சுபத்திரையின் சகோதரன்/கொலை

"ராஜு, நீ தலைவிதி தலைவிதி என்ற போது நான் உன்னை மறுத்துப் பேசினேன். நீ கூறியதே சரி என்று இப்போது எனக்குப் புலனாகிறது. நாம் எவ்வளவோ முயற்சி செய்தோம். பயனென்ன? தலைவிதி வேறு விதமாயிருக்கிறது" என்றேன்.

ஊருக்குப் பக்கத்திலிருந்த ஆற்றங் கரையில் ஒரு தனிமையான இடத்தில் உட்கார்ந்திருந்தோம். மேற்குப் புறத்தில் சற்று தூரத்திலிருந்த அடர்த்தியான தென்னந் தோப்புகளுக்கு பின்னால் செம்பொற் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். ஆற்றில் அப்போதுதான் புதிய வெள்ளம் வந்திருந்தது. நீரில் எங்கே பார்த்தாலும் நுரையும், இலையும், பூவும் மிதந்தன. புள்ளினங்களின் இன்னிசையையன்றி வேறு சத்தம் எதுவுமில்லை.

இராஜகோபாலன் கலகலவென்று சிரித்தான்; அந்தச் சிரிப்பு எனக்கு அச்சத்தை விளைவித்தது. அது மனிதர்களுடைய மகிழ்ச்சிச் சிரிப்பாயில்லை. ஏதோ பேயின் சிரிப்பாகத் தோன்றிற்று.

"நல்லது தலைவிதியை ஏற்றுக் கொண்டாய், நானோ உன் பழைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தலைவிதி என்பது இல்லை. எல்லாம் மனிதப் பிரயத்தனமே" என்றான் இராஜகோபாலன்.

பாவம்! மனம் கசிந்துபோய் இப்படிப் பேசுகிறான் என்று நினைத்தேன். அவன் தலையை என் மடி மீது வைத்துப் படுக்கச் செய்தேன். "சுபத்திரையுடன் பேசினாயா?" என்று வினவினேன்.

"இல்லை, இல்லை, அவள் முகத்தைப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. உன்னை விட்டுப் பிரிந்து வீட்டுக்குச் சென்றேனல்லவா? நான் உள்ளே நுழைந்தபோது எல்லாம் முடிந்து ஆலாத்தி சுற்றிக் கொண்டிருந்தார்கள். என் வருகையை உள்ளுணர்வால் அறிந்து கொண்டாளோ என்னவோ, சுபத்திரை நிமிர்ந்து பார்த்தாள், என்னைக் கண்டுவிட்டாள். கலகலவென்று அவள் கண்களினின்றும் நீர் பொழிந்தது, ஆலாத்தியைச் சட்டென்று முடித்து, அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை" என்றான் என் நண்பன். மறுபடியும் முன் போல் சிரித்தான். அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. இன்னதென்று தெரியாத ஒருவகை அச்சம் எனக்கு உண்டாயிற்று.

"உனக்கு யாரும் சமாதானம் சொல்ல வில்லையா?" என்று கேட்டேன்.

"அதற்குக் குறைவில்லை. ஒவ்வொருவராக என்னிடம் துக்கம் கேட்க வந்தார்கள் - "பிராப்தம் இப்படி இருக்கும் போது வேறு விதமாய் நடக்குமா?" என்றார் ஒருவர். "ஒருவர் மனைவியை இன்னொருவர் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?" என்றார் இன்னொருவர். நேற்றிரவு முழுதும் உறக்கமில்லாமல் நமக்காகக் காத்துக் கொண்டிருந்தார்களாம். இன்று காலை எட்டு மணிக்குத்தான் வெள்ளத்தினால் ரயில் போக்குவரவு நின்றுவிட்டதென்று தெரியவந்ததாம். இனிமேல் வரமாட்டோ ம் என்று நிச்சயம் செய்து கொண்டார்களாம். அதற்கு மேல் ஊரிலுள்ள பிரமுகர்கள் எல்லாம் கூடியோசித்து, இந்த வருஷத்தில் இதுவே கடைசி முகூர்த்த நாள் ஆனபடியால், குறித்த முகூர்த்தத்தில் கணபதி ஐயருக்கே மணம் செய்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லையென்று தீர்ப்புச் சொல்லிவிட்டார்களாம்."

திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்தான். என் தோள்களைப் பிடித்துக் கொண்டு கண்களுக்கு நேரே உற்றுப் பார்த்து, "இதோ பார், தியாகு! ஆண்டவன் ஆணையாகச் சொல். இத்தகைய கொடுமைகளை இந்நாட்டிலிருந்து ஒழிக்க ஏதேனும் செய்யப் போகிறாயா, இல்லையா?" என்றான்.

"தலைவிதி தலைவிதி என்றிருப்பது பேதமை. என் அன்னையின் மரணத்துக்குப் பின்னர் அவ்வெண்ணம் எனக்கு அடியோடு மாறிவிட்டது" என்று தொடர்ந்து கூறினான்.

"உன் அன்னை உயிர் விட்டதால் என்ன பயன் விளைந்தது ராஜு? கடவுளுடைய சித்தம்..." "வேண்டாம், இந்தக் கொலை பாதகத்துக்குக் கடவுளுடைய பெயரை ஏன் இழுக்கிறாய்? இது கடவுளுடைய சித்தமானால் உலகில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் கடவுளுடைய சித்தமே. பொய்யும் புலையும், கொலையும் களவும், விபசாரமும் இன்னும் மகாபாதகங்களும் கடவுளுடைய சித்தமே. பின்னர், அவற்றையெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும்?"

"நான் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?"

"நமது சமூகத்தில் இரண்டு கொலை பாதகங்கள் இருக்கின்றன. கன்னி வயதில் கட்டாயமாகக் கல்யாணம் செய்துவிட வேண்டுமென்பது ஒன்று; இளம் வயதில், குழந்தைப் பருவம் நீங்கா முன்னர் கணவனையிழந்த பெண்களுங்கூடத் தங்கள் வாழ்நாள் முழுதும் கைம்பெண்ணாயிருந்து, வாழ்க்கையில் எவ்வித இன்பமுமின்றி, இடிபட்டுக் காலத்தைத் தள்ள வேண்டுமென்பது மற்றொன்று. பேச்சில் பயனில்லை. பருவமடைந்த மங்கையோ, இளம் கைம் பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்வதாக நீ பிரதிக்ஞை செய்வாயா?"

சற்று யோசனை செய்தேன். பின்னர், "ராஜு இந்த வாழ்க்கையில் இனிக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. சுபத்திரையை நினைத்த மனம் வேறு பெண்ணைக் கருதுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், என் மனம் எப்போதேனும் மாறுதலடைந்து கல்யாணம் செய்துகொள்ளத் தீர்மானித்தால், பருவமடைந்த மங்கையையாவது, கன்னி வயதிலேயே கைம்பெண்ணானவளையாவது மணம் செய்து கொள்வதாகப் பிரதிக்ஞை செய்கிறேன்" என்று பதிலளித்தேன். மாலை வேளைப் பூசைக்காகக் கோயிலில் ஆலாட்சிமணி அடிக்கும் சத்தம் "ஓம் ஓம் ஓம்" என்று ஒலித்துக் கொண்டு மேலக் காற்றில் வந்தது.

அன்றிரவு இராஜகோபாலனுடைய நண்பர் ஒருவருடைய வீட்டில் உணவருந்திவிட்டு அவர் வீட்டுத் திண்ணையிலேயே படுத்துக் கொண்டேன். மறுநாள் அதிகாலையில் எழுந்து சென்னைக்குப் புறப்பட்டுவிட உத்தேசித்தேன். உறக்கம் பிடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேனென்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா? வீதி வழியாகப் போவோர் வருவோர் எல்லாம், என்னைச் சுட்டி ஏதேதோ பேசிக் கொண்டு போனார்கள். ஆனால், எனக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை உண்டாகவில்லை. கண்ணீர் ததும்பி ஓடும் சுபத்திரையின் வதனமும் அச்சத்தை ஊட்டும் இராஜகோபாலனின் சிரிப்பும் என் மனக்கண் முன்பு மாறி மாறி வந்து கொண்டிருந்தன. சென்னையில் இராஜகோபாலனை விட்டுப் பிரிந்த அன்று கண்ட கனவு அப்போது நினைவிற்கு வந்தது. என் உடம்பு நடுங்கிற்று. அந்தக் கனவு பொய்யாகிவிட்டதே என்று எண்ணினேன். ஆனால் அடுத்த கணத்தில்...ஓ! எத்தகைய பயங்கரமான உண்மையாயிற்று?

கலகலவென்ற சிரிப்புச் சத்தம் கேட்டுத் திடுக்கென்று எழுந்து உட்கார்ந்தேன். இராஜகோபாலன் திண்ணையின் ஓரமாக நின்று கொண்டிருந்தான். "தியாகு, செய்தி கேட்டாயா?" என்றான். அவன் குரலில் ஏன் அந்த மாறுதல்? "என்ன செய்தி?" என்று கேட்டேன். "என் தாயார் வந்து என்னைக் கூப்பிடுகிறாள், அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பாதியளவே நிறைவேற்றி வைத்திருக்கிறேன் என்றும், பாக்கிப் பாதியையும் நிறைவேற்றிவிட்டுச் சரியாக இன்னும் ஒரு வருஷத்தில் வருகிறேன் என்றும் பதில் சொல்லுகிறேன். நீ கொஞ்சம் சிபார்சு செய்யேன்" என்றான். மறுபடியும் அந்த அச்சம் தரும் சிரிப்பு. மங்கலான நிலவின் ஒளியில், அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன். கண்கள் "திரு திரு"வென்று விழித்தன. அப்போது சட்டென்று உண்மை புலனாயிற்று. கொடிய நாகப்பாம்பு ஒன்று என் நெஞ்சைத் துளைத்து ஊடுருவிச் செல்வது போல் இருந்தது. என் ஆருயிர் நண்பன் 'அருமைத் தோழன்' பித்தனாகிவிட்டான்! அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின் ஆணைகாட்டில் அனலை விழுங்குவோம்

என்று அவன் உரக்கப் பாடினான். பின்னர் சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "தியாகு, உன் நண்பனுக்கு நீ அளித்த பிரதிக்ஞையை நிறைவேற்றி வைப்பாயல்லவா?" என்றான். நான் பதில் சொல்வதற்குள் மீண்டும் "குள்ளநரியைப் பலி கொடுத்தாய்விட்டது உனக்குத் தெரியாதா?" என்று கேட்டான். இவ்வளவுடன் திண்ணையின் தூணில் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழலானான். நான் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கையில் சற்று நேரத்துக்கெல்லாம் ஐந்தாறு பேர் நாங்களிருந்த திண்ணைக்கு வந்தார்கள். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து கல்யாண மாப்பிள்ளை கணபதிஐயர் மரணாவஸ்தையிலிருப்பதாகவும், டாக்டர்களையும் போலீஸ்காரர்களையும் அழைத்து வருவதற்கு மன்னார்குடிக்கு ஆட்கள் போயிருப்பதாகவும் தெரிந்து கொண்டேன். அன்றிரவு, மாப்பிள்ளை சாப்பிட்டானது கொஞ்சம் தலைவலிக்கிறது என்று சொல்ல, இராஜகோபாலன் உடனே ஏதோ மருந்து கொண்டு வந்து கொடுத்தானென்றும் அதை மாப்பிள்ளை சாப்பிட்டதும் இராஜகோபாலன் பித்தன் போல் கூறிய மொழிகளிலிருந்து அருகிலிருந்தவர்களுக்குச் சந்தேக முண்டாயிற்றென்றும், சில நிமிஷங்களுக்கெல்லாம் மாப்பிள்ளைக்கு உடம்பு அதிகமாகிவிட்டதென்றும் அறிந்தேன். இப்போது எனக்கு எல்லாம் தெளிவாக விளங்கிவிட்டன. சாயங்காலம் என் நண்பன் "தலைவிதி கிடையாது" என்று சொன்னபோது இத்தகைய தீர்மானத்தை மனதில் வைத்துக் கொண்டே சொல்லியிருக்க வேண்டும். அன்னை உட்கொண்டு பாக்கியிருந்த விஷத்தை இப்போது இராஜகோபாலன் உபயோகப்படுத்திவிட்டான். அன்னையைப் போலவே அவனும் தன் உயிரைக் கொடுத்திருப்பான். ஆனால், திருமாங்கல்ய தாரணம் எப்போது ஆகி விட்டதோ, 'இனி, அவன் உயிரை விடுவதால் என்ன நடக்கும்? எனவே, பின்னால் சுபத்திரையின் கதி எப்படியானாலும், இப்போது அவளை விடுதலை செய்து விட வேண்டுமென்று தீர்மானித்தான் போலும்! என்னிடம் அவன் வாங்கிக் கொண்ட வாக்குறுதியின் கருத்தும் இப்போது எனக்குத் தெளிவாயிற்று.

அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம், கனவில் கண்டன போலவே எனக்கு இன்னமும் தோன்றுகின்றன. அப்போது நான் திக்பிரமை கொண்டவன் போல் காணப்பட்டேனென்றும், எனக்கும் எங்கே பித்துப் பிடித்துவிடப் போகிறதோ என்று என் தந்தை பயந்தாரென்றும் பின்னால் தெரியவந்தன. ஆகவே அந் நிகழ்ச்சிகளைப் பற்றி விவரமாக என்னால் கூற முடியாது. அன்றிரவு போலீஸ்காரன் வந்ததும் என்னையும் இராஜகோபாலனையும் கைது செய்து மன்னார்குடிக்கும், பிறகு தஞ்சாவூருக்கும் கொண்டு போனதும், என் தந்தைக்கு தந்தி அடித்து வரவழைத்ததும், கணபதி ஐயரை விஷங் கொடுத்துக் கொலை செய்த குற்றத்திற்காக இராஜகோபாலன் மீதும், அவனுக்கு உடந்தையாயிருந்த குற்றத்துக்காக என்மீதும், வழக்குத் தொடர்ந்து, விசாரணை சுமார் ஒரு மாதம் நடந்ததும், கடைசியில் இராஜகோபாலன் பித்தன் என்ற காரணத்தால் அவனுக்குத் தூக்குத் தண்டனையில்லாமல் ஆயுள் பரியந்தம் சிறைவாசத் தண்டனை விதித்ததும், நான் குற்றமற்றவன் என்று விடுவிக்கப்பட்டதும், எல்லாம் முற்பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகளோவென்று சந்தேகிக்கும் வண்ணம் என் உள்ளத்தில் தெளிவின்றித் தோன்றுகின்றன. எனவே அவற்றைப் பற்றி விரிவாகக் கூறாமல் விட்டுப் போவது குறித்து மன்னிப்பீர்களாக.