சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/ஜயஸ்தம்பம்

51. ஜயஸ்தம்பம்


வாதாபி நகருக்கு இரண்டு காத தூரம் கிழக்கே ஒரு குன்று இருந்தது. சுற்றிலும் காடு அடர்ந்த அந்தக் குன்றின் ஒருபக்கத்துச் சரிவில் அடுத்தடுத்துக் குடைந்த குகைகள் இரண்டு இருந்தன. இரண்டு குகைகளும் குடையும் வேலை பூர்த்தியாகாமல் அரைகுறையாக விடப்பட்டிருந்தன. பௌத்தர்களோ சமணர்களோ அந்தக் குகைகளைக் குடைய ஆரம்பித்திருக்க வேண்டும். அப்புறம் எந்தக் காரணத்தினாலோ வேலையை நடுவில் நிறுத்தி விட்டுப் போயிருக்க வேண்டும். குகைகளில் ஒன்றுக்குள்ளேயிருந்து சல சல வென்ற சப்தத்துடன் ஒரு சிற்றருவி வெளியே வந்து கொண்டிருந்தது. குகையின் வெளியில் அந்த அருவி அங்குமிங்கும் தவழ்ந்து விளையாடி முத்து நீர்த்துளிகளை வாரி இறைத்துவிட்டுக் கீழ்நோக்கிச் சென்று அடர்ந்த விருட்சங்களின் நிழலில் மறைந்தது. இவ்வளவு அழகான இயற்கைக் காட்சியின் ரம்யத்தைக் கெடுத்து அருவருப்பையுண்டு பண்ணக்கூடிய பொருள்கள் சில அருவியின் இருபுறத்துப் பாறைகளிலும் விருட்சங்களின் அடியிலும் காணப்பட்டன. அவை மனிதர்களின் மண்டை ஓடுகள், மாட்டுக் கொம்புகள் முதலிய காபாலிகர் கூட்டத்தின் சின்னங்களாகும். பாறைகள் சிலவற்றில் இரத்தக்கறை படிந்திருந்ததிலிருந்து, அந்தப் பாறைகள் சமீபத்தில் பலிபீடங்களாக உபயோகப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது.

மாலை நேரத்து மஞ்சள் வெயிலினால் பச்சை மரங்களும் பசும்பொன் நிறம் பெற்றுத் திகழ்ந்த நேரத்தில், மேற்கூறிய குகைகளுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மொட்டைப் பாறையிலே நாலுபேர் உட்கார்ந்திருந்தார்கள். தொலை தூரம் பிரயாணம் செய்திருந்த காரணத்தினால் அவர்கள் பெரிதும் களைப்படைந்திருந்தார்கள். ஆடைகள் அழுக்கடைந்திருந்தன; தலையில் ரோமம் சடை விழுந்திருந்தது. முகவாய்க் கட்டையில் ரோமம் அடர்ந்திருந்தது. அவர்களுடைய இளம்பிராயத்துக்குப் பொருந்தாத சுருக்கங்கள் முகத்தில் காணப்பட்டன, கண்கள் குழிவிழுந்து போயிருந்தன. ஆயினும், அந்தக் கண்களிலே ஒரு அசாதாரண ஒளி, இணையில்லா மனோதைரியத்தையும் எடுத்த காரியத்தை நிறைவேற்றும் உறுதியையும் காட்டும் ஜீவசக்தி, பிரகாசித்தது.

குன்றின் உச்சியில் ஒரு மனிதன் நின்று நாலாபுறமும் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். கீழே மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்தவர்கள் அடிக்கடி அவனை அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மேலே நின்ற மனிதன் குதூகலம் நிறைந்த குரலில், "அதோ!" என்றான். அந்தக் குரலிலிருந்தே அவன் நமது பழைய நண்பன் குண்டோதரன் என்பதை அறிந்து கொள்கிறோம். "அதோ!" என்ற சத்தத்தைக் கேட்டதும் மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்த நால்வரின் முகங்களும் மலர்கின்றன. அவன் சுட்டிக்காட்டிய திக்கை அவர்கள் ஆவலுடன் உற்றுப் பார்க்கிறார்கள். மரங்கள் அடர்ந்த காட்டுக்குள்ளேயிருந்து ஒருவன் வருகிறான். அவன் வேறு யாருமில்லை; பல்லவ நாட்டு ஒற்றர் தலைவன் சத்ருக்னன்தான், மற்றவர்களைப் போல் அன்றிச் சத்ருக்னன் நன்றாக க்ஷவரம் செய்து கொண்டு சுத்தமான முகத்துடன் விளங்குகிறான். அதிலிருந்தே அவன் நகரத்துக்குப் போய் வருகிறான் என்று அறிந்து கொள்ளலாம்.

தோளிலே துணிப்பை தொங்க வந்த சத்ருக்னனை ஐந்து பேரும் சூழ்ந்து கொண்டார்கள். "சத்ருக்னா! காயா? பழமா சீக்கிரம் சொல்!" என்றார்கள். "பழந்தான்" என்று சொல்லிக் கொண்டே, சத்ருக்னன் தோளில் தொங்கிய பையை எடுத்து அவிழ்த்தான். அதிலிருந்த பழங்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின. அவற்றைப் பொறுக்குவதற்கு எல்லாரும் பட்ட அவசரத்திலிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் பசித்திருந்தார்கள் என்று தெரிய வந்தது. பசித்ததோ, இல்லையோ தரையில் விழுந்த பழங்களின் மேல் கவனம் செலுத்தாமல், சத்ருக்னன் என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே கவனம் செலுத்திய ஒருவரும் அவர்களில் இருந்தார். அவர்தான் மாமல்லர் என்று சொல்ல வேண்டியதில்லை. "சத்ருக்னா! பழம் என்கிறாயே? அப்படி என்றால் என்ன? சிவகாமியைப் பார்த்தாயா?" என்று கேட்டார். "ஆம் பிரபு, பார்த்தேன்!" என்று கூறி மறுபடியும் சத்ருக்னன் மௌனம் சாதித்தான். "ஏன் இப்படிப் பேசாமல் நிற்கிறாய்? மேலே சொல், சத்ருக்னா! எங்கே பார்த்தாய்? எந்த நிலையில் பார்த்தாய்?" என்று மாமல்லர் கேட்டார். "பிரபு! சிவகாமி அம்மையைப் பார்த்தேன். சௌக்கியமாக இருக்கிறார், கவலைக்கு ஒரு காரணமும் இல்லை. எங்கே பார்த்தேன்; எப்படிப் பார்த்தேன் என்பதை விவரமாகச் சொல்ல வேண்டும் எல்லாரும் உட்காருங்கள், சொல்கிறேன்!" என்றான் சத்ருக்னன்.

அவ்வண்ணமே அனைவரும் பாறை மீது உட்கார்ந்தார்கள்; சத்ருக்னன் சொல்லத் தொடங்கினான்: "நேற்று மாலை வளையல் வியாபாரியின் வேஷத்தில் வாதாபி நகருக்குள் பிரவேசித்தேன். கோட்டை வாசலுக்குள் பிரவேசிப்பதில் எவ்விதக் கஷ்டமும் இருக்கவில்லை. ஜனங்கள் தாராளமாய் நகருக்குள் வந்து கொண்டும், போய்க் கொண்டுமிருக்கிறார்கள். எந்த எதிரியின் படையெடுப்பையாவது எதிர்பார்த்தால் அல்லவா கோட்டையில் கட்டுக்காவல் வைக்கப் போகிறார்கள்? வாதாபியின் வீரப்படைகள் எட்டுத் திசையும் சென்று திக்விஜயம் செய்து கொண்டிருக்கும்போது...." அச்சமயம் சேனாதிபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, "என்ன உளறுகிறாய்; சத்ருக்னா! திக்விஜயமாவது மண்ணாங்கட்டியாவது? தென்னாட்டுக்குச் சென்ற வாதாபிப் படைகள் தோற்றுத் திரும்பி ஓடி வந்திருக்கின்றன! வேங்கிக்குப் போன சளுக்க சைனியத்தின் பாடும் ஆபத்துத்தான் என்று தெரிகிறது. அப்படியிருக்க வாதாபிப் படைகளின் திக்விஜயமாவது...? என்றார்.

சத்ருக்னன் பணிவுடன் கூறினான்; "சேனாபதி! வாதாபிப் படைகளின் திக்விஜயம் என்று நான் கூறியது என்னுடைய சொந்த மொழியல்ல. வாதாபி நகரத்தின் பிரதான நாலு வீதிச் சந்திப்பிலே ஒரு நெடிதுயர்ந்த ஜயஸ்தம்பம் நாட்டியிருப்பதைப் பார்த்தேன். அந்த ஜயஸ்தம்பத்திலே பிராகிருத மொழியில் எழுதியிருக்கும் மொழிகளையும் படித்தேன். கிட்டத்தட்ட அதில் எழுதியிருப்பதை ஞாபகம் உள்ள வரை அப்படியே சொல்லிப் பார்க்கிறேன். "மகா ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ரணதுங்க சூர சளுக்க குலதிலக சப்தலோக தேவேந்திர புலிகேசிச் சக்கரவர்த்தி தென் திசையை நோக்கி விஜயம் செய்யப் புறப்பட்டுச் சென்று மகேந்திர பல்லவனை வடபெண்ணைக் கரையில் முறியடிக்க, மகேந்திரன் போரில் புறமுதுகிட்டோடிக் காஞ்சிக் கோட்டைக்குள் பதுங்கிக் கொள்ள, புலிகேசிச் சக்கரவர்த்தி மேலும் தெற்கு நோக்கித் திக்விஜயம் கிளம்பிக் காவேரி நதிக்கு யானைப்பாலம் அமைத்துக் கடந்து, அங்கே சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுவதற்குக் காத்திருந்த சேர சோழ களப்பாள பாண்டிய மன்னர்களின் சிரங்களில் தம் திருப்பாத கமலங்களை வைத்து அருள் புரிந்து, திரும்புங்காலையில், காஞ்சிக் கோட்டையைப் பலங்கொண்டு தாக்க, மகேந்திர பல்லவன் சரணாகதியடைந்து காப்பாற்ற வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்ச, அவ்விதமே மகேந்திரனுக்கு அருள் புரிந்து, அவனுடைய உபசாரங்களையும் காணிக்கைப் பொருள்களையும் ஏற்றுக் கொண்டு, தென்னாட்டின் திக்விஜயத்தைப் பூர்த்தி செய்து, ஜயபேரிகை முழக்கி, வெற்றிச் சங்கு ஊதி, வாதாபி நகரத்துக்குத் திரும்பி வந்தது சாலிவாகன சகாப்தம் நாளது ஆண்டு, திங்கள், தேதி; கடல் சூழ்ந்த நில உலகம் உள்ளவரையில் இந்த வாதாபி நகரமும் இந்த திக்விஜய ஜயஸ்தம்பமும் சளுக்க சக்கரவர்த்தி குலமும் என்றென்றைக்கும் நின்று நீடித்துப் பொருகித் தழைத்து விளங்குவதாக!"

இவ்விதம் சத்ருக்னன் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், "என்ன பொய்! என்ன கர்வம்! அந்த ஸ்தம்பத்தை இடித்துத் தள்ளாமல் விடுவதில்லை" என்றெல்லாம் கூறினார்கள். சிறிது அவர்கள் இடம் கொடுத்ததும், சத்ருக்னன் மேலும் கூறினான்; "பிரபு அந்த ஜயஸ்தம்பத்தில் இவ்விதம் நான் படித்ததும் என்னை நான் மறந்து விட்டேன். ஸ்தம்பத்தை நோக்கி ஒரு உதை விடலாம் என்று எண்ணிக் காலையும் தூக்கி விட்டேன். கடவுள் அருளால் நல்ல சமயத்தில் எதற்காக வாதாபி நகருக்கு வந்தோம் என்பது ஞாபகம் வந்தது. ஏதோ கால் தடுக்கி விழுந்தவனைப்போல் தொப்பென்று கீழே விழுந்து சமாளித்துக் கொண்டேன். வீதியில் ஜனக்கூட்டம் 'ஜேஜே' என்று இருந்தது. யாராவது பார்த்திருந்தால் விபரீதமாய்ப் போயிருக்கும்!" என்று கூறி நிறுத்தினான்.

"சத்ருக்னா! வாதாபிக்கு வந்த காரியம் உனக்கு நினைவில் இருந்தது பற்றிச் சந்தோஷம். ஆனால் அதைப்பற்றி இன்னமும் நீ சொல்லவில்லை!" என்று மாமல்லர் கோபம் தொனிக்கக் கூறினார். "பிரபு! மன்னிக்க வேண்டும்; சளுக்கர்களின் பொய் சொல்லும் திறமைக்குச் சிறந்த ஞாபகச்சின்னமான அந்த ஜயஸ்தம்பத்தை விட்டு மேலே கிளம்பிச் சென்றேன். வாதாபி நகரின் மிதமிஞ்சிய ஐசுவரிய போகத்துக்கும் வாதாபி மக்களின் படாடோப வாழ்க்கைக்கும் பல அறிகுறிகளைப் பார்த்துக் கொண்டு போனேன். இந்தப் பெரிய நகரத்தில், கிழக்கு மேற்கிலும் தெற்கு வடக்கிலும் குறைந்தது காத தூரமுள்ள இந்தப் பிரம்மாண்டமான பட்டணத்தில், சிவகாமி அம்மையை எப்படித் தேடுவது, யாரை விசாரிப்பது என்று சிந்தனை செய்து கொண்டே போனேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல், அடுத்தாற் போல் வந்த நாற்சந்தி வீதி முனையில் அம்மையைச் சந்தித்தேன்..." "என்ன? நாற்சந்தி முனையிலா?" என்று பல குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன.

"ஆம்; நாற்சந்தி முனையிலேதான் பார்த்தேன். அம்மை அங்கே செய்து கொண்டிருந்த காரியத்தைக் கேட்டால் நீங்கள் பெரும் ஆச்சரியப்படுவீர்கள். எனக்கும் பார்த்தவுடனே ஆச்சரியமாயிருந்தது; வேதனையாகக் கூட இருந்தது. ஆனால், விசாரித்து விஷயம் தெரிந்து கொண்டதும் அளவில்லாத பெருமை அடைந்தேன். பிரபு! தமிழகத்துப் பெண்குலத்தின் பெருமையைச் சிவகாமி அம்மை நிலைநாட்டி விட்டார். நூறு காத தூரத்துக்கு அப்பால் எதிரிகளின் கோட்டையில் அநாதையாகவும் தன்னந்தனியாகவும் இருக்கும் நிலைமையில் அம்மையார் தமிழகத்துப் பெண்குலத்தின் தயாள குணத்தை நிலை நாட்டியிருக்கிறார்..." "சத்ருக்னா! ஏன் இப்படி வளைத்து வளைத்துப் பேசிக் கொண்டிருக்கிறாய்? சிவகாமி என்ன காரியம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாய்?" என்று மாமல்லர் கடுமையான குரலில் கேட்டார். "பிரபு சொல்லி விடுகிறேன்; வாதாபி நகரின் நாற்சந்தியில் சிவகாமி அம்மை நடனம் ஆடிக்கொண்டிருந்தார்....." "ஆகா!", "இது என்ன?" "அவமானம்! அவமானம்!" "இதைத்தானா தமிழகத்துக்குப் பெருமை என்று சொன்னாய், சத்ருக்னா!" என்று தலைக்குத் தலை கூவினார்கள்.

"மன்னிக்க வேண்டும்; கொஞ்சம் பொறுத்துக் கொண்டு மீதியையும் கேளுங்கள். சிவகாமி அம்மை ஒரு பெருங் கும்பலுக்கு மத்தியில் நின்று ஆடுவதைப் பார்த்ததும் எனக்கும் சொல்ல முடியாத அவமானம் உண்டாயிற்று. கோபமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தன. கூட்டத்தில் நின்ற வாதாபி மக்கள் கொச்சையான பாஷையில் பேசிக் கொண்ட அருவருப்பான வார்த்தைகளைக் கேட்டதும் என் காதுகள் கொப்பளித்தன; ஓடிப் பாய்ந்து அம்மையின் முன் சென்று, 'நிறுத்துங்கள் இந்த அவமானத்தை!' என்று கூவ வேண்டும் என்பதாக ஆத்திரம் உண்டாயிற்று. நல்லவேளையாக அந்தச் சமயத்தில், நடனமாடிய அம்மைக்குப் பின்னால் நின்றவர்கள் மீது என் பார்வை விழுந்தது, ஆகா! அதை எப்படிச் சொல்வேன்? தமிழகத்தைச் சேர்ந்த ஸ்திரீ புருஷர்கள் பலரை அங்கே கையைப் பின்னால் சேர்த்துக் கட்டி நிறுத்தியிருந்தார்கள். அவர்களுக்கிடையே கையில் சாட்டை பிடித்த யமகிங்கரர் போன்ற மனிதர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டதும் பிரமித்து நின்றுவிட்டேன். பிரமை நீங்கிய பிறகு கூட்டத்திலிருந்தவர்களின் பேச்சுக்களை ஒற்றுக் கேட்டும், சந்தேகம் தோன்றாதபடி விசாரித்தும், மேற்படி அதிசயக் காட்சியின் காரணத்தை நன்கறிந்து கொண்டேன்..."

பிறகு சத்ருக்னன், சிவகாமி அம்மை நாற்சந்தியில் நடனமாட நேர்ந்தது ஏன் என்னும் காரணத்தைத் தான் தெரிந்து கொண்டபடி அவர்களுக்குக் கூறினான். "தமிழகத்து ஆடவர் பெண்டிரைக் கொடுமையான சாட்டையடித் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே சிவகாமி நடனமாடுகிறாள்" என்று தெரிந்ததும் மாமல்லர் முதலியவர்களுக்குத் தேகத்தில் புளகாங்கிதம் உண்டாயிற்று. மேலே நடந்ததைப் பற்றி ஆவலுடன் கேட்டார்கள். "இனிய கானத்தைக் கேட்ட நாகசர்ப்பத்தைப் போல் நான் சிவகாமி அம்மையின் நடனத்தைப் பார்த்துக் கொண்டு பிரமித்து நின்றேன். அம்மை நடனத்தை முடித்துச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பினார். திரும்பியதும் சில கண நேரம் அவருடைய கண்களில் சொல்ல முடியாத வியப்பும் திகைப்பும் காணப்பட்டன. "அவர் பார்த்த திசையை நானும் நோக்கினேன்; அங்கே யார் நின்றது என்று நினைக்கிறீர்கள்?" "யார்? யார்?", "புலிகேசியா?" என்று கேள்விகள் எழுந்தன. "இல்லை நம் சிநேகிதர் நாகநந்திதான்!" என்றான் சத்ருக்னன்.