13. வாணிக மந்திரம்

வாணிகம் என்பது நமது நாட்டில் பொதுவாக யாவரும் செய்யக்கூடிய தொழில் என்று பலரும் கருதுகின்றனர். உடம்பை வருத்திச் செய்யக்கூடிய உழவு முதலிய தொழில்கள் இழிந்தவை என்றும், அரசியலில் அரைப்பணச் சம்பளத்துக்காயினும் வேலை பார்ப்பதுதான் உயர்ந்தது என்றும், வாணிகம் செய்வது நடுத்தரமானது என்றும் இடைக்காலத்தில் மக்கள் மனத்தில் ஒரு கருத்துத் தோன்றி நிலவுவதாயிற்று. இதன் விளைவாகக் கற்றவர் அரசியல் வேலையாட்களாகவும், பணிபுரிபவர்களாகவும் அலுவலாளர்களாகவும் புகுந்து வாழ்க்கை நடத்துவாராயினர். கல்லாதவர் பலரும் உழவு முதலிய தொழில்களை மேற்கொண்டனர். சிறிது கற்று இடைநிலையில் நின்றவர் வாணிகம் செய்பவராயினர். வேலைகிடைக்காதவன் வெற்றிலை பாக்குக் கடையேனும் வைத்து வாணிகம் செய்து வாழலாம் என்று கருதும் அளவுக்கு வாணிகம் நடக்கத் தலைப்பட்டது.

சிறந்த கல்வியறிவும் வலிய உடலுழைப்பும் இல்லாதவர் பலரும் வாணிகத்தில் நுழைந்தமையால் வாணிகத் தொழில் ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் கருதப்படுவதாயிற்று. ஒரு சிலர்க்குப் பொழுது போக்காகவும் பயன்பட்டது. இத்தகைய வாணிகத்தில் வளர்ச்சியும் வளமையும் உண்டாதற்கு வழி இல்லாமையால் நட்டம் வருவதும், நிலைதவறிவிழ்வதும், எழுவதும் இயற்கையென்று மக்கள் கருதுகின்றார்கள். "முப்பதாண்டு வாணிகம் செய்து வாழ்ந்தவரும் இல்லை," கெட்டவரும் இல்லை" என்றொரு பழமொழியும் உலகில் நிலவுகின்றது. மேனாட்டு வணிகர்கள் தங்கள் வாணிகத்திற்கு வெள்ளிவிழா (25ஆம் ஆண்டுவிழா) பொன்விழா (50ஆம் ஆண்டு விழா) மணி விழா (80ஆம் ஆண்டுவிழா) நூற்றாண்டு விழா என விழாக் கொண்டாடுகிறார்களே; அதுபோல் நம்மவர் ஏன் செய்யமுடிவதில்லை? அவர்கட்கு மாத்திரம் நிலையாக நின்று இப்படி விழாக்கள் நடத்த இயலுகின்றது ஏன்? என்று நினைப்பது இல்லை. செய்யும் வாணிகத்தில் உயர்ச்சி யுண்டானால் "நல்ல காலம்" என்றும், "நல்ல யோகம்" என்றும், வீழ்ச்சி யுண்டானால் "திசை கெட்டுப் போயிற்று," "கிரகம் சரியா யில்லை" என்றும் சொல்லிப் பழி பாவங்களைக் காலத்தின் மேலும் கிரகங்களின் மேலும் தள்ளிவிட்டுத் தாம் குற்றமற்றவர்களாகக் கருதிக்கொள்வது இயல்பாக் இருக்கிறது. விதியென்றும், வினை யென்றும், கருமம் என்றும் சொல்லிக் கொள்வது பெருவழக்கு, விதிவினைகளின்மேல் பழிபோட்டுக் கெடுகின்றவருக்கு நமது பெரியோர்கள் நல்ல அறிவுரையும் சொல்லியுள்ளார்கள்; செய்யும் தொழிலில் விதி வினைகள் குறுக்கிட்டாலும் நாம் நமது உழைப்பாலும் அறிவு வன்மையாலும் வென்று விடலாம் என்று நம் முன்னோர் நன்றாக அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தியுள்ளார்கள். அப்படியிருந்தும் மிகப்பலர் தெளிவில்லாமல் “ஐயோ, வினையே" என்று அழுவதும், அதற்காக நவக்கிரகங்களுக்கு வழிபாடு செய்வதும் மேற்கொண்டு அவதிப்படுகின்றார்கள். அவர்களுக்குத் திருஞான சம்பந்தர் முதலியோர் அறிவுறுத்த உரை செவியில் ஏறுவதில்லை; தெளிவில்லாத சோதிடரும் திறமையில்லாத கோயில் பூசாரியும் சொல்லுவதுதான் நல்ல அறிவுரையாக விளங்குகிறது. வணிகர் சமுதாயத்தில் இந்த இழிவானநிலை எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று? என்பன போன்ற ஐயங்கள் இப்பொழுது எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்தால் அது பாரதமாய் விரியும்.

வாணிகத்தின் கீழ்நிலைக்குக் காரணமாக ஒன்றைமாத்திரம் இப்போது தெளிவாகக் கூறலாம். வாணிகம் என்பது மக்கட் சமுதாயத்துக்குச் செய்யும் சிறந்த தொண்டு என்பது மேனாட்டவர் கொள்கை. நம் நாட்டவர் அதனை ஒரு சூதாட்டமென்று கருதுகின்றார்கள், பெருத்த நிலையில் வாணிகம் செய்து ஒருவர் கெட்டுவிடுவாரானால் ‘சூதாட்டத்தில் எப்படி வெற்றிதோல்விகள் நிலையில்லையோ அப்படியே வாணிபத்திலும் இலாப நட்டங்கள் நிலையில்லை" என்று சொல்வது வழக்கமாக இருப்பது யாவருக்கும் தெரிந்த செய்தி, வாணிபம் ஒரு சூதாட்டம் என்று எவன் எக்காலத்தில் சொன்னானோ தெரியவில்லை. அந்தப் படுபாவியின் சொல்லால் நமது நாடு வாணிகவுலகில் மதிப்பிழந்து போயிற்று.

வணிகரிடையே பொய்யும் வஞ்சனையும் மோசமும் இயற்கைப் பண்பாக அமைந்துவிட்டன.

நமது நாட்டுப் பாராளுமன்றத்தில் ஒரு முறை நமது நாட்டு வாணிகத்தைப் பற்றிப் பேச்சுவந்தபோது வணிகத்துறை அமைச்சர் எழுந்து நின்று நம்நாட்டு வணிகரிடம் உள்ளதென ஒரு பெருங்குறையை எடுத்துக் கூறினார். நம் நாட்டு வணிகர் தாம் விற்கும் பண்டங்களில் மோசமும் வஞ்சனையும் செய்கிறார்கள்; அதனால் வெளிநாட்டவர்க்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்று வருந்திக் கூறினார். வெளிநாட்டு மக்கள் இகழ்ந்து வெறுத்துத் தள்ளக்கூடிய அளவு பண்டங்களில் மோசம் செய்யப்படுகிற தென்றால், உள்நாட்டு வாணிகத்தில் நடக்கும் வஞ்சனைக்கு அளவு சொல்ல முடியுமா?

மக்களுக்குத் தேவையான பொருள்களுள் அரிசி, பருப்பு, புளி, மிளகு, மிளகாய்ப்பொடி முதலியன மிகவும் சிறந்தவை. நமது நாட்டுக் கடைத்தெருவில் விற்கப்படும் அரிசி முதலியவைகளை ஆராய்ந்தால் கல்லும் மணலும் கலவாத அரிசியும், பருப்பும் கிடையாது. புளியில் களிமண்ணையும், மிளகில் வேறு விதைகளையும் மிளகாய்ப் பொடியில் செங்கற் பொடியையும் கலந்துவிடுகிறார்கள். நல்லெண்ணெயில் வேறு எண்ணெய்களைக் கலப்பதும், சீனியில் மணலைக் கலப்பதும், பாலில் நீரையும் வெண்ணெயில் மெழுகையும், கலப்பதும் இயல்பாகவுள்ளன. துணிக்கடையில் நடக்கும் மோசங்களுக்கு எல்லையில்லை. எட்டு கசம் துணி வாங்கினால் அது மீள அளக்கும்போது ஏழரைகசத்துக்கு மிகுவதில்லை; எழு கசச் சீலையென்பான் அளந்தால் அது ஆறரைகசமே யிருக்கும்; ஆறு முழம் வேட்டி யென்பதை அளந்தால் அது ஐந்தரை முழந்தான் இருக்கும். இவற்றை நாடோறும் காண்பதால் மக்கள் மனத்தில் வாணிகம் என்பது சூதும் வஞ்சனையும் கலந்ததொழில் என்ற கருத்து வேரூன்றிவிட்டது. மக்களில் பெரும்பாலோர் போதிய கல்வியறிவில்லாதவர்களாதலால் வாணிகத்திற்கு இந்த இழிநிலை இயல்பாய்ப் போய்விட்டது; இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் இவர்களில் தீங்கு என்று நினைக்கவோ, இத்தீங்கை ஒழித்துக்கட்டுவதற்கேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவோ முன்வரவில்லை. உள்நாட்டில் இப்படிச்செய்து பழகிய மோசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் பெருவாரியாகப் புகுந்து வெளி நாட்டவர் இகழ்ந்து வெறுத்துத் தள்ளுதற்குரிய அவகேட்டை விளைவித்திருக்கிறது. பொருள் துறையில் படிப்படியாக முன்னேற முயன்றுகொண்டிருக்கும் நமது நாட்டுக்கு இந்த இழிசெயல் பெருத்த தீங்கை உண்டுபண்ணி வருவதை நமது நாட்டு வணிகர்கள் நினைப்பதாகவும் தெரியவில்லை; சமுதாயத்துக்கு இதனால் எவ்வளவு பெரிய துரோகம் செய்யப்படுகிறது என்பதும் அவர்கள் அறிவுக்கு எட்டியதாகத் தோன்றவில்லை. இன்றும் இந்த வஞ்சனையும் மோசமும் துரோகமும் நமது நாட்டு வணிகர் சூழலில் வளமாக நிலைபெற்றிருப்பதே இதற்குத் தக்க சான்று பகருகின்றது.

இந்த நிலை நமது நாட்டு வாணிகத்துறையில் நிலவுவதால் ஒருவர் பல ஆயிரக்கணக்கில் வைத்து வாணிகம் செய்தாலும் அவர் சொல்லும் விலையில், சொல்லில், ஏழைமக்களும் நம்பிக்கை வைப்பதில்லை, ஒரு பொருளின் விலை அவர் ஒரு ரூபா என்பாரானால், வாங்குபவர் அதைச் சிறிதும் நம்பாமல் முக்கால் ரூபா, அல்லவா? என்று கேட்பார். பின்பு சிறிது போது சொல்லாடல் நிகழும்; முடிவில் அவர் அந்தப் பொருளை முக்கால் ரூபாய்க்கோ பதினான்கணாவுக்கோ வாங்கிக்கொண்டு போவார்; பல்லாயிரம் ரூபாய் முதல்வைத்து வாணிகம் செய்யும் முதலாளியின் சொல் மதிப்பிழந்து பொய்பட்டே போகும். தமது சொல் பொய்படுவதையோ அதனால் தமது நாணயம் பொதுமக்கள் முன்பு கெட்டு நிற்பதையோ அவர் நினைப்பதும் இல்லை; உணருவதும் இல்லை, வேறு சிலர் தமது சொல்லுக்கு மதிப்போ நாணயமோ பொதுமக்கள் வையாமைகண்டு “ஒரே விலை" என்று வாணிகம் செய்யத் தலைப்பட்டனர்; ஆயினும் ஒரே விலைக்கேற்ற உயர்ந்த பொருளை அளவு குறையாமல் விற்பதை நெகிழவிட்டார்; ஒரே விலை என்பாரிடத்தும் பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மக்கள் சமுதாயத்தில் நம்பிக்கையும் நாணயமும் உண்டு பண்ணாத வாணிகமோ தொழிலோ எதுவும் பலநாள் நீடிக்க இயலாதாகையால், நிறுவிய ஒரு சில ஆண்டுகளில் மிகப்ப்ல வணிகர் வீழ்ச்சியுற்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினர்.

நமதுநாட்டு வணிகர் சொல்லும் சொற்களில நம்பிக்கை இல்லாது போனபடியாலும், அவர்கள் விற்கும் பொருள்களில் வஞ்சனையும் மோசமும் கலந்துள்ளமையாலும், வாங்கும் பொதுமக்கள் எந்தக் கடைக்குச் சென்றாலும், கடைக்காரர் சொல்லும் விலையைக் குறைத்துக் கேட்கும் (பேரம் பேசும்) வழக்கமும், அவர்தரும் பொருளின் தன்மையிலும் அளவிலும் ஐயப்படும் வழக்கமும் இயல்பாய் உள்ளன. இதனால் நமது நாட்டின் பெயரும் மதிப்பும் கெடுவது கண்டே நமது அரசியலார் வெளிநாடு செல்லும் நமது நாட்டவர்க்குச் சில அறிவுரைகளை அச்சடித்துத் தருகின்றார்கள். அவற்றில் ஒன்று: “நீங்கள் வேறு நாடுகளில் கடைக்குச் சென்றால், வாங்கவிரும்பும் பொருளுக்கு என்ன விலை சொல்லப்படுகிறதோ, அதை அப்படியே கொடுத்து விட வேண்டும்; பேரம் பேசக்கூடாது’ என்பது. சென்ற சில ஆண்டுகட்குமுன் நமது தென்னாட்டிலிருந்து அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்த ஒருவர், ஒரு கடையில் ஒரு பொருளின் விலையைக் கடைக்காரர் சொன்ன விலைக்குக் குறைவாகக் கேட்டாரென்பதற்காக அக்கடை முதல்வர் அவர்மேல் “மானநட்ட வழக்குத் தொடுத்த" செய்தி நாடறிந்த தொன்று. அதனால் நமது நாட்டு வாணிகத்தின் மானம் “கப்பலேறி விட்டது." இப்படியே மிளகுப் பொதியில் வேறு பொருள் கலந்தும், புளியில் மண்ணைக் கலந்தும் நமது நாட்டு வாணிகம் நமது நாட்டின் புகழுக்கும் பெருமைக்கும் பொல்லாத பழியும் வசையும் கொண்டுவந்ததைச் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

வட அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்பது ஒரு மாகாணம்; அங்கே சிகாகோ என்றொரு பெரிய நகரம் உள்ளது. அந்நகரத்தில் ஒரு வாணிக நிலையம் சிறப்புடன் தொடங்கி வாணிகம் புரிந்து வந்தது. பல செல்வர்கள் அதற்குப் பங்காளிகளாக இருந்தனர். சில ஆண்டுகட்குப் பின் அதன் வாணிகத்தில் ஏதோ ஒரு குறையுண்டாக, அவ்வாணிக நிலையம் பெரு நட்டத்துக்கு உள்ளாகி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. பங்காளிகளுக்கு மனவேதனை மிகுந்தது. “முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்றாற்போல முதலுக்கே கேடு தோன்றத் தலைப்பட்டது. அப்போது அதன் பங்காளிகளில் ஒருவரான ஹெர்பார்ட் டெயிலர் (Herbart Teylor) என்பவர் தலைமையில் அதனை ஒப்படைத்தனர். அப்போது அவர் வேறோரிடத்தில் மிக்க வருவாயுள்ள தொழிலில் ஈடுபட்டிருந்தார், ஆயினும் அவர் அதனைத்துறந்து விட்டு இந்த வணிக நிலையத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை மேற்கொண்டார்.

டெயிலர் (H.Teylor) முதல்வராய சிறிது காலம் அதன் நடைமுறைகளை நன்கு ஆராய்ந்தார். தொழிலாளிகளின் சொற்களையும் செயல்களையும் ஊன்றி நோக்கினார். விற்கப்படும் பொருள்களின் நலம் தீங்குகளை நன்றாகப் பார்வையிட்டார். வாணிகத்தின் மதிப்புக்கும் நாணயத்துக்கும் மாசு உண்டாக்கிய காரணங்களைக் கண்டார்; அதைப் போக்கும் துறையில் அவர் கருத்து ஆழ்ந்து நின்றது. முடிவில் அவர் மாசு துடைத்து மதிப்பை உயர்த்திப் பொதுமக்கள் மனத்தில் நம்பிக்கை உண்டுபண்ணுதற்கென்று ஒருசில "மந்திரங்களைக்" கண்டுபிடித்தார். அதைப் பின்பு ஒவ்வொரு தொழிலாளிக்கும் "உபதேசித்து" அதை மறவாமல் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். தொழிலாளரின் மனத்தில் வேரூன்றிய "மந்திரம்", விரைவில் செயல்பட்டது. சிறிது காலத்திற்குள் அவரது வாணிக நிலையத்தின் புகழ் காட்டுத் தீப்போல எங்கும் பரவிற்று; வாணிகம் பெருகிற்று, ஊதியம் மிகுந்தது; விழும் நிலையிலிருந்த நிலையம் 200000 டாலர் வருவாயுள்ள பெரு வாணிகமாய் இன்று பிறங்கியுளது. மக்கள் அனைவருக்கும் அதன்பால் மிக்க நம்பிக்கையும் நன்மதிப்பும் உண்டாகவே, இப்போது யாவரும் பாராட்டும் பெருமை பெற்று விளங்குகிறது.

அப்படியானால் அந்த "மந்திரம்" யாது என அறிய வேண்டுமன்றோ? அதனை அவர் ரோட்டரி யென்னும் சுழல்கழகத்தின் வாயிலாக உலக மக்கள் அறிந்து பயன்புடுமாறு விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

1. யாரேனும் தமது வாணிக நிலையத்துக்கோ கடைக்கோ வந்து ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டால், அப்பொருள் இருக்குமானால், அதை ஆராய்ந்து, "இது உண்மையான பொருள் தானா?” என்று முதலில் பார்க்க வேண்டும். இது தான் முதல் மந்திரம், போலியாகவோ மோசமானதாகவோ அந்தப் பொருள் இருக்கக் கூடாது. உண்மையானதாக இருந்தால்தான் கொடுக்க வேண்டும். 2. ஒரு பொருளின் விலையைச் சொல்லி வாங்கும்போது நாம் வாங்கும் விலை நேர்மையானதா? என்று காணவேண்டும். இஃது இரண்டாவது மந்திரம். நேர்மையில்லாத வழியில் விலை குறிப்பதும் விற்பதும் மக்கள் மனத்தில் அருவருப்பை உண்டாக்கும்; அதனால் வாணிகம் தடைப் பட்டுச் சீரழியும்.

3. நாம் இப்படிச் சொல்லுவதாலும் செய்வதாலும் நம்மிடத்தில் பொதுமக்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டாகுமா? பொதுமக்களுக்கும் நமக்கும் இடையே உயர்ந்த நட்பு உண்டாகுமா? என்று ஆய்ந்தறிய வேண்டுவது மூன்றாவது மந்திரம். நம்பிக்கையால் வாணிகம் பெருகும். நட்பினால் அது செழிக்கும். நாட்டில் நமது தொழிலுக்கு மதிப்பும் புகழும் தோன்றிச் சிறக்கும்.

4.நமது இந்தச் செய்கையால் எல்லோருக்கும் நன்மை விளையுமா? என்று நோக்குவது நான்காவது மந்திரம். பிறர்க்கு நன்மை செய்வது குறித்தே வாணிகத் தொழில் உண்டாகியிருக்கிறது. அவரவர்க்குத் தேவைப்படும் பொருள்களை அவரவரும் தாமே தேடிக்கொள்வது எளிதில் நடக்கக்கூடியதன்று. ஒருவர் உண்டு பண்ண, உண்டு பண்ணிய பொருள்களை ஒருவர் ஒரிடத்தே கொண்டு சேர்த்துத் தொகுக்க, ஒருவர் அவற்றைப் பலருக்கும் வகுக்க, ஒருவர் எடுத்து விற்க, இப்படிப் பலரும் பலவகையில் உழைக்க வேண்டும். நமது செயலால் வாங்குபவரும் விளைவிப்பவரும் இடையில் பல நிலைகளில் வேலை செய்பவரும் யாவரும் நன்மை பெறவேண்டும். மேலும், தேவைப்பட்டு வாங்கு வோருள்ளும் ஏழை எளியவர், சிறியவர் முதியவர், தெரிந்தவர் தெரியாதவர் யாவரும் இதனால் நன்மையடைய வேண்டும். தேவைப்பட்ட பொருள் செம்மையான நிலையில் கிடைக்கப் பெற்றால் பெறுகின்ற மக்கள் மனத்தில் அமைதியும் இன்பமும் உண்டாகும். இவ்வாறு மக்கட் சமுதாயம் தேவையானவைகளைச் சிறந்த நிலையில் பெற்று அமைதியாகவும் இன்பமாகவும் மனநிறைவோடும் வாழுமாறு தன் செயலை நாணயமாகவும் ஒழுங்காகவும் செய்வது தான் உண்மையான வாணிகம்; இது பற்றியே, பொதுமக்கட்குச் செய்யும் தொண்டுகளில் தலைசிறந்தது வாணிகம் என அறிஞர் கூறுகின்றார்.

இந்த “நான்கு மந்திரமும்" உரிமைகொண்டு வாழும் உலக நாடுகளில் வணிகர் சமுதாயத்தில் நன்கு பரவியிருப்பத்ால், அந்த நாடுகள் செல்வமும் புகழும் சிறப்புறப் பெற்றுத் திகழ்கின்றன. நமது நாட்டு வணிகர்களும், வாணிகம் என்பது பொதுமக்கட்குச் செய்யும் பெரிய தொண்டு என்பதை அறிய முடியாத பேதை களல்லர்; அதனால் அவர்கள் இந்த "நால்வகை மந்திரங்களையும்" கற்று நடைமுறையில் தவறாமல் கையாளுவார் களானால் சிறப்பும் செல்வமும் பெற்று மகிழும் ஏனைய நாடுகளைப் போல நமது நாடும் பொருளும் புகழும் பூத்துப் பொன்னாடாய்ப் பொற்புமிகும் என்பதற்கு ஐயமேது?

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/013-020&oldid=1625136" இலிருந்து மீள்விக்கப்பட்டது