செவ்வாழை/வழக்கு வாபஸ்

3
வழக்கு வாபஸ்

இடம்: ஒரு (நீதிபதியின்) கோர்ட் மண்டபம்.

இருப்: நீதிபதி, வாதி வக்கீல்; சிவநேசன்—குற்றவாளி; மாணிக்கம் செட்டியார்—வழக்கு தொடுத்தவர்; முத்துச்சாமி—ஒரு பூசாரி, சாட்சி; இருளாண்டி— மற்றோர் பூசாரி, சாட்சி; சேவகன், மேலும் பல வக்கீல்கள், ஊர் மக்கள் ஆகியோர்.

நிலைமை: கோர்ட்டிலே, சிவநேசன் குற்றவாளி என்பதை நிரூபிக்க, வாதி மாணிக்கம் செட்டியாரின் வக்கீல், பல கூறிவிட்டுக் கடைசியாகச் சுருக்கமுரைக்கிறார்.

வாதி வக்கீல்: இவன், மாணிக்கவாசகம் செட்டியார் மண்டிக்கடையில் குமாஸ்தா. இவனிடம் செட்டியாருக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கைக்குப் பாத்திரனான இவன், செட்டியார் கடையிலிருந்து பத்து வீசைக் கற்பூரத்தைக் களவாடிக் கொண்டு போய்விட்டான். இதுவே இவன் செய்த குற்றம்.

[கூண்டில் குற்றவாளி நிற்கிறான்.]

மாஜிஸ்: (குற்றவாளியைப் பார்த்து) உன் பெயர் என்ன? குற்: சிவநேசன். மா: குற்றம் செய்திருப்பதை ஒப்புக் கொள்கிறாயா?

குற்: நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே.

மா: வழக்கின் விவரத்தை வக்கீல் கூறினாரே, கேட்டாயல்லவா?

குற்: கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.

[வாதி வக்கீல் எழுந்து நின்று, தான் கேள்விகள் போடுவதாகக் குறிப்புக் காட்டிவிட்டு...)

வாதி வக்கீல்: இது கோர்ட்—நீதிமன்றம்.

குற்: நீதி கிடைக்குமென்று நம்பித்தான் நிற்கிறேன்.

வா.வ: வம்பளப்பு வேண்டாம். மண்டி மாணிக்கஞ் செட்டியார் கடையில் நீ குமாஸ்தாதானே?

குற்: இருந்தேன்.

வா.வ: கடந்த வெள்ளிக்கிழமை என்ன நடந்தது?

குற்: தங்கள் வீட்டிலே பாட்டுக் கச்சேரி நடந்ததாகக் கேள்வி.

வா.வ: குறும்பு பேசாதே. என் வீட்டு நடவடிக்கை பற்றி உன்னை யாரும் கேட்கவில்லை; செட்டியார் கடையிலே என்ன நடந்தது?

குற்: அதைக் கேட்கிறீர்களா? முன்னமேயே அப்படிக் கேட்டிருந்தால் நான் ஏன் தங்கள் வீட்டு விஷயம் பேசப் போகிறேன்.

வா.வ: சரி, சரி! கடந்த வெள்ளிக்கிழமை செட்டியார் கடையிலே என்ன நடந்தது?

குற்: வியாபாரம்.

வா.வ: நான்சென்ஸ்!இது கோர்ட்; இங்கே கோமாளிகளுக்கு இடம் கிடையாது.

குற்: நீதிபதி அவர்களே! வக்கீலய்யா கேட்கும் கேள்விக்குத்தானே நான் பதில் சொன்னேன். அவர் பிரமாதமாகக் கோபம் செய்து...

மா: (வக்கீலைப் பார்த்து). கம் டு த பாயிண்ட்.

வா.வ: எஸ் யுவர் ஆனர். சிவநேசன்! சென்ற வெள்ளிக் கிழமை நீ செட்டியார் கடையிலிருந்து பத்து வீசை கற்பூரத்தைக் களவாடினாயா?

குற்: களவாடவில்லை. செட்டியார் அந்தப் பத்து வீசை கற்பூரத்தைக் கொடுத்து, எடுத்துக் கொண்டுபோய், மண்டி மாதவ முதலியாரிடம் கொடுத்துவிட்டு, பதிலுக்குக் கொள்ளு வாங்கிக் கொண்டுவரச் சொன்னார்.

வா.வ: விவரத்தைக் கூறுவதிலே நாணயமாகத்தான் இருக்கிறது. செட்டியார் சொன்னபடி கொடுத்தாயா?

குற்: இல்லை.

[வா.வ. உட்கார்ந்து கொள்கிறார்]

மா: உனக்கு வக்கீல் உண்டா?

குற்: இல்லை.

மா: என்ன சொல்கிறாய் இப்போது? பத்து வீசை கற்பூரத்தை நீ, செட்டியார் சொன்ன இடத்தில் கொடுக்காததால், அதை நீ களவாடிக் கொண்டாய் என்றுதானே அர்த்தம்?

குற்: தங்களைப் போன்ற பெரியவர்கள் தப்பர்த்தப்பட்டால் நான் என்ன செய்வது?

மா: வேஷம் போடாதே. கற்பூரத்தைக் கடையிலிருந்து எடுத்துச் சென்றது உண்மைதானே?

குற்: ஆமாம்.

மா: கொடுக்க வேண்டிய இடத்திலே கொடுக்கவில்லை. அதுவும் உண்மைதானே?

குற்: ஆமாம்.

மா: வேறு என்ன ருஜு வேண்டும், உன்னைத் தண்டிக்க? சரி, என்ன சமாதானம் சொல்கிறாய்? |

குற்: இரண்டொரு சாட்சிகள் உள்ளனர்; விசாரிக்க வேண்டுகிறேன்.

மா: யார் ? பெயர்?

குற்: முதல் சாட்சி, மூலைக் கோயில் பூஜாரி முத்துச்சாமி.

[கோர்ட் சேவகன் முத்துச்சாமியைக் கூப்பிடுகிறான்]

மா: பெயர்?

முத்: பூசாரி முத்தன்.

குற்: அப்பா முத்து! போன வெள்ளிக்கிழமை சாயரட்சை, நான் கோயிலுக்கு வந்தேனா?

முத்: வந்திங்க.

குற்: வந்து...?

முத்: பிள்ளையாரைக் கும்பிட்டிங்க.

குற்: வேறே என்ன விசேஷம் நடந்தது?

முத்: ஒரேயடியா பத்துவீசைக் கற்பூரத்தைக் கொளுத்தினிங்க.

குற்: அவ்வளவுதான் அப்பா. (முத்து போகிறான்; வா. வக்கீல் அவனை நிறுத்தி)

வா.வ: பத்து வீசைக் கற்பூரத்தை இந்த ஆசாமி கொளுத்தினாரா?

முத்: இல்லிங்க, அவர் கொடுத்தாரு; நான் கொளுத்தினேன்.

வா.வ: அது திருட்டுச் சொத்துன்னு உனக்குத் தெரியுமா?

முத்: எனக்கெப்படித் தெரியுங்க? கோயிலுக்கு வருகிறவங்க கொண்டு வருகிற காணிக்கை நாணயமானதா, திருட்டுச் சொத்தான்னு எனக்கு எப்படித் தெரியுங்கோ?

வா.வ: நீ தடுக்கலையா இவனை?

பூ: பூஜையைத் தடுப்பது பாவமாச்சிங்களே!

வா.வ. ஏ ! இங்கே பாவம், புண்யம் என்ற பேச்செல்லாம் வேண்டாம்.

பூ: பாவம், புண்யம் இதெல்லாம் இங்கே கூடாதுங்களா? எனக்குத் தெரியாதுங்கோ.

[பூஜாரி போகிறான்]

குற்: இரண்டாவது சாட்சி, இருளாண்டி

[கோர்ட் சேவகன் இருளாண்டியைக் கூப்பிடு கிறான். இருளாண்டி வருகிறான்.]

குற்: அப்பா இருளாண்டி! போன வெள்ளிக்கிழமை. ஆலமரத்தடி சாமியார் உபதேசம் செய்தாரே, நீ இருந்து கேட்டதுண்டா?

இரு: இருந்தேனுங்க. நீங்களும் வந்திருந்திங்களே.

குற்: என்னைப் பார்த்து அவர் என்னப்பா சொன்னார்?

இரு : அடே அஞ்ஞானி! ஏன் இன்னமும் சேவையிலே ஈடுபடாமலிருக்கிறாய்? மூலைக் கோயிலானை வணங்கு. அவனுக்குச் சகலத்தையும் சமர்ப்பித்துவிடு, என்று சொன்னார்.

குற்: நான் என்ன செய்தேன்?

இரு : மயக்கம் வந்த மாதிரி ஆயிட்டிங்க; விழுந்து விழுந்து கும்பிட்டிங்க.

குற்: பிறகு?

இரு: சாமியார் விபூதி கொடுத்தாரு. பூசிகிட்டிங்க.

குற்: அதற்குப் பிறகு?

இரு: கூடையைத் தூக்கிட்டு ஓடினிங்க.

குற்: ஓடி...?

இரு: நானும் பின்னாலேயே ஓடி வந்தேன். நேரே மூலைக்கோயில் போய், கூடையிலே இருந்த கற்பூரத்தைக் கொளுத்தினிங்க; பக்தர்களெல்லாம் விழுந்து கும்பிட்டாங்க.

குற்: அவ்வளவுதான் அப்பா.

[இருளாண்டி போகிறான்.]

குற்: செட்டியாரும் ஒரு சாட்சிங்க.

[செட்டியார் வருகிறார்.]

குற்: செட்டியாரே! வியாழக்கிழமை தங்கள் வீட்டிலே. காலட்சேபம் நடந்ததுங்களா?

செட்: ஆமாம்!

குற்: என்ன கதை நடந்ததுங்க?

செட்: பக்த ராமதாஸ்.

குற்: கதை முடிஞ்ச பிறகு, நீங்க என்கிட்டே என்ன, சொன்னீங்க'

செட்: ராமதாசுடைய பக்தியே பக்தின்னு பேசினேன்.

குற்: அவரைப்போல நாமெல்லாம் பக்திமான்களா இருக்கணும்னுகூடச் சொன்னிங்களே.

செட்: ஆமாம்.. சொன்னேன்.

குற்: அப்ப, பாகவதர் என்ன சொன்னாருங்க?

செட்: என்னமோ சொன்னார்.

குற்: பரவாயில்லை சொல்லுங்க. செட்டியாரே, உங்களுக்கு ஒப்பற்ற ஒரு நாயனார் பெயர் இருக்கிறது, மாணிக்கவாசகரும் மகாபக்திமான் என்று சொல்லலே...?

செட்: சொன்னான், அந்தக் கதையைச் சொல்லச் சொல்லி ஒருநாள் கூப்பிடுவேன் என்ற நினைப்பிலே.

குற்: கதையைச் சுருங்கக்கூடச் சொன்னாரே.

செட்: ஆமாம், சாம்பிள் காட்டினான்.

குற்: அவ்வளவுதானுங்க.

[அவரும் போகிறார்.]

மா: சாட்சிகள் கூறினதாலே, என்ன சாதகம் உனக்கு?

குற்: சாதகம், உண்டோ இல்லையோ- இந்தச் சாட்சிகள் சொன்னவை உண்மை.

மா: ஆமாம், அதனாலே?

குற்: நான் கள்ளனல்ல, பக்தன் என்று ஏற்பட்டிருக்க வேண்டுமே! பக்திக்குக்கூடத் தண்டனை உண்டோ?

மா: எதுடா பக்தி? வேலை செய்கிற இடத்திலே இருந்து பொருளைத் திருடிக் கொண்டு போவது பக்தியா?

குற்: ராமதாசரும், மாணிக்கவாசகரும், ஏறக்குறைய பத்து வீசை தங்கம் திருடினவர்களாயிற்றே!

மா: அவர்கள், பக்தர்கள்!

குற்: நானுந்தான்.

மா: அவர்கள் அவதார புருஷர்கள்.

குற்: நான் மட்டும்?

மா: போக்கிரித்தனமாகப் பேசுகிறாய். ஜாக்கிரதை! இந்தக் குற்றத்தோடு கோர்ட்டை அவமதித்த குற்றமும் ஏற்படும்.

குற்: நீங்கள் பக்தியையே அவமதிக்கும்போது...

மா: நிறுத்து.

குற்: ஐயா! வழக்கிலே என்ன நேரிடுமோ, எனக்குத் தெரியாது. நான் கள்ளனல்ல. எனக்குச் செட்டியார் கடையிலிருந்து கற்பூரத்தை எடுத்துக் கொண்டு போகும்போது, அவர் சொன்னபடி செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான். வழியிலே ஆலமரத்தடி சாமியாரின் பேச்சிலே மயங்கினேன். பிறர் சொத்தாயிற்றே, இதை அவர் சொன்னதற்கன்றி என்று வேறுவிதமாக உபயோகித்தல் நியாயமல்லவே நினைத்தேன். முன்னாள் இரவு, பாகவதர், பாதுஷாவின் வரிப்பணத்தை பக்த இராமதாசர் செலவிட்டது தர்மம், நியாயம், பக்தியின் பெருமை என்றெல்லாம் கூறினதும், அதை என் எஜமானர் ஆமோதித்ததும், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், 'ராமா! ராமா!' என்று உச்சரித் ததும், என் நினைவிலே வந்தது. உடனே கற்பூரம் செட்டியாருடையதாக இருந்தால் என்ன, பக்தியே மேல் என்று உறுதி பிறந்தது. வினாயகருக்குக் கொளுத்தினேன். ராமதாசரும் மாணிக்கவாசகரும் கள்ளர்களானால், நானும் கள்ளன் தான்!

மா: உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? இராமதாஸ் ஆகிவிடுவாயா நீ?

குற்:ஆகாது! ஆனால் குருவியும் பறவைதான்; பருந்து போலவே, இராமதாசும் நானும் பக்தர் இனம்தான்.

மா: இந்தப் பசப்பு வேண்டாம். அந்தப் பழங்கதைகளைப் பேசித் தப்பித்துக் கொள்ள முடியாது.

குற்: அந்தப் பக்திமான்களின் கதைகள் நீதிமன்றத்துக்கு ஏற்றவையல்லவா?

மா: இது கோர்ட்! நீதிமன்றம்! இங்கே சட்டத்தின்படி தான் வழக்குகள் விசாரிக்கப்படும்.

குற்: நீதிக்கும் சட்டத்துக்கும் சம்பந்தம் இல்லையா?

மா: போதும், வாயாடாதே.ராமதாசர் செய்தால் நீயும் செய்ய வேண்டுமோ? ராமதாசருக்கு இருந்த பக்தி எப்படிப்பட்டது! நீ...?

குற்: என் பக்தி அதற்கு எள்ளளவும் குறைந்ததல்ல. நீங்கள் நம்பாததாலேயே என் பக்தி குறைந்துவிடுமா என்ன?

மா: நீ பக்திமானா அல்லவா என்பது பற்றி எனக்கு அக்கரை இல்லை. கோர்ட்டின் முன் நீ ஒரு கள்ளன் என்று நிறுத்தப்பட்டிருக்கிறாய்.

குற்: உண்மைதான்! அந்த நாட்களிலே ராமதாசரும் மாணிக்கவாசகரும் நிறுத்தப்பட்டதுபோல.

மா: மறுபடியும் அந்தப் பழைய கதையைப் பேசாதே. அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு. அந்தக் காலத்து

நீதி வேறு; இந்தக் காலத்து நீதி வேறு.

குற்: அப்படிச் சொல்வது சரியா? இன்னும ஜன சமுதாயம் அந்தக் காலத்திலே நீதி என்று எவைகளை நம்பினார்களோ அவைகளையேதானே இன்றும் நம்புகிறார்கள். அந்தக் காலத்திலே அரசமரத்தைச் சுற்றி வந்தால் கர்ப்பம் தரிக்கும் என்று தாய்மார்கள் எண்ணி வந்தார்கள். இன்றும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு தினம் தங்கள் மனைவியார் சுற்றுவதை நான் பார்த்தேன்.

[கோர்ட்டில் சிரிப்பு]

பக்தியைக் கேலி செய்யாதீர்கள். நமது நீதிபதி எவ்வளவு அறிவாளி! படித்தவர்! அரசமரத்தைச் சுற்றுவது சிரிப்புக் கிடமானதானால், ஐயா, அம்மாவைத் தடுத்திருப்பார்களல்லவா? நான் எவ்வளவோ, பெரிய பெரிய உத்யோகஸ்தர் வீட்டுத் தாய்மார்களை அந்த அரசமரத்தண்டை பார்த்திருக்கிறேன்.

மா: உன் புராணப் பிரசங்கம் போதும்.

குற்: ஐயா! என் பேச்சை நிறுத்தும்படிக் கட்டளையிடுவது போல நாட்டிலே நடைபெறும் புராணப் பேச்சை நிறுத்தியிருந்தால், நான் இன்று கள்ளன் என்று குற்றம் சாட்டப்பட்டுத் தங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்க மாட்டேன்.

மா: யார் உன்னைத் திருடச் சொன்னது?

குற்: பக்தி எனும் உணர்ச்சி.

மா: திருடக்கூடச் சொல்கிறதா?

குற்: கற்பூரத்தை ஏழை பக்தனான நான் திருடினேன். வழிப்பறிக் கொள்ளை நடத்தினார் திருமங்கை ஆழ்வார், பக்திக்காக.

வா.வ: இந்தக் காலத்தில் யாராவது செய்தால் 395— வது செக்‌ஷன்படி தண்டனை!

குற்: அந்தக் காலத்து நீதி இந்தக் காலத்துக்குச் செல்லாது என்றால் நாட்டை ஆளும் நீங்கள், அந்தக் காலத்து நீதியைப் போதிக்கும் பழைய புராணங்களை மக்களுக்குப் போதிக்கக்கூடாது; போதிப்பது சட்ட விரோதம் என்று தடுத்திருக்க வேண்டும். தங்குதடையின்றி பழைய நீதிகளைப் போதிக்கும் புராணப் பிரசாரம், பாட்டாகவும், கூத்தாகவும் நாட்டிலே நடப்பதால், இதை அனுமதிக்கும் சர்க்காரும், பழையகால நீதியையே இன்றும் போற்றுகிறார்கள் என்று நான் நம்பினேன்.

மா: அது உன்னுடைய பைத்யக்காரத்தனம்.

குற்: இந்த ஒரு விஷயத்துக்காகவே என்னைப் பைத்யக்காரன் என்று கூறுகிறீர். அந்தக் காலத்து வேப்பமரத்துக்கு இன்றும் தங்களுக்குள்ளதைவிட அதிகாரம் அதிகம். அன்று போலவே இன்றும் கருடனும் குரங்கும் தெய்வங்களாக உள்ளன. அப்படியிருக்கத் தாங்கள் அந்தக் காலத்து நீதிவேறு இன்று வேறு என்று எப்படிச் சொல்லலாம்? அந்தக் காலத்து நீதி கூடாது என்றால், அவைகளை நம்பும்படிச் செய்யும் புராணப் பிரசங்கம் நிறுத்தப்பட வேண்டும்.

[கோர்ட்டை நோக்கி]

என்னமோ உளறுகிறேன் என்று நினைக்கிறீர்கள். போன மாதம், என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே குடியிருந்து வந்த பத்மா, ஏழு வருஷக் கடுங்காவல் தண்டனை பெற்றாள். தன் குழந்தையைக் கிணற்றிலே போட்டுக் கொன்றுவிட்டுத் தானும் விழுந்து இறக்கப்போகையில் அவள் பிடிப்பட்டுக் கோர்ட்டிலே நிறுத்தப்பட்டுத் தண்டனை தரப்பட்டது. பத்மா ஏழை! குழந்தையும் தானும் வாழமுடியாத அளவு வறுமை. பலதடவை அவள் நல்லதங்காள் கதையைக் கேட்டிருக்கிறாள்! கூத்தாகப் பார்த்துமிருக்கிறாள். வறுமையின் கொடுமை அதிகமானதும், அப்படிப்பட்ட நல்லதங்காளே ஏழ்மை நிலை வந்தபோது ஏழு பிள்ளைகளை கிணற்றிலே தள்ளிவிட்டுத் தானும் விழுந்து செத்தாளே, அவள் அல்லவா பத்தினி, உத்தமி! அவளைப் போல நாமும் செய்ய வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள். ஏழு வருஷய் தண்டித்து விட்டார்கள். ஐயா! தான்பெற்ற குழந்தையைக் கொன்றாள் பத்மா. ஆனால்அந்தக் கொலைக்குத் தூண்டுதல் செய்தது புராணம். சதி செய்தும் உடந்தையாகவுமிருந்தது

சமூகம். அதற்குத் தண்டனைதர, தர்மப் பிரபுக்களுக்குத் தோன்றவில்லை.

மா: சுற்றி வளைத்துப் பேசவேண்டாம். சுருக்கமாகக் கூறிமுடி.

குற்: நான் கள்ளனல்ல; பக்தன்! பக்தியால் தூண்டப் பட்டவர்கள், களவு மட்டுமல்ல. எது செய்தாலும், மன்னிக்கப்படுவார்கள்; மன்னிப்புக் கிடைப்பது மட்டுமல்ல- மேன்மை அடைவார்கள், இகத்திலே மட்டுமல்ல, பரலோகத்திலும் என்று என்னை நம்பும்படிச் செய்த புராணப் பிரசங்கி, சாமியாடி, அந்தப் புராணப் பிரசங்கத்தை ஏற்பாடு செய்த செட்டியார் ஆகியோர் நான் குற்றம் செய்ததற்குத் தூண்டிய குற்றத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கும் எனக்கும் சேர்த்து தண்டனை தாருங்கள்; நீதியின்படி நடக்க வேண்டுமானால் அவர்கள் குற்றமற்றவர்களானால், நானும் நிரபராதியே.

[கோர்ட் இடைவேளைக்குக் கலைகிறது.]
[கோர்ட் கட்டடத்தில், மாஜிஸ்ட்ரேட் அறை.]
[மா. வா.வ.]

மா: சார்! அவன் சொன்னதிலே நியாயம் இருக்கிறது. உண்மையிலேயே, பக்தியின் பெயரால் நடந்திருக்கிற அக்ரமங்கள் ஏராளம். என்ன காரணத்தாலோ அவர்களெல் லாம் பக்திமான்கள் என்று கொண்டாடப்படுகிறார்கள், அவன் சொன்னதுபோல, மாணிக்கவாசகரும் இராமதாசரும் பிறர் சொத்தை எடுத்துத் தமது பக்தியைக் காட்டச் செலவிட்டது, எப்படித் தர்மமாகும்? எப்படி நியாயமாகும்? கற்பூரம் திருடியவனுக்கு நாம் செக்‌ஷஷன் தேடுகிறோம்!

வா . வ : பழைய காலத்திலே, பக்தியின் பெயரால் ஏதேதோ நடந்தது. என்ன செய்வது?

மா: பழைய காலத்திலே நடந்த அந்தச் சனியன்கள் இன்றும் நமது மக்களைப் பிடித்து ஆட்டுகிறதே. பாருங்கள் சார்! அவன் சொன்னானே நம் வீட்டிலே அரசமரம் சுற்றினார்கள் என்று. எனக்கு அவன் அதைச் சொல்லும்போது, வெட்கம் தாங்கமுடியவில்லை. என்ன செய்வது!

வா.வ அதெல்லாம் இந்தப் பெண்கள் செய்கிற தொல்லை. நாம் என்ன செய்வது?

மா: அப்படியும் சொல்லிவிடுவதற்கில்லை. எங்கள் மாமா தெரியுமே உங்களுக்கு, சர் இராமராஜன். அவரைப் யாருமே இலண்டன் ரிடர்ன்ட், பாரிஸ்டர், மினிஸ்டர் என்று சகலரும் புகழ்ந்து பேசுகிறதுண்டு. அவர் செய்கிற காரியம், நல்ல வேளையா இந்தப் பயலுக்குத் தெரியாது போலிருக்கு. தெரிஞ்சிருந்தா, நம்ம மானத்தை வாங்கிவிட் டிருப்பான்.

வா.வ: என்ன செய்தார் சர். இராமராஜ்?

மா: அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறீர், போங்கள்? பழனி முருகன் கோயிலுக்குப் போய் வெள்ளி தீவட்டி பிடிக்கிறார் சார், வெள்ளி தீவட்டி! இது பக்தியாம்!

வா.வ: சர். இராமராஜா?

மா: அவர்தான் சார்! அவ்வளவு பெரிய மேதாவி, பக்தியின் பெயரால் இந்தக் காரியம் செய்தா, இவன் கற்பூரத்தைக் கொளுத்தினதிலே தவறு என்ன, பிரமாதமா இருக்கு?

வா.வ: சட்டம் இருக்கே.

மா: அது இருக்கு சார்! அதைத்தான் அங்கே மேஜை மேலே மலைமலையாகக் குவித்து வைத்திருக்கிறோமே. எனக்கென்னமோ, மதத்தின் பெயராலே நாட்டிலே நடைபெறுகிற பல காரியங்களை நினைத்தால் அவன் செய்தது குற்றம்னுகூடத் தோன்றவில்லை. பாருங்கோ, நம்ம சர். இராமராஜுக்கு ஒரு சாமியார் சினேகிதம்; அவர் புராணம் படிப்பவர். யாரோ ஒரு நாயனாராம்! கடவுளுக்கென்று அவன் வைத்திருந்த புஷ்பத்தை அவனுடைய மனைவி வாசனை பார்த்தாளாம். பார்த்ததும், ஆஹா! ஆண்டவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய மலரை, நீ முகர்ந்து பார்ப்பதா என்று கோபித்துக்கொண்டு, அந்தப் பெண்ணுடைய மூக்கையே அறுத்துவிட்டானாம்.

வா.வ: சுத்த மடப்பயல் போலிருக்கே!

மா: மடத்தனம் இருக்கட்டும் சார்! எவ்வளவு போக்கிரித்தனம் பாருங்கள். நம்ம கோர்ட்டுக்கு இந்தக் கேஸ் வந்தால்...

வா.வ: 326 செக்ஷன்படி தண்டனை நிச்சயம்!

மா: அப்படிப்பட்ட பித்தன் கதையை எங்கள் சர். ராமராஜ் எவ்வளவு கொண்டாடுகிறார் தெரியுமோ. இதற்கு ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடி படிப்பு ஏன் சார்...?

வா.வ: ஆனா, அந்தக் காலத்திலே, தந்தை மகன், அண்ணன் தம்பி, குரு சீடன் முதலிய விஷயங்களிலே சிலாக்கியமான கருத்து இருந்தது. ஏகலைவன் கதையை எடுத்துக் கொள்ளுங்கோ. துரோணாச்சாரியிடம், நேரடியாக அவன் வில்வித்தை கற்றுக் கொள்ளவில்லை. உருவத்தைச் செய்துவைத்துக் குருவாகப் பாவித்துக் கற்றுக் கொண்டான். இதற்குத் துரோணாச்சாரி, குரு காணிக்கை கேட்டார், அவன் குருபக்திக்காகத் தன் கை கட்டை விரலையே அறுத்துக் கொடுத்தான். குருசீட சம்பந்தம் எவ்வளவு சிலாக்கியமாக அமைந்திருந்தது பாரும்!

மா: (சிரித்துவிட்டு) அது கிடக்கட்டும்! ஒரு விதத்திலே அதுகூடக் கொடுமைக்கு மடைமை பலியானதற்குச் சான்றுதான். குருசீட சம்பந்தத்தின் அற்புதத்தை விளக்க இந்தக் கதையைக் கூறுகிறீரே, குருசீட சம்பந்தத்திலே நேரிட்ட கோணலுக்கும் கதை இருக்கிறதே. பிரகஸ்பதி குரு, சந்திரன் சீடன்! கல்வி கற்கப்போன சீடருடன் காமலீலை ஆடுகிறாள் குருபத்தினி தாரா! இந்தச் சீடனும் இசைந்து இருக்கிறான். ஆபாசமில்லையோ அது!

வா.வ: அது சரி! இப்படியும் ஒன்று; அப்படியும் ஒன்று. அண்ணனுக்குச் சொந்தமான அரசை நான் ஆளமாட்டேன்; அவருடைய பாதுகைதான் ஆளவேண்டும் என்று சொன்ன பரதன், அண்ணனிடம் தம்பி காட்டவேண்டிய அன்புக்கு உதாரணமாகிறான்.

மா: அதைப் போலவே, இராமனை மறைந்திருந்து அம்பு போடச் செய்து, வாலியைக் கொன்று, அந்த அரசை அனுபவித்த சுக்ரீவனும் அந்தக் காலத்திலே இருந்தான்.

வா. வ: ஆமாம்; அதுவும் உண்மைதான்.

மா: ஆகையாலே அந்தக் காலம், என்னமோ மகா பிரமாதமான புண்யகாலம், அந்தக் காலத்து ஜனங்கள் மகா உத்தமர்கள் என்று பேசுவது, அந்தப் புராணங்களின்படியே பார்த்தால்கூட அவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. நமக்குள்ளே பேசிக் கொள்வோம். ஏன் சார்! எப்படிப் பாண்டவர்கள் திரௌபதியைத் தங்கள் ஐவருக்கும் மனைவியாக்கிக் கொண்டு சகித்தார்கள்? அந்த அம்மைதான் எப்படி இந்தக் கோர ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார்கள்? சேச்சே! வெளியே சொன்னாலே வெட்கக்கேடு. அவன் சொன்னதுபோல, இனி நாட்டிலே அத்தகைய பழைய குப்பைகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கத்தான்வேண்டும்.

வா.வ: நாம் என்ன செய்ய முடியும்?

மா: ஏன் சார் முடியாது? இந்த நாட்டிலே படித்தவர்கள் குறைவு. படிக்காதவர்கள் அதிகம். படிக்காத மக்கள் நம்மைப் போன்ற படித்தவர்களைப் பார்த்து நடப்பது நல்லது என்று எண்ணுகிறார்கள். படித்த நாமும் அந்தப் பழைய சேற்றிலே புரண்டால், படிக்காத கூட்டம், 'அவ்வளவு படித்தவரே புரளுகிறாரே' என்று கும்பலாகக் குட்டையிலே விழுகின்றன. இந்த மக்களைத் திருத்த வேண்டுமானால் முதலிலே நாம் திருந்த வேண்டும் சார்.

வா. வ: ஆமாம்.

மா: உதாரணமாக, வீணான ஜாதிமதச் சின்னத்தைக் காட்டுகிற விபூதி உமக்கும் தேவையில்லை; எனக்கும் இந்த நாமம் தேவையில்லை பாருங்க!

[இருவரும் குறிகளை அழித்துவிடுகின்றனர்.]

மா: இது மட்டும் போதாது. இந்தப் பழைய ஏற்பாடுகளைக் கண்டித்துப் பேசவேண்டும் நாமெல்லாம்.

வா. வ: கட்டாயம் செய்ய வேண்டியதுதான்.

மா: சரி! ஒரு விஷயம்! அந்தக் கேசை,வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி...

வா.வ: செட்டியாருக்குச் சொல்லிவிடுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=செவ்வாழை/வழக்கு_வாபஸ்&oldid=1638683" இலிருந்து மீள்விக்கப்பட்டது