சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/கண்கட்டு மாயம்
பரஞ்சோதி தரையில் படுத்தவுடனே கண்ணயர்ந்தான். ஆயினும், அவன் நல்ல தூக்கம் தூங்கினான் என்று சொல்வதற்கில்லை. ஏதேதோ பயங்கர துர்க்கனவுகள் தோன்றித் தூக்கத்தைக் கெடுத்தன. ஒரு சமயம் ஐந்தாறு புத்த பிக்ஷுக்கள் வந்து அவனைச் சூழ்ந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் தம் கையிலிருந்த தீபத்தைத் தூக்கிப் பரஞ்சோதியின் முகத்தில் வௌிச்சம் விழும்படி பிடித்தார். "ஆமாம்! நாகநந்தி சொல்வது சரிதான் இவன் முகத்தில் அபூர்வமான களையிருக்கிறது. இவன் மகாவீரன் ஆவான்! அல்லது மகாத்மா ஆவான்!" என்று யாரோ ஒருவர் சொன்னது போலிருந்தது.
இன்னொரு சமயம் அவனை ஒரு மதயானை துரத்திக் கொண்டு வருகிறது. பரஞ்சோதி சட்டென்று ஒரு பன்னீர் மரத்தின் மேல் ஏறிக்கொள்கிறான். புஷ்பக் கொத்துடன் கூடிய ஒரு பன்னீர்க் கிளையை ஒடித்து யானையின் மேல் போடுகிறான். அச்சமயம் திடீரென்று இரு குதிரை வீரர்கள் தோன்றி, "அடப்பாவி! கோயில் யானையைக் கொன்று விட்டாயா?" என்று கூவிக் கொண்டே தங்கள் கையிலிருந்த வேல்களை அவன்மீது எறிகிறார்கள்! மற்றும் ஒரு பயங்கரக் கனவு! நாகநந்தியடிகள் வந்து அவன் பக்கத்தில் நின்று அவனுடைய முகத்தை உற்றுப் பார்க்கிறார். அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய முகமானது படமெடுத்தாடும் பாம்பின் முகமாக மாறுகிறது! அந்தப் பாம்பு அதனுடைய மெல்லிய பிளவுபட்ட நாவை நீட்டி அவனுடைய முகத்தைத் தீண்ட வருகிறது!
பரஞ்சோதி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்தான். பார்த்தால், நாகநந்தி அடிகள் உண்மையாகவே அவன் அருகில் நின்று அவனைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார். "பிள்ளாய்! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? ஏதாவது துர்க்கனவு கண்டாயா?" என்று பிக்ஷு கேட்டார். பரஞ்சோதி, "இல்லை, இல்லை, ஒன்றுமில்லை நீங்கள் திடீரென்று தொடவே கொஞ்சம் திடுக்கிட்டேன்" என்றான். "பொழுது விடிய இன்னும் ஒரு முகூர்த்தந்தான் இருக்கிறது. புறப்படு, போகலாம்! பொழுது விடிவதற்குள் இந்தக் கோட்டையைக் கடந்துபோய்விட வேண்டும்." "ஏன் சுவாமி?" "புத்த தேவருடைய ஆக்ஞை!" "யாருக்கு?" "எனக்குத்தான் உன்னை அபாயத்திலிருந்து தப்புவிக்கும்படி ஆக்ஞை. என்னிடம் உனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையா?" என்று நாகநந்தி பரிவு ததும்பிய குரலில் கேட்டார். பரஞ்சோதி மௌனமாயிருந்தான்.
"போகட்டும், இன்னும் ஒரே ஒரு முகூர்த்த காலம் இரவு கழிந்து பொழுது விடியும்வரையில் நான் சொல்கிறதைக் கேள். புத்த தேவருடைய கட்டளையை நான் நிறைவேற்றி விடுகிறேன். கோட்டைக்கு வௌியே உன்னைக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன் அப்புறம் உன் இஷ்டம்போல் செய்." கனிந்த குரலில் கூறிய இந்த வேண்டுகோளைப் பரஞ்சோதியினால் மறுக்க முடியவில்லை. "ஆகட்டும், அடிகளே!" என்றான். "அப்படியானால் இன்னும் ஒரு முகூர்த்த காலம் என்னிடம் நம்பிக்கை வைத்து நான் சொன்னபடி கேட்பாயல்லவா!" "கேட்கிறேன்". "உன்னுடைய கண்களைக் கட்டி இவ்விடமிருந்து அழைத்துப் போகவேண்டியதாயிருந்தால்?" பரஞ்சோதி ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, "எப்படியானாலும் சரி" என்றான்.
உடனே, நாகநந்தி அடிகள் ஒரு சிறு துண்டை எடுத்துப் பரஞ்சோதியின் கண்களைச் சுற்றிக் கட்டினார். "பிள்ளாய்! என் கையைப் பிடித்துக் கொண்டே வர வேண்டும். நான் சொல்கிற வரையில் கண்ணின் கட்டை அவிழ்க்கக் கூடாது. இப்போது நீ என்னிடம் காட்டும் நம்பிக்கையின் பலனை ஒருநாள் அவசியம் தெரிந்து கொள்வாய்!" இவ்விதம் கூறிப் பரஞ்சோதியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, நாகநந்தி நடக்கத் தொடங்கினார். பரஞ்சோதியின் நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக்கொண்டது. ஆயினும், அவன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு பிக்ஷுவைப் பின்பற்றி நடந்தான்.
முதலில், புத்த விஹாரத்தின் வாசல் வழியாக வௌியேறுவது போலப் பரஞ்சோதிக்குத் தோன்றிற்று. பின்னர், வீதியோடு நடந்து போவதாகத் தோன்றிற்று. பன்னீர் புஷ்பங்களின் வாசனையிலிருந்து அன்று முன்னிரவில் மேல் மாடத்திலிருந்து வீதியில் இறங்கிய இடமாக இருக்கலாமென்று ஊகித்துக் கொண்டான். இன்னும் சிறிது தூரம் நடந்த பிறகு, போகும் திசை மாறியது. சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் பன்னீர்ப் பூவின் நறுமணம். "வந்த வழியே திரும்பிப் போகிறோமா, என்ன? ஆ! இந்தப் பொல்லாத பிக்ஷு எனக்கு வழி அடையாளம் தெரியாமலிருப்பதற்காக இப்படி இழுத்தடிக்கிறார் போலும்!" என்று பரஞ்சோதி எண்ணிக் கொண்டான்.
மறுபடியும் ஒரு கட்டிடத்துக்குள் பிரவேசிப்பது போலிருந்தது. அகிற் புகையின் மணத்திலிருந்து, "இது இராஜ விஹாரந்தான்' என்று பரஞ்சோதி தீர்மானித்தான். பிறகு சிறிது நேரம் இருளடைந்த குகைகளின் வழியாகச் சுற்றிச் சுற்றி வருவது போல் தோன்றியது. கண்ணைக் கட்டியிருந்தபடியால் வெகு நேரம் முடிவேயில்லாமல் நடந்து கொண்டிருப்பதாகப்பட்டது. "அடிகளே! இன்னும் எத்தனை நேரம் இவ்விதம் கண் கட்டு வித்தை செய்ய வேண்டும்?" என்று பரஞ்சோதி கேட்டான். "பிள்ளாய்! கிட்டத்தட்ட வந்துவிட்டோம் இன்னும் கொஞ்சம் பொறு!" என்றார் பிக்ஷு.
திடீரென்று இருட்டிலிருந்து வௌிச்சத்துக்கு வந்துவிட்டதாகப் பரஞ்சோதி உணர்ந்தான். "பரஞ்சோதி! நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்து விட்டோம். கண்கட்டுச் சோதனை முடிந்தது" என்று சொல்லிக் கொண்டே அடிகள் கட்டை அவிழ்த்தார். புத்த பகவான் அருளால் சொர்க்கலோகத்துக்கே வந்து விட்டோமோ என்று பரஞ்சோதிக்குத் தோன்றியது. அவன் கண் முன்னால் அத்தகைய சௌந்தர்யக் காட்சி தென்பட்டது. அகழி நீரில் அஸ்தமன சந்திரனின் வெள்ளிக்கிரணங்கள் படிந்து, உருக்கிய வெள்ளி ஓடையாகச் செய்து கொண்டிருந்தன. அகழிக்கப்பால் மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசம் காணப்பட்டது. மரங்களின் உச்சியில் சந்திர கிரணங்கள் இலைகளின் மீது தவழ்ந்து விளையாடின. அகழியில் ஒரு படகு மிதந்தது, பரஞ்சோதியைச் சிறை மீட்க உதவி செய்த இளம் பிக்ஷு கையில் துடுப்புடன் படகில் நின்றார்.
பெரிய பிக்ஷுவும் பரஞ்சோதியும் அகழியண்டை போய் படகில் ஏறினார்கள் படகு நகர்ந்தது. "இந்த அகழியைத் தாண்டப் படகு என்னத்திற்கு? எளிதில் நீந்திக் கடந்து விடலாமே?" என்றான் பரஞ்சோதி. "ஆம்; நீந்தத் தெரிந்தவர்கள் நீந்தலாம்." "இந்த அகழியினால் கோட்டைப் பாதுகாப்புக்குத்தான் என்ன பிரயோஜனம்? எதிரிகள் வந்தால் சுலபமாய் நீந்திவிடமாட்டார்களா?" "அதோ பார்!" என்றார் பிக்ஷு, சற்றுத் தூரத்தில் ஒரு முதலை பயங்கரமாக வாயைத் திறந்தது. "ஐயோ!" என்றான் பரஞ்சோதி. "இம்மாதிரி நூற்றுக்கணக்கான முதலைகள் இந்த அகழியில் இருக்கின்றன. சாதாரண காலங்களில் அங்கங்கே இரும்புக் கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பார்கள். யுத்த காலங்களில் திறந்து விட்டுவிடுவார்கள். நேற்று இரவு திறந்து விட்டிருக்கிறார்கள்." "அப்படியானால், யுத்தம் வருவது நிஜந்தானா? சுவாமி!" "பின் எதற்காக இவ்வளவு அமர்க்களமெல்லாம் என்று நினைத்தாய்!" என்றார் பிக்ஷு. பரஞ்சோதி மௌனமாயிருந்தான். படகு அகழியின் அக்கரையை அடைந்தது.