11. தமிழ் மகளிர்

ண்டை நாளைத் தமிழகத்தில் மகளிரது நிலைமையை அறிந்துகொள்வது மிகவும் நன்று. மக்கட் படைப்பில் ஆடவர் பெண்டிர் என்ற இருபாலார்க்கும் உடலமைப்பில் சிறிது வேறுபாடு உண்டேயன்றி நினைவு, சொல், செயல், அறிவு என்ற கூறுகளில் வேற்றுமை கிடையாது. உடலமைப்பு வேறுபாடு மக்கட் பேற்றுக்கும் மக்களினப் பெருக்கத்துக்கும் ஏற்ற வகையில் துணைபுரிகின்றது. அதனால் உலகியல் வாழ்க்கைக்கு ஆணும் பெண்ணும் ஒன்றற்கொன்று இன்றியமையாத் துணையாதலை நாம் காண்கின்றோம். புறத்தே சென்று வாழ்க்கைக்கு வேண்டும் உண்டி, உறையுள் முதலியன நாடி நல்கும் வகையில் ஆடவர் சிறந்து நிற்றலின் அவரது உடற்கூறு ஏனைப் பெண்டிரது உடலினும் வலி மிக்கதாகின்றது. மகப் பெறுதலும் அவற்றை வளர்த்தலும் ஆகிய செயல்வகைகளில் பெண் மகளிர் ஆடவரது துணைமையைப் பெரிதும் நாடுதலின் ஆடவர்நிலை சிறிது உயர்வதாயிற்று. இன்னோரன்ன காரணங்களால் மக்களுலகில் பெண்டிரது நிலை சிறிது அடங்கிய தன்மைத்தாக உளது. இந்த நிலைமையினைப் பழங்கால மக்களில் சிலர் நன்கு உணர்ந்து கொண்டு மகளிரைத் தங்கள் நலனுக்காகப் படைக்கப்பட்டவரெனக் கருதி ஒழுகினர்.

நம் தமிழகம் பண்டை நாளில் பிற நாடுகளோடு தொடர்புற்று, வாணிகம் முதலிய துறைகளில் சிறந்து விளங்கியபோது, மேலை நாடுகளில் கிரேக்கரும் யவனரும் எகிப்தியரும் பாரிசேயரும் பாபிலோனியரும் பிறரும் மதிப்புடைய நாகரிகம் கொண்டு விளங்கினர்; அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகளும் அரசியல் நெறி முறைகளும் அறிவுரைகளும் இன்றும் மேனாட்டவரால் பாராட்டப்படும் தகுதி படைத்துள்ளன. அவர்களுடைய வாழ்வில், மகளிர் நிலை ஆடவர்க்கு அடிப்பணி புரியும் துறையிலேயே இருந்தது. எரோடாட்டசு முதலியோர் குறிப்புகளால் ஆண் மக்களால் ஈட்டப்படும் பொருள் வகையுள் ஒன்றாகவே மகளிர் கருதப்பட்டமை தெரிகிறது. மக்களைப் பெறுதலும் வளர்த்தலும் குடும்பத் தொழில்களைச் செய்தலுமே அவர்கட்குச் சிறந்த பணிகளாகக் குறிக்கப்படுகின்றன. எகிப்தியர்கள் மகளிர் பலரை மணந்துகோடல் மரபாகக் கொண்டனர். தொடக்கத்தில் அஃது அரசர்பால் தோன்றி நாளடைவில் யாவர்க்கும் எய்துவதாயிற்று. இசுலாம் சமயம் பரவிய பின் எகிப்து மன்னர் மகளிர் பலரை மணத்தல் கடமையாகக் கொண்டனர். ஒருவன் தான்கொண்ட மனைவியர் பலரும் அவர் வயிற்றிற் பிறக்கும் மக்களும் தனக்குக் கிடைத்த செல்வமாகக் கருதினான். அவர் அனைவருடைய உழைப்பும் குடும்பத்துக்குப் பொருள் வருவாயாக இலங்கிற்று. வென்ற வேந்தர் தோற்றோர்டால் பெறப்படும் திறைப் பொருளாக மகளிரைப் பெறுவது அந்நாளைய இயல்பு. வேந்தரைக் காணச் செல்லும் தலைவர்களும் செல்வர்களும் இளமகளிர் பலரை அவர்கட்குப் பரிசுப் பொருளாகவும் வழங்கினரென எகிப்து நாட்டு வரலாறு கூறுகிறது. இம்மனைவியர்க்கு வேறாக இற்பரத்தையராக நூற்றுக் கணக்கில் மகளிரைத் தொகுத்து வைத்தல் மேலை நாட்டு அரசர் செயல்முறையாக இருந்திருக்கிறது. இவ்வழக்கம் கிரேக்கர் யவனர் முதல் பாபிலோனியர் கிசியர் ஈறாக எல்லோரிடையும் இருந்துளது. அரபியர் மாத்திரம் இத்துறையில் ஓரளவு உயர்ந்த நோக்கம் கொண்டனர். ஆண் மக்களைப் போலப் பெண்ம்க்களும் அரசியல் வகைகளிலும் போர்த் துறையிலும் சிறந்த பங்கு கொண்டனர். முறை புரிதல். படைக்கலம் பயிறல், படைத்தலைமை தாங்கல் முதலியவற்றில் மகளிர் ஆடவரையொப்ப விளக்க முற்றனர். அறிவாராய்ச்சி, இசை, கூத்து, இலக்கியப் புலமை, இனிய சொல்வன்மை என்ற நலம்பல வற்றில் மகளிர் சிறப்புற்றுத் திகழ்ந்தனர். ஆடவர் அனைவரும் மணம் புரிந்துகோடல் இன்றியமையாதது; மண்மாகாமை ஓர் ஆடவனுக்கு இழிவையும் பழிப்பையும் நல்கிற்று. மக்கட் பேற்றுள் ஆண்மகப்பேறு கடவுள்பால் பெறலாகும் பேரருளாகக் கருதப்பட்டு வந்தது.

மேலைநாட்டுப் பாலை நிலப்பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் பெண் மக்களைப் பெருஞ்சுமையாகவும் வேண்டாப் பொருளாகவும் கருதினர். பழந்தமிழரிடையே நிலவிய நிரைகோடல் என்ற போர்த்துறைபோல, பாலை நில மறமக்கள் பகைவருடைய மகளிரைக் கவர்ந்துகோடலும் பின்பு அடிமைகளாக அவர்களை மேற்கொண்டு நடத்தலும் செய்து வந்தமையின், அவர்கட்கு மகப்பேற்றுள் பெண்களைப் பெறுதல் வெறுப்பையும் அச்சத்தையும் விளைவித்தது. பெண்ணினத்தின் பெருக்கத்தைக் குறைப்பது கருதிப் பெண் மகவுகளைத் தாம் வழிபடும் தெய்வங்கட்கு உயிர்ப்பலி செய்வதும் ஒருசில மக்களிடையே ஒழுகலாறாக இருந்தது.

அந்நாளில் நமது நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த மக்களும் கிரேக்க யவன எகிப்தியர்களைப் போலப் பெண்களை மகப்பெறுங் கருவியும் கணவனுக்கு மனைக்கண் இருந்து பணி புரியும் அடிமையுமாகவே கருதினர். ஒருவன் பல மகளிரை மணத்தல் விலக்கப்படவில்லை; அரசர் ஐந்து மகளிரை மனைவியராகக் கொள்ளலாம். அவர்கட்கு மேலும் மகளிரை வேந்தர் வரைந்து கொள்வர்; ஆயினும் அவர்கள் மனைவியராகும் தகுதியின்றி உரிமை மகளிர் என்ற பெயரால் நிலவுவர். முதல் மனைவியிருக்க வேறொருத்தியை ஒருவன் மணக்க விரும்பின், முதல் மனைவியின் இசைவைப் பெற்றுத் தான் மணந்து கொள்வான். இவ்வழக்கு மேலை நாட்டிலும் இருந்தது. ஆபிரகாம் என்பவன் சாரா என்ற மனைவி யொருத்தி இருப்பவும் அவளது இசைவு பெற்று இரண்டாம் மனைவியாக ஆகர் என்பவளை மணந்து கொண்ட வரலாறு இதற்குச் சான்று பகருகின்றது.

ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் சிறிதும் இலனாயினும் பொல்லாத காமுகனாயினும் அவன் மனைவி அவனையே தெய்வமாகக் கருதிப் பணிபுரிய வேண்டும் என்றும், மகளிர்க்கெனத் தனித்த முறையில் வேள்வியோ தவமோ விரதமோ இல்லையாகலான், கணவனுக்குச் செய்யும் தொண்டும் பணியுமே மகளிர்க்கு மேலுலக இன்பவாழ்வு பெறுதற்கு வாயிலாம் என்றும், மணமான ஒருத்தி தன் பெற்றோர் மனையில் இருந்துகொண்டு தன் கணவனுக்குப் பணிந்து அவன் விருப்பிற்கேற்ப நடவாளாயின், நாடாளும் வேந்தன் சான்றோர் கூடிய பேரவையில் அவளை நிறுத்தி வேட்டை நாய்கள் கடித்துத்துன்புறுத்துமாறு அவளை அவற்றிற்கு இரையாக்க வேண்டுமென்றும், தன் கணவன் நற்குண நன்மாண்புகளை இழந்து பொல்லாக் குடியனாயும் நோயுற்றவனாயும் மாறியது காரணமாக அவனை வெறுத்துப் புறக்கணிப்பாளாயின் அவள் மூன்று திங்கட்கு உயரிய ஆடையணிகலனின்று வேறோர் தனியிடத்தே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மனுநூல் கூறுகிறது. கணவன் சொல்வழியடங்கியொடுங்கி ஒழுகுவதே மகளிர் கடன்; அதுவே அவர்கட்கு உயர்ந்த அறமாம் என யாஞ்ஞவல்கியர் இயம்புகின்றார். கணவன் உயிரோடு இருக்கும்போதே தான் பேறு விரதம் மேற்கோடலும் வேள்வி செய்தலும் உடையளாயின், அவள் தன் கணவன் தலையை வெட்டினவளாகின்றாள் எனவும், புண்ணிய நீராடும் ஒருத்தி, தன் கணவனுடைய அடிகளையோ உடல் முழுவதுமோ நீராட்டி அந் நீரையே உட்கொள்பவள் புத்தேளிர் வாளும் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவாள் எனவும் அத்திரி யென்பார் அறிவிக்கின்றார். மறுமையில் கணவன் எய்தும் கதியினும் மேற்கதியை மனைவியாவாள் பெறுவதில்லையாகலான், கணவனுக்கு அடங்காதொழுகுபவள் இறந்தால் இன்பவுலகு எய்தாள்: எனவே, அவள் என்றும் தன் கணவன் மனம் நோக நடவாளாதல் வேண்டும் என்று வாசிட்டநூல் வற்புறுத்துகின்றது. கணவற்கு அடங்காது ஒழுகுபவள் கையில் எவரும் உண்வு தரப்பெறுதல் கூடாது; அவள் காமி எனக் கருதப்படுவாள் என ஆங்கீரசர் கடிகின்றார்.

மேலை நாட்டவரைப் போல நம் நாட்டு வட மொழியாளரும் மகளிரை உடைமைப் பொருளாகவே கருதினர். ஏனைப் பொருள்களைப் போல மகளிரையும் சூதாடு பணையமாகவும், விற்கவும் ஒற்றிவைக்கவும் கூடிய பொருளாகவும் மதித்தொழுகினர். இதற்கு இதிகாசங்களும் புராணங்களும் மிகப் பல செய்திகளைச் சான்று காட்டுகின்றன. உயிர்க்கு இறுதி நேரும் காலத்தாயின், சான்றோர் இழிக்கத்தக்க செயல்களைச் செய்தாயினும் உயிர் உய்தல் வேண்டும் என்பது அந்நாளைய அறமாகலின், அந் நிலையில் மகளிர் அறமல்லன. செய்யினும் அவர் விலக்கப்படார். மணமான மகளிர்க்குப் பதி விரதமே சிறந்த அறம். தன் கணவனையன்றிப் பிறர் தம்மைத் தொடினும் தம்பாற்படினும் தம்மை விரும்பினும்,

செ-11 மனைவியாவாள் அவர்களை மனத்தால் விரும்பாமையே பதிவிரதத்தின் பண்பு. கணவன், ஆண்மையிழப்பினும் அறிவு திறம்பினும் வேறு நாடேகினும் பெருநோய் எய்தினும் மனைவியாயினாள் வேறோர் ஆடவனை மணந்துகொள்ளலாம். கொண்ட கொழுநன் குடிவழி யெஞ்சும் நிலையில் மனைவி வேறொருவனைக் கூடி மகப் பெறுவது குற்றமின்று என்றொரு கொள்கை பண்டை நாளில் இருந்தமைக்கு இதிகாசமாகிய பாரதம் ஏற்ற வரலாறொன்றைச் சான்று கூறுகிறது.

இனி, மேலைநாட்டு ஆங்கிலரிடையே மகளிர் இருந்த நிலையை நோக்கின் அஃது ஏனை மேலை நாடுகளினின்று வேறுபட்டதாகத் தோன்றவில்லை. அரசியல் வாழ்வில் அரச மகளிர்மட்டில் அரசிகளாக முடி சூடிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். கிறித்து சமயம் பரவிய பின்பே அந்நாட்டில் ஒருவன் பல மகளிரை மணக்கும் இயல்பு நீங்குவதாயிற்று. நெடுங்காலம் வரையில் மகளிர்க்கு அந்நாட்டவர் கல்வி நல்கவில்லை. சமயத்துறையில் தாபத மகளிர்க்கு லத்தீன் மொழி கற்பிக்கப் பெற்றமையின், கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையே தாபத மகளிர் சிலர் லத்தீன் மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்தனர். ஏனை யாவரும் மகளிர்க்கு மணமும் மகப்பேறுமே வேண்டப்படுவன என்ற கொள்கையிலே ஊன்றி நின்றனர். மணமாகுமுன் ஒருத்திக் கிருக்கும் உரிமை முற்றும் மணத்திற்குப் பின் அவளுடைய கணவன்பால் சேர்ந்து ஒன்றிவிட்டன. மக்களைப் பேணுதல் கல்வி கற்பித்தல் முதலியன பற்றிய உரிமைகள் தந்தையிடமே இருந்தொழிந்தன. வரலாற்றுக் காலம்தொட்டு ஆங்கில நாட்டவரிடையே கணவற்கு வேறாக மகளிர்க்கு எவ்வகைச் சொத்துரிமையும் இல்லாமலே இருந்து வந்தது; கி.பி. 1882-இல் தான் மகளிர்க்குச் சொத்தில் உரிமை வழங்கப் பெற்றது. அரசாளும் வேந்தன் மக்களுள் மகளிர்க்கு அரசியல் உரிமை பண்டையிருந்தது; ஆயினும் அம் மக்களுள் ஆண் மக்கள் இருப்பின், அவர்க்கே முதலுரிமை நிலவிற்று. சென்ற 1918-இல் தான் மகளிர்க்கு வாக்குரிமை வழங்கினர்; அதன் பிறகே ஆங்கில மகளிர் பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதி பெற்றனர். அமெரிக்கர் 1920-இல் அவ்வுரிமையை மகளிர்க்கு வழங்கினர். உயரிய கல்வியும் கலையும் பெறுதற்கேற்ற வாய்ப்பும் ஆங்கில நாட்டு மகளிர்க்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் உண்டாயிற்று. இவர்களையெல்லாம் நோக்கின் பண்டை நாளைத் தமிழ் மகளிரின் நிலை பெரிதும் வியத்தற்குரியதாக விளங்குகிறது.

பழந் தமிழ் மக்களிடையே ஆடவர், பெண்டிர் என்ற இருபாலார்க்கும் பிறப்பு, அறிவு, ஒழுக்கம் முதலிய கூறுகளில் வேற்றுமை காணப்படவில்லை. ஆண் மக்களை யொப்பவே பெண்மக்களும் பேணப்பட்டுள்ளனர். கூர்த்த அறிவுடைமையே மக்களில் வேற்றுமை காட்டிநின்றது. திருவள்ளுவரும் அறிவறிந்த மக்கட் பேற்றையே சிறந்த பேறாக எடுத்துரைக்கின்றார். அதற்குக் காரணம், ஆணாயினும் பெண்ணாயினும், மக்கள் தம்மினும் மிக்க அறிவுநலம் உடையராயினும் உலகிலுள்ள மன்னுயிர்க்கெல்லாம் வாழ்வு இனிதாம் என்பது கருத்து. அதனால் ஆடவர் பெண்டிர் இருபாலாரும் திருந்திய கல்வி பெறுவதில் வேறுபாடின்றியொழுகினர். புெண் மக்கட்குரிய நலம் கூறப்புக்க தொல்காப்பியர் “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பாலான என்று தெரிவிக்கின்றார். கல்வி கேள்விகளால் உண்டாகும் திண்ணிய அறிவொழுக்கம் கற்பு என்று தமிழ்ச் சான்றோரால் குறிக்கப்படும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற வேந்தனது நலம் கூறப்புகுந்த சான்றோர், “உலகம் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை” என்றும், வேதங்களைக் குறிக்கக் கருதிய சான்றோர், அவற்றை “எழுதாக் கற்பு” என்றும் குறிப்பதே இப்பொருண்மைக்கு ஏற்ற சான்றாகும். மகளிர்க்குக் கல்வியறிவின் திணிநிலை யொழுக்கத்தைக் கற்பெனவாள ஓதாமல், “செயிர்தீர் காட்சிக் கற்பு” என்று தொல்காப்பியர் சிறப்பித்துக் கூறியருளுகின்றார். கற்பென்னும் திண்மையுண்டாவது மகளிர்க்குரிய தகுதிகளுள் பெருமை வாய்ந்தது என்று பண்டைத் தமிழர் பணித்துள்ளனர். மகளிர் மகப்பெறுதல் என்பது இயற்கையறம்; அதனால் உடற்கூறு வேறுபட்டதன்றி, ஆணுக்கு அடிமையாய்த் தனக்கென உரிமையும் செயலுமற்றிருத்தற்கன்று என்பது தமிழ் மரபு. ஆண்டவன் படைத்தளித்த இவ்வுலகில் ஆணைப்போலப் பெண்ணும் வாழப் பிறந்தமையின் ஆணுக்கு உரிமைதந்து பெண் அடிமையாய்க் கிடந்து மடிய வேண்டுமென்பது அறமாகாது. ஆண் மக்களைப் போலாது பெண்மகள் ஒருத்தி மனையின்கண் செறிப்புண்டிருந்தபோது உரிமை வேட்கையால் உந்தப் பெற்றமையின்,

“விளையாடு ஆயமோடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந் திருத்தல்
அறனும் அன்று ஆக்கமும் தேய்ம்.”

என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தகுவதாம். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கைத் துணையாவன. வாழ்க்கை இருபாலார்க்கும் பொது இருவரும் கூடியே அதனைச் செய்தல் இயற்கையாதலால் இருவர்க்கிடையே வேற்றுமை கண்டு புகுத்துவது இயற்கை வாழ்க்கையை இடையூற்றுக் குள்ளாக்கும் என்பது கண்டே பண்டைச் சான்றோர் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வழங்கினர். அவளது துணைமையின் சிறப்புணர்ந்து மேற்கொண்ட கணவனைக் கொண்டான் என்று குறித்தனர்.

பழந்தமிழர் குடியில் கல்விப் பேற்றில் ஆணும் பெண்ணும் ஒத்த உரிமை பெற்றுள்ளனர். மண்ணாளும் வேந்தர்க்குரிய நீதி நன்னூல் பலவும் பெண்களும் கற்றிருந்தனர். பிறந்த குடியின் பெருமையையும் புகுந்த குடியின் தொல்வரவையும் மகளிர் நன்குணர்ந்து குடிப்பெருமை குன்றாத வகையில் வாழ்க்கையை நடத்துகின்றனர். கணவனும் மனைவியும் உலகியல் வாழ்க்கைக்கு ஒருவர்க் கொருவர் இன்றியமையாத் துணை வராதலின், கணவன்பால் காணப்படும் குறையை மகளிரும் மகளிரது குறையைக் கணவனும் நன்கு உணர்ந்து குணம் பேணி வாழ்கின்றனர். கணவன்பால் பிழை காணுமிடத்து அன்புடைய நன்மொழிகளால் தாய் போல் கழறிக்கூறி நீக்கியும், நலம் காணுமிடத்து மகிழ்ச்சி கூர்ந்தும், மகளிர் நடந்து கொள்வது சிறந்த அறமாகக் கருதப்படுகிறது. ‘தாய் போற் கழறித் தழி இக்கோடல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப’ எனத் தொல்காப்பியனார் சுட்டிக் காட்டுகின்றார். கொண்ட கணவன்பால் ஒருகால் பிழை தோன்றக் கண்ட அவன் மனைவி தீவிய இனிய கூரிய சொற்களால் அவனைக் கழறினாளாக, அதனால் அவன் நெஞ்சு வருந்தினான்; அந் நிலையில் அவ்விருவர் வாழ்க்கையின் நலம் பேணி நின்ற நங்கை யொருத்திபோந்து, அவனைத் தெருட்டி அவனைக் கழறிக் கூறிய மனைவியின் உரிமைச் சிறப்பை எடுத்துக் காட்டலுற்று,

“ஒண்டொடி மடமகள் இவளினும்,
நுந்தையும் யாயும் கடியரோ நின்னே” [1]

என்று கூறியதாக ஆசிரியர் ஓரம்போகியார் உரைக்கின்றார்.

இல்லிலிருந்து அறம் புரிந்து ஒழுகுமிடத்துக் கணவன், பொருள் செய்தல், போர்வினை முதலிய மேற்கொண்டு சேறல் ஆகிய கடமை காரணமாகப் பிரிந்து செல்லவேண்டின், காதல் வழிநிற்கும் பிரிவுத் துன்பம் தோன்றி மனைவியின் மனத்தை வருத்துவது இயற்கை. காதலுக்கும் கடமைக்கும் இடையே நிகழும் போரில் கடமை வீழ்ச்சியுறின் அது காதல் வாழ்க்கையில் நல்குரவையும் வெறுப்பையும் விளைவித்துத் துன்பம் பயக்கும் என்பதைப் பழந்தமிழ்க் கணவனும் மனைவியும் நன்கு உணர்ந்திருந்தனர். கணவன் பிரியுங்கால் வற்புறுத்தும் சொற்களையே பற்றுக்கோடாகக் கொண்டு பிரிவுத் துன்பத்தை ஆற்றி மனைக்கண்ணே தாம் செய்வனவற்றை முட்டின்றிச் செய்தொழுகுவதே மனையுறை மகளிர்க்கு மாண்பும் கற்புமாம் என்பது தமிழ்மரபு.

மனையின்கண் வாழும் மகளிர் தாம் பெற்றமக்கட்கு மொழி பயிற்றும் முதற்கல்வி நல்கும்போதே அவர்களிடத்தே நல்லொழுக்கம் வேரூன்றி வளரச் செய்தல் தம் கடன் என்பதை உணர்ந்து ஒழுகுகின்றனர். விளையாடும் பருவத்தனான தன் மகனை நோக்கின ஒரு தமிழ்த்தாய், அவன் தந்தைபால் உள்ள குணநலங்களையும் குறைகளையும் எடுத்தோதி, குணங்களைக் கொண்டு குறைகளைக் கைவிட வேண்டுமென்று கற்பிக்கப் புகுந்த,

செம்மால்,
வனப்பெல்லாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை
நிலைப்பாலுள் ஒத்தகுறி என் வாய்க்கேட்டு ஒத்தி, என்று முன்மொழிந்து, கணவன் போர்வல் மறவன். என்றும், போரையும் அதற்குரிய அறம் பிழையாது செய்து வெற்றி கொள்வதில் வீறுடையன் என்றும் கூறுவாளாய்,

“கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி பெரும.”

என்றும், இவ்வாறே அவனுடைய நடுவு நிலைமை, ஈகைச் சிறப்பு ஆகியவற்றையும்,

“பால்கொள லின்றிப் பகல்போல் முறைக்கு ஒல்காக்
கோல்செம்மை யொத்தி பெரும.”

என்றும்,

“வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு
ஈதல்மாட்டு ஒத்தி பெரும”

என்றும்.

கூறுவது இன்றைய தாயர்க்கு நல்ல படிப்பினையாகும். இவ்வியல்பு பற்றியே, பொன்முடியார் என்ற சான்றோர், ஒருதாய் தன் மகனுக்குக் கடமையுணர்வு நல்கும் கட்டுரை வடிவில்,

 “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.”

என்று கட்டுரைக்கின்றார்.

இங்ஙனம் தம் குடியில் வாழும் மக்கள் கடமையுணர்வும் நல்லொழுக்கமும் கொண்டு சிறத்தல் வேண்டுமெனக் கருதும் தமிழ் மகளிர், தாம் வாழும் நாட்டின் நலத்தையும் தம் நெஞ்சில் கொண்டு, வாய்த்த போதெல்லாம், “நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க” “விளைக வயலே வருக இரவலர் “பசி இல்லாகுக பிணி சேண் நீங்குக” “வேந்து பகை தணிகயாண்டு பல நந்துக” “அறம் நனி சிறக்க அல்லது கெடுக அரசு முறை செய்க களவு இல்லாகுக” “நன்று பெரிது சிறக்க தீது இல்லாகுக!” “மாரி வாய்க்க வளம் நனி சிறக்க” என விழைந்து வேண்டுவர்.

மகளிருடைய மனைவாழ்வில் கணவனது காதலுள்ளம் தன்னின் நீங்கி வேறு மகளிர்பால் செல்லுமாயின், அம்மகளிர்க்கு அதனினும் மிக்க வருத்தம் தருவது. வேறு கிடையாது. உலக நாடுகளில் எங்கு நோக்கினும் மகளிர்க்குரிய இவ் வியல்பு ஒன்றாகவே உள்ளது, மேலை நாடுகளிலுள்ள எகிப்து, அபிசீனியா முதலிய நாடுகளிலும் கீழ் நாட்டுச் சீனம் சப்பான் நாடுகளிலும் உள்ள மகளிர் எப்போதும் கணவனுடைய மன நிறைவையே குறிக்கோளாகக் கொண்டு ஒழுகுவர். சில நாட்டு மகளிர் தாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கணவற்கு உவகை தருகிறதா என்பதை அடிக்கடி கேட்டு அறிந்து கொள்வர். அதனால், கணவனது காதலன்பு பிற மகளிர்பால் செல்லாது. காத்தொழுகுவதை அவர்கள் கண்ணும் கருத்துமாகக் கொண்டிருந்தனர். உருசிய நாட்டுப் பழங்குடி மக்களும், அமெரிக்க நாட்டுச் செவ்விந்தியரும் ஆடவரினும் மகளிரைத் தாழ்ந்தவராகக் கருதி ஒழுகுபவராயினும், அவர் நாட்டு மகளிர்க்குக் கணவன்பால் பரத்தைமை தோன்றின் பெரிதும் வருந்துவதை அவர் நாட்டு வரலாறு கூறுகின்றது. சுமேரியா நாட்டில் மகளிரிடையே பரத்தைமை யொழுக்கம் பெரிதும் பரவியிருந்தது; எனினும், மனையறம் பூண்ட மகளிர் கணவன் பரத்தனாவது காண மிகவும் அஞ்சியொழுகுகின்றனர்.

மேலே காட்டிய பழங்குடிகளோடு எவ்வகையிலும் பிற்படாத தொன்மை வாய்ந்த தமிழ் மகளிர் விலக்கல்லராகலின், கணவனது பரத்தைமை மனையுறையும் மக்களுக்கு மிக்க வருத்தத்தை விளைவித்தது. தன்னைக் கொண்ட கணவன் தன்னையொழியப் பிறமகளிரைக் கனவினும் கருதாத பேராண்மையுடையனாகப் பெறின் பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்று பொருள் கொள்ளத்தக்க வகையில், “பெற்றாற் பெறிற் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு” என்ற திருக்குறள் அமைந்திருக்கிறது. கணவன்பரத்தனாயின் அது தனக்குச்சிறுமை பயப்பதோடு தன் குடிக்கும் பழி தரும் என்ற கருத்தால் தமிழ் மகளிர்அவன் உள்ளம் அந்நெறியிற் செல்வதை விரும்பவில்லை. “பூவோரனையர் மகளிர், வண்டோரனையர் ஆடவர்” என்ற கருத்தொன்றும் அந்நாளில் மக்களிடையே நிலவியிருந்தது. என்றாலும் மகளிருள்ளம் கணவனது காதல் பிறமகளிர்பால் பரவுவதைச் சிறிதும் உடன்படவில்லை.

இப்போது பழனியென வழங்கும் ஊர்க்கு முன்னாளில் திருவாவி நன்குடி என்றும் பழங்காலத்தில் பொதினி யென்றும் பெயர்கள் வழங்கின. அதனருகே ஆய்க்குடி யென்ற ஓர் ஊருளது; அதன் உண்மைப் பெயர் ஆவிகுடி என்பது. அதனைத் தலைநகராகக் கொண்ட அப்பகுதியில் ஆவியர் என்பார் வாழ்ந்தனர். அதனால் அதனை வையாவி நாடு என்பர்; பண்டை நாளில் அங்கே பெரும்பேகன் என்ற அரசன் ஆட்சி புரிந்தான். அவனை வையாவிக் கோப்பெரும்பேகன் என்பது வழக்கம்; அவனுடைய மனைவி பெயர் கண்ணகி என்பது. ஒருகால் அவனுக்கு வேறொரு பெண்ணின் தொடர் புண்டாயிற்று. அதனால் கண்ணகிக்கு மனக்கவலை பெரியதாயிற்று. பேகன் அருள் உள்ளம் படைத்த பெருந்தகை; காட்டில் வாழும் மயில் ஒன்றுக்குப் போர்வை யித்த புகழாளன்: “படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்” என்று சான்றோர் அவனைப் பாராட்டுவது வழக்கம். அவனுக்கு அரிசில் கிழார், கபிலர், பரணர் என்ற சான்றோர் பலர் இனிய நண்பராவர். கண்ணகி அவர்கட்குப் பேகனது பரத்தைமையைச் சொல்லி அவனை அந்நெறியினின்றும் நீக்குமாறு முயன்றாள். ஒருகால் அவள் மனைக்குப் போந்த பரணர் என்ற நல்லிசைச் சான்றோர்க்கு,

“எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்
வரூஉம் என்ப வியங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூரானே”[2]

என்று முறையிட்டனள். அவர்களும் அவளது வேண்டுகோட்கு இணங்கி, பேகனைக் கண்டு “வேந்தே, நீ மனையறம் மாண்புறச் செய்தல் வேண்டும்; நீ இன்றிரவே நின் மனையுறையும் கண்ணகிபால் சென்று அவள் எய்தி வருந்தும் துயரத்தைப் போக்கியருளல் வேண்டும்” என்பாராய்,

“அறஞ் செய்தீமே அருள்வெய் யோய்என
இஃதுயாம் இரந்த பரிசில், அஃது இருளின்
இனமணி நெடுந்தே ரேறி
இன்னாது உறைவி அரும்படர் களைமே.”

என்று வேண்டினர். அவனும் அவ்வண்ணமே செய்து அறவாழ்க்கையில் நிலை பெறுவானாயினான். அவனது வையாவி நாட்டின் புகழ் விசய நகர வேந்தர் காலம் வரைத் தமிழகத்தில் சிறந்து நின்றது: அக் காலத்தில் வையாவி வையாபுரி எனச் சிதைந்து பெரும் பிறிதாகி மறைந்தது. நிற்க, கோவலன் மனைவியாகிய கண்ணகியார் தம் கணவன் சிலம்பு திருடிய கள்வன் என்று பழி தூற்றப்பட்டுப் பாண்டி வேந்தனால் கொலையுண்டான் என்பது கேட்டு அதனால் தம் செல்வக் குடிக்குண்டான புகழ் மாசுபடுவது நினைந்து வேந்தன் முன்சென்று வழக்குரைத்த வரலாறு நாடறிந்த தொன்று.

வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் போர் மறத்துக்குப் பெயரும் மாண்பும் பிறங்கப் பெற்றவர். கிரேக்க, பாபிலோனிய எகிப்திய மகளிரைப் போலத் தமிழ் மகளிர் போர்ப் புகழைப் பெரிதும் விரும்பினர். போரில் புறங்கொடுத்துக் குடிக்குப் பழி விளைத்தான் தன் வயிற்றிற் பிறந்த மகன் எனின் அவளது மறவுள்ளம் சிறிதும் பொறாது. போருக்குச் சென்றிருந்த இளையோன் ஒருவனைப் பற்றி அவன் தாயிடம் போந்து பொய்யாக, “அன்னாய், நின்மகன் பகைவர் தொடுத்த போரில் முகுது தந்து ஓடினன்” என்று ஊரவர் அலர் கூறினர்; அது கேட்டதும், அவன் தாயின் மறவுள்ளம் கொதித்தது; “ஊரவர் கூறுவது உண்மையாயின், அவன் வாய் வைத்துப் பாலுண்ட என் மார்பை அறுத்தெறிவேன்” என்று வஞ்சினம் கூறிப் போர்க்களம் சென்று அங்கே இறந்து கிடக்கும் வயவர் உடலங்களைப் புரட்டிக் காணலுற்றாள். அவற்றின் இடையே, முதுகிற் புண்படாது முகத்திலும் மார்பிலும் புண்பட்டுச் சிதைந்து வேறுபட்டுக் கிடந்த அவன் உடம்பினைக் கண்டு பேருவகை கொண்டாள். இதனைக் காக்கை பாடினியார் என்ற பெருமாட்டி,

“முதியோள் சிறுவன்

படையழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தன னாயின், உண்டஎன்
முலையறுத் திடுவென் யான்எனச் சினைஇக்
கொண்டவாளொடுபடுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணுஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.”

என்று பாடிக் காட்டுகின்றார். வேறொருத்தியின் தந்தை முன்பொருகால் நடந்த தும்பைப் போரில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான்; அவள் கணவன்.முன்னாள் நடந்த கரந்தைப் போரில் நிரைகாவலில் உயிர் கொடுத்தான். மறுநாள் போர் நிகழ்ச்சி தெரிவிக்கும் பறையோசை கேட்டதும் தன் ஒரு மகனையும் போர்க் கோலம் செய்து வேற்படையைக் கையில் தந்து செருமுகம் செல்க என விடுத்தாள்; இதனை,

“இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமக னல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே.”

என்று சான்றோர் எடுத்துரைக்கின்றனர்.

இவ்வாறு தம்முடைய மனைக்கண் உள்ள ஆடவர் போரில் மறம் குன்றாது பொருது புகழ் பெறுதலை விரும்பும் தமிழ்மகளிர் போரிற் புண்பட்டுவரும் வயவர்க்கு மருத்துவம் செய்வதில் மிக்க மாண்புறுகின்றனர். கிழிந்த புண்களைத் தைத்தலும் மருந்திடுதலும் இனிய பண்ணில் இசைபாடுதலும் மருத்துவத் துறையில் கையாளப்படுகின்றன. புண்ணுற்ற மறவர்க்கு மருத்துவம் செய்யப்பெறும் மனைகளைப் பேய் முதலிய தீக்கோள் வந்து தாக்காவண்ணம் மனையிறைப்பில் ஈர இலையும் வேப்பிலையும் செருகப்பட்டிருக்கும். பெரும் புண் உற்றவர் உள்ளம் உலகியல் தொடர்பில் விடுதலை பெற்றுத் துறக்கவின்பத்தில் நாட்டம் கொள்ளுமாறு காஞ்சிப்பாட்டுகள் இனிய முறையில் பாடப்படும்.

போர்த்துறையிலும் பிறவற்றிலும் புகழ்மிக்கு விளங்கிய காதற் கணவன் இறந்துபடின், அவன் பிரிவாற்றாத தமிழ்மகளிர் அவனுடனே உயிர் துறப்பதுண்டு. கணவனோடே தாமும் உயிரிழந்தால் மறுபிறப்பில் அக்கணவனுக்கே மனைவியாய்ப் பிறத்தல் கூடும் என்று பண்டைத் தமிழ்மகளிர் நினைந் தொழுகினர். “இம்மை மாறி மறுமையாயினும், நீயாகியர் எம்கணவனை யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்று மகளிர் கூறுவதாகச் சான்றோர் பாடுவது இதற்கு ஏற்ற சான்றாதல் காண்க. இதனால் இறந்த கணவனை எரிக்கும் ஈமத்தில் காதலன்புடைய மகளிர் உடன் வீழ்ந்து உயிர்கொடுக்கும் செயலை மேற்கொண்டனர். உயிர்கொடுப்போருள் மிக்க இளமை நலம் படைத்தவர் தீப்பாய்தலை விரும்பாத சான்றோரும் உண்டு. பூதப் பாண்டியன் இறந்தது கண்ட அவன் உயிர்க்காதலியான பெருங்கோப் பெண்டு அவனுடைய ஈமத்தியில் தானும் வீழ்ந்து சாதலுக்குத் துணிந்தாளாக, ஆங்கிருந்த சான்றோர் அவளை விலக்கி அறிவுரை பல கூறுவராயினர். அவர்களை வெகுண்டு,


“பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரி தாகுக தில்ல எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே.”

என்று பெருங்கோப் பெண்டு அவலித்து அரற்றினாள். உயிர்கொடுக்கும் ஆற்றல் இல்லாமையாலோ சான்றோர் பலர் விலக்கியதனாலோ கணவனை இழந்து உயிர் தாங்கியிருப்போர் கைம்மை நோன்பு மேற்கொண்டு கணவனுக்கு வழிபாடு செய்து ஒழுகுவர். இதனைத் தும்பையூர்ச் சொகினனார் என்ற சான்றோர்,

“அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை -
உயர்நிலை யுலகம் அவன்புக ஆர
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுத லானாக் கண்ணள்
மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே.”

என்று குறிக்கின்றார்.

கொழுநனையிழந்த குலமகளிர் மேலே குறித்தவாறு உடனுயிர் விடுதல், கைம்மை மேற்கொளல் என்ற இரண்டனுள் ஒன்றனை மேற்கொள்வரேயன்றி மறுமணம் செய்துகொள்வது இலர். பழந்தமிழ் மகளிர் மறுமணம் செய்துகொள்ளற்குப் பண்டைப் பொருளிலக்கண நூலார் விதிக்கவும் இல்லை! மறுமணம் செய்து கொண்ட வரலாறும் தமிழ் நூல்களில் இது காறும் காணப்படவில்லை. இம்மையிற் பிரிந்த கணவனை மறுபிறப்பில் பெறலாம் என்ற கருத்துநிலவும் சமுதாயமாதலின், பழந்தமிழிரிடையே மறுமணம் நிகழ்தற்கு வாய்ப்பு ஏது?

“அலர்ந்த விரிநீ ருடுக்கை யுலகம் பெறினும்
அருநெறி யாயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே.”

என்ற முல்லைப் பாட்டு இதற்குத் தக்க சான்றாகும். களவு நெறியில் காதலுற்றுக் கற்பு நெறியில் மணம் செய்து கொண்டு கணவனும் மனைவியும் ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாய் ஒழுகும் மக்களாதலின் மறுமண நிகழ்ச்சி பழந்தமிழர் வாழ்வில் இடம் பெறாதாயிற்று.

மணந்து கொண்ட கணவன் போர் முதலியவற்றால் இறுதி எய்தாது முதுமையெய்துங்கால், அவன் உள்ளத்தே இதுகாறும் நுகர்ந்து போந்த நுகர்ச்சிகளில் உவர்ப்பும் வெறுப்பும் பிறந்து துறவு மேற்கொள்ளும் வேட்கையையுண்டுபண்ணும். இக்கருத்தையும் செயலையும் காணும் சான்றோர் அவர்க்கு வீடு பேற்றுக்குரிய மெய்யுணர்வையும் தவத்தின் செயல் முறையையும் அறிவுறுத்துவர். அதனால், அவர்கள் தமக்குத் துணையாகிய மனைவியுடன் துறவு மேற்கொண்டு மெய்யுணர்ந்து, அவா அறுத்து, யான் எனது என்ற செருக்கற்று, அறிவு நூல்களைக் கண்டு செம்பொருளாகிய கடவுளின்ப வாழ்வுக்கு உரியராவர். இதுபற்றியே தொல்காப்பியர், “அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்று வற்புறுத்தினர். இறத்தல் என்றது வயது முதிர்தல்.

ஒருவனுக்கு ஒருத்தி யென்ற முறையில் தமிழ் மக்கள் உலகு இணைப்புண்டிருந்தமை பழந்தமிழ் நூல்கள் உரைக்கும் உண்மையாகும். ஆயினும், அந்நாளில் நாடுகட்கிடையே அடிக்கடி நிகழ்ந்த போர்களால் ஆண் மக்கள் தொகை குறைந்தது; போரில் ஈடுபடாமையும் பாதுகாக்கப் படுதலுமாகிய செயல்களால் மகளிர் தொகை மிகுந்தது. பெண்டிரைக் கொல்லலாகாது என்பது பழந்தமிழர் போரறம். இதே நிலை மேலைநாடுகளிலும் நிலவியதால், மிகுந்து நின்றமகளிரை மனைவியாகவும் உரிமை மகளிராகவும் கொள்வது அவர்கள் நாட்டு வேந்தர்கட்கும் செல்வர்கட்கும் ஒராற்றால் கடமையும் மரபும் ஆயின. அந்தச் சூழ்நிலையே தமிழ் நிலத்தும் இருந்தமை யின், மிகை மகளிரைப் பரத்தையரெனக் குறிப்பாராயினர். பரம்என்ற சொல் மிகுதியென்று பொருள்தருவது. இம்மகளிர் உலகில் வாழ்தற்குரியராதலால், அவரது வாழ்வுக்கு வேண்டுவன உதவுவது ஆண்மையுடைய ஆடவர்க்கு அறமாகும். அவ்வாறு உதவுமிடத்தும் உதவி பெறுமிடத்தும் இருதிறத்தார்க்கும் தொடர்புண்டாக, அதன் வழியாகத் தோன்றிய மகளிர் பரத்தையராய்ப் பெருகினர். ஒருவன் ஒருத்தியை மணந்து வாழ்ந்து வருங்கால் அவள்பால் மகப்பேறு இல்லையாயின் வேறொருத்தியை மணந்து கொள்வது அவர்க்கு அமைவதாயிற்று. இரண்டாம் மனைவியைப் ‘பின் முறையாக்கிய பெரும் பொருள் வதுவை’ என்று தொல்காப்பியர் குறிக்கின்றார். இருவர்க்கு மேலும் மனைவியர் உளராயின் அவரைக் காமக் கிழத்தியரென வகுத்து முறை செய்தனர் பண்டைத் தமிழர். நாளும் பெருகிவந்த மிகை, மகளிர் தாம் இனிது வாழ்தற்குரிய பொருள் வேண்டி ஆடல் பாடல் அழகு என்ற துறைகளில் பயிற்சி பெறத் தொடங்கினர். அவருள் பொருள் ஒன்றே கருதி அதனைத் தருவோர் யாவராயினும் வரையறையின்றித் தமது பெண்மையை விற்று ஒழுகினோர் வரைவில் மகளிராகக் கருதப்பட்டனர். எஞ்சிய பரத்தையர் தம்மை நயந்த ஆடவனது காதலன்பு ஒன்றே குறிக்கொண்டு ஒழுகினமையின் அவரைக் காதற்பரத்தைய ரெனப் பிற்காலத்தார் பெயர்குறித்தனர். அவரைச் சில ஆட்வர் தாம் உறையும் ஊரகத்தே இருத்தி மனைவியரைப் போலப் பேணினர். அவ்வாறு பேணப்பட்டோர் இற்பரத்தையர் எனப் படுவராயினர். ஏனையோர் பரத்தையர் சேரிக்கண் உறைந்தமையின் அவரைச்சேரிப் பரத்தையரெனவும் பரத்தையர் எனவும் உரைத்தனர். இற்பரத்தையர் காப்பியக் காலத்தில் உரிமை மகளிரெனவும் குறிக்கப்பட்டனர். இவ்வகையில் தமிழ் மகளிர் பண்டை நாளில் குலமகளிரெனவும் பரத்தையரெனவும் இருகூறாய் இருந்தமை தெளியப்படும்.

ஒருவன் மனைவியான குலமகள் வயிற்றில் பிறக்கும் மக்களுக்கே அவனது உடைமையில் உரிமையுண்டு; பரத்தையர்க்குப் பிறக்கும் மக்கட்கு அவ்வுரிமை இல்லை. இதனை,

“யாணர் ஊரநின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம்

புன்மனத் துண்மையோ அரிதே; அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்போடு
எம்பா டாதல் அதனினும் இலமே’[3]

என்று சான்றோர் கூறுவதால் இனிதறியலாம்.

மணவாழ்க்கை இயலில் மகளிர் இவ்வாறு இரு வேறு வகையில் இயன்று வாழ்ந்தனராயினும், இயல் இசை கூத்து முதலியவற்றிலும், அறிவு அரசியல் முதலிய துறைகளிலும் ஒத்த உரிமை கொண்டிருந்தனர். அதனால் அரசியற் குறிப்புகளும் அறிவு நிலைபெற்ற இலக்கியங்களும், தமிழ் மகளிரின் சால்பினை ஒரு வேற்றுமையும் தோன்றாதவாறு குறித்துள்ளன. ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், வெண்ணிக் குயத்தியார், நப்பசலையார் எனப் பல மகளிர் நல்லிசைப் புலமைத் துறையில் சிறப்புற்று விளங்குகின்றனர். ஒளவையாரும், நச்செள்ளையாரும் அரசர்கட்கு அரசியற் சுற்றமாயிருந்து அறிவுரையும் அறவுரையும் நல்கியுள்ளனர்.

மகளிர்க்குரிய இச் சிறப்பும் உரிமையும் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் இருந்துள்ளன. அக்காலத்தே வடவார்க்காடு மாவட்டத்துப் படைவீட்டுத் தலைநகராகக் கொண்டதொரு சிற்றரசு சிறந்து நின்றது. அவ்வரசினர் தம்மைச்சம்புவராயர் என்று குறிப்பர்; அவர்கள் சோழப் பேரரசின் கீழ்ப் பெருமை பெற்றவர். அவருள் எதிரிலிச் சோழ சம்புவராயன் என்பவன் ஆட்சிக் காலத்தில் வந்தவாசிக்கு அண்மையில் உள்ள தெள்ளாறு என்ற ஊரில் கண்டன் இளங்கண்ணன் என்பவன் வாழ்ந்துவந்தான். அவனுடைய மனைவி கருணையாட்டி கற்பால் தான் வாழும் ஊரவர் தன் குடியைப் புகழுமாறு வாழ்ந்து வந்தாள். இளங்கண்ணன் ஒரு நாள் கட்குடியால் அறிவு மயங்கி ஊரவர் பலரை வைதான் என்று குற்றங்கண்ட “மகாசபையார்" ஊர்வாரியத் தலைமைபூண்ட கருணையாட்டிக்கு முறையிட, அவர் “கணவனென்றும் பாராது ஏழுநாள் திருமூல நாயனார்க்கு விளக்கேற்றுமாறு" பணித்து, அதனை "அவன் பெண்டாட்டி என்ற பரிசு முட்டாமே விளக்கேற்றி"த் தமது கடமையை ஆற்றினார் என்பது வரலாறு. இதனால், ஊர்வாரியங்களில் தலைமை தாங்கும் உரிமை மகளிர்க்கும் வழங்கப்பட்டிருந்தது தெளிவாகிறதன்றோ?

இந் நிலையில் மேலைநாட்டு ஆங்கிலேயரும் பிறரும் அமெரிக்க நாட்டவரும் இந்த நூற்றாண்டில்தான் மகளிர்க்கு அரசியல் உரிமை தந்தனர். இதை நோக்கின் பழந்தமிழ் மகளிர் ஏனை உலக நாடுகளில் வாழ்ந்த மகளிரை நோக்க - மிக உயர்ந்த நிலையில் வைத்துத் தமிழரால் மதிக்கப் பெற்றமை, இதனால் இனிது விளங்கும். இன்னோரன்ன செய்திகளை மறந்தமையால் இடைக்காலத் தமிழ்மக்கள் மகளிரை அடிமையாக்கி இருளில் கிடத்தித் தம்மையும் குருடராகவும் ஊமையாகவும் செவிடராகவும் கெடுத்துக் கொண்டனர். தமது நாடு, மொழி முதலியவற்றின் வரலாறு துறந்து மறந்து கெடும் ஒரு சமுதாயம் நாளடைவில் கெட்டு அடிமைச் சேற்றில் அழுந்தும் என்பதற்கு இன்றைய தமிழ்ச் சமுதாயம் தக்கதொரு எடுத்துக்காட்டாக விளங்குவதைத் தமிழகம் நன்கு உணர்தல் வேண்டும். அவ்வுணர்வு தமிழ் வாழ்வு தழைப்பதற்கு ஆக்கமும் அரணுமாம் என்பது உறுதி.


  1. (ஐங், 98.)
  2. புறம், 144.
  3. 1. நற். 330,
"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/011-020&oldid=1625134" இலிருந்து மீள்விக்கப்பட்டது