சீனத்தின் குரல்/பனிரெண்டு நாட்கள் சிறையில்

430074சீனத்தின் குரல் — பனிரெண்டு நாட்கள் சிறையில்சி. பி. சிற்றரசு

பனிரெண்டு நாட்கள் சிறையில்

இங்கிலாந்தில் பல நாட்கள் மாறுவேடத்தோடு திரிந்தண்டிருந்தார். இதற்கிடையில் கிருஸ்து மதத்தில் சேர்ந்து கொண்டார். ஒருநாள், மாதா கோயிலுக்கு போகும் வழியில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். வெளி நாடுகளிலேயும் இவரை ஒற்றர்கள் இவ்வளவு அக்கறையோடு தேடியதற்குக் காரணம் என்னவென்றால், சன்யாட்டைப் பிடித்துக்கொண்டு வருபவர்களுக்கு 6 லட்சம் டாலர் பரிசளிக்கப்படும் என்று சீன சர்க்கார் பிரகடனப் படுத்தி இருந்ததுதான்.

1896-ல் இப்படி இங்கிலாந்து சிறையில் அகப்பட்டுக்கொண்ட சன்-யாட்-சன் இந்த அபாயமான செய்தியைத் தன் ஆசானும் நண்பனுமான ஜேம்ஸ் காட்லி என்பவருக்கு எப்படியாகிலும் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு உபாயம் செய்தார். சிறைக் குள்ளிருந்தபடியே நண்பனுக்குக் கடிதம் எழுதி அதில் தங்க நாணயங்களையோ நோட்டுகளையோ வைத்து ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விடுவார். ஏனெனில், அதில் வைத்திருக்கும் பண ஆசையால் யாராவது அந்த பணத்தை எடுத்துக் கொண்டு, கடிதத்தைச் சம்மந்தப்பட்டவரிடம் சேர்க்கமாட்டார்களா என்பதுதான் இவருடைய நோக்கம். அதன்படியே எப்படியோ—யார் மூல மாகவோ ஒரு கடிதம் டாக்டர் ஜேம்ஸ் காட்லி அவர்களுக்குக் கிடைத்தது. அவருடைய தலையீட்டால் பனிரெண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலையடைந்தார்.