3. வரனென்னும் வைப்பு

டம்பொடு கலந்து தோன்றும் உயிர்த்தொகையுட் சிறப்புடையவென உயர்ந்தோரான் உணர்த்தப்பெறும் மக்களுயிர்க்கு உறுதிப்பொருளெனப் பெரியோர் வகுத்துக் கூறும் நால்வகைப் பொருள்களுள் வீடென்பதும் ஒன்று. அது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து எனப் பெரியோர் கூறுவர். கூறினும், அது இவ்வுலகம் போல் அழிதன்மாலைத்தாய இன்பத்தினைத் தராது, எஞ்ஞான்றும் குன்றா வின்பம் தரும் பேருலகமெனவும், அதனை நாடியே உயிர்கள் நிற்றல் வேண்டுமெனவும் நம் ஆன்றோர் கூறுவதனோடு அமையாது, அவ்வுலகநாட்டம் உயிர்கட்கு இயற்கையிலே அமைந்துளதென்றும், அது, ஆயும் உணர்வுடையார்க்கே புலனாமென்றும் கூறினர்; கூறுகின்றனர். அக்கூற்றினை ஒருவாறு ஆராய்ந்து கண்ட வழியே, ஈண்டுக் கூறப்பெறுகின்றது.

புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்தந்து, சவியுறத் தெளிந்து, தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கான்யா றொன்றின் அடைகரையின்கண், வெயினுழைபறியாக் குயினுழை பொதும்ப ரொன்றிருந்தது. அதன் கண் எண்ணிறந்த புள்ளினம், மண்ணுறு வாழ்க்கைக்கு மாண்புறுத்தும் செவிச்சுவையமுதம் கேட்போர் செவிப்புலம் வளம் பெற அளித்து வாழ்தர, அவ்வினத்து ளொன்றாய இன்னிசைச் [1]*செம்புளொன்று பெடையுடன் கிளைமல்க அவ் வடைசினைப் பொதும்பருள், பெற்றதுகொண்டு, பேரறம் நேர்ந்து, பெறலரும் இன்பமே துய்த்து வந்தது. அதனால், அது, எங்கெழிலென் ஞாயிறு என்னும் - இறைவனருளா லெய்தும் நெஞ்சிறுமாப்பும், பழியஞ்சி யீட்டும் பொருளின்ப முடைமையின், வழியெஞ்சா வான்பொருளும் உடையதாயிற்று. ஆகவே, அதற்கு இனி வேண்டற்பால தென்னாம்? ஒன்றுமில்லை யன்றோ!

நிற்க, ஒருநாள், இச் செம்புள்ளின் வாழ்க்கைத்துணையாய், ஒத்தவுணர்வும் பான்மையு முடையதாய், துணைச்சேவற்கு ஒருவாற்றானு முயர்வுதாழ்வில்லாக் கவினுங் காட்சியு முடையதாய் விளங்கிய பெடைப்புள், தன் கூட்டகத் தமர்ந்து, பார்ப்புக்கட்கு உணவாவனவற்றை யளித்து உவந்திருக்கையில், பகல்செய்யும் செஞ்ஞாயிறு பாவையிற் படிய, பைய இருள் வந்து பரவ, இன்பத்தெண்கால் இடைவந்துலவ, அருகோடிய அருவிக்க ணெழுந்த சிறுதிரை பொருதுவீழ்தலின் எழுந்த விழுமிய வோசையாங்கணும் பரவ, விரிகதிர்மதியம் விண்ணகத் தெழுந்து, மண்ணக மடந்தையின் மயக்கொழிப்பதுபோலத் தன் ஒண்கதிர் பரப்பிற்று. அது காலை, அப் பார்ப்புக்களு ளொன்று, தன் சிறுதலையை நீட்டி, அன்புகளிையும் ஆய்முக நோக்கி, "அன்னாய்! வாழி! நம் படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய இத் தெண்ணீர்யாறு செல்லிடம் யாதுகொல்” என வினவ, கேட்ட தாய்ப்புள், விடையறியாமையின், விளம்பல் கூடாது, குறுநகை காட்டி, “மக்காள்! யான் அறியேன். கலின் எனக் கலிக்கும் தூக்கணங்குருவியையாதல், கட்புலங்கதுவா விட்புலம் படரும் வானம்பாடியை யாதல் கேட்டல் வேண்டும். ஆண்டுத் தோன்றும் கோட்டெங்கின் குலைமீது அவை ஒருகால் வந்தமரினும் அமரும். அது போழ்து நீவிர் மறவற்க. நீவிர் கேட்டதும், அதனோரன்ன பிறவும் அறிதலாம் என்று கூறி, வானம்பாடியின் வள்ளிசையைத் தன் மென்குரலால், வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் இசைப்ப, குரீஇக்குஞ்சுகள் குளிர்ப்பெய்தி, “வானம்பாடிகொல் இக் கானம் பாடியது” என்றெண்ணலாயின.

மற்று, அவ் வானம்பாடும் வண்குருகு, தன் மெல்லிசை கொண்டு, காடும், காவும், கவின்பெறு துருத்தியும், யாறும் குளனும், வேறுபல் வைப்பும், ஊரும் நகரமும் உறைதரும் இல்லமும், ஊறுசெய் விலங்கும், ஊனுண் வேட்டுவர் விரிக்கும் கண்ணியும், பிறவும் மெய்பெற விசைத்தல் மரபு. அதனையொருகாலேனும் அருகமர்ந்து நன்கு கேட்டறியா இச் செம்புள், பாடுங்கால், அவ் விசைப்பொருள் முறையிற் சிறிது பிறழ்தலும் குறைதலுமாயின. இழுக்குடைய பாட்டாயினும், இசை நன்றாயின்மை கொண்டு பேருவகை மீதுரத் தாமும், தம் அன்னையொப்ப, மெல்லிசை மிழற்றல் தொடங்கின. இங்ஙனம் குரவராயினார் செய்யும் செய்வினையை மக்களாயினார், நுணுகி நோக்கி, அம்முறையே செய்தல் உயிர்த்தொகையுட் சிறந்து விளங்கும் இயல்புகள் பலவினுளொன்று. இதுவே, ஏனையறிவுவளர்ச்சிக்கும் பிறவற்றிற்கும் ஒருதலையாக வமைந்த அடிப்படை யென்பது கல்வியாளர் கோள். இதனை யீண்டுரைப்பிற் பெருகும்.

வெள்ளி முளைத்தது; விடியல் வந்தது; பறவை பாடின; பல்லுயிரும் பரவுக்கடன் செய்தன; விழுந்த ஞாயிறும் எழுந்தது; மென்காற்று வீசலுற்றது; பூநான்கும் பொதுளி வெறி திசை நான்கும் போய்உலவ, சுரும்பு தோைர்ந்தன. சேக்கையுளுறங்கிக் கிடந்த செம்புட்குஞ்சுகள், உறக்க நீங்கி, ஒருபுடை வந்து, உவகை கூர்ந்தன. அதுபோது, தாய்ப்புள், தன் செல்வச் சிறு குஞ்சுகளின் மருங்கமர்ந்து, தன் மெல்லிசையைத் தொடுத்து, யாற்றுநீர்ச்செலவின்மேற் பாடிற்று. அக்காலை கரையாக் கல்லும் புல்லும் கனிந்துருகின. சுருங்கக்கூறின், அவ்விசை யின்பத்தால்,

   “மருவியகால் விசைத்தசையா; மரங்கள்மலர்ச் சினைசலியா;
   கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கலித்தோடா;
   பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்ந்தொழியப் புனல்சோரா;
   இருவிசும்பின் இடைமுழங்கா; எழுகடலும் இடைதுளும்பா.”

எனுந் தீங்கவியே அமையும். -

இங்ஙனம் சிறந்தோங்கிய இசையொன்றில், அப் புள் வீறுற்றதே யொழிய, அதனுளத்தில், சிறுகுஞ்சு வினவிய பொருள்மாத்திரம் புலனாயிற்றன்று. ஆயினும் தானும் தன்பார்ப்புக்களும் ஒருபகல் அவ்வாறு செல்லிடம் சேறல் வேண்டு மென்னும் திப்பிய வுணர்வொன்று அதன் நெஞ்சத் தகலாது நிலவுவதாயிற்று. இவ்வாறு நாட்கள் பல சென்றன. அப்புள்ளும் யாற்றுநீர்ச்செலவு பொருளாகப் பாடி வந்தமையை நீக்கிப் பிறிதோர் இடமொன்றனை நாடிப் பாடுதல் தொடங்கிற்று. அக்காலை அவ்விடமே, இவ்வாறு செல்லிடமாம் என்பது அதற்குத் துணிபாயிற்று. இவ்விடத்தைக் கேட்குந்தொறும் அப் பார்ப்புக்களும் தம் தாய்ப்பறவையை, அதனைக் குறித்த வினாக்கள் பல நிகழ்த்தாது ஒழிவதின்று.

நிற்க, இவ்விடம் யாதாக விருக்கலாம்? சிலர் இதனை நாம்யாண்டிருந்து போந்தோமோ ஆண்டையது என்பர். வேறு சிலர் நாம் இனிச் செல்லுமிடம் யாது அது வென்பர். சிலர், இத்தகைய இடமே இல்லை யென்பர். வேறு பலர் நாமும் பிறவும் நீங்கியதும், நீக்கமற இனிச் சேருவது மாய இடம் என்பர். இதுபற்றிக் கூறற்பாலன ஒருவாறு கோடற்பால வல்ல வென்பது காட்சி யொன்றையே அளவையாக் கொள்வார் துணிபு. மற்று, நாம் காண்டல், கருதல், உரை யென்னு மூன்றையும் அளவையாக் கொள்ளும் பான்மையே மாகலானும், அவற்றானாராயுங் காலத்து, உளத்திற் றோன்றும் சில வுணர்வுகளும், உணர்ந்தோர் பலர் கூறிய உரைகளும் அப்பெற்றித்தாய இடமொன்றுண்டென்பதனை வலியுறுத்துகின்றன. ஆயினும், அதனை ஒருவாறு நாம் காண்டற்குமுன் அறியாவுலகம் என வழங்குவோம். முதனூலாரும்[2] இவ்வாறே வழங்குகின்றார். அன்றியும், இவ்வுலகைப் பற்றி, இருண்ட வுணர்வுகளே அப் பறவையின் உணர்வுட் கலந்து கிடந்தன.

இனி, அத் தாய்ப்புள், தானே தனித்தமர்ந்து, அவ்வுலகு பற்றிய வுணர்வுகள் தன் மனத்தெழுந்தோறும், இசைத்துக் குளிர்ந்து நாவில் ஊறாத அமிழ்தூற. உடல் புளகித்து உள்ளமெல்லாம் உருகிக் களிக்கும். இக் களியாட்டினைப் பின்னர் அது, தன் பார்ப்புக்கள் காணவும் கேட்கவும் செய்தயர்தல் தொடங்கிற்று. இங்ஙனம் செய்தற்குக் காரணம் யாதாகும்? அப் பார்ப்புக்களும் இதனைத் தொடர்வனவல்லவோ? அவற்றிற்கும் அவ்வுலக வுணர்வினை யுணர்த்தல் வேண்டுமன்றோ? அது போலும் காரணம்!

இவ் வண்ணம் நாட்கள் சில சென்றன. ஒருநாள் அக் குஞ்சுகளு ளொன்று, ஆய்முகநோக்கி, அவ் வுலகு யாண்டுள தென்று கேட்ப, அது, “அவ்வுலகம் உண்டென்பது உண்மை: மற்று, யான் அஃது உறுமிடம் அறியேன். ஆகலின், அவ்விடத்தை யான் கூறுதல் கூடாது" என்றது. என்றலும், அவற்றுட்டலைக் குஞ்சு முன்னின்று, "இவ் யாறு செல்லுமிடம் யாது, அது அவ் அறியாவுலகம்!" என்றது .இது உண்மை கொல்? அன்று. அவ் யாறு, மறுவில்மானவர் மலிந்த மூதூர் வெறிது சேறல் விழுப்பமதன்றென மலைபடுபொருளும் கான்படு செல்வமும் தலைமணந்துகொண்டு, பெருநகரடைந்து, கால்வழிச் சென்று, வயலிடைப் படர்ந்து, அதன்கண் விளையும் பைங்கூழ் வளர்த்து, வணிகர் மரக்கலம் அணிபெற மிதப்ப, மங்கையர் குடைந்து மாணலம் புனைய, புரிநூல் மார்பர் அருங்கடனாற்ற, மீனுண்குருகும், துண்டில் வேட்டுவரும், திண்டிமில்வாழ்நரும் செல்வம் மீக்கொளப் பரந்து சென்று, கோனோக்கி வாழுங் குடியனைத்தும் வானோக்கலின், அதற்கின்றியமையாப் பெருமழை பிறக்கும் பெருந்திரைப் புணரியைப் புணரும்! இப்புணரியோ அறியா உலகெனப்படுவது பகலின் பான்மையும் இரவின் எழிலும் புள்ளினத்துக் கொருபொலிவும் மாவினத்துக்கொருமாண்பும் வயங்கத் தருவனவாக, இவையனைத்தும் தந்த வொருவன், இவை செல்லிடமொன்றைச் செய்யாது விடுவனோ?

இது நிற்க, "அன்னாய் அறியாவுலகின் அழகினைக் கூறுவதால் ஆகும்ப்யன் யாதுகொல் அதனைப் பலகாலும் பாடிப் புகழ்தல் எற்றுக்கு?" என்று தொடங்கிய ஒரு குறும்புள். "தேனுாற்றெடுப்ப மணநாறும் பூம்பொழிலகத்தைவிட்டு நாம் வேறிடம் சேறல் என்னை? மென்றளிரும் நறுமலரும் மிகைபடச் செறிந்த கூடொன்றாக்கி, நாம் ஏன் என்றும் ஈண்டே வாழ்தல் கூடாது? வான்குயில்க ளிசைபாட வரிவண்டு பாண்மிழற்ற, மான்கன்று பயின்றுள்ள, பல்லுயிரும் பொலிவெய்த விளங்கும் இவ்விளமரக்காவினும் இனிதுகொல் அவ் அறியாவுலகம் ? ஆருயிரன்னாய்! நாம் வேறிடஞ்சேறல் வேண்டா. இதுபோது, சிந்தாமணி தெண்கடலமிர்தம் தில்லையானருளால் வந்தாலிகழப்படுமே முயற்சியின்றியே பெரும் பயன் எய்துதற்குரிய இடம் அதுவாயினும், யான் இவ்விடம் விட்டுப் பெயரேன். ஒழிக. இனி வேறுபுலஞ் சேறல். பைந்தாட் கோரையும், பசிய தளிர்நிறைந்த புதலும் மிக்க இவ் வடைகரையினும் இனிதுகொல் அவ் அறியாவுலகம் ஆகலின், அன்னாய்! இனிப்பாடுதலொழிக! பாடுதற்கு உளம் ஒருப்படுதலும் ஒழிக!" என்றது.

பின்னர் அத்தாய்ப்புள், தன்மனத்துப் பலவேறுவகைப்பட்ட எண்ணங்கள் படர்ந்தெழுந் தடங்க, வெய்துயிர்த்து, வேறு கூறா தொழிய, மற்றொரு சிறுகுருகு கூறும். அது, ‘இறுத்த இருள் கெட, யாண்டும் இளங்காலும், இன்னொலியும் எழ, பொன்னுருக்கென்ன இளவெயில் பரப்பி, விடியலிற் கீழ்க்கடலின் முகட்டெழும் இளஞாயிற்றினைக் காணாய்! தெண்ணிரின் திரையிடை, அச்செஞ்ஞாயிற்றின் செங்கதிர்கள் தவழ்தலும், ஆண்டுப் பல் வண்ணங்கள் தோன்றி மிளிர்தல் காணாய்! வரிக்கெண்டையும் பருவராலும் நண்பகலொளியில் மின்செய்து மறைதலும், இளந்தளிர்கள் ஒளிதெறித்தலும் பிறவும் காணாய்! தண்டென்றல் தளிரசைப்ப, பார்ப்புக்கள் கிளைபடர்ந்து இசைபாட, புதுமலரின் மணம் பரவ, காலையணிந்து பகலெல்லாம் ஒளியின்றியிருந்த கவினனைத்தும், மாலையிற்றுவர முடித்துத் தோன்றும் இயலணங்கின் எழிற் செவ்வியை மறத்தலும் கூடுமா? ஈண்டாயினும், ஆண்டாயினும், யாண்டாயினும் அமர்க. வெண்மதியின் தண்கதிர்கள் பைந் தழைகளின்மீது பரவி, கலித்தோடும் அருவிநீரில் ஆடல் பயின்று, பூங்காவை வானமாக்கி, கான்யாற்றை, அத்திங்கட் புத்தே ளுர்ந்து செல்லுந் தேர்வழியாக்க, விளங்கும் இரவுப் பொலிவை நினைத்தொறும் நெஞ்சம் வேறோரிடத்தையும் நினைக்குங் கொல் திண்கலமும் சிறுநாவாயும் செல்வுழிச்செல்வுழி யெழும் ஒய்யெனும் ஓசை நம் உறக்கம் கெடுப்ப, நெடுந்தருவின் பைங்கிளை படர்ந்து பாடலை நம் இனம் பயில, இன்பக்காட்சியே யாண்டும் இலங்கும் இந் நிலத்தினும் அவ் அறியாநிலம் அழகுடைத்தோ?

"துஞ்சுவது போல இருளி, விண்பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்(டு)
ஏறுவது போலப் பாடுசிறந்(து) உரைஇ
நிலநெஞ்(சு) உட்க ஒவாது சிலைத்தாங்(கு)
ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்.”

நாம் நம் படையமை சேக்கையைப் படர்ந்து, ஒன்றோடொன்று புல்லி இருக்கின் கார்செய்பணிப்பும் கலங்குதுயர் செய்யாதாக, எழுந்த வெம்மையால் இன்பம் மிகும் இவ்விரும் பொழிலினும், நீ கூறும் அப்பூம் பொழில் ஏற்றமுடைத்தாமோ? ஆதலின், அன்னாய் வேறுபுலம் முன்னுதலை விட்டொழித்து, இப்புலம் பற்றிய இன்னிசையே மிழற்றுதி!’ என்றது.

பின்னர், அத்தாயாய செம்புள், இங்ஙனங்கூறிய தன் செல்வக்குஞ்சின் பெருஞ்சொற்களைக் கேட்டு, ஒருவாறு, உளத்தைத் திருத்தி, “செல்வங்காள் இனி நீவிர் விரும்பிய வண்ணமே வேறொரு பாட்டே பாடுவல். போற்றிக் கேண்மின் என்று ஒரு மெல்லிசை, பொருள் செறியப் பாடுதல் தொடங்கிற்று. அப்பொருள்:

“பரந்த உலகிடைத் தோன்றிய யாவும் தன் பொறிபுலன்களின் வழியே மனத்திற்குக் குன்றாவின்பமும், அச்சமறியா வியல்பும் நல்கத் தான் பெற்றுவாழ்ந்தமையும், அவ் வாழ்க்கையில் நாட்பல செல்ல, தனக்கு உள்ளிருந்தே, இஃது நின்னிடமன்று என வோர்பொருண்மொழி யெழுந்திசைத்தமையும்; அம்மொழி, பின் பலமுறையும் இசைப்பக் கேட்ட தான், ஒருகால் உவகையும், ஒருகால் வெறுப்பும், பலகாலும் கேட்டற் கொருப்படாது சேறலும் கொண்டிருந்தமையும்; இருக்கையில், தான் வாழுமிடமே மேதக்க இடமாவது, அதனை நீங்குதல் அறவே கூடாது என்னும் உவகையுணர்வு தோன்றினமையும்; பின்னர்த்தன் மனக்கினிய துணைப்பறவை போதந்து, காதல் செய்து களித்துக் கலந்தமையும்; அதுகாலை, அம்மொழிப் பொருள் பன்முறையும் எழுந்து, ஊன்கலந்து, உடல்கலந்து, உயிர்கலந்து, பின்னர் உணர்வுங் கலந்து ஒரோவோசையாய் உருவெங்குங் கலந்துநின்றமையும்; அக்கலப்பே, தன் துணைப்புள்ளிற்கும் நிகழ, இரண்டும் உளங்கலந்து இக்கான்யாற்றடைகரை யடைந்து, சிற்றிற் சமைத்துச் செவ்விய வாழ்க்கை நடாத்தி வந்தமையும் பிறவுமாம்.

இதனைக்கேட்ட பார்ப்பினுள் ஒன்று, "அற்றேல், அன்னாய்! நீ பண்டே யிருந்த இடம் யாண்டையது? அருகுளதாயின், யாம் அனைவரும் ஆண்டே படர்ந்து, இன்பந்துய்த்து இனிது வாழலாமே!” என்றது. எனவும், தாய்ப்புள் உளங்கலங்கி, ஆருயிர்ச் செல்வமே! அதனையெங்குளதென்பேன் அறியாவுலக மென்டேனோ அன்றி மிகமிகச் சேய்மையிலுள்ளதோர் விண்ணிடம் என்பேனோ யாது கூறுவேன்! யான் அறியேன். ஆயினும், அன்றெழுந் திசைத்த பொருண்மொழி இன்று மெழுந்து ஈர்கின்றது. அது அன்றிட்ட ஆணையை மேற் கொண்டடங்கிய யான் இன்று விடுத்தல் கூடுமோ? அயராவின்பத்திற்றிளைத்திருந்த அன்றே அவ்வாணையை யேற்ற யான், இளமையும், அதனானாம் இன்பமும் இழந்த இந்நிலையிற் கொள்ளாதொழிதல் முறையோ? ஆகவே, என் அருமைச் செல்வங்களே! அவ் அறியாவுலகம் யாண்டமைந் திருப்பினும் இருக்க. நாம் அனைவரும் அதனைநோக்கிச் செல்வம். வம்மின் யான் கூறுவது உண்மையே என்னும் உறுதிநோக்கங் (Faith) கொண்டு ஒருப்படுமின்’ என்றது.

என்றலும், “நீயும் எம்மொடு வருதியன்றே. ஆயின், யான் இன்னே வருவல்” என்று மிகச்சிறியதோர் பார்ப்பு விளம்பித் தன் தாயிசைத்த தனியிசையிற் றானுங் கலந்து பாடல் தொடங்கிற்று.

இன்னணம், சொல்லாடலாலும் இசையாலும் பொழுது கழிய, “வெஞ்சுடர் வெப்பந் தீரத் தண்ணறுஞ்சோலை தாழ்ந்து நிழற்செய்யவும், தண்பதம்பட்ட தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம் குடம்பை நோக்கி உடங்குபெயரவும், புன்னை முதலிய பூவினாற்றம் முன்னின்று கஞற்றவும், நெடுந்திரை யழுவத்து நிலாக்கதிர் பரப்பவும்’ மாலை வந்தது. வரக்கண்ட தாய்ப்புள், தன் பார்ப்புக்களைத் தமித்துவிட்டு இரைதேடுவான் சென்றிருப்ப, அவற்றுளொன்று அண்மையிலோடிய அருவியின் மருங்குநின்ற புதற்கணமர்ந்து, அருவியின் கலிப்பும், அடைசினை யசைதலி னெழு மார்ப்பும் கேட்டலும் களிமீக்கூர்ந்து, அங்கு மிங்கு மோடியோடித் தன்னல்லிசை கொண்டு இன்னிசை மிழற்றத் தொடங்கிற்று. அக்காலை அது இசைக்க முயன்ற இசைகள் பலவும் இயைபுபடாதொழிய, இறுதியிற் றன்றாய் பாடிய அறியாவுலகவிசையை இயக்கிப்பார்க்க, அது நன்கனம் கைவரவுவந்து அதனையே எடுத்தும் படுத்தும் இனிது பாடிக் கொண்டிருந்தது.

"ஆ! யாழோ! குழலோ!! இன்றேன் பெருக்கோ!!! என்பெலாம் உருக்கும் இன்னிசை மிழற்றவல்லது யாதுகொல்! ஆ! தருக்களும் சலியா; முந்நீர்ச் சலதியும் கலியா, நீண்ட பொருப்பினின்றும் இழியும் அருவிக்காலும் நதிகளும் புரண்டு துள்ளா; எப்பொருளையும் தன்வயமாக்கி, உள்நிறை யுயிரும் மெய்யும் உருக்குகின்றதே!’ எனப் புகழ்வது போலும் இழித்தக்க கூறிக்கொண்டே புறவமொன்று ஆண்டு அதனருகே வந்தது. இது புறங்குன்றி கண்டனையதேனும் மூக்கிற் கருமையு முடைத்து; அன்றியும் ஒண்மை யுடையம் யாம் என்னும் வெண்மை தலை சிறந்தது. எக்குடிகெடுக்வோ, எதனலம் தூற்றவோ ஈண்டு இஃது வந்துளது. இதனியல்பறியாச் சிறுசெம்புள், தான் கேட்ட இதன் பொய்யுறு புகழ்ச்சியை மெய்யுறு புகழ்ச்சியென் றெண்ணி, பெரிதும் முயன்று பாடலும், இம்மடப்புறவம், தன் சிறுதலையைப் பையத்துளக்கி, ‘நன்று, நன்று, யானும் பல விடங்கட்குச் சென்றுளேன். பல இன்னிசைகளாற் றோட்கப் பெற்று முளேன். ஒருகால், மக்களகத்துப் போற்றி வளர்க்கப் பெறும் பேறும் பெற்றுளேன். எனவே, இசைநலங் காண்டலிற் சிறந்த வன்மை பெற்றுளேன் என்பது நன்கு தோன்றும். யானறிந்தவளவில், ஆணையிட்டுக் கூறுவேன், நின்னொப்பார் ‘ நல்லிசைவல்லார் மக்களினும் இலர். ஆயினும் ஒன்று, நின்னாற் பாடப்பெறும் பொருள்கள் யாவை? அவை யான் இது காறுங் கேட்டனவல்லவே!!’ எனச் சிறிது சுளித்து வினவிற்று.

குறும்புள்:- ஆ. அவை யாவும் அறியாவுலகு பற்றியன.

புறவம் :- எவை? அறியா...

குறும்புள்:- அவை அறியா வுலகின் அழகு, இன்பம், வாழ்க்கையியல்பு, அதனையடையுமாறு முதலியவற்றைக் கூறுவன?

புறவம் :-(நகைத்து) அது அறியாவுலகாயிற்றே! அதனைப் பற்றி நீ அறிந்ததியாங்ஙனம்? அம்மம்ம முற்றாக் காயெல்லாம் முழுத்த கேள்வி வல்லவாயிருக்கின்றன. காடும் செடியும் அவாவறுத்தல் மெய்யுணர்தல் முதலியன செய்கின்றனவே! மெய்யாக, யான் இவற்றை யறிதல் வேண்டும். மூத்து முதிர்ந்த முதுமை மிக்க யான், அவ்வுலகினையறிந்து ஆவன செய்துகோடல் வேண்டுமே! நன்று! அறியாவுலகமென்று நீ கூறுவது யாது? யாண்டுளது? அருள்செய்து கூறுக.

குறும்புள்:- யான் அறியேன். (உணர்வுகலங்கி) ஒருநாள் நாங்கள் அவ்வுலகினுக்குச் சேறல்கூடும் என்பதையன்றி வேறு ஒன்றும் யான் அறியேன்.

புறவம் :- நன்று. அறிந்தேன். பேதையோர் பேதையோர் என நூல்கள் கூறுகின்றன. அவர் யாவர், யாண்டுளர் என ஆய்ந்துகொண்டே வருதல் என் இயற்கை. அன்பே இன்று கண்டேன். நின்மாட்டே அந்நூல்களின் கூற்று வாய்மையாதல் கண்டேன். நீயே அதற்குத் தக்க சான்று. ஆகவே, நீவிற் அறியாவுலகிற்குச் செல்லும் செலவு மேற்கொண்டுள்ளீர். ஆற்றுப்படையின்றியே போலும் அப்பெற்றித்தாய செலவு நீ நயந்தனிராயின், நும் நன்னர் செஞ்சத்து இன்னசை வாய்ப்ப, முன்னிய யாவையும் இன்னே பெறுக! யான் வருவல் என்று கூறிக் கொண்டே பறந்து சிறிது செல்ல, அக் குறும்புள், விருதுப்பட்டிக்கு விரைந்து போங் கலியைக் குறுக்கிட்டு உறுவிலை கொடுத்து வாங்கியாங்கு, “நிற்க சிறிது தாழ்த்தல் வேண்டும். நன்று, தாங்கள் கூறியது யாது? என் அறிவு மயங்குகின்றது” என்றது.

புறவம் :- அறியாவுலகத்திற்கு அமைந்துள்ள நூந்தம் செலவு மேதக்கதே. ஆயினும், இடைப்பட்ட எனக்கும் உனக்குமே அச் செலவு செய்தற்கேற்ற நெறி தோன்றாது போலும்.

குறும்புள்:- ஓ, அதனை விடுக. அவ்வுலகுபற்றிய உம்முடைய கோள் யாது? அதனை யேனும் கூறுக.

புறவம் :- என்னை? ஏ துரும்பே! என்னையோ இகழ்கின்றனை. நன்று! உன்னொத்த சீரிய இசைப் புலமையும், நுட்பமும் திட்பமுமமைந்து அறிவுமுடைய எவ்வுயிரேனும் அறியாத ஒன்றின்மாட்டு வெறிதே நினைந்து சாம்புங்கொல் வேண்டின், நீ நின்னையே கொள்ளலாம். உன்னைப்போல், வாளாது பொழுது கழிப்பதாயின் என்னையும் கொள்ளலாம். ஒன்று கூறுவேன்; யாவருக்கும் ஒல்லுவ தொல்லும் என்பதே சிறந்தது. மிகுத்துக் கூறல் மிக்க ஏதமே தரும்.

குறும்புள் :- அற்றேல், நீர் அவ் வறியாவுலகிற்குப் போகீர் போலும்!

புறவம் :- ஒருகாலும் இல்லை. முதற்கண், யானுறையு மிடம், முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும், வழங்கத் தவா வளப்பமும், விழைவு விடுத்த விழுமியோர்க்கும் விழைவு தோற்றுவிக்கும் விழுப்பமும் வாய்ந்தது. ஆகலின் யான் வேறிடம் விரும்பேன். மேலும், பெற்றது கொண்டு பெறும் பேறே பேறெனப்படுவது. இரண்டாவதாக, கேட்கப்படுவன யாவும் வாய்மைய என எளிது ஆராயாது கொள்ளும் நூம்மோரன்னோர் போலும் சிற்றறிவுடையேன் யானலன். அன்றியும், நீர் கூறும் உலகமொன்று உண்டென்பதையேனும் யான் எங்ஙனம் அறிவது?

குறும்புள் :- என்னை ஈன்றோர் எனக்கு அருளினர்.

புறவம் :-ஈன்றோர்களோ கூறினர் அங்ஙனமா அற்றேல், நீ மிகமிகச் சீரியதோர் பறவையே! நின் ஈன்றோர் கூறுவனவற்றைக் கூறியவாறே உளங்கொளும் நீர்மை வேண்டற்பாலதே அவர்கள் ஒருபகல், நீ செஞ்ஞாயிற்றைச் சென்று சேர்ந்து வாழ்தலுங் கூடும் என்பராயின், நீ ஆமென்றே கொள்ளுவாய் போலும்!

குறும்புள் :-(சீறியது போல்) ஈன்று புறந்தந்த என் குரவர் ஒருபொழுதேனும் என்னை வஞ்சித்ததின்றே!

புறவம் :-என்னை, யென்னை வெகுளுவதென்னை? என்னை செய்தி நின்பெற்றோர் நின்னை வஞ்சித்தனர்; வஞ்சர் என்று ஒருவரும் கூறிற்றிலரே! அவர், நின்னை வஞ்சித்திலராயின், ஒன்று கூறுவேன், அவர் பேதையரே. அன்றேல், பொருளறியாதாரே. நூம்மோரன்னோர் மாட்டு ஒன்றுகூறல் விழைவோர்,
உண்மையில், உளநேர்ய் கோடல் உலகியல், 'ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்வுயிர் போஒமளவும் ஓர் நோய்.' நிற்க, அவர் கூற்று வஞ்சனையின்பாற் படுவதோ, பொருளறியாமையின்பாற் படுவதோ, நீயே ஆராய்க. உலகியலும் உண்மையறிவு மிலரோடு உள்ளோர் உரையாடல் ஒருவாற்றானும் ஒல்லாதாகலின், யான் சென்று வருவல். வாழ்க! வாழ்க!! (மறைகின்றது.)

இங்ஙனம் அம் மடப்புறவங் கூறிய சொற்களாற் றன் உண்மையறிவு கலக்கங் கொண்ட குறும்புள் ஒரு வாறு தெளிதற்குள், அது கட்புலங் கடந்தது.

மறுபகல், வேனில் வெப்பமும், வெவ்விய காற்றும், இலவாக, தன் தன்மையிலோர் திரிபுண்மையைக் காட்டிற்று. நீனிற வானம் மானிறங் கொள்ளக் கொண்மூவினம் விண் முடின. கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வள்ளுறை சிதறித் தலைப்பெயல் பெய்ததாக, கரைபொரு திரங்கும் கான்யாறுவான் யாறொப்பப் பெருக்கிட்டோடி, குளிர்ப்பு மிகுதலும், உறைந்து பட, மாமேயல் மறந்தன; மந்தி கூர்ந்தன; பறவைபடிவன வீழ்ந்தன; கறவை கன்றுகோ ளொழிந்தன; குடாவடி உளியம் முதலியன பெருங்கல் விடரளையிற் செறிந்தன. ஆமா நல்லேறு சிலைத்தன; காற்றுற் றெறிதலால் மயிலினம் வீற்றுவிற் றோடின. இடம்பெற வமைந்த குடம்பைகள், பறவையும் பார்ப்பும் உறையுளின்றொழிய, நிலம்பட வீழ்ந்தன. வரனெனும் வைப்பில் உரங்கொண்ட அன்பு பூண்ட செம்புள்ளின் சேக்கைமட்டில் ஊறொன்றின்றி இனிதிருந்தது. அதனுழை யிருந்த குஞ்சுகள் இவ் வனைத்துங் காண்டலும், பெருவியப்புற்று, பகலோன் கரந்தனன்; பனி மிகுந்துளது என்கொல் எனும் எண்ணந் தலைக்கொண்டிருப்ப, ஒன்று, "பெருவானம் விரிகதி ரின்றியும், முகிற்குலம் பரவப்பெற்றும் உளது! தெண்ணீர்யாறு மண்ணீர்மையுற்று அசைவின்றி யுளது பகலவன் ஒளியே யின்றிப், பார்முற்றும் பசிய இருள் செறியப்பெற்றுளது என்னோ” என்றது.

மற்றும் ஒன்று:- நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமை இவ்வுலகு உடைத்தன்றோ!

தாய்ப்புள்:- (நகைத்து) ஆம்! ஆயினும், விரிகதிர்ச் செல்வனை நாம் நாளை காண்டல் கூடும். இஃதுண்மை! நிற்க, இக்காலத்துப் பகற்பொழுது குன்றிவருதலை நீவிர் அறிந்திலீர் போலும்! இன்றெழுந்த புயலே இப்பகற் பொழுதினைக் குறைத்தது; ஆதலாற்றான், செஞ்ஞாயிற்றின் வெங்கதிரும், இம் முகில்வழி நுழைந்து வெயிலெறித்தல் கூடாது போயிற்று. இதுகிடக்க. இத் தலைப்பெயல் நம் குடம்பை முற்றும் ஈரஞ்செய்திற் றின்றாகலின், உள்ளே வம்மின் குளிர்ப்பு நீங்க, யான் அப் பெரும் பெயர்ச் செலவின்மேற் பாட்டொன்று பாடுகின்றேன். பேதையிர், நீவிர் இப் பகற் பொழுதே என்றும் காண்டல் கூடு மென நினைக்கின்றீர்கொல்லோ?

இந் நிலவுலகின் காட்சிநலனைத் தூக்கி யுரைத்த சிறுபுள் முன்போந்து, "அன்னாய்! யான், பண்டு, என்றும் காண்டல் கூடு மென்றே எண்ணினேன், நினைத்தேன்; மற்று, இன்றே யான் அதன்கண்ணும் திரிபுண்மை கண்டேன். ஆயினும் யான் அதற்கு இனி அஞ்சேன் பருதி பரவை படிய, கருமுகில் பெரு மழை பொழிய, வானங் கருக, கான்யாறு பெருகின் வரும் நோய்தீர் மருந்தும் அறிந்துளேன். அது, நாம் அடைய விரும்பும் அறியாவுலகின் ஆய்ந்த நல்லிசை.

கேட்ட தாய், உவகை கிளர்ந்தெழ, நுனிக்கொம்ப ரேறி, கேட்கும் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் உள்ளிட்ட யாவும் மெய்பணிக்கும்வண்ணம், தேம்பிழிபோலும் இன்னிசை மிழற்றிற்று. அதுகாலை, அதனோடு சேவற்புள்ளும், சிறுபுள்ளும் ஒத்திசைத்து உவகைத்தேன் சுவைத்தன. யாவும் ஒத்திசைத்தன வெனினும் ஒன்றுமட்டில் அந்தோ உளம் ஒருப்படாது, உவகையுங் கூராது வெறுத்த நோக்கொடுநிற்ப, இசைப்பெருக்கு நின்றது. நிற்றலும் அது, ஏனைச் சிறுபுட்களை விளித்து, "இவ்விசை, இதனினும் பத்தடுத்ததாம், அதனுட் கூறப்பெறும் உலகுபற்றிய யாவும் உள்ளவாறு உணரப்பெறின்" என்றது. இவ்வாறே, பிரிவு காரணமாகத் துயருற் றிருந்த பெடைச்சிறுபுள்ளொன்று, நகைத்து, "அதனைப் பற்றி நாம் மிகைபட வுணர்வேமாயின், ஈண்டை நலத்தான் நமக்கு மனவமைதி யுண்டாகா தன்றோ!" என்றது. இவற்றைக் கேட்ட மற்றொன்று, “ஆம், நாம் அவ்வுலகுசார்பாக ஒன்றும் அறிந்திலே மன்றோ உண்மையில், அங்ஙனமோர் உலகு உண்டென்பதை யேனும் எங்ஙனம் அறிதலாம்?" என்றலும், மற்றொரு பெடைப்புள், "அன்று, அங்ஙன மொன்று உண்டென்பதை நாம் நன்கு உணர்கின்றோம். யாதோ? நம் அன்னை கூறிய உள்ளொலி என்னுள் எழுந்திசைத்தது! யான் உணர்ந்தேன்" என்று கூறிற்று.

இக் கூற்றினைக் கேட்ட தலைக்குஞ்சு, "உன்னுள் எழுந்திசைத்ததாக நீ நினைத்தனைகொல்லோ அது தானே ஆ இவையாவும் வெற்றுரைகளே. இங்ஙனம் நின்னைக் கூறுமாறு நம் அன்னை கூறினாள்போலும் அம்மம்ம! நீ கூறுவனவும், அன்னை கூறுவனவும் பிறவும் வீண் பொருளில் யாப்புக்களேயன்றிப் பிறிதில்லை. நுண்ணிய கேள்வியறிவு மிகினும் இயற்கையறிவு கூடினன்றோ அது மாட்சி பெறும் யானும் அப்புல்லறிவே மேற்கொண் டிருப்பின், அவ் வுள்ளொலி என்னுள்ளு மெழுந்திசைத்த தென்பேன். இனி யான் அவ் வுலகு சேறும் செலவையும் நினையேன். சேறற்கு உடன்படலும் படேன். செல்க" எனச் சிறிது வெகுண்டுரைத்தது.

“இஃதன்று நீ நிற்குமிடம்’ என்பது பொருளாக வமைந்த நல்லிசை யொன்றை எடுத்திசைத்தவண்ணம், குடம்பையின் புறத்தே தாய் வர, அகத்திருந்த பார்ப்புக்களுட் சில, தாய் பாடி யதையே தாமும் பாடத் தொடங்கின. அந்நிலையில், அத் தாய்ப் புள்ளின் உள்ளும் அவ் வொலி யெழுந்தது. எழவே, மறுமுறையும், அது அந் நல்லிசையையே தொடங்கி, “இழுமெனோதையின் அருவி யிரங்கலும், மருங்கு கரை கொன்று கான்யாறு சேறலும், விண்ணகங் கடந்து கொண்மூ வேகலும், மால்வரை துளங்கக் கால்பொரு தோடலும், விரிகதிர்ப்பருதி பரவையின் மறைதலும் எப்பொருள் நாடிச் செய்கின்றன. இதற்குக் காரணமாவது, அவற்றி னகத்தெழுந்து, “இஃது அன்று நீ நிற்குமிடம்” என் றொலிக்கும் அருளொலி யன்றோ யாற்றொடு கூடுக முகிலொடு மொழிக காலினை வினவுக! நீவிர் செல்லிடம் யாதென்று அறியாவுலகமே! வரனெனும் வைப்பேயன்றோ! 'நீ செல்லிடம் யா தென வெயிலவனை விளித்துக் கேண்மின். அவன் சேறுமிடனும் அப் பெறலரும் உலகே! குறித்த நாள் வருங்கால் நாம் அனைவரும் ஆண்டுப் படர்குவம்" என முடித்தது.

இவ் விசைவயப்பட்டு மனந்திருந்திய அத்தலைக்குஞ்சு, “அன்னாய்! அன்னாய்! நீ கூறுவது வாய்மைகொல்லோ யான் கொள்ளுமாறு யாது? அவ் வுலகம் உறுமிடம் யாண்டையது? அருள் செய்க," எனக் கசிந்தழுது, தன் தாய்முக நோக்கி, தனக்கு அம் மடப்புறவங் கூறிய அனைத்தும் முறையும் பொருளும் வழாது விளம்பிற்று. விளம்புங்காறும் அமைதிகொண்டேற்ற அச் செம்புள், “அருமந்த செல்வமே! அலமரல் வேண்டா, யான் வேறோர் நல்லிசை யிசைப்பல் கேட்டி" என்று தொடங்கித் தான் பண்டே யகன்ற உலகியலைப்பற்றிக் கூறல் தொடங்கிற்று.

அங்ஙனம், அவ்விடத்தினின்றும் அது அகன்றஞான்று, தான் ஏன் அகறல் வேண்டுமென்று நினைத்ததுண்டோ எனின் இன்று; செல்லுமிடம் இற்றென அறியாமே, பணிவும், உறுதிநோக்கும், நீங்குத னலத்திற்கெனும் திண்ணிய வெண்ணமும் ஆய இவையே அதன் உளப்பொருளா யமைந்திருந்தன. பெருங்கடலுலகிற் பிரிந்து வருநாள், அச் செலவுக்குரிய காரணப் பொருளை யுணர்த்துவாரேனும், “இஃதன்று, அது நின் நெறி" எனக் கூறுவாரேனும், அது கண்டதுண்டோ வெனின், அன்று. அஞ்ஞான்று, அம் மடப்புறவம் கண்டிருத்தல் கூடுமாயின், அது தானும் இவ்வாறு கூறற்பாலதாமோ? இவை யனைத்தும் ஆராயாது போந்த அச் செம்புள் தானும் பின்னர் உரிய நலத்தைத் துய்க்கா தொழிந்ததோ? அதனை யங்ஙனம் சேறல் செய்யுமாறு ஊக்கிய பொருளாய உள்ளொலி யாதாம்? அதுவே திருவருள் என்பது. அப்பறவை, அக் கான்யாற் றடைகரை யடைந்த நாளே உண்மையை ஒருவாறுணர்ந்தது. ஏனெனின், ஆண்டுத் தான் அது சின்னாள்வரைத் தங்குதல் விழைந்தது. பின்னரே, அதன் காதற் றுணைப்பறவை போதந்ததும், வாழ்க்கையின்பம் நுகர்ந்ததும் பிறவும் நிகழ்ந்தன. அன்பர்களே! அது போது, காதற் சேவலொடு கலந்து அது குடம்பை யமைக்கும்போது, தன்வயிற் பின்னர்த் தோன்றுவனவாய பார்ப்புக்கட்கென அக் குடம்பையைச் சமைக்கும் ப்ோது, அம் மடப்புறவங் கண்டிருக்குமேல், எத்துணை இகழ்ச்சி செய்திருக்குங்கொல்லோ! பிற வாப் பார்ப்புக்கட்குங் கூடமைத்தல் பேதைமை என் றெள்ளியிருக்குங் கொல்லோ! அன்றி, “எதிர்வினை யறிதல் யாங்ஙனம்? நீ இங்ஙன் செய்தல் வீண் பொருளில்யாப்பே, இஃது அறிவுடையார் தொழிலன்று" என்றெல்லாம் விரித்துரைத் திருக்குமோ! யாதோ? நிற்க, இச் செய்கைக்கெல்லா மாவதோர் காரணத்தையேனும் ஆராயாது அது செய்தது வஞ்சனையோ? அன்று. இவையனைத்தும் அத் திருவருளின் செயலே யாம் கூடமைத்துச் சேவலோடு கூடி வாழ்க்கைச் சாகா டுகைத்தற்கு, இதற்குப் பாங்கா யமைந்தது அவ்வுள்ளொலி யாய திருவருளன்றோ அதன்வழி நின்றதனாலன்றோ, அருமந்த பார்ப்புக்கள் பெற்று, அயராவின்பத்தில் அது திளைத்திருந்தது! இது காலை அது, தன் செல்வங்கட்குச் செல்வக்காலத்தும் அல்லற் காலத்தும் கோடற்பாலனவாய் உறுதிப்பொருள்களை யுணர்த்தற்கேற்ற அறிவமைதி பெற்றதோ? இன்றோ? "இவை யனைத்தும் பொருளில் புணர்ச்சி, கட்டுக்கதை, புலவர் புரட்சி". என்றெல்லாம் பிதற்றிய அம் மடப்புறவையே வினவுமின், அவ்வுள்ளொலி யதனை வஞ்சித்ததோ வென்று. அன்றியும், அச் செம்புள், “செல்வங்காள் எங்கு, ஏன் சேறல் வேண்டுமென்னும் ஆராய்ச்சியின்றி, இன்னே ஒருப்படுமின். இக்காலை யாம் அறிந்திலோமாயினும், மற்றொருகாலை யறிதல் கூடும்" என்றும், "பணிவும் [3] (Obedience) அறிவும் (Faith) பண்பட்டகாலத்தன்றே, மெய்யுணர்வும், பொருணலமும், விளங்கத் தோன்றலும் காட்டப்பெறுதலும் உளவாம்," என்றும் கூறியதனை அப்புறவம் உணரல் முடியாது போலும்!

பின்னர் நாட்கள் சில சென்றன. காரும் கூதிரும் நீங்கின. மழையும் பனிப்பும் மிகுந்தமையின், வரனென்னும் வைப்புப் பற்றிய நல்லிசை, அவற்றிடை, ஏந்திசையும் தூங்கிசையுமாகிப் பின்னர்ச் செப்பலோசையாய், இசைக்குந்தொறும் கேட்டவை மெய்சிலிர்ப்பவும், கண்ணிர் வாரவும், ஊன்கலந்த உயிர்கலந்து, உளங்கலந்து உடலமெல்லாம் உவட்டாநிற்கும் தேன்கலந்து, தித்திக்கும் தன்மையிற் சிறந்தது. இஃதுண்டாதற்குக் காரணம், என்னையெனின், அவை உண்மை யறிந்தன; அவ்வுண்மையையுணர்ந்தன; அவ்வுண்மையை உறுதி யெனவும் கொண்டன. ஆகலாற்றான், அவை ஆண்டை யின்பத்தையும் ஈண்டேயுணரலாயின.

நிற்க, ஒருநாள், சிறுகுஞ்சுகள் குடம்பையினின்றும் வெளிச் சென்றிருப்ப, அவற்றின் உளங் கலங்குதற் கேதுவாய பேரொலியொன்று அருகே யெழுந்தது. எழ, பேரச்சங்கொண்டு, அவை தம் கூடடைந்தன. கூடு அக்காலை, நிலைகுலைந்து, தளர்ந்து, நீரால் நனைப்புண் டிருந்தது. இருப்பினும், அவை, ஒன்றை யொன்றிறுகப்புல்லிச் சிறிது போது கிடப்ப, ஆய்ப்புள் இல்லாமை தெரிந்தது. எதிர் நோக்கிய கண்கள் பூத்துப்போயின; மனம் பெருந்துயர் பூண்டது. என் செய்யும்!

பின்னர் அவை, கூட்டினின்றும் வெளிப்போந்து, நோக்கு மிடந்தொறும் தம் தாய்ப்பறவையைத் தேடிச்சென்று, தளர்வும், களைப்பும் மீதுர, ஈன்றாரைக் காணாது ஏக்குற்ற நெஞ்சம் துயர்ந்து சாம்ப, காண்டல் கூடுமோ கூடாதோ என்னும் எண்ணம் ஒருபுடை யலைப்ப, பெரும்பேதுற்றகாலை சேறும் நீரும் கலந்து சிறிய நீர்நிலையும், சுற்று மோங்குத லில்லாப் புதலும் உள்ளதோர் துன்பநிலையம் அவற்றின் முன்னர்த் தோன்றிற்று. கூர்ந்து நோக்கியகாலத்து, பறவைச் சிறகும் சிறுமயிரும் சாம்பிய வோசையும் ஆண்டுத் தோன்றின. கண்ட குஞ்சுகள். வேணவா மீக்கொள, அங்குச் சென்று, இறந்த தொன்றும், இறக்கப் போவதொன்றுமாய இரண்டு புட்களைக் கண்டு, இறக்கப்போவது தம் யாயாதல் உணர்ந்து, பட்டதை என் கூறுவது படுவதைக் கண்ட தாய்ப்பறவை, செல்வங்காள் "எழுமின் சென்மின்| திருவருளின் காரியமாய உள்ளொலி உந்தம் உளத்தும் இன்னே எழுந்திசைக்கின்றது. சென்மின் சென்மின் பணிமின் படருமின் தாழ்த்தற்குச் சிறிது போதும் இன்று! இன்பநாட்டமே கொண்மின்!!" என்றது. எனக்கேட்ட குறும் புட்குழாம், "என்னை? எந்தை யாண்டுளார்! ஐயகோ! அன்னாய்! அன்னாய்!” என்று அலறிக் கூயின. "அமைமின்! அமைமின்! யாங்கள் ஆண்டு உம்மோடு சூழ விருத்தல் முடியாது; கூடாது. இனி..." என்று கூறிக்கொண்டே தன் தலையைக் கீழே சாய்த்து, வரனென்னும் வைப்பில் முளைத்தது. நிற்க, இதனை யீண்டு உரைத்துக்கொண்டே செல்லின் பெருகும்.

திருவருள் கைகூட்டுமாற்றினை வாழ்க்கைமுகத்தான் உணர்த்த வுணர்ந்த பறவைக்குஞ்சுகள், இன்பவுலகையெண்ணித் தாமும் பேரறம் நேர்ந்து, அப் பேருலகினை யடைதல் வேண்டி முடித்தனவாக, பலவும் பலவேறு நெறியிற் படர்ந்து சென்றன. அவை யாண்டுச் செல்கின்றன வென்றேனும், ஏன் செல்லுகின்றன வென்றேனும் ஒருவரேனும் கட்டுரைத்தல் கூடாது. கனவிற் கண்டன வொப்ப, தம் தாய்நினைவும், தம் பண்டைக் கூட்டி னுறைவும் பின்னர் அவற்றின் புலத்துத் தோன்றலும் மறைதலுமாயின. பெற்றதுகொண்டு பேரின்பந் துய்க்குங் காலத்துத் தம் தாய்நினைவு தோன்றிச் சிறிது மயக்கலும், அவை பின்னர்த் தெளிதலும் ஆய இன்னோரன்ன பல நிகழுங்காலத்து, ஒன்று கூறியது, ‘இதனினும் சிறந்ததோர் இன்பவுலகாதல் வேண்டும் நம் தாய் படர்ந்த வுலகம். அன்னதேயாக, அங்ஙனம் நம் தாய் கூறியதும் உண்மையே போலும்” என்பது.

  1. இதனைச் செம்பகம் என்றும் வழங்குப.
  2. “I may call it the Unknown Land."
  3. * பணிவு - வாவென வருதலும் போவெனப் போதலும் என்னும் கேள்விப்பயன். அறிவு - நல்லதன்கண் நலனும், தீயதன்கண் தீமையும் காண்டல் கூடும் என்னும் உறுதிநோக்கினைப் பயப்பது.
"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/003-020&oldid=1625126" இலிருந்து மீள்விக்கப்பட்டது