சீவக சிந்தாமணி (உரைநடை)/கேமசரியார் இலம்பகம்

6. கேமசரி இலம்பகம்

பல்லவ தேசத்தை விட்டு நல்லவனாகத் தொடர்ந்து நடந்தான்; அவன் பயணத்தின் அடுத்த தலைப்பு தக்க நாடு; தக்கநாட்டில் ஏமமா புரம் என்ற நகரை அடைந்தான்.

அந்த ஊரில் ஒரு அங்காடி இருந்தது; அங்கே விடலைகள் இளநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அந்தக் காளைப் பருவத்தினர் மிடுக்காகவும் துடுக்காகவும் இருந்தனர்.

அவர்களைப் பார்த்து “இந்த ஊரில் என்ன விசேஷம்?” என்று கேட்டான்.

“பெண்கள்” என்றார்கள்; அவர்கள் கண்கள் கிண்டல் பேசின.

“விளையாடுகிறீர்களா?” என்றான்.

“கலியாணமாகாத பெண்கள்; உள்ளூர்க்காரர்கள் நாங்கள்; இங்கே காத்துக்கிடக்கிறோம்; அவர்களுக்கு எங்களைப் பிடிக்க வில்லையாம்; வெளிநாட்டுச் சரக்குத் தான் அவர்களுக்குக் கிக், நீ போனால் சிக்கிக்கொள்வாய்” என்றார்கள்.

இவனை அவர்கள் சற்றுப் பொறாமையோடு பார்த்தனர். இவன் அழகாக இருப்பதால் அவர்கள் இப்படிப் பேசினார்கள்.

“ஏதாவது ஒரு முகவரி சொல்ல முடியுமா?”

“சுபத்திரன் கடை என்றால் எவரும் சொல்லி விடுவார்கள். காதில் கடுக்கன் போட்டிருப்பார். அவருக்கு ஒரே பெண், கேமசரி என்பது அவள் பெயர்; எங்கள் ஊர்க்கூந்தல் தைல வியாபாரிகள் அவள் படத்தைப் போட்டுத்தான் விளம்பரம் செய்கிறார்கள்; கூந்தல் அழகி அவள்.”

“நாங்கள் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தோம். எங்களை எல்லாம் பார்த்தால் அவளுக்கு ஆண்பிள்ளைகளாகப் படவில்லை. நீ போய்ப்பார்; வாழ்த்துகிறோம்” என்று சிரித்துப் பேசி அவனுக்கு அந்தக் கடைக்குச் செல்வதற்கு வழி காட்டினார்கள்.

அவர்கள் தூண்டியதால் இதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டான்.

கடைத்தெரு வழியாக நடந்தான்; அந்தத் தெருவிலேயே அதுதான் பெரிய கடையாக இருந்தது. சரிகைத் தலைப்பாகை கட்டியிருந்தார்; திலகர் போன்ற கட்டு அது. பச்சையப்பரும் அப்படித்தான் கட்டி இருந்தார். ஏன் வ.உ. சிதம்பரனாரும் தலைப்பாகை வைத்திருந்தார் என்று தெரிகிறது. இவன் போனவுடன் அதை மாட்டிக் கொண்டு இருந்தார். அவர் வழுக்கைத்தலை; அதனால் இது அதை மறைக்க அமைந்த சாதனமாகத் தெரிந்தது. தொப்பி, தலைப்பாகை இவற்றின் சரித்திரமே இதுதான் என்பதை அறியமுடிந்தது. அவர்கள் சொன்னபடி காதில் கடுக்கன் கலங்கரை விளக்கமாக இவனுக்கு அடையாளம் காட்டியது. அந்தக் கடைதான் என்று முடிவு செய்தான். நிறம் சிவப்பு; நிச்சயம் இவனுக்கு மகள் ஒருத்தி அழகாக இருப்பாள்; அவள் சிவந்திப்பூ என்று கற்பனையில் கண்டான்; அவள் இனிக் காணப்போகும் மத்தாப்பு என்பதை அறிந்து கொண்டான்.

பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில் கூட்டிச் சொல்லெல்லாம் தெரியச் சொல்லி “நல்வரவு ஆகுக” என்று விளம்பரம் காட்டி அவனை வரவேற்றார்.

“வாப்பா! எந்த ஊர்? புதுசு போல இருக்கு” என்றார்.

அவர் பேச்சே ஒரு தினுசாக இருந்தது. அவர்கள் சொல்லியபடி இவருக்கு ஒருமகள் இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.

“உனக்குக் கலியாணம் ஆச்சா?” என்றார்.

ரொம்பவும் அநாகரிகமாக நடந்து கொண்டதுபோல் தோன்றியது. நடிகையை வயது கேட்பது போலவும், முதியவர்களைப் பார்த்து உடல் நலமா என்று அடிக்கடி விசாரிப்பது போலவும், புதிய மனிதரைச் சந்திக்கும்போது உன் வருவாய் என்ன என்பது போலவும் இந்த வினா இருந்தது.

அதற்கு அவன் பதில் சொல்லக் கடமைப்பட வில்லை. சிரித்துக்கொண்டான். அவரும் தொடர்ந்து அதைப் பற்றிக் கேட்கவில்லை.

வீட்டு முன்னால் ஒரு பாவை இருந்தது. உற்றுக் கவனித்தான்; அது அவர் மனைவி என்று தெரிந்தது; அந்த வீடு ஒரு ஓவியம் போல அழகாக இருந்தது. நூலைப் போலத்தான் சேலை என்ற பழமொழி அவனுக்கு நினைவு வந்தது. சில வீடுகளில் பெண் பார்க்கச் செல்கிறார்கள். மாமியாராக வருகிறவர்களைத் தவறாக மணப்பெண் என்று தான் கருதிவிட்டதாகச் சென்றவன் பேசிச் சிரித்து நகையாடுவது உண்டு. நிச்சயம் இவர் மகள் பேரழகி என்பதற்கு இவள் ஒரு முன்னறிவிப்பாக அமைந்தாள்.

வழக்கம் போல உணவு, விருந்து, பிறகு நாடகம்; பூச்சுமை ஒன்று முன் வந்து நின்றது. நாணத்தாலா அல்லது பூவின் சுமையாலா தெரியவில்லை; அவள் நாணித் தலைசாய்ந்தாள். நாணத்தில் ஏற்பட்ட மற்றைய கோணங்களை ரசித்தான்.

“என் மகள் இதுவரை யாரைக் கண்டும் வெட்கப்பட்டதில்லை” என்றாள் அவள்தாய். இப்பொழுது அது கெட்டது என்று அறிந்தான்.

“எத்தனையோ கற்கள் விட்டு எறிந்திருக்கிறேன்; கற்கள் தாம் மிச்சம்; காய் கீழே விழுந்தது இல்லை” என்றார் வீட்டுக்கு உரியவர்.

“சமைக்கச் சமைக்கக் கொட்டி வச்சதுதான் மிச்சம்” என்று அதற்கு விளக்கம் தந்தாள் அவர் துணைவியார்.

இலைகள் எடுத்துப் போட்டனர்.

அந்த வீட்டில் மங்கலம் தங்கியது. அவள் மனைமாட்சியைப் பெற்றாள்; அவள் அன்னை அகம் மகிழ்ந்தாள்; தந்தை எடை கொஞ்சம் கூடிவிட மருத்துவர் பருக்காமல் கவனித்துக் கொள்ள அறிவுரை தந்தனர்.

“இரவிலேகூடச் சாப்பிடுவதில்லை” என்றார்.

“நல்லதுதான்”

“வெறும் பலகாரம்தான்; பத்து இட்லி எட்டுப் பூரி” என்றார்.

அவர் பூரிப்புக்கு அந்தப் பூரிகள் காரணம் இல்லை என்பது மருத்துவருக்குத் தெரியும்.

“ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும், போகப்போக மெலிவு ஏற்படும். பெண்ணைப் பெற்றவர் நிச்சயம் கண்ணைக் கசக்கும் நாள் வரும்” என்று கூறி மருத்துவர் “வேறு வைத்தியம் தேவையில்லை இளைக்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

எக்கச் சக்கமாக மாட்டிக் கொண்டோமே என்று வருத்தப்பட்டான்.

“பரவாயில்லை; அவளுக்கு எந்த விலையும் கொடுக்கலாம்” என்று மன நிறைவு கொண்டான்.

விட்டுப்பிரிய வேண்டுமே; தொட்டுத் தாலி கட்டியாகி விட்டது; அந்த வேலியைக் கடப்பது எப்படி? காலம் சிறிது காத்திருந்தான். மிகப் பொறுமையாக நடந்து கொண்டான்; சொல்லாமல், வீட்டை விட்டு வெளியேறினான்.

சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும்; ஊரைக் கூட்டிப் பஞ்சாயத்து வைத்திருப்பார்கள்.

“மாப்பிள்ளை ! உனக்கு என்ன குறை வச்சேன்; பெண்ணைக் கண்கலங்காமல் காப்பாற்றுவீர்கள் என்று தானே கட்டிக் கொடுத்தேன்; வேண்டுமென்றால் இன்னும் இரண்டு லட்சம் பொன் கேளுங்கள் தருகிறேன்” என்று அவர் பண நோக்கில் பேசித்தான் வாணிபன் என்பதைக் காட்டிக் கொள்வார்.

தாயோ என்றால் “என்னமோ, தெரியலை; இவள் எப்படி நடந்து கொண்டாளோ? மாப்பிள்ளை மனம் கோணும்படி நடந்து கொண்டாளோ” என்று வேறுவிதமாகக் கணக்குப் போட ஆரம்பித்து இருப்பாள்.

அவளோ என்றால் கயிற்றை உத்தரத்தில் மாட்டி வைத்துவிட்டுப் “பிரிந்தால் உயிர் தரியேன்” என்று பேச வாய்ப்பு உள்ளது; “நீங்கள் இங்கே திரும்பி வரும்போது என் எலும்பைத் தான் பார்ப்பீர்கள்; அது கூடக் கொளுத்தி விட்டு இருப்பார்கள்” என்று மிரட்டி இருப்பாள்.

அதனால்தான் இவன் சொல்லாமல் வெளியேறினான். அவர்களும் நாள் செல்லச்செல்ல அடங்கி அமைந்தார்கள்.

“மாலைவாரார் ஆயினும் காலை காண்குவம்; வருவர்” என்று அவள் மாதவியைப் போலத் தினம் தினம் சொல்லிக் கொண்டு நாட்களைக் கடத்தினாள்.

தக்க நாடு இன்னும் முடியவில்லை; வழிப்பயணத்தில் அவனுக்குத் தக்க துணைவன் ஒருவன் கிடைத்தான்.

“உன் மனைவியர் எனைவர்?” என்று புதியவன் கேட்டான்.

“நால்வர்” என்றான்.

அவன் சற்றுப் பொறாமையும் பட்டான்; பரிதாபமும் பட்டான்.

“ஏன் கஷ்டமா ?”

“நான் ஒருத்தியைக் கட்டிக்கொண்டு வேதனைப் படுகிறேன்” என்றான்.

“நால்வரை மணம் செய்து கொண்டால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள்; நாம் நிம்மதியாக இருக்க முடியும்” என்றான்.

“நால்வரும் ஒன்று சேர்ந்து விட்டால்”

நகைச்சுவையை உண்டாக்கியது.

தானம், சீலம், தவம், இறைவழிபாடு ஆகிய இந்நால்வர் சேர்ந்து நல்வினை என்ற ஒரு மகனைப் பெற்றுத் தருவர்; அதுவே வீடு பேற்றிற்குரிய வழியும் தரும்” என்றான்.

“இவன் பேசும் தத்துவம் அவனுக்குப் பிடிக்கவில்லை. நிஜத்துக்கு வரமுடியுமா?” என்றான்.

“தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி என நால்வர் என் மனைவியர்” என்றான்.

“அங்கங்கே அவர்களை விட்டு வைத்திருக்கிறேன். பிள்ளைகள் பிறக்கவில்லை” என்றான்.

“அளவோடு மனைவிகளைப் பெற்றால்தான் வளமோடு வாழ முடியும்” என்றான்.

அவன் மேலும் பேசினான், “தானம், தருமம், சீலம், இறைவழிபாடு இவை இந்தச் சின்னவயதில் தேவைதானா! வயதானால் பார்த்துக் கொள்ளலாமே” என்றான்.

“அப்படித்தான் பலபேர் நினைக்கிறார்கள். எங்கள் ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் அதிருஷ்டம்; கட்டினவள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டார்கள். எண்பது எட்டிப்பார்க்கிறது; பதினெட்டைத் தேடுகிறான்; வாங்கி வைத்தான்; பொட்டலத்தைப் பிரித்துக் கூட பார்க்க முடியவில்லை. அதற்குள் அவன் மருத்துவரின் கைப் பாவையானான்; அவர் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார். அவர் கைமீறிப் போய் விட்டது. மெய்தள்ளாடிக் கபம் கட்டிக்கொண்டது; அவர் சபம் சாயவில்லை. அவன் இளமையில் கேட்டிருக்கிறான். தானம் செய்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று; வீட்டில் பொன் முடிச்சு ஒன்று பத்திரப்படுத்தி இருந்தான்.”

“கடைசி நாட்கள் என்பதால் கருணை மிகுந்த சுற்றத்தினர் அவனை வந்து சுற்றிக் கொண்டனர். இப்பவோ பின்னையோ எப்பவோ என்று காத்துக் கிடந்தனர். தன் அன்புக்கு இனிய இளைய தாரத்தை அழைத்து “இதோ அதை எடு” என்று கையால் சைகை காட்டி அப்பொன் முடிச்சை எடுத்துவரக் குறிப்புக் காட்டினான்.”

“கயல்விழி படைத்த அந்த முயல் குணம் படைத்தவள் “ஐயா, விளம்பழமா கேட்கிறீர். இந்த நிலையில் உடம்புக்கு ஆகாதே” என்று சொல்லை மாற்றினாள். மற்றவர்களும் நம்பி விட்டார்கள். மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்றார்கள்.”

“இவள் மாதிரி தான் எல்லாரும் இருக்க வேண்டும்; எவ்வளவு பொறுமை! நினைத்தாலே அது பெருமை; அந்தக் கிழவன் கேட்டது எல்லாம் கொடுக்காமல் சிறுபிள்ளையைக் கண்டித்து வளர்ப்பது போல் அவரைக் கட்டுப்படுத்திக் காக்கின்றாளே இவளல்லவா சதி அனுசூயை, நளாயினி இவள் கால் தூசுக்குக் கூடப் பெற மாட்டாள்” என்று பாராட்டினார்கள். சதி அனுசூயை என்று ஏன் சொன்னார்கள் என்று தெரியவில்லை.”

“அப்புறம் அவன் தருமமே செய்ய முடியவில்லை. அவள் கருமமே வெற்றி கொண்டது; அவனுக்கும் அவள் கருமம் செய்தாள்” என்று பேசி இந்த மாதிரி விஷயங்களுக் கெல்லாம் கடன் வைக்கக் கூடாது என்று அவனுக்கு உணர்த்தினான். பின் அவனை விட்டுப் பிரிந்தான்.