சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/"வாழி நீ மயிலே!"

14. வாழி நீ மயிலே!


ஆயனரும் சிவகாமியும் அந்த விஸ்தாரமான சபா மண்டபத்துக்குள் பிரவேசித்த போது மண்டபத்தில் வீற்றிருந்தவர்கள் அத்தனை பேருடைய கண்களும் அவர்கள் மீது சென்றன. அளவில்லா வியப்பும் குதூகலமும் ஆவலும் அந்த ஈராயிரம் கண்களிலேயும் ததும்பின. சபையில் அப்போது வீற்றிருந்தவர்களில் ஒருசிலர் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாலே அதே மண்டபத்தில் நடந்த சிவகாமியின் அரங்கேற்றத்தின் போது அங்கே பிரசன்னமாயிருந்தவர்கள்; மற்றும் அநேகர் அந்த அரங்கேற்றத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருந்தவர்கள். சிவகாமியின் அரங்கேற்றம் அந்த மண்டபத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்திலேதான் முதன் முதலில் புலிகேசியின் படையெடுப்பைப் பற்றி செய்தி கிடைத்ததென்பதையும், அதனால் அரங்கேற்றம் தடைப்பட்டதென்பதையும், அவர்கள் எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள். அந்தத் தடைக்குக் காரணமான புலிகேசிச் சக்கரவர்த்தி அச்சமயம் அந்தச் சபையில் வீற்றிருக்கும் அதிசயத்தை எண்ணியபோது அவர்கள் எல்லாருடைய கண்களும் மாறி மாறிச் சிவகாமியையும் புலிகேசியையும் நோக்குவனவாயின.

ஆயனரும் சிவகாமியும் சபா மண்டபத்துக்குள் பிரவேசித்து வரும் காட்சியைப் பார்த்தவுடன், எல்லாரையும் போல் வாதாபி மன்னரும் சிறிது நேரம் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தார். அஜந்தா மலையின் ஆழ்ந்த குகைக்குள்ளே அவர் கண்டிருந்த அற்புத வர்ண சித்திர உருவங்களில் ஒன்றுதான் உயிர் பெற்று எழுந்து தம் கண் முன்னால் நடந்து வருகிறதோ என்று அவருக்குத் தோன்றிற்று. சௌந்தரியவதிகளான எத்தனையோ பெண்களை அவர் பார்த்ததுண்டு. ஆனால், இம்மாதிரி நடையழகு வாய்ந்த பெண்களைப் பார்த்தது கிடையாது. சிவகாமி நடந்து வந்த போது அவளுடைய பாதங்கள் பூமியில் பட்டனவோ படவில்லையோ என்று தெரியாதபடி நடந்தாள். சங்கீதக் கலையின் உயிர்த் தத்துவத்தை உணர்ந்து புலவன் பாடும் போது இசை எப்படி ஒவ்வொரு ஸ்வரமும் தனித்தனியாகவும் அதே சமயத்தில் ஒன்றோடொன்று இழைந்தும் கேட்கப்படுகிறதோ, அதுபோல் சிவகாமி நடந்த போது, அவள் அடிகள் எடுத்து வைக்கிறாளோ அல்லது பூமிதான் அவளுடைய பாதங்களுக்குக் கீழே நழுவிச் சென்று கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது. சபா மண்டபத்திலிருந்த அத்தனை பேருடைய கண்களுக்கும் சிந்தனைக்கும் வேலை கொடுத்துக் கொண்டு பிரவேசித்த சிவகாமியோ, அவ்விதம் எல்லோருடைய கவனத்துக்கும் கண் நோக்கும் தான் ஆளாகியிருப்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. உயர் குலத்துப் பெண்டிருக்குரிய இயற்கையான நாணத்தினால் சிறிதளவு தலைகுனிந்த வண்ணம் அவள் நடந்து வந்தாள். அவளுடைய உள்ளத்தில் அல்லும் பகலும் குடிகொண்டிருந்த கம்பீர முகத்துக்குரியவர் அந்தச் சபையில் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள அவளுக்கு அளவற்ற ஆவல் இருந்தது. எனினும், அந்த ஆவலைப் பெருமுயற்சி செய்து அவள் அடக்கிக் கொண்டு இயல்பாக எதிரே பார்த்துக் கொண்டு நடந்தாள்.

இரண்டு சக்கரவர்த்திகளும் வீற்றிருந்த இடத்துக்கு அருகில் வந்ததும், ஆயனர் கும்பிட்டு நிற்க, சிவகாமி நமஸ்கரித்து நின்றாள். மகேந்திர பல்லவர், "ஆயனரே! உமது புதல்வி சிவகாமியின் நாட்டியக் கலைத் திறமையின் புகழானது நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பரவி வாதாபிச் சக்கரவர்த்தியின் காது வரையில் எட்டியிருக்கிறது. இதோ இன்று நமது அருமைச் சிநேகிதராக வீற்றிருக்கும் சத்யாச்ரய புலிகேசி மன்னர் சிவகாமியின் நடனத்தைப் பார்க்க விரும்புகிறார். அதற்காகவே உங்களை இவ்வளவு அவசரமாகக் கூட்டி வரச் செய்தேன். சிவகாமியினால் இப்போது உடனே நடனம் ஆட முடியுமா? உம்முடைய விருப்பம் என்ன?" என்று வினாவிய போது, ஆயனர், "மகாப் பிரபு! தங்களுடைய கட்டளை எதுவோ, அதுதான் என்னுடைய விருப்பம். சிவகாமிக்கு, அவளுடைய கலைத் திறமையைக் காட்டுவதற்கு இதைக் காட்டிலும் சிறந்த சபையும் சந்தர்ப்பமும் எங்கே கிடைக்கப் போகிறது? இரண்டு மாபெருஞ் சக்கரவர்த்திகளும் இரண்டு சூரியர்களைப் போலவும் இரண்டு தேவேந்திரர்களைப் போலவும் ஏக காலத்தில் கூடியிருக்கிறீர்கள்!" என்று சொல்லி விட்டுச் சிவகாமியை நோக்கினார்.

முதலில் மகேந்திர பல்லவர் பேசிய போது, சிவகாமி சிறிது தலைநிமிர்ந்து அரைக்கண்ணால் வாதாபிச் சக்கரவர்த்தியைப் பார்த்தாள். பிறகு, அவளுடைய கண்கள் கட்டுக்காவல்களை உடைத்துக் கொண்டு, இரண்டு சக்கரவர்த்திகளின் சிம்மாசனங்களையும் சுற்றிச் சிறிது தூரத்துக்கு வட்டமிட்டன. ஆனால் அவை அடைந்தது ஏமாற்றந்தான். சிவகாமியின் கண்கள் தேடிய வீர சௌந்தரிய வதனம் அங்கே தென்படவில்லை. "ஆ! அவர் எங்கே? ஏன் சக்கரவர்த்திக்கு அருகில் அவர் காணப்படவில்லை?" என்று அவளுடைய உள்ளம் பதைபதைத்தது. சில கண நேரத்திற்குள் பற்பல எண்ணங்கள் மின்னலைப் போல் தோன்றி மறைந்தன. ஏதாவது அவருக்கு விபத்து நேர்ந்திருக்குமோ? இராது, இராது இராது. அப்படி இருந்தால், மகேந்திர பல்லவர் இந்த வைபவத்தை நடத்துவாரா? "மிக்க சந்தோஷம் ஆயனரே! அதோ வாத்தியக் கோஷ்டியும் ஆயத்தமாயிருக்கிறது. உங்களுக்காகவே இந்தச் சபையை இவ்வளவு நேரம் வளர்த்திக் கொண்டிருந்தோம்!" என்றார் மகேந்திர பல்லவர்.

சிவகாமி தான் நின்ற இடத்திலிருந்து நடன வட்டத்துக்குப் போகத் திரும்பிய போது, மீண்டும் அவளுடைய கண்கள் ஒருமுறை சுற்றிச் சுழன்றன. அப்போது அவளுடைய பார்வை தற்செயலாகப் புலிகேசியின் முகத்தில் விழுந்தது. வெறித்து நோக்கிய புலிகேசியின் கொடுங் கண்களைச் சந்தித்த போது திடீரென்று வீசிய வாடைக் காற்றில் அடிபட்ட மல்லிகைக் கொடியைப் போல அவளுடைய உள்ளம், உடம்பு எல்லாம் சில்லிட்டு நடுநடுங்கின. இது ஒரு வினாடி நேரந்தான். அகாரணமாகத் தோன்றிய அந்த உணர்ச்சியை எப்படியோ சிவகாமி சமாளித்துக் கொண்டு நடன வட்டத்தை நோக்கி நடந்தாள். அப்போது இன்னதென்று சொல்ல முடியாத அருவமான நிழல் போன்ற ஞாபகம் ஒன்று அவளைப் பின்தொடர்ந்து சென்றது.

நடன வட்டத்தில் சென்று நின்றதும் சிவகாமி மேற்கூறிய நிழல் ஞாபகத்தை உதறித் தள்ளிவிட்டு ஆட்டத்துக்கு ஆயத்தமானாள். அப்போது அவள் தன்னடக்கத்துக்குப் பங்கமில்லாமல் அந்த மகாசபையின் நாலாபுறத்திலும் கண்ணைச் சுழற்றிப் பார்த்தல் சாத்தியமாயிருந்தது. மண்டபத்தின் மேல் மச்சு மாடங்களிலே சக்கரவர்த்தினியும் மற்ற அந்தப்புரத்து மாதர்களும் வீற்றிருப்பது அவள் பார்வைக்குப் புலனாயிற்று. முன்னொரு நாள் அதே மண்டபத்தில் நடந்த அரங்கேற்றத்தின் போது இன்று போலவே மாமல்லரைக் காணாமல் முதலில் தான் ஏமாற்றமடைந்ததும், பிற்பாடு அவர் தாய்மார்களுடன் மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகத் தெரியப்படுத்தியதும் நினைவு வந்தன. இன்றைக்கும் அவர் அவ்வாறே தன் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு மறைவான இடத்திலிருந்து தன்னுடைய நடனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. இந்த எண்ணம் ஏற்பட்டதும் இதற்கு முன் அவளுக்கு ஏற்பட்டிருந்த ஏமாற்றம், சோர்வு, மனக் கலக்கம், நடுக்கம் எல்லாம் மாயமாய் மறைந்து போயின, நடனமும் உடனே ஆரம்பமாயிற்று. நடனம் ஆரம்பமாகிச் சிறிது நேரத்துக்கெல்லாம் அச்சபையில் இருந்தவர்கள் எல்லாம், அது ஒரு இராஜ சபை என்பதையும், அதில் ஒரு பெண் நடனமாடுகிறாள் என்பதையும், தாங்கள் அங்கேயிருந்து அதைப் பார்க்கிறோம் என்பதையும் மறந்தே போனார்கள். இந்த ஜட உலகத்தையே விட்டு விட்டு அனைவரும் ஒரு புதிய ஆனந்தக் கனவுலகத்துக்கே போய் விட்டார்கள்.

நடனம் ஆரம்பமாகும் சமயத்தில் சிவகாமி தௌிந்த தன்னுணர்ச்சி பெற்றிருந்தாள். தன் வாழ்க்கையிலேயே அது ஒரு முக்கியமான தினம் என்றும், அன்று தான் ஆடப் போகும் நடனம் தன் வாழ்க்கையில் ஒரு முக்கிய சம்பவம் என்றும் உணர்ந்திருந்தாள். கன்னி சிவகாமியின் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த இரு பேருணர்ச்சிகளில் ஒன்று மாமல்லர் மேல் கொண்ட காதல் என்பதையும், இன்னொன்று நடனக் கலை மீது அவளுக்கிருந்த பிரேமை என்பதையும் முன்னமே பார்த்திருக்கிறோம். இப்போது இங்கே கூடியிருப்பது போன்ற ஒரு மகா சபை தனது கலைத் திறமையைக் காட்டுவதற்குக் கிடைப்பது மிகவும் அரிது என்பதை ஆயனரைப் போல் அவளும் உணர்ந்திருந்தாள். அன்றியும் சிவகாமிக்குத் தன்னுடைய கலைத் திறமை முழுவதையும் அந்தச் சபையில் காட்ட வேண்டுமென்ற ஊக்கம் ஏற்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது.

மகேந்திர பல்லவர் மற்ற விஷயங்களில் எவ்வளவு கடின சித்தராயிருந்தபோதிலும், கலைகளுக்கு மனம் உருகக் கூடியவர். தன் கலைத் திறமையினால் அவருடைய நன்மதிப்பைக் கவர வேண்டும்; தான் மாமல்லரை மணந்து கொள்வதற்கு அவர் தடை சொல்லாதபடி செய்ய வேண்டும். வயிர நெஞ்சமுள்ள ஒரு மகா சக்கரவர்த்தியின் மனத்தை மாற்றித் தன் விருப்பத்துக்கிணங்கும்படி செய்வதற்குத் தன்னிடம் உள்ள ஒரே ஆயுதம் நடனக் கலையே அல்லவா? எனவே, அன்றைக்குத் தன்னுடைய நடனம் பரத நாட்டியத்தின் சரித்திரத்திலேயே ஓர் அற்புத சம்பவமாயிருக்க வேண்டுமென்று சிவகாமி சங்கற்பம் செய்து கொண்டாள். ஆனால் இத்தகைய தன்னுணர்ச்சியெல்லாம், சிவகாமி ஆட்டத்தைத் தொடங்கும் வரையிலேதான் இருந்தது. ஆட்டம் ஆரம்பமாயிற்றோ, இல்லையோ, இத்தனை காலமும் சிவகாமியின் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த கலை உணர்ச்சியானது பொங்கிப் பெருகத் தொடங்கியது. சிவகாமி தான் என்னும் உணர்ச்சி அற்றுக் கலை வடிவமாகவே மாறி விட்டாள். பின்னர் சிவகாமி நடனம் ஆடவில்லை; நடனக் கலையானது அவளை ஆட்கொண்டு ஆட்டுவித்தது.

சிவகாமியின் உள்ளமானது நாட்டியக் கலையின் அம்சங்களாகிற தாளங்களையும், ஜதிகளையும், அடைவுகளையும், தீர்மானங்களையும் பற்றி எண்ணவில்லை. அந்தத் தாளங்கள், ஜதிகள், அடைவுகள், தீர்மானங்கள் எல்லாம், அவை அவை அந்தந்த இடத்தில் ஓடி வந்து சிவகாமிக்குச் சேவை செய்தன. சிவகாமியின் உள்ளம் ஆனந்த வௌியிலே மிதந்து கொண்டிருந்தது. அவளுடைய தேகமோ எல்லையற்ற ஆனந்த வெள்ளத்திலே அனாயாசமாக மிதந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த சபையோர்களும் ஆனந்த சாகரத்தில் மிதக்கலாயினர். பரத நாட்டிய வினிகையில் முதற் பகுதியான 'நிருத்தம்' முடிவடைந்த போதுதான் சபையோர் தாங்கள் சஞ்சரித்த ஆனந்தக் கனவுலோகத்திலிருந்து பூவுலகத்துக்கு வந்தனர். அப்போது சபையின் நானா புறங்களிலிருந்தும் பிரமாதமான கரகோஷம் எழுந்தது. அவ்விதம் கரகோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தவர்கள் இரு சக்கரவர்த்திகளும் கூடத்தான்.

நடனம் ஆரம்பிப்பதற்கு முன்னால், சிவகாமியும் ஆயனரும் மகேந்திர சக்கரவர்த்தியிடம் கட்டளை பெற்றுக் கொண்டு நடன வட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வாதாபி மன்னர் மகேந்திர பல்லவரைப் பார்த்து, "இதென்ன? இவர்களுக்கு இவ்வளவு மரியாதை செய்கிறீர்களே? எங்கள் நாட்டிலே சாட்டையினால் அடித்து நடனம் ஆடச் சொல்வோம்!" என்றார். "சத்யாச்ரயா! எங்கள் நாட்டில் அப்படியில்லை. இங்கே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நாங்கள் மிக்க மரியாதை செய்கிறோம். இராஜ்யம் ஆளும் மன்னர்களையும் சக்கரவர்த்திகளையும் போலவே கலை உலகிலும் இங்கே அரசர்களும் சக்கரவர்த்திகளும் உண்டு. 'சிற்ப சக்கரவர்த்தி', 'கவிச் சக்கரவர்த்தி' என்ற பட்டங்கள் அளிக்கிறோம். ஆயனர் 'சிற்ப சக்கரவர்த்தி' என்ற பட்டம் பெற்றவர். இராஜ்யம் ஆளும் சக்கரவர்த்திகளுக்குச் செய்யும் மரியாதையை மக்கள் இவருக்கும் செய்கிறார்கள்" என்றார். "அழகாய்த்தானிருக்கிறது உங்கள் நாட்டின் வழக்கம்!" என்று பரிகசித்தார் வாதாபி மன்னர். சிவகாமியின் நிருத்தம் முடிந்தவுடனே வாதாபிச் சக்கரவர்த்தியும் மற்றவர்களைப் போல் கரகோஷத்தில் ஈடுபட்டதைக் கண்ட மகேந்திர பல்லவர், "இப்போது என்ன சொல்கிறீர்கள்? கலைஞர்களுக்கு மரியாதை செய்வது பற்றி உங்களுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டீர்களா?" என்று கேட்டார். "நடனம் அற்புதமாய்த்தானிருக்கிறது; இம்மாதிரி நான் பார்த்ததேயில்லை. ஆனாலும்...." என்று கூறி இடையில் நிறுத்தி விட்டுப் புலிகேசி ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.

அன்று அபிநயத்துக்குச் சிவகாமி முதன் முதலாக எடுத்துக் கொண்டு பாடல் செந்தமிழ் நாட்டின் ஆதிதேவதையான வேலனைப் பற்றியது. வேலன் தன்னிடம் பக்தி கொண்ட பெண்ணுக்கு, "நான் திரும்ப வந்து உன்னை ஆட்கொள்கிறேன்!" என்று வேலின் மீது ஆணையிட்டு வாக்களித்திருக்கிறான். ஆனால் அவ்வாக்குறுதியை அவன் நிறைவேற்றவில்லை. அதனால் அந்தப் பெண் ஏமாற்றமும் மனத் துயரமும் அடைகிறாள். அந்த நிலைமையிலும் வேலனிடத்திலே கோபங்கொள்ளவோ, அவன் மீது குறை சொல்லவோ அவளுக்கு விருப்பமில்லை. எனவே, குற்றத்தையெல்லாம் வேலனுடைய வாகனமாகிய மயிலின் மீது போடுகிறாள். மயிலை நிந்திக்கிறாள்; கோபிக்கிறாள்; பலவிதமாகவும் இடித்துக் காட்டுகிறாள். இந்தக் காலத்தில், 'ஆனந்த பைரவி' என்றும் வழங்கும் பழமையான ராகத்தில், நடனத்துக்கும் அபிநயத்துக்கும் ஏற்ற தாளத்துடன் அமைந்த பாடல் பின்வருமாறு:

மறவேன் மறவே னென்று வேலின்மேல் ஆணையிட்ட

மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே!(மற)

உருகி உருகி உள்ளம் அவரை நினைவதையும்

உயிரும் கரைவதையும் - அறியாரோ மயிலே?(மற)

அன்பர் வரவு நோக்கி இங்குதான் காத்திருக்க

அன்னநடை பயில்வாயோ - வண்ண மயிலே!

பெம்மான் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறிப்

பாதையை மறந்தாயோ - பேதை மயிலே!

வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைந்து

வழியில் உறங்கினாயோ - வாழி நீ மயிலே!(மற)

தன்னிகரில்லாதான் தனயர்பால் மையல் கொண்ட

மங்கைமீ திரங்காயோ - தங்க மயிலே!

சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய்

உன்னை நொந் தாவதென்ன? - வன்கண் மயிலே!

மன்னும் கரிபரிகள் புவியில் பல இருக்க

உன்னை ஊர்தியாய்க் கொண்டோர் - தன்னையே நோகவேணும்(மற)