சீவக சிந்தாமணி (உரைநடை)/பூமகள் இலம்பகம்
களத்தில் வீரர்களுக்குத் தலைமை தாங்கிய விசயனும், உலோகபாலனும் சீவகன் அரசு ஏற்கும் விழாவிலும் பங்கு ஏற்றனர். கலுழவேகன் நேரில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் அவன் பிரதிநிதிகளை அனுப்பி விழாவைச் சிறப்பித்தான்.
நாடு சுதந்திரம் அடைந்தது. “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று பாடி ஆரவாரித்தனர்.
சுதந்திரம் பெற்று விட்டால் மட்டும் போதாது; இந்த நாட்டைச் செம்மையுறக் காக்கும் பொறுப்பினை உணர்ந்தான். தேர்தல்கள் என்று வைத்து மக்கள் பிரதிநிதிகளை உட்காரவைத்து அவர்கள் நாட்டுக்கு ஆவன செய்வது தக்கது என்றாலும் அந்த முறைகள் அக்காலத்தில் இடம் பெறவில்லை என்பதால் இவனே தக்கவர்களை நியமித்து ஆட்சியைச் செம்மைப்படுத்தினான்.
நாடு நலமுற விளங்க வேண்டும் என்றால் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் தேவை என்பதை உணர்ந்து இவற்றைப் பெறத்தக்க வழிகளைத் தேடினான்.
உட்பகை வெளிப்பகை நேராதபடி தக்க காவலரை அமைத்துச் சட்டத்தை ஒழுங்கு படுத்தினான்; நீதியும் நேர்மையும் மக்கள் நல்வாழ்வும் அவன் பெரிதும் போற்றினான்.
தெய்வ நண்பனான சுதஞ்சணன் வந்து வாழ்த்துக் கூறினான்.
தன் மண்மீது கால் வைப்பதில் அவன் தறுகண்மை கொண்டான்; சித்திர மண்டபத்தில் கொலு வீற்றிருந்து ஆட்சி செய்தான் என்றாலும் அவனை ஆளாக்கி வீரன் ஆக்கியது ஆற்றங்கரையில் இருந்த ஆலமரமே, அங்கே அவ்வப்பொழுது சென்று பழைய நினைவுகளில் பொழுது போக்குவது உண்டு; அது நூறு வருஷங்களாக அங்கே இருந்து வருகிறது என்று சொல்லிக் கொண்டார்கள்; அங்கே மற்றவர்கள் தங்கி நிழல் பெற வேண்டிய வசதிகள் செய்து தந்தான்.
அரசு என்பது ஈட்டலும் ஈட்டியவற்றை வகுத்தலும் என்பது அறிந்து அவன் நாட்டுப் பொருளை அறவழிகளில் செலவிட வழி வகைகள் செய்தான். நாட்டில் தொழில் வளம் பெருக இளைஞர்களுக்கு மூலதனம் வழங்கினான்.
தன் நெருங்கிய தோழர்கள், உறவினர்கள் நண்பர்கள் என்பதற்காக அவன் பதவிகள் வழங்கவில்லை. அதற்காகவே அவர்களையும் ஒதுக்கவில்லை; தக்கவர்களுக்கும், அறிவு மிக்கவர்களுக்கும் செயலாற்றல் படைத்த செம்மல்களுக்கும் உயர் பதவிகள் தந்தான். அவர்களும் அதற்குத் தக்கபடி பொறுப்புடன் நடந்து கொண்டனர்.
தன் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளுக்குக் காரண மானவர்களை மதித்துச் சிலைகள் எழுப்புவதற்கு பதிலாக அற நிறுவனங்கள் என்ற பெயரால் அறச் செயல்களுக்கு ஆக்கம் தந்தான். சுதஞ்சணன், தன் தாய்க்கு உதவிய காடு உறை தெய்வம், அச்சணந்தி ஆசிரியர், தன் தாய் விசயமா தேவி, கந்துக்கடன், சுநந்தை, சீதத்தன் இவர்கள் பெயரில் மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் கட்டி மக்கள் மன நோய், உடல்நோய் நீக்க அமைத்துத் தந்தான்.
விசயமாதேவி தவப்பள்ளிகளைப் பெருக்கி அவற்றை ஆறுதல் இல்லங்கள் என்று பெயரிட்டுக் காணார், கேளார், கால் முடப்பட்டோர், முதியோர் இவர்கள் தங்கும் இட மாக மாற்றினாள்.
கன்னிமாடங்களில் தனிமையையே துணையாகக் கொண்டு வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிய இளம் பிஞ்சு களுக்குத் தக்க வாய்ப்பளித்து மணம் செய்வித்தும், பொருள் உதவி செய்தும் நல்ல குடி மக்களாக ஆக்கினான். தவசிகள் என்றும் யோகிகள் என்றும் சொல்லிக் கொண்டு தியானத் தில் மூழ்கியவர்களை இந்த உலகத்தில் அவர்கள் செய்யத் தக்க பணிகள் உள எனக் காட்டித் தொண்டு நிறுவனங் களில் பங்கு கொள்ளச் செய்து அவர்கல் வாழ்க்கையில் சுறுசுறுப்பை ஏற்படுத்தினான்.
அவன் இலக்கணையை மணந்தான் என்பதையும், எண்மரோடு வாழ்ந்தான் என்பதையும், ஒவ்வொரு வாழையும் ஒரு குலை ஈன்றது என்பதையும் சொல்வது கதைக்குத் துணை செய்யாது என்பதால் அவற்றை விவரிக்கவில்லை.
மூத்த மகனுக்குச் சச்சந்தன் என்று பெயரிட்டு அவனும் மளமள என்று வளர்ந்து பெரியவன் ஆனான் என்பது கதைக்குத் தேவையான செய்தியாகிறது. ஏனெனில் அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டி நந்தட்டனிடம் ஆட்சியை ஒப்புவித்து சீவகன் விடுதலை பெற்றான் என்பதைச் சொல்லியாக வேண்டியுள்ளது.
ஒரு செய்தி விடப்பட்டுவிட்டது. அநங்கமாலை என்ற பழைய சிநேகிதி அவனை வந்து பார்த்தாள்.
தான் அநங்கமாலையின் தோழி என்று தெரிவித்தாள்
அவன் சிரித்தான்.
“பழகியவரை மறக்கும் பண்பற்றவன் அல்லன்நான்” என்று சொல்லி அவளைத் தான் மறக்கவில்லை என்பதை வெளிப்படுத்தினான்.
அவன் அவளுக்கு ஒரு கலையரங்கு கட்டித் தந்து நாட்டியக் கலை கற்றுத்தரும் ஆசிரியை ஆக்கி உயர்வுபடுத்தினான். அது அனைவரும் அறிந்து பாராட்டும் செய்தியாக அமைந்தது. இராசமாபுரத்தில் அவன் தோற்றுவித்த கலைப்பள்ளி இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள்.