சூரியானந்தர்

சூரியானந்தர் சூத்திரம்

சித்தர் பாடல்கள் நூல் 27
பக்கம் 412

நூல்தொகு

1தொகு

சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற

தெட்சிணா மூர்த்தியுடைப் பாதங் காப்பு

பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன் றுக்குள்

பிரித்துவைப்பேன் பூவழலை பெருமையெல்லாம்

நீர்கொண்ட வூசரத்தின் மகிமை தன்னை

நிசமாகச் சொல்லாமல் மறந்து விட்டார்

ஆர்கொண்ட வேணியனார் உமக்குச் சொன்னார்

ஆத்தாளும் அடியேனுக் கறைந்திட்டாளே

2தொகு

அறைந்திட்ட வகையேது வுப்பே ஆதி

ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம்

மறைந்திட்ட வுப்பதுவே காரங் காரம்

மண்ணான வுப்பதுவே காரஞ் சாரம்

கறைந்திட்ட வூசருக்கு ஏற்ற வுப்பை

காணாமற் போனதினாக் கலக்க மாச்சு

இறைந்திட்ட மலசலமாய்க் காணலாகும்

இந்தவிரண் டோரிடத்தில் இருக்கும் பாரே

3தொகு

இருக்கின்ற வுப்பினுக்கு மூலா தாரம்

இந்துவொன் றிரவியொன்று வன்னியொன்று

பெருக்கின்ற வீசனுக்குச் சூட்ச முந்தான்

பிருதிவியே தூலமெனப் பேசலாகும்

கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம்

கருதையிலே யெழு தோற்றம் காண லாகும்

உருக்கொண்ட சீவசெந்தும் அனேக முண்டாம்

உற்றுப்பார் அண்டபிண்டம் உண்மை தானே

4தொகு

தானாக நின்றதுவே பாரு மாச்சு

சகலசித்துப் பிரகிருதி உயிருமாச்சு

வானாகி நீன்றதுவே சாட்சி யாகும்

மன்னுயிர் எல்லாம் சோதி மயமுமாச்சு

ஊனாகப் பிறந்தசடம் பிறவா முத்திக்

குதவியல்லோ பிரகிருதி யோனி யோனி

கோனாக நின்றகுரு உபதே சத்தாற்

குருபுகுந்தே யுப்பெடுத்துக் கொள்ளுவாயே

5தொகு

கொள்ளுவார் முப்பூவின் முதலா மங்கம்

கூர்ந்து பாரூசரத்தைக் கொள்கிக் கொண்டு

விள்ளுவார் யோனியின் படிவிடாமல்

மேலேற்ற மேலுதவி மேவிற் றானால்

துள்ளுவா ரிந்துப்புச் சிவமு மாச்சு

துருசுப்பு பணவிடையாற் றொந்த மேற்றித்

தள்ளுவார் பிரளயமோர் கோடி காலம்

சகலசித்தும் மூலவுப்புத் தன்னி லாச்சே

6தொகு

ஆச்சப்பா மூலவுப்புக் கஞ்சு தீட்சை

ஆதியுப்புக் கப்படியே தீட்சை யாகும்

மூச்சப்பா தசதீட்சை யார்தான் செய்வார்

மூலகுரு செய்வார்பின் னார்தான் செய்தார்

ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம்

ஏற்றிவிட்டார் முப்பத்தி ரண்டாமென்று

பேச்சப்பா பேசினதி லாவ துண்டோ

பிண்டவுப்புக்கு ஏழுவிதம் பேச லாமே

7தொகு

பேசுகின்ற வுப்பினுக்கு மேலே அங்கம்

பெருமையுள்ள சித்தர்கள் தாம் செய்யும் மார்க்கம்

வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம்

மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சா னாலும்

பாசையினாற் சொன்னார்கள் வெளி தோன்றாது

பாலனுக்குத் தோன்றுமிந்த நூலைப் பார்த்தால்

கூசல்மிஞ்சிப் போடுதென்று என்றன் நூலைக்

குகைக்குள் மறைத்திட்ட தனாற் கூறொண் ணாதே

8தொகு

ஒண்ணான நூலாகும் இருநூற் றைந்தில்

ஓதிவைத்த கருத்தெரியும் இருபத் தைந்திற்

கண்ணாகும் இந்தநூல் பதின்மூன் றுக்குள்

கருவையொரு கற்பமுறை காட்டி வைத்தேன்

வண்ணானை யறியாத பேருக் கெல்லாம்

வாதியென்ற பேரேது வாத மேது

பெண்ணானின் சுரோணிதமும் விந்துங் கண்டால்

பேரான பூரணத்தின் பெருமை தானே

9தொகு

பெருமையென்ற காயசித்தி பண்ணா விட்டாற்

பேரான அடியோடு முடியும்போச்சு

அருமையென்ற குண்டலிக்குள் வராகி பூசை

அப்பனே கண்டமதில் அங்கெண் றூணு

புருவமையத் துள்ளேவும் மென்று கும்பி

போதமென்ற மவுன வித்தை கைக்குள் ளாச்சு

தருமவித்தை பிரகிருதி மூச்சா டாது

சகத்திரத்தெண் மலர்ப்பதத்திற் சார்ந்து நில்லே

10தொகு

நில்லாத மூலிகையாற் காய சித்தி

நிட்டை மவுனத்தாலே யோக சித்தி

கொல்லாத மூலமதில் அபான சுத்தி

கூடாமல் இருந்து விட்டால் ஏது முத்தி

சொல்லாத வீசனுப்பு மதி சூதத்திற்

சூட்டினேன் வெள்ளை யென்ற சூடன் வித்தை

எல்லாரு மிருந்த விதம் பாட மாட்டார்

இதமான சூதகத்தின் வெடியுப் பாச்சே

11தொகு

உப்பான வெடியுப்புச் செயநீ ராலே

ஒருகோடி வித்தை யெல்லாம் ஆட லாகும்

அப்பான கல்லுப்பு நீரி னாலே

ஆடலாந் துருசினுடை அங்க மெல்லாம்

செப்பாத யோனிருது செந்நீர் மட்டாற்

சிவன்வேறு தானுண்டே இவனல் லாமல்

தப்பாமற் செய்தென்ன சவுக்கார ந்தான்

சட்டிமுதற் பவுரணையுந் தாக்கிப் பாரே

12தொகு

தாக்கிப்பா ராகா சஞ்சருவ சாட்சி

சதாநித்தம் அந்தரமே சாடி நின்றால்

நோக்கிப்பார் வாயுலயப் படுவதற்கு

நூதனமாய் வன்னியதிற் கூட வேணும்

மூக்கிற்றான் ஓடுவது பிராண வாயு

மூலமெனும் வளையமது நகாரந் தன்னைத்

தூக்கித்தான் விட்டவர்க்கு போக மெய்தும்

சூரிய னந்தனிவை சொல்லும் நூலே

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=சூரியானந்தர்&oldid=1028554" இருந்து மீள்விக்கப்பட்டது