சீர்மிகு சிவகங்கைச் சீமை/சிவகங்கை ஜமீன்தாரி - ஒரு கண்ணோட்டம்

10. சிவகங்கை ஜமீன்தாரி

- ஒரு கண்ணோட்டம்

கி.பி.1728-ல் சேதுபதி சீமையில் இருந்து சிவகங்கைச் சீமை பிரிந்தது. மறவர் சீமையின் மகோன்னத வரலாறு படைத்த சேதுபதி மன்னர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பலவீனமாக இந்தப் பிரிவினை கருதப்பட்டது. இப்பொழுது, ஒரு தலைமுறைக்குப் பின்னர் சிவகங்கை மறவர்களது வீரமும் வரலாறும் மறக்கடிக்கப்பட, இவர்களது சீமையின் தன்னரக நிலை பறிக்கப்பட்டதுதான் சிவகங்கை ஜமீன்தாரி முறை. விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்குப் பதிலாக விரைந்து வந்த இந்த ஆலகால விஷத்தை அரனார் உண்டது போல சிவகங்கைச் சீமை மக்கள் இந்த வெள்ளைப் பரங்கிகளது விஷத்தை அடுத்த 150 ஆண்டுகளுக்கு சகித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் காலத்தின் கட்டளை.

தமிழகத்தில் இந்த ஜமீன்தாரி முறை முதன்முறையாக சிவகங்கைச் சீமையில்தான் புகுத்தப்பட்டது. ஏற்கனவே, வடக்கே கும்பெனியாரது உரிமைபெற்ற வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாநிலங்களில் கும்பெனியின் தலைவர் காரன்வாலிஸினால் இம்முறை கி.பி.1797-ல் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.[1] மன்னரது பாரம்பரிய ஆட்சி முறைக்கு பதிலாக 'நிலச்சுவான்தாருக்குக் கட்டுப்பட்ட குடிகள்' முறை இது. தங்களது உடைமையாக்கப்பட்ட தென்னாட்டுப் பகுதிகளிலும் இதனை உடனே அமுல்படுத்த வேண்டும் என்பதுதான் காரன்வாலிசின் ஆசை. ஆனால் அதற்கான சூழ்நிலை சுதேச மன்னர்கள், முந்தைய பாளையக்காரர்களது? பாளையங்களில் இருந்ததால், முதலில் சிவகங்கைச் சீமையில், கி.பி.1801-ல் ஜமீன்தாரியாக்கப்பட்டது. ஆனால், மதுரை, திருநெல்வேலிச் சீமைகளின் விளை நிலங்கள், பாசன வசதி, மண்ணின் விளைச்சல் திறன் வரி விதிப்பு முறை, ஆகியவகளை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து கொண்டிருந்ததால், சிவகங்கை ஜமீன்தார் என்ற அதிகார பூர்வமான சன்னது படைமாத்தூர் கெளரி வல்லப உடையாத் தேவருக்கு கி.பி.1803-ல் வழங்கப்பட்டது. இந்த சன்னது "மில்கி-யத்-இஸ்திமிரார்" என பார்சி மொழியில் வழங்கப்பட்டது. அப்பொழுது இத்தகைய சன்னதுகள் மதுரைச் சீமையில் உள்ள சாப்டுர், திருநெல்வேலிச் சீமை எட்டையாபுரம், ஊத்துமலை, சொக்கம்பட்டி பாரியூர், தலைவன் கோட்டை, கடம்பூர், பனைவேலி, கொல்லாபட்டி, ஏழுமாடி, அழகாபுரி, நடுவன்குறிச்சி, மணியாச்சி, சுரண்டை, மேல்மாந்தை, ஆத்தங்கரை, சுண்டையூர், ஊர்க்காடு, சிங்கம்பட்டி, மன்னர் கோட்டை, ஆவுடையாபுரம், சாத்தூர், கொல்லங்கொண்டான் ஆகிய பாளையக்காரர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த சன்னது வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி கலைக்டர் கச்சேரியில் 1803, ஜூலை மாதம் நடைபெற்றது.[2]

இந்த சன்னது என்ற பட்டயத்தில், சிவகங்கை ஜமீன்தாரின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஊர்கள், இனாம் கிராமங்கள், ஏந்தல்கள், புஞ்சை, நஞ்சை நிலங்களின் மொத்த பரப்பு, இந்த நிலங்களின் வகைப்பாட்டிற்கு தக்கபடி வசூலிக்க வேண்டிய தீர்வை விகிதம், அந்த தீர்வை வசூல் பணத்தில் கும்பெனியாருக்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய கிஸ்திப் பணம் என்ற நிர்ணயத் தொகை ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தன. இதற்கான ஆண்டு முறை விவசாய காலத்தை அடிப்படையாக கணக்கிட்டு பசலி எனப்பட்டது. அதாவது ஆங்கில பஞ்சாங்க முறையில் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் எதிர்வரும் ஆண்டின் ஜூன் மாதம் 30 ந் தேதி வரையான காலமாகும். இந்த ஒரு பசலி ஆண்டிற்கு சிவகங்கை ஜமீன்தார் கும்பெனியாருக்கு செலுத்தக் கடமைப்பட்ட தொகை, 1,25,626 ஸ்டார் பகோடா பணமாகும். இதற்கு கிஸ்தி என்று பெயர். அப்பொழுது சிவகங்கை ஜமீன்தாரியான 151 சதுர மைல் பரப்பில், அமைந்து இருந்த 1937 ஊர்க்குடிகளிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட மொத்த வசூல் தொகையில் ஐந்தில் மூன்று பகுதியாக இந்தத் தொகை கருதப்பட்டது.[3]

ஜமீன்தாருக்கும் குடிமக்களுக்கும் அப்பொழுது ஜமீன்தாரி முறையில் இருந்த ஒரே தொடர்பு விளைச்சலில் இருந்து குடிகள் ஜமீன்தாருக்கு தீர்வை செலுத்துவதும் ஜமீன்தார் அதனைப் பெறுவதும் என்ற நிலையில்தான் புதிய நிலச் சுவான்தாரும் அவரது குடிகளும் இருந்து வந்தனர்.

"வரப்புயர நீர்உயரும்
நீர்உயர நெல் உயரும்
நெல்உயரக் கோல் உயரும்
கோல் உயரக் குடி உயரும்"

என்று கூழுக்குப் பாடிய மூதாட்டி அவ்வையின் குடிதழீகி கோலோச்சிய கோவேந்தரது ஆட்சி பதினேழாவது நூற்றாண்டில் முற்றாக முடிந்ததை ஜமீன்தாரி முறையின் தொடக்கம் தெரிவித்தது.

ஜமீன்தாருக்கு விளைச்சல் காலம் தொடங்கி கிஸ்திப் பணம் வகுப்பதிலும், அதனை குறிப்பிட்ட தவணைகளில் கும்பெனியாருக்குச் செலுத்துவதிலும் அவரது பொழுதெல்லாம் சென்றது. இதற்கிடையில் வானம் பொய்த்து விட்டாலும், வைகையாற்றில் வெள்ளம் வராமல் வறண்டு விட்டாலும் குடிகளது கையறுநிலையைப் போன்று ஜமீன்தாரரது நிலையும் மிகவும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஆனைகட்டிப் போரடித்தவர்கள் மாடுகட்டிக் கூட உழவு செய்ய முடியாமல் போய்விடும். இந்த வரிவசூல் பணிக்காக சிவகங்கைச் சீமை தாலுகாக்களாகவும், மாகாணங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. அப்பொழுது எத்தனை தாலுக்காக்கள், மாகாணங்கள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் தொடக்கத்தில் ஒன்பது தாலுகாக்காகளாக பிரிக்கப்பட்டிருந்தன என்பது தெரிய வருகிறது.[4]

1. சிவகங்கை 2. திருக்கோட்டியூர், 3. திருப்புத்தூர், 4. கண்டதேவி 5. திருவேகம்பத்து. 6. காளையார் கோவில், 7. இளையான்குடி, 8. மானாமதுரை, 9. திருப்புவனம். அதே போல் சோழபுரம், காளப்பூர், சிங்கம்புணரி, கண்டிர மாணிக்கம், பட்டமங்கலம், இரவிசேரி, உருவாட்டி, எமனேஸ்வரம், மங்கலம், கோவானூர், ஆகியவை அப்பொழுது அமைந்து இருந்த சில மாகாணங்களாகும்.

வரிவிதிப்பிற்கான நிலங்கள் பொதுவாக நஞ்சை புஞ்சை என்று வகைப்படுத்தப்பட்டன. இவைகளில் இருந்து பெறப்பட்ட தீர்வை, வாரப்பத்து, தீர்வைப்பத்து, வரிசைப்பத்து, என்ற அடிப்டையில் வசூலிக்கப்பட்டன. வேளாண்மை வேலைகளான உழவு, விதைப்பு, உரமிடுதல், நீர்ப்பாய்ச்சல், களை எடுத்தல், அறுவடை ஆகியவற்றிற்கான குடிகளது செலவுகள் பொதுச் செலவுகள் எனப்பட்டன. மொத்த மகசூலில் இவைகளைக் கழித்துவிட்டு எஞ்சியதில் சரிபாதி, ஜமீன்தாரும் விவசாயியுமாக பெற்றனர். இதற்கு வாரப்பத்து என்று பெயர். புஞ்சை நிலங்களின் மகசூலுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதத்தில் செலுத்தப்படும் தீர்வைத் தொகைக்கு தீர்வைப்பத்து எனப்படும். இவை தவிர கொடிக்கால், வாழைத் தோட்டங்களின விளைச்சலுக்கு சேத்துவரி என்ற பணவரி வசூலிக்கப்பட்டது. புஞ்சை நிலங்களில் ஒரு குறிப்பட்ட அளவிற்குக் குறைவாக மகசூல் வந்தால், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் பணம் வரிவசூலிக்கப்பட்டது. இதனை வரிசைப்பத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணவரிகளைச் செலுத்த கும்பெனியாரது பகோடா, உள்நாட்டு பூவாரகன் குழிப்பணம், சல்லிப் பணம் என்ற நாணயங்கள் செலாவணியில் இருந்தன. சில ஆவணங்களில் இந்த வகைப் பணம் சுழிப்பணம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வெள்ளி, செப்பு உலோகங்களில் அச்சிடுவதற்கு மரக்கட்டைகளில் அமைக்கப்பட்ட அச்சுகள் பயன்பட்டதால் குழிப்பணம் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கலாம். இந்த நாணயங்களைத்தயாரிக்கசிவகங்கை நகரில் அஃக சாலை என்ற நாணயச் சாலை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த வசூல் பணிக்கு ஜமீன்தாரது சேவையில் சம்பிரிதி, கணக்கர், காவல்காரர், என்ற பணியாளர்கள் இருந்தனர். கிராமக் கணக்கர் பதிவேடுகளை, ஆண்டுதோறும் ஜமீன்தார்களது அலுவலர் ஆண்டுதோறும் தணிக்கை செய்து வந்தனர். இந்த தணிக்கைக்கு ஜமாபந்தி என்று பெயர். ஜமீனில் உள்ள மொத்த கிராமங்களின் வசூல் சம்பந்தப்பட்ட பதிவுகளை, ஜில்லாக் கலெக்டர் ஜமாபந்தி செய்வார். இந்த ஜமாபத்தி இன்றும் வருவாய்த் துறையில் சற்று மாறுதலுடன் ஆண்டு தோறும் ஒவ்வொரு தாலுகாவிலும் ஜூன் மாதங்களில் நடைபெற்று வருகிறது.

இத்தகைய தீர்வை வசூலினின்றும் வேறுபட்ட நிலத் தொகுப்புகள் இந்த ஜமீன்தாரியில் இருந்தன. அவை இனாம் நிலங்கள் அல்லது கிராமங்கள் எனப்பட்டன. பாண்டியர்கள் சோழர்கள், நாயக்க மன்னர்கள், மாவலி வாணாதிராயர்கள், சேதுபதிகள், ஆற்காட்டு நவாப் ஆகியோர் ஆட்சியில் இந்தச் சீமையில் தனியாருக்கும் திருக்கோயில், திருமடங்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் அன்ன சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் என்ற அறப்பணிகளுக்கு சர்வ மானியமாக வழங்கியவை அவை, போர் வீரர், புலவர், பண்டிதர், அவதானி, போன்ற தனியார்களுக்கு வழங்கப்பட்ட இனாம்கள் ஜீவிதம் எனப்பட்டது. மேலும் வேத விற்பன்னர்கள், வியாகரனப் பண்டிதர்கள், ஆகியோருக்கு அளிக்கப்பட்டவை தர்மாசனம் என்றும் சுமிருதி வல்லவர்களுக்கு வழங்கப்பட்டவை சுரோத்திரியம், வித்தியார்த்திகளுக்கு வழங்கப்பட்டவை பட்டவர்த்தி என்றும் வழங்கப்பட்டன. இந்த அறக்கொடைகள் சமுதாயத்தின் நலன்களுக்காக நிறுவப்பட்டவை என்ற அடிப்படையில், அந்தப் பணிகள் தொடர்ந்து மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற பெருநோக்கில், தீர்வையின் சுமையால் இவை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அந்தக் அறக்கொடைகளைப் பரிபாலிப்பவர்களிடமிருந்து அறக்கொடையான நிலங்கள், அல்லது கிராமங்களுக்கு பொருப்பு அல்லது குயிட்ரெண்ட் என்ற மொத்த தொகை மட்டும் ஆண்டுதோறும் வசூலிக்கப்பட்டது. இவற்றை விடுத்து சாயர் என்ற சில்லரை வரவினங்களும் ஜமீன்தாருக்குரியதாக இருந்தன. அதாவது பேட்டைகளில் வியாபாரிகளிடமிருந்து பெறப்படும் சுங்கம், நீர் நிலைகளின் மீன்பாசி, காடுகளின் இலை காய் கனி என்ற மேற்பலன்கள் போன்றவை. இத்தகைய வசூல் பணிகளில் கண்ணும் கருத்துமாக கவனத்தைச் செலுத்த வேண்டிய பொறுப்பு மட்டும் ஜமீன்தாருக்கு இருந்தது.

முந்தைய மன்னர்களைப் போல உரிமை இயல், குற்றவியல், ஆகிய துறைகளின் வழக்குகளைப் பரிசீலித்து நியாயம் வழங்கும் உரிமையும் இந்த புதிய ஜமீன்தாரி முறையில் ஜமீன்தாருக்கு வழங்கப்படவில்லை. “அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்" என்ற பழமொழியும் பொருளற்றதாகப் போய்விட்டது. முந்தைய காவல் முறையான தலங்காவல், திசை காவல், தேசகாவல், என்ற முறைகள் அகற்றப்பட்டு சிவகங்கையில் புதிதாக காவல்துறை ஏற்படுத்தப்பட்டது. உரிமை இயல் வழக்குகளுக்கு மதுரையில், சாதர் அதாலத் என்ற நீதி மன்றமும் மேல் முறையீட்டிற்காக இராமநாதபுரத்தில் மாவட்ட நீதிமன்றமும், சென்னையில் புரொவின்சியல் கோர்ட் என்ற உயர்நீதிமன்றமும் செயல்பட்டன. இந்த மன்றங்களின் தீர்ப்புரைகளில் திருப்தியடையாத குடிமகன், இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிவிகன்வுசில் என்ற கும்பெனியாரது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டைத் தாக்கல் செய்து நியாயம் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

இவ்விதம் புதிய ஜமீன்தாரி அமைப்பு, மக்களுக்கும், ஜமீன்தாருக்கும் உள்ள இடைவெளியினை நடைமுறையில் அதிகப்படுத்தி இருந்தாலும், காலங்காலமாக பொதுமக்களுக்கும் ஆட்சியாளருக்குமிடையில் நிலவிய விசுவாசம், நல்லுறவுகள் தொடர்ந்து நீடித்தன. பொங்கல் விழாவின் பொழுது குடிமக்கள் கரும்பு, மஞ்சள், புதுப்பானை, கருப்பட்டி ஆகிய பொங்கல் சீர்ப் பொருட்களை ஜமீன்தார்களுக்கு கொண்டு செல்லும் முறை இருந்தது. இந்த அன்பளிப்புப் பொருள்களுக்கு உலுப்பை என்று பெயர். இதே போல், மகர் நோன்புப் பெருவிழா, தீபாவளி விழா ஆகிய விழா நாட்களின் பொழுது, குடி மக்கள் அரண்மனைக்கு மகர்நோன்புக் குட்டி, கூழைக்கிடாய் என்ற ஆட்டுக் கிடாய்களை அன்பளிப்பாக ஜமீன்தாருக்கு வழங்கும் வழக்கமும் தொடர்ந்தது.[5]" இதற்குப் பகரமாக அரண்மனையில் இருந்து அந்தக் குடிகளைச் சிறப்பித்து அனுப்பும் பழக்கம் இருந்தது.

மற்றும் சிவகங்கைச் சீமையின் கிராமங்களில் கோயில் விழாவில் தேரோட்டம், மஞ்சுவிரட்டு, ஆகிய விழாக்களின் பொழுது ஜமீன்தார் நேரில் சென்று குங்கும, சந்தனப் பேழைகளைத் தொட்டுக் கொடுத்தல், வடம் பிடித்துக் கொடுத்தல், ஆகியவைகளை மேற்கொண்டு, மக்களுக்கு மகிழ்ச்சியும் சிறப்பும் சேர உதவினார். இவ்வாறு மக்கள் ஜமீன்தாரை, முந்தைய கால மன்னராகவே மதித்துப் போற்றும் விசுவாசத்தை அறிந்த கும்பெனியார், சிவகங்கை அரண்மனையில் நூற்று இருபது சீருடை அணிந்த கும்பெனி வீரர்கள் நிலை கொண்டு இருப்பதற்கும் ஜமீன்தாரது சேவகர்கள் வாட்களுடன் பணியாற்றுவதற்கும், நாளடைவில் அனுமதி வழங்கினர். ஒரளவு ஜமீன்தாரது பதவியின் தோற்றத்திற்குச் சிறப்பூட்டுபவையாக இந்த நடைமுறைகள் அமைந்தன.

படைமாத்தூர், கெளரி வல்லப தேவர், சிவகங்கைத் தன்னரசு மன்னரது வழியினர் என்ற முறையிலும், புதிய முதல் ஜமீன்தார் என்ற முறையிலும் குடிகளுடனும், கும்பெனியாருடனும் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்தனர். தமது முன்னோர்களைப் போல அறக் கொடைகளை வழங்கி இருப்பதை சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் கி.பி.1829-ல் காலமான இவருக்கு ஆண் வாரிசு இல்லாததாலும், அவர் மரணமடைந்த பொழுது அவரது மனைவி பர்வதவர்த்தினி நாச்சியார் கர்ப்பவதியாக இருந்ததை சாதகமான சூழ்நிலையாகக் கொண்டு ஜமீன்தாரது இறந்து போன மூத்த தமையனார் ஒய்யாத் தேவரது இரண்டாவது மகன் முத்து வடுகநாதர், ஒரு பொய்யான மரண சாசனத்தைக் கலெக்டரிடம் காண்பித்து ஜமீன்தாராவதற்கு ஒப்புதலைப் பெற்றார்.

இவரது உரிமையை மறுத்து கி.பி. 1834-ல் இறந்துபோன முதல் ஜமீன்தார்களது மனைவிகளும், மக்களும் பல உரிமை இயல் வழக்குகளைத் தொடர்ந்தனர். தங்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் பல தீர்ப்புரைகளைப் பெற்றனர். அடுத்தடுத்துப் பாதிக்கப்பட்டவரது முறையீடு மேல் முறையீடு என்று நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால், ஜமீன்தாரியில் நிலையற்ற தன்மை நிலவியது. கி.பி. 1896-ம் வரை ஜமீன்தார்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் செய்யத் தக்க பல நல்ல பணிகளும் நடைபெறாமல் போய்விட்டன. அதே நேரத்தில் இந்த ஜமீன்தாரி வழக்குகளால் உருப்படியான நன்மை எதுவும் இல்லை என்பதை குடிகள் உணர்ந்து தவித்தனர்.

நாட்கள் ஆக, மக்கள் பெருக்கமும் மிகுதியாக, வேறு தொழில்கள், தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் சிவகெங்கை சீமை மக்கள் விவசாயத்தை தொழிலாக கொள்வது அல்லது சார்ந்து நிற்பதும் அதிகரித்தது. அதே நேரத்தில் விளைச்சல் நிலப்பரப்பும், விளைச்சலும் அப்படியே இருந்தது. விவசாயத்தைச் சார்ந்துள்ளவர்களது தேவை நிறைவு செய்யப்பட முடியாத நிலை. மூன்றில் ஒரு பங்காக இருந்த விவசாயி வர்க்கம் மக்கட் தொகையில் சரிபாதி அளவிற்கு வளர்ந்தது.[6]

(Upload an image to replace this placeholder.)

தொழிற்புரட்சியின் காரணமாக மேற்கு நாடுகள் தொழில் மயமாகியும், நம் நாட்டு மக்கள் விவசாயிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் இருந்து வந்தனர். வறுமைக்கு மூல காரணமாக இது அமைந்துள்ளது என கி.பி. 1830-ல் அரசினரால் ஏற்படுத்தப்பட்ட "பஞ்ச ஆய்வுக் குழுவில்" கண்டுள்ளது.[7] அத்துடன் விவசாய உற்பத்தி முறைகளில் மாற்றம் இல்லை. விவசாயத்திற்கு ஆதாரமாக, முந்தைய அரசுகள் அமைத்த கண்மாய்களும் கால்வாய்களும் நூற்றாண்டுகள் பலவற்றைக் கண்ட நிலையில் அப்படியே பழுதான நிலையில் இருந்தன. விவசாயத்திற்கு கொண்டு வரத்தக்க கன்னி நிலங்கள் தொடர்ந்து தரிசாகக் கிடந்தன. இவைகளைச் சீர்திருத்தம் செய்து விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்ற குடிமக்களிடம் மனம் இருந்தாலும் அவர்கள் கையில் பணம் இல்லை என (இந்திய அரசு செயலர் சர். ஜேம்ஸ் கைர்டு அவர்களது 31.10.1879-ந் தேதி அறிக்கை) தெளிவுப்படுத்தி இருக்கிறது. இவைகளை அரசு கண்டு கொள்ளவில்லை.

மறுபுறம் இந்திய அரசு, கும்பெனியாரது வியாபார நலன்களுக்கும் ராணுவ இயக்கத்திற்கும் ஏற்ற துறைகளில் கோடிக்கணக்கான பணம் செலவு செய்தது. குறிப்பாக 1900-ல் புதிய ரயில் பாதைகள் அமைக்கச் செலவழித்த 225 மில்லியன் பவுண்டுகள் கால்வாய்களைச் செப்பனிடச் செலவழித்தது இருபத்து ஐந்து மில்லியன் பவுண்டு அதாவது ஒன்பதில் ஒரு பகுதி. பட்டினியும் பசியுமாக பாடுபடும் விவசாயிகளைப் பற்றி சிறிதும் அக்கரை கொள்ளவில்லை என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.[8] ஜமீன்தாரிமுறை மக்களது வாழ்க்கையில் வளம் சேர்க்கவில்லை. மாறாக வறுமையை வளர்த்தது. வாழ்வதற்கு வழியில்லாமல், ஜமீன்தாருக்கு தீர்வை பாக்கி செலத்த முடியாத நிலையில் மக்கள் கூட்டம் சிவகங்கைச் சீமையை விட்டு வெளியேறி தொண்டமான் சீமை, சோழ சீமைக்குச் சென்றது மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா ஆகிய நாட்டிற்கு சென்றனர் என்று சிவகங்கைச் சீமை பற்றிய தஞ்சை சரசுவதி மகால் நூலகச் சுவடி ஒன்று தெரிவிக்கின்றது.

சுருக்கமாகச் சொன்னால் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிளர்ந்து எழுந்த சிவகங்கைச் சீமை மக்களது ஆவேசத்தை அடக்கி தங்களது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய மூடு திரைதான் இந்த ஜமீன்தாரி முறை. ஜமீன்தாருக்கோ குடிகளுக்கோ இதனால் பலன் கிட்டவில்லையென்றாலும், கும்பெனியார் ஒரு நூற்றாண்டிற்கு மேல் கோடி கோடியாக பணம் குவிப்பதற்கு இந்த அமைப்பு உதவியது என்பதில் ஐயமில்லை. இத்தகைய ஜமீன்தாரி முறை மக்கள் வாழ்வில் பல அவல நிலைகளை ஏற்படுத்தினாலும் சிவகங்கையை ஆண்ட ஜமீன்தார் உடையண ராஜா தனது ஜமீனை குத்தகைக்கு விட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்ட பொழுதிலும் அவருடைய கொடை உள்ளத்துக்கு எடுத்துக்காட்டாக இன்றும் சிவகங்கை நகரில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மன்னர் மேல் நிலைப்பள்ளி, அலீஸ் மில்லர் மகளிர் பள்ளி, மன்னர் நடுநிலைப்பள்ளி ஆகியவை அவருடைய கல்வித் தொண்டினை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

அவருக்கு அடுத்து வந்த துரைச்சிங்க ராஜா திருப்பத்தூரில் ஸ்விடிஸ் மருத்துவமனை அமைவதற்கு உரிய நிலமும், நிதியமும் வழங்கினார். கால்நடை பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கருதி சிவகங்கை நகரில் கால்நடை மருத்துவமனையை தமது சொந்தப் பொறுப்பில் நிறுவிநடத்தி வந்தார். ஏழை மாணவர்சாதிமத பேதமற்று கல்வி பயில இலவசமானவ விடுதி ஒன்றினை தோற்றுவித்தார். அவருக்குப் பின் வந்த சண்முகராஜா இதனைப் போன்று கிறித்துவ

என்பவருக்கு நிலம் கொடுத்தார். இன்றும் அந்தப் பள்ளி ராஜகுமாரி ராஜேஸ்வரி கலா சாலை என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வள்ளல் அழகப்ப செட்டியார் தனது கல்வி பணியைத் தொடங்க முற்பட்டபோது சண்முகராஜா அவர்கள் தனக்குச் சொந்தமான செக்காலைக் கோட்டையில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை கொடுத்து உதவினார். சிவகங்கையில் தனது தந்தையாரின் பெயரில் கல்லூரி நிறுவினர். அதற்கு தனது சொந்த நிலத்தையும் நிதியையும் கொடுத்தார்.

அவருடைய மைந்தர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ராஜா சிங்கம்புணரியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்குவதற்கு 1 லட்சம் ரூ நிதியும் நிலமும் கொடுத்து பெண்கள் பள்ளி தொடங்கி இன்றும் ராணி மதுராம்பாள் நாச்சியார் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக நடைபெற்று வருகிறது.

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் மதுரை நாயக்கப் பேரரசு அதிசயிக்கும் வண்ணம் பேராண்மை படைத்து விளங்கிய மறவர் சீமையின் வடபகுதி நாளடைவில் தொண்டமான் சீமை ஆயிற்று. பாம்பாற்றுக்கு வடக்கே உள்ள சோழநாட்டுப் பகுதி தஞ்சை மன்னருக்கு தானம் வழங்கப்பட்டது. பின்னர், எஞ்சியுள்ள பகுதியிலிருந்து சிவகங்கைச் சீமை பிரிந்தது. வரலாற்று நிகழ்வுகளினால் வடிவும் வலிமையும் குன்றியது. பழம் பெருமையை மட்டும் பேணிக்காத்து வந்த இந்த மறவர் சீமை அரசுகளை, வெடிமருந்து பலத்தில் விஞ்சி நின்ற ஆங்கில ஏகாதிபத்தியம், எளிதாக வீழ்த்தி, அவர்களுக்கு கட்டுப்பட்ட ஜமீன்தார் நிலைக்குத் தாழ்த்தியது. ஆனைபடுத்தாலும் குதிரையின் உயரம் என்ற பழமொழிக் கிணங்க மனஆறுதல் பெற்றவர்களாக வாழ்ந்தனர் இந்த ஜமீன்தார்கள்.

சிவகங்கை ஜமீன்தாரியின் பெரும்பாலான குடிமக்கள் இந்து சமயத்தைச் சார்ந்த கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்குலத்தோர் இனத்தவர்கள் மற்றும் நகரத்தார், பிராமணர், வல்லம்பர், வேளார், இஸ்லாமியர், கிறித்தவர், உடையார், பள்ளர் பறையர், இசைவேளாளர் என்ற சிறுபான்மை சமூகத்தினரும், இந்தச் சீமையின் சமுதாய அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்குப் பல தொழில்களை மேற்கொண்டிருந்தனர், என்றாலும் இவர்களில் பெரும்பான்மையினர், சாதி, மத, இன வேறுபாடு இன்றி ஈடுபட்டிருந்த தொழில் வேளாண்மைதான். இந்த ஜமீன்தாரியின் தெற்குப் பகுதியில் உள்ள வைகை நதியின் வெள்ளப் பெருக்கால் ஒரளவு வேளாண்மைத் தொழில் நடைபெற்றாலும், பெரும்பான்மையான நஞ்சை, புஞ்சைக்கு காலத்தில் பொழிகின்ற மழையின் நீர், கண்மாய்களிள் தேக்கி வைக்கப்பட்டு கழனிகளில் நெல் விளைச்சலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலங்களில் விளைச்சலில் சரிபாதி அளவினை ஜமீன்தார் நிலத்தீர்வையாக நிலத் தீர்வையாகப் பெற்று வந்தார். இவ்விதம் பெறும் மொத்த வசூலில் கும்பெனியார் மூன்றில் இருபகுதியை கிஸ்தியாகப் பெற்று வந்தனர். எஞ்சியுள்ள தொகையினைக் கொண்டு ஜமீன்தார் எந்தவிதமான நன்மைகளையும் செய்ய இயலாத நிலை.

பைந்தமிழ் பயின்ற புலவர்கள் பாட்டும் உரையும் பயிலா பதடிகள் ஒட்டைச் செவியில் உயர்தமிழை எங்ங்னம் ஒதுவது என்று ஒர்ந்தவர்களாக ஒலைத்துக்குகளைக் கட்டிப் பரணியில் போட்டனர். கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான் கற்பித்தானா? என்ற கவலை தோய்ந்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள். மற்றும், நாட்டுக் கணக்கு, தலங்காவல், திசைகாவல் ஆகிய பணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த துண்டு மானிய நிலங்கள் கும்பெனியாரால் மேற்கொள்ளப்பட்டு அவர்களது பணிக்கான ஊதியம் பணமாக வழங்கப்பட்டது.

இவ்விதம் சமுதாயத்தின் பலநிலைகளில் உள்ள மக்களது வாழ்க்கையினைப் பாதிக்கும் வகையில், பரங்கியரது புதிய ஜமீன்தாரி முறை அமைந்து இருந்தது. சிவகங்கைச் சீமைக்கு மட்டும் ஏற்பட்ட ஆற்றிடைக் குறை அல்ல. இது அன்றைய சென்னை மாநிலம் முழுவதற்கும் - தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், கன்னடம் ஆகிய அனைத்துப் பகுதிகளின் தலை விதியாகி இருந்தது.


  1. History of the Inam Revenue Settlement and Abolition of Intermediate Tenures (1977) Govt. of Tamil Nadu. P. 35
  2. Court Records Appeal No.20/1887
  3. Macleairs Manual of Madras Administration
  4. 190. சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள்.
  5. Administrative Report of Sivagangai Samasthanam for 1943/1944
  6. Palm Dutt. S. - India Today (1950)
  7. First Report of Famine Commission (1880)
  8. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக பதிவேடு