சுழலில் மிதக்கும் தீபங்கள்/15

15

ஏதோ நினைத்துக்கொண்டவளாக அவள் வராந்தாவுக்கு வந்து கீழே பார்க்கிறாள். அந்த முன் வாயில் நடை பாதையை ஒட்டி, ஒரு கூட்டம் கூடியிருக்கிறது. சைக்கிள்கள் ஸ்கூட்டர்கள் போகவில்லை.

ஏதேனும் விபத்தா?...ஆனால் விடுதிச் சுற்றுச்சுவருக் குள்ளும் கூட்டம் நிறைந்திருக்கிறது?

கப்பென்று நெஞ்சைப் பிடித்துக்கொள்கிறது ஓர் அச்சம்

ரத்னாவும் ஆனியும் ஏதேனும் விபத்தில்... கதவைப் பூட்டிக்கொண்டு பரபரவென்று விரையும் போது, படிகளில் உதிரிகளாகப் பெண்கள்; இந்தியிலும் ஆகிங்லத்திலும் பரிதாபச் சொற்களின் பிசிறுகள்.

“க்யாஹவா? கெளன்...”

“ஒ, ருனோ......ஸி ஜம்ப்ட் ஃப்ரம் த ஸ்கன்ட் ஃப்ளோர்.”

“ருனோ?...அவளை இப்போதுதானே வெளியிலிருந்து வரும் போது மூன்றாம் மாடிப் படிகளில் சந்தித்தாள்?... ருனோ...இன்றைக்கெல்லாம் இருந்தால் இருபது வயதிருக் குமா?...இளமை மாறாத முகம். எங்கோ ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்ததாகச் சொல்வார்கள்...

எதற்காக இந்த நேரத்தில் மாடியிலிருந்து குதித்தாள்? போதையா? தெரியாமல் செய்து விட்டாளா?

ஆண்டவனே, ஆண்டவனே என்று மனம் கூவுகிறது. ஆணியும் ரத்னாவும் ஒருகால் அங்குதானிருப்பார்கள்...கீழே போய்ப் பார்க்கிறாள்.

ஆனியைக் காணவில்லை. ரத்னா உயரமாக இருக்கிறாள். கூட்டத்தைப் பின்னால் போகும்படி விலக்கிக் கொண்டிருக்கிறாள்.

குப்புற விழுந்தவளுக்கு முதல் சிகிச்சை செய்து கொண்டி ருக்கிறார்கள் இரு பெண்கள்.

சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டிகள் தென்படுகின்றன. ரத்னா இவளைப் பார்த்து விட்டு ஓடி வருகிறாள்.

‘கிரி...அன்ஃபார்ச்சுனேட்...நாங்க வர கொஞ்சம் நேரமாகும். நோ ஹோப்...பிழைப்பான்னு தோணலே...’

வெரி ஸாரி கிரி...பெரிய இடத்துப்பெண். அம்மா இல்ல. அப்பா ஒரு குடிகாரன். மட்டமான ஆள். இதைக் கவனிக்கிறவர் யாருமில்ல. வீட்டிலே வேற ஒரு பெண் பிள்ளையைக் கொண்டு வச்சிட்டான். இது பாய்ஃப்ரண்ட் அது இதுன்னு கெட்ட பழக்கங்களுக்கெல்லாம் அடிமையாயிட்டது. இப்ப பாரு, பாய்ஃப்ரண்ட் வந்தானாம். அவங்க கூடப் பேசிட்டு வெளியே நின்னாளாம். எல்லாரும் பார்த்தேங்கறாங்க...”

“நான்கூடப் பார்த்தேன் ரத்னா...வேகமாகப் படியிறங்கிப் போனாள்...”

“ரொம்பக் கஷ்டமா இருக்கு...பை த பை வாசலில் கார் நின்னுது. உன் ஹப்பி இருந்தான். மாமியார் மேல வந்தாளா?

“ஆமாம். எல்லாம் குடுத்துட்டா...”

“ஒ. கே. நான் வரேன்...நீங்க போயி ரெஸ்ட் எடுத்துக்குங்க!” ரத்னா விரைகிறாள்.

உடலை எடுத்துக் கொண்டு சென்ற பின்னரும் பெண்கள் ஆங்காங்கு நின்று அவளைப் பற்றியே பேசுகிறார்கள்...