சீவக சிந்தாமணி (உரைநடை)/குணமாலையார் இலம்பகம்

4. குணமாலையார் இலம்பகம்

இராசமாபுரத்தில் வணிகக் குடியில் பிறந்த வனிதையர் குணமாலையும் சுரமஞ்சரியும் ஆவர். அவர்கள் இரட்டைப் பிள்ளைகளாகப் பிறக்கவில்லை; எனினும் அவர்கள் இரட்டையர் என்று சொல்லும்படி இணைந்து வாழ்ந்தனர். இருவரும் பெருங்குடி வணிகரின் மகளிர் ஆவர்.

நெருங்கிய நட்பினர்; ஆயினும் அவர்கள் உரையாடும் போது எதிர்க் கட்சிக்காரர்கள் போல் முரண் பட்டுப் பேசுவர்; எதற்கெடுத்தாலும் ‘ஒட்டு’ என்று கூறி வெட்டிப்பேசுவர்; வெற்றி பெறுபவள் மற்றவர்களுக்கு இது தர வேண்டும் என்று பந்தயம் வைத்து வேகமாகப் பேசுவது வழக்கம்.

ஒரு சிறு கதை; மயிலும் கருடனும் இணைபிரியாத சிநேகிதர்களாகப் பழகினர்; நாம் இருவரும் செறிந்த நட்பினால் நம்மையாரும் பிரிக்க முடியாது என்று பேசிக் கொண்டிருந்தன. பேசி முடிப்பதற்குள் அவற்றின் கண் முன்பு ஒரு பாம்பு ஊர்ந்து சென்றது: “அதை நான் தான் குத்துவேன்; எனக்குத்தான் சொந்தம்; நான் முதலில் பார்த்தேன்” என்றது மயில், கருடன் சொல்லியது “பாம்பு தீராதபகை, அதைக் குத்திக் கொல்லும் உரிமை எனக்குத் தான் உண்டு” என்று ஆணையிட்டுக் கூறியது; இச்சண்டையில் பாம்பு தப்பித்துக் கொண்டது. இவை இரண்டும் அதற்குப் பிறகு பேசியதே இல்லை.

ஊரிலே திருவிழா; இளவேனிற் பருவம் வந்தது. ஆட வரும் பெண்டிரும் குடும்பம் குடும்பமாகச் சோலையையும் அருகிருந்த நீர் அருவியையும் நாடிச் சென்றனர். சோற்று மூட்டை கட்டிக்கொண்டு வேற்று நாட்டுக்குச் செல்வது போல் சென்றனர். சிறப்பாக அரும்புகள் அங்கே விரும்பிச் சென்றனர். சுரும்புகள் அவற்றை நாடிச் சென்று வட்ட மிட்டன. கன்னியர்கள் அன்னையரின் காவலைக் கடந்து தன் ஆவல் தீரக் காதலிக்க வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது; மனமானவர்கள்; வீட்டில் ஒரே மாதிரி உணவு உண்டவர்கள்; அதே உணவை வேறு வகையில் சுவைத்து உண்டனர்; பத்தினிப் பெண் ஆனாலும் அவள் வந்து பத்துமினியாகக் காட்சி தந்தாள். சோலை நிழல்களில காதலர்கள் பேசிக் கதைகள் அளந்தனர்; காரணம் இல்லாமலே சிரித்தனர். சிடுமூஞ்சிக் கணவர்கள் கூடச் சிரித்து விளையாடிக் குதூகலம் அடைந்தனர்.

முத்துப்பல்லக்கில் பிறர் சுமக்கச் சென்றனர் இளங் கன்னிகைகள்; மற்றவர் பாடிக்கொண்டு மாட்டுவண்டிகளிலும், குதிரை பூட்டிய தேர்களிலும் அவரவர் அந்தஸ்த்துக்கு ஏற்ப அங்குச் சென்று குழுமினர். காளைப் பருவத்து இளைஞர்கள் தம் தோழருடன் இயற்கைக் காட்சியோடு இனிய மகளிரைக் கண்டு மகிழ இதை வாய்ப்பாகப் பயன்படுத்தினர்; சிட்டுக் குருவிகள் பறக்கின்றன என்று பட்டுப் பூச்சிகளைச் சுற்றி வட்டமிட்டனர்.

குணமாலை தான் கொண்டுவந்திருந்த சுண்ணத்தை எடுத்துக் காட்டி அதன் பொன் வண்ணத்தைச் சிறப்பித்துப் பேசினாள். தான் கைப்பட சமைத்த சமையல் என்று பெருமை பேசும் இல்லத்து அரசிகள் போல அவள் இது தன் கைப்பட அமைத்த சுண்ணம் என்று அதன் வண்ணத்தைப் பாராட்டினாள். அதனால் தன் கைத் திறனையும், கலைத்திறனையும், சுவைத்திறனையும், அழகின் உணர்வினையும் அதிகப்படுத்திப் பேசினாள்; மயில் கருடன் கதையாயிற்று.

‘நீ நாட்டுப்புறத்துப் பெண்; நாகரிகம் அறியாத கட்டுப் பெட்டி, உனக்கு என்ன தெரியும் அழகியல்பற்றி. இந்தச் சுண்ணத்தைக் கொண்டு நீ யாரையாவது உன் பக்கம் இழுக்க முடியுமா, இதை வைத்து நீ ஒரு ஆடவனைக் கவர்ந்து விட்டால் உனக்கு நான் தோற்றவள் ஆவேன். இது நான் இடித்த சுண்ணம்; இதையும் அதையும் வைத்து அனுப்புவோம்; யார் எதற்கு அடிமையாகின்றனர் பார்ப்போம்” என்றாள் சுரமஞ்சரி.

தோழியர் தடுத்துப் பார்த்தனர்; சூது ஆட்டம் இது; நாம் பூசிக் கொள்ளும் அழகுச் சாதனை இது; இதை வைத்தே சூதாடுவது தீது. இதனால் பகை வளரும்; உம் நகை கெடும்; இது உங்களுக்கு மிகை” என்று வகையாக எடுத்துக் காட்டினர்.

“முடியாது; இரண்டையும் தனித்தனித் தட்டுகளில் எடுத்துச் செல்லுங்கள்; வழியில் தட்டுப்படுகின்ற கட்டிளங் காளைகளிடம் காட்டுங்கள்; அவர்கள் தீர்ப்புக் கூறட்டும்; எது உயர்ந்தது என்று. உரைக்கட்டும்” என்றனர்.

ஒட்டு என்று வைத்தவர் அதற்கு ஈடாகப் பணயமும் வைத்தனர்; “தோற்றவர் இவ் அருவியில் நீராடுதல் கூடாது; கோடிப் பொன் கொட்டி அளந்து அருகன் கோயிலுக்குத் தரவேண்டும்” என்றாள் சுரமஞ்சரி; அதனைக் குணமாலை மறுக்கவில்லை. செம்பொன் கொடியனைய சேடியர் இருவர் தனித் தனித் தட்டு ஏந்திக் காளையர் சிலர் முன் நீட்டினர்; அவர்கள் தட்டைப் பார்க்கவில்லை.

“இதைப் பாருங்கள்” என்றனர்.

“உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்” என்றனர். அவர்கள் சிரித்தனர்.

“எம்முடைய தலைவியர் பெரிய வீட்டுப் பெண்கள்; அவர்களுக்கு இந்தச் சிறிய விளையாட்டுகள் பொழுது போக்கு அவர்கள் தம் கையால் இடித்துப் பூசிக் கொள்ளும் சுண்ணம் இது; எது இவற்றில் சிறந்தது என்று கேட்கின்றனர்.”

“நாங்கள் வணிகச் சிறுவர்கள்; கோமுட்டி சாட்சி என்று கேள்விப்பட்டிருக்கிறீரா? யாரையும் புண்படுத்த மாட்டோம். முன் பக்கம் பார்த்தால் செட்டியாருடையது; பின்பக்கம் பார்த்தால் ரெட்டியாருடையது என்று சொல்லிப் பழக்கம். அதனால் கோமுட்டி சாட்சி என்ற சொல் வழக்கே உண்டாகி விட்டது. இது சிறப்பாக இருக்கிறது என்றால் மற்றொருவர் விறைப்பார்கள்; எங்களுக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு: நாங்கள் நல்ல பிள்ளைகள்” என்றார்கள்.

“நீங்கள் உருப்பட மாட்டீர்கள்” என்று அவர்களை வெறுத்து ஒதுக்கினார்கள்.

“உங்கள் முடிவுதான் என்ன?”

“இரண்டும் நன்றாக இருக்கிறது”

“இதைச் சொல்லவா உங்களிடம் வந்தோம்”

“மற்றொன்று சொல்கிறோம்; சுண்ணம் எப்படி இருந்தால் என்ன? அதைப் பூசிக் கொள்பவர் வண்ணம் அழகாக இருந்தால் அதுவே மெச்சத்தகுந்தது” என்றனர். “ஆகா! பெரிய கண்டுபிடிப்பு, நீங்கள் நாடக வசனம் எழுதத்தான் தகுதி, யாரைக் கேட்டால் நல்ல தீர்ப்புக் கிடைக்கும்?”

“அப்படிக் கேளுங்கள்; சொல்கிறோம். சீவகன் அவனைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே! காந்தருவ தத்தையோடு வீணைப் போட்டியில் கலந்து கொண்டவன்; அவன் இந்த மாதிரி விவகாரங்களில் கைதேர்ந்தவன்; அநங்க மாலைக்கு அவன் ஒப்பனை செய்தவன்; அவன் பல நிறச் சுண்ணங்கள் அப்பியவன்; அவனைக் கேட்டால் தப்பாமல் சொல்வான். அது மட்டுமல்ல; அவன் மணந்து கொண்டது காந்தருவ நாட்டுப் பசுங்கிளி. அவன் எண்ணத்தைக் கேளுங்கள். அவன் திண்ணமாகத் தீர்ப்புக் கூறுவான்” என்று கூறித் தப்பித்துக் கொண்டனர்.

“என்ன இந்தப் பிள்ளைகள் மோசமாக இருக்கிறார்கள்; ரசனையே இல்லாதவர்கள்” என்று விசனமாக அவர்களை விட்டு “இசை ஞானி” என்ற பெயர் வாங்கிய இளவரசன் சீவகனிடம் சென்றனர்.

சேலைகள் தன்னை நோக்கி வருவதை வேலைத் தாங்கிய வீரனாகிய சீவகன் பார்த்தான்.

“ஐயா! ரசிகர் தலைவரே! உம்மால் அழகை ரசிக்கத் தெரியுமா?” என்று கேட்டனர்.

“உங்களை ரசிக்க முடியாது; அழகை ரசிக்கத் தெரியும்” என்றான்.

“அழகு அதிகம் இல்லாததால் தானே இந்த அடிமைத் தொழில் செய்கிறோம். பூக்களை ரசிக்கத் தெரியுமா?” என்று காட்டினாள்.

“பாக்களை ரசிப்பேன்; திருத்தக்க தேவர் எழுதும் கவிதைகள் என் உயிர்” என்றான். “அதனால் காமச்சுவை என்பது உமக்குக் கைவந்த கலையாக இருக்கும் எனக் கருதுகிறோம்.”

“கவிச்சுவையில் அதைக் காணும்போது அது தவறு இல்லை; புவிச்சுவையில் தான் காணக் கூடாது” என்றான்.

“பூக்களிள் ரசிகன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்”.

“யாரோ திரித்துச் சொல்லி இருக்கிறார்கள்; பூவையர் என்பதை மாற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.”

“சரி சுண்ணத்துக்கு வருகிறோம்; எது நலம் வாய்ந்தது? அதை எப்படிக் கண்டுபிடிப்பது?”

“கோடையில் இடித்துத் துகள் செய்தது வாடை மிகுந்து வீசும்; மாரியில் இடித்தது மங்கிப் போகும்” என்றான்.

“அதை எப்படிப் பிரித்து அறிவது?”

“பூக்களின் ரசிகர்கள்; இங்கு இந்தச் சோலையில் சதா சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விட்டால் அவர்கள் அதைத் தொட்டால் அது உயர்ந்தது என்று கருத்தாகும்.”

“அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?”

“உங்கள் தலையில்”

“என்னய்யா கிறுக்காகப் பேசுகிறீர்”

“சுருக்கமாகப் பேசினேன்; உங்கள் தலையில் என்ன சூடி இருக்கிறீர்கள்.”

“பூக்கள்”

“அதைச் சுற்றித் திரிவது யார்?”

“ஒன்று வண்டுகள்; இல்லாவிட்டால் சில மண்டுகள்”.

“அந்த வண்டுகளைத் தான் நான் சொல்கிறேன். மனித சாதியில் நான்குவகை சாதி உண்டு; அதே போல் வண்டிலும் நான்கு இனங்கள் உண்டு, வண்டு, ஞமிறு, தேன், சுரும்பு என்பவையாகும். இவை மானிடர்போல் ஒரு பக்கம் சாயமாட்டார்கள்; நீதிபதிகளை நீங்கள் விலைக்கு வாங்கி விடலாம்; இந்த அம்பிகாபதிகளை நீங்கள் விலைக்கு வாங்க முடியாது”.

“வழக்குமன்றம் தொடரலாமே”.

“நீதிபதிகள் நால்வர்; இதை உங்கள் மொழியில் சொன்னால் ‘கூட்டுநீதிபதிகள்’ என்பீர்கள்; அவற்றிற்கு இந்தப் பொடியை ஊட்டிப் பார்த்தால் அவை உண்மையைக் காட்டிவிடும்” என்றான்.

சுண்ணப் பொடியை மேலே தூவினர்; குணமாலையின் துகள் காற்றில் மேலே பறந்தது; சுரமஞ்சரியின் துகள் ஈரச் சுமையில் தரையில் இறங்கியது. இதைக் கண்டு வியந்தனர்.

“அது பறக்கும் விமானம்; இது இறங்கும் விமானம்” என்றான்.

“எது உயர்ந்தது?”

“உயரத்தில் பறப்பது”

“எப்படிச் சொல்கிறாய்?”

“கோடையில் உலர்ந்தது மேலே சென்றது; மாரியில் ஈரம்பட்டது; அது சோர்வு கண்டது; கீழே படிந்தது.”

“முடிவு?”

“வண்டுகள் மேலே பரவிய சுண்ணத்தைச் சுற்றி அவற்றைச் சுவைத்தன; சுரமஞ்சரியின் சுண்ணத்தைத் தொடவே இல்லை; அதனால் வண்டுகள் தந்த தீர்ப்பு இது” என்பதைக் காட்டினான்.

“அது எப்படி நீங்கள் வண்டுகளை விளித்தீர்” “வண்டுகளுக்குத்தான் மணத்தைக் கண்டு சொல்ல முடியும். நீங்கள் திருவிளையாடற் புராணம் படித்திருக் கிறீர்களா?”

“நாடகம் பார்த்திருக்கிறோம்”

“நக்கீரருக்கும் சிவனார்க்கும் நடக்கும் வாதம்; தன் காதலியின் கூந்தலுக்கு மணம் இயற்கையா செயற்கையா என்பது அந்த வாதம்; அந்தப்பாட்டுச் சொல்கிறேன் கேளுங்கள்.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே”

“நீ பல பூக்களைச் சுற்றி வந்திருக்கிறாய்; என் தலைவியின் கூந்தலைவிட மணமுள்ள பூ நீ கண்டது உண்டோ” என்று வினவுகிறான் அந்தப் பாட்டுக்குரிய தலைவன்”

“அதைப் படித்ததால் தான் இது நினைவுக்கு வந்தது. வண்டுதான் எதையும் கண்டு சொல்ல முடியும் என்பதை அப்பாட்டுக் கொண்டு நான் அறிந்தேன்” என்றான்.

“கற்ற கல்வி உனக்குக் கை கொடுத்து உதவி இருக்கிறது” என்று அத்தோழியர் பாராட்டிச் சென்றனர்.

பதில் கடிதம் வரும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர் களைப் போலச் சேடியர் தக்க தீர்ப்புக் கொண்டு வருவர் என்று இருவரும் காத்துக் கிடந்தனர்.

குணமாலைக்குத் தான் வெற்றி என்று அறிவித்தனர். சுரமஞ்சரிக்கு வந்தது கோபம்; ஏற்பட்டது மனஸ்தாபம்.

“அவன் என்னைவிட உன்னைத்தான் ரசிக்கிறான்; இந்தச் சுண்ணத்தைக் கொண்டு அவன் பாராட்டுதலை நீ பெற்றுவிட்டாய். அவனிடத்தில் பாடம் படிக்க நீ போட்ட விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீ கெட்டிக் காரியாகிவிட்டாய்; பந்தயத்தில் வென்று விட்டாய்.”

“குணமாலையார் என்ற பெயரைக் கேட்டே அவன் முடிவு செய்து விட்டான்” என்று குற்றம் சாற்றினாள்.

“சுரமஞ்சரி என்று பெயர் வைத்து என் பெற்றோர்கள் தவறு இழைத்து விட்டனர். சாதகம் பார்த்துக் கணிப்பது போல அவன் உனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கி விட்டான் எனக்கு அது பாதகம் ஆகிவிட்டது. மாலைக்கு ஒரு காலம் வந்தால் மஞ்சரிக்கும் ஒரு காலம் வரும்; அடைந்தால் அவனை அடைவேன்; இப்பொழுது மனம் உடைவேன்; காமன், அவன் வில் அது விடும் கணை என்னைத் தொடாது. கன்னிமாடம் இனிச் சேர்வேன்” எனறாள்.

“ஆடவன் என்றால் அவன்தான் ஆடவன்; மற்றவர்களை மதித்துக் கண்ணெடுத்தும்பாரேன்” என்றாள்.

“மண்ணுக்குள்ளே சில மாதர் உன் நல்ல அறிவைக் கெடுத்துவிட்டார்கள்; கண்ணுக்கு இனியவன் என்கிறாய்; அதனால் அவனைக் காதலிப்பது இயற்கைதான்; அதனால் மனம் புண்ணாகும்படி நீ புழுங்கினால் பயன் என்ன?” என்றாள் குணமாலை.

“அவனுக்கு உன்னைப் பிடித்து விட்டது; நீ புளியங் கொம்பைப் பற்றிக் கொண்டாய்; அதனால் களிப்பு மிக்க வாழ்வு பெறப் போகிறாய். உன்னைப்பற்றி அவன் பிறரை விசாரித்து இருப்பான்; நான் அவசரக்காரி ஆவேசக்காரி என்று கூறி இருப்பார்கள்; அதை அவன் விசாரிக்காமலேயே எடுத்துக் கொண்டிருப்பான். நீ குணக்குன்று; நான் மணற்குன்று; நீ நிறைகுடம்; நான் அரைவேக்காடு, நீ அகல் விளக்கு நான் ஒளி விளக்கு நின்று எரிவாய், நான் அணைந்து எரிவேன் என்று அறைந்திருப்பார்கள்.”

“நீ சொல்லித்தான் தெரிகிறது; அவன் என்னைக் காதலிக்கக் கூடும் என்று, என்னிடம் பார்த்து மகிழ ஏதோ இருப்பதாகச் சொல்கிறாய்; அதையும் காட்டியும் விட்டால் போகிறது” என்றாள்.

“மறைத்து என்ன பயன்; நீ விறைத்து இருந்தாலும் அவன் தன் காதலை உரைத்து உன்னை வளைக்காமல் இருக்கப் போவது இல்லை; ஒரு பார்வை; அது போதும் சுட்டும் விழியில் கட்டிப் போடலாம்; காதல் என்பது ஒட்டு வியாதி; நீ கிட்டே போனால் அது ஒட்டிக் கொள்ளும்; ஒரு சின்ன பூ ஒன்று போதும்; அதை நெகிழ்த்துவிடு. ஒடிவந்து அதை எடுத்துக் கொடுப்பான்; பூவே பூச் சூடவா என்று அழைப்பான்; அதுகூட உனக்குத் தேவை இல்லை; வெறும் பொடி போட்டே நீ மயக்கி விட்டாய்; சுண்ணம் அவனை மயக்கும் சொக்குப் பொடியாகி விட்டது, அதுவே நீ விடும் காதல் துாதாகி விட்டது. அது ஏதுவாகப் பேச்சுவார்த்தை தொடரும்; அவன் தொடுக்கப்போகும் இரண்டாவது பூ நீ”

“இல்லாத காதலை நீ உன் சொல்லாலே உண்டாக்குகிறாய்; உனக்காகவே வாய்ப்பு வரும்போது காதலிக்கிறேன்” என்றாள்.

“மறைத்து என்ன பயன்; அவன் மேல் உனக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருக்கிறது. ஏழுநாள் இசை விழா நடந்தது. ஏழாம் நாள் மட்டும் நீ அங்கு அடி எடுத்து வைத்தாய். அன்று அவன் பாடுகிறான் என்பதால்தானே. தத்தை பாடியபோது உன் கைத்தாளம் ஏன் மடங்கி விட்டது? அவன் பாடும்போது மட்டும் உன் உடம்பே அசைபோட்டது ஏன்?”

“இசைஞானி” என்று இசைத்து மற்றவர்கள் பரவசப்பட்டபோது நீ ஏன் உன் கையிலிருந்த துாசினைத் தட்டிக் கொண்டு இருந்தாய். அப்படி நீ கைதட்டினால் அவன் வந்து உன்மெய்தட்டுவான் என்ற ஆசைதானே காரணம்.” “அவள் அவனுக்கு மாலையிட்டபோது நீ ஏன் மவுனம் சாதித்தாய்! வாழ்த்த மேடை ஏறி உன் வாய்திறந்து சொல் முத்துக்களை உதிர்த்து இருக்கலாமே! நீ அடித்த கல் குறி தவறவில்லை; அதுகாய்மீது பட்டு உன் மடியில் வந்து விழுந்து விட்டது; மாங்காய் உனக்குப் புளிக்கப் போகிறது” என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உரையாடினாள்.

அவள் பகைபாடிப் பகர்ந்த அத்தனை வசைகளும் அவை உள்ளத்தில் காதலைப் புகைய வைத்தன. அவை அவள் காதலுக்குத் துாபம் போட்டதுபோல் இருந்தன. நிச்சயம் அத்தகைய வாய்ப்புக் கிடைக்குமா என்று எண்ணத் தொடங்கினாள். எட்டாத கனியாகுமோ என்றும் எண்ணிப் பார்த்தாள்; அந்தச் சின்ன ஆசையை உண்டாக்கியதால் மஞ்சரியை வாழ்த்தினாள்.

சுரமஞ்சரி காதலில் தோல்வியுற்றவர் சரண் அடையும் சரணாலயம் ஆகிய கன்னிமாடத்தில் இருந்து தனிமையில் இருக்க விரும்பினாள். தன் தந்தையிடம் சொல்லித் தானே ஏன் ஒரு கன்னிமாடம் கட்டித் தரச் சொல்லக்கூடாது என்று துணிந்தாள். அவனை நெஞ்சில் வைத்து வழிபட அது ஒரு ஆலயமாக அமையும் என்று கருதினாள். அதுமட்டுமின்றித் தன்னைப் போல் அடிபட்டு முடம்பட்டுப் போன இளஞ்சிட்டுகள் வந்து தங்குவதற்கு அது ஒரு கூடாக அமையுமே என்றும் நினைத்தாள்.

தமிழ் நாட்டுத் தவச் செல்வியாகச் சென்றவள் அரபு நாட்டு முழுமையாக வீடு வந்து சேர்ந்தாள். தில்லித் துருக்கர் செய்த வழக்கத்தைப் பின்பற்றினாள்; வானத்து மதியைக் கரிய மேகங்கள் மறைத்து விட்டன.

நீராடி வரச் சென்றவள் போராடி வீடு திரும்பினாள். இணைச் செருப்பாகச் சென்றவர்கள் தனிச் செருப்பாக வீடு சேர்ந்தாள்.

“மற்றொருத்தி எங்கே?” என்று சற்றுக் கவனித்த அவள் தாய் இந்தக் கேள்வியை விடுத்தாள்.

“நேற்றுவரை இருந்த உறவு இன்றுவரை நீடிக்கவில்லை” என்றாள் அவள் தோழிகளுள் ஒருத்தி.

“என்னடி? என்ன நடந்தது? ஒரே பல்லவிக்கு இரண்டு பேர் சரணம் பாட ஆரம்பித்தார்களா” என்றாள்.

“இல்லை; அவள் மட்டும் தான் அதை இப்பொழுது பாடப் போகிறாள்; எனக்கு இடமில்லை” என்றாள் சுரமஞ்சரி.

“சுண்ணத்தின் காரணமாக இருவரும் எண்ணம் வேறுபட்டனர்” என்று தோழியர் விளக்கினர்.

“அவளுக்கு முகமூடி ஏன்” என்றாள் மஞ்சரியின் தாய்.

“மற்றவர்கள் யாரும் தன் முகத்தைப் பார்க்கக் கூடாது! தான் மட்டும் இரண்டு துளைகள் கண்ணுக்கு என்று வைத்துக் கொண்டு மற்றவர்களைப் பார்க்கப் போகிறாளாம்” இது தோழியின் விடை.

“கன்னிமாடம் ஒன்று தனக்காகக் கட்டித் தரவேண்டும்; அன்னியர் யாரும் அங்கே வரக் கூடாது” என்றாள்.

“கட்டிக் கொடுக்க வேண்டியவள் நீ அங்கே ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படி?”

“என்னை அழவிடு; அழுவதற்கு ஒரு இடம் வேண்டும்; அதற்குத்தான் நான் தனி இடம் கேட்கிறேன்” எனறாள்.

“சிரிப்பதற்கு இடம் கிடைக்கும்வரை சீராக அவள் அங்கேயே இருக்கட்டும்” என்று அவள் மனப் போக்கின் படி அவள் தாய் விட்டு விட்டாள். “தந்தையிடம் சொல்; அந்தத் தெருவழியே ஆடவர் யாரும் வரக் கூடாது; இதை அரசனிடம் சொல்லி ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்றாள்.

இந்தக் காலத்தைப் போலவே சிலவற்றைக் காசு கொடுத்தால் சாதிக்கும் காலமாக அது இருந்தது. அவள் தந்தை கட்டித் தங்கத்தைக் கொண்டு போய்க் கட்டியங்காரனுக்குத் தந்து அனுமதி வாங்கி வைத்தான்.

“ஒநாய்கள் வரக் கூடாது; அவற்றிற்கு வழிஇல்லை” என்று ஒரு பலகை மாட்டி வைக்கப்பட்டது. ஆடவரை உள்ளிருந்தவர்கள் சன்னல் வழியாக எட்டிப்பார்த்துக் கொள்ள முடிந்தது. அது மிகப் பழைய கட்டிடம்; அதில் சிற்பங்கள் செதுக்கி இருந்தனர். இரண்டு சிற்பங்கள் இருந்தன; கிழக்கையும் மேற்கையும் பார்த்தன; இது ஆண் இது பெண் என்று தோழி வேறுபடுத்திக் காட்டினாள்.

“சிற்பங்களில் கூடவா பேதம் இருக்க வேண்டும். இந்த ஆண் சித்திரத்தை அகற்றி விடு” என்று ஆணையிட்டாள்; மருந்துக்குக் கூட ஒரு மல்லிகைப்பூ அங்கு வைக்கப்படவில்லை.

அவர்களுக்குப் பொழுது போகாத நேரத்தில் “ஆண்கள் இல்லாமல் குழந்தை பெற முடியுமா? ஏன் பெற முடியாது. வழி என்ன?” இந்த மாதிரி நவீன ஆய்வுகளில் மனம் செலுத்தினர்.

தனக்கு என ஒதுக்கிவிட்ட திரை அரங்கில் அவள் கால் சலங்கை ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. ஆட எழினியின் திரைகள் நீக்கப்படவில்லை. இது அவள் நிலை.

குணமாலை நிலை வேறு. யானை என்றால் அதற்கு மதம் பிடிக்கவில்லை என்றால் அது யானையே ஆகாது. அதுவும் அரசனின் யானை என்றால் அதிக மதம் பிடிக்க வேண்டும்; கட்டியங்காரன் யானை என்றால் அது கட்டுக்கு அடங்காது. அது யாரை வேண்டுமானாலும் குத்தலாம். அதைத் தாங்காமல் மற்றவர்கள் கத்தலாம்; அதைத் தடுக்க யாரும் முன் வரவில்லை.

குணமாலை முத்துச் சிலிகையில் வந்து கொண்டிருந்தாள். யானையைக் கண்டதும் அதைச் சுமந்தவர்கள் அலறி பொத்து என்று போட்டு விட்டு ஓடி விட்டனர்.

அந்த யானையைத் தடுத்து நிறுத்த எந்தப் பாகனும் அங்கு நிற்கவில்லை. யானைக்குப் புதுவிதமான ஆசை பிறந்தது. அணைக்க அல்ல; அவளை அடித்துக் கொல்ல.

“மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்; கந்த கோட்டத்துள் வளரும் கந்த வேளே” என்று ஒரு ஆண்டி அந்தப் பக்கம் பாடிக் கொண்டு சென்றான்.

அதை ஆராய்ந்து கொண்டு அவள் பல்லக்கில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்த யானை தன்னைத் துதிக்கையால் வளைத்துக் கொண்டிருந்தபோது அந்தப்பாட்டுக்குப் பொருள் இவளுக்கு விளங்கியது.

கத்துவதற்கும் முடியாமல் அவளுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

பக்கத்தில் இருந்த தோழி ஒருத்தி “ஆடவர் எவரும் இல்லையோ” என்று கூவி அழைத்தாள். அங்கு நடந்து கொண்டிருந்த பாதைவாசிகள் அதைக் கேட்டுத் தம்மை அல்ல என்று மதித்துக் கொண்டனர்.

ஆட்டு மந்தையில் இருந்து ஒரு சிங்கம் திடீர் என்று பாய்ந்து அந்த யானையின் கையில் இருந்த மாலையை எடுத்து விட்டு அது அதன் கையகத்துப் புகுந்தது.

குணமாலை அவனைக் கண்டாள். தான் அகப்பட்டதற்கும் அவள் துடிக்கவில்லை. இந்தப் புதிய ஆடவன் தனக்காகப் பிணை தந்தது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த இளைஞன்தான் தன் சுண்ணத்தைப் பாராட்டியவன் என்பதைப் பின்னால் கேட்டு அறிந்து கொண்டாள்.

யானையோடு அவன் போராடிக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்கள் அவளுக்கு உயிர் போய் வந்து கொண்டிருந்தது.

இதய அறுவைச் சிகிச்சை நடக்கும்போது என்ன ஆகுமோ என்று வெளியே காத்துக் கிடக்கும் உறவினராக அவள் ஆனாள்.

அந்த யானை அடக்கப்பட்டது. அது பிரம்படிக்கு அஞ்சும் பள்ளி மாணவனைப் போல மண்டியிட்டது. அங்குசம் கொண்டு அதனை அடக்கி வைத்தான். பாகர்கள் ஒதுங்கி நின்றனர்.

வீட்டில் அடங்காத பிள்ளையை ஊரார் அடக்கியதைக் கண்டு அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அவள் எண்ணிப்பார்த்தாள்; சுரமஞ்சரி இந்த விபத்தில் சிக்கி இருந்தால் அவள் அதிருஷ்டக் காரியாகி விட்டு இருப்பாள்; அந்த வாய்ப்புத் தனக்குக் கிடைத்ததே என்று மகிழ்ந்தாள்.

தன் உடம்பெல்லாம் உராசிக் கிடந்தது. அதில் வெளியிட்ட குருதிச் சிதறல் அவளுக்கு வீரன் தன் மார்பில் காணும் வடுவாகக் கொண்டு மகிழ்ந்தாள்.

அவன் தன்னை இட்டு இழுத்தபோது அவள் துவண்டு விழுந்தாள்; அவன் கட்டி அணைத்திருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி ஏங்கினாள்.

தோழியர் வந்து சூழ்ந்தனர்; அவள் வடுக்கண்டு துயரத்தில் ஆழ்ந்தனர்.

“சொன்னால் கேட்டாயா? தனியாகப் போகக் கூடாது என்று சொன்னேனே” என்று அம்மா பழைய பல்லவியைப் பாடினாள்.

“அந்த யானை பொல்லாதது; அது போனமாதம் தான் பல்லில்லாக் கிழவியின் பற்கள் அத்தனையும் நொறுக்கி விட்டது” என்று பழைய கதையைப் பேசினாள்.

எதிர்பாராத சந்திப்பாகச் சீவகன் அதனைக் கொண்டான். சுண்ணத்தின் வண்ணத்தில் அவள் சுந்தர முகத்தைக் கண்டவன் இப்பொழுது நேரில் கண்டதை எதிர்பார்க்காத சந்திப்பாகக் கொண்டான். யாரோ ஒரு கன்னிப் பெண் அதனால் அவளைக் காக்கக் கருதி யானையை எறிதல் களைக்குக் கடன் என்றுதான் முனைந்தான். அந்தக் கன்னி இவளாகத்தான் வரவேண்டும் என்று எழுதி இருந்ததே அந்த எழுத்தைத்தான் மீண்டும் மீண்டும் வாசித்தான்; அவள் கழுத்தை அந்த யானை நெரித்து இருந்தால் என்னவாகி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தான். அவள் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாகி இருப்பாளே என்று தவித்தான்.

வீணையில் தத்தையை வென்றதை அவன் விறலாகக் கொள்ளவில்லை. யானையை அடக்கி அவளைக் காத்ததே வெற்றி என்று நினைத்தான். அவள் பார்த்த மோனப் புன்னகையில் அவள் எத்தனை எண்ணங்கள் பொதித்து வைத்தாள் என்று எண்ணிப் பார்த்தான். நோய் நோக்கு விளைவித்தவள் அது தீரும் மருந்தும் அவள் நோக்கே என்று வள்ளுவம் பாடினான்.

அந்த யானையின் கூரிய கொம்பினைவிடத் திரையிட்டு மறைத்துவைத்த வம்பே கூரியது என்று எண்ணத் தொடங்கினான். மதங்கொண்ட யானைக்கு அவள் அணிந்திருந்த கச்சு முகபடாம் என்று கருதினான். அந்தக் கச்சு மட்டும் இல்லை என்றால் தன் நெஞ்சு தன்னிடம் மிச்சம் பட்டிருக்காது என்று நினைத்துப் பார்த்தான்.

தனிமை அவனை வாட்டியது; சோலைக் கிளியைக் காண அவன் உள்ளம் துடித்தது; மாலை வேறு வந்தது; அது மயக்கம் தந்தது. அக்கம் பக்கத்தவர் அடிக்கடி வந்து அவன் மோனத் தவத்தைக் கலைப்பதை அவன் விரும்பவில்லை. அவளைப் பற்றி அமைதியாக நினைத்துக் கொண்டு அந்த அலைகளில் நீந்தி விளையாடி ஊர்ப் புறத்துச் சோலையில் சென்று ஒரு மேடைமீது அமர்ந்தான். கூட்டில் வந்து அடங்கும் பறவைகள் முணுமுணுத்துக் கொண்டு திட்டிக்கொண்டு இருப்பது போல ஒலிகள் எழுப்பிச் சின்னக் குழந்தைகளின் கன்னக்குமிழிகளைக் காட்டிக் கொண்டிருந்தன.

கேள்விகளை விட்டு விட்டுத் தேர்வுகளைப் பற்றியே எண்ணி வருத்தப்படும் மாணவனைப் போல அவனிடம் பேசாமல் வீடு வந்தமைக்கு மனம் நொந்து கொண்டு தேள் கொட்டியதைப் போலத் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பது அறிந்த தாய் அதைக் கேட்டுத் கொலைக்காது மூடியை எடுக்காத பாத்திரமாக அவளைப் பார்த்தாள்.

யானைக்காக இவள் பானைச் சோற்றில் ஒருபருக்கை கூடச் சாப்பிடாமல் இருக்கத் தேவை இல்லை; அவள் இளமை நினைவுகள் அவள் முன் நின்றன.

“யாரைக் கண்டாய், பேரைச் சொல்வாய்” என்று கேட்பது அநாகரிகம் என்று சொல்லி அவள் அழுகைச் சுதந்திரத்திற்குத் தடையுத்தரவு போட விரும்பவில்லை.

“எப்படியும் அவள் சொல்லித்தான் தீர்வாள்; கிளி இருக்கிறது; அதனிடம் பேசித் தன் துயர் ஆற்றிக் கொள்வாள்” என்று மனம் அமைதி கொண்டாள்.

ஆரம்பப் பள்ளிச் சிறுவன் போல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அவள் மவுனத்தைக் கலைத்தது. அவள் தீட்டிய சித்திரம் கண்டு அவள் மனப்போக்கின் விசித்திரத்தை அறிந்து கொண்டது.

குறிப்பறிந்து செயல்பட்டது. நேரே யானையை அடக்கிய வீரன் இருந்த சோலையை முகவரியைக் கேட்டு யாரையும் விசாரிக்காமல் கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற பழமொழிக்கேற்ப இவன் நிச்சயம் சோலையில் தான் இருப்பான் என்பதைத் துணிந்து அங்குச் சென்றது.

“கன்னியர் உற்ற நோய் கண்ணினும் இனியவர்க்கும் எடுத்து உரையார்; யானும் என் வாயால் இதை எடுத்துச் சொல்லமாட்டேன் கற்றவன் நீ உற்ற நிகழ்ச்சியைக் கொண்டு சற்று எண்ணிப் பார்த்து நீயே அறிந்து கொள்ள வேண்டும்.”

“ஒரு பெண்ணைத் தொட்டுவிட்டால் யாரும் அவளைக் கட்டிக் கொள்ளமாட்டார்கள். நீ மெதுவாக அவளைப் பிடித்து இழுத்து இருக்கலாம்; நீ அவளை இறுகத் தழுவி அவளைக் கசக்கி விட்டாய்; அவள் மிகவும் மெலிந்து விட்டாள். அவளை நீ தான் மணக்க வேண்டும், அது இந்த உலகியல்” என்றது.

“கசக்கினேன்; முகர வில்லையே” என்றான். “நுகரலாம்; அதை எடுத்து உரைக்கத்தான் பறந்து வந்தேன்; சிறகு பெற்றுவந்தேன்; சிறகு பெற்றதன் பயன் இன்று தான் கண்டேன்” என்றது.

“அஞ்சல் முடங்கல் எடுத்து வந்த அஞ்சுகமே! அவள் சுகம் விரும்பி அவளை மணப்பேன்; அவள் தந்தை பேராசைக்காரனாக இருந்தால் பொன்னும் பொருளும் கொண்டு வந்து பரிசமாகக் குவிப்பேன். இனி அவளுக்குத் தவிப்பு ஏன்? அவளுக்காக என்றும் காத்திருப்பேன்” என்று சொல்லி அனுப்பினான்.

“ஆழ்க் கடலுக்கு அப்பால் அசோக மரத்தின் அரு நிழலில் சோகமே வடிவம் கொண்டிருந்த அணங்குக்கு அன்று அனுமன் இராமன் தந்த கணையாழி தந்தான். அது அவள் சோகத்தை மாற்றியது; அதேபோல நீயும் இந்த மோதிரத்தை அன்பின் அடையாளமாக அவளிடம் கொடு” என்று சொல்லிச் செய்தியை ஒலையில் பொறித்து அனுப்பினான்.

“உன் நண்பர்களுக்குத் தோழன் நீ அவளுக்கு நீ தோளன்; உன் தோள் துணையாகத் தான் அவள் துயில முடியும். நாள் கடத்தாதே” என்று சொல்லிவிட்டு விண் வழியே விரைந்தது.

வானத்து வீதியை அவள் விழிகள் பார்த்துக் கொண்டு காத்திருந்தன. சென்ற கிளி கொண்டு வரும் செய்தி யாதாக இருக்குமோ எனக் கவன்று இருந்தாள். பச்சையாக எது தெரிந்தாலும் அது கிளி என நினைத்தாள். பச்சை என்ற பெயரைக் கேட்டாலே அவள் பசி தீர்ந்தது போல் ஆயினாள்.

பறந்து வந்த கிளி கொண்டு வந்த செய்தி கேட்பதற்கு முன் அதற்கு அடிசில் ஊட்டினாள்; பால் பிசைந்து சோறு காட்டினாள். அதுகொண்டு வந்துகொடுத்த மோதிரத்தை வாங்கித் தன் முலைக் குவட்டில் வைத்து, மகிழ்ந்தாள். கிளியை மெல்லப் படுக்க வைத்து, ‘உறங்குக’ என்று சொல்லித் தடவிக் கொடுத்தாள். தினந்தோறும் இதைப் போன்ற வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று அந்தக் கிளி எண்ணிப் பார்த்தது. பாலும் சோறும் பாங்காய்த் தந்திடுவாள் என்று மனநிறைவு கொண்டது.

காதலுக்காக யார் யாரையோ தூதுவிட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறது; மேகத்தைத் தூதுவிட்டுக் காதலிகள் தம் சிநேகத்தைத் தெரிவித்தது அதுக்குத் தெரியும். நளன் அன்னத்துக்குத் தந்த செய்தியும், தமயந்தி தூது அனுப்பியதும் நளவெண்பா என்னும் நூலில் படித்திருக்கிறது; தென்மதுரையில் கோயிலில் குடி கொண்டிருக்கும் அழகர்பால் தூது விட்ட அழகர் கிள்ளை விடு தூது என்ற நூலையும் கிளி படித்திருக்கிறது. அதற்குப் பிறகு தான் கிளிகளுக்கு இந்த உத்தியோகம் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்பதை ஆராய்ச்சியாளர் சொல்ல அதையும் கேட்டிருக்கிறது.

குணமாலையின் தாய் நேரத்துக்கு நேரம் டி.வி. திருப்பிக் கிரிக்கட்டு ஸ்கோர் கேட்பது போல அடிக்கடி வந்து அவள் நிலையைக் கேட்டு அறிந்து வந்தாள். கிளியைக் கேட்டு அவள் என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்ள ஆவல் காட்டினாள். எனினும் இந்தச் சிறு பிள்ளையிடம் அவ்வளவு தூரம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அடக்கிக் கொண்டாள். நாளைக்கு அது தன்னை மதிக்காது என்பது தெரியும். மேலும் அது தொலை பேசியில் இருவர் பேசிக்கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்பது போல் ஆகிவிடும்; தன் நிலையைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

மூலவரையே கேட்டுவிட்டால் போகிறது; அவள் துயரத்துக்கு மூல காரணம் யார் என்று தெரிந்து கொள்ள முற்பட்டாள்.

“இன்று மூன்றாம் பிறை யாயிற்றே; பிறை தொழப் போகவில்லையா” என்று கேட்டாள்.

“இறையை வழிபட்டுவிட்டேன்; பிறையை வழிபடத் தேவை இல்லை” என்றாள்.

அவள் பேச்சு மணமானவள் போல் இருந்தது; “கற்புடைய பெண்டிர் தெய்வத்தைத் தொழத் தேவை இல்லை” என்று வள்ளுவர் கூறியது அவள் நினைவுக்கு வந்தது.

“உன் மாமன் மகன் பெண் கேட்க வரப் போகிறான்; உன்னைச் சீர் செய்து கொள்” என்றாள். “அவன் சீர்களை மறுத்துவிடு; அவன் பேரையே சொல்லாதே” என்றாள்.

“அவன் ஒற்றைக் காலில் நிற்கின்றான்; உன்னையே தான் கட்டிக் கொள்வேன் என்கிறான்.”

“மற்றொரு கால் என்ன ஆயிற்று?”

“அவனைக் கேட்டு வந்து சொல்கிறேன்; அவன் பெரிய பணக்காரன்; அது தெரியுமா?”

“அளவோடு தான் அன்று நம் வீட்டில் அவன் சாப்பிட்டான்”

“அவன் இப்பொழுது வீடு மனை தோட்டம் கடை காணி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்” என்றாள்.

“யானையிடமிருந்து என்னைக் காத்த வீரனுக்கே யான் மாலையிடுவேன்” என்றாள்.

“வீரனுக்கே மாலையிட்டால் நம் ஊர் செட்டிப் பிள்ளைகள் நிலை என்ன ஆவது?”

“ஈரமுள்ளவர் எத்தனையோ பேர் அவர்களுக்குத் தாரமாகக் காத்துக் கிடப்பார்; என்னை விடு” என்றாள்.

தந்தை வந்தார்; செய்தி சொன்னாள்.

“அவன் என்ன சாதி ?”

“நம்ம சாதிதான்”

“சாதிக்குள்ளேயே கொடுக்கக் கூடாது; கலப்பு மணம் தான் செய்விக்க வேண்டும் என்றிருந்தேனே”

“இது சாதி மணமும் இல்லை; கலப்பு மணமும் இல்லை; காதல் மணம்” என்று விளக்கம் தந்தாள்.

“என்னைவிட அவள் முன்னேறி விட்டாள்” என்று அவர் தம் கருத்தைக் கூறினார்.

ஏற்கனவே மணமனையில் உட்கார்ந்து பழகியதால் மணச் சடங்குக்கு விளம்பரம் அதிகம் தேவை இல்லாமல் இருந்தது. எப்பொழுது இந்தச் சடங்குகளிலிருந்து விடுபட்டு அவளைச் சந்திக்கப் போகிறோம் என்று காத்திருந்தான். இனிய மண முழவு ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மலர்மாலை சுமந்து அவனுக்கு அது அலுத்து விட்டது.

அவர்கள் இருவரும் காதல் இன்பத்தில் மூழ்கினார்கள் என்றால் அது வழக்கமான விளக்கமாக அமையும். இன்பக் களிப்பில் இணைந்தார் என்றால் அது பொருத்தமாக இருக்கும். தாரும் மலையும் மயங்கின என்றால் அதைவிட அழகாக இருக்கும்; அரவு இரண்டும் பின்னிக் கொண்டு இணைந்தன என்றால் அது சிலப்பதிகாரக் காவியமாக மலர்ந்து விடும். அது அவர்கள் சொந்த விஷயம். அதில் நாம் தலையிட முடியாது என்பதால் அதிகம் சொல்லத் தேவை இல்லை.

ஒரு தலைவி சொன்னாளாம். “காலைப் பொழுது வந்தால் அது தன் தலைவனைப் பிரித்துவிடும்” என்று, “தோள் தோய் காதலரைப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தது” என்று சொன்னாளாம்.

இங்கே வைகறை வரவில்லை; கட்டியங்காரன் ஆட்கள் வந்து தொலைந்தனர். சீவகன் காந்தருவ தத்தையை மணந்தபோது. கட்டியங்காரனால் தடுக்க முடியாமல் போய்விட்டது. குணமாலை அவளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். அவள் தெருவில் நடந்தாலே போகும் வண்டிகள் சலனமற்று நின்றுவிடும் என்றனர்; அவளைப் பார்ப்பதில் மனம் செலுத்தி ஊர்திகளை நிறுத்தி விட்டனர்; அதனால் சில வண்டிகள் மோதிக் கொண்ட அசசெய்தி அவனுக்கு எட்டி இருக்கிறது.

இருதார மணத்தடை மசோதா கொண்டு வந்திருந்தால் இதைத் தடுத்து இருக்கலாமே என்று எண்ணிப் பார்த்தான். அது தனக்கே ஒரு வேளை இடையூறாக அமையுமோ என்று அதைக் கைவிட்டான். கணிகையர் கணக்கில் எடுப்பது இல்லை என்பதால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போட்டான். அப்படி ஒரு சட்டம் போட்டிருந்தால் சீவகன் ஒருவனாலேயே அந்நாட்டுக் கன்னியர் எதிர்த்திருப்பர் என்பதை அவன் எண்ணிப் பார்க்கவில்லை.

இந்தக் குணமாலை அவளை இவன் தட்டிக் கொண்டு போவதை எப்படி விட்டு வைக்க முடியும். ஏதாவது குற்றம் அவன் மீது சுமத்த வழி இருக்கிறதா என்று பழி நோக்கி இருந்தான்.

அவனைப் பார்க்க யானைப்பாகர்கள் வெளியே காத்து இருந்தனர்.

“யார் அங்கே!”

“பாகர்கள்”

“செய்தி?”

“யானை மறுக்கிறது. உணவு உட்கொள்ள வெறுக்கிறது”

“கரும்பு கொஞ்சம் அதிகம் கொண்டு வந்து போடுவது தானே”

“அதையும் அது விரும்ப வில்லை”

“காரணம் ?”

“அது தன் கற்புக்குப் பங்கம் வந்து விட்டது என்று தனிமையில் புலம்பிக் கொண்டு இருக்கிறது”

“யார் அதைக் கெடுத்தது”

“சீவகன் அதைத் தொட்டுவிட்டான்; அதனால் அது புலம்புகிறது”

“அரசயானை யாயிற்றே அதை எப்படி அவன் தொடலாம்”

“மதம் கொண்டது; எங்களால் அடக்க முடிய வில்லை”

“இதற்கு நீங்கள் எப்படிச் சம்மதித்தீர்கள்”

“நாங்கள் உயிருக்கு அஞ்சி அந்த இடத்தை விட்டு நீங்கி வெகுதூரம் போய்விட்டோம், அவன் ஏதோ யாரோ ஒரு பெண்ணை ஆசைப்பட்டிருக்கிறான்; அவள் அந்த வழியாக வந்து கொண்டிருந்தாள்”

“உருப்படி நன்றாக இருந்ததால் வளைத்து உம்மிடம் சேர்க்க அசுவனி நினைத்தது; இவன் தடுத்துவிட்டான்”

“இது இராச துரோகம்; அவனைக் கட்டிப் பிடித்து வாருங்கள்” என்று படைத் தலைவர்களுக்கு ஆணையிட்டான்; பக்கத்தில் இருந்த அவன் மைத்துனன் மதனன் தக்க படையுடன் கந்துக்கடன் இல்லம் நோக்கிச் சென்றான்.

புகை படிந்த கண்ணோடு நகை அணிந்த அந் நங்கை நல்லாள் சோறு சமைத்துப் பரிமாறிக் கொண்டு இருந்தாள். புதுப் புடவை என்றும் பாராமல் அதிலேயே கையைத் துடைத்துக் கொண்டு அதனைக் கரியாக்கிக் கொண்டாள்; நெருப்பைத் தீண்டியதால் சூடு வேறு பட்டுக்கொண்டது; தானே துழந்து அட்ட தயிர்க்குழம்பை அவனுக்கு ஊற்றிப் பரிமாறிக் கொண்டு இருந்தாள்.”

“இது மிகவும் சுவைக்கிறது” என்றான்.

“இது நானே சமைக்கிறது” என்றாள்.

அவள் முகத்தில் எழுந்த முறுவல் கண்டு அவன் முகம் நுட்பமாக மலர்ந்தது.

‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு’ என்ற குறளின் விளக்கத்தை அவளிடம் அறிந்து பாடம் படித்துக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில் மதனின் தடியாட்கள் அடியாட்கள் போல் வந்து நின்றனர்.

சிப்பாயைக் கண்டு அஞ்சிய காலம் அது; வீட்டுப் பாயை மடக்கி வைத்துவிட்டு வெளியே வந்தான்; அவளும் தன்சேலையைச் சரிசெய்து கொண்டு பின்னணியில் வந்து நின்றாள்.

“அசையக் கூடாது” என்றான்.

காப்புக்கலையாத அவன் கைகளுக்குக் காப்பு இட அழைத்தனர்.

நந்தட்டனிடம் பதுமுகனைக் கொண்டு படை திரட்டுக என்று குறிப்புக் காட்டிவிட்டு மதனன் அருகில் வந்தான். அவன் சீவகனை நெருங்க அஞ்சி அகன்று நின்றான்.

“உன்னை அழைத்து வர அரசன் ஆணை” என்றான். சம்பிரதாயம் கருதிக் கந்துக்கடன், “அரசன் அழைத்தால் போய்த்தான் தீரவேண்டும்; மறுக்காதே; அது நல்ல பிள்ளைக்கு அழகு அல்ல” என்றான்.

சுநந்தையும் “அப்பா சொல்லைக்கேட்பதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்” என்றாள். அவனும் வேறுவழி இல்லாமல் நல்ல பிள்ளையாக நடக்க முயற்சி செய்தான்.

அவனுக்கு மூன்று வழிகள் இருந்தன. ஒன்று நண்பர்களை விட்டு ஊரைக் கொளுத்திக் குழப்பம் விளைவித்து அவர்களைத் திசை திருப்பிவிட்டுத் தான் தப்புவது; அடுத்தது காந்தருவதத்தையின் மந்திர சக்தியால் அவர்களிடமிருந்து தப்பிச் செல்வது; மற்றொன்று தன் நண்பன் சுதஞ்சணன் அவன் உதவியால் தப்பித்து வெளியேறுவது; அவர்கள் விருப்பப்படி விட்டால் அங்கே கொண்டு போய் முட்டிக்கு முட்டி அடித்துப் பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பது உறுதி. மறுபடியும் ஒரு கோவலன் கதை நடக்காது என்பதற்கு உத்தரவாதமும் இல்லாமல் இருந்தது.

வெட்டுண்ட உடலை எடுத்துவைத்துத் தத்தையும் குணமாலையும் வந்து அழுது கொண்டிருக்க வேண்டியது தான். தலைமாட்டில் ஒருத்தி, கால்மாட்டில் மற்றொருத்தி, இந்த அநாகரிகத்தைத் தடுக்க அவன் யோசித்துத் தீர வேண்டியது ஆயிற்று.

அக்கம் பக்கம் கூட்டம் வந்து கூடிவிட்டது. பல திறப்பட்ட மக்கள் அங்கு வந்து கூடிவிட்டனர். அவர்களுக்கு இது காணத்தக்க காட்சியாக இருந்தது. இப்பொழுதுதான் திருமணம் ஆயிற்று; புதுமாப்பிள்ளை அவனைக் காவலர் வந்து இழுத்துப் போகிறார்கள் என்றால் அந்தக் காட்சியை மறுபடியும் காணமுடியாது. மேலும் சீவகன் ஊரறிந்த பிள்ளை; தத்தையோடு பாடி வெற்றி கண்டவன்; யாருக்காவது ஏதாவது கெடுதி என்றால் ஓடோடி வருவான். அவன் அந்தத் தெருவுக்கே ஒரு அரண் போல இருந்தான். நந்தகோனின் மாடுகளைப் பிடித்துக் கொண்டு வந்து சேர்த்தவன்; கள்வர் என்றால் அந்தப் பக்கம் வரவே அஞ்சுவர்; எப்பொழுதும் அவனைச் சுற்றிக் காளையர் சூழ்ந்து கொண்டிருப்பர். சில சமயம் அவன் பேட்டை ரவுடியாகத் தென்பட்டான். பெண்ணைப் பெற்றவர்களுக்கு அவன் மீது ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பிஞ்சு உள்ளங்கள், அவனிடம் மனம் பறி கொடுத்துவிட்டுச் சரியாகவே துரங்குவது இல்லை. இவனை உள்ளே தள்ளிவிட்டால் நிம்மதியாகவும் இருக்கலாம் என்று எண்ணியவர்கள் உண்டு; பொது மக்கள் என்பவர்களே ஒரு கலவை இனம்; இப்படியும் இருப்பார்கள்; அப்படியும் இருப்பார்கள். அது மாதிரி கூட்டம் அது.

ஒருவர் ஆரம்பித்தார், “சீவகன் ரொம்பவும் நல்ல பிள்ளையாயிற்றே ஒருவர் ஜோலிக்கும் போகமாட்டானே” என்றார்.

“யானையின் துதிக்கையைத் தொட்டுப் பிடித்தான்” என்று குற்றம் சாற்றினர் காவலர்கள்.

“யாராக இருந்தாலும் என்ன ? கை தொட்டுப் பிடிப்பது குற்றம்தான்” என்றார் அவர் நடுத்தர வயதைக் கடந்தவர்.

“கூடாது தான்” என்று தலையசைத்தார்; தலை யசைத்தே பழக்கம் உடைய தலைவர் அவர்.

“யானை வளைத்துப் பிடித்த பெண்ணை இவன் தொட்டு இழுத்தான்”

“இது மிகத் தவறு” என்றான் மென்மையான குரல் படைத்த மெல்லியலான் ஒருவன், “கட்டியங்காரன் கைப்பிடிக்கும் பெண்ணுக்கு எல்லாம் இவன் மைதீட்டுகிறான். அநங்கமாலைக்கு இவன் சொக்குப் பொடி போட்டு அவளை மயக்கிவிட்டான்” என்றான் ஒருவன்.

“இவன் பழைய குற்றவாளி, இவன் இதற்கு முன்னும் நிறைய வழக்குகளில் பதிவாகி இருக்கின்றான்” என்றான். கொஞ்சம் வயதான காவலாளி.

“இந்தமாதிரி ஆட்களை வெளியே விட்டு வைக்கக் கூடாது; நாங்கள் குறுக்கிடமாட்டோம்” என்று ஒட்டு மொத்தமாகக் குரல்தந்தனர்; இராஜதுரோகம் நினைக்காத வெகுஜனங்கள் இவர்கள், பொதுமக்கள் என்றால் என்ன என்பதை அறிய இவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

தடுத்து நிறுத்த ஒரு பெண்மணி வீராங்கனையாகக் குரல் கொடுத்தாள்.

“ஒருத்தி யானையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு உயிருக்குப் போராடுகிறாள். பேடிகளைப் போல மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்; அப்பொழுது ஒர் இளைஞன் தன் உயிரைப் பணயம் வைத்து அவளைக் காக்கின்றான் என்றால் அவனைப் பாராட்டுவதைவிட்டுத் தளைப்படுத்துவது அநீதி, அக்கிரமம், அட்டுழியம்” என்று கத்தினாள்.

இவள் தான் “ஆடவர் இல்லையோ” என்று முன்குரல் கொடுத்தது, சீவகனைக் காப்பாற்றத் தூண்டியவள்; கோயில் மணிபோல் அவள் ஒலி கணிர் என்று கேட்டது. பக்த கோடிகள் பஜனை செய்வதை விட்டு அவளையே உற்று நோக்கினர்;

“அவள் சொல்வதும் நியாயமாகத் தெரிகிறதே” என்று சுருதிக் கட்டை மாற்றிப் போட்டனர்.

“அதுதான் உண்மை; இவனை அரசர் பாராட்டிப் பரிசுதரவே அழைக்கிறார்” என்று அவர்களுக்கு மாற்றுக் குரலில் பேசினர் காவலாளிகள்.

தத்தை அமைதியாக இருக்கவில்லை. இவர்கள் சூழ்ச்சியை அறிந்தவளாய் இவனை மீட்பது என்று முடிவு செய்தாள். எனினும் அது அவன் ஆண்மைக்கு இழுக்கு என்று அடங்கிவிட்டாள்.

சீதை அனுமனிடம் கூறினாள் “இராவணனை என் சொல்லினால் சுட முடியும்; அது இராமன் வில்லுக்கு மாசு: அதனால்தான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

அதே போன்ற நிலையில்தான் தத்தை அகப்பட்டாள். அவள் அவசரப்படவில்லை. அவன் தோழர்கள் இவன் ஆணைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். தப்பிச் செல்லத் தன் தோழர் துணை வேண்டாம் என்று கருதினான்; அதுபெரும் போரில் கொண்டு சென்று விடும். ஆசிரியர் அச்சணந்தி ஓர் ஆண்டு பொறுக்கவும் என்று கூறியது அவன் நினைவுக்கு வந்தது.

சிலுவையில் அறைய ஏசு நாதரை இந்த யூதர்கள் கட்டி இழுத்துச் செல்ல நினைத்தனர். அவர்கள் தன்மேல் கையை வைப்பதை அவன் தாங்கிக் கொள்ள விரும்பவில்லை.

அவன் நினைவுகள் சுதஞ்சணன் பக்கம் சென்றன. கூப்பிட்ட குரலுக்கு வராத வேலையாள், தாகத்தைத் தீர்க்காத தண்ணிர், தரித்திரம் அறியாத பெண்டிர், வறியவர்க்கு ஈயாத செல்வம், ஒழுக்கம் தராத கல்வி, ஆபத்துக்கு உதவாத நண்பர் இருந்தும் பயன் இல்லை என்று எண்ணினான்.

அந்த இடத்தை விட்டு அகன்று போக நண்பனின் உதவியைத் தான் நாடவேண்டும் என்று எண்ணினான். சுதஞ்சணனின் இடது கண் துடித்தது; நண்பன் இடுக்கண் உற்றிருக்கிறான் என்பதை அறிந்தான். காற்றும் மழையும் துணையாகக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கு வந்து அவனைச் சுற்றியிருந்த காவலர் கண்ணில் மண்ணைத் தூவினான்.

அடுத்த கணம் சீவகன் அங்கு இல்லை. காவலர் அவனைத் தேடி அலைந்தனர். அவர்களுக்குக் கடுக்காய் கொடுத்துவிட்டான் என்று மதனன் அறிந்தான். வேறு வழியில்லை. கட்டி இழுத்து வந்தவனை வெட்டி வீழ்த்தி இருக்கலாமே என்று வருந்தினர்.

எப்பாவமும் அறியாத அப்பாவி ஒருவன் அந்த வழியே சென்று கொண்டிருந்தான். அவனை வெட்டிச் சிதைத்து அடையாளம் தெரியாமல் செய்து வைத்தான்.

கட்டியங்காரன் சீவகனைக் கட்டிப் பிடித்து வருவர் என்று காத்திருந்தான். கட்டிய கையினனாக அவனை வெட்டி முடித்து விட்டதாகக் கயிறு திரித்தான் மதனன்.

“ஏன் அவனை உயிரோடு அழைத்து வரவில்லை” என்றான்.

“திமிறினான்; அதனால் தீர்த்து விட்டேன்” என்றான்.

“அதுவும் நல்லது தான்; இங்கே வந்தால் கோவலனைக் கொன்ற பழி நம்மை வந்து சேரும்” என்றான்.

“அவன் முகத்தையாவது காட்டி இருக்கலாமே” என்றான்.

“அவன் முகத்தில் நீங்கள் விழிப்பதை நான் விரும்ப வில்லை” என்றான்.

சுதஞ்சணன் சீவகனால் உதவப்பட்டவன். இராசமாபுரத்தில் சாபத்தின் விளைவாக அவன் ஒரு சொரிநாயாகத் திரிந்து கொண்டிருந்தான். அந்த நாய் சோற்றுப் பானையில் தலையிட்டு எச்சில் படுத்தியது. அதற்கு உரிய வேள்வி அந்தணர் கேள்வி கேட்பவர் இல்லாமல் அடித்துத் துரத்தினர். அது அங்கிருந்து குளத்தில் விழுந்து உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தது. சீவகன் கருணையோடு அதை எடுத்து மந்திரம் ஒதி நல்வாழ்வு அளித்தான். அதனால் அவன் சாபம் தீர்ந்து தன் வித்தியாதர உலகை அடைந்தான்.

ரயில் பணத்தில் டிக்கட்டு இல்லாமல் பயணம் செய்த போது அவனுக்கு உதவிய பயணியின்பால் கொள்ளும் நட்பு இருவரிடம் மலர்ந்தது.

எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை நினைத்தால் தான் வந்து உதவுவதாக அவனுக்கு உறுதி அளித்திருந்தான்.

தினைத்துணை செய்த நன்றியை அவன் பனைத்துணையாகக் கொண்டான். அந்த நட்புதான் இவனுக்கு இப்பொழுது கைகொடுத்தது.