செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்

நாக்கிழந்தார்

"ர்மப் பிரவுவே! சாப்பிட்டு நாலு நாட்களாகின்றன; கண் பஞ்சடைந்திருக்கிறது, கைகால்கள் துவண்டு போகின்றன. காது அடைத்துக்கொண்டு போகிறது, மயக்கமாக இருக்கிறது, ஒரு கவளம் கிடைத்தால் உயிர் நிற்கும்."

பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா? அவருக்கு எவ்வளவோ தொல்லை, எத்தனையோ அவசரமான ஜோலி. இந்தப் பிச்சைக் கிண்ணி, குறுக்கே நின்றால் அவர் தமது காரியத்தைக் கவனிக்காது இவனுக்கு உபசாரம் செய்யவா, தங்குவார்! அதோ பாருங்கள். அவர், எவ்வளவு கவலையுடன் காரில் உட்காருகிறார். கதவை இழுத்து அடிக்கிறாரே கேட்கிறதா சத்தம்! அவ்வளவு கோபம் அவருக்கு. எங்கே செல்கிறார் தெரியுமா! ஒரு பெரிய நஷ்டம் நேரிட்டுவிட்டது அவருக்கு. அதற்காகவே அவசரமாக ஓடுகிறார். பதினைந்து ஏகரா நிலமும், பழைய வீடுமாகச் சேர்த்து இவரிடம் கடன்பட்ட சோணகிரி, கடன் தொகை (வட்டி அசல்) ஐந்தாயிரத்துக்கு, விக்ரயப் பத்திரம் எழுதிக் கொடுத்து விடுவதாகச் சொன்னான்; சரி என்றார். ஏகர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கக்கூடியபடி நிலத்தை திருத்தியமைத்து, மெஷின் வைத்து தண்ணீர் பாய்ச்சி, ஏதேதோ செய்யவேண்டுமென்று எண்ணினார்; பூரித்தார். ஆனால், ஓர் போட்டி வந்துவிட்டது. மற்றொரு பணப்பெட்டி இடையே நுழைந்து, 7000 தருவதாகக் கடனாளிக்குக் கூறினான். கடனாளி, பிகுவானான். அவனை ஏதோ 100, 200, தருகிறேன் என்று கூறிச் சரிப்படுத்தவே, தர்மப் பிரபு, அவசரமாகச் செல்கிறார். அந்த நேரத்திலே அவருக்குள்ள தொல்லை எவ்வளவு, கஷ்ட நஷ்டம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளாமல், பட்டினி கிடக்கும் அந்தப் பராரி, ஒரு கவளம் என்று கேட்டால், பிரபுவுக்குக் கோபம் பிறக்காதா, கூறுங்கள்! "தடிப்பயல்கள், எங்காவது கூலிக்குப் போவதுதானே, குளத்திலே விழுந்து சாகக்கூடாதோ" என்றும் பிரபு கூறுகிறார். "இவ்வளவு பெரிய சீமான் ஒரு பிடி சோறு தரக்கூடாதா? அட ஆண்டவனே! இவனை இப்படிப் படைத்தாய், என்னை இந்தக்கதியிலே விடுத்தாய்" என்று அந்தப் பராரி, பகவானிடம் முறையிட்டான்.

இரவு மணி எட்டு; அமாவாசை இருட்டு; சரிந்து போன சாவடித் திண்ணையிலே, பராரிகள் மாநாடு கூடுகிறது. வறட்டுத் தலையன், மாநாட்டைத் திறந்துவைக்கிறான். "ஈவு இரக்கம் கொஞ்சமாவது இருக்குதா. தர்ம சிந்தனை இருக்குதா. இப்படி, ஏழைகள் செத்துமடியறாங்களேன்னு கருணை இருக்குதா? ஒரு வேளைச் சோத்துக்கு ஒன்பது காதம் சுற்றித் திரிகிறோம்; பார்க்கிறவனை எல்லாம் பகவானேன்னு கும்பிட்டு பல்லை இளிக்கிறோம், காலில் விழுகிறோம், கஷ்டத்தைச் சொல்லிக் கதறுகிறோம். போடா! மூடா! தடியா! திருடா! போக்கிரி! முட்டாளே! என்று திட்டித் துரத்துகிறார்களே தவிர, ஐயோ பாவம் என்று சொல்லி மனமிரங்கி, தர்மம் செய்யணுமேன்னு ஒருவருக்கும் எண்ணம் வரவில்லையே. அட ஈஸ்வரா! ஈஸ்வரா! இவனுங்க கிட்ட ஏண்டாப்பா, இவ்வளவு சம்பத்து கொடுத்து எங்களை இப்படி ஓட்டாண்டியாக்கி, சாவடியிலே சாகவைக்கிறே. உனக்குக் கண்ணில்லையா?"

மகாநாட்டுத் தலைவர் ஓர் மார்வலிக்காரன்; "ஆமாண்டா, ஈஸ்வரனுக்குக் கண் இருந்தா, என்னை ஏண்டா இந்தக் கதியிலே விடுகிறார். பஞ்சையா இருந்தாலும், இப்போது கூட நான், பூபறித்து மாலை கட்டி, ஆலமரத்துப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து சூட்டி, தோப்புக்கரணம் போட்டுத் துதித்துக்கொண்டுதானே இருக்கிறேன்; என் சக்திக்கேற்ற பக்கி செய்கிறேன்; வாரிக் கொடுத்துவிட்டதா சாமி. போடா! சாமிகூட, சீமானாக இருந்தாத்தான், சிரிச்சு விளையாடிப் பேசும். நாம் கூப்பிட்டா அதன் காதிலே ஏறவா போவுது? அதுக்குக் கண்ணுமில்லை, பேச வாயும் இல்லை" என்று வெளுத்து வாங்கினான். காலையிலே சீமானிடம் 'சீப்பட்ட' பஞ்சை, "நாம், கேவலம் மனிதர்களைப் பார்த்து, கைகூப்பித் தொழுது, சாமி, புண்யவானே, என்று துதித்துப் பயன் இல்லை. பகவானைத் துதித்தால், பலனுண்டு அவன் பெயரைப் பஜிக்கவேண்டும். அவன் நாமத்தைப் பாட வேண்டும். அவன் கண் திறந்து பார்த்தால் நமது கஷ்டம் ஒருவிநாடியிலே காற்றாய்ப் பறக்காதா?" என்று முடிவுரை கூறினான். ஜே! சீதாராம்! என்று கூவிக் கஞ்சாப் புகையைக் கெம்பீரமாக வெளியே அனுப்பிவிட்டு, வடநாட்டுச் சாதுபோல் வேடம் போட்டுக்கொண்டு தன் பிச்சைக்காரத் தொழிலை நடத்தி வந்தவன் வந்தனங் கூறிய பின், மாநாடு கலைந்தது; அவர்கள் உறங்கலாயினர்.

பஞ்சை, பிறகு, தன் தீர்மானத்தின்படி கோயில்கள் முன்பு சென்று, கோவிந்தா! முகுந்தா! கோபாலா! இரகுராமா! பாண்டுரங்கா! பக்தவத்சலா! பரந்தாமா! என்று, பூஜித்து வரத்தொடங்கினான். கோயில்களிலே பூஜைக்காக வரும் 'பக்தர்கள்' இந்தப் பஞ்சையின் பஜனையை மதித்தார்களென்றா எண்ணுகிறீர்கள்? அவர்கள் மனதிலே எத்தனையோ விதமான குமுறல்! அவைகளைப்பற்றி ஆண்டவனிடம் முறையிட்டுப் பரிகாரம் கோரவும், கொந்தளிக்கும் மனதுக்கு நிம்மதி தேடவும், கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோபுர வாயிலிலேயே, குடல் வெளியே வரும் விதமாகவும் பகவந் நாமத்தைக் கூவிக்கொண்டிருப்பவனிடமா நிற்பர், அவன் குறை கேட்பர், உபகாரம் புரிவர்! உள்ளே சென்று, இலட்சார்ச்சனை புரிந்து, ஆபத்பாந்தவா! அனாதாட்சகா! என்று துதிக்கவேண்டாமோ?

"ஓ! என் பக்தர்களே! இங்கே, நீங்கள், ஏதேதோ குறை கூறிக் கோரிக்கொள்கிறீர்கள். அங்கே கோபுரவாயிலிலே கூவிக்கிடக்கிறானே, அவன் அஷ்ட ஐஸ்வரியம் கேட்கவில்லை, வியாபாரத்திலே அமோகமான இலாபம் கிடைக்கவேண்டுமென்று கேட்கவில்லை, மூத்த மகனுக்கு ஜெமீன்தாரர் வீட்டிலே பெண் கிடைக்கவேண்டுமென்று கேட்கவில்லை. அவன் கேட்பது அரைவயிற்றுக் கஞ்சி! அதைத் தீர்த்துவிட்டுப் பிறகு உங்களிடம் வருகிறேன்" என்று ஆண்டவன் கூறுகிறாரா? இல்லை! அவர் திகைத்து நிற்கிறார், வாய் திறக்க முடியாதபடி வியப்புடன் நிற்கிறார், ஆச்சரியத்தால், அவருடைய உடல் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. அடடா! இந்தக் கபட வேடதாரி என்னை எவ்வளவு அழகாக அர்ச்சிக்கிறான்! எனக்கு அபிஷேகம் ஆராதனை என்று கூறிப் பொருள் பறித்து, திரையிட்டு, நீரைத் தெளித்துச் சிலையை அவசரமாகத் தேய்க்கிறான். கையிலே ஏதேனும் வலியிருப்பின், என்மீது கடிந்துகொள்கிறான், காலால் மிதிக்கிறான், அப்பப்பா இவன் செய்யும் அக்ரமம் கொஞ்சமா!

இரவு வந்ததும், எனக்கென்று பக்தர்கள் தந்த பிரசாதம், இவனுடைய சரசிகளுக்குப்போய்ச் சேருகிறதே! இதோ, பட்டை நாமம், துளசிமணி, பஞ்சகச்சம், எனும் பக்த வேடமணிந்து பச்சைமா மலைபோல மேனி என்று பாடுகிறானே, இவன் இன்று காலையில்தான் கள்ளக் கையொப்பமிட்டான், இங்கே கசிந்துருகிக் கோரிக்கொள்கிறான். ஆஹா! இந்தக் கள்ளி, கணவனை ஏய்க்காத நாளே கிடையாது, இங்கே எவ்வளவு சுத்தம், என்ன பக்தி! என்று தன் எதிரே வருவோரின் இயல்புகளைக் கண்டு, இப்படிப்பட்டவர்கள் சர்வமும் தெரிந்தவர் என்றும் என்னைத் துதிக்கின்றனர். ஆனால், தாங்கள் செய்யும் தீய காரியம் எனக்குத் தெரியாதென்றும் கருதிக்கொண்டு, பூஜித்து என்னை ஏய்க்கப் பார்க்கின்றனர். என்ன துணிவய்யா இந்தப் பக்தர்களுக்கு என்று ஆச்சரியப்பட்டுத் திகைத்து நிற்கிறார்.

பஞ்சை, பகலிலும் மாலையிலும், கோயிலை வலம் வருவதும் கும்பிடுவதும், உரத்த குரலிலே, பஜனை பாடுவதுமாக இருந்து வந்தான்; ஆண்டவனுக்கு என் சத்தம் எட்டாமலா போகும் என்று எண்ணினான். ஒவ்வோரிரவும், சாவடியிலே, பஞ்சையைக் கேலி செய்யாத ஆண்டி கிடையாது; அவன் அலுத்தும் போனான். கடைசியில் ஓர் பயங்கரமான முடிவுக்கு வந்தான். அதை அவன் கூறினபோது அந்த ஆண்டிகள் கைதட்டிக் கேலிசெய்தனர். அவன், மிக உறுதியுடன் இருப்பதை அவர்கள் அறியவில்லை.

நம்மைப்போன்ற மனிதப் பிறவியைத் தேவா என்று துதித்துத் துதித்து, வாழ்த்தி வாழ்த்தி, என் நாக்குக் தழும்பேறிவிட்டது. மனிதரைப் பஜித்துப் பயனில்லை, மகேஸ்வரனைப் பஜிப்போம்; அவர், தன் மகனிடம், இரக்கம் காட்டாமலிரார் என்று எண்ணி, நாக்குக்கு நிமிடமும் ஓய்வு தராமல் நாமாவளி பாடினோம்; அவரோ நம் குறை தீர்க்க முன்வரவில்லை. என் வேதனைக் குரலைக் கேட்காத செவிகளை அறுத்துவிடவேண்டும், அல்லது, வியர்த்தமாக பஜித்து வரும் என் நாக்கையாவது துண்டித்தெறியவேண்டும். மற்றவரின் செவியை அறுக்க என்னால் முடியாது; ஆண்டவனுக்குள்ளதோ, கருங்கற் செவி, அறுபடாது, உடைபடும்; செய்வதோ சிரமம். அதைவிட, என் நாவைத் துண்டித்துவிடுவதே சுலபம். எதற்கு எனக்கு இந்த நா? கீதம் பாடுகிறேனா? களிப்பு இருந்தால்தானே கானம்! "ஏ! எங்கேயடா மோட்டார் டிரைவர், கூப்பிடு அவனை" என்று அதிகார மொழி பேசப்போகிறேனா? அரை இலட்சந்தான் இந்த ஆண்டு இலாபங் கிடைத்தது என்று இலாபக் கணக்குப் பேசப்போகிறேனா? அருமை மனைவியிடம் ஆனந்தமாகப் பேசுவேனா, குழந்தைகளிடம் கொஞ்சுவேனா? என் நாவின் வேலை இதல்லவே! எதிரே தலை தெரிந்ததும், தர்மப்பிரபுவே! என்று சொல்லவும், பிச்சை கேட்கவும், கோயிற் படியிலே இருந்துகொண்டு கோவிந்தா என்று கூவவுந்தானே இருக்கிறது. இதற்கு ஒரு நா இருக்கவேண்டுமா—என்று எதேதோ எண்ணினான். தன் நாக்கைத் துண்டித்து, கோயிற் படிக்கட்டிலேயே வீசி எறிவது என்று தீர்மானித்தான். இதை அவன் கூறினபோது, ஆண்டிகள் அவன் அது போலச் செய்தேவிடுவான் என்று துளியும் எண்ணவில்லை. அவன் நாக்கைத் துண்டித்துக்கொண்ட செய்தி தெரிந்த போது திடுக்கிட்டு, திருவோடு கீழே விழுவதையுங் கவனியாது, "அடேடே பாவம், விளையாட்டுக்குப் பேசினான் என்று நினைத்தோம்; உண்மையாகவே நாக்கை அறுத்துக் கொண்டானே" என்று பரிதாபப்பட்டனர்.

கலியுக அதிசயம். நாத்தீகருக்கு ஒரு வெடிகுண்டு. ஆத்திகருக்கு ஓர் பூச்செண்டு, கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டும், பக்திமான்களைத் தூஷித்துக்கொண்டும், பேய்க்குரல் கிளப்பும் பேர்வழிகள், இன்று மாலை, கோபால சுவாமி கோயில் முன்பு பஞ்ச பக்தர் எனும் மகான், பரவச மேலிட்டுத் தம் நாக்கைத் துண்டித்து, பகவானுக்குச் சமர்ப்பிக்கப் போகும் அபூர்வமான அற்புதக் காட்சியை நேரிலே கண்டு பக்தியின் பெருமையை உணரலாம். ஆத்தீகர்கள், சூடத்துடன் வந்து மேற்படி பக்தரைத் தரிசித்து பகவத் அனுக்கிரகம் பெறக் கோரப்படுகிறார்கள். இங்ஙனம் கோபாலசாமி கோயில் தர்மகர்த்தா, கொடைகோவிந்த சாமி என்று அச்சிடப்பட்ட துண்டு நோடீசுகள் ஊரிலே ஆயிரக்கணக்கிலே வீசப்பட்டன. தெருவுக்குத் தெரு கூட்டம் சேர்ந்துவிட்டது. இத்தகைய பக்திமான் யாரோ என்று ஒவ்வொருவரும் ஆவலுடன் கேட்டனர்.

மோசமும் வேஷமும் நிரம்பிய உலகம்! சூதும் வஞ்சனையும் சூழ்ந்த உலகம். அகந்தையும் அனியாயமும் தாண்டவமாகும் உலகம்.

மயக்கத்தையும் மருளையும், தரும் மதம். ஏழை எளியவரை ஏய்க்கத் தந்திரக்காரன் தயாரித்தது இந்தப் போதை. தரகரும் தருக்கரும், தன்னலத்துக்காகத் தோண்டினர் இந்த நாசக்குழியை.

பணமெனும் கோட்டைக்குள் பதுங்கிக் கொள்வான், பாட்டாளியை வாட்டி வதைப்பான், பஞ்சாங்கத்தைக் கூட்டாளியாகக் கொள்வான்; ஆள்வோனுக்கு அடி பணிவான, இவன் பெயர் சீமான்.

எதிர்க்கத் தெரியாத கோழை; இங்கிதம் தெரியாத வாழை; இவன் பெயர் ஏழை'

கூடிப் பேசவும் கும்பிட்டுக் குமுறவும் உள்ள கூடம், கோயில். இது வறியவர் சென்று பார்த்துப் பயன்பெறாது வெளியே வரும், வாயில்! அக்ரமத்தைக் கண்டு அஞ்சி மெய் மறந்தவரே, ஆண்டவன். இவ்விதமான புது அகராதியின் படி பேசினான் பஞ்சை. தனக்குச் சோறு போட மறுத்துக் கோபமாக மோட்டார் ஏறிச்சென்ற சீமானின் மாளிகைக்குச் சென்றான். வெறி கொண்டவன் போலத் தூற்றினான். வேலையாட்கள் பிடித்திழுத்துக் கட்டினர், கம்பத்தில் "சவுக்கெடு!" என்று கூறினார் சீமான். பயமின்றிச் சிரித்தான் பஞ்சை.

"இப்போது கேட்கிறதா உன் செவி, பேஷ்! இது தெரியாமல் இத்தனை நாள் தவித்தேனே. உன்னைப் பூஜித்தேன், துதித்தேன், அப்போது உன்செவி மந்தமாக இருந்தது. இப்போது என் மனமார உன்னைத் திட்டினேன். உன் செவிக்கு அது எட்டிற்றா? சரி! சவுக்கெடுத்து உன் கை வலிக்குமளவு என்னை அடி! பசியைவிடவா, சவுக்கு என்னை அதிகமாக வாட்டமுடியும். உன் கோபத்தைத் தணிக்கக்கூடிய அளவு அடிக்க உன் கரத்திலே வலிவு இராது. அதற்கு எவனாவது ஓர் முரட்டு ஆளைப் பிடி! வேறோர் ஏழை அகப்படுவான், அவனை விட்டு என்னை அடி, அதற்கு அவனுக்குக் கூலி கொடு" என்று பஞ்சை பேசினான், பயமின்றி. அவனுக்குப் பித்தமோ என்று சீமான் சந்தேகித்தான். வேலையாட்களை வெளியே அனுப்பிவிட்டு விசாரித்தான். அந்த ஏழை தன் வேதனையான வாழ்வையும் நாக்கை அறுத்துக்கொள்ளப்போகும் விஷயத்தையும் சொன்னான். சில விநாடி, சீமான் மௌனமாக இருந்தான். ஓர் முடிவுக்கு வந்தான், கட்டுகளை அவிழ்த்தான். பஞ்சையை மாளிகை மேன்மாடிக்கு அழைத்துச் சென்றான். வீட்டினர் ஆச்சரியப்பட்டனர். பஞ்சையே ஆச்சரியப்பட்டான்.

அறுசுவை உண்டி அளிக்கப்பட்டது, ஆடை தரப்பட்டது, ஆயாசம் போக்கப்பட்டது. அதற்குப் பிறகு, சீமான் பஞ்சையை அருகில் அமரச்செய்து "உண்மையாகவா நீ, நாக்கை துண்டித்துக் கொள்ளப்போகிறாய்?" என்று கேட்டான்.

"உண்மைதான். எனக்கு, நாக்கு இருந்து பயன் என்ன? அது இருப்பதால், நான் உன் போன்றவர்களைத் துதிக்கவும், துயர் வரும்போது தூற்றவும் முடிகிறது. வேறென்ன முடிகிறது? ஆகவே அதனை இழக்கத் துணிந்து விட்டேன்" என்றான் பஞ்சை. சீமானின் முகம் சந்தோஷத்தால் ஜொலித்தது. "ஒரு வருஷத்திலே ஒரு இலட்சமாவது சேர்த்தி முடியும்! உன்னதமான மடம் ஏற்படுத்த முடியும்! நமது செல்வாக்கு முழுவதும் பயன்படும்" என்று தனக்குள் கூறிக்கொண்டு, பஞ்சையை நோக்கி, "சரி! நீ இக்காரியத்தைச் செய்து ஒரு பலனும் பெறாதிருப்பதை விட, நல்ல பலன் உண்டாகும் விதமாகச் செய்கிறேன். என் சொற்படி நடந்தால், நீ சுகமாக இனி வாழ வழி செய்கிறேன்"—என்று கூறினான். பஞ்சை சரியென்றான். உடனே தான், துண்டு நோட்டீசுகள் ஊர் முழுதும் பரவின. குறிப்பிட்ட நாள் பஞ்சை தன் நாக்கைத் துண்டித்துக்கொண்டான். சீமான், ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில், பஞ்சையின் காலில் வீழ்ந்து, "பக்தரே! தாங்கள் இந்த அடியவனைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளவேண்டுகிறேன்" என்று வேண்டிக்கொண்டான். பஞ்சை தலை அசைத்தான். பக்குவமான சிகிச்சைக்குப் பிறகு, பஞ்ச பக்தர் எனும் திருநாமத்துடன்; அவன், சீமான் மாளிகையில் தங்கினான். ஊர் திரண்டு வந்தது, காணிக்கை செலுத்த; அதனைச் சேர்த்து வைக்கும் சேவையிலே சீமான் ஈடுபட்டார். வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்காத 'வருமானம்' நாக்கிழந்தாருக்குச் சீடராக இருந்ததால், சீமானுக்குக் கிடைத்தது. ஊரார், தன்னை ஓர் உத்தமன், பக்திமான், அவதார புருஷன் என்று பஜிப்பதும், நுனி துண்டித்துப் போன நாக்கைத் தரிசிக்க நாள்தோறும் காத்திருப்பதும், பாதத்தில் பணம் கொட்டுவதையும், பாலும் பழமும் படைப்பதையுங் கண்ட பஞ்சைக்கு நெஞ்சு பதறிற்று. வேஷத்துக்கும் வஞ்சனைக்கும் எவ்வளவு மயங்குகிறது. இவ்வுலகம் என்று எண்ணி ஏங்கினான். எவ்வளவு தந்திரமாகத் தன்னை உபயோகித்து அந்தச் சீமான் பொருள் திரட்டுகிறான் என்பது கண்டு மனம் பதறலாயிற்று. வேளைக்குச் சோறு, தங்க ஓர் ஆஸ்ரமம், உடுத்த பட்டாடை, வேலையாட்கள், இவைகள், நாவிழந்ததால் தனக்குக் கிடைத்தது. ஆனால், நாக்கிழந்தானை நர்த்தனம் செய்யவைப்போன், பதினாயிரக்கணக்கிலே பணம் திரட்டுகிறான். என்ன பாதகம்! என்று கோபம் கொதித்தெழுந்தது. என்ன செய்வான் பாபம், நாக்கில்லை, பேச; மற்ற ஆண்டிகளோ, 'ஏதோ தெய்வானுக்கிரகம் இல்லாமலா, நாக்கிழந்ததும் இவனுக்கு இவ்வளவு நல்ல கதி கிடைத்தது" என்று மயங்கி, அவர்களும் காலில் வீழ்ந்து கும்பிடத் தொடங்கினர். சீமான் தவிர, மற்றவர்கள் தன்னை ஓர் அவதாரமாகவே கண்ட பஞ்சைக்கு மிகுந்த கோபம் உண்டாகி, சீமானின் சூதுக்கு உடந்தையாக வாழ்வதற்காக, உயிரை வைத்துக்கொண்டிருப்பதை விட, இறப்பதே மேல் என்ற துணிவு பிறந்துவிட்டது. ஒரு நடு நிசியில், மனோவேதனை அதிகப்படவே, கூரிய கத்தி கொண்டு, தற்கொலை செய்துகொண்டு இறந்தான்.

சீமான், புரண்டழுதான்; ஊரே கோவெனக் கதறிற்று. இன்னமும் கொஞ்ச நாளைக்கு நாக்கிழந்தார் இருக்கக் கூடாதா? நாடு சீர்படுமே, என்று 'பக்தர்கள்' கை பிசைந்தனர். மடம் கட்டப்பட்டு, படம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சீமான் கோபாலசாமி, கோயில் தர்மகர்த்தா வேலையை ராஜிநாமாச் செய்துவிட்டு, மடத்தின் அதிபரானார். ஆண்டுதோறும் நாக்கறு விழா நடைபெறுகிறது; சீடகோடிகளின் காணிக்கை குவிகிறது. எங்கே? என்று கேட்பீர்கள்!

பெரும் புளுகு என்றுரைப்பீர்கள்! கட்டுக்கதை என்று பேசுவீர்கள். இஷ்டம்போல் எண்ணிக் கொள்ளுங்கள்.

1943-ம் ஆண்டிலே ஏப்ரல் மாதத்திலே, சுதேசமித்ரன், வடநாட்டிலே ஏதோ ஓர் கோயிலிலே, ஒரு வாலிபன், தெய்வபக்தி காரணமாகத் தன் நாக்கை அறுத்துக் கொண்டான், என்றோர் செய்தியை, பக்திசிரத்தையுடன், பரோபகார சம்ரட்சணார்த்தம் வெளியிட்டது. அந்தப் பக்தன், ஏன் தன் நாவைத் துண்டித்துக் கொண்டானோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் தீட்டியுள்ள கதையில் வரும் பஞ்சை போன்றவர்கள் நாக்கைத் துண்டித்துக் கொள்ளத் தயங்கவுமாட்டார்கள். சூது சூட்சி தெரிந்தவன், நாக்கிழப்பவனைக் கொண்டு, பணம் திரட்டவும் கூசான். நாடு, அவன் கட்டிவிடும் கதையைக் கேட்டு ஏமாறவும், பொருள் தரவும், தயாராகத்தான் இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். ஆனால் சிந்தனைக்கு வேலை தந்தால், “ஆம்” என்றே கூறுவீர். மூடநம்பிக்கையில் ஊறிக் கிடக்கும் இந்த நாட்டிலே, இதுபோன்ற சூதுகளுக்கும், சாமியாடிகளுக்கும், அற்புதங்கள் நடத்துவோருக்கும், இன்றும் ஆதிக்கம் நிரம்ப இருக்கிறது. இல்லாமலா பகிரங்கமாக, வடலூர் இரமலிங்கர் வரப்போகிறார், செத்தவரைப் பிழைப்பிக்கப் போகிறார் என்று எவனோ ஓர் ஏய்த்துப் பிழைப்பவன் பிரச்சாரம் செய்யவும், பணம் வசூலிக்கவும் துணிந்தான். அதற்குத் தாளந் தட்ட ஓர் திருக்கூட்டம் கிளம்பிற்று! எங்கேயடா, வள்ளலார்? என்ன ஆயிற்று நீ சொன்ன சூளுரை? ஏன் இப்படி ஊரை ஏய்த்தாய்? என் நம்பிக்கை மோசடி செய்தாய்? எங்கே, வசூல்செய்த பணம்? என்று யார் போய் அந்த உண்டி குலுக்கியைக் கேட்டார்கள். அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு, இதுபோல ஓடுபவர், ஆண்டுக்கு ஒருவர் இருவர் தோன்றுகிறார்கள். என்றாலும், எத்தனை முறை ஏமாந்தாலும், மூடத்தனத்திலே ஊறிப் போனவர்களுக்கு, பித்தம் குறைவதில்லை. இந்த நாட்டுக்கு விமோசனம் உண்டா? இன்று நாம் உட்கார்ந்திருக்கும் அறையிலிருந்து கொண்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இலண்டன், வாஷிங்டன், மாஸ்கோ, சிட்னி, கெட்டால், ஆட்டவா, போன்ற தூர நகரங்களிலே நடைபெறும் பேச்சையோ, இசையையோ, அங்கே நடைபெறும்போதே கேட்டு இன்புறுகிறோம்.

இதை அதிசயம், அற்புதம், என்று இந்த மூடமதியினர் கூறுவதில்லை.

"ஒரு அதிசயம் தெரியுமா? நமது ஊருக்கு ஓர் சாமியார் வந்திருக்கிறார். அவர் சாப்பிட்டுப் பத்து வருஷமாச்சாம். அவர் விபூதி மந்திரித்துக் கொடுத்தால் தீராத வியாதியே கிடையாதாம்" என்று பேசுவர்.

அவனுக்குக் குணமாகவில்லையே! இவனுக்குப் பலன் கிடைக்கவில்லையே என்று ஆதாரங் காட்டிப் பேசினாலோ, "அது அவன் எழுத்து" என்று கூறிடுவர்.

ரேடியோ, கம்பியில்லாத் தந்தி வானவூர்தி, சப்மெரைன், டெலிவிஷன், என்று எந்த அற்புதக் கண்டு பிடிப்பு பற்றி வேண்டுமானாலும் கூறிப் பாருங்கள். தலையாட்டுவார்களே தவிர, மறுபடியும், மாரி கோயில் பூஜாரி, குறிசொல்லும் அதிசயம், சாமியாடி மந்திரித்துக் கொடுக்கும் எலுமிச்சையால் கரு உண்டாகும் அற்புதம், நாக்கில் வேல்குத்திக் கொண்டவனின் மகிமை, என்ற இவைகளையே பிரமாதமாகப் பேசுவர். பாமரர் பேசினாலும் பரவாயில்லை. படித்தோம் என்று நாவசைக்கும் கூட்டத்திலும் சில, இத்தகைய நாக்கிழந்தார் வாக்கிழந்தார், நோக்கிழந்தார், பெருவழியார், சிறு விழியார் என்று ஏதேதோ "மகான்களைத்" தேடிக்கொண்டும் தெந்தினம் பாடிக்கொண்டும் இருக்கின்றனர். இந்தப் பித்தம் போக மருந்துண்ணாதவரையில், நாடு, நயவஞ்சகருக்கு வேட்டைக்காடாகவே இருந்து தீரும். வாலிபர்கள் விரைந்தெழுந்து இந்த வீணர்களை அடக்காவிட்டால், வாழையடி வாழையென்றிருந்துவிட்டால், எதிர்காலத்திலே இந்நாடு, காட்டு மிராண்டிகளின் கூடமென்றே நாகரிக மக்கள் கருதி, எள்ளி நகையாடுவர்.

இத்தகைய மூடக் கோட்பாடுகளைத் தகர்க்கப் பிரசாரம் புரிய முன்வரத் துணியாதவர்களை, நான் நாக்கிழந்தார் என்றே கூறுவேன. அவர்கள் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதிலே நாவுக்கரசர்களாக இருக்கலாம். ஆனால் நாட்டை அரித்துவரும் இந்த மூடநம்பிக்கைகளைக் கண்டிக்க முன்வராத வரையில், நான் அவர்களை, நாக்கிழந்தார் என்றே கூறுவேன். அது தவறுமல்ல!