சீவக சிந்தாமணி (உரைநடை)/சுரமஞ்சரியார் இலம்பகம்

9. சுரமஞ்சரி இலம்பகம்

அடிபட்ட மான் நொண்டிக் கொண்டே நடந்தது; காமன் அம்பினால் துளைக்கப்பட்டு வேதனை தாங்க முடியாமல் குணமாலையின் உயிர்த்தோழி சுரமஞ்சரி மோனத்தவம் செய்து கொண்டிருந்தாள். அசுவனி என்ற அந்த யானை மீது அவளுக்கு அடங்காத கோபம். போயும் போயும் இந்தக் குணமாலைதானா அதன் கண்களுக்குப் புலப்படவேண்டும். அது முரட்டு யானை மட்டும் அல்ல; குருட்டு யானையும் கூட தன்னையும் அப்படித் துாக்கி எறிந்திருந்தால் அவன் வந்து தாங்கி இருப்பானே என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள் அவள்.

கன்னிமாடத்தில் இதுபோல் அடிபட்ட மான்கள் பலர் அவளுக்குத் துணையாக இருந்தனர். காதலிலே தோல்வி அடைந்தவர் சரண் புகும் சரணாலயமாக இருந்தது. தனக்கு என்று அமைத்துக் கொண்ட அந்தக் கோட்டை அதன் ஒட்டை வழியே பல நோயாளிகள் வந்து அமைதி தேடினர்; சூடுபட்ட பூனை பால் குடிக்க அஞ்சுகிறது. பால் விருப்புதான்; இனிப்புதான்; என்றாலும் ஒரு முறை வாய்வைத்துக் குடித்து அது சூடுபட்டு விட்டது. அதே மனநிலையில்தான் சுரமஞ்சரி அந்த மாடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

வீட்டில் இருந்தால் அந்தச் சூழ்நிலை அவளுக்குப் பருவ நினைவுகளைத் துண்டியது. அவள் தந்தை ஒரு மாதிரி, வேளை நாழிகை பார்ப்பது இல்லை; ஆரம்பத்தில் தன் மனைவியிடம் காட்டிய அன்பையும் ஆசையையும் விளக்குத் திரிபோல் எரிய விட்டுக் கொண்டிருந்தார்.

மற்றும் அடிக்கடி சுற்றத்தினர் தெரிந்தவர்கள் திருமண இதழ்களைக் கொண்டு வந்து நீட்டிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எல்லாம் அவள் அந்த வீட்டுப் பிரச்சனையாகி விட்டாள்.

“என்னங்க உங்க பெண்ணுக்கு?”

“இந்தக் கேள்விகள் துளைத்துக்கொண்டே இருந்தன. இவளும் இளைத்துக் கொண்டே வந்தாள். காதல் தோல்வியுற்றவர்கள் புகும் சரணாலயத்தில் இவளும் புகுந்து கொண்டாள்.

அவளுக்குத் தன்னைப் பற்றியே ஒரு அச்சம். மறுபடியும் இது போன்ற மனத்தாக்குதல் வருமோ என்று அஞ்சி வைத்தியரிடம் காட்டினார்கள்.

“இவள் ஏதோ ஒர் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறாள்; மறுபடியும் இந்த மாதிரி அதிர்ச்சி வராமல் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டனர்.

மருத்துவ மனையில் நிரந்தரமாகத் தங்க முடியாது; அதற்காக அவள் நிரந்தரமாக அக்கன்னிமாடத்தில் வைக்கப்பட்டாள். பெற்றோர்களுக்கு ஏதோ ஒரு வகை மன நிம்மதி ஏற்பட்டது.

“வயது பெண் அது இஷ்டமாக விட்டு விடுவதுதான் நல்லது” என்று வந்த வரன்களை எல்லாம் தரமற்றவை என்று தள்ளிப்போட்டு வந்தனர்.

ஒட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற உஷாவாக இவள் பெயர் எடுத்தாள். வாழ்க்கையை விட்டு ஒடி எந்த ஆட வரையும் சந்திப்பதில்லை என்று விரதம் எடுத்துக் கொண்டவளாகப் பிரச்சாரம் செய்யப்பட்டாள்.

அடிக்கடி பெண் கேட்க வருபவரிடம்,

“அவள் அல்லி அரசாணி; அருச்சுனனுக்குத்தான் கழுத்தை நீட்டுவாள்” என்று சொல்லி வந்தார்கள்.

அவள் மட்டும் அடிக்கடி சுபத்திரைக்கு ஆள் அனுப்பி விசாரித்து வந்தாள்; அவள் குங்குமப் பொட்டுடன் பொலிவுடன் இருப்பதாக அறிந்தாள். அதனால் அருச்சுனன் தீர்த்த யாத்திரையில் இருந்து இன்னும் திரும்பி வரவில்லை என்று உறுதியாக இருந்தாள். தத்தையைக் கண்டவர் இந்தச் செய்தியை வந்து சொல்லிக் கொண்டிருந்தனர்.

தீர்த்த யாத்திரை முடிந்து வந்த அருச்சுனனிடம் அல்லியைப் பற்றி மெல்லக் கிளர்ந்தனர். அவன் தோழர்கள். அதற்கு வேண்டிய சூழ்நிலை வந்தது.

பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவது உண்டு; மார்பில் குங்குமம் அப்பிக் கொள்வது உண்டு; நானம் கமழ்வது உண்டு; இவன் மார்பு சிவந்து காணப்பட்டது.

“எந்தப் போர்க்களத்தில் இருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.

“இவள் நம் ஊர்ப் பெண்தான்; இதுவரை கவனிக்காதது என் தவறு தான்” என்றான்.

“நீ தொட்ட இடமெல்லாம் பொன் ஆகிறதே; எப்படி?” என்று கேட்டார்கள்.

“அவர்கள் விரும்புகிறார்கள் நான் என்ன செய்வது” என்றான்.

“நான் எவ்வளவோ முயற்சி செய்கிறேன்; ஒருத்தி கூடச் சீண்டமாட்டேன் என்கிறாளே” என்றான் புத்தி சேனன்.

“உன் மீது புளியோதரை வாசனை வீசும்; அய்யர் மகன் நீ அதனால் இந்த வாசனை” என்றான். அவன் பிறப்பைச் சுட்டிப் பேசினான்.

புத்திசேனனைத் தமிழில் அவர்கள் ‘அறிவு’ ‘அறிவு’ என்று கூப்பிட்டார்கள்.

‘அறிவழகன்’ என்று நீண்டிருந்த பெயர் குறுகி அறிவு ஆகியது. அடிக்கடி இப்படி ஏதாவது பேசித் தொளைப்பான்; அதனால் அதை ‘அறுவை’ என்று மாற்றி விட்டார்கள்.

“ஏண்டா” அல்லிக் குளத்துக்கு மட்டும் ஏன் போகத் தயங்குகிறாய்; நீச்சல் அடிக்கப் பயமா என்று கேட்டான்.

அவன் கூச்சல் கேட்டுப் பின் விவரம் அறிந்தான்.

“சுரமஞ்சரியா!”

“அது ஒன்று தான் பாக்கி, அதையும் முடித்து விடுகிறேன்” என்றான்.

“அப்படியானால் உனக்கு ஒரு ‘கலைமாமணி’ பட்டம் தருகிறோம்; விழாவும் எடுப்போம்” என்றான்.

“அதற்கு மதிப்பே இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறது”

“புதிய பட்டம்”

“காமதிலகன் என்று கூறுவோம்” என்றான் அறுவை.

மன்னர் திலகமாக வேண்டியவனை இப்படி அவர்கள் மடக்கிப் போட்டனர்.

சுரமஞ்சரியின் மூடிய கதவு திறக்க அங்கே ஒரு முதியவன் வந்து நின்றான்; அவன் அந்த ஊருக்குப் புதியவனாகவும் இருந்தான்.

“உன்னை யார் உள்ளே விட்டது” என்று அங்கே ஒரு குண்டுமணி தடுத்தாள்.

“பசி” என்றான்.

”இங்கே ஆடவர்கள் வரக்கூடாது. மகளிர் மட்டும்’ என்று போடப்பட்டுள்ள பேருந்தில் நீ எப்படி வரலாம்?” என்றாள்.

“முதலில் ஒட்டுநரையும் நடத்துனரையும் மாற்றுங்கள்” என்றான்.

“அம்மா ஆணை, எந்த ஆடவரையும் அனுமதிக்கக் கூடாது” என்றாள்.

“கிழவன்; மூப்பினால் தளர்ந்தவன்; என்னைக்கண்டு நீங்கள் இளம் பிஞ்சுகள் அஞ்சுகிறீர் என்றால் உங்கள் மனத் திண்மை உறுதி இதற்கு அர்த்தமே இருக்காது.”

“நிச்சயமாக யாரும் என்னைக் கண்டு மோகிக்க மாட்டார்கள்” என்றான்.

“காய்ந்த மாடு; கோரைப் புல்லையும் தின்னும்” என்று கூறி நகைத்தாள் அந்தக் குண்டுமணி.

இருவரும் சிரித்தனர்.

“சட்ட இலாக்காவுக்கு எழுதித்தான் அவர்கள் கருத்துக் கேட்டுப் பின்தான் உன்னை அனுமதிப்போம்” என்றாள்.

இந்தச் சிக்கல்களைத் தீர்க்க வாசலுக்கு அடுத்த அறையில் நிரந்தரமாக ஒரு வழக்கு அறிஞர் அமர்த்தப்பட் டிருந்தார். அவர் “பரவாயில்லை; உள்ளே விடலாம்; சட்டம் என்பது வெறும் எழுத்துக்கள் அல்ல; அதன் நோக்கம் அறிந்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்” என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார். அவர் உச்சிக் குடுமி வைத்திருந்ததால் அவர் சொற்களுக்கு மதிப்புத் தர வேண்டியது ஆயிற்று.

சீவகன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். சாப்பாடு போடப்பட்டது; வயிறார உண்டான்.

“தூக்கம் வருகிறதே” என்றான். படுக்கை அறைக்கும் அனுமதிக்கப்பட்டான்.

யாழ் எடுத்து இசை வாசித்தான்; அவ்வளவுதான்; அக்கம் பக்கத்து வீட்டு ஆண்கள் எல்லாம் இங்கே ஓடிவந்துவிட்டார்கள்; ஏன்? அவர்கள் மனைவிமார்கள் வீட்டில் இல்லை; அவர்கள் சிவனைக் கண்டு தெருவுக்கு ஓடிவந்த ரிஷிபத்தினிகள் ஆகிவிட்டனர்; எல்லோரும் இங்கே ஓடிவந்து விட்டார்கள் இந்த இசையைக் கேட்க

“இது அக்கிரமம்’ என்று கத்த ஆரம்பித்தார்கள். இதை விசாரிக்கச் சுரமஞ்சரி ஓடோடி வந்தாள்.

“இந்தக் கிழவன் இசை கேட்டு வீட்டுக்குமரிகள் அங்கே தம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கே இல்லை என்றதும் அவர்களுக்குத் திக்கென்று ஆகிவிட்டது. இங்கே வந்து குவிந்து விட்டார்கள்” என்று அறிவிக்கப்பட்டது.

அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. ஒருவாறாக அவரவர் தத்தம் வீடு போய்ச் சேர்ந்தனர்.

அங்கே சரண்புகுந்த சரணாலயங்கள் இந்த இசையைப் பாடுக என்று வேண்டினர். காய்ந்த நிலம் ஈரம் பட்டுத் தளிர்க்கத் தொடங்கியது. அவர்கள் நினைவுகள் பசுமையை நோக்கி நகர்ந்தன; அந்தக் கன்னிமாடம் மூட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. புல்லைத் தேடி மான்கள் வெளியேற நிச்சயித்து விட்டன.

அவர்கள் மீண்டும் மீண்டும் பாடவேண்டினர்.

சுரமஞ்சரி “இந்த வயதில் ஏன் இங்கு வந்தீர்?” என்று அவனைக் கேட்டாள்.

“குமரியாட” என்றான்.

“அதனால் என்ன நன்மை?”

“மூப்புப் போகும்” என்றான்.

இவள் வாய்விட்டுக் கேட்க வெட்கப்பட்டாள். அவன் பாடிய பாட்டு சீவகன்பாடிய பாட்டாக இருந்தது. அவள் குறிப்பறிந்து அவள் தோழியர்,

“எம் தலைவிக்காக ஒரு பாட்டு” என்றனர்.

“நீங்கள் என்ன தருவீர் அதைக்கேட்டு” என்றான்.

“வேட்டது தருவோம்” என்றனர்.

“எழிற்பாவை வேண்டும்” என்றான்.

“வைத்து விளையாடவா” என்றார்கள்.

“களித்து மகிழ்ந்திட” என்றான்.

“பொற்பாவை தானே; தருகிறோம் பாடு” என்றனர்.

அவன் சிவன்பாடிய சாம கீதத்தை யாழ் இசைத்துப் பாடினான். பாபநாசம் சிவன் அல்ல; பரமசிவன் பாடிய பாட்டு அது.

சுரமஞ்சரி அசுணப் பறவையானாள்; அந்த இசையில் மயங்கினாள்; நிறுத்தினால் அவள் உயிர் போகும் என்று இருந்தது; அவள் நினைவுகள் உணர்வுகள் துண்டப்பட்டன.

சீவகனை அப்படியே ஒடிப்போய் இறுகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று வேகம் கொண்டாள்; தாகம் நீடித்தது; இந்தக் கிழவன் சீவகனாக இருக்கக்கூடாதா என்று ஏங்கினாள்; துடிதுடித்தாள்.

“காமனை வேண்டிச் சாமகீதம் பாடி இறைவனை அடைவேன்” என்றாள்.

“நீ சென்று வழிபடு; உன்னை அங்கு வந்து ஆட் கொள்வான்” என்று சொல்லிவிட்டுச் சீவகன் விடை பெற்றான்.

சீவகனைப் பற்றிய சிந்தை அவளுக்கு மொந்தைக்கள் ஆகியது; அந்த மயக்கத்தில் அவள் தான் பேசுவது இன்னது என்று தெரியாமல் பிதற்றினாள்.

வந்தவன் யாரோ மந்திரவாதி என்று அங்கு இருந்தவர் பேச ஆரம்பித்தனர்; அவன் அவளுக்கு வெறி ஏற்றி விட்டான்; அவன் சாம்புராணி புகைபோடும்போதே தெரியும். இவளை ஆட்டி வைக்கப் போகிறான் என்று, சீவகனை மறந்து அவன் காற்றுப்படக்கூடாது என்று சன்னலை அடைத்துக் கொண்டவள் வெட்ட வெளியில் ஒட நினைக்கிறாள்; விட்டால் துணிகளைக் கிழித்துக் கொள்வாள்போல இருக்கிறது.

காமன் கோயிலுக்குச் செல்ல மறுத்தவள் அங்குப் போக வேண்டும் என்று வற்புறுத்துவதைக் கண்டு வியப்பு அடைந்தனர்; மணிமேகலைபோல அட்சயபாத்திரம் ஏந்தி ஆருயிர்க்கெல்லாம் இரங்கி மாபெரும் துறவியாவாள் என்று எதிர்பார்த்தனர். ஆட்டனத்தியை நினைத்து அலமந்த ஆதிமந்தி போலப் பேதுறுவது வியப்பைத் தந்தது.

ஆட்டன் அத்தி என்பவன் சிறந்த ஆடற்கலைஞன்; அவனைக் காதலித்தவள் ஆதிமந்தி என்ற அழகி, அவனைக் கடல் அலைகள் அடித்துக் கொண்டு போக அவனை நினைத்து அழுது அரற்றித் தெய்வத்திடம் முறையிட்டு அவனைத் திரும்பப் பெற்றாள் என்பது கதை; அத்தகைய ஆதிமந்தியின் நிலையை இவள் அடைந்துவிட்டாள் என்று தோழியர் பேசிக் கொண்டனர்.

எப்படியோ இவள் காமன் கோயிலுக்குச் செல்லப் போகிறாள் என்ற செய்தி பத்திரிகை நிருபர்களுக்குத் தெரிய அவர்கள் அன்றைய காலை ஏட்டில் இச்செய்தியை வெளியிட்டு விடவே மாலையில் சாலை இருபுறமும் தலைவர்களைக் காண நிற்கும் கட்சித் தொண்டர்களைப் போல இளைஞர்கள் அழகாக உடுத்திக்கொண்டு அங்கங்கே இடம் பிடித்து நின்றனர். சிலர் இடம் இல்லாமல் போகவே மரத்தில் ஏறிக் குரங்குகள் ஆயினர்; அவர்களுள் ஒருவனுக்குத் தவறி விழுந்து அடிபட்டது என்ற செய்தி மறுநாள் வந்தது.

காமன் கோயிலுக்கு முதியவர்கள் யாரும் செல்வதில்லை. பொதுவாகக் கன்னிப் பெண்கள்தான் அங்குச் சென்று வழிபடுவது வழக்கம்; அதற்காகவே அங்கு இளைஞர்கள் செல்வர்; தின்பண்டம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு சுற்றிக்கொண்டு நிற்பர்; இவளைப் பார்க்க வேண்டுமென்று கூட்டம் கூடிவிட்டது. கட்டியங்காரன் காவலர்களுக்கு அந்தக் கூட்டத்தைச் சமாளிப்பது அரும்பாடு ஆகிவிட்டது.

சுரமஞ்சரி வழிபட்ட கோயில் என்று அதற்கு இப்பொழுதும் கதை வழங்கப்படுகிறது. கலியாணமாகாத பெண்கள் அங்குச் சென்று ஆசை மரம் சுற்றிக் கல்லில் கயிறு கட்டித் தொங்கவிட்டு வருகிறார்கள். இப்பொழுதும் ஆண்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்.

பலத்த பாதுகாப்போடு அவள் உள்ளே சென்றாள்; அவள் நேருக்குநேர் மோதிக் கொண்டாள்; இடைத்தரகர் யாரும் இல்லை; அர்ச்சகர்கள் அந்தக் கோயிலில் அனுமதிக்கப்படுவதில்லை; ஏனெனில் பக்தர்கள் இறைவனிடம் வாய்விட்டு முறையிட முடிவதில்லை.

“காமனே! என் உயிருக்கு ஏமம் ஆகிய சீவகனைக் கொண்டு வந்து நிறுத்து; உனக்கு இங்கே பொன்னினால் ஆகிய தேரையும் கரும்பு வில்லுக்கு இரும்புப் பூணையும் செய்து தருகிறேன்; அம்மா ரதியே நீயாவது சீமான் காமனிடம் என் குறையைச் சொல்லக் கூடாதா?” என்று முறையிட்டாள்.

ஒரு குரல் எழுந்தது.

“பெண்ணே நீ கண்ணை மூடிக்கொண்டு போ; உன் எதிரே அவனே வந்து முட்டிக் கொள்வான்” என்று குரல் எழுந்தது.

தெய்வம் பேசியது.

இப்படிச் செய்திகள் அடுத்த நாளில் எங்கும் பரவின.

அவ்வளவுதான்; ஆத்திகர்கள் எல்லாம் கூடிக் கண்டனக் கூட்டம் நடத்தினர்.

“தெய்வம் பேசாது; இது ஏதோ மோசடி” என்று கண்டனக்குரல் எழுப்பினார்கள்.

இதற்கே இப்படி என்றால் கடவுளைக் கண்டேன் என்றால் யார் இந்த உலகத்தில் நம்பப் போகிறார்கள். அதனால்தான் கண்டவர்கள் இதுவரை வெளியில் சொன்னதில்லை என்று தெரிகிறது.

சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் திருமணம் நடந்தது; அவன்தான் சீவகன் என்ற செய்தி மறைக்கப்பட்டது. பெற்றோர்கள் நிச்சயித்த மணமகன் ஒருவனை அவள் விரும்பி மணம் செய்து கொண்டாள் என்று பேசும்படி வதந்தி பரப்பி விட்டார்கள்.

நண்பர்கள் அவனுக்குக் காமதிலகன் என்று பட்டம் சூட்டிப் பாராட்டினார்கள்.

“கோட்டைக்குள் எப்படி உள்ளே புகமுடிந்தது?” என்று அவனை ஒரு வினா கேட்டான் அறிவழகன்.

“கிழவனாகப் போய் உருமாறினேன்” என்றான்.

“அது எப்படி முடிந்தது?” என்று வியந்தனர்.

சுதஞ்சணன் கற்றுக் கொடுத்த மந்திரசக்தி இது; எனக்குக் கற்றுக் கொடுத்த இரண்டாவது மந்திரம்; தேவைப்படும் போது உருக்கரந்து மாறலாம்; எல்லாம் மந்திரம் தான்.

அந்தக் காலத்தில் ஒப்பனை செய்து கொள்ளத் தாடி இருந்தாலும் இவன் அதனை நாடவில்லை.

“மற்றொரு மந்திரம் என்ன?” என்று கேட்டனர். “மகளிர்க்கு நான் காமனாகக் காட்சி அளிப்பேன்” என்றான்.

“நீ உண்மையிலேயே காமன் தானே” என்று பாராட்டினர்.

சுரமஞ்சரி அவனிடம் பெருமையாகச் சொன்னாள்.

“தெய்வம் என்னிடம் பேசியது” என்றாள்.

அவன் சிரித்தான்.

“ஏன் உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டாள்.

“உண்மை உறுதியாக இருக்கும் போது நம்பிக்கைக்கு இடமே இல்லை” என்றான்.

அவளுக்கு வியப்பாக இருந்தது.

“எல்லாம் உங்கள் ஏற்பாடா?” என்று கேட்டாள்.

“அறிவழகன் அவன் தான் கோயில் உருவச்சிலையின் பின் குரல் கொடுத்தது. நாடகங்களில் பின்னால் இருந்து குரல் கொடுப்பது வழக்கம்; அந்த உத்திதான் அவன் புத்தியில் உதயமானது” என்றான்.

“வெளியே சொல்லாதீர்கள்” என்றாள்.

“கதவை மூடு” என்றான்.