சுயம்வரம்/அத்தியாயம் 8

‘எங்கேஜ்ட்’ ஆட்டோவிற்கும் டாக்சிக்கும்
மட்டும்தானா? ‘டீன் ஏஜ்’ ஆண்களுக்கும்
பெண்களுக்கும் அது இல்லையா?…

 8 

ன்னை யார் கைவிட்டாலும் கைவிடாவிட்டாலும் தன் உயிரை இந்த மதனா கைவிட மாட்டாளாமே?...

என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு

இப்படிப்பட்டவளிடமிருந்து அந்த மாதவனைப் பிரித்து, அவனைத் தான் அடைவது சாத்தியமா?...

சாத்தியமோ இல்லையோ, அதற்காக அவனுடைய விருப்பத்துக்கு அவனை விட்டுவிடுவதா? அதே மாதிரி, இவளுடைய விருப்பத்துக்குத்தான் இவளை விட்டுவிடுவதா?

அப்படி விடுவதாயிருந்தால் அன்றே, இவர்கள் இருவரும் கலியாணம் செய்துகொண்ட அன்றே விட்டிருக்கலாமே? அன்றிரவே இவர்களைப் பிரித்து வைக்க முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாமே?

இந்த ஆனந்தன்...

இவனுக்கு மதனாதான் வேண்டுமென்பதில்லை; யாராவது ஒர் ஆண் பிள்ளை வேடிக்கைக்காகப் புடவையைக் கட்டிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால் கூடப் போதும், அவனை இவன் மோப்பம் பிடித்தபடி, அவனுக்குப் பின்னாலேயே போய்க்கொண்டிருப்பான்!

வாழ்க்கை எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமாகத் தோன்றுகிறது; இவனுக்கோ அது ஒரு விளையாட்டாகத் தோன்றுகிறது.

இவன்தான் இதுவரை எத்தனை பெண்களைக் காதலித்திருக்கிறான்!

கல்பனா, காதரைன், ஜெயஸ்ரீ, சோபனா, சோனியா, சுபஸ்ரீ, நளினி, நவீனா, ஜெயந்தி, யாஸ்மின், பாத்திமா, ரோஸ், மும்தாஜ், மல்லிகா, மனோரஞ்சிதம், அம்முகுட்டி...

அப்பப்பா! எத்தனை பெண்கள், எத்தனை பெண்கள்!

'காதலுக்கு ஜாதியில்லை, மதமும் இல்லையே' என்று யாரோ ஒரு சினிமாக்கவிஞன் பாடினாலும் பாடினான், இவன் அதை அப்படியே பின்பற்ற ஆரம்பித்துவிட்டானே?

காதலுக்கு ஜாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம். ரொம்ப சரி; அதற்காக மனமும் மானமும் கூடவா வேண்டாம்?...

அதிலும், ஒரு சமயம் தன்னை நம்பி வந்த அந்தக் கல்பனாவை ஏதோ ஒரு வெளியூருக்கு அழைத்துக்கொண்டு போய், அவளை அங்கேயே விட்டுவிட்டு, இவன் மட்டும் இங்கே திரும்பி வந்து சொன்ன அந்தப் பொன் மொழிகள்'...

'யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை; எல்லாரும் கடவுளை நம்பித்தான் பிறந்திருக்கிறோம். ஆகவே, என்னை நம்பித்தான் கல்பனா பிறந்திருக்கிறாள் என்று சொல்வதும், அவளை நம்பித்தான் நான் பிறந்திருக்கிறேன் என்று சொல்வதும் சுத்த ஹம்பக்!'...

இந்தப் 'புது மொழி'யை மட்டுமா அவன் அன்று உதிர்த்து வைத்தான்?

'எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகத்தில் மனைவி என்று ஒருத்தி மட்டும் ஏன் ஒருவனுக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை!'...

ஆனால் ஒன்று மட்டும் இவனுக்குப் புரிகிறது; அதுதான் ஏமாந்தால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிப்பது! - இல்லை, வேட்டையாடுவது!

புகழ் பெற்ற பிரம்மசாரிகளில் சிலர், ஊருக்கு ஒரு பிள்ளையாகப் பெற்று வைத்துவிட்டு, 'நான் இன்னும் பிரம்மசாரிதான்' என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்களே, அந்த மாதிரி!

எவ்வளவு பெரிய மனிதனாயிருந்தாலும், அவன் தன் பலவீனத்தை மறைக்க முடியாத ஓர் இடம் இந்த உலகத்தில் உண்டு; அதுதான் பெண்கள் இருக்கும் இடம். அந்த இடத்தைக்கூட வென்றுவிடும் பண்பு மாதவனிடம் இருக்கிறது. ஆனந்தனிடமோ?...

அதுதான் இல்லை!

இவன் இவ்வளவு மோசமானவன் என்று தெரிந்திருந்தும், மதனாவிடமிருந்து அந்த மாதவனைப் பிரிப்பதற்காக இவனுடைய உதவியைத் தான் நாடினால், இவன் தன்னுடன் பேசுவதோடு நில்லாமல், தன்னையும் தொட்டுப் பார்க்கவல்லவா தொடங்கி விடுகிறான்?...

இவனிடம் ஏமாறுகிறவளா, நான்?

இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லையே என்னால்?....

என்ன செய்வது? இந்த மதனாவை அவனுடன் எப்படியாவது ஒரே ஒரு நாள், அல்லது ஒரே ஒரு இரவு கூட்டி அனுப்பி வைத்துவிட்டால் போதும், அந்த மாதவனை இவளிடமிருந்து பிரித்து விடலாம். அதற்குப்பின் அவனைத் தான் அடைவது அப்படியொன்றும் சிரமமாயிராது.

அது நடக்காவிட்டால்?...

'நடக்காவிட்டால்?' என்ன, 'நடக்கவே நடக்காது' போல் இருக்கிறதே, இவளிடம்?

ஒருத்தியைக் கெடுத்து இன்னொருத்தி வாழ நினைப்பது நீதிக்கு விரோதமாயிருக்கலாம். எத்தனையோ பேர் விஷயத்தில் தூங்கிவிடும் அந்த நீதி, தன் விஷயத்தில் மட்டும் தூங்காமல் அல்லவா இருக்கிறது? அதற்காகவே அதைக் கொஞ்சம் தூங்க வைத்தால் என்னவாம்?...

என்னதான் மறக்க முயன்றாலும் மறக்க முடியாத அந்த மாதவனின் முகம்; யாரையும் புண் படுத்தாமல் சிரிக்கச் சிரிக்கப் பேசும் அவனுடைய பேச்சு; தன்னை யாராவது தாக்கிப் பேசினாலும் எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, 'சரி, முடிந்ததா? நான் வரட்டுமா?' என்று அவரிடமே சிரித்தபடி விடைபெற்று, அந்த எதிரியையே வெட்கப்பட வைக்கும் இனிய சுபாவம்; பிறரைப் பற்றித் தன்னிடம் யாராவது வந்து ஏதாவது சொன்னால்கூட 'கிடக்கிறான், விடுங்கள்!' என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுச் செல்லும் அந்தப் பெருந்தன்மை; மதனாவைத் தவிர வேறு எந்தப் பெண் தன்னை வளைய வந்தாலும், 'சாரி, ஏற்கெனவே நான் எங்கேஜ்ட்!' என்று சிரித்துக்கொண்டே சொல்லி, 'நான் ஒண்ணும் உங்களை வளைய வரல்லே; நானும் ஏற்கெனவே எங்கேஜ்ட்தான்!' என்று அந்தப் பெண்ணையே வீறாப்புடன் சொல்ல வைத்து, அவளிடமிருந்து தான் தப்பிவிடும் அந்தத் தந்திரம்!...

ஆகா நினைக்க நினைக்க இனிக்கும் அவனுடைய காதலுக்காக ஒரு பெண் தன்னுடைய காலமெல்லாம் காத்திருக்கலாம் போல் இருக்கிறதே?

ன்றிரவு மதனாவைப் பற்றியும், ஆனந்தனைப் பற்றியும், மாதவனைப் பற்றியும் அருணா இப்படியெல்லாம் எண்ணிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது, "என்ன, தூக்கம் வரவில்லையா?" என்றாள் மதனா.

"எனக்கு மட்டுமா தூக்கம் வரவில்லை? உனக்கும்தான் தூக்கம் வரவில்லை போலிருக்கிறதே!" என்றாள் அருணா.

"எனக்குத் தூக்கம் வராமலிருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன; உனக்கு...?"

"அதில் பாதியாவது இருக்காதா?"

"இருக்கட்டுமடி யம்மா, இருக்கட்டும்' என்று கையைத் தூக்கிக் காட்டி அவளை ஆசீர்வதிப்பது போல் ஆசீர்வதித்துவிட்டு, அப்படியே திரும்பிப் படுத்தாள் மதனா.

"வெறுமனே திரும்பிப் படுத்தால் தூக்கம் வந்து விடுமா? இந்தா, இந்தத் தலையணையையாவது மாதவன் என்று நினைத்துக்கொண்டு மார்போடு அணைத்துக்கொள்!" என்று அவள்மேல் ஒரு தலையணையைத் தூக்கிப் போட்டாள் அருணா.

"ஏன், இதை நீதான் ஆனந்தன் என்று நினைத்து அணைத்துக் கொள்ளக் கூடாதா?" என்று அதே தலையணையை அருணாவின் மேல் தூக்கிப் போட்டாள் அவள்.

இவள் சிரித்து, "தெரியும்டி யம்மா, தெரியும்" என்றாள்.

"என்ன தெரியும்?" என்றாள் அவள்.

"ஆனந்தனை எனக்குப் பிடிக்காதென்று தெரிந்திருந்தும் நீ ஏன் அவன் பெயரைச் சொல்லிக்கொண்டு இந்தத் தலையணையைத் தூக்கி என்மேல் போடுகிறாய், தெரியுமா?' வெறும் தலையணையைத் தூக்கிப் போட்டு நான் என்னடி செய்ய? எனக்காக நீயாவது போய் அந்த மாதவனை அழைத்துக்கொண்டு வரக்கூடாதா?' என்கிறாய்; அப்படித்தானே? கொஞ்சம் பொறு; பொழுது விடியட்டும் நானே போய் அவன் காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து இங்கே நிறுத்துகிறேன்!" என்றாள் இவள், தன்னை மறந்து.

அவள் சிரித்து, "சாயந்திரம் ஆனந்தனோடு போகச் சொன்னாய்; இப்போது மாதவனை அழைத்துக்கொண்டு இங்கே வருகிறேன் என்கிறாய், இவற்றில் எதை நம்புவது நான்?" என்றாள்.

சட்டென்று உதட்டைக் கடித்துக்கொண்ட அருணா, "அடி, பாவி! அதை நிஜமென்றே நம்பிவிட்டாயா நீ?" என்றாள், 'கலகல'வென நகைத்து.

"பின்னே பொய்யா?" என்றாள் மதனா, குழம்பி.

"சந்தேகமில்லாமல், அதைவிட நானே உனக்கு அந்தப் பிரசித்தி பெற்ற ஒரு துளி விஷம், ஒரு முழம் கயிறு, ஒரு பாழுங்கிணறு - இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேடிக் கொடுத்துவிடுவேனே!"

"அப்படியானால் நேற்று நீ சொன்ன அந்தத் திரௌபதி கதை...?"

"அதுவும் அந்த ஆனந்தன் சொன்னதுதானே! அதை எப்படி அப்படியே நம்பிவிட முடியும்?"

"அப்படியானால்..."

"நானும் ஆனந்தனை நம்பவில்லையடி, நம்பவில்லை "

அருணா இப்படிச் சொன்னாளோ, இல்லையோ, அவளை அப்படியே தாவி அணைத்துக்கொண்டு, "கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உன்னைப் பற்றி நான் என்னவெல்லாம் நினைத்து விட்டேனடி!" என்றாள் மதனா, கண்களில் நீர் ததும்ப.

"அடி, அசடே! அதற்கா அழுகிறாய்? என்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் என் வழி எப்போதும் நேர் வழியாய்த்தான் இருக்கும் என்பது என்னுடன் இத்தனை நாட்கள் பழகியுமா உனக்குத் தெரியவில்லை?" என்று அவள் கண்ணீரைத் துடைத்து, அவளுடைய கன்னத்தில் ஒரு செல்லத் தட்டும் தட்டிச் சிரித்தாள் அருணா.

இந்த உலகத்தில் அவள் மட்டும்? மனித வர்க்கமே இரட்டை வேடம் போட்டுக்கொண்டுதானே வாழ்கிறது?

பொழுது விடிந்தது; சொன்னது சொன்னபடி மாதவன் வீட்டுக்கு அவசரம் அவசரமாகப் புறப்பட்டாள் அருணா.

"அவரை இங்கே அனுப்பிவிட்டு நீ அப்படியே ஆபீசுக்குப் போய்விடுவாயா?" என்றாள் மதனா, அவளைப் பரிபூரணமாக நம்பி.

"ஊஹும்; முதலில் அந்த மனுஷனைக் கொண்டு வந்து இங்கே சேர்த்துவிட்டுத்தான் ஆபீஸ் கீபீஸ் எல்லாம்" என்றாள் அவள்.

"என்னால் உனக்கு எவ்வளவு சிரமம்" என்றாள் இவள்.

"சிரமத்தைப் பார்த்தால் முடியுமா? என்னதான் யோக்கியர்களாக இருந்தாலும் ஆண்களை இந்தப் பெண்கள் விஷயத்தில் மட்டும் நம்ப முடியவில்லையே!" என்று கொஞ்சம் 'பொடி' வைத்து ஊதிக்கொண்டே சென்றாள் அவள்.

இத்தனை முன்னேற்பாட்டுடன் அங்கே சென்ற அருணா, மாதவனை வெளியே அழைத்து, அவனிடம் பரம ரகசியமாகச் சொன்னது இது:

"மதனாவைக் காணோம்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_8&oldid=1673074" இலிருந்து மீள்விக்கப்பட்டது