சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/சத்ருக்னன் வரலாறு

36. சத்ருக்னன் வரலாறு


வாசற்படியில் மாமல்லர் வந்து நின்றதைச் சத்ருக்னனும் ஆயனரும் கவனிக்கவில்லை. அவ்வளவுக்குத் தங்களுடைய பேச்சில் அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். மண்டபத்துக்குள்ளே மாமல்லர் பிரவேசித்ததும் இருவரும் ஏக காலத்தில் நிமிர்ந்து பார்த்தார்கள். சத்ருக்னன் சட்டென்று எழுந்து நின்று, "பிரபு!" என்றான். மேலே ஒன்றும் சொல்ல முடியாமல் அவன் திகைத்தான். ஆயனரோ முகத்தில் உற்சாகமும் குதூகலமும் ததும்ப சாய்ந்து படுத்திருந்தவர் நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்து "பிரபு! வாருங்கள்! வாருங்கள்! தங்களைத்தான் இப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். சத்ருக்னன் நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறான். குழந்தை சிவகாமி உயிரோடு சௌக்கியமாயிருக்கிறாளாம்!" என்றார்.

இதைக் கேட்ட மாமல்லரின் தலை சுழல்வது போலிருந்தது. ஆயனருக்கு அருகில் வந்து நின்று சத்ருக்னனை ஏறிட்டுப் பார்த்த வண்ணம், "சத்ருக்னா! இது உண்மைதானா?" என்று கேட்டார். "ஆம் பிரபு! உண்மைதான்!" என்று சத்ருக்னன் கூறிவிட்டுக் கைகூப்பிய வண்ணம், "பல்லவ குமாரா! சற்று முன்பு காட்டுப் பாதையில் தங்களைக் கண்டபோது பேசாமல் வந்துவிட்டேன், அதற்காக மன்னிக்க வேண்டும். திடீரென்று தங்களைப் பார்த்ததும் பேசக் கூச்சமாயிருந்தது!" என்று பணிந்த குரலில் கூறினான். "அந்தப் பெண் நீதானா? நல்ல வேஷம்!" என்றார் மாமல்லர். "ஆமாம், நானுங்கூடச் சற்று முன்பு திகைத்துப் போய் விட்டேன். பெண் பிள்ளை வேஷம் எவ்வளவு நன்றாய் இவனுக்குப் பலித்திருக்கிறது? சக்கரவர்த்தி ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு பொருத்தமாய் ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்?" என்றார் ஆயனர்.

மாமல்லர் மெல்லிய குரலில், "சக்கரவர்த்தியின் சாமர்த்தியத்தை நீங்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும்!" என்று முணு முணுத்துக் கொண்டார். பிறகு, சத்ருக்னனைப் பார்த்து, "எதற்காக ஸ்திரீ வேஷம் போட்டாய்?" என்று கேட்டார். "சத்ருக்னன் அந்த வேஷம் போட்டதனால்தான் சிவகாமியைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. தயவு செய்து உட்காருங்கள்; சத்ருக்னன் எல்லாம் விவரமாய்ச் சொல்லட்டும். நானும் இன்னொரு முறை கேட்டுக் கொள்கிறேன்" என்றார் ஆயனர். மாமல்லர் உட்கார்ந்தார், சத்ருக்னனும் உட்கார்ந்து தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினான் அந்த வரலாறு இதுதான்:

"ஆயனரும் சிவகாமியும் காஞ்சிக் கோட்டையிலிருந்து சுரங்க வழியாக வெளியே போய் விட்டார்கள் என்று தெரிந்ததும் சக்கரவர்த்திக்கு இடி விழுந்தது போலாகி விட்டது. உடனே தாமும் கோட்டைக்கு வெளியே போகத் தீர்மானித்துப் படைகளை ஆயத்தம் செய்யும்படி கட்டளையிட்டார். பிறகு என்னைத் தனியாகக் கூப்பிட்டு, 'சத்ருக்னா! நீ இதுவரையில் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எத்தனையோ சேவைகள் செய்திருக்கிறாய். ஆனால், அவை எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமான சேவை இப்போது செய்ய வேண்டும். மாமல்லன் மட்டும் இப்போது இங்கிருந்தால் நானே அந்த வேலையை மேற்கொள்வேன். பல்லவ குலத்தின் மானத்தைக் காப்பதற்காக நான் இப்போது போருக்குப் புறப்பட வேண்டியிருக்கிறது. சிவகாமியைக் கண்டு பிடித்து அவளைத் திருப்பிக் கொண்டு வரும் வேலையை உன்னிடம் ஒப்படைக்கிறேன். சிவகாமியை மீட்டுக் கொண்டு வர முடியாவிட்டால் அவளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்' என்று கட்டளையிட்டார். இதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். 'பிரபு! சிவகாமி அம்மை சளுக்கரிடம் சிறைப்பட்டிருந்தால் தன்னந்தனியாக நான் என்ன செய்வேன்?' என்றேன். 'கஷ்டமான காரியமானபடியால்தான் உன்னிடம் ஒப்படைக்கிறேன், சத்ருக்னா! நீ இதுவரை எத்தனையோ வேஷங்கள் போட்டிருக்கிறாய். அவை எல்லாவற்றையும் விட உனக்கு நன்றாகப் பலிக்ககூடிய வேஷம் ஒன்று இருக்கிறது, அது பெண் வேஷந்தான்!" என்றார். சக்கரவர்த்தியின் கருத்தை நான் உடனே தெரிந்து கொண்டேன். சற்றுமுன் பார்த்தீர்களே! அம்மாதிரி வேஷம் தரித்துக் கொண்டு காஞ்சியை விட்டுக் கிளம்பி முதலில் இந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

"நான் வரும் சமயத்திலேதான் இவரை ஸ்மரணையற்ற நிலையில் இந்த வீட்டுக்குள்ளே கொண்டு வந்தார்கள். இவரோடு சிவகாமி தேவி வரவில்லை; எனவே, தேவி சளுக்கரிடம் சிறைப்பட்டுத்தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டேன். காஞ்சிக் கோட்டையைச் சுற்றிச் சென்றேன். சளுக்க ராட்சதர்களின் கூக்குரல் கேட்ட இடங்களிலெல்லாம் மறைந்திருந்து கவனித்தேன். கடைசியில் காஞ்சிக்கு வடமேற்கே ஒரு பெரிய சளுக்கர் படை வட திசையை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அந்தப் பெருங்கும்பலுக்கு மத்தியிலிருந்து ஸ்திரீகள் புலம்பி அழும் சத்தம் வந்து கொண்டிருந்தது. இன்னும் அருகில் சென்று பார்த்த போது, அவ்வாறு ஓலமிட்ட ஸ்திரீகள் நம் கிராமங்களில் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்தது. அந்தப் பெண்களுக்கு நடுவே பல்லக்கு ஒன்றும் காணப்பட்டது. அதில் இருந்தவர் சிவகாமி தேவிதான் என்று தெரிந்து கொண்டேன்.

"சற்று நேரத்துக்கெல்லாம் நான் தலை விரிகோலமாய் 'ஓ' என்று ஓலமிட்டுக் கொண்டு அந்தப் படையை நோக்கி ஓடினேன். பின்னால் என்னை யாரோ துரத்தி வருவதுபோலப் பாசாங்கு செய்து திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடினேன். சளுக்கர்கள், 'வந்தாயா? வா!' என்று பரிகாசக் குரலில் கூறிக்கொண்டு என்னை அழைத்துப்போய் மற்றச் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்களுடனே சேர்த்து விட்டார்கள். சற்று நேரம் மற்றப் பெண்களைப் போல் நானும் ஓலமிட்டுக் கொண்டிருந்தேன். பிறகு மெள்ள மெள்ளப் பல்லக்கை நெருங்கிச் சென்று அதிலிருப்பது சிவகாமி அம்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். சிவகாமியை அவ்வளவு மரியாதையுடன் அழைத்துபோன காரணத்தையும் ஊகித்தறிந்தேன். அந்தச் சளுக்கர் படையின் தலைவனாகிய தளபதி சசாங்கன், சிவகாமி அம்மையைப் பத்திரமாய்க் கொண்டுபோய் வாதாபிச் சக்கரவர்த்தியிடம் ஒப்புவித்துப் பல்லவ நாட்டின் சிறந்த கலைச் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வந்ததற்காகப் பரிசு கேட்கப் போகிறான்! இந்த எண்ணத்தினால் எனக்கு ஒருவாறு மனநிம்மதி ஏற்பட்டது. சிவகாமி அம்மைக்கு உடனே தீங்கு எதுவும் நேராது என்று தைரியம் அடைந்தேன். ஆனால், சளுக்க ராட்சதப் படையால் சூழப்பட்ட சிவகாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் செல்வது சாத்தியமான காரியமாகவே தோன்றவில்லை. எத்தனையோ உபாயங்கள் யோசித்து யோசித்துப் பயன்படாது என்று கைவிட்டேன்.

"இதற்கிடையில் எல்லாரும் வடதிசை நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தோம். வெள்ளாறு என்று வழங்கும் பொன்முகலியாற்றங்கரைக்குப் போய்த் தங்கினோம். இவ்விடத்தில் தளபதி சசாங்கன் பெரு மனக்குழப்பத்தை அடைந்தவனாகக் காணப்பட்டான். அதன் காரணமும் சளுக்க வீரர்களின் சம்பாஷணைகளிலிருந்து தெரிந்து கொண்டேன். மணிமங்கலத்தில் வாதாபிச் சக்கரவர்த்திக்கும் மகேந்திர பல்லவருக்கும் நடந்த பெரும் போரைப் பற்றித் தூதர்கள் கொண்டு வந்த செய்திதான் காரணம். இந்தச் செய்தி தளபதி சசாங்கனுக்கு அவ்வளவு குழப்பம் ஏன் அளித்தது என்பதையும் நான் ஊகித்தறிந்தேன். வாதாபிச் சைனியத்தில் பெரும் பகுதியுடன் புலிகேசி முன்னால் சென்று விட்டதாகவும், இதற்குள்ளாக அவர் வடபெண்ணைக் கரையை அடைந்திருக்க வேண்டும் என்றும் சசாங்கன் எண்ணிக் கொண்டிருந்தான். இப்போது புலிகேசி தனக்குப் பின்னால் தங்கி மாமல்லபுரத்துக்குப் பக்கத்தில் மணிமங்கலத்தில் சண்டையிட்டதாகச் செய்தி வந்ததும் சசாங்கன் திகைத்தது இயற்கைதானே? சக்கரவர்த்தியைப் பின்னால் விட்டுவிட்டுத் தான் முன்னால் ஓடி வந்தது பற்றி அவருக்குக் கோபமோ என்னவோ என்று சசாங்கன் ரொம்பவும் தவித்துக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பொன் முகலி ஆற்றங்கரைக்கு நாங்கள் வந்து சேர்ந்த மறுநாள் சசாங்கன் தன் சளுக்கப் படைகளுடன் தென்கரையில் இருந்து கொண்டு சிறைப்பிடித்த ஸ்திரீகளாகிய எங்களை மட்டும் அக்கரைக்கு அனுப்பினான். எங்களைக் காவல் புரிவதற்குச் சில சளுக்க வீரர்களை உடன் அனுப்பி வைத்தான்.

"அக்கரை சென்றதும், 'இது ஒரு நல்ல சந்தர்ப்பம்; சிவகாமி அம்மையை அழைத்துக் கொண்டு போய்ப் பக்கத்தில் காணப்படும் குன்றுகளிலே ஒளிந்து கொள்ளலாம். காவலர்கள் சிலர்தான் இருப்பதால் அவர்களுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் தப்பிச் செல்லலாம்' என்று தீர்மானித்தேன். அன்றிரவு, எல்லோரும் தூங்க யத்தனம் செய்த சமயத்தில் நான் சிவகாமி அம்மையின் அருகில் இருக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டேன். மற்றப் பெண்கள் எல்லாரும் தூங்கிய பிறகு பிராகிருத பாஷையில் என்னை இன்னானென்று தெரிவித்துக் கொண்டேன். சிவகாமி முதலில் பெரிதும் ஆச்சரியமடைந்தார். பிறகு, ஆயனரைப் பற்றிக் கேட்டார்; தங்களைப் பற்றியும் விசாரித்தார். ஆனால் தங்களைப்பற்றி எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தாங்கள் தெற்கேயிருந்து திரும்பி வந்த விவரமே தெரியாது. ஆகையால், ஆயனர் உயிர் பிழைத்திருக்கிறார் என்ற விவரத்தை மட்டும் சொன்னேன். பிறகு மெள்ள, மெள்ள என் யோசனையையும் தெரிவித்தேன். பிரபு! என்னுடைய ஏமாற்றத்தை என்னவென்று சொல்வேன்...."