செம்மொழிப் புதையல்/009-020
திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளைப் படிப்பதில் இந்நாளைய நன்மக்கட்குப் பேரீடுபாடு உண்டாகியிருக்கிறது. அரசியலறிஞர் முதல் பள்ளிச் சிறார்கள் ஈறாக அனைவரும் இந்நெறியில் ஒத்த கருத்துடையராக இருக்கின்றனர். உலகிற்கே நல்லறமுரைத்த வள்ளுவர்பால் மக்கட்கு நன்மதிப்பு உண்டாகியிருப்பது நல்வாழ்வுக்கு அறிகுறி. நினைவு, மொழி, செயல் என்ற மூன்று துறையிலும் உரிமை திகழ மக்கள் வாழ்ந்த காலம் திருவள்ளுவர் தோன்றித் திருக்குறள் வழங்கிய காலம்; அத்தகைய காலம் இப்போது வந்திருப்பதால், மக்கட்குத் திருவள்ளுவரிடத்தே இத்துணையீடுபாடு தோன்றிய தெனலாம்.
இதற்கு முன்னெல்லாம், நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் இந்நாட்டில் வாழ்ந்தார் என்றாலும் அவருடைய எண்ணங்களும் செயலும் பிற நாட்டவர் நல்கியனவாகவே இருந்தமையால் வேற்று நாட்டவராகவே விளங்கினர். குழவிப்பருவத்தே, தாய் தான் தந்த பாலொடு உடன் ஊட்டிய தமிழ் மொழியை இகழ்ந்தனர்; தமிழ் நினைவைக் கைவிட்டனர்; தமிழ் வாழ்வைத் துறந்தனர்; தமிழ் நடையைத் தாழ்த்தினர்; தமிழுடையைமாற்றினர்; தமிழ்க் கல்வியைத் தூற்றினர்; தமிழ்ப் பண்பாட்டைக் கைவிட்டுத் தமிழ் மக்கட்குரிய சான்றாண் மையைக் கைதுவி, காலஞ் சென்ற தேசியகவி பாரதியார் கூறுவதுபோல "நாமமது தமிழரெனக் கொண்டு" உயிர் வாழ்ந்தனர். “தாய் நாட்டிலிருந்து கொண்டே வேறொரு பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றி விட்டதே இந்த அந்நிய மொழிக் கல்வி" யென அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் கழறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை.
இவ்வாறு உண்டாகிய மன மாசு இன்னும் நீங்கவில்லை; அடிமையுணர்வு அகலவில்லை; சென்ற இருநூறு ஆண்டுகளாக மெல்ல மெல்ல உடையைப்பற்றி, உடலைப்பற்றி, உதிரத்தைப்பற்றி, உயிரைப் பற்றிப் பிணைத்துக் கொண்ட அடிமைப் பண்பு நீங்கி விடுமா? வந்தது போல இல்லாவிடினும் ஒளிவர நீங்கும் இருள் போல விரைய நீங்காதன்றோ? உரிமை வாழ்வுபெற்று இயலும் நாம் உள்ளத்தாலும் உரையாலும் செயலாலும் இன்னும் அந்த அடிமைப் பண்பு நீங்காதேயிருக்கின்றோம். அதனால் தூய உரிமைக் கண்கொண்டு எழுதப் பெற்ற திருவள்ளுவரை நாம் அடிமைக் கண்கொண்டு காண்கின்றோம். அதுதான் இப்போது நம்மால் செய்ய முடிகிறது.
இந்த வகையில் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளில் பல பகுதிகள் தெளிவாய் விளங்கவில்லை. பல ஐயங்கள் உண்டாகின்றன. பல புதிய கருத்துகளைப் புகுத்திப் பார்க்கின்றோம். உண்மைக் கருத்துகள் சிலவற்றை உண்மைக்கு மாறாகக் கொள்கின்றோம். இவை யாவும் இயல்பாக உண்டானவை. உரிமை ஞாயிறு தோன்றுங்கால் இத்தகைய கலக்கங்கள் உண்டாவது இயல்பு.
திருவள்ளுவரது திருக்குறள் ஊழ் என்றொரு பகுதியைக் கொண்டுளது. அஃது அறத்துப்பாலின் இறுதியில் பொருட் பாலுக்கு முன்னர் இருக்கிறது. அதனை அங்கே கொணர்ந்து திருவள்ளுவர் வைப்பானேன், என்பது ஒரு கேள்வி. இது நெடுங்காலமாக நின்று நிலவும் பழமையான கேள்வி. திருவள்ளுவர் இதனைக் கூறியிருப்பாரா? ஊழையும் உப்பக்கம் காண்டல் கூடும் என அறிவுறுத்தும் திருவள்ளுவர். "ஊழிற் பெருவலியாவுள" என அதற்கும் பெருமை பேசும் இப்பகுதியைக் கூறுவாரா? என்பன போன்ற சில கேள்விகள் இப்போது புதியனவாய் எழுகின்றன. நெருப்பிற் புகை தோன்றுவது போல நற்சொல் நற்செயல்களில் தீமை தோன்றுவதும், தீச்செயல்களில் நன்மை தோன்றுவதும் இயற்கையெனப் பகவற் கீதையில் வியாசர் கூறுவதுபோல் பழமையில் தீமையும் புதுமையில் நன்மையும் உண்டாகலாமாதலால் இப் புதுக் கேள்விகளால் நன்மையும் விளையும் என்ற உறுதியால் இவற்றை மேற்கொண்டு மதித்து ஆராய்வது அறிஞர்க்குக் கடன். அதுபற்றி இச் சிற்றாராய்ச்சி இங்கே செய்யப்படுகிறது. நல்லறிஞர்கள் ஆராய்ந்து நலங் கொள்வார்களாக.
திருவள்ளுவப் பெருமான் வழங்கிய திருக்குறளின் அடிப்படையான கருத்துகள் யாவையென முதற்கண் காண்போம். நம் நாட்டு மக்கள் வாழ்வில், பேச்சில், செயலில் சில அடிப்படைக் கருத்துகள் உண்டு. இவற்றுள் சிறப்பாக மூன்றைக் காணலாம். அவை வினை, மறுபிறப்பு, மேலுலக கீழுலக வாழ்வு ஆகிய மூன்றுமாகும்.
"இருள்சேர் இருவினையுஞ் சேரா" "எனைப்பகை யுற்றாரும் உய்வர், வினைப்பகை வீயாது பின் சென்றடும்" என்றும், "எழு பிறப்பும் தீயவை தீண்டா" "எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர்," "இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேமா" என்றும், "மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று," "ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கழுந்தும் அளறு” என்றும் வருவன இவ்வடிப்படைக் கருத்துகளை எடுத்தோதுகின்றன.
இம் மூன்றனுள் வினையே மறுப்பிறப்புக்கும் மேலுலக கீழுலக வாழ்வுக்கும் காரணம்; நல்வினை செய்தார் மறுபிறப்பில் மேலுலக வாழ்வு பெறுவர் தீவினை செய்தார் மறுபிறப்பிற் கீழுலகடைந்து துன்புறுவர். நலந்தீங்கு கலந்த வினை செய்தார் பிறப்புகளை யெய்துவர். இக்கருத்துகளையும் நாம் இத்திருக்குறளிலேயே காணலாம். ஆகவே, வினையால் மறுபிறப்புற்று, மேலும், கீழும், நடுவுமாகிய உலக வாழ்வுகளில் பிறந்து உழலுவதை விடுத்து வினையின் நீங்கிப் பிறப்பறுத்து வீட்டுலகம் சென்று சேர்வதே வாழ்வின் குறிக்கோளாகும். வீட்டுலகத்தைத் திருவள்ளுவர் "வானோர்க்கு உயர்ந்த உலகம்" என்றும், “வரன் என்னும் வைப்பு" என்றும், “இறைவன் அடி” என்றும் கூறுகின்றார். மேலுலகத்தைப் "புத்தேளுலகம்" “தாமரைக்கண்ணான் உலகு" "மேலுலகம்" என்று, சிறப்பித்துரைப்பர். இவற்றையெல்லாம் நோக்கினால் மேல் கீழ் நடு எனப்படும் மூவகை யுலகங்களின் வாழ்வு வினை காரணமாக உண்டாவன என்பது இனிது விளங்குகிறது.
இவ்வினையுணர்வும் மறுபிறப்புணர்வும் பிறவும் திருவள்ளுவரே படைத்து மொழிவன அல்ல. அவர்க்கு முன்னிருந்த சான்றோர்களே கூறியிருக்கின்றனர். "வாழச்செய்த நல்வினையில்லது, ஆழுங்காலைப்புணை பிறிதில்லை” (புறம்) யாம்செய் தொல்வினைக்கெவன் பேதுற்றனை" (நற்) என வினையுணர்வும், "சாதலஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப்பிறிதாகுவதாயின், மறக்கு வென்கொல் என்காதலன் எனவே" (நற்) "இம்மை மாறி மறுமையாயினும், நீயாகிய ரெங்கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே" (குறுந்) “இம்மை யுலகத்திசையொடும் விளங்கின மறுமை யுலகமும் மறுவின் றெய்துப" (அகம்) என மறுபிறப்புணர்வும் "வாராவுலகம் புகுதலொன்றெனப் படை தொட்டனனே குரிசில்" (புறம்), "தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்" (புறம்) என மேலுலக வுணர்வும் சங்கச் சான்றோர்களால் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறே மிகப் பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தும் இம்மூவகையுணர்வும் குறிக்கப்பெறுகின்றன. வடநூல்களிலும் வேதங்கள் தவிர ஏனை எல்லா நூல்களிலும் இவை கூறப்படுகின்றன. உலகாயதம் ஒழிந்த ஏனையச் சமயங்கள் யாவும் இவற்றை மேற் கொண்டுள்ளன. ஆதி வைதிகம் ஒழிந்த இந்திய சமயங்கள் பலவற்றிற்கும் வினையுணர்வு அடிப்படை எனத் தெளிய உணர வேண்டும்.
வினை யென்பது யாது? மனம், வாய், உடம்பு என்ற கருவிகளின் இயக்கமும் இயக்கமில்லாமையும் வினையென்று கூறப்படும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வினையாகும். உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பயன் உண்டு. இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான் என்றால் கட்டுதல் வினையும், பெரிய கோயில் செயப்படு பொருளுமாகும். அதனால் அவன் அடைந்த பயன் இன்பமாம். இப்படியே ஒவ்வொரு வினைக்கும் செயப்ப்டு பொருளும் பயனும் உண்டு. தொடக்கத்தில் சமய நூல்கள், செய்கையை வினையென்றும், செயப்படுபொருளைக் கன்மம் என்றும் கூறின. ஒரு செயல் செயப்பட்டபோதேயன்றிச் செயப்படாத போதும் வினையெனவே நின்றதனால் பின்வந்த சமய அறிஞர்கள், செய்யப்படும்போதும் படாதபோதும் செயப்படுபொருள் உள்ளடங்கியிருப்பது கண்டு, செயலையும் செயப்படு பொருளையும் ஒருங்கு கூட்டி வினையெனவும், கன்மமெனவும், இன்பமும் துன்பமுமாகிய பயன்களை வினைப்பயன் என்றும், கன்ம பலன் என்றும் வழங்கினர்.
ஒருவினை செயப்படுங்கால் அதனால் விளையும் பயனும் உருவர்கிறது. அவ்வினை செயப்பட்டதும் பயனும் உருவாகி செ-10 இன்பமோ, துன்பமோ நல்குகிறது. சில வினைகள் முடிந்தபின் சிறிது காலங்கழித்துப் பயனைத் தருகின்றன. இவையெல்லாம் நாம் உலகியல் வாழ்வில் நாளும் காணும் காட்சியாகும்.
இவ்வினைக் குறிப்பு வேதங்களில் காணப்பட வில்லையென அவற்றை யாராய்ந்த அறிஞர் கூறுகின்றனர். ஆயினும், அவ்வேதங்களிற் குறிக்கப்படும் மந்திரங்களைப் பிழை சிறிதுமின்றி ஒதினால் கருதிய பயன் விளையுமெனப் பிற்காலவைதிகர்கள் கூறுவர். மந்திரங்களை வாயால் பிழை சிறிதுமின்றி ஒதுவதும் வினையே யென்பது நன்கு தெளிய வேண்டியதென்று. எனவே, தமிழ் நூன்முறைப்படி எல்லா நாட்டு எவ்வுயிரிடத்தும் வினையுணர்வு உண்டு என்பது தேற்றம்.
இனி மந்திரங்களை ஒதுங்கால் அவற்றின் பயன் அருவாய் உருவாகிறது. அம்மந்திரங்களை விதிப்படி யோதி முடித்தவழி, மந்திரப்பயன் உருவாகி ஒதுவோர் விரும்பிய பயனை நல்குகிறது. அருவாய் உருவாகும் மந்திரப்பயனை அதிருஷ்டம் என வட நூல்கள் ஒதுகின்றன. இவ்வேதங்களைத் தொடர்ந்து நிற்கும் சங்கிதைகள் இவ்வினையியல்பை வற்புறுத்தாவிடினும் நல்வினை செய்பவன் துறக்கவுலக இன்பமும், தீவினை செய்பவன் நிரயத் துன்பமும் பெறுவர் என்று இசைக்கின்றன. இதனால் வினையுண்டென்பதும் மறு பிறப்புண்டென்பதும் பிறவும் பிற்கால வைதிகர்களுக்கும் உடன்பாடானமை தெளிகின்றோம்.
செய்வினையின் முடிவில் நிற்கும் வினைப்பயன் உடனே வந்தெய்துவதும், காலங்கழித்து வந்தெய்துவதும் உண்டெனக் கண்டோம். வினை முடிவில் எய்தக்கூடிய பயன், வினை முடிந்த சிறிது காலத்திற்குப்பின்னர் வந்து எய்துவானேன்? ஏன் உடனே எய்துவதில்லை? என்பன முதலிய ஐயங்கள் எழுதுவதற்கு இடமுண்டு. வினை நிகழுங்கால் அருவாய் உடன் பிறக்கும் அதிருஷ்டம், தனக்குரிய பயனை விளைவித்தற்குரிய பக்குவம் எய்த வேண்டியிருக்கிறது. வினையைச் செய்தவர், அதற்குரிய பயனை நுகர்தற்குரிய காலம் வரும்வரையில், அதிருஷ்டம் பக்குவம் பெற்றுக் கொண்டு வரும். பக்குவமானவுடன் தன் பயனை அந்த அதிருஷ்டம் நுகர்வித்து விடும். செய்வினையின் பயனைச் செய்தவர் பெறுதற்குரிய அதிருஷ்டம் பக்குவப்படுவதைச் சார்ந்திருக்கிறது. அதிருஷ்டமும் செயப்படு பொருள் போல வினையிடத்தே தோன்றுவதால் தமிழ் நூலார் கூறும் வினைக்கண் அடங்கிநிற்கும்.
ஒருவினை (அதிருஷ்டம்) பக்குவப்படுவதற்குள் வேறுபல வினைகள் வந்து சேர்ந்துவிடும். இவற்றில் பக்குவப்பட்டவை இப்பிறப்பிலேயே பயனை நல்கும். எஞ்சியவற்றை நுகர்வது குறித்து மறுபிறப்பு வந்து சேர்கிறது. வினைப்பயன்களின் கூறுபாட்டிற்கேற்ப மறுபிறப்பில் புல் முதல் தெய்வமீறாகப் பல்வகையுடம்புகள் தோன்றுகின்றன. இதனால் எடுக்கும் பிறப்புகளும் பலவாகின்றன.
பிறவிதோறும் எடுக்கும் உடம்பு கருவியாகக் கொண்டே வினைப் பயன்களை நுகரவேண்டும். நுகருந் திறம் உடம்பு தோறும் வேறுபடும். அதற்கேற்பச் சில பயிற்சிகள் உண்டள்கிக் குணம் போல ஒன்றிவிடும். அவையே அவ்வுடம்புகருவியாக வினைப்பயன் நுகர்வதற்கு வாயிலாய்ச் செயற்படுகின்றன. இவற்றை வாதனை என்பர். தமிழ் நூல்கள் வாதனையை அவா என்று குறிக்கும். பக்குவமெய்தி நிற்கும் வினைப்பயன் வாதனையின் வாயிலாக உயிரை வந்து அடைகிறது. வினைகள் பக்குவப்படுவதற்குரிய காலமும் பயன்களின் அளவும் அவ்வினைகளின் வன்மைகளைச் சார்ந்திருக்கின்றன. சில வினைகள் பக்குவமுற்றுப் பயன் நல்குங்கால் வேறான சில வினைகளும் பக்குவமெய்தி நிற்கலாம். அற்றுள் வலியதனால், மெலியது பக்குவமெய்திருப்பினும் பற்றுக்கோடாகிய வாதனை யில்லாமையால் கெட்டழியும். சீவன் முத்தன் ஒருவன், தன் உடம்பளவாய் நிற்கும் வாதனையைப் (அவாவை) பற்றி வந்து அடையும் வினைப்பயனை நுகரும்போது, பக்குவ மெய்தியிருக்கும் ஏனை வினைகட்குப் பற்றுக்கோடாகாதபடி வாதனைகளைத் தன் பால் நிலையா வண்ணம் அறுத்து விடுகின்றான். அதனால் அவன் வினைத் தொடர்புகளின் நீங்கி வீடுபெறும் திறம் பெறுகின்றான்.
நம் நாட்டு அறிவு நெறிச் சமயங்கள் பலவும் இறைவன் உலகம் உயிர் என்ற மூன்று பொருள்களையும் கண்டிருந்தன. கடவுள் என்ப தொன்றுண்டு என்பதைத் தொடக்கத்தில் வற்புறுத்தாத நையாயிகரும் சாங்கியரும் பின்னர் அதனை யுணர்ந்து மேற்கொண்டனர். பிரமப் பொருள் ஒன்றேயுளது; ஏனை உலகம் உயிர் என்பன பொய்யென்று கொண்ட பிரம வாதிகளும், விவகார மென ஒரு நிலை வகுத்து அதன்கண் இம்மூன்றும் உண்டெனக் கொண்டு சமயப்பணி புரிந்தனர். இம்மூன்றனுள் இறைவன் உயிர் என்ற இரண்டும் அறிவுடைப் பொருள் என்றும் பிறவெல்லாம் அறிவில்லாதவையென்றும் கூறுவர். வினையும், வினைப்பயனும் வாதனையும் ஆகியயாவும் அறிவில்லாதவை.
அறிவில்லாத வினைப்பயன் அறிவில்லாதவாதனையைப்பற்றுக் கோடாகக் கொள்வதும், இன்பமும், துன்பமுமாகிய வினைப்பயன்களை உயிர்கட்கு நல்குவதும் கூடா. அறிவுடைய உயிரை அறிவில்லாத வினைப்பயன்கள் வந்து எய்துவதற்கு அறிவுடைய இறைவன் வேண்டப்படுகின்றான். அவன் உலகைப்படைத்து அவரவர் செய்த வினைப் பயன்களை அவரவரோடு கூட்டி நுகரச்செய்வதும் அந்த இறைவன் வேலை என்று கண்டனர். அது பற்றியே தொல்காப்பியரும் கடவுளைப் "பால்வரை தெய்வம்” என்றார். உலகுயிர்களைக் கடந்து நிற்கும் நிலையில் இறைவனைக் "கடவுள்" என்றும், அவற்றோடு தொடர்புற்று நிற்கும் நிலையில் "தெய்வம்" என்றும் தொல்காப்பியரை யுள்ளிட்ட தமிழ் நூலார் கூறினர்.
இனி வடநூலாருள் யோக சமயத்தார் இவ்வினைகளைச் சுக்கில கன்மம், கிருஷ்ண கன்மம், சுக்கில கிருஷ்ண கன்மம், அசுக்கில கிருஷ்ண கன்மம் என நால்வகைப்படுத்திக் கூறுவர். சுக்கில கன்மம் நல்வினை; கிருஷ்ண கன்மம் தீவினை; இரண்டுமிலாத வினை அசுக்கில கிருஷ்ண கன்மம். இறுதியிற் கூறிய அசுக்கில கிருஷ்ண கன்மத்தையே செய்பவன் வீடு பெறுபவன் என்பதும் அவன் அது செய்வதால் அவனுடைய புத்தி தத்துவத்திற்கிடந்து அவனையடைவதற்குப் பக்குவ முற்றுவரும் முன்னைவினைகள் (அவாவென்று தமிழில் கூறப்படும்) வாதனையாகிய பற்றுக்கோடு இல்லாமையால் கெட்டுப்போம் என்பதும் யோகநூலார் கொள்கை.[1] ஒரு மனிதனுடைய நினைவு, சொல், செயல்களால் கன்மமென்னும் நுண்ணிய பொருள் உண்டாகிறது. அவனுடைய விருப்பு வெறுப்புகள் பசைபோல் ஊறி அக்கன்மத்தைத் தன்பால் ஈர்த்துக்கொண்டு சீவ பதார்த்தத்தில் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு, பல பிறவிகளிலும் ஈட்டப்படும் கன்மம் சீவனைச் சூழ்ந்துகொண்டு கன்ம சரீரமாகிறது. பிறப்பு மாறுங்கால் சீவன் கன்ம சரீரத்தோடே நீங்கும் இன்ப துன்பங்களை ஒப்ப நோக்கி நுகரும் மேலோர்க்கு அக்கன்மம் முதிர்ந்து உதிர்ந்தொழியும்; அல்லாதவர்.பால் அக்கன்மம் பெருகி வெண்மை கருமை முதலிய "இலேசியம்" பெறும். ஐவகைச் சீலங்களிலும் சிறிதும் பிழையின்றி யொழுகும் சான்றோர் புதிய கன்மங்களைச் செய்யாமையால் முன்னைக் கன்ம பலங்கள் முற்றும் நுகர்ந்து கழிந்தபின் உடம்பின் நீங்கி உலகத்து உச்சியில் வாழும் வீடுபெற்று முத்தர்களோடு கூடி இன்புறுவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. புத்த சமயம் ஆன்மா உண்டென்பதை மேற்கொள்ளா தொழியினும் வினையும், மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழுகுகிறது. யோகர்கள் போலப் புத்தர்களும் வினையை நலம் பயப்பன, தீங்கு பயப்பன, இரண்டும் பயவாதன என நால்வகைப்படுத்து இறுதியிற் கூறிய வினைவகையால் ஏனை வினைகளெல்லாம் கெடும் என்பர்[2] வினைகட்கெல்லாம் இச்சையே காரணம். இச்சையை நீக்கியவன், அறியாமை வெறுப்பு ஆசை முதலியவற்றைக் கெடுத்துப் பிறப்பறவுயரும் பெரியோனாவன். அவன் முன்னை வினைப்பயன்களை மட்டில் இப்பிறப்பில் நுகர்வான். அவன் வினைத் தொடர்பால் கீழ்நிலை எய்தான். அவன் அருக பதம் பெற்ற பரமேட்டி எனவுரைக்கின்றனர்.
இவ்வண்ணம் நம் நாட்டில் தோன்றிய சமயங்கள் பலவும் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டுள்ளனவாயினும் உலோகாயதம் ஒன்றுதான் இவற்றைக் கொள்ளவில்லை. உலகாயதருள்ளும் சுசிட்சித சாருவாகர் என்போர் ஆன்மா என ஒன்று உண்டெனக்கொண்டு அதுவும் இறக்குங்கால் உடம்போடே அழிந்துவிடுகிற தென்பர். ஆசீவகருள் வினையும் மறு பிறப்பும் பிறவுமாகிய கொள்கைகளை ஏற்பதிலர்.இவர்களை அஜிதகேச கம்பளர் என்பர். ஆசிரியர் திருவள்ளுவர் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழுகும் கொள்கையினர் என்பதை முன்பே கண்டோம்.
ஒருவருடைய நினைவு, சொல், செயல்களாகத் தோன்றும். வினைப்பயன் பழுத்து நிற்கும் நிலையில் ஊழ்வினை என்று கூறப்படுகிறது. ஊழ்த்தல் என்பது “இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர்” என்றும் “தீஞ்சுளைப் பலவின்பழம் ஊழ்க்கும்மே” (புறம்) என்றும் சான்றோர் வழங்குவதால் ஒரு வினைச் சொல்லாதலைக் காண்கிறோம். இதன் பொருள் பயனுண்டாக முதிர்தல் என்பதும் அறிகின்றோம். மலர்ந்து மணமாகிய பயன் நல்கும் பூ, ஊழ்முகை (நற். 115) என்றும், கனிந்து பயன்படும் பழத்தை ஊழுறுபழம் (அகம். 117) என்றும் சான்றோர் வழங்குகின்றனர். இதனால் ஊழ்வினை யென்பது முதிர்ந்து பயன் நல்கும் வினை என்று பொருள்படுமாறு இனிது விளங்குகிறது.
பழுத்த பழம் மரத்தில் நில்லாது என்பது உலகுரை. நன்கு முதிர்ந்த கனி தன்பால் முதிரும் விதையாகிய பயனை எவ்வண்ணமேனும் அதன் முதலிலிருந்து நீக்கி அப்புறப் படுத்திவிடுமேயன்றித் தன்னிடமே கொண்டொழியாது என்பது கருத்தாம். மரம் ஒன்று பழம் ஊழ்த்தல் விதை பயந்து தன் இனம் பெருக்கும் குறிப்பிற்றாதல்போல் வினை ஊழ்த்தல் தன்பயனைத் தன்னைச் செய்தோர்க்கு நல்கி மேலும் வினைகளாகிய தன் இனத்தைப் பெருக்கும் இயல்பிற்றாம். பழுத்த பழம் விதைப்பயனை வெளிப்படுத்தாது ஒழியாமை போல ஊழ்வினையும் தன் பயனை ஊட்டாது கழியாது என்பது விளங்குகிறது. ஊழ்கணிக்கு அஃது இயற்கையமறமாதல்போல ஊழ்வினைக்குப் பயன் நல்குதல் இயற்கையறமாம். இயற்கையறம் எல்லா ஆற்றலினும் வலிமிக்கதாதலால் ஊழ்வினையின் வலிமிகப் பெரிது என்பதுபற்றி ஆசிரியர் ‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று அதன் வலிமிகுதியை விளக்குகின்றார்.
பழுத்து வரும் பழம் இடையே மாறுபட்ட பொருள்களால் வெம்பிப் பயன் ஊழ்க்காது போதலும் உண்டு. அதுவும் இயற்கை நிகழ்ச்சி. அதனால் ஊழ்த்துவரும் வினையும் பயன் நல்காது கெடுதற்கு வாய்ப்புண்டு என்பது பெறப்படும். கனி வகைகள் பலவும் பெரும்பாலும் ஊழ்த்துப் பயன்படுதலும் மிகச் சிலவே இடையிற் கெடுதலும் இயல்பு. அதுபோல ஊழ்வினையுள் ஒரு சில மாறுபட்ட வினைகளால் பயன் ஊழ்க்காது கெடுதற்கு இடமுண்டு என்று சான்றோர் கண்டனர். அதனை ஆராய்ந்தவர், உலையா முயற்சியால் ஊழ்வினையும் பயன் ஊழ்க்காது கெடும் என்று தெளிந்து, "ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றனர். ஊழையும் ஊழ்க்காது கெடும் என அதன் வினையால் கூறாமல், ஊழையும் ஊழ்க்காவாறு இடையூறு செய்வர் என்பது தோன்ற, உப்பக்கம் காண்பர் என்று ஆசிரியர் கூறுவது நினைவு கூரத்தக்கது. பள்ளம் நோக்கி ஒடுவதை இயற்கை யறமாகக் கொண்டதண்ணீரும் இடை நிகழ்த்தும் தடையால், நின்று வற்றுதல்போல் ஊழ்வினையும் இடை நிகழ்த்தும் முயற்சிகளால் நின்று வற்றுவது இயல்பாதலின், ஊழை உப்பக்கம் காண்பது உயிர்கட்கு இயல்வதொன்றாயிற்று. ஆகவே, ஊழ்வினை தனக்குரிய பயனை ஊழ்த்தும் நல்குவதில் பெருவலி இயற்கை யறமாக வுடையதென்பதும், எனினும், மாறுபட்ட வினையால் அவ்வலி தடையுற்று நின்று வற்றும் என்பதும் முடிவாயின. இது பற்றியே,
“சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.”
என்ற திருக்குறளும் தோன்றுவதாயிற்று. சான்றோரும் வினை பெருவலியுடையதாயினும், வெல்லத்தக்கது; கெடுத்தற்குரியது என்றெல்லாம் பேசுவராயினர்.
(அருந்தமிழ் உரைவளங்கண்ட பெருந்தமிழ்ப் பேராசிரியர் ஒளவை அவர்கள் இற்றைக்கு முப்பது ஆண்டுகட்கு முன்னர் பன்னெறிச் சமயப் பனுவல்களில் தோய்ந்த நிலையில், மணிமேகலைக்கு உரைகண்ட திளைப்பில் திகழ்ந்தபோது இக் கட்டுரை எழுதினார். 1954-ஆம் ஆண்டு மயிலம் திருப்பெருந்திரு சிவஞான பாலய சுவாமிகள் மணி விழா மலரில் வெளிவந்த இக் கட்டுரையைப் பேராசிரியரது நான்காம் ஆண்டு நினைவாக வெளியிட்டுப் புகழ் வணக்கம் செலுத்துகின்றோம்.)