செயலும் செயல்திறனும்/துன்பம் வரும்பொழுது தவறான வழிகளைக் கடைப்பிடியாமை
1. நேர்மை நெகிழ்ச்சியே குற்றம்
மாந்தன் எப்பொழுதுமே நேர்மையாளனாக இருப்பதில்லை. குற்றமற்றவனாகவும் விளங்குவதில்லை. எனவே, தவறு செய்பவனாகவே இருக்கிறான். இன்னும் சிலர் சில நேரங்களில் பிறர்க்குக் கொடுமை செய்யவும் துணிந்து விடுகின்றனர்.
மாந்த மனவியல்படி நேர்மையின்றி இருக்கத் தேவையில்லை. நேர்மையுணர்வும், குற்றமற்ற உணர்வும், உயர்ந்த மன உணர்வுகள். மாந்தன் விலங்குணர்வினின்று படிப்படியாக விலகித்தான் மாந்தவுணர்வு பெறுகிறான். இனி, மாந்தவுணர்வினின்று உயர்ந்து மீமிசை மாந்த உணர்வும் பெற்று உயர்தல் வேண்டும். இல்லெனில் மாந்த நிலைக்கே பொருளில்லாமற் போய்விடும். விலங்குக்கும் மாந்தனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
ஒரு மாடு தன் உடைமையாளர்க்கு உரிமையில்லாததும், வேறொருவர்க்கு உரிமையுடையதுமான ஒர் அயலார் நிலத்தில், தான் புல்மேயக் கூடாது என்று எண்ணுவதில்லை. அதேபோல், வேறொரு மாட்டுக்குரிய உணவைத் தான் உண்ணக்கூடாது என்று கருதுவதில்லை. தனக்கு உரிமையான உணவைத்தான் தான் உண்ண வேண்டும் என்னும் நேர்மை உணர்வு பறவைகளிடமும் இல்லை; விலங்குகளிடமும் இல்லை. ஆனால், அவற்றினும் உயிர்வளர்ச்சி நிலையிலும், உள வளர்ச்சி நிலையிலும் மிக முன்னேற்றம் அடைந்த மாந்தனிடம் அவ்வுணர்வுகள் இருக்கக் கூடாது அன்றோ?
ஒரு செயலில் வினையில் ஈடுபட்ட ஒருவர் அதனைச் செய்து முடிக்கும் வரையில், தனக்குள்ள உரிமைகளையும் உயர்வுத் தன்மைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டுவது மிகவும் இன்றிமையாதது.
2. பிறரை வஞ்சியாமையே நேர்மை
பெரும்பாலும், செயலில் நேர்மையாக நடக்க விரும்பும், அல்லது நடக்கும் ஒருவர், அச்செயலில் துன்பங்கள் எதிர்ப்படும்பொழுதுதான்,
அந்நேர்மையில் நெகிழ்ச்சி காட்டுகிறார். பிறகு தம் செயல் வலுப்பெற வேண்டும் என்பதற்காகப் பல தவறான வழிகளைக் கடைப்பிடிக்கிறார். இன்னும் சிலர் குறைந்த முயற்சியில் மிகுதியாகப் பணம் தொகுக்கப்பட வேண்டும் என்னும் பேராசையால், செயலின் தொடக்கத்திலிருந்தே நேர்மையில்லாத வழிகளையும் குறுக்கு வழிகளையும் பின்பற்றுவது பொதுவான உலகியலாகவே மாறி வளர்கிறது. செயலில் நேர்மையைக் கடைப்பிடிப்பது, அச்செயலின் நிலைப்பாட்டுக்கு நல்லதையே பயக்கும் என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். பிறரை வஞ்சித்து, ஏமாற்றித் திருடி, அல்லது பொய்க்கூறிப் புரட்டல் செய்து, ஈட்டுகின்ற பொருள், என்றேனும் ஒருநாள் அத்தீச்செயல்கள் வெளிப்படும்பொழுது, ஒருசேரப் போய்விடும் என்னும் உலகப் பொதுவுண்மையை நாம் உணர்தல் வேண்டும்.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (659)
என்னும் அறவுரை, சாவிப்புப் (சாவம்) போலக் கூறப்பெற்றதன்று. உலகியலடிப்படையில் கூறப்பெற்ற பொதுவுண்மையே ஆகும்.
தொழிலியலில், ஒருவர் முற்கூறிய தவறான வழிகளைக் கையாண்டு மிகுபொருள் திரட்டுவதாக வைத்துக் கொள்வோம். இதனால் தாக்குண்டவர் பலராக இருத்தல் வேண்டும்; எடுத்துக்காட்டாக, வாணிக நிலையில் ஒருவர் தாம் கொண்ட கொள்முதலீட்டுக்கு மேல் ஒன்றுக்குப் பத்தாக ஊதியம் வருமாறு கூறிப் பிறர்க்கு விலைபோக்குவதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு செய்பவர் அந்த நிலையில் அவ்வப்பொழுது தம்மை மறைத்துக் கொண்டு செயல்படலாம். ஆனால், அரசு அதிகாரிகள் ஒருநாள் அவரை அணுகவும், அவர் தவறான முயற்சிகளைத் தெரிந்து கொள்ளவும் முற்படும்பொழுது, அவர் இதுவரை தவறாக ஈட்டி வைத்த பொருள் பறிமுதல் செய்யப்படலாம். அல்லது தாம் செய்த குற்றங்களுக்குத் தண்டமாகவோ, வழக்கு நடத்தவோ தாம் ஈட்டியவற்றுள் மிகுபொருளைச் செலவிட வேண்டியிருக்கலாம். நடைமுறைகளாலேயே ஊறுபாடு வந்தெய்துவதும் இயல்பானதே யாகும்.
3. துன்பம் வரும்பொழுதே நேர்மை இழக்கின்றோம்
இந்நிலையில், பொதுவான, தங்களுக்கு இயல்பான தாழ்ந்த மனநிலைகளுடன் செயல்படுபவர்களைத் தவிர்த்து, (ஏனெனில் அவர்கள் தாமே தம்மைத் திருத்திக் கொண்டால் தான் உண்டு) செயல்களுக்கிடையில் வரும் துன்பங்களைத் தாளமுடியாமல், தொடக்கத்தில் நேர்மையாக நடந்து கொண்டு, இடையில் அதே நேர்மையுடன் இருக்கவியலாமல், தம் நிலைகளினின்று விலகி, நேர்மையில்லாத வழிகளைக் கடைப்பிடிக்க முற்படுபவர்களுக்குச் சில
சொல்லியாகல் வேண்டும். அத்தகையவர்கள் துன்பங்களின் பொருட்டாகவே தவறான நெறிகளில் செல்ல முற்படுவர். இனி, இவர்களையுமல்லாமல் இயல்பாகவே எந்தத் தாழ்வான நிலையிலும், தங்களை நேர்மை வழிகளிலிருந்து தாழ்த்திக் கொள்ளாதவர்களுக்கும் நாம் கூறுவது ஒன்றுமில்லை. அத்தகையவர்களை அசைவற்ற தெளிவான தன்மையுடை யவர்கள் என்று திருக்குறளாசான் பாராட்டுகிறார்.
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (654)
திருக்குறளில் வினைத்துய்மை என்னும் அதிகாரத்துள் கூறப்பெற்ற அனைத்துக் கருத்துகளும் உலகியல் பொருத்தம் உடையனவே, செயல் முனைப்புக் கொண்ட அனைவராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டுவனவே.
4. கீழ்மைச் செயல்கள்
தவறான, நேர்மையற்ற முறையல்லாத பழி தருகின்ற குற்றந்தருகின்ற, இழிவான, கீழ்மையான செயல்களைப் பேராசான், நன்றி பயவா வினை (652) ஒளிமாழ்கும் செய்வினை அஃதாவது பெருமையைக் குலைக்கும் செயல் (653), இழிவான செயல் (654), எற்றென்று இரங்கும் அஃதாவது எதற்கு இவ்வாறு செய்தோம் என்று பின்னர் வருத்தப்படுகின்ற செயல் (655), நல்லவர்கள் பழிக்கும் செயல் (656), பழிகளைத் தழுவிய செயல் (657) தவிர்க்க வேண்டும் செயல் (658) பிறர்க்குத்துன்பத்தை உண்டாக்கும் செயல் (659), ஏமாற்றுச் செயல் (650) என்று பலவாறு அவற்றின் தன்மைகள் புலப்படுமாறு கூறுவார்.
மேலும், எத்தகைய தேவைக்குரிய, கட்டாயம் செய்ய வேண்டிய கடமை தழுவிய செயல்களே ஆனாலும் பெருமையைக் குறைக்கும்: மானத்தைக் கெடுக்கும்; அத்தகையவற்றைச் செய்யவே கூடாது', என்பதைப் பலவாறு வற்புறுத்துகின்றார், அறமுதல் பேராசிரியர்.
5. தவறான வழியில் செல்லாதவர்கள்
இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். (961)
கச் சிறந்த பேராளுமை உடையவர்கள் (Great Administrators) சிறப்பல்லாத இத்தகைய இழிவான வழிமுறைகளில் ஈடுபடமாட்டார்கள்.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். (962)
நல்ல, சிறந்த குடிப்பெருமை உடையவர்கள், தமக்குத் துன்பம் நேர்ந்து, பிறர்க்கு உதவமுடியாத நிலையிலும், துன்பங்களுக்கு இயல்பாக உள்ள பண்பு நலன்களில் தாழ்ந்துவிட மாட்டார்கள்.
வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. (955)
மேலும், தீயவழிகளைக் கடைப்பிடித்துப் பொருள் திரட்டுதல், சுடாத பச்சை மண்சட்டியில் நீர் ஊற்றி வைப்பதற்கு ஈடானது. அந்த நீர், சட்டியையும் கரைத்துக் கொண்டு வெளியேறிவிடும் தன்மையைப் போல், எவ்வளவு காத்து வைத்தாலும் அப்பொருள், அக் காவலையும் உடைத்துக் கொண்டு வெளியேறிவிடும் தன்மையுடையது என்பது பேராசான் கருத்து.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பகமட்
கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று - (660)
5. தவறான செயல்கள் வெற்றி பெற்றாலும் குற்றம் தரும்
இனி, இன்னொன்றை நாம் தவறாக எண்ணிக் கொள்கின்றோம். ஒரு செயலைத் தவறான வழிகளைக் கடைப்பிடித்து வெற்றியாகச் செய்து முடித்துவிட்டபின், அதனால் பிறகு தீங்கு வராது என்று நினைக்கின்றோம். அது சரியான முடிவன்று.
மாணவப் பருவத்தில் மிகவும் தொடக்கநிலைக் கல்வியில் கூட, தவறான் படிப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொடுத்து, அதன் அடிப்படையில் உயர்கல்வியும், மிக மேற்பட்ட கல்வியும் பெற்று, மிக மேற்பட்ட பணிகளுக்குப் போயிருந்த அதிகாரிகள் சிலர், பின்னர் நெடுங்காலம் கழித்துக் கண்டுபிடிக்கப்பெற்றுத் தாழ்ச்சியும் தண்டனையும் பெற்ற பல செய்திகளை உலகியலில் காண்கின்றோம்.
எனவே தவறான வழிகளைப் பின்பற்றி ஒரு செய்லை வெற்றியுடன் செய்து முடித்துவிட்டதாக எண்ணிவிட வேண்டாம் செயல் முடிந்து மிகவும் பிந்திய காலத்தில்கூட முன்னர் நல்விளைவை உண்டாக்க உதவிய தவறான செயல்கள், திடுமெனத் தீமைகளைத்தரும் என்று எச்சரிக்கை செய்வார், திருக்குறள் பேராசான்.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். (658)
7. குற்றத்திற்குக் காரணங்கள்
மாந்த இனத்தில் நேர்கின்ற குற்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பெரும்பாலும் மிகு ஆசை, பொறாமை பகையுணர்வு, வெறுப்பு, வறுமைத்
துன்பம் முதலிய அகப்புறத் தாக்கங்களே காரணங்கள் ஆகும். இவற்றுள்ளும் இல்லாமையென்னும் வறுமையால் ஏற்படும் துன்பமே அனைத்துக் குற்றங்களுக்கும் தலையாய காரணமாக இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
வறுமைத் துன்பம் இருவகையானது. இல்லாமல் துன்பப்படுவது; இருந்து இழந்து துன்பப்படுவது இவ்விரண்டுள்ளும் கூட இல்லாமைத் துன்பத்தைவிட இருந்து இழக்கும்துன்பமே மாந்தனைக் குற்றம் செய்யத் தூண்டுகிறது.
ஒரு குழந்தை தன்னிடம் இல்லாத ஒரு பொருளுக்காக வருந்துவதில்லை. அதனிடம் ஒரு பொருளைக் கொடுத்து விட்டுப் பின்னர் அதை வாங்கும்பொழுது, அதன் இழப்பை அதனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அந்தப் பொருளே வேண்டுமென்று அழுகிறது; அடம் பிடிக்கிறது; சினம் கொள்கிறது. வேறு பொருள்களைக் கொடுத்தால் அவற்றைத் தூக்கி எறிகிறது. அல்லது சேதப்படுத்துகிறது. மாந்த மனம் இத்தகையதுதான்.
ஒருவர் ஒரு செயலை ஊதியத்துக்காகச் செய்ய முற்படுகிறார். (ஊதியம் என்பது பொருள், பதவி, புகழ் ஆகிய மூன்றையுமே உள்ளடக்கியது.) அச்செயலால், தமக்கு ஊதியம் வரவில்லையாயால் மனம் சோர்வடைகிறது. இனி அதைவிட இழப்பு ஏற்படுமானால் அவரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அந்த நிலையில் மனம் அவ்விழப்பை எவ்வகையிலேனும் ஈடுசெய்ய விரும்புகிறது. அதனால் பின்னர், தனக்கோ பிறர்க்கோ வரும் கேடுகளை எண்ணிப் பாராமல், தனக்கேற்பட்ட இழப்பைச் சரி செய்ய விரும்புகிறது. இத்தகைய நிலைதான் நம்மில் பெரும்பாலார்க்கு ஏற்படுகின்ற கோணலான போக்குக்குக் காரணமாகிறது.
நமக்கு ஏற்படுகின்ற துன்பத்தை இடர்ப்பாட்டை இழப்பை சறுக்கலை ஈடுகட்டிக் கொள்ள உடனே ஒரு வழியைக் கடைப்பிடிக்கத் துடிக்கிறோம்; விரைவுப்படுகிறோம். அந்தத் துடிப்பிலும் விரைவிலும் நாம் அச்சூழ்நிலையை வென்றெடுக்கக் கடைப்பிடிக்கப் போகும் வழி, சரியானதா - தவறானதா பழிவாங்கக் கூடியதா - குற்றம் தரக்கூடியதா என்றெல்லாம் ஆராய முற்படுவதில்லை. அதற்கென எண்ணிப் பார்க்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ளும் பொறுமையும் அமைவும் நமக்கு இருப்பதில்லை. உடனே நமக்குட்பட்ட, அல்லது நம் நண்பர்கள் கூறுகின்ற வழியைப் பின்பற்றத் தொடங்கி விடுகிறோம்.
ஒரு செயலில் கேடு வருவதும் ஆக்கம் வருவதும் இயல்பு. அவை எதனால் வருகின்றன? கேடு வந்தால் ஏன் வந்தது என்று ஆராய்ந்து, அதைத் தவிர்க்கும் சரியான வழியை நாம் கடைப்பிடித்தல் வேண்டும். செயலில் ஏற்படும் குற்றங்களுக்காகவும் மனத்தை - நெஞ்சத்தை ஊறுப்படுத்திக் கொள்ளக் கூடாது. தவறான வழிகளைக் கடைப்பிடிப்பதன் வழி உள்ளம் - நெஞ்சம் ஊறுபடுகிறது; பின்னர் அது தொடர்ந்து அதுபோல் ஊறுபாடான, குற்றமான வழிகளிலேயே செல்லத் தொடங்கி விடுகிறது. இதைத் திருவள்ளுவப் பேராசான் கடிகிறார்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (115)
என்கிறார்.
8. நல்லதே வருவதானாலும் தவறானவற்றைத் தவிர்க்க
நல்லதையே தந்தாலும் கூட, நடுநிலைமையில்லாமல் வருகின்ற ஊதியத்தை - ஆக்கத்தை அவ்வாறு எண்ணத் தோன்றிய அப்பொழுதே தவிர்த்து விட வேண்டும் என்பது அவர் கோட்பாடு.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் (113)
வறுமைத் துன்பம் எய்தினாலும் இழிவான செயல்களைச் செய்து இன்பத்தைத் தேட வேண்டாம். அப்படித் தேடுபவர்கள் முரட்டுத் துணிவுடையவர்கள்; பழிக்கு அஞ்சாதவர்கள்; உள்ளம் நடுங்காதவர்கள்; நடுநிலையில்லாதவர்கள் தெளிவில்லாதவர்கள், அறிவில்லாதவர்கள் என்று கடிகிறார் பெருந்தகை.
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்குற்ற காட்சி யவர். (654)
தங்களுக்கு இல்லையே; பிறருக்கு இருக்கிறதே என்ற பொறாமையும் ஆசையும் கலந்த உணர்வோடு எந்தத் தவறான செயலிலும் ஈடுபட்டு விடக்கூடாது அப்படி ஈடுபடுபவர்கள் இழிந்தவர்கள்: மூடர்கள்; புலனுணர்வுக்கு அடிமைப் பட்டவர்கள்.
இலமென்று வெஃகுதல் செய்யார்; புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் (174)
இனி இப்பொழுது வந்து கொண்டிருக்கின்ற பயன் அல்லது நன்மை அல்லது ஊதியம் இவற்றைவிட, இன்னமும் மேற்கொண்டு வருகின்ற கூடுதல் பயனையும்,நன்மையையும் ஊதியத்தையும் எண்ணிப் பார்த்துக்
கணக்கிட்டு, நேர்மையல்லாத பழி தருகின்ற செயல்களைச் செய்பவர்கள் இழிவுகளுக்காக வெட்கப்படாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்னும் பேராசைகொண்ட தந்நலம் உடையவர்கள் என்பார் பேராசிரியர்.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)
மேன்மேலும் பழிகளும் குற்றங்களும் வந்து கொண்டே இருக்குமாறு இழிவான அல்லது தவறான செயல்களைச் செய்வதால் வருகின்ற நலன்களை, ஊதியங்களைக் காட்டிலும், அவ்வாறு செய்ய முற்படுவதற்குக் காரணமாக இருந்த, மிகுந்த வறுமைத் துன்பமே இல்லாமையே சிறந்தது.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (657)
நடுநிலை தவறி, நல்ல ஊதியம் அல்லது ஆக்கத்தை மிக விரும்பிப் பேராசைப்பட்டுத் தவறான வழிகளைக் கடைப்பிடிப்பதால் வரும் பின் விளைவுகள், அப்படிச் செய்பவர்க்குத் தண்டனையைத் தருவதோடு மட்டும் நில்லாமல், அவரையும் அவரைச் சார்ந்த குடும்பத்தையும், மற்றும் உறவினர்களையும், அவர்கள் அனைவரும் சேர்ந்த குடியையும் கூடத் தாழ்த்தி அழித்துவிடும் என்று கடுமையாக எச்சரிப்பார் அறவியல் பேராசிரியர்.
நடுவின்றி, நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். (171)
எனவே, நாம் செய்ய எடுத்துக்கொள்ளும் செயல் அல்லது வினை சரியானது, நல்லது, சிறந்தது, நமக்கும் பிறர்க்கும் இன்பம் தருவது என்று தெளிந்து, தெரிந்து, தொடங்கிவிட்டால், பின்னர் அதைச் செய்கின்றபொழுது துன்பங்கள் அடுக்கடுக்காக, வகை வகையாக, வந்தாலும், மனம் தளர்ச்சியில்லாமல், தாழ்ந்துவிடாமல், திசை திரும்பாமல், நல்லது அல்லாத வழிகளில் போகாமல், தொடர்ந்து, துணிவோடு செய்தல் வேண்டும் என்பார் அறிவாசான்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (660)
9. இல்லையே என்றும் தீமையைக் கடைப்பிடியாதே
இந்த வகையில் திருவள்ளுவப் பேராசான் இன்னும் இரண்டு கருத்துகளை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துக் கூறுகிறார். அவை இரண்டையும் நாம் எப்பொழுதும் மனத்தில் இறுத்திக் கொண்டு, நம்
வாழ்க்கையின் கடைசிப் பொழுது வரையில் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும்.
அவற்றுள் ஒன்று, ஒருவன் தனக்குத் தான் மேற்கொண்ட நல்ல செயலில் பெரு நன்மை கிடைக்கவில்லையே என்றோ, வருவாய் வரவில்லையே என்றோ, வறுமை வந்துற்றதே என்றோ, பின்பற்றத் தகாதனவாகிய தீய செயல்களையோ, அல்லது வழிகளையோ, செய்தல் கூடாது. அவற்றில் ஒரு வகையான நலன் கிடைக்கின்றது என்பதற்காக, அவ்வாறு செய்வானாயின், பின்னர் அந்தச் செயலால் வரும் நன்மைகளையும் ஏற்கனவே அவனுக்கிருந்த பல நலன்களையும் சேர்த்து இழந்து போவான்' என்பார்.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)
இக்குறளில் உலகில் தீயவை செய்யப்படுவனவெல்லாம் பெரும்பாலும் இல்லை என்னும் நிலையில் செய்யப் பெறுவனவே என்று உலகியல் பொதுவுண்மை சுட்டப்பெறுவதை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். தவறான வழிகளைக் கடைப்பிடிப்பதற்கு, இல்லையே, வேறென்ன செய்வது என்பதே பெரும்பாலார் காரணம் காட்டுவதால், 'அவ்வாறான நிலையிலும் கூட தீயவை செய்யக்கூடாது; அவ்வாறு செய்தால் உள்ளதும் போய்விடும் என்கிறார். இவ்வுண்மையை ஏதோ மந்திர நோக்காக அவர் கூறவில்லை. மனவியல், உலகியல் அடிப்படையில் நிகழ்கின்ற செயல்களைக் கொண்டுதாம் கூறுகிறார் என்பதை உணர்தல் வேண்டும்.
எவ்வாறெனில், தீயவை செய்தாவது இல்லாமையை அல்லது வறுமையைப் போக்கவேண்டும் நலன்களைத் தேட வேண்டும் என்று எண்ணுபவர்கள், தீயவற்றால் இயல்பாகத் தொடக்கத்தில் வரும் நன்மைகளைக் கண்டு மேலும் கூடுதலான நன்மைகளை விரும்பி, மேன்மேலும் கூடுதலான தீமைகளில் ஈடுபட முயல்வார்கள். அக்கால் அவர்களின் தவறான செயல்கள் அண்டை அயலாராலும் ஆட்சியதிகாரிகளாலும் காவலர்களாலும் கண்டு கொள்ளப் பெறுதலும், அவர்கள் தீயவற்றால் வந்த நலன்களை மட்டுமே பிரித்துணராது, ஒட்டுமொத்தமாக, முன் நேர்மையில் வந்த நலன்களையும் பொருளீட்டங்களையும் தீமையிற் கொண்டனவாகவே கருதி, அவற்றையும் சேர்த்துக் குற்றப்படுத்தி அவற்றையும் ஒருங்கே கைப்பற்றிக் கொள்ளலும், உலகியல் நடைமுறையாகுமன்றோ? இவ்விளைவைப் 'பெயர்த்து என்னும் சொல்லால் உணர்த்தினார், உளவியலும்
உலகியலும் முற்ற உணர்ந்த மூதறிஞர் என்க.
10. நல்ல குடிமரபு உடையவர் குற்றச் செயல்கள் செய்யார்
இனி, மேற்கூறப்பெற்ற உண்மையின் அடிப்படையில் இன்னொரு மேல்விளைவையும் குறிப்பர், அப்பேரறிஞப் பெருந்தகை.
நல்ல மரபு வழிப்பட்ட குடிமைச் சிறப்புடையவர்கள், சில நிலைகளில், தம் குடிப்பெருமை முன்னோர் சிறப்பு இவற்றையெல்லாம் எண்ணிப்பாராமல், சூழ்ச்சியாலும், ஏமாற்றாலும் பிறரை வஞ்சித்துத் தீமையான வழிகளில் நலமும் வளமும் தேடிக் கொள்வார்கள். அக்கால், இவர்கள் செய்யும் தவறுகளால், இவர்களின் முன்னோர் பெருமையும் அஃதாவது இவர்களின் மரபு வழிப்பட்ட குடிப்பெயரும் தாழ்ச்சியுறும். எனவே, தங்களுக்கு மட்டுமன்றித் தங்கள் முன்னோர்க்கும் இழுக்கு வரக்கூடாது என்று எண்ணுபவர்கள் பிறரை ஏமாற்றித் தீயவழிகளில் பொருளைத் தேடமாட்டார்கள் என்று கூறுவர், மானவழி கூறும் அவ் வினைநலப் புரவலர்.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார் (956)
எனவே, செயல்திறம் கொண்டவர்கள், எந்த நிலையிலும், தவறான வழிகளைக் கடைப்பிடித்துத் தம் செயல்களையோ, வாழ்வையோ நலப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஒரு செயலைச் செய்வதுமட்டுமன்றி, அச்செயலையும் திறம்படச் செய்யும் செயல்திறவோர்க்கு இதுவும் கவனிக்கப்பட வேண்டும் என்பதால், இதனை இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் கூற வேண்டி வந்தது.