூசியவன் கெட்டிக்காரன் பிரபு! பட்டப்பகலில் இவ்விடமெல்லாம் வந்து பார்த்தேன் கதவு ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை." "ரொம்ப நல்லது சத்ருக்னா! நாளைக்கு நான் வட திசைக்குப் பிரயாணப்படுகிறேன்." "பிரபு! நானும் ஆயத்தமாயிருக்கிறேன்." "இல்லை; நீ என்னுடன் வரவேண்டாம், மறு கட்டளை பிறக்கும் வரையில் இந்த நாகநந்தியை நீ தொடர வேண்டும்.." "தொண்டை நாட்டை விட்டு அவர் போனால்.." "அப்போதுந்தான்.." "சோழநாடு, பாண்டியநாடு சென்றால்..." "பின்னோடு போகவேண்டும் யாரிடமாவது பிக்ஷு ஓலை ஏதாவது அனுப்பினாரானால்..?" "என்ன செய்யவேண்டுமென்று தெரியும், சுவாமி! ஆனால் செங்காட்டங்குடி வாலிபனிடம் அவர் அனுப்புகிற ஓலை?" "அதை நான் பார்த்துக் கொள்கிறேன் எந்த முகாந்திரத்தினாலும் நாகநந்தியைத் தவறவிடக்கூடாது. ஏதாவது விசேஷம் இருந்தால் எனக்குச் செய்தியனுப்ப வேண்டும்." "ஆக்ஞை, பிரபு!"
சக்கரவர்த்தியும் நரசிம்மரும் அங்கிருந்து அரண்மனைக்குத் திரும்பியபோது, "இராஜ விஹாரத்தை உடனே மூடிக் கோட்டை மதிலிலுள்ள துவாரத்தையும் அடைத்துவிட வேண்டாமா?" என்று மாமல்லர் கேட்டார். "கூடாது குழந்தாய், கூடாது அதற்குக் காலம் வரும்போது செய்யலாம். இப்போது பகைவர்களின் சூழ்ச்சிகளை அறிவதற்கு அந்த இரகசியக் கதவு நமக்கு உதவியாக இருக்கும்" என்று சக்கரவர்த்தி மறுமொழி கூறினார்.
சக்கரவர்த்தி வடதிசைக்குப் பிரயாணமான பிறகு, காஞ்சிக் கோட்டைக்குள்ளே மாமல்லருக்குப் பொழுது போவது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது. ஆயனர் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் புத்த பிக்ஷுவும் பரஞ்சோதியும் ஒளிந்திருந்ததை மகேந்திரர் ஊகித்தறிந்தது, மதில் சுவரில் இருந்த இரகசியக் கதவை அவர் கண்டுபிடித்தது முதலிய காரியங்களினால் சக்கரவர்த்தியிடம் குமாரருக்கு ஏற்கெனவே இருந்த மதிப்பு பன்மடங்கு அதிகமாகியிருந்தது. ஆகவே, காஞ்சிக் கோட்டைக்கு வௌியே போகக் கூடாது என்ற தந்தையின் கட்டளையை மீறும் எண்ணமே அவருக்கு உதிக்கவில்லை.
ஆனால், இராஜ்யத்தில் பெரிய பெரிய காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மகத்தான யுத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தபோது, கோட்டைக்குள்ளே ஒரு காரியமுமின்றி அடைந்து கிடப்பது அவருக்குப் பரம சங்கடத்தை அளித்தது. கழுக்குன்றத்தில் பல்லவ சைனியங்கள் திரண்டு கொண்டிருக்கின்றனவே, அங்கே போய்ப் படைகளைப் பார்க்கவாவது தந்தையிடம் அனுமதி பெறாமல் போனோமே என்று மாமல்லர் ஏக்கமடைந்தார். அப்பால் மாமல்லபுரம் போகவும் அவரிடம் அனுமதி பெற்றிருந்தால்...?" ஆம்; எத்தனையோ எண்ணங்களுக்கிடையில் சிவகாமியைப் பற்றிய நினைவும் மாமல்லருக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அவள் தீட்டிய தாமரைக்கும் மானுக்கும் மத்தியில் தாம் வரைந்திருந்த வேலை அவள் பார்த்தாளோ, இல்லையோ? பார்த்திருந்தால், அதன் பொருளைத் தெரிந்து கொண்டிருப்பாளோ? அதனால் திருப்தியடைந்திருப்பாளோ?
தந்தையிடம் நாம் வாக்குக் கொடுத்திருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியாதல்லவா? ஆதலின், தன்னைப் பார்க்க வரவில்லையே என்று அவளுக்குக் கோபமாகத்தான் இருக்கும். அவள்தான் இங்கு ஏன் வரக்கூடாது?... ஆனால் அவள் எப்படி வருவாள்? ஆயனருக்குத்தான் தந்தை அவ்வளவு கடுமையான கட்டளையிட்டிருக்கிறாரே, வேலையை விட்டுவிட்டு அவர் வரமுடியாதல்லவா?" இவ்விதம் குமார சக்கரவர்த்தியின் உள்ளம் பலவித சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது. செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாதபடியால் அவருடைய மனவேதனை அதிகமாயிற்று.
இந்த நிலைமையில் திருநாவுக்கரசு சுவாமிகள் காஞ்சிக்குத் திரும்பி வந்துவிட்டார் என்று அறிந்ததும் மாமல்லர் அவரைத் தரிசித்துவிட்டு வரலாமென்று எண்ணினார். சுவாமிகளிடம் தெரிவிக்கும்படிச் சக்கரவர்த்தி கூறியிருந்த செய்தி ஒன்று இருந்தது. எனவே, ஒரு நாள் மாலை ஏகாம்பரேசர் திருக் கோயிலுக்கருகிலிருந்த நாவுக்கரசர் மடாலயத்துக்கு அவர் சென்றார். நாவுக்கரசர் குமார சக்கரவர்த்தியை அன்புடன் வரவேற்றுத் தாம் சென்றிருந்த ஸ்தலங்களின் மகிமையைப் பற்றிக் கூறினார். சக்கரவர்த்தி வடநாடு சென்றிருப்பது பற்றியும், பல்லவ இராஜ்யத்தில் யுத்தம் வந்திருப்பதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
பின்னர் சுவாமிகள் கூறினார்" "மாமல்லரே! சக்கரவர்த்தியிடம் ஒரு விஷயம் தெரிவித்துக் கொள்ள எண்ணியிருந்தேன். அவர் இல்லாதபடியால் தங்களிடம் சொல்லுகிறேன். இந்த இடத்திலிருந்து நமது மடத்தை அப்பாற்படுத்தித் திருமேற்றளியில் அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஏகாம்பரர் கோயில் நகருக்கு மத்தியிலே இருப்பதால் இங்கே அமைதி கிட்டுவதில்லை. மேலும், இங்கே நம்முடைய சீடர்களுக்கும் பக்கத்திலுள்ள கடிகை ஸ்தானத்தில் வடமொழி பயிலும் மாணாக்கர்களுக்கும் ஓயாமல் வாக்குவாதமும் போட்டியும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆரியம், தமிழ் இரண்டையும் அளித்த எம்பெருமான் ஒருவரே என்று அவர்களுக்கு எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. இளங்காளைப் பருவமல்லவா? அப்படித்தான் கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். ஏகாம்பரநாதர் கோயிலில் கூட்டம் போட்டிருக்கும் காபாலிகர்களின் தொல்லையும் பொறுக்க முடியவில்லை. அதனால் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கும் இறைவன் சந்நிதிக்குப் போய்விடலாமென்று பார்க்கிறேன். இவ்விடத்தைக் காட்டிலும் அங்கே அமைதியாயிருக்கிறது."
சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்த குமார சக்கரவர்த்தி கூறினார்; "சுவாமி! முன்னால் ஏகாம்பரர் கோவிலிலிருந்து இந்தக் கபாலிகர்களையெல்லாம் துரத்திவிட வேண்டுமென்று சொன்னேன். தாங்கள் தான் வேண்டாம் என்கிறீர்கள். தங்கள் விருப்பத்தின்படி திருமேற்றளியில் மடத்தை அமைத்துக் கொள்வதில் ஆட்சேபமில்லை. ஆனால், சக்கரவர்த்தி தங்களிடம் தெரிவிக்கச் சொன்ன விஷயத்தைத் தெரிவிக்கிறேன். பிறகு, தங்கள் உசிதம் போல் செய்யலாம். யுத்தம் தொண்டை நாட்டுக்கே வந்துவிடலாமென்றும், இந்தக் காஞ்சி நகரம் முற்றுகைக்கு உள்ளாகலாமென்றும் பல்லவேந்திரர் கருதுகிறார். யுத்தம் ஒருவிதமாக முடியும் வரையில் தாங்கள் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் தீர்த்த யாத்திரை செல்வது நலம் என்ற அவருடைய அபிப்பிராயத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தச் சொன்னார். அதுவரையில் நமது மடத்தை மூடி வைத்துவிடுவது உசிதம் என்றும் சக்கரவர்த்தி கருதுகிறார். இதைப்பற்றி யோசித்து தங்கள் சித்தம்போல் முடிவு செய்யலாம்."
நாவுக்கரசர் சிறிது நேரம் சிந்தனை செய்துவிட்டு, "சக்கரவர்த்தியின் யோசனை எனக்கும் சம்மதமாகத்தான் இருக்கிறது. ஆனால், முன்னமே தெரியாமல் போயிற்று. திருமேற்றளியில் மடத்திருப்பணி ஆரம்பிப்பதற்காக ஆயனரை வரும்படி நான் சொல்லியனுப்பியிருக்கிறேன்... ஒரு விதத்தில் அதுவும் நல்லதுதான். நீண்ட யாத்திரை கிளம்புவதற்கு முன்னால் ஆயனச் சிற்பியாரை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போகலாம்" என்றார்.
ஆயனர் வருகிறார் என்று கேட்டதும் மாமல்லரின் உள்ளத்தில் குதூகலம் உண்டாயிற்று. "ஆயனர் எப்போது வருவார், சுவாமி?" என்று ஆர்வத்துடன் கேட்டார். "ஒருவேளை இன்று மாலையே வரக்கூடும்" என்று நாவுக்கரசர் பெருமான் கூறியதும், ஆயனர் வரும்வரையில் தாமும் அங்கே இருப்பது என்று மாமல்லர் தீர்மானித்துக் கொண்டார். "சுவாமி! திருச்செங்காட்டங்குடியிலிருந்து தங்களுக்கு ஓலை கொண்டுவந்த வாலிபனை ஆயனர் நாகார்ஜுன பர்வதத்துக்கு அனுப்பியிருக்கிறாரே, தெரியுமா?" என்று கேட்டார். "அது என்ன? எனக்கு ஒன்றும் தெரியாதே?" என்று சுவாமிகள் சொல்ல, நரசிம்மர் பரஞ்சோதியைப் பற்றித் தாம் அறிந்திருந்த விவரங்களைக் கூறினார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, வாசற்புறமிருந்து உள்ளே ஒரு சீடன் விரைவாக வந்து, "ஆயனர் வருகிறார்!" என்று அறிவிக்க, எல்லாருடைய கண்களும் வாசற்புறம் நோக்கின.