சீனத்தின் குரல்/தோன்றினான்

தோன்றினான்

குறிப்பு - மீண்டும் வரலாற்றை 1837-க்குக் கொண்டு போகின்றோம். இங்கே மீண்டும் சன்-யாட்-சன் பெயர் அடிபடுகிறது. வாசகர்கள் வசதிக்காக.

1887-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 31-ம் நாள் சிக்கோ Chicko என்ற ஊரில் சு-ஆன் என்பவரின் இரண்டாவது மனைவியின் வயற்றில் பிறந்தான் சியாங்-கே-ஷேக். சிக்கோ என்றவூர் ஒரு மலையடிவாரத்திலிருந்தது. மலையடிவாரத்திலுள்ளவர்களில் பிறப்பவர்களுக்கு சீனத்தில் அதிக மரியாதையுண்டு. ஏனெனில் சீன் ஞானிகள் எல்லாம் கடைசி காலத்தில் மலைகளுக்குப் போய்விடுவது வழக்கமாம். ஆகவே மலை அல்லது மலையடிவாரங்களில் பிறப்பவர்களுக்கு மேன்மையையும் நம்பிக்கையையும் தந்து வந்தார்கள். மேலும் ஷேக்கின் தந்தை கிராம பஞ்சாயத்துகள், சண்டை சச்சரவு முதலான தகராறுகளில் நியாயத்தை வழங்கும் நீதிபதியாக இருந்ததால் பலருக்கு அறிமுகமானவராக இருந்து வந்தார். அதனால் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தையைப் பற்றி ஞானியாவான், தீர்க்க தரிசியாவான் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.

ஷேக், தன்னுடைய ஐந்தாவது வயதில் தாயையும், ஒன்பதாவது வயதில் தந்தையையும் இழந்து விட்டதால், தன் சிற்றன்னையான தன் தந்தையின் மூன்றாவது மனைவியால் வளர்க்கப்பட்டு அந்த கிராமப் பள்ளிக்கூடத்திலேயே படித்துக் கொண்டிருந்தார்.