சீனத்தின் குரல்/முதல் அபினிப் போர்

முதல் அபினிப் போர்

போதை வளர வளர பொறாமையும், அசூயையும் வளர்ந்தது. நாட்டினுள் சாதாரணமாக அனுமதித்துவிட்ட அபினியை வாள் கொண்டு வெளியே விரட்ட முடியவில்லை. சுத்த இரத்தத்தை நஞ்சாக்கும் நாச மருந்தை ஒரு சாதாரண நாயென மதித்து உள்ளே வரவிட்ட மக்கள், சிங்கமெனப் பாய்ந்து ஒவ்வோர் சீனனின் இரத்தத்தைக் குடிப்பதைக் கண்டார்கள். அந்த போதையில் மயங்காத பொருள் கள் எவையாவது இருக்குமானால், அவை உயிரில்லாத இரும்பு, எஃகு, மரச்சாமான்கள், தட்டுமுட்டு, பாய்த் தலையணை, இவைகளாகத்தானிருக்க முடியும், புரையோடிப்போயிருக்கும் புண்ணின் மேல் ஈக்கள் முய்த்து உபத்திரவத்தையுண்டாக்குவதைப் போல் சீன மக்கள் அதிலும் குறிப்பாக சிலர் நெளிய ஆரம்பித்தனர். ஆயுதமெடுத்தனர், ஆர்ப்பரித்தனர். யுத்த மேகங்கள் சூழ சீன இராணுவ தமுக்கில் போர் முழக்க மெழுப்பினார்கள். நாடு பிடிக்கும் , ஆசையாலல்ல. வெளிநாட்டாரான பிரிட்டானியர், அமெரிக்கர், ஜர்மானியர், ஜப்பானியர், பாரசீகர்கள் ஆகியோரை ஒரேயடியாக வெளியேற்ற வேண்டுமென்ற சுதந்திர எண்ணத்தோடு மாத்திரமல்ல, நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அபினியை அடியோடு தொலைக்க வேண்டும் என்ற எண்ணத்தாலுந்தான். அந்த எண்ணத்தால் ஏற்பட்ட அனல் மூச்சின் முடிவாக 1844-ம் ஆண்டு ஏற்பட்ட முதல் அபினிப் போரில் சீனர்களுக்குப் படுதோல்வியையும் ஆங்கிலேயர்க்கு அளவிட முடியாத வெற்றியையும் அளித்தது, அதாவது, தோற்ற சீனம், வென்ற வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு நஷ்ட ஈடாக ஆறு துறைமுகங்களையும், பல லட்சம் டாலர்களையும் கொடுக்க வேண்டுமென்ற முடிவோடு முடிவடைந்தது முதல் அபினிப் போர்.

சீனர்களுக்கு படுதோல்விதான் என்றாலும் அதுவரை அபினியின் ருசியைக் கண்டவர்கள் வாளின் மேல் வழிந்தோடிய இரத்த ருசியைக் கண் டார்கள் ஆண்டவனாலும் நிலைநாட்ட முடியாத அமைதியை ஆயுதத்தால் நிலைநாட்ட முடியும் என்று அரசியல் கற்பிக்கும் பாடத்தின் முதலேட்டை படிக்கத் தொடங்கிவிட்டனர். பணத்தால் வாங்கிய போதை, மதத்தால் வாங்கிய சாந்தி ஆகியவைகளை சீற்றத்தால், வாங்கிய செங்குருதி கலந்த மண்ணில் புதைக்கவேண்டுமென்ற வீர உணர்ச்சியைப் பெற்றார்கள். போர் நெருப்பு அணைந்துவிட்டது என எண்ணினர் அயல்நாட்டாரை நிறுத்த எவ்வளவோ தடுப்பு சட்டங்கள் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான அபினிப் பெட்டிகளை நடுக்கடலில் தள்ளினர். எஞ்சிய பெட்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர், எனினும் கள்ளத்தனமாக அபினி சீனத்துக்குள்ளே செல்வது நின்றபாடில்லை. ஏனெனில் லட்சக்கணக்கான வீரர்களை களத்தில் பலியிட்டாலும் ஒரு நாடு கிடைக்குமோ கிடைக்காதோ. ஆனால் இது அப்படியில்லை. ஒரு பத்து அபினிப் பெட்டிகள் ஒரு துறைமுகமே கிடைக்கும், சூறையிடுவதற்கேற்ற செல்வர்களின் மாளிகைகளே கிடைக்கும்... இதைவிட நாடுகளைப் பிடிக்கும் சுலபமான வழி வேறொன்றுமில்லை. ஆகையால் அபினியை விற்று பல்வகையில் லாபமடைந்த வெளிநாட்டார், எவ்வள்வு தடுத்தும் நின்றார்களில்லை.