சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/வேஷதாரி

25. வேஷதாரி


வலது கால் எலும்பு முறிந்து எழுந்திருக்க முடியாதவராய்த் தரையில் விழுந்து கிடந்த ஆயனரண்டையில் வந்து புலிகேசிச் சக்கரவர்த்தி உட்கார்ந்தார். "மகா சிற்பியே! மன்னிக்க வேண்டும்; உம்முடைய அற்புதச் சிலை வடிவங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இவ்வளவு விரைந்து வந்தேன். நீர் மூர்ச்சை தெளியும் வரையில் கூடக் காத்திராமல், உம்மைக் குதிரையின் மேல் வைத்துக் கட்டிக் கொணர்ந்தேன். அப்படியும் உம்முடைய சிலை சிலவற்றிற்கு ஆபத்து வந்து விட்டது; மன்னியுங்கள். ஏதோ மீதமுள்ளவையாவது பிழைத்தனவே என்று சந்தோஷப்படுங்கள்!" என்றார் புலிகேசி மன்னர்.

ஆயனர் அவருடைய முகத்தை ஆவலுடன் உற்றுப் பார்த்தார். அவருடைய உள்ளத்தில் ஏதோ ஒரு சந்தேகத்தின் நிழல் படர்ந்திருந்தது. இதென்ன விந்தை? வாதாபிச் சக்கரவர்த்தியா இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறார்? கொடுமைக்கும் குரூரத்துக்கும் பெயர் போன புலிகேசி மன்னரா தம் அருகில் உட்கார்ந்து இவ்வளவு சாவதானமாக வார்த்தையாடுகிறார்? இப்படிப்பட்ட நல்ல சுபாவமுடைய மன்னர் சிற்பிகளைக் காலையும் கையையும் வெட்டிப் போடும்படி கட்டளையிட்டிருப்பாரா? சிலைகளையும் சிற்பங்களையும் உடைத்துப் போட ஆக்ஞையிட்டிருப்பாரா? அந்தக் கடுவம் பூனை முகத்துத் தளபதி அப்போது சொன்னது உண்மையா? அல்லது இனிய தமிழ் பாஷையில் இதோ சக்கரவர்த்தியே பேசுவது உண்மையா?

சட்டென்று ஆயனருக்குச் சிவகாமியின் நினைவு வந்தது! ஐயோ! அவள் என்ன ஆனாள்? மற்றதையெல்லாம் மறந்து, "பிரபு! என் குமாரி சிவகாமியை உங்கள் வீரர்கள் பிடித்துக் கொண்டு போனார்கள்; ஐயோ! அவளைக் காப்பாற்றுங்கள். சிவகாமியை மறந்து விட்டு இந்தப் பாவி சிலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேனே?" என்று ஆயனர் அலறினார். அப்போது புலிகேசி, "ஆயனரே! கடவுள் அருளால் உம் மகளுக்கு ஆபத்து ஒன்றும் வராது. பத்திரமாக அவள் வாதாபி போய்ச் சேருவாள்!" என்றார். "ஐயோ! என்ன சொன்னீர்கள்? சிவகாமி வாதாபிக்குப் போகிறாளா? அப்படியானால் இந்தப் பாவி இங்கே எதற்காக இருக்கிறேன்? என்னையும் கொண்டு போய்விடுங்கள்!" "அப்படித்தான் முதலில் எண்ணினேன், ஆனால் உம்முடைய காலை ஒடித்துக் கொண்டு விட்டீரே? இந்த நிலைமையில் சிறிது நகர்ந்தாலும் உமது உயிருக்கு ஆபத்து வருமே...!"

"பிரபு! அப்படியானால், என் உயிரைப் பற்றித் தங்களுக்குக் கவலை இருந்தால், என் மகளை இங்கே அனுப்பி வையுங்கள்!" "அது இயலாத காரியம்..." "ஆ! இதென்ன தாங்களும் ஒரு சக்கரவர்த்தியா? சிற்பியின் கால் கையை வெட்டவும், சிலைகளை உடைக்கவும், கன்னிப் பெண்களைச் சிறைப்பிடிக்கவும் கட்டளை போடத்தான் உங்களால் முடியுமா?" என்று ஆயனர் ஆவேசமான குரலில் கத்தினார். அப்போது புலிகேசி, "ஆயனரே! உம்மிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல வேண்டும். தயவுசெய்து உம்முடைய சகோதரியை உள்ளே போகச் சொல்லும்!" என்று சாந்தமான குரலில் கூறி, பக்கத்தில் சொல்ல முடியாத மனக்குழப்பத்தையும் பீதியையும் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டு நின்ற சிவகாமியின் அத்தையைச் சுட்டிக் காட்டினார். "பிரபு! சொல்லுங்கள்! என் சகோதரியின் காது செவிடு! இடி இடித்தாலும் கேளாது!" "இருந்தாலும், அவளைப் போகச் சொல்லும்!" என்றார் புலிகேசி. ஆயனர் சமிக்ஞை காட்ட, அவருடைய சகோதரி முன்னை விட அதிகக் குழப்பத்துடன் உட்சென்றாள்.

புலிகேசி, "ஆயனரே! நான் சொல்வதை நன்றாய் மனத்தில் வாங்கிக் கொண்டு விடை சொல்லும்; உம்முடைய குமாரி இப்போது வாதாபியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். ஒருவேளை நான் விரைந்து வேகமாகச் சென்றால், அவளைக் கண்டுபிடிக்கலாம். கண்டுபிடித்து, இவ்விடம் அனுப்பி வைத்தாலும் வைக்கலாம். ஆனால், இன்னொரு விஷயத்தையும் யோசியும், இதோ உம்முடைய அற்புத தெய்வீகச் சிலைகளை உடைத்தது போல், மாமல்லபுரத்து மகா சிற்பங்களையும் உடைத்தெறிவதற்காக ஒரு பெரும் படை போயிருக்கிறது. நான் போனால் அந்தப் படையைத் தடுக்கலாம். உம்முடைய மகளைக் கொண்டு வருவதற்காகப் போகட்டுமா? அல்லது மாமல்லபுரத்துச் சிற்பங்களைக் காப்பாற்றுவதற்காகப் போகட்டுமா?" என்று கேட்ட போது, ஆயனரின் உள்ளத்தில் ஏற்கெனவே நிழல் போல் தோன்றிய சந்தேகம் வலுப்பட்டது.

இவ்வளவு நன்றாகத் தமிழ் பாஷை பேசுகிறவர் புலிகேசிச் சக்கரவர்த்திதானா? அவரை நன்றாக உற்றுப் பார்த்து, "ஐயா! தாங்கள்...தாங்கள்....!" என்று தயங்கினார். புலிகேசிச் சக்கரவர்த்தி உடனே தமது தலையிலிருந்த கிரீடத்தைக் கழற்றிக் கீழே வைத்தார். "ஆ! நாகநந்தி அடிகளா?" என்ற வார்த்தைகள் ஆயனரின் வாயிலிருந்து வெளிவந்தன. "ஆம்; ஆயனரே! அந்த ஏழை பிக்ஷுவேதான்!" "சுவாமி! இதென்ன கோலம்?" "ஆம்; சிநேகிதர்களுக்கு உதவுவதற்காக இந்தக் கோலம் பூண்டேன். சமயத்தில் உதவியும் செய்ய முடிந்தது."

"ஆ! இது என்ன அதிசயமான உருவ ஒற்றுமை? தத்ரூபமாய் அப்படியே இருக்கிறதே! சுவாமி, தாங்கள் யார்? ஒருவேளை....!" "இல்லை, ஆயனரே இல்லை! வாதாபி புலிகேசிச் சக்கரவர்த்தியும் நாகநந்தி பிக்ஷுவும் ஒருவரல்ல. ஏதோ ஓர் அற்புதமான சிருஷ்டி மர்மத்தினால் எங்கள் இருவருக்கும் கடவுள் அத்தகைய உருவ ஒற்றுமையை அளித்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி, பரத கண்டத்தின் பாக்கியத்தினால் பிறந்த மகா சிற்பியின் உயிரைக் காப்பாற்றினேன்." "ஆ! சுவாமி! என் உயிரைக் காப்பாற்றி என்ன பயன்? என் மகள்....என் மகள் சிவகாமி! "ஆயனரே! நீரே சொல்லும், நான் என்ன செய்யட்டும் என்று? உம்முடைய மகளைத் தேடிக் கொண்டு போகட்டுமா? அல்லது மாமல்லபுரத்துக்குப் போகட்டுமா?" ஆயனர் வேதனை ததும்பிய குரலில், "சுவாமி! என் மகளைக் கடவுள் காப்பாற்றுவார். நீங்கள் மாமல்லபுரத்துக்குப் போங்கள்! உடனே புறப்பட்டுப் போங்கள்!" என்று கதறினார். அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வேஷதாரி பிக்ஷு அந்தச் சிற்பக் கிருகத்திலிருந்து வெளியே சென்றார். உட்புறத்திலிருந்து சிவகாமியின் அத்தை தயங்கித் தயங்கி வந்து ஆயனர் அண்டை உட்கார்ந்து கொண்டாள். "தம்பி! உனக்கு என்ன உடம்பு?" என்று கேட்டாள். ஆயனர் அதற்கு மறு மொழி சொல்லவில்லை. அத்தை திடீரென்று பதற்றத்துடன் "குழந்தை எங்கே? சிவகாமி எங்கே?" என்று கேட்டாள். ஆயனர் நிமிர்ந்து உட்கார்ந்து, அந்தச் சிற்ப மண்டபமே அதிரும்படியான உரத்த குரலில், "அக்கா! சிவகாமி எங்கே? என் மகள் சிவகாமி எங்கே?" என்று கேட்டார். கேட்டு விட்டுத் தலை குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதார். ஆயனருடைய குரலைக் கேட்டுக் கொல்லைப்புறத்திலிருந்து ரதியும் சுகரும் உள்ளே ஓடி வந்தனர். ஆயனர் அழுவதைப் பார்த்து விட்டு அந்தப் பிராணிகள் சிலைகளைப் போல் அசையாமல் நின்றன.