சுழலில் மிதக்கும் தீபங்கள்/3

3


பகல் மூன்றடிக்கப் போகிறது. மாவரைக்கும் கிரைண்டர் பழுதாகிக் கிடக்கிறது. ‘எலெக்ட்ரிஷிய’னுக்கு நேரில் போய்ச் சொல்லிக் கூப்பிட்டு வரவேண்டும். நேரமில்லை.

அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்து, தேன் குழல் பிழிந்து கொண்டிருக்கிறாள் கிரி. ரத்னா சற்றே படுத்து எழுந்து முற்றத்துத் துணிகளை எடுத்து மடிக்கிறாள். ரோஜா மாமி வருகிறாள் போலிருக்கிறது. இலேசான வெளிநாட்டு ‘சென்ட்’ மணம் காற்றில் தவழ்ந்து வருகிறது.

சமையலறையிலிருந்து வெளிப்பட்டு, கிரி சாப்பாட்டுக் கூடம் கடந்து மொட்டை மாடிக்குச் செல்லும் வாயிலில் நின்ற படியே பார்க்கிறாள். அங்கிருந்து பார்த்தால் மாமியார் அறை தெரியும். மருதோன்றிச் சிவப்பில் பட்டுச் சேலை தெரிகிறது. இவள் மட்டும் வந்தால் நேராக மாமியாரின் அறைக்குப்போய் விடுவாள். பிரதான வாசலில் வந்து மணியடிக்கும் சமாசாரம் கிடையாது. அந்த அறைக்கு மாடிப்படியில் இருந்து நேராகப் போய்விடலாம்.

“இப்ப மூணு நா சேர்ந்தாப் போல லீவா இருந்தது. போக முடியல, எங்கும். யாராரோ வெளிலேந்து வந்திருக் காப்பல. அசைய முடியாதுன்னுட்டார். அடுத்த வாரம் தான் பார்க்கணும்...”

“எனக்குக்கூட பார்க்கணும்னு இருக்கு எல்லாத்துக்கும் குடுப்பின வேணும் ரோஜா. நினைச்சாப்பல எங்க நடக்கறது.”

“உங்களுக்கென்ன பாட்டி, சாமு வந்ததும் கார்லயே ஒரு நடை போயிட்டு வந்துடலாமே? இல்லாட்டா இருக்கவே இருக்கு எங்க கூட வந்துடுங்கோ!”

“என்னமோ, பெத்த பெண்ணுக்கு மேல நீதான் கவனிச்சிக்கிற?”

“இது என்ன பிரமாதம்? உங்களப் பார்க்கறது எனக்கென்னவோ தாயாரப் பார்க்கிறாப்பில இருக்கு, பெரியவாளுக்குச் செய்யக் குடுத்து வச்சிருக்கணும். கோதுமைப் பாலெடுத்து இதை கிளறினேன், ஆறித் துண்டு போடக்கூட நிற்காம அவசரமா இத்தனை டப்பியில போட்டு எடுத்துண்டு வரேன். வாயில போட்டுண்டு பாருங்கோ...இவாள்ளாம் கோவாவும் பன்னிரும் கடையில வாங்கிப் போடுவா. உங்களுக்குத் திங்கறதுக்கில்ல. அதுக்காக நான் தனியாவே ரெண்டு பாக்கெட் பாலை வாங்கிக் கோவா கிளறினேன்...”

மாமியார் அவள் கொண்டு வந்து கொடுக்கும்: பண்டத்தை வாயில் போட்டுக் கொள்கிறாள்.

“நீ பண்றதுக்குக் கேக்கணுமா ரோஜா? பத்து விரலும் பத்துக் காரியம். அம்ருதமாக இருக்கு...” கிரிக்குப் பொறுக்க வில்லை. அந்த வாயிற்படியில் போய் நிற்கிறாள்.

“மாமி எப்ப வந்தாப்பல? உங்களுக்கு அம்மாவப் பார்த்துட்டுப் போனாப் போறும்...!”

“உனக்குத்தான் சிநேகிதி யாரோ வந்திருக்காப்பல... ‘பிஸி’யாக இருக்கே?”

துணி மடித்த கையுடன் ரத்னா அப்போது உள்ளே வருகிறாள்.

“பாட்டி! என்ன? எப்படியிருக்கிறீங்க? நான் உங்க பேத்தி ரத்னா...!”

பாட்டி அவளை ஏற இறங்கப் பார்த்துத் தலைத்துணியை ஒர் அசைப்புடன் இறங்கிக் கொள்கிறாள்.

“அதான் வந்து எட்டு மணி நேரம் கழிச்சுக் குசலம் விசாரிக்கிறியாக்கும்? எங்க வந்தே இப்ப?”

“இங்கே இருக்க வந்திருக்கிறேன். ஏன், வரககூடாதா பாட்டி?”

பேஷா இருக்கு. உன் சித்தி இருக்கா, ஈஷிண்டு எல்லாம் செய்வா. என்னை எதுக்குக் கேக்கற? என் வீடா இது? நான் ஒரு மூலைல யாரு வம்பும் வேண்டாம்னு தான் ஒதுங் கிட்டேனே?”

“ஐயய்யோ? நீங்க ஏன் பாட்டி ஒதுங்கணும்? ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறிங்க... ஒதுங்குவானேன்...”

“கேட்டியாடி ரோஜா அக்கிரமத்தை? நான் ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறேனாம்? ஏண்டியம்மா? உங்கம்மா சொல்லிக் கேக்கச் சொன்னாளா? எந்தனை நாள் என் அதிகாரத்தில் இருந்தா?”

“எங்கம்மாவ நான் சொல்லல...

அவள் அடுத்து பேசு முன், கிரி அஞ்சிக் கொண்டு அங்கிருந்து அகலுகிறாள்.

பாவம்! சித்திக்கு உங்களைக் கண்டு எத்தனை பயம் பாருங்க!”

“போடி அசத்து... அவளுக்கு என்ன பயம்? எட்டூருக்கு சாமர்த்தியக்காரி. எங்கிட்ட வாயை மூடிண்டு நடிக்கிறாள். அவன் என்னமோ நிக்க நேரமில்லாம எங்கியோ சாப்பிட்டு எங்கேயோ தங்கி அலையறான். அந்தக் காலத்துப் போல என்ன கஷ்டம் இப்ப வீட்டுக் காரியம்? எல்லாம் சுவிச், காஸ் அடுப்பு. நிமிஷமா ஆகற பிரஷர் குக்கர். வெய்லுக்குக் கூலர், குளிருக்கு ஹீட்டர். என்ன கஷ்டம் இவாளுக்கு?”

“அதான் மத்தியானத்திலேயே படுக்கையில போயிப் படுத்துக்கறா. எனக்கு என்னமோ புடிக்கிறதில்லை. என்ன ஏன் முன் ரூமுக்கு வரதில்லைங்கறாளே? இந்த சோபா, குஷன்...எவால்லாமோ உக்காரற எடத்தில எப்படி உக்கார? இங்க இந்த பிரம்பு சேர்தான் என் மனசுக்குப் பிடிக்கறது. எங்க வீட்டிலும் எனக்குன்னு பிரம்பு பின்னின சோபா-அம்மாவோடதுன்னு அதுல யாரும் உக்கார மாட்டா?” என்று ரோஜா மாமி ஒத்துப்பாடுகிறாள்.

“ரெண்டு பொண்ணு. அதிலயும் கவி ‘மேஜரா’யாச்சு. ஒண்ணு தெரியல. எதானும் சொன்னா, போ பாட்டி, வா பாட்டிங்கும். ஆனால் மனசு கிடந்து அடிச்சிக்கிறது; தங்கம் என்ன விலை, வயிரம் என்ன விலை! இதுகளக் காது மூக்கு ஒக்கிட்டு காலாகாலத்தில கட்டி வக்கணுமேன்னு...இவாளப் பாரு!அக்காக்காரி...சொல்லப்படாது. எவனையோகட்டிண்டு குடும்பத்துக்கே அநாசாரமாயாச்சு. இவ...வயசு முப்பதா யாச்சு...ஒரு கட்டா காவலா கிடையாது...எனக்கு. ஏண்டாப்பா இதெல்லாம் பாக்கணும்னிருக்கு! ஒரு எச்சிலா, திட்டா, ஒரேழவுமில்ல. நூறு வியாதி ஏன் பிடுங்கித் தின்னாது? பரத்துக்கு ஒன்பது வயசாகல. பிள்ளைக் குழந்தை கண்ணாடி போறனும்ங்கறா...இப்பவே, இப்படி அநாசாரம் கலந்தா?” முட்டாக்கை இழுத்துக் கொண்டு முதியவள் வெறுப்புடன் திரும்புகிறாள்.

கிரிஜா, பாட்டிக்குப் பூரி இட்டுக் கொண்டிருக்கையில் குழந்தைகள் வந்து விடுகிறார்கள். ரத்னாவைக் கண்டதும் இரண்டு பெண்களுக்கும் ஒரே சந்தோஷம். அவர்கள் அறையில் இவளால் ரசிக்க முடியாத மேற்கத்திய ரஞ்சக இசை முழங்குகிறது. ட்ரம் அதிரும் ஒசை குதித்துக் குதித்து இளைஞர் பாடும் குதுகலம்.

“என்னம்மா டிபன்?”

“பூரி பண்ணிருக்கேன். தேங்குழல் இருக்கு...”

“போம்மா, போர்? வெஜிடபிள் பஃப் பண்ணிலியா?...”

“இருந்த பட்டாணியக் காலம சீஸ் கறிக்குப் போட்டுட் டேண்டி...! பால்ல போட்டுத் தரேனே?”

“வேனாம் போ!”

காபியை மட்டும் பருகிவிட்டுப் போகிறார்கள். சற்றைக் கெல்லாம் மூவரையும் கூட்டிக் கொண்டு ரத்னா வெளியே செல்கிறாள்.

ஆறு மணிக்குள் மாமியார் பலகாரம் முடிந்துவிடும். பாவில் நனைத்த பூரியுடன் கிரிஜா மாமியாரை உபசரிக்கப் போகிறாள். கிழவி கைகால் சுத்தம் செய்து கொண்டு நெற்றியில் புதிய விபூதியுடன் வாசல் பக்கம் உட்கார்ந்து வெளியே பார்க்சிறாள்.

“அம்மா... பூரி எடுத்துக்கறேளா?”

“எனக்கு வேண்டாம்...!”

தலை திருப்பலைக் கண்டதும் சுர்ரென்று கிரிஜாவுக்கு. பற்றிக் கொள்கிறது. விழுங்கிக் கொள்கிறாள். “ஏன் வேண்டாம்?”

“வேண்டாம்னா பின்னையும் பின்னையும் ஏன்னு என்ன கேள்வி? தினம் தினம் தின்ன்றாது. எங்கையில பண்ணிக்க முடியாதபோது என்ன வேண்டியிருக்கு? எனக்கு நீ உபசாரம் பண்ண வேண்டாம். போ!”

ஒரு பிரளயமாகும் ஆவேசம் அவளுள் கிளர்த்தெழுகிறது.

“நான் அவா மேல இவா மேல பட்டிருப்பேன். முழுகித் தொலைக்கலங்கறேளா” என்று சொற்கள் வெடித்து வரத் தயாராக இருக்கின்றன. உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். கிரிஜா பொறுப்பாள். ஆனால் அரணை உடைத்து விட்டால் பிறகு சமரசத்துக்கு இடமில்லை. அரண் அவளை உள்ளே இழுக்கிறது. தள்ளிக் கதவைச் சாத்துகிறது.

சமையலறையில் கொண்டு வந்து அவற்றைத் திரும்ப வைக்கிறாள். ரத்னாவும் குழந்தைகளும் வரும் கலகலப்பு செவிகளில் விழுகிறது.

“ஹாய் மம்மி! உனக்கு வெஜிடயிள் பஃப் கரம் கரமா வாங்கிட்டு வந்திருக்கிறோம் ..”

“சாதாரணமாக என்றேனும் அவர்கள் வெளியில் சென்று இதுபோல் எதையேனும் வாங்கி வந்தால் கிரிஜா ஒதுங்கிக் கொள்வாள். “போதும் மேலே வந்து விழனுமா? உள்ள கொண்டு வை!...” என்பாள்.

குழந்தைகளோடு தானும் இம்மாதிரி ஒரு குழந்தையாக உண்டு களிக்கும் நாட்கள் இவள் குடும்பத்துக்கு வரவே யில்லை.

“கிரி, குழந்தைகள் ஆசையா அம்மாவுக்கு வாங்கிட்டு வந்திருக்காங்க. வாங்கிச் சாப்பிடு. அடி மக்குகளா, பிளேட் வச்சு எல்லாருக்கும் எடுத்து வையிடி!”

சாரு தட்டுக்களைக் கொண்டு பரப்புகிறாள்.

கார சமோசா, மலாய் பர்ஃபி.

ரத்னா, சர்பத்தைக் கலக்கி ஐஸ் துண்டு போட்டு வைக்கிறாள். “எனக்கு ரோஸ்மில்க் ஆன்டி!” என்று பரத் அவளை ஒட்டிக் கொள்கிறான்.

கிரிஜா எல்லோருடனும் உட்கார்ந்து மகிழ்ச்சியில் கலந்து கொள்கிறாள். முன் அறையில் அமர்ந்து தொலைக் காட்சியில் வரும் தொடர் நிகழ்ச்சியைப் பெண்களின் கூச்சலான விமரிசனங்களுடன் ரசிக்கிறாள். நத்தைக் கூட்டை உடைத்துக் கொண்டு அவள் அவளாக இருக்க முயன்றாலும் ஏதோ ஒர் இடி-மழைக்கு வானம் கறுத்து எங்கோ முணுக் முணுக்கென்று மின்னல் ஒளி வயிர ஊசி பளிச்சிடுவது போல் உணர்வில் ஒர் அச்சம் தோன்றிக் கொண்டிருக்கிறது.