சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/பிக்ஷுவின் செய்தி

6. பிக்ஷுவின் செய்தி


சக்கரவர்த்தியின் கட்டளையைக் கேட்டதும் கூடாரத்திலிருந்த பலர் உடனே வௌியேறினார்கள். ஒற்றர் தலைவனும் இன்னும் சிலரும் வெளியேறுவதற்குத் தயங்கிய போது புலிகேசி அவர்களைக் கோபத்துடன் பார்த்து, "போங்கள்!" என்று கர்ஜனை செய்யவே அவர்களும் போய் விட்டார்கள். தனித்து நின்ற குண்டோதரனைப் பார்த்து, புலிகேசி சாந்தமான குரலில், "அப்பா நீ யார்? யாரிடமிருந்து வந்தாய்? அந்தரங்கச் செய்தி ஏதேனும் கொண்டு வந்திருக்கிறாயா?" என்று கேட்டான். "ஆம், மகாப் பிரபு! பிக்ஷுவிடமிருந்து தான் வந்தேன். சேதி கொண்டு வந்திருக்கிறேன்" என்றான் குண்டோதரன். "அப்படியா! என்ன செய்தி கொண்டு வந்தாய்?" என்று பரபரப்புடன் சொல்லிக் கொண்டே புலிகேசி சிம்மாசனத்திலிருந்து துள்ளிக் குதித்து எழுந்தான். "சீக்கிரம் சொல்லு! பிக்ஷு எங்கே இருக்கிறார்? சௌக்கியமாய் இருக்கிறாரா? ஏன் இத்தனை நாளாகச் செய்தி ஒன்றும் அனுப்பவில்லை? உன்னிடம் என்ன சொல்லி அனுப்பினார்?" என்று புலிகேசி சரமாரியாய்க் கேள்விகளை அடுக்கினான்.

குண்டோதரனுடைய கண்களில் திடீரென்று கண்ணீர் பெருகிற்று. விம்முகின்ற குரலில் "சத்யாச்ரயா! என் குருநாதர் காஞ்சியில் பாஷாண்டிப் பல்லவனுடைய சிறையில் இருக்கிறார்!" என்றதும், புலிகேசி "ஆஹா! நான் உயிரோடிருக்கும் போது பிக்ஷு சிறையில் இருப்பதா? என்ன அவமானம்! காவித் துணி அணிந்த பிக்ஷுவைச் சிறையில் இடும் அளவுக்கு மகேந்திர பல்லவன் அவ்வளவு நீசனாகி விட்டானா!" என்று சீறினான். பிறகு, "எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லு! பிக்ஷு எப்படிச் சிறைப்பட்டார்? நீ எப்போது அவரைப் பார்த்தாய்? என்ன செய்தி சொல்லியனுப்பினார்?" என்று கேட்டான்.

குண்டோதரன் சொன்னான்; "ஏழு நாளைக்கு முன்பு சென்ற வெள்ளிக் கிழமையன்றுதான் அவரைப் பார்த்தேன். மதத்துரோகியும், குருத்துரோகியும், பாஷாண்டியுமான மகேந்திர பல்லவன் தனது இராஜ்யத்திலுள்ள புத்த பிக்ஷுக்களையெல்லாம் பிடித்து அடைத்து வைத்திருக்கும் சுரங்க மண்டபத்துக்குள்ளே பிக்ஷுவைப் பார்த்தேன். மன்னர் மன்னா! முதலில் புத்த பிக்ஷு சொல்லியனுப்பிய செய்தியைத் தங்களிடம் சொல்லிவிடுகிறேன். அதுவரையில் இந்தப் பாழும் உயிருக்கு எதுவும் வந்து விடக் கூடாதே என்று எவ்வளவோ கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆகா! சென்ற ஏழு நாட்களில் இந்த ஏழைக்கு எவ்வளவு ஆபத்துக்கள் வந்தன? என் குருநாதருடைய செய்தியைத் தங்களிடம் சொல்லி விட்டேனானால், அப்புறம் இந்த அற்ப உயிருக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன். தங்களை எப்படியாவது நேருக்கு நேர் தரிசித்து விட வேண்டுமென்று என்னவெல்லாமோ யுக்தி செய்தேன். தங்களைத் தரிசிக்க வேறுவிதமாய் முடியாதென்று எண்ணிக் காஞ்சியிலிருந்து வந்த நமது வீரர்களிடம் வேண்டுமென்றே அகப்பட்டுக் கொண்டேன். பிரபு! பிக்ஷு தங்களிடம் சொல்லும்படியாக முக்கியமாக நாலு செய்திகளைச் சொல்லியிருக்கிறார் அவற்றைக் கேளுங்கள்." இத்தகைய பூர்வ பீடிகையுடன் குண்டோதரன் புத்த பிக்ஷுவின் நாலு செய்திகளையும் வரிசைக் கிரமமாகச் சொல்லத் தொடங்கினான். முதலாவது செய்தி, "மதுரைப் பாண்டியனை நம்ப வேண்டாம்" என்பது. இந்த ஜயந்தவர்ம பாண்டியன்தான் பிக்ஷுவை மதுரையில் சிறைப்பிடித்து வைத்திருந்தவன். அச்சமயம் மகேந்திர பல்லவனுக்கும் ஜயந்தவர்மனுக்கும் ஏதேதோ அந்தரங்க ஓலைப் போக்குவரவு நடந்தது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ துரோகமாகச் சூழ்ச்சி செய்திருக்க வேண்டுமென்று பிக்ஷு கருதுகிறபடியால் பாண்டியனிடம் சர்வ ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியது. அவனை முழுவதும் நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கி விடக்கூடாது.

இரண்டாவது செய்தி, கங்க நாட்டுத் துர்விநீதன்தான் பிக்ஷுவை மகேந்திர பல்லவனுக்குக் காட்டிக் கொடுத்து, காஞ்சியில் அவர் சிறைப்படுமாறு செய்தவன். புலிகேசியின் கண்ணில் மண்ணைத் தூவுவதற்காகப் பல்லவனுடன் சண்டை போடுவது போல் போட்டு விட்டு, சைனியத்தோடு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறான். புலிகேசி வாதாபிக்குத் திரும்பிப் போகாதபடி செய்தி விட்டால், தன்னுடைய மருமகன் விஷ்ணுவர்த்தனன் சளுக்க சாம்ராஜ்யத்தின் ஏக சக்கராதிபதியாகி விடுவான் என்று கங்க நாட்டான் அந்தரங்க ஆசை கொண்டிருக்கிறான். சமயம் நேர்ந்தால் துரோகி துர்விநீதனுக்குத் தக்க தண்டனை விதிக்க வேண்டும்.

மூன்றாவது முக்கியமான விஷயம் பிக்ஷு தெரிவிக்கச் சொன்னது என்னவென்றால், மகேந்திர பல்லவன் ஹர்ஷவர்த்தனச் சக்கரவர்த்திக்கு ஏதோ இல்லாததும் பொல்லாததும் எழுதி ஓலை அனுப்பியிருப்பதாகத் தெரிய வருகிறது. அதைப் பற்றிய உண்மையைத் தீர விசாரித்து உசிதப்படி செய்ய வேண்டும். மகேந்திர பல்லவன் குறைந்தது இன்னும் ஒரு வருஷத்துக்குக் கோட்டைக்குள்ளேயே கஷ்டமில்லாமல் இருக்க முடியும்; அவ்வளவு உணவுப் பொருள் சேகரித்து வைத்திருக்கிறான். இந்த நிலைமையில், காஞ்சி முற்றுகை மேலும் நீடித்துக் கொண்டிருப்பது உசிதமா, அல்லது மீண்டும் ஒரு தடவை கோட்டையைக் கைப்பற்ற முயல்வது நல்லதா என்று யோசித்துத் தீர்மானிக்க வேண்டும்.

நாலாவது, எல்லாவற்றிலும் முக்கியமாகப் புத்த பிக்ஷு சொல்லியனுப்பிய விஷயம் இது! உத்தராபதத்துச் சக்கரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் சிற்பங்கள், சித்திரங்கள் முதலிய கலைகளில் அதிகப்பற்றுள்ளவர். தென் பல்லவ ராஜ்யத்தில் அநேக இடங்களில் சிற்ப சித்திரக் கலை மண்டபங்கள் இருக்கின்றன. மாமல்லபுரத்தில் மகேந்திர பல்லவன் ஹர்ஷவர்த்தனரை அழைத்துக் காட்டுவதற்காகவே அற்புத சிற்ப வேலைகளைச் செய்திருக்கிறான். இந்தச் சிற்ப வேலைகளுக்கு ஏதாவது சளுக்க வீரர்களால் கெடுதல் நேர்ந்ததாகத் தெரிந்தால், அதை மகேந்திர பல்லவன் தனக்குச் சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்வான். ஹர்ஷவர்த்தனருடைய விரோதத்துக்குச் சளுக்கர் குலம் ஆளாக வேண்டி நேரும். ஆகையால், பல்லவ நாட்டுச் சிற்பங்களுக்கோ சிற்பிகளுக்கோ சளுக்க வீரர்களால் எவ்விதக் கெடுதலும் நேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய நாலு செய்திகளையும் தட்டுத் தடுமாறிச் சொல்லி விட்டு, "என் குருநாதருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டேன், இனிமேல் என் உயிரைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லை!" என்று கூறி, குண்டோதரன் விம்மி அழத் தொடங்கினான். "அடே! நீ என்னத்திற்காக அழுகிறாய்?" என்று புலிகேசி கேட்ட போது, குண்டோதரன், "ஐயா! சளுக்கர் சைனியம் என்றைக்குக் காஞ்சிக் கோட்டை மதிலைத் தாண்டி உள்ளே பிரவேசிக்கிறதோ, அன்றைக்கே சிறைப்பட்டிருக்கும் புத்த பிக்ஷுக்கள் எல்லோரையும் கழுவில் ஏற்றி விடுவதாக மகேந்திர பல்லவன் சொல்லி இருக்கிறானாம். இதைத் தங்களிடம் சொல்ல வேண்டாமென்று பிக்ஷு சொன்னார். ஆனாலும், தங்களிடம் சொல்லாமலிருக்க எனது மனம் கேட்கவில்லை. என் குருநாதர் நான் பிறந்து வளர்ந்த காஞ்சி நகரின் நாற்சந்தியில் கழுவில் ஏற்றப்பட்டு காக்கை கழுகுகளால் கொத்தப்படுவார் என்பதை நினைக்கும் போது, எனக்குத் தாங்க முடியாமல் அழுகை வருகிறது!" என்றான்.

சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விட்டுப் புலிகேசி குண்டோதரனைப் பார்த்து, "நீ எப்படிப் பிக்ஷுவைச் சந்தித்தாய்? எப்படிக் கோட்டைக்கு வௌியே வந்தாய்?" என்று கேட்க, குண்டோதரன் திருப்திகரமான மறுமொழி அளித்தான். பிக்ஷுவின் யோசனைப்படி தான் பல்லவ ஒற்றர் படையில் சேர்ந்திருப்பதாகவும், அதனால் காஞ்சிக் காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டிருக்கும் புத்த பிக்ஷுக்களுடன் பேசித் துப்பு அறிவதற்காகத் தன்னை நியமித்திருந்ததாகவும், அதிர்ஷடவசமாகப் பாண்டியனுக்கு ஓலை கொண்டு வரும் வேலை தனக்குக் கிடைத்ததென்றும், கோட்டைக்கு வௌியே வருவதற்கு இரகசியச் சுரங்க வழி இருக்கிறதென்றும், அந்த வழியாகத் தான் வந்ததாகவும், பாண்டியனிடம் ஓலையைச் சேர்ப்பிக்கும் எண்ணமே தனக்குக் கிடையாதென்றும் கூறினான். அதன் மேல் புலிகேசி, "திரும்பப் பிக்ஷுவிடம் போய்ச் செய்தி சொல்ல உன்னால் முடியுமா?" என்று கேட்டான். "பிரபு! திரும்பச் செல்வது என் உயிருக்கு அபாயம். இருந்தாலும் இந்த உயிரைப் பற்றி இனிமேல் எனக்கு என்ன கவலை? தாங்கள் போகச் சொன்னால் போகிறேன்" என்றான் குண்டோதரன். "ஆம், அப்பா! நீ கட்டாயம் திரும்பிப் போக வேண்டும். போய் பிக்ஷுவிடம் இன்னும் பத்து நாளைக்குள் காஞ்சிமா நகரில் அவரை நானே நேரில் பார்ப்பதாகச் சொல்ல வேண்டும். எது நேர்ந்தாலும், என்ன கேள்விப்பட்டாலும் அவர் கொஞ்சமும் கலங்க வேண்டாமென்றும், எல்லா விவரங்களையும் நேரில் சொல்லுவதாகவும் கூற வேண்டும்; உன்னால் முடியுமா?" என்று புலிகேசி கேட்டான். பிக்ஷுவைப் பத்து நாளில் நேரில் பார்க்கப் போவதாகப் புலிகேசி சொன்னவுடன், குண்டோதரனுக்கே உண்மையில் தூக்கி வாரிப் போட்டது. அவன் முகத்திலும் கண்களிலும் நாம் என்றும் கண்டிராத ஆச்சரியத்தின் அறிகுறி காணப்பட்டது.

மேற்கூறிய சம்பாஷணை நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு காஞ்சிமா நகரின் தெற்குக் கோட்டை வாசலையும் மதிலையும் காவல் புரிந்த வீரர்கள் எல்லாம் குண்டோதரனைப் போலவே ஆச்சரியக் கடலில் மூழ்கினார்கள். ஏனெனில், அந்தக் கோட்டை வாசலுக்கு எதிரே அகழிக்கு அக்கரையில், வராகக் கொடி பிடித்த தூதர்கள் இருவர் குதிரை மேல் நிராயுதபாணிகளாக வந்து நின்று, தாங்கள் கொண்டு வந்திருந்த கொம்பை வாயிலே வைத்து, 'பூம்', 'பூம்', 'பூம்' என்று ஊதினார்கள். அவர்களுடைய தோற்றமும், அந்தக் கொம்பின் முழக்கமும் அவர்கள் சமாதானத்தை நாடி வந்திருக்கும் புலிகேசியின் தூதர்கள் என்பதை எடுத்துக் காட்டின. "ஆஹா! இதென்ன விந்தை! வாதாபிச் சக்கரவர்த்தியா சமாதானத் தூது அனுப்பியிருக்கிறார்? இது கனவா, நனவா?" என்று காஞ்சிக் கோட்டையைக் காவல் புரிந்த பல்லவ வீரர்கள் அளவில்லா வியப்பை அடைந்தார்கள். நம்ப முடியாத அந்த அதிசயச் செய்தியானது, அதி சீக்கிரத்தில், மந்திராலோசனை மண்டபத்தில் இருந்த மகேந்திர பல்லவரைச் சென்றடைந்தது.